முகப்பு அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
Array

அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!

-

vote-012மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மாவட்ட தலைநகர் பேருந்து நிலையங்களில் எங்கு சென்றாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல் ஒவ்வொரு ஊருக்கும் கடைசி பேருந்து, காலை முதல் பேருந்து என்கிற நேர இடைவெளி இல்லாமல் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் 24 மணி நேர சுழற்சியில் எப்பொழுதும் செல்லலாம் என வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.  இது அரசின் செயல்பாட்டை பாராட்டுவதற்காக அல்ல. பேருந்தில் சென்றால் – திரும்பினால்தான் நிச்சயம் என்கிற அபாயத்துடன் உள்ள இன்றைய தரைவழிப் போக்குவரத்தில் அரசு பேருந்து பணியாளர்களின் யதார்த்தத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

சாதாரண மனிதர்களுக்கு காலை 5 மணி முதல் 6 மணிக்குள் காலைக் கடன் கழிப்பு, 8லிருந்து 9மணிக்குள் காலை உணவு, மதியம் 1லிருந்து 3 மணிக்குள் மதிய உணவு, இரவு 8லிருந்து 10மணிக்குள் இரவு உணவு என்கிற நடைமுறைப் பழக்கம் உண்டு. ஆனால் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனருக்கு நடு இரவில் பணி துவக்கம் என்றால் அவரின் கழிப்பிட நேரத்திலிருந்து, உணவு அருந்தும் நேரம் வரை எல்லாமே அராஜகமாக இருக்கும்.

நாம் மதுரையில் பேருந்தில் ஏறியிருப்போம். சுமார் 3 மணி நேர பயணத்திற்கு பின் வழிநடை உணவகத்தில் (அந்த உணவகங்களின் தரம் என்பது மகா மட்டம் என்பதும், அதில் நிறுத்துகிற கட்டாயத்தில் கூட அரசியல்வாதி, அதிகாரி என அனைவரின் அதிகாரம் அடங்கியிருக்கிறது என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை) நின்றவுடன் நம்மில் பலர் அதற்குள் இலவசமாய் சாப்பிட போட்டுட்டானா என புலம்புவோம்.  நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அந்தப் பேருந்து கோவையில் நடு இரவில் எடுத்து, 6 மணி நேர பயணத்திற்கு பின் மதுரையில் நிறுத்தி பயணிகள் ஏற்றி, இறக்கி தூத்துக்குடி செல்லும் தடத்தில் மோட்டலில் நின்றிருக்கிறது என்பது.

அதே போல் 20000 பேருந்துகள் இயங்குகின்ற நிலையில் ஏதேனும் சில பராமாரிப்பு பழுதுகள் ஏற்பட்டு அல்லது டயர் பஞ்சர் போன்ற நிகழ்வில் வழித்தடத்தில் இயக்கம் நிற்பது என்பதும் எப்பொழுதாவது தவிர்க்க இயலாத ஒன்று.  உதிரிப் பாகங்களே வாங்கித் தராமல், கடந்த 12 ஆண்டுகளாக பராமரிப்பு, அலுவலகப் பிரிவில் புதிய நியமனங்களே இல்லாமல், ஓய்வு பெற்றும், இறந்தும் போன தொழிலாளிகளின் பணிச்சுமையையும் சுமந்து பணிபுரிவதால் பல பேருந்துகள் முழுமையான பராமரிப்பு பார்க்காமலேயே வெளியில் வருகிறது என்பது இந்தத் துறைக்குள் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

ஓட்டுனர் வேகமாக பேருந்தை இயக்கி விட முடியாது. ஒரு லிட்டர் டீசலுக்கு 6 கி.மீ ஓட்ட வேண்டும் என்கிற நெருக்கடி, மறுபுறம் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் போன்றவற்றின் இயக்கம் எதையும் முறைப்படுத்தாமல் பேருந்து நிலையங்களில் கழக அதிகாரிகளே தனியார் முதலாளிகளுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு செயல்படும் நிலையில் வசூல் இலக்கு என தினமும் நடத்துனருக்கு நெருக்கடி. தமிழகத்தில் 365 பணிமனைகள், பணிமனைக்கு ஆளுங்கட்சி அனுசரிப்பு கட்சி பணியாளர்கள் 10 முதல் 20 பேருக்கு பணியே இல்லாமல் வருகைப் பதிவு.  இவர்களின் பணியையும் யாராவது வயிற்றுப்போக்கு, இழவு என விடுப்பு எடுக்கும் பணியாளர்களின் பணியையும், தடத்திற்கு சென்று வந்து இறங்குகிற ஓட்டுனரை தாஜா செய்து மீண்டும் பணிக்கு அனுப்புவது எத்தனை பேருக்கு தெரியும்?

இன்று வரை மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிற தேசிய மய வரிகளின் ஆதிக்கத்தால் தனியார் பேருந்தின் தட நீளம் 120 கி.மீ க்கு மேல் இருக்க கூடாது.  ஆனால் அரசுப் பேருந்தின் தட நீளம் என்பது 500 கி.மீக்கு மேல் சென்று விட்டது.  தமிழகத்தில் 5800 தனியார் பேருந்துகளை, 20000 அரசுப் பேருந்துகளோடு ஒப்பிடும் போது 4 பங்கு அதிகமாய் அரசுப் பேருந்துகள் இருப்பதால் அங்கொன்றும் இங்கொன்றும் ஏற்படுகிற விபத்தில் அரசுப் பேருந்து அதிகம் போல் தோன்றும்.  அதையெல்லாம் படிக்கிற நாம் தனியார் அதிகரிக்கட்டுமே என எண்ணுவது உழைப்புச் சுரண்டலை அதிகரிக்கவே செய்யும்.

____________________________________________________

சமீபத்தில் தினமணி நாளிதழில் (எவ்வாறு பல தரப்பு விபரங்களை ஆராயாமல் எழுதினார்கள் என தெரியவில்லை) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் அடுத்த ஆண்டு 250 கோடி செலவில் 3000 பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவித்ததை குறிப்பிட்டு “50 வயதிலும் தாய்ப்பாலா” என தலையங்கம் எழுதினார்கள்.

பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, சமூக தேவையை பூர்த்தி செய்யப்படுவதற்காக சுதந்திர இந்தியாவின் பிரதான அடித்தளமாக இருந்தது, இருப்பது தரைவழிப் போக்குவரத்து என்பது அனைவரும் அறிந்த வரலாறே.  தமிழகத்தில் பேருந்து தேசிய மயமும் அத்தகைய ஒரு சமூக முயற்சியின் சிறப்பான முடிவென்று நாட்டின் உச்ச நீதிமன்றமே உச்சி முகர்ந்துள்ளதை வாசகர்கள் கவனத்திற்கு இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

முதலீட்டுக்கு மேல் 5 சதமானம் வருமானத்தை இலக்காக கொண்டுதான் 1971 இல் தனியார் துறை கையகப்படுத்தப்பட்டு நிறுவனமாக பதிவு (கம்பெனி) செய்யப்பட்டு 1972 முதல் கழகமாக செயல்பட்டுவருவதுதான் அரசு போக்குவரத்துக் கழகங்கள்.  இன்று தினம் 2 கோடி பேருக்கு மேல் பயணித்து பலன் பெற வழிவகுத்துள்ளது.

சமூகத் தேவையின் தாக்கம், கிராம பொருளாதாரத்தை, நகர்ப்புற வளர்ச்சியுடன் இணைக்க வேண்டிய சமூகக் கட்டாயம், சாலை வசதி போதிய அளவு இல்லாவிட்டாலும் பேருந்து வசதி செய்ய வேண்டும் என்ற சூழலில் அரசுப் பேருந்துகளின் வழித்தட இயக்கக் கொள்கையும் மாற வேண்டிய கட்டாயம்.

சேவை முன்னுரிமை பெற, வரவு செலவும் சமனாகும் வழித்தடங்களின் விகிதாச்சாரம் கூட குறைந்து தற்போது 96 விழுக்காடுக்கு மேல் செலவினத்தை கூட தொட இயலாத வருமான இழப்பீட்டில் கழகங்கள் உள்ளது. ஒரு பயணியே இருந்தாலும் கூட பேருந்தை இயக்க வேண்டும் என்ற கட்டாயம். விளைவு கி.மீ. க்கு 15 பைசா வருமானம் என்றால் 21 பைசா செலவாகிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் கி.மீட்டருக்கு 45 பைசா, கர்நாடகாவில் 52 பைசா, கேரளாவில் 38 பைசா என்ற விகிதாச்சாரத்தில் பேருந்து கட்டணம் இருக்கும் போது தமிழகத்தில் 28 பைசாதான்.  வேறு வருமானம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (இங்கு பேருந்துக் கட்டணங்கள் ஒரு புறம் தாழ்தள சொகுசு என்றெல்லாம் பெயர் வைத்து மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது நமது கருத்து அல்ல – யதார்த்தம் தெரிந்து கொள்ள இந்த விவரம் கொடுக்கப்படுகிறது)

ஆனால் செலவினம் என்று வரும் போது, ஆண்டு வருமானம் தோராயமாக 3950 கோடியிருக்கும் போது,

டீசலுக்கு மட்டும் : 1100 கோடி (கடந்த 10 ஆண்டுகளில் 28முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது)

உதிரி பாகங்கள் :  910 கோடி (ஆண்டிற்கு 10 சதம் விலை உயர்வு)

மோ.வாகன வரி :  115 கோடி

வட்டி, அரசுக்கு செலுத்த வேண்டிய பிற வரி :   50 கோடி

பேருந்து நிலைய கட்டணம் சுங்க சாவடி வரி :  2.5 கோடி

மோட்டார் வாகன வரி கூட தமிழகத்தில்தான் அதிகம் வசூலிக்கப் படுகிறது. இத்தோடு பேருந்திற்கு பயன்படுத்தப்படும் டீசலுக்கு 8 சதமானம் விற்பனை வரியும், டயர் உபயோகத்திற்கான திரட் ரப்பருக்கு 12 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது என்பதையும் வாசகர்கள் அறிய வேண்டும்.

தவிர அரசுப் பேருந்தே காரணமாக இல்லாவிட்டாலும், விபத்து நடந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்காக, “நான் லயபிலிட்டி” தொகை என்று ஒவ்வொரு விபத்திற்கும் ரூ 15 ஆயிரம் உடன் வழங்கப்பட வெண்டும்.  ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட ஓட்டுனார் மீது தவறில்லை என்று குற்றவியல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும், இழப்பீடு லட்சங்களில் வழங்கப்படுவதால் கழகங்களுக்கு ரூ 500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

இந்த வருமானத்திற்கு மிஞ்சிய செலவினத்தை தினமணி ஊகித்திருப்பது போல் அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தவறான தகவல் போல் அன்றி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேம்பாட்டு நிதி நிறுவனத்தில் 6 முதல் 12 சதமானம் வரை வட்டிக்கு கடன் பெற்றுத்தான் கழகத்தின் மூலதனத்தையும் (பேருந்து வாங்குவது) அன்றாட செலவினத்தையும் இன்றுவரை கழகங்கள் சந்தித்து வருகின்றன. அரசிடமிருந்து எந்தவிதமான மானியமோ, ஏன் வட்டியில்லா கடன் கூட கிடைப்பதில்லை என்பதே உண்மை. வட்டியே பல நூறு கோடிகள் நிலுவையிலுள்ளது.  அதனால் கழகங்கள் மேலும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.

சிலரது கூற்றுப் பிரகாரம் மக்களின் வரிப்பணம் எதையும் போக்குவரத்துக் கழகங்களுக்கு திருப்பி விடப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.  மாறாக அரசு வழங்கும் பங்கீட்டுத் தொகையில் பாதிக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது.  ஆனால் மாணவர்கள், தியாகிகள், மாற்றுத்திறன் உள்ளவர்கள் என்று சமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச பயணங்களுக்கு அனைவரும் நினைப்பது போலன்றி, 56 சதமானம்தான் ஈடு செய்யப்படுகிறது என்பதுடன் அந்த தொகையும் உடனுக்குடன் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.  (இதுநாள் வரை ரூ 250 கோடி நிலுவையிலுள்ளது).

விளைவு: பணியாளார்களின் ஊதிய விகிதம் மற்ற துறையை ஒப்பிடும் போது மிகக் குறைவு.  பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (ரூ 550 கோடி) அன்றாட செலவிற்கு பயன்படுத்தப்படுகிறது.  ஓய்வூதிய ஒப்படைப்பு, பணிக்கொடை போன்றவை ஆண்டுக்கணக்கில் நிலுவையிலுள்ளது.

இவ்வாறு தங்களது வருமானத்தில்தான் கழகத்தை நடத்திக் கொள்ள வேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கத்தை எந்த வித சமூகப் பங்களிப்பும் இல்லாமல் (இலவச பயணங்களை ஏற்றிச் செல்வதில்லை), தாங்கள் பெற்ற வழித்தடங்களிலேயே கூட (உதாரணமாக மதுரை-திண்டுக்கல் (வழி) சோழவந்தான் என அனுமதி பெற்று மாறாக நேர் வழி வாடிப்பட்டி வழியாக இயக்குவது) பேருந்தை இயக்காமல் நேராகவே இயக்கி லாபம் மட்டுமே நோக்கமாக செயல்படும் தனியார் துறை பேருந்துகள், மினிபேருந்துகள் (இவற்றின் விதி மீறல்கள் பற்றி பத்திரிகைகளில் பலமுறை செய்திகள் வந்துள்ளது) இயக்கத்துடன் ஒப்பிடுவது, சிலரின் பொதுத்துறை மீதுள்ள ஆழமான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதை உணரமுடிகிறது.  வழங்கப்பட்டுள்ள ரூ 250 கோடியும் நாட்டின் சுற்றுச் சூழலைக் காக்கும் மாற்று எரிபொருளுக்கான அதிக விலையை கழகங்களே ஏற்கிறது என்பதுடன் அரசு ஏற்பதில்லை என்பதுதான் உண்மை நிலை.

உலக அளவில்  அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பணக்கார நாடுகளில் சமீபகாலமாக திவாலாகி (அமெரிக்காவில் மட்டும் 82 தனியார் வங்கிகள்) மக்கள் பணம் திருப்பி விடப்படுவதும் என்ரான், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், சத்யம், குளோபல் டிரஸ்ட் வங்கி போன்ற தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் ஃ நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்று திரும்ப செலுத்தாத மக்கள் பணமே 1 லட்சத்தி 25 ஆயிரம் கோடி என்கிறது புள்ளி விபரம்.  இன்றைய அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்விற்கு தனியாரின் பதுக்கலும், ஆன் லைன் வர்த்தகமுமே காரணம் என்கிற நாளிதழ்களின் உண்மை அனைவருக்கும் தெரியும் என நம்புகிறேன்.

இந்தியாவின் பொதுத்துறையை சார்ந்திருப்பதால் மட்டுமே வேறூன்றியுள்ள இந்திய தனியார் கம்பெனிகள் உள்ளிட்ட தனியாரின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ள பொதுத்துறைக்கு “50 வயதில் தாய்ப்பால் ஊற்றுவதற்கு பதில் காலம் முழுக்க உழைத்து குடும்பத்தை வளர்த்த தந்தைக்கு, தாய்க்கு முதுமைக் கால பராமாரிப்பு என்று ஏன் எடுத்துக் கொள்ள கூடாது?” இந்த முதுமையான துறைதான் இந்தியாவின் இதயமென்றும் சொல்லலாம். பல்வேறு சேவைகள் மக்களுக்கு மலிவாக வழங்குவதும் இந்த துறைதான்.

இப்படிப்பட்ட அரசு போக்குவரத்தில் 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்களை நியமனம் செய் விபத்துக்களை குறை என தொழிலாளர்கள் பேராடியதன் விளைவாக கடந்த 2006 லிருந்து இன்று வரை சுமார் 40,000 ஓட்டுனர்கள், நடத்துனர்கள் புதிய நியமனமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தினக்கூலிகளாகவே வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் யதார்த்தம்.

__________________________________________________

இந்நிலையில் உலக வங்கியின் கட்டளையை ஏற்று நாளடைவில் ஓய்வூதியம் என்பது முற்றிலுமாக இருக்கக் கூடாது என்பதை படிப்படியாக செயலாக்கம் செய்திட கடந்த 2003ல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்தியா முழுமையும் அரசு, அரசுத்துறை, பொதுத்துறை என்ற எதிலும் 01-04-2003ற்கு பின்னர் பணியில் சேருபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது கிடையாது மாறாக “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்” (புதிய பென்சன் திட்டம்) என்ற பெயரில் அவரவர் சம்பளத்தில் 10சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.  அதற்கு ஈடான தொகை அரசு அல்லது அரசு சார்பு நிறுவனம் போடும்.  இதற்கென்று ஒரு ஒழுங்குமுறை ஆணையம் காலக்கிரமத்தில் நிறுவப்படும்.  அந்த ஆணையம் எவ்வாறு பென்சன் கணக்கிட வேண்டும் என தெரிவிக்கும் என கூறினார்.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட போக்குவரத்து புதிய பணியாளர்களிடம் 10 சதவீத தொகை பிடிக்கப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் இருந்து வந்தது.  இதில் உண்மை என்னவெனில் கடந்த 7 ஆண்டுகளாக இதற்கென பங்களிப்பு திட்ட ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் என்பது இன்னும் அமைக்கப்படவில்லை.  அதனால் இந்த ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது யாருக்கும் தெரியாது.  2003ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு 2020க்கு மேல்தான் ஓய்வு என்பது துவங்கும்.  ஆனால் இதில் பலர் விபத்து காரணமாக இறந்திருக்கிறார்கள்.  இது போல் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு எவ்வாறு ஓய்வுவூயம் கணக்கிடுவது என போக்குவரத்துக் கழகங்கள் அவ்வப்போது அரசிற்கு எழுதி வந்தன.  அரசும் ஒழுங்குமுறை ஆணையம் அமையும் வரை பொறுத்திருக்கவும் என பதில் எழுதிக் கொண்டிருந்தது.

ஆனால் தீடீரென தற்போது ஒரு அரசு உத்திரவு (அரசுக் கடிதம் 15705/D/2009-1 நாள் 25-03-2010) வந்துள்ளதில் புதிதாக பணி நியமனம் பெற்று இறந்த பணியாளர்களைப் பொறுத்தவரை நிதித் துறை 18-10-2004ல் வெளியிட்டுள்ள உத்திரவினைப் பின்பற்றவும் என ஒரு கடிதம் வந்தது.  அந்த நிதித்துறை கடிதத்தில் (29593A/Finance (Pension) Department 2009 நாள் 25-08-09) இறந்தவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை மற்றும் அதற்கு ஈடான அரசுப் பங்கு இவற்றிற்கு 8 சதவீத வட்டி போட்டு வாரிசிடம் கணக்கு முடித்துவிடுங்கள் என மத்திய அரசு நிதி அமைச்சக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் செயல்படவும் என அனைத்து துறைக்கும் எழுதியுள்ளது.

ஏதாவது ஒரு வகையில் தனது ஓய்விற்கு பிறகு அல்லது இறப்பிற்கு பிறகு தனது வாரிசுகளுக்கு ஒரு சொற்ப தொகையாவது பென்சன் என கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வயலை விற்று அரசியல்வாதிக்கு செலுத்தி பணிக்கு வந்து பணிபுரிந்து இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய மோசடி இது.  ஊருக்கு ஒரு நிதி நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணம் பெருமளவில் வசூலானவுடன் ஓடிப்போவதற்கும் இதற்கும் சிறிதும் வித்தியாசமில்லை.

ஆனால் இதை எதிர்த்து ஒன்றுபட வேண்டிய தொழிலாளார் வர்க்கம் ஜெயா அரசும் கருணாநிதி அரசும் போட்டி போட்டு வளர்த்துவிட்ட 28 தொழிற்சங்கங்களால் பிளவுபட்டு நிற்கிறது.  போலி கம்யூனிச தோழர்களோ அவ்வப்போது சம்பிரதாய போராட்டங்களையும், ஒரு நாளில் கைதாகி திருமண மண்டபத்தில் கூத்தடித்துவிட்டு மாலை வீடு திரும்பும் போராட்டங்களையே முன்னெடுப்பதுடன் அது அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கண்ணாயிருக்கின்றனர்.

தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சி அரசியல் சார்புகளிலிருந்து வெளிவந்து ஒன்றுபட்டு போராட்ட இயக்கங்களை முன்னெடுப்பது ஒன்றே இவற்றிற்கெல்லாம் தீர்வாக அமையும். (இந்த துறையில் நடைபெறும் பணி நியமனம் முதல் கூண்டு கட்டுமானம், விபத்து இழப்பீடு வரை உள்ள ஊழல்களின் விபரம் தொடர்ந்து எனது அடுத்த கட்டுரையில்)

_____________________________________________________

– சித்திரகுப்தன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. அற்புதமான பதிவு தோழர். சித்திரகுப்தன், பணி காலத்தில் தொழிலாளர்கள் வாழ்வை பணிசூழ்லால் சுரண்டுவது ஒரு புறமென்றால்,அவர்கள் ஓய்வூதியத்தில் கைவைப்பது அவர்கள் பணியை முடித்தபின்னரும் எஞ்சியிருக்கும் வாழ்வையும் சுரண்டுவது தொடர்கிறது என்பது தெளிவு. பென்சன் மோசடிகளை பற்றி வாயே திறக்காத பதிவுலக முன்னாள் இந்நாள் தொழிற்சங்கவாதிகள் மத்தியில் நீங்கள் உரிய தரவுகளோடு எழுதியிருப்பது வெகு சிறப்பு. வினவில் உங்கள் எழுத்துக்கள் வரவேண்டும்.

  2. இப்போதைய அரசு பேருந்துப் பணியாளர்கள் நியமனம் ரேட் விவரம்:

    1. கண்டக்டர்கள் – கட்சிக்காரர் என்றால் 50000. இல்லாவிட்டால் 100000.
    2. டிரைவர்கள் – கட்சிக்காரர் என்றால் 30000 இல்லாவிட்டால் 75000.

    காது வழியே கேள்விப்பட்டேன்.

  3. முதலில் உங்களுக்கு கொடுக்கப்படும் மிதமிஞ்சிய சம்பளம் கட் செய்து, பயணிகளின் பசி நேரத்தில் கமிஷனுக்காக மோசமான ஹோட்டலில் பஸ்ஸை நிறுத்தினால் தண்டனை என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.
    அப்பப்பா…நீங்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சமா.. நஞ்சமா..

  4. உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி கிடையாதா… போக்குவரத்து தொழிலாளிகள் என்று எழுதியிருக்கீங்க.. நடத்துனர், கண்டக்டர் இருவரும் நவீன முதலாளிகளின் இன்னொருவடிவம்.. இவங்க பண்ற அலப்பறை.. எந்த ஒரு கண்டக்டரும் சில்லறை ஒழுங்க குடுக்கமாட்டான்.. அன்னாடங்காய்ச்சிகள.. இவனுங்க மேய்ப்பானுங்கப்பானுங்க பாருங்க அது ஒரு தனிக்கதை பள்ளிகுழந்தைகளை இவனுங்க கவனிக்கிறது இருக்க மகாக்கொடுரம் ( ஏன்னா அதுக இலவச பஸ்பாஸ் இல்லியா. கலெக்ஸன் ல கமிஷன் குறையுதுல்ல) அதுக்காக .. இந்த படுபாவிகளுக்கு வக்காலத்து வாங்கி ஒரு கட்டுரை குமட்டுதுங்க உங்க சமுக அக்கறை..

    • தேவன்,

      ஒருநாள் சென்னை மாநகர அரசுப்பேருந்து ஒன்றில் நீங்கள் நடத்துநராக பணியாற்றுவதற்கு ஏற்பாடு செய்கிறோம்.( அர்ஜூன் முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக இருந்த்தையெல்லாம் மெச்சியிருப்பீர்களே, அதுபோல) அந்த ஒரு நாளில் நடத்துநர்களெல்லாம் எப்படி நடக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி நடந்து கொண்டால் அதை மற்ற நடத்துனர்களும் கற்றுக் கொள்ளலாம் இல்லையா?

      எதையும் வெளியில் இருந்து பேசுவது சுலபம். முதலில் நீங்களெல்லாம் அரசுப்பேருந்துகளில் பயணிப்பவர்களா என்றே சந்தேகமாக இருக்கிறது.

      • எல்லா அரசு /சார்பு ஊழியர்களும் பொது மக்களை வர்க்க எதிரியாகத்தான் பாவிக்கிறார்கள். ஒரு நாள் பணி என்பதெல்லாம் வெரும் பம்மாத்து. வெட்டிப் பேச்சு. அரசு பேருந்தில் சென்று பயணிப்பவருக்கு கணிணியில் வீண் வம்புக்கு ஏது நேரம்?

      • 12 b பஸ்ல நான் உட்கார்ந்து பாதி இருக்கைகள் தேய்ந்து இருக்கும். மாதம் 3500 ரூபாயில் 500 ரூபாயில் ஒரு 30 ரூபாய் இவங்க மிச்ச சில்லறை தராமலே போயிருக்கும்… நான் அர்ஜூன் இல்ல சாதாரண டி.டீ.பி. தட்டச்சு
        செய்பவன்.. நிரந்தர பணி வாங்க என்னிடமும் உங்களிடமும் பல
        லட்சங்கள் இல்லை.

  5. சார்..
    எத்தனை கண்டக்டர் பயணிகளை மரியதைய நடுதுறாங்க.. சொல்லுங்க.. நம்மள மதிச்ச தான் சார் அவங்களுக்காக பரிதாப பட முடியும் ..வயசு வித்தியாசம் இல்லாம ஆண் பெண் பேதம் இல்லாம இவங்க பேசுற பேச்சு இருக்கே .. அப்பாப்பா வர்ற ஆத்திரத்துக்கு அங்கேயே கன்னத்துல பளார் நு அறையனும்போல இருக்கும்…
    அதெல்லாம் விடுங்க சார் .. 25 பைசா பையில இருந்தும் , அத ஒழுங்கா பயணிக்கு திருப்பி கொடுக்குற கண்டக்டர் எத்தனை பேரை நீங்க பர்ர்த்து இருக்கீங்க சொல்லுங்க .. இவங்களுக்குகாக எல்லாம் பரிதாப படமுடியாது சார் மன்னிக்கணும்..

  6. தோழர் மனசாட்சி, மற்றும் தேவன் கவனத்திற்கு    ஒரு இடத்தில் 8 மணி நேரம் அல்லது 10 மணி நேரம் அமர்ந்து பணி புரிகிற பணிக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துவரலாம் என்பதால் படிக்காசு, பேட்டா போன்றவை தேவையில்லை,  ஆனால் அதே பணியாளர் பணி நிமித்தமாக வெளியூர் சென்று வர வேண்டுமெனில் பயணப்படி அவரின் உணவு, தங்குமிட செலவிற்காக வழங்கப்படுகிறது,  தயவு செய்து தோழர்கள் ஒரு நாள் ஏதானும் ஒரு பேருந்து நிலையம் சென்று பெரும்பாலான பேருந்தின் டாப்பில் ஓட்டுனர், நடத்துனர் படுத்துறங்குவதை பார்த்து வர வேண்டும்.  தினசரி வெளியூர் பயணத்திற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வசூல்படி ரு 100 க்கு 2/50 (ஓட்டுனர், நடத்துனர் இருவருக்கும்) அப்போது கையேந்திபவன் விலை இட்லி ரு 50 பைசா, தோசை ரு 5- அல்லது 6.  இன்று வசூல்படி ரு 100க்கு 1.60 (பேருந்து கட்டணங்கள் உயரும் போதெல்லாம் படி குறைக்கப்படும்) இன்று வசூல் புறநகரில் சராசரி 7 முதல் 8 ஆயிரம்.  வசூல்படி ரு 128 (ஓட்டுனர் 64, நடத்துனர் 64) இதில் பேருந்து நிலையம் ஒவ்வொன்றிலும் ஊர் பெயர் சொல்லி கூவும் தினக்கூலிகளுக்கு (இவர்கள் வாழ்நாளெல்லாம் தினக்கூலிகளே) நிர்வாகம் கொடுக்க சொல்லும் காசு ரு 1 – ஓட்டுனர், நடத்துனர் பரிதாபப்பட்டு அவர்களின் படிக்காசிலிருந்து கொடுப்பது ரு 2 அல்லது 3 சேர்த்து கொடுக்கிறார்கள்.  இரண்டு பெரு நகரங்களுக்கிடையே இது போல் 10 பேருந்து நிலையங்கள்- இடைநிலை ஊர்களை கடப்பதில் செலவு ரு 20 முதல் 25.  டிப்போவில் பேருந்தை கூட்டுகிற பையனுக்கு தருவது ரு 5, வழிநடை மோட்டலில் கண்ணாடி துடைக்கும் அந்தக் கடை கொத்தடிமைக்கு, சர்வருக்கு கொடுக்கும் ரு 5ம் 5ம் ரு 10 (ஓட்டுனர் நடத்துனரிடம் என்ன மிஞ்சியிருக்கும்)  – 12 மணி நேரம் பணிபுரிந்து வந்தவரை மீண்டும் பணிபார்க்க வலியுறுத்தி அனுப்பும் போது, பயணிகளில் பலர் தான் ஒரு நீதிபதி அல்லது மாவட்ட ஆட்சியர் என்பது போன்ற நினைப்பில் செயல்படுகிற விதத்தால் விரக்தியில் அங்கொன்றும் இங்கொன்றும் ஓட்டுனர்-நடத்துனர் தவறாக behave நடந்து கொள்ள நேரிட்டுவிடுகிறது. அதையும் நான் நியாயப்படுத்தவில்லை – ஆனால் மற்றவர்கள் சிரமங்களை உணர்ந்துகொள்ள முயலுங்கள் என்பதுதான் எனது பதிவின் நோக்கம் – இன்னும் பேசுவோம் 

  7. தோழர் மனசாட்சி போன்ற யாரேனும் ஒருவர் புறநகர் பேருந்தில் ஏறி அமர்ந்த கண்ணயர்ந்து டிக்கட் வாங்க மறந்து- பேருந்தில் கொள்ளளவிற்கு மேல் பயணிகள் இருந்து நடத்துனராலும் அதை கண்டுபிடிக்க இயலாமல் சில கி.மீ சென்றபின் செக்கர் ஏறி சோதனை செய்யும் போது மனசாட்சி காசு கொடுத்தேன் நடத்துனர் டிக்கட் தரவில்லை என கூறினால் உடனே (FC அதாவது Fare collected – ticket not issued) எப்.சி. வழக்கு செக்கர் எழுதிவிட்டால் மறுநாளிலிருந்து அந்த நடத்துனர் 30 நாட்கள் தற்காலிக வேலை நீக்கத்தில் வைக்கப்படுவார். (இது தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்திலும் நிதர்சன உண்மை) தோழர் எந்த நடத்துனரை வேண்டுமானாலும் கேட்டுப்பார்க்கட்டும்.  டிக்கட் மிஸ்ஸிங் அதாவது காசும் வாங்கவில்லை டிக்கட்டும் கொடுக்கவில்லை (FNC) என கேஸ் எழுதினால் 15 நாள் தற்காலிக வேலைநீக்கம் தெரியுமா மனசாட்சிக்கு 

  8. நீங்க சொல்ற மாதிரி சத்யம் கம்பெனி எந்த வரி பணத்தியும் சாப்பிடவில்லை , தவறான தகவல் குடுக்க வேண்டாம்

  9. கட்டுரையில் தனியார் நிறுவனங்களைப்பற்றி சொல்லியுள்ள வரிகளை மீண்டும் ஒரு முறை நன்றாக படியுங்கள் தோழர் செந்தில்.  மற்றும் இதே வினவு தளத்தில் 23/1/09 தேதிய பதிவான சத்யம் – கேள்விகள் – பதில்களை ஒரு முறை படித்துவிடுங்கள்

  10. ஓட்டுனர் ,நடத்துனர் சிலரிடம் இருக்கும் குறைபாடுகள் உண்மைதான்;ஆனால் அந்தகுறைபாடுகள் ஒரு புறம் இருக்க போக்குவரத்து தொழிலாளர்கள் அவர்களது பணி நிமித்தம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது .கரணம் தப்பினால் மரணம் ,கவலையினால் கவனம் திரும்பினால் பலரது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையில் பணி செய்யும் ஒருவரது உழைப்புக்கு தகுந்த ஊதியமில்லை ,ஓய்வுக்குப் பின் உதவி இல்லை .தொழிலாளர்கள் உழைக்க,ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகளும் உழைக்காத அதிகாரிகளும் அனுபவித்துவிட்டுப் போகும் அவலநிலையிலிருந்து உண்மையை பார்க்கவேண்டும் நண்பர்களே!

  11. கண்டக்டர் டிரைவரை திட்டுறவங்க கவணத்துக்கு.. மக்கள வர்க்க எதிரியா பாக்கறது குளுகுளு ஏசி காருல உக்காந்து டிராபிக் ஜாமுல உஸ்ஸூ புஸ்ஸூன்னு பெருமூச்சு வுடறவங்கதானே தவிர நம்ம ஒட்டுனர் நடத்துனரில்லிங்க

    டிரைவர் கண்டக்டர் கடுப்படிக்கத நான் நியாயப்படுத்தல ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க தெருவுல குடும்பமா நடக்கும் போது நம்மோட ரெண்டு குழந்தைங்க படுத்தினாலே நம்மால தாங்க முடியாம எப்படி எரிஞ்சு விழுறோம்… ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பேசஞ்சரோட நேரடி தொடர்புல இருக்கும் போது வெறுப்பாகறது சகஜம்தானே அவங்களும் மனுசங்கதானே … 

    ஒரு காருல குழந்தைங்க இங்க அங்க ஒதுங்கினாலோ, டூவிலர்ல பின்னாடி இருக்கறவங்க ஆடிகிட்டு போனாலோ எப்படி நமக்கு கோவம் வருது… அத்தன டன் பஸ்ஸ ஓட்டுற டிரைவர பத்தி நினைச்சு பாத்தீங்களா…
     வண்டிய நிறுத்தலையின்னா திட்டுறீங்களே வண்டிய நிறுத்தி எக்ஸ்டிரா ஆளு ஏத்துனா முதுகு பிஞ்சுபோயிறும்.. வலி உயிர்போகும்….கண்ணு இருட்டிகிட்டு வரும்.. பின்னாடி இருக்குற அத்தன பேரு உயிரும் கையில இருக்குற பொருப்பு வேற.. பேச்சு சத்தத்துல ஒழுங்க கவனமா ஓட்டறது எவ்வளவு முக்கியம்.. திரும்பி  திட்டக்கூட கவனம் பிசக முடியாத நிலம
    கொடுமைங்க அது.. வெயிட்டு தாங்காம சாஞ்சு போற வண்டிய சரியாம திருப்ப கையில என்ன திறம வேணும்.. இதுல ரோடுல மத்த வண்டிங்க கொடுக்குற தொந்தரவ கேக்கவே வேணாம்.. இத்தனைக்கு மத்தியிலும் இவ்வளவு பொறுப்புகளில்லாத தனியார் வாகனத்தோட ஒப்பிடும் போது மாநகர பேருந்துகளின் விபத்து எண்ணிக்கை குறைவுதானே???

    இந்த மாதிரி துன்பத்துல வண்டி ஓட்டுற டிரைவருக்கு துணையா இருந்து வண்டி ஒட்டு அவருக்கு எந்த டென்சனும் வரக்கூடாதுன்னு மத்த எல்லா பிரச்சனையும் நிர்வாகம் செய்வதும் கண்டக்டர் வேலதான்.. இதுல டிக்கெட்டு கலெக்சன்னு பிரசர் போட்டா அது யார் தப்பு??? சத்தியமா அவங்களுது இல்லீங்க

    டிக்கெட் கொடுப்பதோட நிக்கறதில்லையே அவங்க வேல கூட்டத்த ஒழுங்கு பண்றதும் அவங்கதானே.. அவங்க வேலதானேன்னு லேசாவாசா பாத்தா தெனோம் புட்போர்டுல 100 பொணம் விழும்.. ஒழுங்கு செய்ய ஆளில்லாத பம்பாய் ரயில்ல இதுமாதிரி நடக்குதா இல்லையா??? அப்புறம் இந்த சில்லற பிரச்சன இருக்கே.. தெனோம் போற பஸ்ஸூ தெனோம் குடுக்குற சார்ஜூ ஒழுங்கா சில்லற எடுத்துக்கிட்டு போறதுல மக்களுக்கு என்ன பிரச்சன??  உண்மையிலே சில்லறு கொடுப்பது கண்டக்டர் வேல இல்லிங்க..  அவங்க அத எக்ஸ்டிராவா செய்யுறாங்க. டிக்கட் வாங்கறதும் அதுக்கு சரியான சில்லறை கொடுப்பதும் பயனிகள் பொறுப்பு …ஆனா அப்படி நடக்குதா… டிக்கெட்டு டிக்கெட்டுன்னு அவரு கத்தினாதான் வாங்கறது.. சில்லற கொடுப்பதில்ல..  அவங்களுக்கு இருக்குற ஒழுங்கு வேலைக்கு நடுவுல இருக்குற வேல பத்தாதுன்னு சில்லற தேடித்தேடி கொடுக்க கடுப்பாதான் இருக்கும் அதான் திட்டறாங்க, சில சமயம் சில்லறையும் கொடுப்பதில்லை.

    ஒழுங்கா ஏறுவது, இறங்குவது, புட்போர்டு, ரன்னிங்ல ஏறி இறங்குவது, முன்னால போவது, வழியில நிக்காத்து, சத்தம்போடாம இருப்பது, டிக்கெட் வாங்குவது, சில்லறை கொடுப்பது என பயனிகளுக்கும் நிறையா பொறுப்பிருக்கு ஆனா அதையெல்லாம் அவங்க செய்யுறாங்களா..  பிரச்சனையில்லா பிரயாணத்துக்கு இரண்டு தரப்புமே ஒத்திசைவா இயங்கணுங்க.. இது எல்லாம் ஒழுங்கா நடக்கும் ஏசி பஸ்ஸூல பஞ்சாயத்தும் இல்ல, சண்டையும் இல்லா என்பது இங்க ரொம்ப முக்கியமா கவனிக்கனும்

    அவங்க திட்டறத மட்டும் பேசுறீங்களே எத்தன பேர் ஒரு நாளைக்கு அவங்கள திட்டுறாங்க, கேவலமா பேசுறாங்க அதயெல்லாம் யாராவது அவங்களுக்காத தட்டிக்கேட்டிருக்காங்களா??? 

    வேலை டென்சன்ல யாரும் கோவப்படலாம்.. யாரு அப்படியில்ல?? 
    ஆபீசுல மேனேஜர் திட்டினா வீட்டுக்கு வந்து பொன்டாட்டிய கடுப்படிக்கறதில்லையா? இல்ல வெளியில கஸ்டமர் திட்டினா வாங்கிகிட்டு அந்த வெறுப்புல ஆபிஸ்ல கொட்டறதில்லையா. ஆட்டோகாரங்களோட, காய்கறி காரங்களோட, இஸ்திரி, மளிகை, ஒட்டல், டிக்கடை, டிராபிக், குடும்பம்னு எல்லா மனுசனும் எதுக்காவது சண்ட போடத்தான் செய்யிறாங்க அதுக்காக சண்ட போடறவங்க பென்சன புடுங்க நம்ம ஒத்துக்க முடியுமா???????

    நமக்குள்ள ஆயிரம் பிரச்சன இருக்கலாம் ஆனா இது நம்மெல்லுருக்குமான பொதுவான பிரச்சன.. இன்னிக்கு அவங்களுக்கு நடப்பது நாளை நமக்கு நிச்சயம் நடக்கும்… இங்க எத்தன பேரோட பெத்தவங்களோ வேற உறவினர்களோ அரசாங்க உத்தியோகத்துல இருப்பாங்க அவங்க எல்லோருக்கும் இதுதான் நடக்கப்போவுது.. இது மாதிரி அயோக்கியத்தனத்த நாம எதிர்கொள்ளனுமின்னா நமக்குள்ள இருக்கு சின்ன மனஸ்தாபங்கள பெரிசு படுத்தாம, அவனுக்கு வேணும்கறமாதிரி ஒன்னாங்கிளாஸ் சிந்தனையெல்லாம் தூர எரிஞ்சுட்டு அவனுக்கா போராட நாம முன்வரனும் ஏன்னா இது நமக்கான போராட்டமும்தான்!!!!!!!!!!!!

  12. Mr Vinavu
    Before you start worrying about the organized labors such as Bus drivers you have to look at the fate of the unorganized sector which is where the bulk of employees are working in sub human condition in this country. Comparatively Govt. employees are much better than a lot of folks working in the low levels of service sector. When compared to their problems the above mentioned issues are nothing. If you ask 70%of the private sector service employees they would be happy to trade in their position with the Govt. drivers and conductors. So get your priorities right.
    Besides where is your article on the 76 people who were massacred by your cowardice Naxals and Maoists. You guys are the worst terrorists and the human rights abuser. You know all the CRPF men killed their are young men from the lower rung of the society. The Maoist terrorists extortionist rapists have no problem killing those innocent Jawans. All these men left behind young sons and daughters who will grow up without their father. You got blood on your hands.You will face the wrath of those young kids and the widows who are condemned to this fate because of people with your mindset. It is a shame that your site completely blocked out that news. But that is standard practice of the commies and Maoists I should have known better. Shame on you people. You have blood on your hands . Look at the videos It is gut wrenching. Killers
    http://ibnlive.in.com/videos/113281/lest-we-forget-martyrs-of-dantewada.html
    http://www.ndtv.com/news/india/20-security-men-killed-by-naxals-in-chhattisgarh-19293.php

  13. தோழரின் கருத்துகள் சரியானவை, அரசு பேருந்துகளை இயக்குவது அரசு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது, இதில் அரசுக்கு செலுத்தும் வரியை கழகம் செலுத்துகிறது, இந்த கழகங்களின் சொற்ப லாபத்தை எடுத்து புதிய தரமற்ற அரசு பேருந்துகள் வாங்கபடுகின்றன, ஒரு காலத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் நல்ல திடமாகவும், தரமாகவும் இருந்தன. இன்று இயக்கப்படும் பேருந்துகள் இரண்டு வருடங்களுக்குள் பாழகிவிடுகின்றன, மீண்டும் இப்பேருந்துகளை பட்டி பார்த்து, பூசி மொழுகி, பல பற்றவைப்புகள் செய்து, மீண்டும் வண்ணம் பூசி இயக்குகிறது அரசு, இதை தவிர்க்க நல்ல பேருந்துகளை வாங்கி இயக்கலாமே இதனால் கழகத்திற்கு இழப்பு குறையும் லாபம் சிறிது அதிகரிக்கும், அரசு பேருந்துகளில் பராமரிப்பு சிறிதும் இல்லை எனபது பார்த்தாலே தெரிகிறது. பராமரிப்பு பிரிவில் ஆட்கள் பற்றாகுறை, தரமற்ற உதிரி பாகங்களை வாங்கி பொருத்துதல் போன்றவற்றால் கழகத்திற்கு தான் நட்டம், சுங்க வரி கட்டணம் வசூலிக்கிறார்கள் அந்த சாலைகளின் நிலை எப்படி உள்ளது, அரசுக்கு வரியும் செலுத்தி பேருந்திற்கு சேதமும் ஏற்பட்டு மக்கள் பணம் வீனழிக்கபடுகிறது, அதேபோல சாலையோர உணவகங்களில் விக்கும் உணவுபொருடகளின் விலையை பார்த்தால் எந்த பயணியும் பேருந்தை விட்டு இறங்க பயப்புடுகிறர்கள். இதனை கழகங்களே ஏற்று நடத்தி பயணிகளுக்கும் உதவலாம் கழகமும் லாபம் பார்க்கலாம், இது போன்ற பல வழிகள் உள்ளன. இவற்றை பார்க்கும் பொது இக்கழகங்களை கலைத்து விட்டு தனியாருக்கு விடும் யோசனை அரசிடம் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. தொழிலார்கள் விழித்துகொண்ண்டால் தலை தப்பிக்கும்…. நன்றி.

  14. அரசு ஒட்டுநர் மற்றும் நட்த்துனர் படும் துன்பங்களை தெளிவாக கட்டுரையாய் எழுதிய சித்திரகுப்தன் அவர்களுக்கு நன்றி. அரசு ஓட்டுனர்களை குறை கூறுபவர்கள் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளை படுத்தும் பாட்டை கொஞ்சம் யோசித்து பாருங்கள். வெளியூர் செல்ல நேரிடும் பயணிகள் தனியார் பேருந்தில் ஏறி அமர்ந்தால் சாமனியமாக வண்டியை எடுப்பதில்லை இருக்கை அனைத்தும் முழுமை அடைந்தால் மட்டுமே வண்டி அங்கிருந்து கிளம்பும். அவர்கள் நினைத்த இடத்தில் வண்டியை போடுவதும் எடுப்பதுமாக இருக்கும். சில நேரங்களில் ஓட்டுநர்கள் சட்டையை கலட்டி விட்டு பேருந்து ஓட்டுவதும் உண்டு. பயணச்சீட்டு தருபவரும் அவருக்கு துணையாக வரும் உதவியாளர்களும் மது மற்றும் போதை தரும் வஸ்த்துக்களை பயன்படுத்திக்கொண்டே பேருந்தில் வருகிறார்கள். அது மட்டுமல்ல அவர்கள் சொல்கின்ற இருக்கையில்தான் அமர வேண்டும். இப்படி அவர்களின் அராஜகங்களை சொல்லி மாளாது. வெளியூர் பேருந்துகள் இப்படி என்றால் உள்ளூர் தனியார் பேருந்துகள் நிலையோ பயணிகளை மனிதர்களாக மதிப்பது இல்லை. ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல் உள்ளே தள்ளு உள்ளே தள்ளு என்று (ஏதோ இலவசமாக அழைத்து செல்வது போல) நெருக்கி அடைத்து மூச்சுகூட விட முடியாத நிலையில் நிற்கையில் ஓட்டுநருக்கு பிடித்த விரசமான பாடல்களை நம் காது கிளியும் அளவிற்க்கு சத்தமாக வைத்து மகிழ்கின்றனர். அது மட்டுமா வண்டி போகும் வேகத்தை பார்த்தால் நம்மை யாரோ கடத்தி செல்வது போல் தோன்றும் அவ்வளவு வேகம். பயணச்சீட்டு வாங்கியவுடன் மீதி சில்லரை தருகிறேன் என்று லாவாக ஏமாற்றும் கண்டெக்டரை பார்க்கும் பொழுது அரசு பேருந்து கண்டெக்டர் சிறிது நேரம் ஆனாலும் சில்லரை வந்தவுடன் யாருக்கு சில்லரை வரவேண்டும் என்று மரியாதையுடன் கேட்டு ஒப்படைப்பது நம் கண் முன்னே அப்பொழுது காட்சிகளாய் வந்து நிற்கிறது. தனியார் பேருந்துகள் முன்னே செல்லும் அரசு பேருந்துகளை முந்திச்சென்று அதிக பயணிகளை ஏற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள், இது தவிர இன்னொரு தனியார் பேருந்து போட்டிக்கு வந்தால் அவ்வளவுதான் பந்தயம் நடப்பது போல் அதி வேகப்பயணம், பயணிகள் கவனம் முழுவதும் ஓட்டுநரையே பயத்துடன் பார்த்தவண்ணம் இருக்கும். மரணத்தின் விளிம்பிற்க்கே நம்மை அழைத்து செல்வார்கள். பேருந்து நிறுத்தம் வந்தவுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கரும்பு சக்கைபோல வெளியே வந்து விழுந்தால் நாம் இறங்க வேண்டிய நிறுத்தத்தை தாண்டி பேருந்து நிற்க்கும். என்ன கொடுமை என்றுதான் நாம் செல்ல வேண்டியது உள்ளது உண்மையா? இல்லையா?. இப்படி தனியார் பேருந்துகள் அராஜகமாக நடப்பதை அரசு பேருந்துகளை குறை கூறுபவர்கள் கண்டித்து தண்டனை வாங்கித்தந்ததுண்டா ? இனிமேலாவது அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனரை குறை கூறுவதை நிறுத்திக்கொண்டு அவர்களுக்காக குரல் கொடுப்போம். நன்றி வினவு.

  15. நீங்கள் ரொம்பத்தான் கஷ்டப்படுகிறீர்கள்.
    ஹார்பரில் மூட்டை தூக்கும் தொழிலாளியைவிடவா உங்கள் வேலை கஷ்டம்?
    தெருதெருவாக வெயிலில் அலையும் மெடிகல் ரெப்பை விடவா உங்கள் வேலை கஷ்டம்?
    வெயில் ஆனாலும் மழை ஆனாலும் வயலில் வேலை செய்யும் விவசாயியை விடவா உங்கள் வேலை கஷ்டம்?

    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

    நம் நாட்டில் தினமும் பசி தீராமல் பட்டினியோடு படுக்கச் செல்லும் மக்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

    100 கோடி பேர். இங்கே சென்று பாருங்கள். ஆதாரம்: http://meenmagal.net/?p=7048

  16. தரகு முதலாளியாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பதைத் தவிர அனைத்து தொழிலிலும் ஒவ்வொரு வகையில் சிரமம்தான்,  ஒரு தொழிலோடு மற்ற தொழிலின் சிரமத்தை ஒப்பிடாதீர்கள் மனசாட்சி தோழரே.  எதிரே வரும் வாகனம், பாதசாரி, டாஸ்மாக் கஸ்டமர், அல்லது ஓட்டும் பேருந்தின் ஓட்டுனர் இதில் யார் தவறாக இருப்பினும் உறுப்பிலிருந்து உயிர் வரை இழப்பிலிருந்து தப்பிப்பதில்லை,  மெடிக்கல் ரெப் காலையில் வீட்டிலிருந்து புறப்படும் போது சொல்லி புறப்படுவதற்கும், பேருந்து ஓட்டுனர் சொல்லி புறப்படுவதற்கும் ரிஸ்க் சதவீத மாறுபாடு உண்டு தோழரே

  17. இந்த கட்டுரையில் பிரதானமாக சொல்லவந்தது  ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதியின் ஏமாற்றை.  எப்படிப்பட்டவர்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை உணர்த்த ரு 2 லட்சம் குடுத்து வேலைக்கு சேர்ந்தவன் வாகனம் ஓட்டி இறந்தவனின் பென்சனுக்கு 2003 லிருந்து 2010 வரை ஒரு ஒழுங்குமுறை ஆணையம்-திட்டம் என்பதை தீட்ட இயலாத அரசின் கையாலாகாதனத்தை பதிய வைக்கும் போது இயல்பாக தொழிலில் உள்ள சிரமங்களையும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இது போக்குவரத்திற்கு மட்டுமல்ல 2003 ஏப்ரலுக்கு பிறகு மத்திய-மாநில அரசுப்பணியில் சேர்ந்த அனைவருக்கும் அளிக்கப்பட்ட ஏமாற்றம்.

  18. உலக மயமாக்க சூழலில் தொழிலாளி வர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக தமது உரிமைகளை இழந்து வருகிறது என்று சொல்வதைவிட ஆள்பவர்களால் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பதே சரி.அரசியல்வாதிகள் + அதிகாரிகள் கூட்டணி பன்னாட்டு கம்பனிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.மக்களின் கண்களைக் கட்டி இலவச மாய வலையில் வீழ்த்தி தங்களை தக்க வைத்துக்கொள்கிறார்கள் .தொழிர்சங்கவாதிகள் அரசியலை விட்டு விட்டு கூலிக்காக மட்டுமே போராடுகின்றனர்.ஜனநாயகத்தில் மக்களுக்கான அரசு என்பது அப்பட்டமாக முதலாளிகளின் அரசாக மாறிவருகிறது .அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க துணிந்துவிட்ட அரசு பொது துறை மீது எயிட்ஸ் கிருமிகளை பரவ விட்டிருக்கிறது.அதுதான் சித்ரகுப்தன் அவர்கள் போக்குவரத்து துறையில் கண்டு சொல்லியுள்ள செய்திகள்.பாட்டாளி வர்க்கம் ஒன்று திரண்டு ஒரு புதிய ஜனநாயகத்திற்காக போராட வேண்டும் .அதுவே உடனடித் தேவை.

  19. இன்றைக்கு சென்னை நகரம் பரபரப்பாக இயங்குவதற்கு ஓட்டுனர்கள் (கதாநாயகர்கள் ) மிக முக்கியமானவர்கள் .இரவு நேர பேருந்து ஓட்டுனர்கள் பனி மிகவும் இன்றியமையாதது .ஆயிரம் சொந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இவர்கள் கண் விழித்து 80 பயணிகளை ஒரு இடத்திலிருந்து 400 km தொலைவிலுள்ள இன்னொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டுசெல்வது மிகவும் கடினமானவேளை   .இவர்களுக்கு ஒய்வூதியம் முறைப்படி கிடைக்கவேண்டும் ..

  20. எந்த ஒரு முதலிடிக்கும் 8 – 10 % வருவாய் என்பது நல்ல லாபமே. அரசும் இவர்கள் விஷயத்தில் 8 % வட்டி கொடுத்து அரசின் பங்கையும் ஊழியலர்களின் பங்கையும் கொடுக்க சொல்லி உத்திரவு போட்டு உள்ளது. இதில் எங்கே அரசாங்கம் தவறு செய்தது. ஊழல் மூலமாக கிடைத்த வேலைக்கு மேலும் அவர்கள் மக்களுக்கு செய்யும் சேவைக்கும் இதுவே அதிகம். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி நல்ல டிரைவர் கண்டக்டர் இருக்க தான் செய்கிறார்கள் அவர்களின் எண்ணிக்கை நல்ல அரசியல் வாதிகளின் எண்ணிகையில் தான் உள்ளது..

  21. அரசின் நிர்பந்தமே மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு காரணம்- அருந்ததி ராய்

    http://vrinternationalists.wordpress.com/2010/04/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/

  22. நான் நாள் தோறும் பணியின் நிமித்தம் பேருந்தில் பயணிப்பவன். அரசுப்பேருந்துதான். அதனால் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களை நன்கு அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். அவ்வப்போது அவர்களிடம் பேச்சு கொடுக்கும் போது அவர்கள் கூறியது

    தற்போது அடிக்கடி உயர்த்தப்படும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத்துறை மிகுட்ட நட்டத்தில் செயல்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதன் பலன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மீது விழுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் கலெக்சன் காட்டவேண்டுமாம். அதே வேளையில் டீசல் சிக்கனம் முக்கியமாம். இது போன்ற கட்டுபாடுகள் ஏராளம். கிளைமேலாளரின் இந்த கட்டுபாடுகளை பின்பற்றாமல் போகும் போது அவர்களுக்கான தண்டனை ஒரு நாள் வேலையில்லை. சும்மா பனிமனையில் அமர்ந்திருக்க வேண்டுமாம். அதனால் என்ன அன்றைய வருமானம் வருமே என்று சிலர் கேட்கலாம். ஆனால் பணிபுரியும் நாட்களில் பேட்டாவாக பெறும் தொகை அவர்களின் ஏற்கனவே திட்டமிட்ட செலவுகளுக்குக் காத்திருப்பதால் பேட்டாவின் இழப்பு பணியாளர்களுக்கும் பெரும் இழப்பாக இருக்கிறது. இதனால் மேலாளரின் கட்டளைக்கு பணிந்து படிந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்த இடுகையில் கூறப்பட்டது போன்று நடுஇரவில் இவர்களின் பணி தொடங்குகிறது. தங்களின் பணியினை மேற்கொள்ள குறிப்பிட்ட பணிமனைக்கு நடுயாமத்தில் கவனிக்க நடுயாமத்தில் செல்லவேண்டும் அதுவும் வாகன போக்குவரத்தற்ற வேளையில். லாரியின் மூலம் (லிப்ட் கேட்டுதான்)செல்ல வேண்டிநிலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்லவேண்டும். அதாவது ஒருவர் இரவு 2 மணிக்கு பேருந்தை எடுக்கவேண்டும் என்றால் அவர் பணிமனைக்கு 12,30க்கே செல்லவேண்டும். அதன் பின் அவர்க்கு கொடுக்கப்டும் டிக்கட் பரிசோத்துக் கொண்டும் ஓட்டுநர் பேருந்தை இயக்கி பார்த்து சோதித்து கொள்ளவேண்டும். இதற்கு எப்படியும் ஒரு மணிநேரம் ஆகிவிடும். பின்பு அவர் பேருந்து நிலையத்திற்கு எடுத்து வரவேண்டும். அதே போன்று பணி முடிந்த பின்பும் வண்டியை ஒப்படைக்க, கொண்டுவந்த பணத்தை ஒப்படைக்க என்று மேலும் ஒரு மணிநேரம் அதிகமாக ஏற்படும். ஆக போக்குவரத்துப் பணியாளருக்கு அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்திற்கு மேலாக இரண்டு அல்லது மூன்று மணிநேரம் அதிகமாக உழைக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் வேலை ஒரு நாள் இரவு ஒரு மணிக்கு எழுந்திருக்கவேண்டும் மறுநாள் காலை 8 மணிவரை தூங்கலாம் என்ற ஒரு ஓழுங்கற்ற பணிசூழல். இவர்களுக்கு விடுமுறை என்பதும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. வீட்டில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் குறிப்பிட் நேரத்திற்கு வண்டியை எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம். இப்படி ஓடும் இவர்களைப்பற்றி பொது மக்களிடம் நல்ல பெயர் இல்லை. ஆங்காங்கே ஒரு சிலர் செய்யும் தவறு ஓட்டுமொத்த பணியாளர்கள் மீது திணிக்கப்படுகிறது. இப்படி இவர்களின் பணிசூழல் பற்றி எழுதி கொண்டே போகலாம்.

    நடத்துநரை புரிந்து கொண்டு அவர்களிடம் உரையாற்றினால் போதும் அவர்கள் உங்களை மீது அன்பைப் பொழிவார்கள் என்பதற்கு என் அனுபவத்திலிருந்து சின்ன டிப்ஸ். நடத்துநரை சிநேகிதத்துடன் பார்த்து சிரித்து வையுங்கள். ஒரு, இரண்டு நாள்தான். சில்லறைப் பாக்கியா? நாளை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள். அவர் உடனடியாக உங்களுக்கு சில்லறை கொடுப்பார்.

    நமக்கு எல்லாருக்கும் அரசு வேலை என்பது எதிர்பார்ப்பு ஆனால் அரசு ஊழியர்கள் மீது வெறுப்பு.

  23. 1)நன்றி தோழர் வாகை அவர்களுக்கு-2) முதல்வர், துணை முதல்வர், இணை முதல்வர்(மதுரை), அய்யா, சின்ன அய்யா, அம்மா, இப்படி யாரேனும் ஒருவர் படம் போட்ட லெட்டர் பேடில் ஓட்டுனர்- நடத்துனரைப்பற்றி ஒரு புகார் வந்துவிட்டால் போதும் சம்பந்தப் பட்டவரை விசாரிக்காமலேயே லயனை விட்டு இறக்கிவிடுவது, தலைமையகம் சென்று பொதுமேலாளரைப் பார்த்துவா என்பது, அரசியல் அழுத்தம் சற்று அதிகமாக இருந்தால் உடனே தற்காலிக வேலைநீக்கம் இதெல்லாம் யாருக்கு தெரியும்.  இக்கரைக்கு அக்கரை பச்சை என தொழில் ரீதியாக தொழிலாளர்கள் பிளவுபட்டு இருப்பது, முறைசாரா தொழிலாளர்களை தலைமை தாங்க ஆளில்லாமல் இருப்பது இவையே புதிய பொருளாதாரம் ரவுண்டுகட்டி தொழிலாளர் வர்க்கத்தைத் தாக்க போதுமானதாக உள்ளது.  இரண்டு நாளாக ஊடகங்களில் பாருங்கள் ஐ பி எல் வியாபாரத்தில் 20000 கோடி ஊழல்.  ஒரே தீர்வு ஒருவர் ராஜினாமா செய்தால் போதும்.  கேலிக்கூத்திற்கு உதாரணம் இதைவிட வேறு வேண்டுமா?  தொழிலாளர் வர்க்கம் தொழிலைக்கடந்து ஒன்று படுவதே தீர்விற்கு வழி, 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க