Tuesday, October 3, 2023
முகப்புவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
Array

வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !

-

vote-012அதிகாலையிலேயே எழுந்து ஓட்டமும் நடையுமாக நடுத்தர – மேட்டுக்குடிவர்க்கத்தினர் வீடுகளுக்குப் பாத்திரங்கள் விளக்கி, வீடு பெருக்கக்  கிளம்பிச் செல்லும் கண்ணம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)-வின் கதை இது. எட்டுவயதில் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்த கண்ணம்மா (வயது 43)  இப்போது சென்னை ராயப்பேட்டை பகுதியில் நான்கு வீடுகளில் தினமும் வேலை செய்கிறார். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் இவரது ஒருநாள்  வாழ்க்கை, மதியம் கிடைக்கும் இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பின்னர், மீண்டும் வேலை எனத் தொடர்கிறது. வீடு திரும்ப தினமும் இரவு 9 மணி  ஆகிவிடுகிறது. நான்கு வீடுகளில் கடினமாக உழைத்தாலும் கிடைக்கும் சம்பளமோ, வீட்டுவாடகை, மளிகைச் செலவு போன்றவற்றிற்குப் போதுமானதாக இல்லை.
கண்ணம்மாவைப் போல, அடுத்தவர்களின் வீட்டு வேலைகளைச் செய்யும் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை இந்தியா முழுக்க 9  கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இதில் 20 சதவீதத்திற்கும் மேல் குழந்தைத் தொழிலாளர்கள்.

எங்கிருந்து இவர்களெல்லாம் வருகின்றனர்? கிராமப்புறங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாயம், பல குடும்பங்களை நகரை நோக்கி  விரட்டுகின்றது. நகரங்களில் கிடைக்கும் வேலைகளை ஆண்கள் செய்தாலும், அதில் கிட்டும் வருமானம், குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்கே  போதுமானதாக இல்லாததால், பெண்கள் வீட்டுவேலைகளுக்குச் செல்லத் தயாராகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காடுகளையும் மலைகளையும் கிராமங்களையும் தாரைவார்த்த தனியார்மய உலகமயக் கொள்கை, அங்கிருக்கும் இலட்சக்கணக்கான பழங்குடியினரை விரட்டியடித்து வருகிறது. அவர்களில் கணிசமான பேர்கள் இந்தப் பணிகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 12 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் வீட்டுப் பணியாளர்களுக்கு உடற்சோர்வு, மயக்கம், தோல் எரிச்சல்,  ஒவ்வாமை, முதுகுவலி போன்ற தொழில்சார்ந்த நோய்கள், மாதம் ஒருமுறையாவது முடக்கிப் போட்டுவிடும். அதனால் வேலைக்கு வர இயலாத நாட்களுக்கு பல வீடுகளில் சம்பளத்தைப் பிடித்துவிடுவதை, ஏன் என்று கேட்கமுடியாது. கேட்டால் ‘நாளையிலிருந்து நின்றுகொள்’ எனச் சொல்லிவிட்டு, வேறு ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். சிகிச்சைக்கென மருத்துவரிடம் போனாலோ குறைந்தது ரூ. 100 ஆகிவிடும் என்பதால், பெரும்பாலும் கைப்பக்குவத்திலேயே வைத்தியம் பார்த்துக் கொள்கின்றனர். இவர்களை விடக் குறைவான ஊதியத்துக்கு வேலை செய்ய ஆட்கள் நிறைய இருப்பதால், சம்பளத்தை உயர்த்தச் சொல்லிப் பேரம் பேசுவது கூட இவர்களின் வேலைக்கு வேட்டு வைத்துவிடுகிறது.

வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் நிலையோ பரிதாபகரமானது. 8 அல்லது 9 வயதிலேயேபெற்றோரை விட்டுப் பிரிந்து,  வேலைசெய்யும் வீட்டில் வாழ்வதும், தன் வயதொத்த அதே வீட்டாரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் எவ்வித வசதிகளும் தங்களுக்கில்லா ஏக்கத்திலும், வீட்டு எஜமானர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வேலை செய்து, ஓய்வென்பதையோ, சிறுவயதுக்குரிய விளையாட்டுக்களையோ காணமுடியாமல் வளரும் சோகம், மிகக் கொடுமையானது. பெரியவர்களைவிட மிகக் குறைந்த கூலி பெற்றுக் கொண்டு, உழைத்து ஓய்ந்துபோகும் சிறுவர், சிறுமியரின் வேலைகளில் தென்படும் சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் அடி, உதை அல்லது கேவலமான வசைகள் என்பன சர்வசாதாரணம்.

நொய்டா (உ.பி.) போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், வீட்டுப் பணியாளர்  தங்குவதற்கென்றே சமையலறையை ஒட்டினாற்போல் ஓர் அறை ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு எனப் பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் கோழிக்கூடு போன்ற சிறிய அறைகளில் தங்கிக்கொண்டு நடுத்தர – மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வீடுகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் அவசரத்திற்கு உறவினர்களிடம் பேசக்கூட அவ்வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாது. மிச்சமீதியைத்தான் உண்ணமுடியும். நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்க வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது எனப் பல நிபந்தனைகளுடன், யாருமே வாழத் தகுதியற்ற வெளிச்சமோ காற்றோட்டமோ இல்லாத அறைகளில் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். வெளியுலகே தெரியாமல், தனிமையில் வாழும் இப்பெண்கள் சில சமயங்களில் மனநோயாளிகளாகவும் மாறியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் எனும் நிச்சயமற்ற நிலையில்தான் பணியில் நீடிக்கின்றனர்.

அருகிலுள்ள மேட்டுக்குடியினர் வீடுகளில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வீட்டுப்பணியாளர்களான பல பெண்களின் கொஞ்சநேர  நிம்மதியையும், அரசு நடத்தும் டாஸ்மாக் சாராயக் கடைகள் பறித்து விடுகின்றன. வீட்டுவேலைக்குப் போகும் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களின் கணவன்மாரில் 70 சதவீதம் பேர் குடிக்கு அடிமைகள் என்பதும், 60 சதவீதப் பெண்கள் வீட்டுக்குவந்தால், குடிகாரக் கணவர்களின்  சித்திரவதையை அனுபவிக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

காலையிலேயே வேலைக்குக் கிளம்பிப்போய், வீடு திரும்ப இரவு 8 மணிக்கும் மேலாகிவிடுவதால், தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க  இப்பெண்களுக்கு நேரமிருப்பதில்லை. இது, அவர்களின் வளரும் குழந்தைகளின் ஆளுமையையும், கல்வியையும் சீரழிக்கிறது. சரியாகப் படிக்க இயலாத குழந்தைகள் 10 அல்லது 12 வயதானதும் இதே வேலைக்கு வந்துவிடுகின்றனர்.

இந்த சேவைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்வதும் அதிகரித்துள்ளது. டெல்லி போன்ற மாநகரங்களில் வீட்டு வேலை செய்வதற்கென்றே சேலம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து குவிந்திருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளபடி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு இவ்வேலைகளுக்கென 5 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் கொடுத்து பெண்களை அனுப்பிவைக்கும் தரகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறு செல்லும் பெண்களில் பலர் பாலியல் வன்முறையால் கேரளாவில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வேலைகளுக்கு வீடுகளுக்கு தகுந்த ஆட்களை அனுப்புவதற்கென பெருநகரங்களில் பல கங்காணிகள் பெருந்தொழில் நிறுவனங்களாக  உருவெடுத்துள்ளனர். இவர்களிடம் பெயரைப் பதிவு செய்தவர்களை மேட்டுக்குடியினரின் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம், இவர்களுக்கு தர வேண்டிய சம்பளத்தை வீட்டு உரிமையாளர்களிடம் பெற்றுக் கொண்டு, அதில் கணிசமான தொகையைச் சுரண்டிக் கொண்டுதான்  வீட்டுப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறது.

சென்னை போன்ற நகரங்களில், இவர்களுக்கு கிடைக்கும் அற்ப சம்பளத்துக்குள் குடிசைகளில்தான் குடியிருக்க முடிகிறது. நகரை  அழகுபடுத்தும் திட்டங்கள், இக்குடிசைகளை விட்டுவைப்பதில்லை. கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரங்களில் குடியிருந்து வரும் இவர்களை, நகருக்கு  வெளியே துரத்தும் பணி ஆரம்பித்து விட்டது. செம்மண்சேரி போன்ற புறநகர்ப்பகுதிகளுக்கு அகற்றப்படவிருக்கும் இப்பணியாளர்கள், தினமும் நகருக்குள் வந்து செல்வது என்பது இன்னமும் வாழ்வை சிக்கலாக்கியுள்ளது.

இந்த அவல வாழ்வு வாழும் பெண்களை ‘திருடர்களாகப்’ பார்க்கும் பொதுக்கருத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்துள்ளது. பல  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலைக்கு செல்பவர்களின் கைரேகை, குடும்பப் பின்னணி போன்றவற்றை அருகிலுள்ள போலீசு நிலையத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்று போலீசு கட்டாயப்படுத்துகிறது. சில பத்திரிக்கையாளர்களோ, வீட்டு வேலைக்காரிகளை, வீட்டு எஜமானர்களை மயக்கும் சக்களத்திகளாகச் சித்தரித்து துணுக்குகளை எழுதுகின்றனர்.

ஏட்டளவில் இருக்கும் இந்தியத் தொழிலாளர் நலச் சட்டங்கள் கூட வீட்டுப் பணியாளருக்கென்று இல்லை. மேலும், இவர்கள் சங்கமாக  அணிதிரட்டப்படாமலும் உள்ளனர். இவர்களுக்குச் சட்ட ரீதியாகத் தொழில் அங்கீகாரம் தரக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு  வந்துள்ளன.

உலகமயமாக்கம் தீவிரப்படுத்தப்பட்டபோது, இச்சேவைப்பணியில் ஈடுபடுவோர் இலட்சக்கணக்கணக்கில் பெருகியதால், இவர்களுக்கு சட்டப்  பாதுகாப்பு தேவை என சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்தன. பல தன்னார்வ நிறுவனங்கள் இதனை வாய் ப்பாகப் பயன்படுத்தி, பல குழுக்களை  இப்பெண்களிடையே உருவாக்கி, இக்கோரிக்கையை எழுப்ப வைத்தன. தமிழ்நாடு அரசும், 2007-இல் வரைவு சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.  இதன்படி, இச்சேவையில் ஈடுபடுவோர், வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம் ஒன்றில் இணைக்கப்படுவர். ஆனால் தமிழ்நாடு அரசின் சட்டம், குறைந்தபட்சக் கூலியை இன்றுவரை வரையறுக்கவில்லை. 2005-இலேயே கேரள, கருநாடக அரசுகள் உருவாக்கியுள்ள சட்டத்தின்படி, 8 மணிநேர வேலைக்கு மாதத்துக்கு ரூ. 1800-மும், வேலை செய்யும் வீட்டில் 4 பேருக்கு மேலிருந்தால் ரூ. 2200-உம் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இவர்களுக்காக ஆரம்பித்திருக்கும் நலவாரியம் பற்றிய செய்தியோ, அரசின் இணையதளத்தில் மட்டும்தான் உள்ளது. அந்த  வாரியம், எங்கே இயங்குகின்றது எனும் தகவலைக் கூட அரசு விளக்கமாக அறிவிக்கவில்லை. கண்ணகி நகர் போன்ற சென்னைப் புறநகரில் தங்கி  இருந்து, வீட்டுவேலை செய்யும் பெண்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டுமானால், ஒருநாள் வேலைக்கு செல்லாமல் காஞ்சிபுரம் போய் தேடி அலைந்து வாரியத்தில் பெயர் பதிய வேண்டும் எனும் நிலைதான் உள்ளது. இதிலிருந்தே அரசுக்கு இந்தப் பணியாளர்கள் மீதான அக்கறை என்ன என்பது தெரிகிறது.
வேலை உத்திரவாதம், மருத்துவ வசதி, குறைந்தபட்ச விடுமுறைகள், தங்கள் குழந்தைகளின் கல்வி, ஆயுள் காப்பீடு போன்ற உடனடித்  தேவைகளை இப்பணியாளர்கள் போராடிப் பெற வேண்டியுள்ளது. பிழைப்புக்கான இடத்தின் அருகிலேயே குடியிருப்பு வசதி, ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, சேமநலநிதி போன்றவையும் இவர்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும். இதற்காக இத்தொழிலாளர்கள் அனைவரும் சங்கமாக ஓரணியில் திரள வேண்டும். கடுமையான உழைப்புச் சுரண்டலுடன் சட்டபூர்வ உரிமைகளையும் உலகமயம் பறித்துவரும் இன்றைய நிலையில், அல்லற்பட்டுவரும் இப்பணியாளர்கள் அமைப்பாகத் திரண்டு, மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே, தமது நலனையும் விடுதலையையும் சாதிக்க முடியும்.

–    புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. வெறுமனே காடுகளில் சுற்றித்திரிந்தவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுல்லதல்லாவா! என்று சிலர் புள்ளிவிபரங்களை கொடுக்க முற்படலாம்.
    இது போன்ற வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டால் அவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள் என்றும் கூட சிலர் பரிதாபப்படலாம். 

  2. நல்ல உபயோகமான பதிவு. சாமியார்/கடவுள் எதிர்ப்பு பதிவுகளால், அர்த்தமற்ற/ பயனில்லாத விவாதங்களால் நேரம்/உழைப்பு வீணாகிறது. இது போன்ற வழிகாட்டும், பாசிடிவ் பதிவுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

  3. காலையில் walking, jacking மற்றும் gym கு போகும் எஜமான்களை முதலில் சுட்டு கொள்ள வேண்டும் …இவர்கள் பகல்பொழுதில் நாற்காலியில் உக்கார்ந்துகொண்டு உளைபவர்களை வேலை வாங்கிவிட்டு ,வீட்டிலும் உழைக்காமல் அங்கயும் பெண்களை அடிமைபடுத்தி பின் காலையில் வெட்டியாக வேர்க விர்விருக நடப்பார்கள் ,ஓடுவார்கள் இந்த எஜமாங்களும் ,எஜமாநிகளும் இந்த நாயிகளை அடித்தே கொள்ளவேண்டும் . 

  4. //சிறுவயதுக்குரிய விளையாட்டுக்களையோ காணமுடியாமல் வளரும் சோகம், மிகக் கொடுமையானது.//
    குழந்தை தொழிலாளர்களை வரவேற்கவேண்டும் .
    அணைத்து விளையாட்டுகளையும் தடைசெய்யவேண்டும் ,வளரும் குழந்தைகளிடத்தில் கிரிக்கெட் ,கால்பந்து ,கபடி ,டெனிஸ் ,ஹாக்கி போன்ற அணைத்து விளையாட்டுகளையும் (வெட்டிவேலை)காண்பிக்க கூடாது ..மாறாக அவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்குகிரர்களோ ,அவர்களை அந்த துறையில் உள்ள வேலையே பழக்க படுத்தவேண்டும் .உதாரணதிற்கு ஒரு civil engineer என்றால் அவர்களுக்கு செங்கல் எப்படி செய்வது ,குழிவெட்ட பழகுவது ,கம்பிவேலி எப்படி செய்வது போன்றவற்றை பழக்கவேண்டும் .வெறும் விளையாட்டையும் ,படிப்பையும் மட்டும் காண்பித்தால் அவர்கள் வளர்ந்த பின் எந்த தொழிலும் தெரியாமல் ,தொழில் செய்யகூடிய தனை விட வயது முதிர்ந்த தொழில் செய்பவரை தரக்குறைவாக ஏசுவார் ,திட்டுவார் இது மிக கொடுமையானது .
    ஆகவே குழந்தை பருவத்திலே அவர்களை சமமாக பாவித்து ,அனைவரும் வேலை செய்தால் தான் ஒரு பொருளை உருவாக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் ..கூலி குடுப்பது ,வேலை வாங்குவது ,அடிமைபடுதுவது,போன்ற தீய செயல்களை அவர்களிடத்தில் கான்பிககூடது ..
    குழந்தைகளை நம்முடைய பிழைப்புக்காக வீட்டுவேலைக்கு அடிமைபடுதுவது ,கொத்தடிமையாக வைப்பது மிகவும் கொடுமையான செயலாகும் .
    துறை சார்ந்த சமூகம் சார்ந்த தொழில் குழந்தைகளை பழக்க படுத்தி ஏற்ற தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கவேண்டும்.

  5. தொழிலாளர்களின் உபரியை உறிஞ்சி கிளப்புகளில் கூத்தடிக்கும்,தன் குழந்தையின் சூத்தைக்கூட கழுவத்தெரியாத  இந்த மேட்டுக்குடி கூட்டம்தான்,”இவனுகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் குடிச்சே அழிச்சுடுவானுங்க என்று உழைப்பவர்களை பார்த்து அலம்புவதுதான்” வேடிக்கை. இவனுகள் தனது வீட்டு நாய்க்கு கொடுக்கும் மரியாதையைக் கூட மனிதர்களுக்கு கொடுப்பதில்லை. 

  6. /வேலை உத்திரவாதம், மருத்துவ வசதி, குறைந்தபட்ச விடுமுறைகள், தங்கள் குழந்தைகளின் கல்வி, ஆயுள் காப்பீடு போன்ற உடனடித் தேவைகளை இப்பணியாளர்கள் போராடிப் பெற வேண்டியுள்ளது. பிழைப்புக்கான இடத்தின் அருகிலேயே குடியிருப்பு வசதி, ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, சேமநலநிதி போன்றவையும் இவர்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும்//

    நிச்சயம் தரப்படவேண்டும்

  7. வீட்டு எஜமானி என்று சொல்லிக்கொண்டு ஒரு கொழுத்த பன்றி ஒவ்வொரு வீட்லயும் இருக்கும் அதுங்ககிட்ட இந்த அப்பாவிங்க மாட்டிக்கிட்டு படுற வேதன இருக்கே ரத்தக்கண்ணீர் வந்துரும்.இத மாத்த நம்ம எதாவது பண்ண முடியுமா?

    • தமிழ், தமிழ் சினிமா சீரியலிலேயே இருக்காதீர்கள்… இன்றைய எஜமானர்கள் கொழுத்த பன்றிகளாக இருக்கவேண்டியதில்லை ‘சிக்’கான ஐடி பெண்ணோ ஆணாகக்கூட இருக்கலாம்.. எனக்கு தெரிந்து வேலையாட்களை ஒவ்வொரு வீட்டின் குழந்தைகள் கூட விரட்டுவதை பார்திதருக்கிறேன்.. 

      என் வீட்டிலும் பணிப்பெண் உண்டு. எங்கள் வீட்டு குழந்தையை பாட்டி, அக்கா, அத்தை  என உறவு கொண்டாடும் படியாகத்தான் பழக்கியிருக்கிறோம். தவிர நாம் சாப்பிடும் முன் அவர்களுக்கு உணவளிப்பது, சேர்ந்து அமர்ந்து உண்பது, பழைய உணவு, உடை போன்றவற்றை மறந்தும் கூட கொடுக்காதது, ஒருமையில் அழைக்காதது, அதிகாரத் தோரணையில்லாமல் மரியாதையாக பேசுவது, போன்ற பழக்கங்களை விடாமல் கடைப்பிடிக்கறோம். உறவினர்கள் வந்தால் கூட இதைச்செய்ய வலியுறுத்துகிறோம். 

      • கேள்விக்குறி அண்ணா நான் சினிமா,சீரியல் எல்லாம் கடந்த ஆறு வருடங்களா பார்க்கிறது இல்ல.மத்தபடி உங்க கருத்தோட எனக்கு உடன்பாடு உண்டு.

  8. சில மாதங்களுக்கு முன்பாக எமது அலுவலகத்தில் போலி கம்யூனிச தலைவர் ஒருவர் எமது அலுவலகத்தில் ஆர்ப்பாட்டமாக வந்து சென்றதை பார்த்ததும் நான் எழுதிய கவிதை இந்த இடுகைக்கு மறுமொழிய பொருத்தமாக இருப்பதால் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
    உள்ளே   ,,, வெளியே…
    தோளில் துண்டு   —-
    தொனியில் கோபம் —-
    தகிக்கும் சூடு —-
    தலைவரின் பேச்சு —-
    தினமொரு ஆர்ப்பாட்டம் —–
    தெருவெங்கும் விளம்பரம் —-
    தொழிலாளர்கள் சிலரின்—–
    விடுப்பை மறுத்த —–
    மேலாளர் முன்சென்று —-
    அவசர தேவை —-
    இயலாமை சூழல் —-
    ஈன்றவர் வயோதிகம் —-
    உற்றார் இறப்பு —-
    பெண்ணின் பேறுகாலம் —-
    எதிர்பாரா இடர்பாடு -என —-
    விடுப்பு எடுப்பது —-
    தவிர்க்க இயலாது —-
    விடுப்பை மறுத்து —-
    சம்பளம் பிடித்தால் —-
    போராட்டம் வெடிக்கும் —-
    தலைவரின் வேகமான —-
    முழக்கத்தின் முடிவில் —-
    “பெரிய சங்கம்” —-
    நமக்கேன் வம்பென —-
    மறுத்த விடுப்பு மனுக்களில் —-
    மேலாளர் ஒப்பமிட —-
    தலைவர் வாழ்கவென —-
    தொழிலாளர் வாழ்த்துடன் —-
    இரவு உணவிற்கு —-
    இல்லம் திரும்பிய தலைவர் —-
    முனியம்மா வரவில்லை —-
    முழுதினமும் கடும் வேலை —-
    சமைக்கவோ நேரமில்லை —-
    சாப்பாடு வாங்கிவா – என —-
    சகதர்மினி உத்திரவிட —-
    அடிக்கடி விடுப்பா —-
    அவளின் சம்பளத்தைப் பிடி —- 
    வழிக்கு வருவாள் தானாக —-
    கட்டளையாய் முழங்கிவிட்டு —-
    கடைக்குப் புறப்பட்டார் —-
    தொழிற்சங்க தலைவரும் —-
    தூக்குவாளி கையிலெடுத்து …
    -சித்திரகுப்தன்

  9. ‘வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!’ –
    உண்மை என்னவென்றால், உண்மையைப் பற்றி பேசவோ எழுதவோ பலருக்கும் தயக்கமாயிருக்கிறது, ஏனென்றால் அந்த உண்மை பல நேரங்களில் எழுதுபவரையே குற்றம் சாட்டுவதாகவோ எதிர்ப்பதாகவோ இருக்கிறது. யாரையும் பாதிக்காத உண்மைகளைப் பேசுவதென்றால் இங்கே பலர் கூடுவர், ஆனால் யாரையும் பாதிக்காத உண்மை எங்கிருக்கிறது?
    இந்தக் கட்டுரையும் இதைப் படிப்பவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் கைகாட்டும், குற்றம் சாட்டும், ஏனென்றால், இதைப் படிப்பவர்கள் வீட்டுத் தொழிலாளர்களல்ல, அந்தத் தொழிலாளர்களின் முதலாளிகள்தாம்.

  10. நல்ல எதார்த்தமான பதிவு ….இவர்களுக்கு சட்டம் வேண்டும் குறைந்த பட்சம் ஊதியம் வேண்டும்….குழந்தைகளை வேலைக்கு வைப்பவர்களை
    சிறையில் தள்ள வேண்டும் ……….அனைவருக்கும் இலவச கல்வி வேண்டும் சமசீரான கல்வி வேண்டும் ……இத்தகைய வீட்டில் வேலை பார்பவர்களுக்கு சங்கம் வேண்டும் ……..நல்ல பதிவு வினவு

  11. //இந்தக் கட்டுரையும் இதைப் படிப்பவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் கைகாட்டும், குற்றம் சாட்டும், ஏனென்றால், இதைப் படிப்பவர்கள் வீட்டுத் தொழிலாளர்களல்ல, அந்தத் தொழிலாளர்களின் முதலாளிகள்தாம்.//
    உண்மை.

  12. தன்னை முற்போக்காளர் என்று அழைத்துக்கொள்ளும் இந்நாள் வங்கி மேலாளர் தன மகனின் திருமணத்தை அய்யர் மட்டும் இல்லாமல் “மற்ற அனைத்துடனும்” நடத்தினார் அதில் உணவு சமைப்பதில் சற்று தாமதம் ஆகி மிகசிறிய அளவில் ஒரு சல சலப்பு உருவானது. அதன் முடிவில் அவர் சொன்னார் “இவனனுங்க யோக்கியதையே இப்படித்தான் சமைச்ச ஒடனே இவ்வனுங்க தான் மொதல்ல சாப்டனுங்க. அப்பவே இவனுங்கள கழுத்த புடிச்சி வெளிய தள்ளனும்னு நான் சொன்னேன் என் பொண்டாட்டி தான் வேண்டான்னு சொல்லிட்டா! சம்பளம் எப்டி காலைல வாங்கிகினு போய்டிரீங்கன்னு பாக்கரண்டா” என்று அந்த உழைப்பாளிகளை வார்த்தைகளால் வருத்தெடுத்தார். வெறுத்துபோனேன்! இது போன்ற போலிகளை நம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

    • //இவனனுங்க யோக்கியதையே இப்படித்தான் சமைச்ச ஒடனே இவ்வனுங்க தான் மொதல்ல சாப்டனுங்க. அப்பவே இவனுங்கள கழுத்த புடிச்சி வெளிய தள்ளனும்னு நான் சொன்னேன் என் பொண்டாட்டி தான் வேண்டான்னு சொல்லிட்டா! சம்பளம் எப்டி காலைல வாங்கிகினு போய்டிரீங்கன்னு பாக்கரண்டா” என்று அந்த உழைப்பாளிகளை வார்த்தைகளால் வருத்தெடுத்தார். வெறுத்துபோனேன்!// சமைத்தவன் ருசி பார்க்காமல் பரிமார முடியுமா?.. குற்றம் குறைகளை நிவர்த்தி செய்து தானே கொடுக்க இயலும்?? வெறுத்து போய் பயனில்லை. மேலாளர் ஆயினும் அச்சப்படாமல் உண்மை நிலையை எடுத்து கூறியிருந்தால் உங்கள் போலித்தன்மை அகன்றிருக்கும்.

  13. //இந்தக் கட்டுரையும் இதைப் படிப்பவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் கைகாட்டும், குற்றம் சாட்டும், ஏனென்றால், இதைப் படிப்பவர்கள் வீட்டுத் தொழிலாளர்களல்ல, அந்தத் தொழிலாளர்களின் முதலாளிகள்தாம்.// மனதை சுடும் உண்மை நல்ல கருது நம்பி.

  14. வேலைக்காரர்கள் நல்லவர்கள். முதலாளிகள் கெட்டவர்கள். வேலைக்காரிகள் உழைத்து உழைத்து சலிப்பவர், முதலாளி கொழுத்த பன்றி.இந்தமாதிரி பழைய கருத்தை விட்டு வெளிய வாங்க பாஸ்.எங்க வீட்டில் வாசல் பெருக்க ஒரு பெண்மணி கேட்ட தொகை,நம்புங்க,
    இரண்டாயிரம்
    ௦௦௦ ரூபாய். பத்து ௦ நிமிட வேலைக்கு.இரண்டாயிரம். இவன்கல்லுகு சப்போர்ட் வேறயா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க