முகப்புமரணத்தில் சூதாடும் மருத்துவ பயங்கரவாதிகள் !!
Array

மரணத்தில் சூதாடும் மருத்துவ பயங்கரவாதிகள் !!

-

vote-012காலாவதியான மருந்துகளைப் புதிய லேபிள்களில் அடைத்தும்,  போலி மருந்துகளைத் தயாரித்தும் தமிழகமெங்கும் விற்பனை செய்த கும்பல் சமீபத்தில் பிடிபட்டுள்ளது. இருப்பினும் இது புதிய செய்தியல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ’கேப்ஸ்யூல்ஸ்’ எனப்படும் கூட்டு மாத்திரையில் வெறும் மஞ்சள் பொடியை அடைத்து விற்பனை செய்த கம்பெனியொன்று பஞ்சாப்பில் பிடிபட்டதை நாம் அறிவோம். இருப்பினும் இப்போதுதான் இது போன்று  நடப்பதைப்போல செய்திகள் பரப்பப்படுகின்றன.

போலி மருந்து எனும் சொல்லே மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளாக இவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன? குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், என எத்தனையாயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனையாயிரம் பேர் இதனால் மரணமடைந்திருப்பார்கள்? எத்தனையாயிரம் பேர் இதனால் மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள்? அரசு மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் போலி, மற்றும் காலாவதியான மருந்துகள் இருக்கிறதா? அரசு மருத்துவமனைகளிலே ஒரு நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் பேர் சாகக்கூடிய இந்தியாவில்  இக்கேள்விகள் எதற்கும் பதிலில்லை.

மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், எனப் படித்திருக்கிறோம், பார்த்துமிருக்கிறோம். அவர்களெல்லாம் மருந்துகளினால் பலனின்றி உயிரிழந்தார்களா? அல்லது மருந்துகளின் பலனால் உயிரிழந்தார்களா? யாருக்கும் தெரியாது. மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் கொலைபாதகச் செயலை நம்மால் மன்னிக்க முடியுமா?

ஏராளமான அல்லது போதுமான அளவிற்கு சொத்து; கையிருப்பாகக் கணிசமாகப் பணம்; அதிகபட்ச செலவுகளையும் கூடத் தாக்குப் பிடிக்குத் தாண்டுமளவிற்கான சேமிப்பு; எல்லாச் செலவுகளும் போக மீதம் வரக்கூடிய அளவிற்கான மாத வருமானம்; எதற்கும் எந்தப் பய தயவும் தேவையில்லை என யாரையும் எதிர்பாராது இறுமாப்போடு வாழும் நிலை; இவைகளெல்லாமிருப்பதால் சமூகம், நாடு, மக்கள் குறித்த அக்கறைப்பட வேண்டிய அவசியமில்லை என  சுயநலத்தோடு தெனாவட்டாக பேசிக்கொண்டு வாழ்கின்ற பலர் கூட இந்தப் போலி மருந்துச் செய்தியைக் கேட்டுப் பதறுகிறார்கள். இந்தப் பதட்டம் தரும் டென்ஷனினால் ஏற்கனவே பிரஷ்ஷருக்காகப் பயன்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்குகிறார்கள்,

தற்போது சரணடைந்து சிறையிலிருக்கிற மீனாட்சிசுந்தரம் விற்பனை உரிமம் எடுத்திருந்த மருந்துக் கம்பெனியை ஒரு பன்னாட்டு மருந்துக் கம்பெனி வாங்கும்போது அதன் விற்பனையைக் குறித்த அறிக்கையை ஆய்வு செய்த போதுதான் இந்த விசயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.. தாங்கள் செய்கிற வேலையை ஒரு மீனாட்சி சுந்தரம் செய்வதா? என்கிற வகையில் தான் இந்த விசயத்தைக் கசிய விட்டிருக்கிறது அந்தப் பன்னாட்டுக் கம்பெனி. நித்யானந்தாவைத் தர்மானந்தா போட்டுக்கொடுத்தது போல ஒரு காலாவதியை ஒரு போலி போட்டுக்கொடுத்த நல்ல காரியம் நடந்திருக்கிறது. ஆனாலும் இதன் முழுப்பரிமாணத்தையும் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இது அதிர்ச்சியும், பயமும் தரக்கூடிய விசயமாக மட்டுமே ஊடகங்கள் எழுதி, பீதியைக் கிளப்பிவிடுகின்றன. ஆனால் இது அவ்வாறான பிரச்சினை மட்டுமே அல்ல, மாறாக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு மருத்துவப் பயங்கரவாதிகளும் அரசும் விளையாட்டுக் காட்டுகின்ற பிரச்சினை. மக்களைப் பாதிப்படையவைக்கின்ற  ஒரு குற்றப் பிரச்சினை. அரசுதான் இதில் முதல் குற்றவாளி.

தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கையினால் உருவாக்கப்பட்ட, புதிய மருந்துக் கொள்கையினை இந்திய ஆட்சியாளர்கள் நடைமுறைப் படுத்திய பிறகுதான், மருத்துவப் பயங்கரவாதிகள் துணிச்சலாக இந்தகைய  குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டன.

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் முதலாளிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் மருந்து தயாரிக்க அனுமதியளித்திருக்கிறது இந்திய அரசு. அயல் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பல ஆபத்தான மருந்துகளும் கூட இந்தியாவில் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில மருந்துகள் வெளிப்படையாகவும், சில மருந்துகள் ரகசியமாகவும் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்ல, இப்பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கு இந்திய மக்களைப் பயன்படுத்துகின்றன. 2001 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ஒரு அமெரிக்கக் கம்பெனியின் புதிய மருந்தினை மக்கள் மீது பரிசோதனை செய்து பார்த்த செய்தி வெளிவந்ததைப்  பார்த்தோம். இந்தப் பரிசோதனை செய்வதிலேயே ஆண்டொண்டிற்கு ஒரு மருந்துக்கு சுமார் 1500 கோடி ரூபாய்கள் சம்பாதிக்கின்றன. எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் நடத்தப்படுகின்ற இந்தப் பல்வகைக் கொள்ளைத் திட்டத்தின் ஒரு பகுதிதான் காலாவதி, மற்றும் போலி மருந்துகளைத் தயாரித்து செய்யும் விற்பனை. போலி மருந்துகளின் விற்பனையில் மட்டும் இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோடி ரூபாய் புழங்குவதாக முன்னர் அவுட்லுக் ஏடு வெளியிட்டிருந்தது.

துவக்கத்தில், புகார்கள் வந்தபோது போலியான மற்றும் காலாவதியான மருந்துகளைக் கண்டறிய போலீசும், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சென்றார்கள். ஒரு பத்திரிக்கையாளர், ”மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதாகக் கூறப்படுகிறதே”, எனக் கேட்கிறார், ”அவர்களும் எங்களோடுதான் வருகிறார்கள், அவர்கள்தான் ஆய்வு செய்து கண்டுபிடிக்கிறார்கள், அவர்கள் மீது எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி ஏதும் புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று பதில் கூறுகிறது போலீசு.

பல இடங்களில், பலகோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புடைய போலி மற்றும் காலாவதியான மருந்துகள் கிட்டங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தமிழகமெங்கும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடரவும் சுதாரித்த மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், ”போதுமான அதிகாரிகள் இல்லை, தமிழ்நாடு முழுவதிற்குமே 50 பேர்தான் இருக்கிறோம். எனவே, எங்களால் முழுமையாகக் கண்காணிக்க முடியவில்லைஎனப் பதட்டத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள்.

இதற்கிடையில் மருந்துக்கடைக்காரர்கள் தங்களிடமிருக்கும் காலாவதியான மருந்துகளை நள்ளிரவுகளில் சாக்கடைகளிலே கொட்டுகிற வேலையும் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. மருந்து விற்பனையாளர்கள் சங்கமோ, கடைகளை ஆய்வு செய்ய வரும்போது, போலீசு வரக்கூடாது, அதிகாரிகள் மட்டும் வந்தால் போதும். எங்களது கடைகளின் முன்னால் இந்தக்கடையில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படவில்லைஎன்று போர்டு மாட்டி வைத்துவிடுகிறோம், என அறிக்கை விடுகிறார்கள். மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளோடு இனி போலீசுமல்லவா மாமூலுக்கு வந்துவிடும் என்பது அவர்கள் கவலை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இவர்களின் வாக்குமூலமே இவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. 50 பேர் போதாது என்றால் அதை அதிகரிப்பதற்காக மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்கள்? அவர்களது சங்கம் இதற்காகப் போராடியதுண்டா? ஆட்களைக் கூடுதலாக நியமித்தால் பங்குத்தொகை குறைந்துவிடுமே என்பதற்காகத் தானே இவர்கள் பேசாமல் இருந்தார்கள். எப்பேர்ப்பட்ட பிரச்சினை இது! உண்மையாகவே, ஒரு உயிராதாரமான இந்தப் பிரச்சினையில் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்பதோடு அதை அலட்சியமானதாகவும் நினைக்கிறார்கள். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அலட்சியப்படுத்தக் கூடிய கூட்டமே மக்கள் என்கிற சிந்தனையில் அரசாங்கமே இருக்கும் போது அதன் ஊழியர்கள் மட்டும் வேறுமாதிரியாகவா இருப்பார்கள்!.

மருந்துக்கடைக்காரர்களோ மாதந்தோறும் மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மாமூல் கொடுக்கிறார்கள். திருட்டுசி.டி, கள்ளநோட்டு, போலிமது, என்கிற வரிசையில் மருந்தையும் சேர்த்துவைத்து கப்பம் கட்டுவதுதானே இங்கே நடந்துகொண்டிருக்கிற உண்மை.

அரசு மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாமல், இந்த குற்றங்கள் நடந்திருக்கும் என்பதை முட்டாள் கூட நம்பமாட்டான். ஆனால் எல்லோரையுமே அடிமுட்டாள்களாக நினைத்துக் கொண்டு கதைகதையாய் அவிழ்த்துவிடுகிறார்கள் அரசு அதிகாரிகள். அவர்கள் மாதந்தோறும் கப்பம் கட்டுகிற  ஆளுங்கட்சிக்காரர்கள் தங்களைக் காப்பாற்றிவிடுவார்கள் என்கிற நம்பிக்கையே அவர்களை அவ்வாறு பேசவைக்கிறது.

மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மட்டுமல்ல, மருந்து விற்பனையாளர்களே அரசியல்வாதிகளின் செல்வாக்கோடுதான் இந்தக் குற்றங்களைச் செய்கிறார்கள். உதாரணமாக, தற்போது பிடிபட்டிருக்கிற மீனா ஹெல்த்கேர் மற்றும் வசந்தா பார்மசி நிறுவனத்தின் உரிமையாளன் காரைக்குடி மீனாட்சி சுந்தரம் கூட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய உறவினரென்றும் அவருக்காக வங்கியில் 150 கோடிரூபாய்களுக்கும் மேல் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறாரென்றும் தினகரன் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு ஆஸ்தான வழக்கறிஞர் என்பது நாமறிந்ததே!.

மருத்துவத்திற்கான மருந்துகள் மட்டுமல்ல, விவசாயத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் காலாவதியும் போலியும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அது அசலாக வேலை செய்வது மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ளச் சாப்பிடும்போது மட்டும்தான்.

இன்று போலி மற்றும் காலாவதி மருந்துகளை ஆய்வுசெய்து கண்டுபிடிப்பதாகச் சொல்கிறார்கள். காலாவதியான மருந்துகளைப் பழைய பேக்கிங்களிலிருந்து பிரித்து எடுத்து புதிய பேக்கிங்குகளில் வைத்திருக்கிறார்களென்றால், காலாவதியான மருந்துகள் எவை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு அட்டையிலிருந்து ஒரு மாத்திரையை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்து போலி இல்லை அல்லது காலாவதி இல்லை என்று சொன்னால், அதே அட்டையிலுள்ள இன்னொரு மாத்திரை போலியானது இல்லை என்று மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உத்திரவாதம் தர முடியுமா? முடியாது. இதே போன்றுதான் ஊசிமருந்துகளையும் கண்டுபிடிக்க முடியாது, குழந்தைகளுக்கான ஸிரப் போன்றவைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சோதனை செய்தாலொழிய, போலிகளைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் போலிகளே இல்லை என்று மருத்துவ இணை இயக்குநர் பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்திருக்கிறார். இதற்கும், ப,சிதம்பரம்- மீனாட்சி சுந்தரம்- உறவினர்-  சிவகங்கை மாவட்டம் என்பதற்கும் சம்பந்தமில்லாமலா இருக்கும்.

போலியான, காலாவதியான மருந்துகள் தமிழகமெங்கும் விற்பனை செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக தமிழகம் முழுவதுமுள்ள இருப்பு மருந்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தி விட்டு நன்கு சோதிக்கப்பட்ட புதிய மருந்துகளை விற்பனை செய்ய வைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கும் என்பதற்கு நம்பிக்கை தரக்கூடிய எதுவும் தமிழகத்தில் இல்லை. .மக்கள் தெருவில் இறங்கி, அரசியலையே தொழிலாக்கியுள்ள இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களையும், அவர்களின் எஜமானர்களாகிய பன்னாட்டுக் கம்பனி முதலாளிகளையும் அடித்து விரட்டு வதைத் தவிர.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. நல்ல பதிவு, இப்பவாவது இதை பற்றி போட்டீர்களே… இப்படி பட்டவர்களை பிடித்து மரணதண்டனைதான் தரவேண்டும்… அல்லது அவர்கள் விற்ற காலவதியான மருந்துகளை கொடுக்க வேண்டும்…

    இதைப்பற்றி நான் முன்பே போட்டுள்ளேன்.
    http://mastanoli.blogspot.com/2009/12/blog-post_28.html

  2. ///
    மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், எனப் படித்திருக்கிறோம், பார்த்துமிருக்கிறோம். அவர்களெல்லாம் மருந்துகளினால் பலனின்றி உயிரிழந்தார்களா? அல்லது மருந்துகளின் பலனால் உயிரிழந்தார்களா? யாருக்கும் தெரியாது. மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் கொலைபாதகச் செயலை நம்மால் மன்னிக்க முடியுமா?
    ///

    அவர்கள் இறப்பிற்கு இது எல்லாம் காரணமாய் இருந்திருக்கும், கண்டிப்பாக மரண வியாபாரிகளும் ஒரு காரணம்தான். இதை படிக்க படிக்க மிகவும் கோபமும், எதையும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கமாய் இருக்கிறது.

  3. ///
    அரசு மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாமல், இந்த குற்றங்கள் நடந்திருக்கும் என்பதை முட்டாள் கூட நம்பமாட்டான்.
    ///

    ஆயிரம் சதவீதம் உண்மை, இவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?

    • அந்த மருந்தை அவர்களை விட்டு சோதிக்க வேண்டும் ? எப்புட்டிய் ….

  4. ”.மக்கள் தெருவில் இறங்கி, அரசியலையே தொழிலாக்கியுள்ள இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களையும், அவர்களின் எஜமானர்களாகிய பன்னாட்டுக் கம்பனி முதலாளிகளையும் அடித்து விரட்டு வதைத் தவிர.”

    மிக சரியானது! உழைக்கும் மக்கள் ஒன்றினைந்த்து இந்த ஒட்டு பொறுக்கி அரசியலை தூக்கி எறியும் இப்படி பட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கும்

  5. இந்தியாவில் எப்படி மோசடி செய்தலும் சட்டம் மூலம் வெளிவந்திடலாம் என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது அது மாற வேண்டும், கண்டிப்பாக கொடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

    நமக்கு எதுவும் நடக்காத வரை நாம் எதையும் கண்டு கொள்ள போவது இல்லை…

  6. பணக்கரர்களுக்கான உலகம் இது என்றாகி விட்டது. தனக்கு நேர்ந்தால் தான் எந்த ஒரு வலியும் உணரப்படுகிறது. மருந்தில் கூட போலி என்றால்… நினைக்கவே வேதனையாக உள்ளது. இவர்களை என்ன செய்தாலும் தகும்.

    எல்லா துன்பங்களுக்கும் ஆணிவேர் பணத்தாசையே..

    • //எல்லா துன்பங்களுக்கும் ஆணிவேர் பணத்தாசையே..//

      என்னங்க இப்படி சொல்லிட்டீங்க… அதியமானுக்கு தெரிஞ்சா கோவிச்சுக்கப் போறாரு. பணத்தாசைதான் மனித குல வளர்ச்சிக்கே ஆணி வேர்னு அவர் சொல்றாரு….

  7. போலி சாமியார்,
    போலி மருத்துவர்
    போலி போலீஸ்
    போலி மருந்து
    போலிகள் உலகத்தில்
    உண்மைகள் எல்லாம்
    போலிகளாத்தான் இருக்கும்

    போலிகளை ஒவ்வொன்றாக
    எப்போது ஒழிப்பது
    மொத்த போலி ஜனநாயகத்தையும்
    ஒட்டுமொத்தமாய் ஒழித்து
    பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வரனும்

      • ஆமா
        போலி கம்யூனிஸ்டு (சிபிஐ,சிபிஎம்)
        போலி கட்சி (இது நிறைய இருக்கு)
        போலி கதவடைப்பு
        போலி மதசார்பின்மைவாதம்(காங்கிரஸ் பேசுவது)
        போலி புரட்சி
        போலி சோசலிசம்(சீனாவில் நிலவுவது)
        போலி பெண்ணியம்(லீலா மணிமேகலை)
        போலி தமிழினவாதம் (வைக்கோ முதல் கலைஞர் வரை)
        போலி கள் உலகமடா தோழா

        ன்னு சொல்லவேண்டியதுதான்
        தோழர் விடுதலை இன்னும் பட்டியல் இருந்தா சொல்லுங்க

        • தோழர் கார்ல்மார்க்ஸ்
          நன்றிபோலி என்றவுடன் அதில் போலி கம்யுனிஸ்டுகள் பெயரும் வந்தால் முழுமையடையும் என்று நினைத்தேன், அவ்வளவுதாங்க தோழர்மற்றபடி தவறாக எண்ணவேண்டாம்,

  8. மருந்து பொருட்களைப் பொறுத்தவரை உண்மை, போலி என்று பகுத்து உணரும் அறிவு எல்லோரிடம் இல்லை என்பதுதான் இவர்களைப் போன்ற சுயநலவாதிகள் நம்மை ஏமாற்ற வழி செய்கிறது. மருத்துவர்கள் இதைப் பற்றி என்ன சொல்ல போகிறார்கள்? மருத்துவர்களால் இது போலி, இது அசல் என்று பிரிக்க முடியுமென்று தோணவில்லை. பதிவில் கூறியிருப்பதைப் போல ஒவ்வொரு அட்டையிலும் ஒவ்வொரு மருந்தையும் சோதனை செய்வது சாத்தியமா?

    • அந்தப்பணி மருந்தாக்கியல்(ஃபாரமஸிஸ்ட்) நிபுணரைச்சாரும். இன்றைய தாராளமய, நுகர்வோர் சூழலில் பேருக்கு கையெத்து மட்டும் போட்டுவிட்டு மாதம் ரூ.௧௦௦௦(1000) பெற்றுக்கொண்டு கடையில் என்ன நடக்கிறதென்று பார்ப்பதில்லை. இக்கல்வியில் தகுதி அடிப்படையில் இடம்பெற்று முதல் வகுப்பில் தேறியிருந்தாலும் நான் கையெழுத்து போட மறுத்துவிட்டேன். காரணம் என் போன்றவர்களின் திறனெல்லாம் தற்கால போலி சனநாயக சமுதாயத்தில் தேவையில்லை என்பதால். இன்னும் நேர்மையாளனென்றால் இடமேயில்லை.
      மருந்து ஆய்வாளருக்கும் இக்கல்வியே தகுதி. இப்பணிக்கு ௧௯௯௯-ல் (1999ல்) ரூ. 5கோடிவரை கையூட்டு கேட்கப்பட்டது. இப்போது ௨௦௧௦(2010) என்ன விலையெனத்தெரியவில்லை. நம்புவீர்களா?

  9. மருந்து ஆய்வாளர்கள் மாதா மாதம் மாமுல் வாங்குவது உண்மை…அது கவுண்டர் சேல்ஸ் எனப்படும் விற்பனைக்கு மட்டுமே என்கிறார்கள்.காலாவதி மருந்து விற்பனை மன்னிக்க முடியாத கொடும் குற்றம்.ஆனால் தற்போது ரோடு ஓரம் கொட்டப்படும் மருந்துகள் அவ் வகையை சார்ந்தவை அல்ல.ஒவ்வொரு கடையிலும் அவர்களின் பார்வைக்கு மீறி சில மருந்துகள் காலாவதியாகிவிடும்,அதை பார்க்கும் போது அதை தனியே எடுத்து வைத்து அந்த நிருவனத்திடம் திருப்பிகொடுக்க வேண்டும் .இப்போது சோதனைக்கு பயந்து அதை வைத்திருந்தாலே குற்றம் என எண்ணி குப்பையில் கொட்டுகின்றனர் இதுதான் பெரும்பாலான இடங்களில் நடக்கிறது.

    • //அதை பார்க்கும் போது அதை தனியே எடுத்து வைத்து அந்த நிருவனத்திடம் திருப்பிகொடுக்க வேண்டும் //
      திருப்பி தந்தால்… அந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதற்கான ஈடு தொகை தருவதில்லை. அதற்காக கடைக்காரர்கள் அதை படிக்காதவர்கள் தலையில் கட்டுவதுண்டு.

  10. நம்ம மக்கள் தான் ஓட்ட விக்கிறன்கள்ள எப்படி இதெல்லாம் பொய் கேக்கமுடியும? எங்க எவனாச்சு பொய் கேக்க சொல்லுங்க பாப்போம் .

  11. சொகுசாய் வாழவேண்டும் அதற்கு சம்பாதிக்க வேண்டும். சம்பாதிக்க திறமை வேண்டும். அத்திறமை நேர்மையாகத்தான் இருக்கவேண்டும். என்பது அவசியமில்லை. மக்களின் உயிர் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை..எந்த வழியிலிருந்தாலும் பரவாயில்லை.சாராயம் காய்ச்சலாம், போதைமருந்துகள் விற்கலாம், விபச்சாரம் செய்யலாம், ஊழல் செய்யலாம், கொள்ளையடிக்கலாம், அடுத்தவன் உழைப்பை நக்கித் தின்னலாம். இதுதான் தனியார்மயம் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாகவே செய்யலாம் ஒளிவு மறைவு தேவையில்லை. எல்லாம் கிரிமினல் மயம். இதுதான் தாராளமயம்.. இதில் இந்த நாடு அந்த நாடு என்றில்லை எல்லோரும் கூட்டுக் களவானிகள் இதுதான் உலகமயம். இதன் மொத்த உருவம்தான் முதலாளித்துவம். இதை ஆதரிக்கத்தான் நம்மில் பலர் அதுதான் வெட்கக்கேடு

  12. தயவுசெய்து முன்னூறு விழுக்காட்டிற்கு மேல் லாபம் வைக்கவேண்டாம் என அரசு மருந்து தயாரிப்பவர்களை கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இதில் வரி ஏய்ப்பு செய்யா முதலாளி எவனுமில்லை. அப்படியும் காலாவதியான மருந்துகளையும் காசாக்காமல் விடுவதில்லை வெறியில் மக்களின் உயிர் பொருட்டாய் தெரியவில்லை. இப்படி வதைக்கப்படும் உயிர்களிளிருந்து கிளைப்பது தான் மூலதனம். இந்த மூலதனம் தான் ஒருவனை உயர்ந்தவனாக்குகிறது என்றால், அதை குவித்து வைத்திருக்கும் அனைவரும் அயோக்கியர்களே, அழிக்கப்படவேண்டியவர்களே.

    செங்கொடி 

  13. குழந்தைகளுக்கு வாங்கிய சளிக்கான மாத்திரை முதல் நாள் விலைக்கும் அடுத்த நாள் வாங்கும் போது நான்கு ரூபாய் வித்யாசம்.  கவனமாக முதல் நாள் இருப்பு இல்லை என்ற தகவல் வேறு.  அந்த மாத்திரை அந்த மருத்துவரை தவிர அந்த மருந்துக்கடை தவிர வேறு எங்கும் இருப்பதில்லை.  ஆறுமாதம் தாக்கு பிடித்த எதிர்ப்பு சக்தி மாதம் ஒரு மாதம் முறை என்று மாறி மொத்தமாக தினந்தோறும் பயன்படுத்தி விடுங்கள் என்று சொன்ன போது மனம் விழித்துக்கொண்டது.  நாட்டு வைத்தியர் கொடுத்த சமாச்சாரங்கள் மூன்று வருட பிரச்சனைகளை முழுமையாக போக்கி விட்டது.  காரணம் வேரை மறந்து விழுதுகளை விரும்பிக்கொண்டுருக்கும் நாம் தான் முதல் மாபியா.

  14. மக்கள் தெருவில் இறங்கி, அரசியலையே தொழிலாக்கியுள்ள இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களையும், அவர்களின் எஜமானர்களாகிய பன்னாட்டுக் கம்பனி முதலாளிகளையும் அடித்து விரட்டு வதைத் தவிர//

    இங்கு பல கம்பெனிகள் ,பல பதவிகள் எல்லாம் பினாமியாக தான் இயங்குகின்றன .கல்வி ,மருத்துவம் என்று எல்லா பக்கங்களிலும் பணம் பார்ப்பதை விட வேறு எந்த குறிக்கோளும் இல்லாமல் .காலாவதியான மருந்துகள் மட்டுமன்றி ,பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள் கூட இங்கே அனுமதிக்கப்படுகின்றன .(உதா … லேடிரசால் letrozoleஎனும் மருந்து இங்கு மட்டுமே கருமுட்டை வளர்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டு ,பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது ,வேறு நாடுகளில் கருமுட்டை வளர்ச்சிக்கு இதை பயன்படுத்த அனுமதி இல்லை )

    அரசோ, அரசாங்க மருத்துவமனைகளை சரியாக மேன்படுத்தாமல் தனியாரிடம் இன்சூரன்ஸ் செய்து காசைக் கொடுத்து வாங்குகிறது .மந்திரிகள் ,முதல்வர் எல்லோரும் உடல் நலக் குறைவென்றால் உடனே அப்போல்லோவுக்கோ ராமச்சந்திராவுக்கோ ஓடுகிறார்கள்.இதே ராமச்சந்திரா மருத்துவமனையை இதே தி மு க அரசு கையகப்படுத்தியது ,அதில் அரசு நிலம் இருக்கிறது என .இப்போது என்னவோ உறவாக தான் இருக்கிறார்கள் ….

    • ”பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள் கூட இங்கே அனுமதிக்கப்படுகின்றன ” 
      ஐரோப்பிய, அமெரிக்க அரசுகள் தனது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றியுள்ளதாம். இதை ஆதரிப்பவர்களின் முகத்திலடிக்க மேலே உள்ள சான்று போதும். மூன்றாம் உலக மக்களின் உழைப்பைச் சுரண்டியதற்கல்லாமல் அவர்கள் பிணமாகுவதற்கும் ஆதரவளித்துவிட்டு, அதோ அங்கே பாருங்கள் மேற்கே மனம் வீசுகிறது என்கிறார்கள் கயவர்கள். முதலில் நமது நாட்டின் பிணவாடைக்கு காரணம் எதனாலென்று பதில் கூறட்டும், பிறகு புரியும் மேற்கின் மனம் எதனால் என்று.

      • Yes, many drugs which are banned in the West are sold here freely. that is our fault and it is upto our people and parliament to ban or control them. It is stupid to blame others for our foolishness and corruption. Nothing prevents us from banning drugs and companies or prosequeting criminals. Criminals and bogus cheats exist all over the world. It is upto to the individual nations to be alert and to enforce the rule of the law stictly.

        Why is this kind of ciminal actions nearly impossible in the West ?

        the full truth about the issue is still emerging. It is the nexus between wholesalers and drug inspectors…

      • ///ஐரோப்பிய, அமெரிக்க அரசுகள் தனது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றியுள்ளதாம். //// ஆம். உண்மைதானே ? இல்லை அது வெறும் மாயையா ?

      • ///முதலில் நமது நாட்டின் பிணவாடைக்கு காரணம் எதனாலென்று பதில் கூறட்டும்,/// நம்முடைய முட்டாள்தனம் தான். வேறென்ன ?

        • ”நம்முடைய முட்டாள்தனம் தான். வேறென்ன ?”
           ”நம்முடைய” என்று இங்கு யாரைக் குறிப்பிடுகிறீர்கள்.

        • இது போன்ற விடயங்களில் பொத்தாம் பொதுவாக பேசுவது அவாளுக்கு கை வந்த கலை

  15. காலாவதியான மருந்துகளைப் பழைய பேக்கிங்களிலிருந்து பிரித்து எடுத்து புதிய பேக்கிங்குகளில் வைத்திருக்கிறார்களென்றால், காலாவதியான மருந்துகள் எவை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

    -sinthikka vaikkiRathu..

  16. //போதுமான அதிகாரிகள் இல்லை, தமிழ்நாடு முழுவதிற்குமே 50 பேர்தான் இருக்கிறோம். எனவே, எங்களால் முழுமையாகக் கண்காணிக்க முடியவில்லை” எனப் பதட்டத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள்.//
    தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மொத்தம் 42500 க்கும் மேல் என்கிறார்கள். 50 பேர்களுக்கும் கடைகளை பங்கு போட்டால்… ஒரு ஆய்வாளருக்கு 850 கடைகள். தினம் ஒரு கடை என சோதித்தாலும். மீண்டும் சுழற்சி முறையில் திரும்பி வர… 3 ஆண்டுகள் ஆகும். கட்டுரையாளர் குறிப்பிடுவது போல… சோதிக்க என்பதெல்லாம் கண்துடைப்பு. தினமும் 4 கடைக்கு போய் லஞ்சம் வாங்கத்தான் அதிகாரிகளுக்கு நேரம் சரியாக இருக்கும்.

  17. மருந்து கடைகளில்.. ஒரு பார்மஸிஸ்ட் ஒருவரை கட்டாயமாக நியமிக்க வேண்டும் என அரசு விதி கூறுகிறது. எந்த மருந்தும் அவருடைய பார்வையின் கீழ் தான் வாடிக்கையாளருக்கு தர வேண்டும். சரியான மருந்தா, காலாவதியான மருந்தா என பரிசோதிக்க தான் இந்த ஏற்பாடு.
    நடைமுறையில்…பெரும்பாலான மருந்து கடைகாரர்கள் பார்மஸிஸ்ட்க்கு… . குறைந்தபட்ச சம்பளம் கூட தருவது இல்லை. அதனால்…. இந்த பார்மஸிஸ்ட்கள் படித்த படிப்புக்காக சான்றிதழைக் கொடுத்து… பகுதி நேரமாக கடைக்கு அரசுக்காக சில ரிஜிஸ்டர்களை வந்து எழுதி கையெழுத்திட்டு செல்கிறார்கள். அதற்காக குறைந்தபட்சம் 400 லிருந்து 800 வரை பெற்றுக்கொள்கிறார்கள். வெளியில் வேறு வேலை பார்க்கிறார்கள்.
    எனக்கு தெரிந்து… இப்படி ஒரு கடையில் பகுதி நேரமாக கையெழுத்திட்டு… ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக வேலை செய்த ஒரு பார்மஸிஸ்டை… ஒரு ஆய்வாளர் ‘உன் சான்றிதழை ரத்து செய்ய சொல்லிவிடுவேன்” என சொல்லி…பாலியல் ரீதியாக மிரட்டிக்கொண்டிருந்தார்.
    பார்மஸிஸ்டுக்கே இந்த கதி என்றால்… கடைகளில் வேலை செய்யும் தொழிலாளிக்கு… சொல்லவே வேண்டாம். 14 மணி நேர வேலை. ஆக குறைந்த கூலி.

    • உண்மை, தோழர் கூறியது போல, இந்த ஆய்வாளர் ஒரு ஊரில் இறங்கியவுடன் தகவல் அனைத்து கடைகளுக்கும் சென்று விடும், மருந்தாளுநர்கள் பகுதி நேரமாக வேலை செய்வது அல்லது அவர்கள் பெயரை பயன்படுத்தி வேறொருவர் மருந்து கடை நடத்துவது அதில் வரும் லாபத்தை கருத்தில் கொண்டே.  
      உயிர் லாபத்தை கொண்டே தக்க வைக்கப்படுவது மீண்டும் நிருபணமாகுகிறது

      • பெரும்பாலான கடைகளில் பார்மசிஸ்ட் இருப்பதில்லை அவர்கள் கொடுக்கும் 500ரூபாய்க்கு மாதம் பூரா யார் வேலை செய்வார்கள்.வாரம்
        ஒரு முறை கையெழுத்து மட்டுமே போடுவார்கள்.சேவை என்ற நிலை
        மாறி அதிக லாபம் என்ற பேராசையின் விளைவு இது..1

  18. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்… மருத்துவர்களுக்கு தரும் இனாம் ஒரு தனிக்கதை. அந்த மருந்து நிறுவனம் எப்படிப்பட்டவை? என தரத்தை உரசிப்பார்ப்பதில்லை.
    மருந்து நிறுவனங்களின் விற்பனை பிரதிநிதிகள் மருத்துவர்களுக்கு பலவித சலுகைகளை சொல்லித்தான் தன் பொருளை விற்பனையை சாதிக்கின்றார்கள். ஜட்டி, பனியனில் தொடங்கி…வெளிநாடு டூர் வரை ஏற்பாடு செய்து தருகின்றன. அதிகபட்சமாக… பெண்களை கூட ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்து தருவதாக ஒரு விற்பனைபிரதி நண்பர் வருத்தமாக சொன்னார்.

  19. 1985 ஆண்டு அனுபவம் அப்போது  Medical shop ஒன்றில் பணியிலிருந்தேன்.  மூன்று மாதத்தில் காலவதியாகவுள்ள ஒரு ஊட்டச் சத்து மருந்து (health tonic) கம்பெனியின் நேரடி பிரதிநிதி வந்தார்.  அவர் சம்பந்தபட்ட மருத்துவரை அனுகினார்.  2000 பாட்டில்கள் இறங்கின. மருத்துவர் தனக்கு வேண்டிய ஒரு மருந்துகடை மூலம் மொத்தமாக கொள்முதல் செய்தார். மருத்துவர் அந்த பகுதி கைராசிகாரர். இரண்டு இடங்களில் கடை விரித்து தொழில் செய்தார்.   அதை சுற்றிய இடங்களில் 7 மருந்து கடை அந்த நாட்களில் இருந்தன அனைத்துக்கும் தான் ரூ.9 க்கு பெற்ற மருந்தை ரூ.  18 க்கு விற்றார். முடிவில் பாட்டிலில் அச்சிடப்பட்ட விலையான ரூ.21 க்கு மக்களுக்கு சென்றடைந்தது.  

  20. இனாம் தரும் மருந்தை மருத்துவர் இலவசமாக கொடுத்தால் கூட பயன்படுத்த கூடாது

    • மருத்துவருக்கு சாம்பிள்ஸ் தருவது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று தான். தனக்கு வரக்கூடிய நோயாளிகளிடம் கொடுத்துப் பார்த்து, சோதித்து… பிறகு நோயாளிகளுக்கு எழுதி தருவார்கள்.

      மருத்துவர்களே தன் மருத்துவமனைக்கு அருகில் கடை திறந்து… இந்த சாம்பிள்ஸை கூட மெடிக்கல் ஷாப்பில் விற்றுவிடுவார்கள்.இதுதான் அல்பத்தனமானது. அந்த மாத்திரைகளின் பட்டையில்… சாம்பிள்ஸ் என பிரிண்ட் பண்ணியிருப்பதை…ஆசிட் கொண்டு அழித்துவிடுவார்கள்.

      மருத்துவர்களில் பலர் கல்லா கட்டுவதில் வணிகர்களை மிஞ்சிவிட்டார்கள். இவர்களை தான் மருத்துவ நிறுவனங்கள் அணுகுகிறார்கள்.

      • இதில் ஒரு 6மாதம் ஏதோ பயிற்சி எடுத்துவிட்டு கல்லா கட்டும் RMP என்று ஒரு கூட்டமிருக்கிறது பாருங்கள். ஐயோ…ஒரு சிறு கிராமத்தில் ஒரு ஆர்.எம்.பி. அவன் பத்தாவது மாதத்தில் கருக்கலைப்பு செய்த சாதனையாக அந்த கருவை ஒரு கண்ணாடிக்குவளையில் பதப்படுத்தி வைத்திருந்ததைப்பார்த்திருக்கிறேன். பத்து மாதக்கரு ஃபார்மலின் குவளையில் எப்படியிருக்குமென கற்பனை செய்து கொள்ளுங்கள்…
        இவர்களே கிராமப்புறங்களில் கோலோச்சும் ‘உயிர்காக்கும்’ கனவான்கள். இங்கு இவர்கள் மருத்துவர் மட்டுமல்ல இவர்களே மருந்தாளுனர், தாதியர், மருந்து விற்பனையாளை; மொத்ததில் உயிருள்ள மருத்துவமனை எனலாம். இவர்களை பெரும் மருத்துவ நிறுவனங்கள்
        மதிக்கும் அளவு பிரமிக்கத்தக்கது.
        தகுதிவாய்ந்த மருத்துவர்கள் நகரங்களைவிட்டு அகலுவதில்லை. கோடிகொட்டிக்கொடுத்து படித்த மேல்தட்டு மருத்துவர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். சரி அதியமான் தியரிப்படி வருமானம் கிடைக்குமிடத்தில்தான் விஞ்ஞாபனம் பண்ணமுடியும் என்கிற மனித குணம் ‘இயற்கை’தானே.
        அப்புறம் பெருநிறுவனங்கள் சந்தையில் போட்டியை சமாளிக்க விற்பனை பிரதினிதிகளுக்கும் மருத்துவர்களுக்கும்(RMPஉட்பட) தரும் பரிசுகளிருக்கிறதே அடா அடா…அன்றைய தேதியில் புகழ்பெற்ற குண்டூசி முதல் நடிகைவரை…வாழ்க Free Market Economy!

  21. கடுமையான வேலை, குறைவான சம்பளம், ஆரோக்கியமில்லாத சாப்பாடு என பல பிரச்சனைகள் கொண்டு வருவது மன உளைச்சல். மாத்திரை போட்டாவது ஏதோ வாழ்க்கை ஓட்டலாம் என எண்ணினால்… காலாவதியான மருந்து, போலி மருந்து என பயமுறுத்துகிறார்கள். எப்படித்தான்யா வாழ்வது?

  22. பத்து tablet உள்ள அட்டையில் கடைசி இரண்டு tablet பின்புறத்தில் மட்டும்தான் exp.date உள்ளது .உபயோகிக்கும் ஒவ்வரு tablet  யிலும் exp.date போடவேண்டும்.லாபத்தை மட்டும் இலக்க நோக்கினால் இது சாத்தியம் ஆகாது . 
     

  23. எந்த நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கடுமையாக உள்ளதோ எந்த நாடு குடிமக்களின் நலனுக்காக செயல்படுகிறதோ எந்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவனின் இடத்தில நின்று நீதி வளன்க்குகிறதோ அங்குதான் மக்கள் nimmathiyaka uyirpayamintri வாழ mudiyum

  24. ///தற்போது சரணடைந்து சிறையிலிருக்கிற மீனாட்சிசுந்தரம் விற்பனை உரிமம் எடுத்திருந்த மருந்துக் கம்பெனியை ஒரு பன்னாட்டு மருந்துக் கம்பெனி வாங்கும்போது அதன் விற்பனையைக் குறித்த அறிக்கையை ஆய்வு செய்த போதுதான் இந்த விசயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.. தாங்கள் செய்கிற வேலையை ஒரு மீனாட்சி சுந்தரம் செய்வதா? என்கிற வகையில் தான் இந்த விசயத்தைக் கசிய விட்டிருக்கிறது அந்தப் பன்னாட்டுக் கம்பெனி. /// வழக்கம் போல முட்டாள்தனமான யூகம். It is obvious that the (much maligned) MNC’s ethics is much better than the previous owners’ and hence they exposed this criminal act. very obvious.

    • //MNC’s ethics // வாவ்! அதியமான்! பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிக்ஸ் வேறு இருக்கிறதா?

  25. அனானி,

    பன்னாட்டு கம்பெனிகள் பல ஆயிரம் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு தனிமனிதனை போல. அவற்றின் ethics மாறுபடும், வேறுபடும். பொதுப்படுத்த முடியாது. ஆனால் இந்தியாவில் பொதுவாக பன்னாடு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை விட பரவாயில்லை என்றுதான் ஒப்பிடும் போது தெரிகிறது.

    நாம் இங்கு விவாதிக்க சாத்தியபடுத்தியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாவ்ட், இண்டெல், டெல், ஹெச்.பி, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், இந்திய நிறுவனங்காளன ஹெச்.பி.எல், அகலபட்டை அலைவரிசை மிக மலிவாக அளிக்கும் நிறுவனங்கள் : இவற்றின் எதிக்ஸ் மற்றும் சேவைகளால் தான் இந்த விவாதம் இங்கு சாத்தியம். 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இப்படி எதிர்காலத்தில் நடக்கும் என்று சொல்ல முடிந்ததில்லை. அன்று பி.எஸ்.என்.எல் மட்டும் இருந்த காலம்…

    பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் உத்தமர்கள் என்று சொல்லவில்லை. அவைகளிலும் திருட்டுத்தனங்கள், அயோக்கியர்கள் உள்ளனர் தாம். ஆனால் எத்தனை சதம், அவை எந்த நாடுகளில் சாத்தியம் போன்ற விசியங்களையும் ஆராய வேண்டும். சும்மா பொத்தாம் பொதுவாக one liner judgements are useless..

  26. அதியமான்
    பன்னாட்டு கம்பெனிகளின் ஒழுக்கம் போபால் விச வாயுவு கசிவின் போது எங்கே
    போனது. விவசாயிகளின் வாழ்வுரிமையை பரிப்பாதாக இருந்தாலும், மக்களின் உயிர் காக்கும் மருந்துகளில் கலப்படம் செய்வதுதிலும் பன்னாட்டு கம்பெனிகளும், மினாட்சி சுந்தரம் போன்றவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

    • அய்யா மீனாட்சி சுந்தரத்துக்கு வான்கோழி வேண்டுமாம் அதியமான் ஏற்பாடு செய்து தருவாரென நினைக்கிறேன்

  27. மருந்து போலி அதை தேசிய முதலாளி வித்தால் என்ன
    பன்னாட்டு முதலாளி வித்தால் என்ன

    போலி போலிதான்

  28. Half,

    இதுவரை வெளியான தகவல்களின் படி, போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளின் தேதிகளை மாற்றியது போன்ற குற்றங்களை பன்னாட்டு நிறுவனமோ அல்லது இந்திய மருந்து நிறுவனம் செய்தாக தெரியவில்லை. மீனாட்சிசுந்தரம் மற்றும் அவனின் கூட்டாளிகள், லஞ்சம் பெற்ற அரசு ஆய்வாளர்கள், மற்றும் மருந்துகடைகள் தான் செய்துள்ளன. பன்னாட்டு அல்லது இந்திய நிறுவனம் மாட்டினால் தண்டிக்கபட வேண்டியதுதான். ஆனால் இந்த குற்றத்தின் பின்னனியில் அவை இருப்பதாக தெரியவில்லை. The crime seems to be committed in the distribution and sales network and not at the manufacturing level. வினவு எழுதியபடி மாட்டி விட்டதே ஒரு பன்னாட்டு நிறுவனம் தான்.

    போபால் விசவாய் கசிவில் குற்றவாளிகள் பலர். அந்நிறுவனம் தவிர, அலட்சியமாக இருந்த அதிகாரிகளிம் காரணி. 1984க்கு பிறகு பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன. இந்த உரையாடலுக்கு காரணமான உபகரணங்களை மலிவாக தயாரிக்கும் நிறுவனங்கள் உட்பட தொடர்கின்றன. அவற்றில் குற்றம் புரியும் நிறுவனங்கள் எவை என்று ஆதாரபூர்வமாக விளக்குங்களேன்.

    போபால விசவாய்வு கசிவு பற்றி ஆங்கிலத்தில் நான் முன்பு எழுதிய பதிவு :
    http://athiyaman.blogspot.com/2007/05/question-about-economic-polices-in.html

    • //இதுவரை வெளியான தகவல்களின் படி, போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளின் தேதிகளை மாற்றியது போன்ற குற்றங்களை பன்னாட்டு நிறுவனமோ அல்லது இந்திய மருந்து நிறுவனம் செய்தாக தெரியவில்லை. மீனாட்சிசுந்தரம் மற்றும் அவனின் கூட்டாளிகள், லஞ்சம் பெற்ற அரசு ஆய்வாளர்கள், மற்றும் மருந்துகடைகள் தான் செய்துள்ளன. பன்னாட்டு அல்லது இந்திய நிறுவனம் மாட்டினால் தண்டிக்கபட வேண்டியதுதான். ஆனால் இந்த குற்றத்தின் பின்னனியில் அவை இருப்பதாக தெரியவில்லை. The crime seems to be committed in the distribution and sales network and not at the manufacturing level. வினவு எழுதியபடி மாட்டி விட்டதே ஒரு பன்னாட்டு நிறுவனம் தான்.//

      ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் தனது கையாட்களை உட்கார வைத்து பன்றிக் காய்ச்சல் பீதி கிளப்பியது போன்ற வேலைகளை மட்டும் செய்துள்ளனர் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இல்லையா?

      அவன் வசதிக்கு ஐநா சபை நிறுவனத்தை ஊழல் படுத்துகிறான்,ஏமாற்றுகிறான், லோக்கல் முதலாளி அவன் தகுதிக்கு ஏற்ப உள்ளூர் அரசை ஊழல் படுத்தி ஏமாற்றுகிறான். அவ்வளவுதான்.

      //அவற்றில் குற்றம் புரியும் நிறுவனங்கள் எவை என்று ஆதாரபூர்வமாக விளக்குங்களேன். //
      இவ்வாறு கேள்விகள் மட்டுமே கேட்டு பேர் வாங்கும் புலவர் அதியமான் ஆவார். ஒருவேளி ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டால் அதற்காகவே அவர் வைத்துள்ள பதில்தான் கீழே வருவது:

      //Yes, many drugs which are banned in the West are sold here freely. that is our fault and it is upto our people and parliament to ban or control them. It is stupid to blame others for our foolishness and corruption.//

      இத்தனையையும் சொல்லி பன்னாட்டு நிறுவனங்களை நியாயப்படுத்திவிட்டு பிறகு நம்மையே குற்றவாளி கூண்டில்
      ஏற்றுவார் அதியமான் என்ற இந்த நியாயவான்.

      ஆக மொத்தத்தில் அவரது கருத்துப்படி முதலாளி லாபம் சம்பாதிக்க அத்தனை அயோக்கியத்தனத்தையும் செய்வான், அது அம்பலமாகாதவரை முதலாளி நல்லவன் என்று அதியமான் கூக்குரலிடுவார் (அத்துடன் நமது கருத்துக்களையும் அடி முட்டாள்தனமானது என்று சர்டிபிகேட் வழங்குவார்). பிறகு, கேள்விக்கிடமின்றி அம்பலமாகிவிட்டாலோ அந்த முதலாளிகளை அனுமதிக்கும் நம்மை முட்டாள் என்று சொல்லி ஜகா வாங்குவார். பேஷ்.. பேஷ்.. அதியமானுடைய இந்த மான் கராத்தே ரொம்ப நன்னாருக்கே…

      பூச்சாண்டி

    • போபால் விச வாயு பற்றி எழுதியதால் ஒரு தகவல்அமெரிக்க கொலைகாரன் ஆண்டர்சனின் யூனியன் கார்பைடு இன்னமும்சுதந்திரமாக இயங்கி கொண்டுதான் இருக்கிறது EVEREADY BATTRIESயூனியன் கார்பைடுடையதுதான்
      பாருங்கள் இந்த சுட்டியை
      http://en.wikipedia.org/wiki/Eveready_Industries

    • //ஆனால் இந்த குற்றத்தின் பின்னனியில் அவை இருப்பதாக தெரியவில்லை.//
      குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் நபர்கள் யாரென்று தெளிவாக தெரியவில்லையா மேற்கண்ட அறுதியிட்ட அறிக்கையிலிருந்து

    • //அவற்றில் குற்றம் புரியும் நிறுவனங்கள் எவை என்று ஆதாரபூர்வமாக விளக்குங்களேன். //
      அதியமான் நான் பி.பார்ம் முடித்தது ௧௯௯௮(1998). இன்றுவரை பல்வேறு நிறுவனங்களில் சிறியது முதல் பெரியது வரை பணியாற்றியிருக்கிறேன். என் நண்பர்களையும் என் அனுபவத்தில் பங்குதாரர்களாக கணக்கில் கொள்ளுங்கள். இதுவரை உள்நாடு பன்னாடு வித்தியாசமில்லாமல் உத்தமமான ஒரு பெருநிறுவனத்தையும் தரிசித்ததில்லை. எத்தனையோ சாட்சிகளோடு பட்டியலிட முடியும் நேரில் சந்தித்தால் இங்கு அல்ல. ஆனால் நம்புங்கள் நான் பொய் பேசுவதில்லை. 🙂

  29. தவறை தவறு என்று ஒப்புகொள்ளும் அதியமானின் கருத்தை/நேர்மையை பாராட்டுகிறேன்.எண்பதுகளில் அ.மார்க்ஸ் எழுதிய “நமது மருத்துவ நல பிரச்சனைகள் ” என்ற நூல் பன்னாட்டு நிறுவனங்களின் /அரசுகளின் மக்கள் விரோத செயல்களையும் அதன் வரலாறையும் விவரிக்கிறது.தெளிவான நடையில் அ.மார்க்ஸ் எழுதியுள்ளார்.தோழர்கள் படிக்க வேண்டுகிறேன்.

    • அ. மார்க்ஸ் ஒரு முதலாளித்துவ கூட்டாளி பின்னவீனத்துவம் என்ற பேரி
      முதலாளிவர்க்க அல்லகைகளா செயல்பட ஆரம்பித்த அறிவுஜீவிகளுள்
      முக்கியமானவர்

  30. மீனாட்சிசுந்தரம் என்ற திருடனின் சொந்த ஊர் கீழச்சீவல்பட்டி ,

    காரைக்குடிக்கு அருகாமையில் வுள்ளது

  31. இந்த போலிமருந்து பிரச்சனையில் ஒரு முக்கியமான விஷயம் சுத்தமாக பின்னுக்கு தள்ளப்பட்டு நம் அனைவரின் மூளைகளும் பன்னாட்டு கம்பனிகளின் லாப வேட்டைக்கு தயார் செய்யப்பட்டுள்ளது என்பததை இங்கு விவாதிக்கும் அனைவரின் கவனத்துக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இனிமேல் அனாசின் வாங்கினால் கூட அது ஒரிஜினல் மாத்திரையா என்று கேட்கபோகிற நாம் அது ஒரிஜினல் என்பதாலேயே அதன் விலை மீது எந்த எதிர்வினையையும் குறைந்த பட்சம் கூட ஆற்ற முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏனெனில் ஒரிஜினல் என்றாலே விலை அதிகமாகத்தான் இருக்கும் என்ற முதலாளித்துவ அமைப்பின் லாப வேட்டைக்கான கருத்தியலுக்கு நாம் காயடிக்கப்பட்டு பலப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை மறைப்பதட்காகத்தான் முதலாளித்துவ அடிவருடி பத்திரிக்கைகள் போலி மற்றும் காலாவதி மருந்து பிரச்சனையில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறார்கள்! எல்லாம் பன்னாட்டு “கவர்கள்” செய்யும் வேலை!

  32. போலி மருத்துக்கு எதிராக கடந்த இருபது ஆண்டுகளாக பல அமைப்புக்கள் பெரும் இயக்கங்கள் நடத்தி வருகின்றன .ஆனாலும் அரசுகள் செவி மடுப்பதில்லை. காரணம் தனியார்மய கொள்ள்கைகள் தான்.இன்றும் வெளியில் வந்திருப்பது சிறு துளி தான்.தொடர் இயக்கம் நட்ந்தால் தான் உண்மைகள் தெரியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க