Friday, September 22, 2023
முகப்புபெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி
Array

பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 8

vote-012உதடுகளில் சாயத்தோடும், தோளில் பையோடும் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் உங்களைக் கடந்து போகும் போது நீங்கள் நினைக்கக்கூடும், ‘பாருங்கப்பா பெண்கள் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்’ என்று. அப்படி நினைத்தீர்களானால் உங்களுக்கு பெண்களின் வாழ்நிலை குறித்தோ, அவளின் இருப்பு குறித்தோ எந்தவித அக்கறையும் இல்லை என்றே சொல்வேன். வார்த்தைகள் தடிப்பானவையாக இருக்கலாம். ஆனால் நண்பர்களே நான் சொல்வது உண்மையிலும் உண்மை. பெண் ஜனாதிபதியாகிவிட்டார், பெண் முதலமைச்சர் ஆகிவிட்டார்,  பெண் அதுவாகிட்டார், இதுவாகிவிட்டார்…எதுவானாலும் பெண் எப்போது பெண்ணாக இருந்திருக்கிறாள்?

___________________________________________________

பெண்? திருமணத்துக்கு முன்…

“ஆண் குழந்தைகளோடு விளையாடக்கூடாது. தனிமையில் ஆடினாலும் சொப்பு வைத்து சோறு வடி. வீட்டு வாசலைத் தாண்டி தெருவுக்கு போய்விடக்கூடாது. அப்படி போனால் அப்போதே அவளின் எதிர்காலம் பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரிந்துவிடும். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே இது இழுத்துக்கிட்டு போகப் போவுது பார்த்துக்க.

வீட்டை விட்டு வரக்கூடாது, ஆண்கள் வீட்டுக்குள் வந்தால் கக்கூஸுக்குள்ளோ கிச்சனுக்குள்ளோ அடைக்கலம் புகுந்து கொள். தலைவாரி-பொட்டு வைத்து-பூச்சூடு (பின்னாளில் கணவனை கவர்ந்து கைக்குள் போட்டுக் கொள்வதற்குத்தான்). பாத்திரம் கழுவு, வீட்டைக் கழுவு, அண்ணன்-தம்பி குண்டியைக் கழுவ (கணவன் வீட்டில் உள்ள அத்தனை பேரின் அத்தனையையும் கழுவ பயிற்சி) கற்றுக்கொள்.”

“வயசுக்கு வந்த பொண்ணுக்கு படிப்பெதுக்கு? சேர்த்து வைத்த தட்சணையை வரனுக்கு கொடுத்து தத்தளித்துக் கொண்டிருப்பவளை கரை சேர்த்துவிடலாமில்லையா? படிக்கப் போனவள் வீடு வந்து சேர்வதற்க்குள் மடியில் இருக்கும் நெருப்பு கனன்று கொண்டே இருக்கும், எப்போ அவள் பத்திக்குவாளோ என்று. வீட்டு பட்ஜெட்டில் மாசமாசம் பெரிய்ய சேலையோ வேட்டியோ விழுந்தாலும் கூட படித்தவள் வேலைக்குப் போகக்கூடாது. வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொடுத்து ஒண்ணும் ஆகப்போறதில்லை. சீவிச் சிங்காரித்து (கவனிக்க…வீட்டில் இருக்கும்போது பயிற்சிக்காக மட்டுமே இதை செய்ய வேண்டும்) அப்படியே வேலைக்குப் போனாலும் வரதட்சணைப் பணத்துக்குத்தான் ஆகப்போகுது. காலகாலத்துல கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்காம அப்படியே இருந்து புரட்சி செய்யப்போறீயா?”

______________________________________________

திருமணத்துக்குப் பின்…

“கணவன் + அவன் குடும்பத்தினர் அத்தனை பேரின் கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு வீட்டு வேலையைச் செய். வேலைக்குப் போனாலும் இந்த சாஷ்டாங்க சடங்கை செய்தாக வேண்டும். புர்காவைப் போல சுடிதார் இருக்க வேண்டும். புடவை கவர்ச்சியான உடை என்பதை ஆண்கள் தெரிந்து கொண்டுவிட்டார்கள். கழுத்தில் தாலியும் கால்களில் மெட்டியும் குளிக்கும் போதுகூட கழற்றப்படக்கூடாது & அப்படி கழற்றினால் நீ வேசையாவாய்! ஏனெனில் தாலியும் மெட்டியும் இல்லாமல் உன்னைப் பார்க்கும் ஆண்கள், உன்னை வசீகரித்து, உன்னிடம் கள்ளக்காதல் கொள்ள ஏதுவாகப் போய்விடும்.”

“புத்தகம் படிக்கக்கூடாது, பேப்பர் படிக்கக்கூடாது. சிறந்த குடும்பப் பெண் ஆவது எப்படி என கற்றுத்தரும் சீரியல்களையும் கணவனை முந்தானையில் முடிந்து கொள்ளும் ரகசியத்தைச் சொல்லும் பெண்கள் பத்திரிகைகளையும் பார்க்கலாம், படிக்கலாம். திருமணம் ஆன அடுத்த நாளே வாந்தி எடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் வாழைப்பழத்தோடு புள்ளைப்பூச்சியை விழுங்க வைத்து (டெஸ்ட் டியுப் பேபி போன்ற நவீன சிகிச்சை முறையெல்லாம் வந்துடுச்சே என்கிறவர்களுக்கு பாரம்பரியத்தை போதிக்க ஆட்டோவில் ஆள் அனுப்பப்படும்) பிள்ளை பிறக்க வழி செய்யப்படும். அப்படியும் எந்த பூச்சியும் பிறக்கவில்லை என்றால் காத்துக்கிடக்கும் மலடி பட்டம். மலடன் என்கிற வார்த்தை தமிழில் இல்லையாம்!  பிள்ளை பிறந்துவிட்டால் கழுவும் வேலையை செய். வேலைக்குப் போவதற்கு பெரிய முற்றுப்புள்ளி வை. பிறகு வாழ்க்கை முழுவதும் ஏராளமான முற்றுப்புள்ளிகளை வைக்கக் கற்றுக் கொள்.”

___________________________________________________

தினக் கூலியாக இருந்தாலும் கார்ப்பரேட் கூலியாக இருந்தாலும் பெண் என்பவள் மேலே சொல்லப்பட்டிருக்கும் வரையறைகளுக்குள் வளர்க்கப்பட்டவளாகத்தான் இருப்பாள். வரையறைகளை மீறுவதற்கும் அப்படியே மீறி வந்தால் ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சமூகம் ஒருபோதும் இடம் தராது. ஆணின் சுகிப்புக்கும் அவனது வாரிசை உருவாக்குவது உள்ளிட்ட தேவைகளுக்குமே பெண் வளர்க்கப்படுகிறாள். இந்த வரையறைகளை வகுத்தவர் யார் ?

இதற்கு இந்த சமூகத்தின் ஒவ்வொரு துரும்பையும் குற்றம் சொல்ல வேண்டியிருக்கும். குற்றம் சொல்வது இருக்கட்டும், இந்த வரையறைகள் எல்லாம் அப்பட்டமான பெண்ணடிமைத்தனம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? அழுக்கு மூட்டைகளுக்கு கலாச்சாரம், பாரம்பரியம் என்று பெயர் கொடுத்திருக்கும் இந்திய சமூகத்தின் அவலம் இது.

என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! நம்பகத்தன்மை இல்லாதவர்கள். தன்னைப் பற்றிக்கூட அவர்கள் எப்போதும் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை மறைக்கத்தான் மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், இத்யாதி…இத்யாதி சமாச்சாரங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன.

ஆண்களின் தேவைக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட இத்யாதி வகையறாக்கள் பெண்களுக்கு கண்ணும் கருத்துமாக போதிக்கப்படுகின்றன. ஞானம் பெற்ற பெண்கள் அவற்றை, தலைமுறை தலைமுறையாக தாங்கள் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள். இந்த சங்கிலித் தொடர் செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் வரும்போது ஆண் இனம் சீறிப் பாய்கிறது.

______________________________________________

இறுதியாக இறைஞ்சுதல்…

பெண் உயர்ந்தவள்-ஆண் தாழ்ந்தவன் என்கிற தர்க்கம் இப்போது தேவையே இல்லை. பெண்ணை சக உயிராகக் கூட மதிக்காத சமூகத்தில் பெண்ணின் மேன்மை குறித்து பேச என்ன இருக்கிறது? என்னைச் சுற்றியுள்ள பெண்களின் நிலைமையை கூர்ந்து பார்க்கும்போது, மிகுந்த மனஉளைச்சலும் வெறுப்புணர்வும் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒருவகையில் பிரச்சினை என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரண்டு வகையிலும் பிரச்சினைதான். நான் பணியாற்றும் ஊடகத்துறையில் இரண்டையும் சமாளிக்க முடியாமல் எத்தனை பெண்கள் ஓடி மறைந்துவிட்டார்கள் தெரியுமா?

சக பணியாளர்களான ஆண்களின் கிசுகிசுக்களும் தன் குடும்பத்தாரின் நிர்பந்தமும் பெண்களை சமையலறைக்குள் துரத்திக் கொண்டிருக்கின்றன. ஊருக்கே கலெக்டராக இருந்தாலும் வீட்டு வேலை செய்யாத பொம்பளை பொம்பளையே இல்லை! என்பது போன்ற சினிமா வசனங்களை உச்சரித்து, பெண்களுக்கு பாடம் நடத்தாத ஆணைப் பார்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது.

இங்கே இன்னொரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்ணடிமைத்தனத்தை சிதைக்காமல் காப்பாற்றும் வேலையை இந்திய சினிமாக்கள் கச்சிதமாகச் செய்கின்றன. சினிமாவைப் பார்த்து பால் குடித்து, சினிமாவைப் பார்த்து உடையணிந்து, சினிமாவைப் பார்த்து மோகம் கொள்ளும் ஆண்களிடம் எப்படி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

சினிமாவில் பேண்ட் அணிந்த கதாநாயகியைப் பார்த்து காமுறும் கதாநாயகனை சுவீகரித்துக் கொண்ட ஆணுக்கு, தன் வீட்டுப் பெண் வசதிக்காக பேண்ட் அணியும் போது மற்ற ஆண்கள் அவளைப் பார்த்து காமுறக்கூடுமே என்கிற எண்ணம் மேலோங்குகிறது. அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள். இவர்களுடைய புரட்சி என்பது ஏட்டு சுரைக்காய் போல, வாழ்க்கைக்கு உதவாது. நீண்ட கூந்தலில் பூச்சூடி, வட்ட பொட்டு வைத்து தாவணிப் போட்ட கிராமத்துப் பெண் வேண்டும் என்று தேடிப்பிடித்த புரட்சிகர ஆண்களை கண்டு புன்முறுவலடைந்திருக்கிறேன்.

திருமணம்தான் பெண்களை முடக்குவதில் முக்கிய நிறுவனமாகச் செயல்படுகிறது என்கிற காரணத்தால்தான் பெண்ணைப் பற்றி சொல்வதற்கு திருமணத்துக்குப் பின், முன் என்று பிரித்துக் கொண்டேன். திருமண அமைப்பே வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு நாம் இன்னும் செல்லவில்லை. அதுவரைக்கும் இப்போதிருக்கிற அமைப்பில் இயங்குவது சமூகத்தை பின்நோக்கித்தான் செலுத்தும்.. நாம் வேண்டுவதெல்லாம் அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதே. திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிற கட்சிகளும், இயக்கங்களும் இந்த விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்கிற கேள்வியும் இந்நேரத்தில் எழுகிறது. இப்போதிருக்கும் ஊடக வளர்ச்சியை ஏன் இந்த இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றன?

திரும்ப திரும்ப பெண்ணை குடும்பம்-திருமணம் என்கிற வட்டத்துக்குள் வைத்து மட்டுமே விவாதத்திற்கு உட்படுத்துவது (சிறப்பு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் எங்கள் எல்லோருடைய கருத்தும் இந்த புள்ளியில் இணைவது எதிர்பாராதது அல்ல) பலருக்கு எரிச்சலூட்டலாம். முதலில் மாற்றம் ஏற்பட வேண்டியது இந்த அமைப்புகளில்தான். அதுதான் எங்கள் எல்லோருடைய இறைஞ்சுதலும். கணவன், தகப்பனாக இருக்கிற ஆண்கள்தான் வேலையிடங்களிலும் சக பணியாளர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மாற்றம் பிறந்தால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கும்.

மற்றொரு புறம் அமைப்புகளை தூக்கி எறிந்து புரட்சி செய்கிற பெண்களின் மீது படும் முதல் கல், ஓர் ஆணுடையதாகத்தான் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் புரட்சி, தொடர் இயக்கமாக நீடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே ஆண்களின் அறியாமையை அவர்களுக்கு உணர்த்தாமல் விட்டதுதான். பெண்ணின் நிலையை உணர்ந்து பார்க்கும் ஆணால்தான் மாற்றத்தை துவக்கி வைக்க முடியும். பெண்ணிய இயக்கங்கள் இனி செயல்பட வேண்டியது ஆண்களிடத்தில்தான்!

இத்தகையதொரு உரையாடலை துவக்கி வைத்திருப்பதற்கும், பங்கேற்க அழைத்தமைக்கும் வினவுக்கு நன்றி…

_________________________________________________

–   மு.வி.நந்தினி

(ஊடகவியலாளர், சென்னையில் வாழ்கிறார். நந்தினியின் வலைப்பூ:  http://mvnandhini.wordpress.com)

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

  1. vaazththukkaL nandhini! mikachirappaana ezhuthhu!
    //இந்த வரையறைகள் எல்லாம் அப்பட்டமான பெண்ணடிமைத்தனம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? அழுக்கு மூட்டைகளுக்கு கலாச்சாரம், பாரம்பரியம் என்று பெயர் கொடுத்திருக்கும் இந்திய சமூகத்தின் அவலம் இது.

    // 100/100 uNmai.

    //திரும்ப திரும்ப பெண்ணை குடும்பம்-திருமணம் என்கிற வட்டத்துக்குள் வைத்து மட்டுமே விவாதத்திற்கு உட்படுத்துவது (சிறப்பு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் எங்கள் எல்லோருடைய கருத்தும் இந்த புள்ளியில் இணைவது எதிர்பாராதது அல்ல) பலருக்கு எரிச்சலூட்டலாம். முதலில் மாற்றம் ஏற்பட வேண்டியது இந்த அமைப்புகளில்தான். // Nitchayamaaga.

  2. //அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள்//
    //திருமணம்தான் பெண்களை முடக்குவதில் முக்கிய நிறுவனமாகச் செயல்படுகிறது என்கிற காரணத்தால்தான் பெண்ணைப் பற்றி சொல்வதற்கு திருமணத்துக்குப் பின், முன் என்று பிரித்துக் கொண்டேன்//
    நன்றி நந்தினி.

  3. கணவன், தகப்பனாக இருக்கிற ஆண்கள்தான் வேலையிடங்களிலும் சக பணியாளர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மாற்றம் பிறந்தால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கும்.
    புரட்சி, தொடர் இயக்கமாக நீடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே ஆண்களின் அறியாமையை அவர்களுக்கு உணர்த்தாமல் விட்டதுதான்.

    வழிமொழிந்து மீண்டும் வாழ்த்துகிறேன்.

  4. /// பெண்ணின் நிலையை உணர்ந்து பார்க்கும் ஆணால்தான் மாற்றத்தை துவக்கி வைக்க முடியும். பெண்ணிய இயக்கங்கள் இனி செயல்பட வேண்டியது ஆண்களிடத்தில்தான்!////

    நெத்தியடி !!!

  5. //வரையறைகளை மீறுவதற்கும் அப்படியே மீறி வந்தால் ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சமூகம் ஒருபோதும் இடம் தராது. ஆணின் சுகிப்புக்கும் அவனது வாரிசை உருவாக்குவது உள்ளிட்ட தேவைகளுக்குமே பெண் வளர்க்கப்படுகிறாள். இந்த வரையறைகளை வகுத்தவர் யார் ?//

    //என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! நம்பகத்தன்மை இல்லாதவர்கள். தன்னைப் பற்றிக்கூட அவர்கள் எப்போதும் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை மறைக்கத்தான் மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், இத்யாதி…இத்யாதி சமாச்சாரங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன.//

    //ஞானம் பெற்ற பெண்கள் அவற்றை, தலைமுறை தலைமுறையாக தாங்கள் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள். இந்த சங்கிலித் தொடர் செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் வரும்போது ஆண் இனம் சீறிப் பாய்கிறது.//

    //ஊருக்கே கலெக்டராக இருந்தாலும் வீட்டு வேலை செய்யாத பொம்பளை பொம்பளையே இல்லை! என்பது போன்ற சினிமா வசனங்களை உச்சரித்து, பெண்களுக்கு பாடம் நடத்தாத ஆணைப் பார்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது.//

    //திரும்ப திரும்ப பெண்ணை குடும்பம்-திருமணம் என்கிற வட்டத்துக்குள் வைத்து மட்டுமே விவாதத்திற்கு உட்படுத்துவது (சிறப்பு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் எங்கள் எல்லோருடைய கருத்தும் இந்த புள்ளியில் இணைவது எதிர்பாராதது அல்ல) பலருக்கு எரிச்சலூட்டலாம்.//

    நுட்பமான அவதனிப்புகள்.

    //நீண்ட கூந்தலில் பூச்சூடி, வட்ட பொட்டு வைத்து தாவணிப் போட்ட கிராமத்துப் பெண் வேண்டும் என்று தேடிப்பிடித்த புரட்சிகர ஆண்களை கண்டு புன்முறுவலடைந்திருக்கிறேன்.//

    ஹா… ஹா…..

  6.  தீர்க்கமான எழுத்து. //பெண்ணடிமைத்தனத்தை சிதைக்காமல் காப்பாற்றும் வேலையை இந்திய சினிமாக்கள் கச்சிதமாகச் செய்கின்றன. //. //குடும்பத்தில் மாற்றம் பிறந்தால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கும்//  இரண்டு கூற்றையும் வழிமொழிகிறேன். நன்றி.

  7. மேடைகளில் பேசும் அர்த்தமற்ற பேச்சுகள் போல் எழுதுகிறார்கள். இது ஒப்பாரிப் பெண்ணியம், சின்திக்கும் பெண்ணியம் அல்ல.

    ‘அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள். இவர்களுடைய புரட்சி என்பது ஏட்டு சுரைக்காய் போல, வாழ்க்கைக்கு உதவாது

    🙂

    • உங்களுடைய அவதானிப்பு சரிதான். இது ஒப்பாரி வகையைச் சேர்ந்ததுதான். என்னை எது அழுத்துகிறதோ அதிலிருந்து விடுபடுவதுதான் என் முதல் நோக்கமாக இருக்கும். அதுபோலத்தான் பெரியாரைப் படிக்காத, பெண்ணியம் என்கிற வார்த்தையே அலர்ஜிக்கு உரியதாக பார்க்கிற சராசரி பெண்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்புக்குள் இருக்கும் கயமைத்தனங்களை ஒப்பாரியாக வடித்திருக்கிறேன்.

      சமூகத்தை முழுவதுமாக அக்கிரமித்திருக்கிற சராசரி பெண்ணுக்கு குறைந்தபட்ச உரிமைகளையாவது மீட்டுத் தரவேண்டும். இதுவே இப்போதைக்கு செய்ய வேண்டியது. ரம்யா கிருஷ்ணனையும் ராதிகாவையும் ரசித்துக் கொண்டிருக்கும் என் தோழியிடம் ‘சிமோன் தி போவார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?’ என்று விளக்க ஆரம்பித்தால் அவளுடைய எதிர்வினை என்னவாக இருக்கும்?

  8. மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் நந்தினி! இந்தக்கட்டுரை மிகவும் பிடித்திருக்கிறது எனக்கு!

  9. நந்தினி!!! மிக மிக அருமை..! இறுதியாக இறைஞ்சுதல் வரை ஒவ்வொரு வரிக்கும் சபாஷ்..!!! இறைஞ்சுதலில் எனக்கு உடன்பாடில்லை… இங்கு ஆண்களிடம் இறைஞ்சுதலை விட, பெண்களிடம் அறைந்து சொல்லிப் பார்க்கலாம்… புண்ணியம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்..! இவ்வாறான விழிப்பு இருக்கிறவர்கள் கூட இழுத்துப் போர்த்திக் கொண்டு பாத்ரூமில்தான் ஒளிந்து கொள்கிறார்கள்..! இது முற்று முழுதாகப் பெண்களின் கையிலேயே இருக்கிறதாகப் படுகிறது..! இத்தகைய ரௌத்ரம் கொண்டுள்ள நீங்கள் இறைஞ்சலாமா தோழி… மற்றபடி மீண்டும்.. ஒரு முறை சொல்லத் தோன்றுகிறது… சபாஷ்!

  10. வாழ்த்துகள் நந்தினீ

    அப்பா : “மகனே சமூகத்தை முன்னேற்ற நீ முன்னே வா !”
    மகன்: “இல்லை அப்பா .சமூகம் முனேறினால் தான் நான் முன்னேற முடியும்.”
    இது நான் “சமூக கல்வி ” என்ற பாடசாலை பாட புத்தகத்தில் படித்தது.
    இதில் யாரது கருத்து சரியானது?
    n

  11. வாழ்த்துகள் நந்தினீ!

    அப்பா : “மகனே சமூகத்தை முன்னேற்ற நீ முன்னுக்கு வா ”
    மகன் :” இல்லை அப்பா சமூகம் முன்னேறினால் தான் நான் முன்னேற முடியும் ”
    இது” சமூககல்வி “என்ற பாடசாலை பாட புத்தகத்தில் (ஈழத்தில் ) உள்ளது.
    இதில் எது சரி

  12. //பெண்ணிய இயக்கங்கள் இனி செயல்பட வேண்டியது ஆண்களிடத்தில்தான்!//
    இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? கொஞ்சம் விளக்குங்களேன்!

    • பெண்களுக்காக பெண்ணிய இயக்கங்கள் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கின்றனவோ அதை ஆண்களிடமும் செய்ய வேண்டும் என்பதைத்தான் அதில் சொல்லியிருக்கிறேன். அதாவது இது பொம்பளைங்க சமாச்சாரம் என்று ஆண்கள் ஒதுங்கிக்கொண்டதாலும் அல்லது இது பெண்களுக்கு மட்டுமேயானது என பெண்ணிய இயக்கங்கள் கருதியதாலும்தான் இன்றும்கூட அப்பட்டமான பெண்ணடிமைத்தனம் நவீன மாற்றங்களோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. பெண்களுக்கென்று பிரத்யேகமாக ஆண்கள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது நோக்கமாக இல்லாதபோது, ஆண்களை உள்ளடக்கிய சமூகத்தில் பெண்களுக்கான உரிமையை உறுதிசெய்ய ஆண்களிடம் மாற்றத்தை உண்டாக்குவது முக்கியமாகப்படுகிறது.

  13. //தினக் கூலியாக இருந்தாலும் கார்ப்பரேட் கூலியாக இருந்தாலும் பெண் என்பவள் மேலே சொல்லப்பட்டிருக்கும் வரையறைகளுக்குள் வளர்க்கப்பட்டவளாகத்தான் இருப்பாள்.//
    முற்றிலும் உண்மை.

  14. சிறு வயதிலிருந்தே பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள். எதற்கு வளர்க்கப்படுகிறாள் என்பதை தெளிவாக கூறியிருக்கிறீர்கள்.

  15. தோழர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி…

    ஆமாம் பதிவில் சொன்னதைவிட சொல்லாமல் விட்டது அதிகம். இதை துவக்கமாகவே கருதுகிறேன். இனியும் சொல்ல என்னிடம் நிறையவே இருக்கிறது.

  16. sariyapaa vinavu … appadiya thiru nangai + thir nambikkum chance kudu…

    ungalukku muthali = thozhilali & aan = penn vitta vera velai illaiya … ini intha pakkam varamatten

  17. நாம் என்ன உரக்கச் சொன்னாலும் சிலர் காது செவிடாகவே இருக்கும் . புரிந்து கொள்வோர் சமூகத்தில் குறைவே .

    //அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள்//

    முற்றிலும் உண்மை . இதற்காகவே நான் சலாம் போடும் ஆண்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பதுண்டு .

    கட்டுரை அருமை . தொடருங்கள் .

  18. //அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள்/ இதை சற்று விளக்கமாக சொன்னால் உதவியாய் இருக்கும்.

  19. //நீண்ட கூந்தலில் பூச்சூடி, வட்ட பொட்டு வைத்து தாவணிப் போட்ட கிராமத்துப் பெண் வேண்டும் என்று தேடிப்பிடித்த புரட்சிகர ஆண்களை கண்டு புன்முறுவலடைந்திருக்கிறேன்.//

    இந்த வரிகளில் புரட்சிகர என்ற வார்த்தைக்கு ஒற்றை மேற்கோளில் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால்… தவறுதலாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது நந்தினி.

    • கேள்வி, நீங்கள் சொல்வதே சரி… சுட்டி காட்டியமைக்கு நன்றி.

      வீட்டு வாசல் வரை புரட்சி பேசுகிறவர்கள், வீட்டுக்குள் சென்றதும் சனாதன மனநிலைக்கு மாறிவிடுவதைத்தான் அப்படி குறிப்பிட்டேன். எடுத்த எடுப்பில் இப்படியொரு குற்றச்சாட்டை வைக்கவில்லை. புரட்சி பேசுகிற ஆணாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரவர் வீட்டில் உள்ள பெண்களை எப்படி நடத்துகிறோம் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் நான் சொல்ல வருவது உண்மை என்று புரியக்கூடும்.

      • எந்த அமைப்பிலும் இயங்காத… அல்லது இயங்க விரும்பாத… ‘முற்போக்கு’ மற்றும் ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஒருவகை. இவர்களை பதிவில் இவரைச் சுட்டுகிறீர்கள் என நினைத்தேன். அதனால், தனித்து சுட்டுங்கள் என கூறினேன்.

        மற்றொரு புறம், புரட்சிகர அமைப்புகளில் இயங்கும் தோழர்கள் எவ்வளவு ‘நல்ல’ தோழராக இருந்தாலும்… தன் மனைவியை, சகோதரியை, மகளை அமைப்பு பணியில் வேலை செய்ய ஊக்கம் கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள். அவர்களை சுட்டுவதென்றாலும் சரி தான்.

  20. எல்லாம் சரி. இப்போ என்ன பண்ணனும்? அதையும் சொல்லிட்ட நல்லாயிருக்கும்.

    சமுகத்தில் எல்லோருக்கும் இடமிருக்கு. எடுத்துக்கிறதும், எடுக்காததும் அவரவர் ரீச்(reach).

  21. ஆணும் பெண்ணும் சமமில்லை… ஆணைவிட பெண்ணோ பெண்ணை விட ஆணோ உயர்ந்தவர்கள் இல்லை. ஆண் வேறு, பெண் வேறு. இந்த இயலை புரிந்துகொள்ளாததால்தான் எண்ணற்ற கற்பிதங்களை நமது சமூகத்தின் முதுகில் மட்டுமல்ல… மூளையிலும் திணித்திருக்கிறார்கள். நந்தினியின் கட்டுரைக்கு விளைந்த பின்னூட்டம் போன்ற விவாதங்கள்…. இந்த சமூகத்தை தன் இருட்டு அணைப்பில் வைத்திருக்கும் சீரியல், சினிமா, மற்றும் செய்தி ஊடகங்களில் விவாதங்களாக நடக்காதவரை ‘ ‘பொருட்டான மாற்றத்தை”க் காண்பது அரிது. ஏனெனில் இந்த ஊடகவாதிகள் நடத்தும் நாடகம்தான்
    இன்றைய மட்டுமல்ல… நாளைக்கும் சேர்த்து ஆகப் பெரிய அபாயம

    வாழ்த்துக்கள் நந்தினி….

  22. முதலில் இந்த குடும்பத்தை எல்லாம் பந்தாடனும் …குடும்பம் தான் பெண்ணுக்கு முதல் எதிரி (போதை)…

  23. பெண் எப்போதும் பெண்ணாக இருப்பதில்லை. எல்லா நிலைகளிலும் ஆணின் தேவைகளிலே பெண் இருத்தப்பட்டிருக்கிறாள். சமுகம், மதம், வாய்ப்புகள் சார்ந்து சில விகிதங்கள் இருந்தாலும் பெண் என்பவள் ஆண்களுக்கானவள் எனும் மதிப்பீடு இருபாலரிடமும் இருக்கிறது.

    திருமணம் என்பதும் ஒரு வகையில் ஆணாதிக்கத்தின் வடிவமே 

    செங்கொடி 

  24.  //திருமண அமைப்பே வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு நாம் இன்னும் //செல்லவில்லை//
    //திருமணம் என்பதும் ஒரு வகையில் ஆணாதிக்கத்தின் வடிவமே //

    திருமணம் என்பது ஆண்களை காயடித்த எருது  ஆக்கும் செயல் .ஆண்களுக்கு மட்டும் தான் ஏதோ பாலியல் உணர்வு உள்ளது போலும் , பெண்கள் அதை ஒரு வலியாக நினைபது போல ஒரு பொய் பிரச்சரம் செய்து ஆண்களை நிரந்தர வேலைகரர்களாக மாற்றி விட்டார்கள். அதிக அளவில் ஆண்கள் தற்கொலை செய்வது யாராலும் கண்டுகொள்ள படவே இல்லை !! .   
    Men and boys are always expected to be and conditioned to become protectors and providers, and also routinely portrayed asOppressors, aggressors, wife-beaters, dowry-seekers, bride-burners, sexual peverts, pimps, cheats, criminals, murderers, rapists, drug-peddlers, terrorists, etc. who ought to be restrained through inhuman, draconian laws;Idiots, pathetic, uncouth and inferior creatures who are constantly in need of rescue by their “superior” wives, girlfriends or female relatives who are set to overhaul them;In addition,The society considers kicking, punching and slapping men as acceptable and even laudable behaviour on the part of women and girls.
    The society considers boys and men as an expendable commodity at the time of crisis.
    The society forces men to take the last place in the queue for rescue in case of calamities.

    Sexual arousal is discernible in men, whereas it is not obvious in women. As a result, men constantly face the allegation of being obsessed with sex.It is believed that men always indulge in sex voluntarily, whereas women are thought to take part in sex either to fulfil the sexual or emotional needs of men or because they are forced to do so by men against their will.Sexual exploitation and rape of men and boys by women is not acknowledged as an offence, and in fact it is considered as a non-existent problem.Boys and men are coerced or enticed into having sex both within and outside marriage.Boys and men are blackmailed into having sex within and outside marriage.Boys and men face allegations of rape or threats by women who indulge in consensual sex only with the intention of forcing men into marrying them, to extort money and other ulterior motives.Married men also face abuse from wives who withhold sex as a means to blackmail, take revenge, or to attain other ulterior objectives.No legal provisions exist to protect men and boys from molestation, rape or any of the above mentioned forms of sexual exploitation.The society characterizes men as reckless, irresponsible and incapable of taking care of themselves or their children.
    The society is rapidly replacing men with women, machines and sperm banks and treating men as a disposable species.
    In addition to stereotyping of men and boys, welfare of boys and men has been seriously neglected in India, post-independence. Men are denied protection from domestic abuse, sexual harassment, social discrimination and also equal access to Government sponsored health care and safety at work place.

    http://aimwa.in/aimwa-charter

  25. நல்ல எழுத்து நடை,, பலருக்கும் இன்னும் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள்,, வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நந்தினி,, ஆனால் உங்களைப் பாராட்டும் எத்தனை பேர் உங்கள் கருத்துக்களை தங்கள் வாழ்வில் பின்பற்றுகிறார்கள் என்பது முக்கியம. குறைந்தபட்ச முயற்சி கூட போதுமானது. வீட்டில் முதலில் புரட்சி செய் என்றார் மாவோ, அதில்தான் இப்படியான எழுத்துக்களின் வெற்றியே இருக்கிறது. என்பது என் கருத்து. மீண்டும் என் பாராட்டுக்கள்,.

  26. ////அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள். இவர்களுடைய புரட்சி என்பது ஏட்டு சுரைக்காய் போல, வாழ்க்கைக்கு உதவாது. நீண்ட கூந்தலில் பூச்சூடி, வட்ட பொட்டு வைத்து தாவணிப் போட்ட கிராமத்துப் பெண் வேண்டும் என்று தேடிப்பிடித்த புரட்சிகர ஆண்களை கண்டு புன்முறுவலடைந்திருக்கிறேன்.////………………….

    வணக்கம் தோழர் . நீங்கள் சொல்லுவது 100 % உண்மை .. மற்ற ஆண்களை விட புரட்சி செய்கிற ஆண்கள், இப்படி இருப்பது மிகவும் வருத்ததிற்குரியது. இக்கட்டுரையையை பார்த்த பின்பாவது அவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் .. வாழ்த்துக்கள். நன்றி .

  27. அழுத்தமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்.. நன்றி நந்தினி….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க