Monday, October 18, 2021
முகப்பு ஜெயமோகன், டோண்டு ராகவன்களின் மேட்டிமைத் திமிர் !!
Array

ஜெயமோகன், டோண்டு ராகவன்களின் மேட்டிமைத் திமிர் !!

-


vote-012ஒரு அரசு ஊழியர் முன்னர் சொன்ன உண்மைச் சம்பவம் இது. தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாத்தான்குளத்திற்கு ராஜீவ் காந்தி வருகிறார். அதாவது பயண வழிப்பாதையில் ஒரு நிறுத்தம். அவ்வூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்தோர் உடனே சென்னை தலைமைச் செயலகத்துக்கு போன் போட்டு ராஜீவ் குடும்பம் என்னென்ன சாப்பிடுவார்கள் என்பதையெல்லாம் நுணுக்கமாகக் கேட்டுக் கொண்டு ஏற்பாடு செய்தார்கள். விருந்தினர் விடுதிக்கு குளிர்சாதன வசதி. கூடவே மேற்கத்திய கழிப்பட அறை ஒன்றும் கட்டி முடித்தார்கள். விதவிதமான உணவு, பழங்கள், குளிர்பானங்கள் எல்லாம் தயார்.

முந்திய நாள்தான் கழிப்பறைக்கு டாய்லட் ரோல் அவசியமல்லவா என்பதை யாரோ கண்டுபிடிக்க நெல்லை, தூத்துக்குடியில் விசாரித்து இல்லை என்று ஆக உடனே ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்து மதுரை சென்று வாங்கிவிட்டு நள்ளிரவில் திரும்பினார்கள். கடைசியில் ராஜிவ் அங்கே ஒரு ஐந்து நிமிடம் இறங்கி ஹாய் சொல்லிவிட்டு போனாராம். ஒரு துண்டு ஆப்பிளைக்கூட கடிக்கவில்ல. ஒரு நூறு மில்லி சிறுநீர் கூட கழிக்கவில்லை. செலவெல்லாம் என்ன கணக்கு என்று கேட்டதற்கு ஒப்பந்தாரர்கள் கணக்கு என்றார் அந்த ஊழியர்.

அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் எல்லாரும் திக் விஜயம் செய்யும் போது இப்படித்தான் ஏற்பாடுகள் நடக்கின்றன. துளிக்கூட அழுக்கில்லாமல் மாற்றப்படும் சாலைகள், வெண்பட்டையான பிளீச்சிங் பவுடர்கள், அழகு தோரணங்கள், வி.ஜ.பி சமையல் கலைஞர்களின் விருந்துகள், வாயில் கைபொத்தி ஐயாவுக்கு என்ன வேண்டுமென்று கருத்தாய் கவனிக்கும் உள்ளூர் அதிகாரிகள்……… பல இடங்களில் அரசு வேலையே இதுதான் எனும் அளவுக்கு இவை அதி கவனமாகச் செய்யப்படுவதுண்டு.

ஆனால் ஒரு எழுத்தாளர் பயணம் செல்லும் போது இந்த ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றால் என்ன அபாயம் ஏற்படுமென்பதை ஜெயமோகனைது பயண அனுபவத்தில் பார்க்கலாம். எழுத்தாளருக்கு அதிகாரம் இல்லை என்றாலும் பண்டைய ரிஷிமார்களின் பரம்பரை என்பதால் தங்களை வசதியாகவும், தூய்மையாகவும், பணிவாகவும் கவனிக்காத இடம், ஊர், சிப்பந்திகளை நாசமாகப் போங்கள் என்று சாபம் கொடுத்து விடுகிறார்கள்.

______________________________________

ஜெயமோகன் கேரள சுற்றுப்பிரயாணம் சென்றதை சமீபத்தில் எழுதியிருக்கிறார். இடங்கள், கடற்கரைகள், கோட்டைகள், போன்ற அஃறிணைகளின் அழகை, தனிமையை, வாழ்வின் வரலாற்றை மௌனமாக தேக்கி வைத்திருக்கும் விதத்தை………….. என்றெல்லாம் அவரது ரம்பமான இத்துப்போன போன சொற்றொடர்களின் மூலம் அளக்கும் அவர் கூடவே அவரது கண் பார்த்த அழுக்குகள், உடலுக்கு கிடைக்காத கவனிப்பு குறித்து மட்டும் அங்கலாய்க்கிறார். ஆனால் அது அங்கலாய்ப்பாக மட்டுமில்லை.

சுனாமிக்குப்பிறகு அமிர்தானந்தா மாயி கட்டிக் கொடுத்த சிமிட்டி வீடு குடியிருப்பை மீனவர்கள் குப்பைகள் கொட்டிக்கிடக்கும் கேவலமான சேரியாக மாற்றிவிட்டார்களாம். வீட்டுக்கு வீடு டி.வி இருந்தாலும் இப்படி சுகாதாரமற்ற வகையில் வாழுவதற்கு காரணம் வறுமை கிடையாதாம், அதற்கான மனப்பயிற்சி இல்லையாம். இதை விட வறுமையில் இருக்கும் ராசிபுரம் பழங்குடி மக்கள் சுத்தமாக வாழ்கிறார்களாம்.

கேரளாவில் நல்ல சுத்தமான ஓட்டல், நாக்குக்கு ருசியான சாப்பாடு கிடையாதாம். இத்தகைய ஓட்டல் வேலைகளுக்கு ஆள் தட்டுப்பாடாம். இந்த வேலையை அவமானமாகக் கருதும் ஓட்டல் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களிடம் திமிராக நடந்து கொள்வார்களாம். இடதுசாரி இயக்கம் தொழிலாளிகளிடம் இத்தகைய தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கிறதாம். வேலையே செய்யாமல் தொழிற்சங்கம் மூலம் கூலியை மட்டும் வாங்கிக் கொள்வது இப்போதும் இருக்கிறதாம்.

சுற்றுலா போன ஜெயமோகனது சொந்தப் பிரச்சினைகள் மூலம் சம கால கேரளாவின் வரலாறும் உருவாகிவிடுகிறது. நாக்கு ருசியும், ஓய்வறை வசதிகள் கூட ஒரு எழுத்தாளன் உருவாக்கும் வரலாறுக்கு காரணமாகிவிடுகிறது என்றால்………..நல்லவேளை, இவர்களெல்லாம் அரசியலில் இல்லை. இருந்திருந்தால் நான்காவது உலப்போர் முடிந்து ஐந்தாவதற்கு காத்துக் கொண்டிருந்திருப்போம்.

_____________________________________________

ஜெயமோகனது சுத்தம் குறித்த தத்துவப் பித்தத்தைப் பார்க்கும் போது  இந்து முன்னணியின் புகழ் பெற்ற மற்றொரு பித்தம் நினைவுக்கு வருகிறது.

“இந்துக்கள் கிறித்தவராகவோ, இசுலாமியராகவோ மதம் மாறினால் பாரதப் பண்பாடும் மாறிவிடுகிறது. அதிகாலையில் குளித்து வாசல் தெளித்து, கோலமிட்டு, முற்றத்தில் இருக்கும் துளசி மாடத்தை சுற்றி வந்து………….” என்று போகும் அந்த பித்தத்தை சகல இந்துக்களுக்கும் பொருத்திப் பார்த்தால் பெரும்பாலானோர் இந்துக்கள் இல்லை என்றாகிவிடும்.

முதலில் முற்றம், துளசிமாடம் போன்றவையெல்லாம் இருக்க வேண்டுமென்றால் வீடும், வீட்டைச்சுற்றி விசலாமான இடமும் வேண்டும். இதிலேயே முக்கால்வாசி இந்துக்கள் அவுட். அப்புறம் மீனவர் குடிசை முன்பு கருவாடும், கோனார் வீட்டு முன்பு ஆட்டுப்புழுக்கைகளும், கறிக்கடை தேவர் வீட்டு முன்பு உப்புத் துண்டமும், சென்னை சேரி மக்களின் குடிசை முன்பு குழந்தைகளின் கக்காவும், விவசாயி வீட்டு முன்பு சாணமோ, தானியமோ இருக்கும். ஐயர் வீட்டு முன்புதான் துளசி மாடம் இருக்கும்.

உழைக்கும் இந்துக்களின் வீட்டை அவர்களது உழைப்பின் விளைபொருள் அலங்கரிப்பது இந்து முன்னணிக்கு மட்டுமல்ல ஜெயமோகனுக்கும் அருவருப்பாக இருக்கிறது. சுத்தத்திற்கு வறுமை காரணமில்லையாம். அதற்கு அவர் காட்டும் ஆதாரம் ராசிபுரம் மலைவாழ் மக்களின் சுத்தமான குடியிருப்புக்கள்.

என்னுடைய அனுபவத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக கேரள எல்லையில் இருக்கும் பல டீ எஸ்டேட்டுகள், ஆந்திரா, ஒரிசாவின் மலைப்பகுதிகள் மற்றும் சமவெளிகளில் இருக்கும் பழங்குடி மக்களின் கிராமங்களையும் பார்த்திருக்கிறேன்.

எல்லா டீ எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பும் வீடுகளும் சுத்தமாகத்தான் இருக்கும். காரணம் அங்கு வரும் எல்லாப்பொருட்களும் கீழே சமவெளியிலிருந்துதான் வரவேண்டும். அதனால் எதையும் வீணாக்க மாட்டார்கள். மலசல, குளியல்கள் நீர் கிடைப்பதைப் பொறுத்தது என்பதால் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவார்கள். அவையும் மலையில் வடிந்து விடும். தேங்காது. நகரங்களின் புழுதி, பெரும் நிறுவனங்கள், ஓட்டல்களின் குப்பைகள் எல்லாம் அங்கே சாத்தியமில்லை. உடை கூட அவ்வளவு சீக்கிரம் அழுக்கடைவதில்லை. பட்டினி கிடப்பவர்கள் கூட அங்கே பளிச்சென்றுதான் இருப்பார்கள். குளிருக்கான உடைகளை அணிந்து கொண்டு அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிதான் குடிக்கிறார்கள் என்பதை யாரும் நம்ப முடியாது.

மலைகளிலோ சமவெளிகளிலோ வாழும் பழங்குடி மக்கள் இன்னமும் மற்ற மக்களின் வாழ்க்கையை கண்டறியாதவர்கள். ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தின் அடர்த்தியான மலைகளில் இருக்கும் பழங்குடி மக்கள் கிராமத்தைப் பார்த்த போது அது கிராமம் என்று கூட சொல்ல முடியுமா தெரியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் 20 அல்லது 50 குடும்பங்களே இருந்தனர். 100 குடும்பங்கள் இருந்தால் அது பெரிய கிராமம். அந்த மக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போதுதான் தமது கானக நிலங்களை கொஞ்சம் திருத்தி நிலையான விவசாயம் செய்கின்றனர். குடிசைகளில் இருக்கும் பொருட்களை எண்ணிவிடலாம். உடைகள், பாத்திரங்கள், வீட்டுப்பொருட்கள் எதுவும் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு குறைவானது. வீட்டு முற்றத்தில் விவசாயம் சார்ந்த சில கருவிகளைத் தவிர அங்கே எதுவும் இல்லை. இப்படி பொருளே இல்லாத குடிசைகளில் குப்பை எப்படி சேரும்? இத்தகைய குடிசைகளை தமிழகத்தின் பின்தங்கிய சில மாவட்டங்களில்கூட பார்க்கலாம்.
சென்னையின் சேரிப்பகுதிகளில் மிகவும் நெரிசலான இடங்களில் பல இலட்சம் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கின்றனர். 100, 200 சதுர அடிகளில் குடும்பங்கள் கூண்டில் அடைபட்ட கோழிகள் போல எல்லா வேலைகளையும் முடிக்கின்றனர். வீட்டின் இடத்தை பல விதமான சில்லறைப்பொருட்கள் ஆக்கிரமித்திருக்கும். சமைக்க, துணி துவைக்க, குளிக்க, படுக்க எல்லாம் ஒரே இடம்தான். ஒரு சேரியில் சில ஆயிரம் மக்கள் இப்படி வாழம் போது தெருவெங்கும் குப்பைகளும், கழிவு நீரும், எல்லாம் கலந்துதான் இருக்கும். திருமணப் பந்தல், சாவுக்கான பந்தல், விருந்துக்கான சமையல் எல்லாம் தெருவில்தான்.  பார்க்க ரணகளமாகத்தான் இருக்கும். சென்னையின் சேரி ஒன்றில் சிலவருடங்கள் வாழ்ந்தவன் என்ற முறையில் நானும் அப்படித்தான் ‘அசுத்தமாக’ வாழ்ந்திருக்கிறேன். சென்னையிலிருக்கும் எங்கள் தோழர்கள் பலர் இத்தகைய சேரிகளைச் சேர்ந்தவர்கள்தான்.

நகரங்களை ஒட்டி வாழும் மீனவர் குடிசைகளும் இப்படித்தான் இருக்கின்றன. விசாலமான கடல் சார்ந்த இடங்கள் இன்று அவர்களது பயன்பாட்டிற்கு இல்லை. இருக்கும் குடிசை கூட தனது பரப்பளவை சுருக்கிக்கொண்டேதான் வருகிறது. கேரளாவில் இந்த நகரமயமாக்கத்தின் பிரச்சினைகள் அதிகம். கடல் எனும் இயற்கைத் தாயை எதிர்கொண்டு சற்றே கடினமான வாழ்க்கை வாழும் அம்மக்களிடம் நயக்கத்தக்க நடுத்தர வர்க்கத்தின் ‘நாகரிக’த்தை எதிர்பார்ப்பது அயோக்கியத்தனம்.

நகரத்து சேரிகளில் இருக்கும் நெரிசல் உருவாக்கும் எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு அந்த மக்கள்  இந்தப் பாழாய்ப் போன நகரின் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தினருக்கு எல்லா சேவைகளையும் செய்கின்றனர். இதற்காக அந்த மக்களை கோவில் கட்டி வணங்குவது கூட அதிகம் என்று சொல்ல முடியாது. அந்த மக்களின் வாழ்விடத்தைப் பார்த்து குப்பைக்கூளமென்றும் அதற்கு மனப்பயிற்சி இல்லையென்றும் எக்காளமிடும் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தனிவீடுகட்டி வாழும் வாழ்க்கையை துறந்து விட்டு சென்னை வியாசர்பாடியில் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்கட்டும்.
____________________________________________
கேரளாவின் அநேக நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். சிறு, நடுத்தர உணவு விடுதிகளில் சாப்பிட்டிருக்கிறேன். நெல்லையில் கோக் ஆலைக்கெதிரான போராட்டப் பிரச்சாரத்திற்காக தோழர்கள் திருவனந்தபுரத்தில் ஒருவாரம் தங்கி வேலை செய்தோம். தெரிந்தவர்கள் யாருமில்லாமல் குறைவான கட்டணமுள்ள விடுதிகளை மக்கள் உதவியுடன் கண்டறிந்து, ஒரே அறையில் பல தோழர்கள் தங்குவதை விடுதிக்காரர்கள் பிரச்சினையாக்காதது மட்டுமல்ல கூடுதல் படுக்கை விரிப்புகளையும் – ஏனைய வசதிகளையும் சலிக்காமல் செய்ததையும், சிறு உணவு விடுதிகளில் கேரளாவின் எல்லா பிரத்யோக உணவுகளையும் – ஃபீப் உள்ளிட்டு – ருசி பார்த்து, பத்திரிகை செய்தி வினியோகத்திற்காக மலிவு கட்டணத்தில் சேட்டன்களது ஆட்டோக்களை நாள் வாடகைக்கு ஏற்பாடு செய்து……..மொத்தமாகப் பார்த்தால் கேரள மக்களது உபசரிப்பில் திணறிப் போனோம்.

ஜெயமோகனுக்கு பார்த்த பரிசாரர்களது அலட்சியத்தை நாம் எங்கும் காணவில்லை. ஒருவேளை இவையெல்லாம் மேட்டிமைத்தனமாக பண்ணையார் மனோபாவத்துடன் வாழும் விலங்குகளுக்குத்தான் தோன்றும் போலும்.

“எந்தா வேண்டே” என்று கேட்கும் ஒரு சர்வர் தொழிலாளியது உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் எவரும் அவர்களது அணுகுமுறையில் எப்போதாவது கொஞ்சம் சலிப்பும், எரிச்சலும் தெரிந்தால்கூட பெரிதுபடுத்த மாட்டார்கள். நிச்சயம் அதை வைத்து ஜெயமோகன் போல கேரளா தொழிலாளிகளின் சமூக வரலாற்றை வன்மத்துடன் எழுதமாட்டார்கள்.

__________________________________________

பசிக்காக ஓட்டல்களுக்குப்போகும் சாதாரண மக்கள் என்ன சாப்பிடப் போகிறோம் என்பதை முதலில் தெளிவாக தெரிவித்து விடுவார்கள். ஒருவேளை அவர்கள் விசாரணை விலைப்பட்டியல் குறித்து மட்டும் இருக்கலாம். ஆனால் டோண்டு ராகவன், ஜெயமோகன் போன்ற எழுத்துலகப் பண்ணைகள் ஓட்டல்களுக்கு சென்றால் என்ன நடக்கும்?

சார் என்ன வேணும்?

சாப்பிட என்ன இருக்கு?

இட்லி, வடை, பொங்கல், கிச்சடி, சாதா, ஸ்பெஷல், பூரி, ரவா தோசை, ஆனியன் தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, புரோட்டா (எழுதும் போதே மூச்சு வாங்குது)

சூடா ரெண்டு இட்லி குடுங்க ( இதை முதலிலேயே சொன்னா என்னடா….சர்வர் நினைப்பார்)

சூடு கம்மியா இருக்கே?

இப்ப எடுத்ததுதான் சார், அடுத்து என்ன வேணும்?

சாப்பிட்டு முடித்து சொல்கிறேன்

(சர்வர் மற்றவர்களை கவனித்துவிட்டு வருகிறார்) என்ன கண்டுக்காம போறீங்க? ஒரு தோசை குடுங்க ( அதுவும் சாதாவா, ஸ்பெஷலா, மசாலாவா என்றெல்லாம் சர்வர்தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்)

சட்னி கொடுங்க…

(சட்னி வந்தப்பிறகு) சாம்பார் கொடுங்க…

முதல்லேயே சொன்னா என்ன சார், ஒண்ணா கொண்டுவந்திருப்பேனே…

இதான் கஸ்டமர டீல் பண்ற இலட்சணமா, யார் உங்க மேனேஜர், அவாள கூப்பிடு, நான் பேசிக்குறேன், என்ன ஓசியிலயா கொட்டிக்கிறோம்
(மிரண்டு போன சர்வர் கோபத்தை மென்று முழுங்க)

காபி வேணுமா, இல்ல பில் போடலாமா?

இன்னும் சாப்பிட்டே முடியல அதுக்குள்ள பில்லுனு கத்துற, ஒரு காபி கொண்டா…(பயந்து போன சர்வர் காபி, டிகாஷன் ஸ்ட்ராங், சர்க்கரை அளவு எல்லாம் கவனமாக கேட்கிறார். பதட்டத்தில் குறிப்புகள் தவறாகப் போக காபி காம்பினேஷன் மாறுகிறது)

பிறகென்ன…. முதலாளி வந்து பண்ணைகளை சமாதானப்படுத்த அடுத்த நாள் பிளாக்கில் அந்த சர்வரை வைத்து ஆப்ட்ரால் சர்வர்கள் தங்களை அமெரிக்க அதிபர்கள் போல கருதி நடப்பதாக முக்கியமான கட்டுரை இரண்டு வலையேற்றப்படுகிறது.

____________________________________________

இந்த உலகில் கஷ்டமான வேலைகளில் ஒன்று ஓட்டல் சர்வர் வேலை. பசியோடு வரும் வாடிக்கையாளர்களின் கோபங்களை சமாளித்து ஒரே வேலையை அலுப்பூட்டும் விதத்தில் அலைந்தவாறு குறைந்த பட்சம் 12 மணிநேரம் செய்ய வேண்டும். அநேக ஒட்டல் தொழிலாளிகள் திருமணம், குடும்ப வாழ்க்கையை வாழமுடியாமல், பல நகரங்களுக்கு சுற்றியலைந்து  நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார்கள். தங்குமிடம், உணவு இலவசம் என்ற இரண்டு பாதுகாப்பு அம்சங்களுக்காகப் பல கிராமப்புறத்து இளைஞர்களை கவரும் வேலை இதுதான்.

இன்று A, B வரிசை ஓட்டல்களை விடுத்துப் பார்த்தால் பல சிறிய ஓட்டல்கள் நடத்தமுடியாமல் சிரமப்படுகின்றன. விலைவாசி உயர்வினால் உணவுப்பண்டங்களை தொடர்ந்து உயர்த்த முடியாது. உயர்த்தினால் வியாபாரம் பாதிக்கப்படும். விலையைப் பற்றிக் கவலைப்படாத வாடிக்கையாளர்கள் வரும் சரவணபவன், உடுப்பி, வசந்தபவன் ஓட்டல்களைப் போன்று இந்த சிறிய ஓட்டல்கள் செயல்படமுடியாது. அதே போல வழக்கமான கூலிக்கு தொழிலாளிகளும் நிரந்தரமாக கிடைப்பதில்லை. இப்போது வடக்கிலிருந்து குறைந்த கூலிக்கு தொழிலாளிகள் இறக்கப்படுகின்றனர்.

ஓட்டல்களின் இந்திய நிலைமை இதுவென்றாலும் கேரளாவில் தொழிலாளிகளின் கோணத்தில் பார்த்தால் நிலைமை சற்றே மேம்பட்டிருக்கிறது. குறைந்த கூலிக்கு வடகிழக்கு மக்களை இறக்குமதி செய்யும் பணியை தொழிற்சங்கங்கள் தடுத்து வருகின்றன. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் சர்வர்கள் கிரமமான நிலையான வாழ்க்கையை வாழும் வண்ணம் பணிநிலைமை மேம்பட்டிருக்கிறது.

கேரள இடதுசாரி இயக்கம் உருவாக்கிய இந்த தொழிலாளர் வலிமையின் முக்கியமான குறை என்வென்றால் அது முக்கியமாக பொருளாதார, தொழிற்சங்க வாதத்தில் மூழ்கடிக்கப்பட்டு அரசியல் ரீதியில் முன்னணிப்படையாக வளர முடியாமல் போனதுதான். தமக்கான பிரச்சினைகளுக்காகத்தான் தொழிற்சங்கம் என்ற மனநிலையில் உருவாக்கப்படும் அந்தத் தொழிலாளி மற்ற உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கி தீர்வு கண்டால்தான் தானும் விடுதலை அடைய முடியும் என்ற அரசியல் அறிவை பெறுவதில்லை. போலிக்கம்யூனிஸ்டுகள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக அதை திட்டமிட்டே உருவாக்கவில்லை.

ஆனால் இந்தக் குறைபாட்டைத் தாண்டி ஒரு தொழிலாளி கொண்டிருக்க வேண்டிய தன்மானத்தையும், சுயமரியாதையையும் கேரள இடதுசாரி இயக்கம் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதைத்தான் ஜெயமோகனும், டோண்டு ராகவனும் தாழ்வு மனப்பான்மை, பிச்சைக்காரத்தனம் என்று வசைபாடுகிறார்கள். ஒரு ஓட்டல் தொழிலாளி என்ற நிலையில் வாடிக்கையாளன் என்ற முறையில் வரும் ஒரு கொழுப்பெடுத்த மேட்டிமைத்தனத்தை கேரள தொழிலாளிகள் சகிப்பதில்லை. மற்ற மாநில ஓட்டல்களில் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாலும் தொழிலாளி செய்வதறியாது திகைத்து நிற்பார். கேரளாவில் வலுவாக இருக்கும் தொழிற்சங்கத்தின் தைரியத்தில் இந்த அநீதிகளை ஒரு தொழிலாளி எதிர்ப்பதை மக்களை நேசிக்கும் எவரும் வரவேற்கத்தான் வேண்டும்.

இதனால் அங்கே தொழிலாளிகள் தமக்கான வேலைகளைச் செய்யாமல் எப்போதும் அலட்சியமாகவும், அகங்காரத்துடன் நடக்கிறார்கள் என்பது தமிழ்சினிமாவின் பா வரிசைப்படங்களில் பண்ணைகளின் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் சேவகர்களை விரும்பும் மேட்டுக்குடி ஜென்மங்களுக்கு மட்டுமே தோன்றக் கூடிய மனவிகாரம். ஒரு ஓட்டல் தொழிலாளியை தொழிலாளியாகக் கருதாமல் அவரை ஒரு அடிமையாக கருதுவதுதான் இத்தகைய உழைக்கும் மக்களைப்பற்றி அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் இயல்பு.

கேரள ஓட்டல் தொழிலாளியில் உடல்மொழி, குரல், பாவனை எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் ஜெயமோகன் இன்னும் பீம்சிங் காலத்து திரைப்பட லயத்தில்தான் வாழ்கிறார். நவீன தொழிலாளியின் பாவனைகளில் அக்மார்க் அடிமைத்தனத்தை எதிர்பார்க்கும் அவரைப் போன்றவர்களுக்கு நவீன வாழ்க்கை மாறியிப்பது பற்றித் தெரியவில்லை.

அழுக்குப் பிடித்த வேட்டியோடு வியர்வையில் குளித்துக் கொண்டு தோசை மாவோடு வாழ்க்கையை முடித்துக் கொண்ட அந்தக்கால மாஸ்டர்களின் அவல வாழ்க்கை இன்றும் பெரிதும் மாறிவிடவில்லை என்றாலும் பொதுவில் நிறைய மாற்றங்களைக் காணலாம். முன்னர் இத்தகைய கடுமுழைப்பு மற்றும் கீழ்மட்ட வேலைகளுக்கு குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் கிடைத்தார்கள். இன்று எல்லா பிற்பட்ட சாதிகளைச் சார்ந்தோரும் வேலை செய்கின்றனர்.

ஜீன்ஸ் பேண்டோடு, ஒரு கையில் செல்பேசியுடனும், மறுகையில் சிக்கன் ஃபிரைடு ரைசை தூக்கிப்போட்டவாறும் இருக்கும் இன்றைய மாஸ்டர்களை சாப்பிட வரும் இளைஞர்கள் “தலைவா ஆயில் கொஞ்சம் கம்மியாப் போடு” என்று உரிமையுடன் கேட்பதும், அதற்கு அந்த மாஸ்டர்கள் “சரி தல” என்று சகஜமாக பழகுவதும் இப்போது பரிசாரர்களுக்கும் சாப்பிட வருபவர்களுக்கும் ஒரு வித சமமதிப்பு உருவாகிவிட்டது. இதுதான் ஜெயமோகன்களுக்கு பொறுக்கவில்லை. கீழ்மட்ட ஓட்டல்களில் காணப்படும் இந்த சமத்துவம் பெரிய ஓட்டல்களில் இல்லை என்றாலும் அங்கும் கூட முந்தைய அடிமைத்தனம் இன்று இல்லை.

________________________________________

பொக்லைன் போன்ற எந்திரங்கள் வேலை செய்ய வேண்டி வந்தாலும் அதற்குப் பகரமாக அந்த எந்திரத்தினால் வேலையிழக்கும் தொழிலாளிகளுக்கு நோக்கு கூலி என்று நிவாரணம் கொடுக்கப்படுகிறதாம் கேரளத்தில். அதே போல சுமைதூக்கும் தொழிலாளிகள் வேலையை யார் செய்தாலும் அவர்களுக்கும் அட்டிமறிக்கூலி என்று கொடுக்க வேண்டுமாம். டோண்டு ராகவன் இதை ஒரு மாபெரும் தொழிலாளி வர்க்க சுரண்டல் போல சித்தரிக்கிறார்.

சென்னையின் சென்டரல் நிலையத்தில் வந்திறங்கும் இந்தியப் பயணிகள் இப்போது சக்கரம் வைத்த சூட்கேஸ் மற்றும் ட்ராலி மூலம் தள்ளிக் கொண்டு போவதால் தாங்கள் வருமானமிழப்பதாக சுமைதூக்கும் தொழிலாளிகள் வருந்துகிறார்கள். கேரளாவில் வருந்தாமல் அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் அதைப் பாராட்ட வேண்டியதற்குப் பதில் அவதூறு செய்வதற்கு என்ன காரணம்?

ஜெயமோகன் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலையே செய்யாமல் போங்காட்டம் ஆடிவிட்டு உலகம் பூராவும் சுற்றுலாப்பிரயாணம் செய்து டன் கணக்கில் எழுதுவதை யாரேனும் கண்டித்திருக்கிறார்களா? டத்தோ சாமிவேலு போன்ற முழு பெருச்சாளிகளின் ஊழல் பணத்தில் மலேசியா போகும் ஜெயமோகனைப் போலவா போர்ட்டர்கள் வாழ்கிறார்கள்? அவர்கள் அன்றாடம் சுமை தூக்கினால்தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்படி சுமை தூக்குவதில் வருமானமில்லை என்றால் அவர் என்ன செய்ய முடியும்?

சத்யம் தியேட்ரின்,  நல்லி சில்க்சின், சரவணபவனின் சேவையை உயர்தர விலையை கொடுத்து அனுபவிப்பவர்களுக்கு  தன்மானத்தோடு உழைக்கும் ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்க மனம் வருவதில்லை.

எந்திரமயமாக்கமோ, கணினி மயமாக்கமோ எதுவனாலும் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டுத்தான் கொண்டுவரவேண்டும் என்பதில் என்ன தவறு? சமீபத்தில் கூட அமெரிக்க தொழிலாளிகளின் நலனிற்காக ஒபாமா வெளிநாட்டில் அவுட்சோர்சிங் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் கிடையாது என்று கொண்டு வரப்போவதாக பேசுகிறார். இதெல்லாம் சரி என்றால் அந்த நீதி சுமை தூக்கும் தொழிலாளிக்கு மட்டும் கிடையாதா?

ஜெயமோகனது ஒரு சுற்றுலாப் பயணத்திலேயே மீனவர் குடியிருப்பும், கேரள ஓட்டல் தொழிலாளியும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதற்கு என்ன காரணம்? ஜெயமோகனது இந்த தொழிலாளர் வன்மத்தை மட்டும் கண்டு அகமகிழ்ந்த டோண்டு ராகவன் அதற்கு லிங்க் கொடுத்து “கேரள தொழிலாளரை பிச்சைக்காரர்களாக மாற்றிய இடதுசாரி இயக்கம்” என்று தலைப்பிட்டு தனிப்பதிவாக வெளியிட்டு கொண்டாடுவதற்கும் என்ன காரணம்?

ஒன்று அந்த தொழிலாளிகள் இந்த பதிவுகளை படிக்கமாட்டார்கள் என்ற தைரியம். இரண்டு அந்த தொழிலாளிகளின் வாழ்க்கையை உணராத, வலையுலகை வைத்து மட்டும் அறிவு பெற்ற நடுத்தர வர்க்கம்தான் படித்து வரவேற்கும் என்ற நம்பிக்கை.

ஆனால் இந்த ‘தைரியத்திற்கும், நம்பிக்கைக்கும்’ நிச்சயம் எதிர்காலமில்லை என்பதை அந்த தொழிலாளிகள் நிரூபித்துக் காட்டுவார்கள். ஏனெனில் இந்த உலகில் எதிர்காலத்தை கொண்டிருக்கும் ஒரே வர்க்கம் அதுதான்.

________________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்