தோழரொருவரின் மகள் பிளஸ் 2 தேர்வு எழுதியதை விசாரிக்கும் போது இந்த ஆண்டில், அறிவியல் பாடங்களின் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கவலைப்படுவதைத் தெரிவித்தார். பத்திரிகைகளிலும் அப்படியே செய்திகள் வந்தன. தேர்வு குறித்த கவலைகள், அடி வயிற்றைப் பற்றிக் கொள்ளும் பதட்டம், விடுமுறையின் இனிய காத்திருப்பு எல்லாம் தாண்டித்தானே வந்திருப்போம். பாழாய்ப் போன நமது கல்வி அமைப்பை சிந்திக்கையில் ஒரிரு வருடங்களுக்கு முன்னர் ஒரு தோழரோடு தேர்வில் காப்பி அடிப்பது குறித்து நடந்த காரசாரமான விவாதம் நினைவுக்கு வந்தது. அப்படியே கொஞ்சம் சைக்கிளை ரிவர்சில் சுற்றி கடந்த காலத்திற்குச் சென்று பார்ப்போம்…..
_____________________________________________________
பத்தாவது வகுப்பில் காப்பி அடித்த கதை!
தந்தை அரசு அதிகாரியாக பணியாற்றியதால் தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்து படித்த கதையில் இப்போது நேரே பத்தாவது வகுப்பிற்கு போய்விடலாம். ஒன்பதாவது வகுப்பில் எனது விடலைப்பருவ சேட்டைகள் அதிகமடைந்து விடுமுறையில் வீட்டில் பணம் எடுத்துக் கொண்டு பத்து நாட்கள் ஊர்சுற்றி விட்டு பணம் தீர்ந்த பிறகு வீடு திரும்பினேன். இந்தக் குழப்பத்தில் பத்தாவது வகுப்பின் ஒரிரு மாதங்கள் முடிந்து விட்டன.
அது கிராமங்கள் சூழப்பட்ட ஒரு சிறு நகரம் அல்லது பெரிய கிராமம். என் உடன் பிறந்தோர் எல்லாம் அந்த ஊரின் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். நான் மட்டும் சற்று தாமதமாக பத்தாவதில் சேர்ந்தேன். சுற்றுப்பட்டு கிராமங்களிலிருந்து தினுசு தினுசாக மாணவர்கள். ஒரே ஒரு மாணவி. நான் பின்னாடி பெஞ்சில் ஐக்யமானேன். பையன் இனியாவது ஒழுங்காகப் படிக்க வேண்டுமென்று அப்பாவின் முடிவுப்படி கணக்கு, ஆங்கிலத்துக்கு டியூஷன்.
மற்றபடி பள்ளியில் படித்ததை விட ஊர் சுற்றியதுதான் அதிகம். சுற்று வட்டாரத்தின் எல்லா ஓட்டல்களுக்கும் படையெடுத்துப் போய் உணவு வகைகள் தீரும் வரை சாப்பிடுவது, அருகாமை கானக அருவிக்கு சென்று மீன் பிடித்து சுட்டு சாப்பிடுவது, பம்பு செட்டில் மணிக்கணக்கில் குளிப்பது, மிச்ச நேரம் எல்லா வகை விளையாட்டுக்களையும் விளையாடுவது என்றபடி சிறப்பாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் வில்லன் போல இறுதித் தேர்வு வந்தது. கொஞ்சம் பயமும் வந்தது.
அக்காவும் தம்பியும் அப்துல் கலாம் டைப் மாணவர்கள். அதாவது ஒழுங்காக படிப்பவர்கள். தங்கை கொஞ்சம் அய்யோ பாவம். நான் வீட்டீல் ஏற்கனவே ரவுடி என்று பேர் வாங்கியிருந்ததால் படிப்பு குறித்து நானோ மற்றவர்களோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. முக்கியமாக என்னைப் போல வகுப்பில் பலர் இருந்ததால் தெம்பாகத்தான் இருந்தேன். என்ன, அவர்களுக்கு நடப்பதுதான் எனக்கும் நடக்கும். இருந்தாலும் இறுதித் தேர்வில் ஃபெயிலாகி விட்டால்……?
வேலையில்லாமல் இருந்த முன்னாள் மாணவர்கள் தேர்வில் பாஸாவதற்குரிய எல்லா ‘வழி’களையும் சொல்லிக் கொடுத்து துணிவூட்டினார்கள். எங்கள் கடைசி பெஞ்ச் அணி கூட்டம் கூடி யோசித்ததில் ஒவ்வொருவரது பலவீனமும் தெரிய வந்தது. கணக்கு, ஆங்கிலம் டியூஷனால் ஓகே. மற்ற பாடங்களுக்கு என்ன செய்வது? இருந்த ஒரே வழி பிட்டடிப்பது அதாவது காப்பியடிப்பது. பழைய வினாத்தாள்கள், முக்கிய பாடங்கள், சூத்திரங்கள், எல்லாம் வைத்து எழுத வேண்டியதை முடிவு செய்து விட்டோம்.
அப்போது நாங்கள் அக்ரகாரத் தெருவில் குடியிருந்தோம். அன்றே பார்ப்பனர்கள் சென்னை, டெல்லி என்று சென்றுவிட்டதால் பார்ப்பனரல்லாதாருக்கும் அதுவும் அரசு அதிகாரிகள் என்றால் கண்டிப்பாக வீடு வாடகைக்கு கிடைக்கும். அக்ரகாரத்திற்கேயுரிய இரண்டு தெருக்களை இணைக்கும் நீண்ட வீடு. கடைசி வாரத்தில் தீவிரமாக படிக்கிறேன் பேர்வழியாக புழக்கடை முற்றத்தில் புத்தகங்களுடன் பல மணிநேரம் முடங்கிக் கிடப்பேன். வீட்டிலோ பையன் தீவிரமாக படிக்கிறான் என்று நினைக்க நானோ அங்கு தீவிரமாக எழுதிக் குவித்தேன். சின்ன சின்ன பேப்பரில் இடைவெளியில்லாமல் ஒரு முழுக் கட்டுரையையும் திணிப்பது பேப்பரில் சிலை வடிப்பது போல. அல்லது அரிசியில் குறளையெல்லாம் எழுதி பெயர் வாங்குகிறார்களே அப்படி குறுகிய இடத்தில் பெருகிய வார்த்தைகளை குட்டி குட்டியாய் வடிக்கும் கலை என்றும் சொல்லலாம்.
மற்ற மாணவர்கள் எவ்வளவு படித்தாய் என்று வினவும் போது எங்கள் கடைசி பெஞ்ச் மட்டும் எவ்வளவு எழுதினாய் என்று அக்கறையுடன் விசாரிப்போம். ஆரம்பத்தில் ஆங்கிலம், கணக்கிற்கு பிட்டுக்கள் வேண்டாமென்று முடிவெடுத்திருந்தாலும் பின்னர் கொள்கையை மாற்றிக் கொண்டோம். காப்பி அடிப்பது என்று முடிவான பிறகு சில பாடங்களை மட்டும் ஒதுக்குவது நல்லதல்ல என்பதோடு, உருப்போட்ட ஆங்கிலப் பாடங்களைக் கூட காப்பி அடித்து எழுதுவது தனி சுகமாயிற்றே.
ஆவேசமாக எழுதியதாலோ என்னவோ கிட்டத்தட்ட முழுப் புத்தகத்தையும் கவர் பண்ணியதில் பிட்டுக்கள் மலையாக குவிந்து விட்டன. அவசரக் கூட்டம் கூடியது. அதில் ஆய்வு செய்து தீர்வு கண்டோம். அப்போது பேண்ட் இல்லை ட்ராயர்தான். ட்ராயர், சட்டையின் கீழ் தையல்களை பிரித்து குட்டி குட்டி லாக்கர்களை உருவாக்கினோம். அப்புறம் உடல் பாகங்களில் எங்கே என்னென்ன பிட் இருக்கிறது என்ற மேப் அல்லது மாஸ்டர் பிட் தயாரித்தோம். பிறகு எது எங்கே என்று குழம்பி விடக்கூடாதல்லவா. இனி தேர்வுக்கு செல்லலாம்.
தமிழ் முதல் தேர்வில் பிரச்சினையில்லை. ஆங்கில முதல் தேர்வில் அநேக கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் எழுதிய பிட்டுக்கள் வீணாகக் கூடாது என்று பார்த்தே எழுதினேன். வினாத் தாளையும், விடைத் தாளையும் பிரிக்கும் ஒரு மைக்ரோ செண்டி மீட்டரின் இடைவெளியில் பிட்டுக்களைப் பார்த்து எழுதவேண்டும். எழுதிக் கொண்டிருந்த போது தேர்வறை ஆசிரியர் என் மேசையருகே குனிந்து ஒரு பிட்டுப் பேப்பரை எடுத்து என்னிடம் நீட்டியவாறு நோக்கினார்.
முதலிலேயே சிக்கிவிட்டேன் என்ற அதிர்ச்சியில் உறைந்து அவர் முகம் பார்க்க அவரோ, ” இது உன்னுடையதா” என்று கேட்டவாறு கொடுத்து விட்டு போய்விட்டார். தெய்வமே…………..
ஆனால் என்னுடைய பிட்டை கீழே போடுமளவு நான் ஒன்றும் முட்டாளல்ல. எவ்வளவு ஒத்திகைகள், பிரயத்தனங்கள்? அது யாருடையது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த தெய்வம் அதைக்கூட பொறுப்பாக எடுத்து நீட்டியதை இப்போது நினைத்தாலும் பூரிக்கிறது. சரி நமக்கு இவ்வளவு வரவேற்பா என்று அடுத்த அடுத்த தேர்வுகளுக்கு உற்சாகத்துடன் தயாரானோம்.
தமிழ், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு பிட்டுக்கள் பெரிய அளவு பயன்படாது. இலக்கணம், அட்டவணைப் பொருத்துதல், கோடிட்ட இடங்களைப் நிரப்புதல் இப்படி சில்லறைத் தொல்லைகள். அதற்கு முன்னாள் மாணவர்கள் கை கொடுத்தார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் வினாத் தாள் எப்படியோ வெளியே சென்று விடும். காவலுக்கு நிற்கும் காவலர்களை சில அண்ணன்கள் தேநீர்க்கடைக்கு அழைத்துச் செல்ல மற்ற அண்ணன்கள் காம்பவுண்டிற்கு வெளியே நின்று பதிலை கத்துவார்கள். எல்லாம் ஒரு வார்த்தை பதில்தானே. இருப்பினும் நாங்கள் ஒன்ஸ்மோர் கேட்க நினைக்கும்போது அவர்களே அதை இரண்டு முறை ரிப்பீட்டுவார்கள்.
இப்படியாக இலக்கணம் ஒழிந்தது. அடுத்த சனியன் அறிவியல். இதில் என்ன பிரச்சினை என்றால் என்னிடமிருக்கும் பிட்டுக்களுக்கு பொருத்தமான கேள்வி எது என்றே எனக்குத் தெரியாது. முதல் அரை மணிநேரத்தில் திணறிவிட்டேன். அப்புறம் ஆசிரியர் பின்னோக்கி உலவும் நேரத்தில் கேள்வித் தாள்களை மாற்றிக் கொண்டு பதில்களை அறிவாளி மாணவர்களின் உதவியுடன் கண்டு பிடித்தேன். வரலாறு இந்த அளவுக்கு மோசமில்லை. அதில் மட்டும்தான் காப்பியடிக்கவில்லை என்ற அளவுக்கு அந்த பாடத்தில் காதல் இருந்தது. இன்றைய என் நிலமைக்கு இப்படி ஒரு குருத்து அன்றே இருந்திருக்குமோ?
ஒரு வழியாக தேர்வுகள் முடிந்து பிட்டடித்த அனுபவங்களை பரிமாறிக் கொண்டு எப்படியும் பாஸாகிவிடுவோம் என்று முடிவு செய்தோம். விடுமுறையைக் கொண்டாடி வந்த போது அப்பாவுக்கு ஒரு மாவட்டத் தலைநகருக்கு மாற்றல் வந்தது. இந்த ஊரை விட்டு வெளியேறும் போது ஆங்கிலம் எடுத்த ஆசிரியர் என்னைப் பற்றி சொன்ன மதிப்பீடை நினைவு கூரவேண்டும். ” தம்பி இங்க வரும்போது பால் மாதிரி சுத்தமாக வந்த. இப்ப கள் மாதிரி கெட்டுப் போயிட்ட”
அப்புறம் மாலை முரசிலோ, தினத்தந்தியிலோ முடிவுகள் வர எனது எண்ணும் இருந்தது. ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று பெரிய த்ரில் இல்லை. கடைசி பெஞ்சு முழுவதும் வெற்றி பெற்றனர். ஆனால் மதிப்பெண்கள் மட்டும் நிறைவாக இல்லை. எனக்கு 338 கிடைத்தது. சரி, பரவாயில்லை ஓசியில் இதுவாவது கிடைத்ததே என்று நார்மலாகி விட்டேன். பெற்றோருக்கு சற்று வருத்தம்தான். அக்கா, தம்பிக்கு ரவுடியை கிண்டலடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. இருந்தாலும் பயம் காரணமாகவோ, நல்ல எண்ணத்தாலோ அவர்களும் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
_____________________________________________
+2வில் படித்து வெற்றி பெற்ற கதை!
நகரின் புகழ் பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2. அறிவியல், கணக்குக்கு பெயர் பெற்ற குரூப் 1, 2இல் சேர்க்கத்தான் தந்தை விரும்பினார். என் அக்கா நான் பிட்டடித்த அதே பள்ளியில் பிளஸ் 2 முதல் குரூப்பில், தமிழ்வழிக் கல்வியில் 945 மதிப்பெண்கள் வாங்கி மெரிட்டிலேயே அரசு பொறியியல் கல்லூரி சென்று விட்டாள். மகளைப் போன்று மகனும் அப்படி செல்ல வேண்டுமென்பது தந்தையின் விருப்பம். அறிவியலின் கேள்வித் தாளையே புரிந்து கொள்ள முடியாத பாவத்தில் இருந்த நான் குரூப் 1 என்ற கொடுமையை எப்படி சமாளிப்பது? நான் மூன்றாவதோ இல்லை நாலாவதோ இல்லை இருப்பதிலேயே இழிவாகவோ கருதப்படும் வணிகவியல் – வரலாறு – பொருளாதாரம் எனும் அவியல் குரூப்பை விரும்பினேன். உண்மையில் வரலாறுதான் எனக்கு பிடித்த பாடம். ஆனால் என் தந்தையோ அப்படியே பி.காம், சி.ஏ செல்லலாம் என்று எண்ணினாரோ என்னமோ எனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். நானும் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தேன்.
எனது தந்தை எங்கள் குடும்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு படித்த முதல் பட்டதாரி. அவருக்காக எங்கள் பாட்டி பட்ட கஷ்டங்கள், கதைகள் எல்லாம் மனப்பாடமாகும் அளவுக்கு கேட்டிருந்தோம். “என் தலையை அடகு வைத்தாவது உங்களை படிக்க வைப்பேன்” இதுதான் அப்பா அடிக்கடி சொல்லும் குடும்ப முழக்கம். அதிலும் எனக்காகத்தான் நிறைய மெனக்கெட்டார். சில புகழ் பெற்ற விடுதிப் பள்ளிகளிலெல்லாம் விட்டுப் பார்த்தார். ஆனாலும் எனக்கு சரஸ்வதி கடாட்சம் ஏனோ கிடைக்கவில்லை.
பிளஸ் 2வில் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன என்றாலும் நேரே இறுதித் தேர்வுக்கு சென்று விடலாம். அரையாண்டு முடிந்து மூன்று ரிவிஷன் டெஸ்ட்டுகள் நடந்தன. மூன்றிலும் எல்லா பாடத்திலும் வேண்டுமென்றே ஃபெயிலானேன். சும்மா இப்படி பயங்காட்டி எழுதவைக்கும் அந்தத் தேர்வுகள் எனது சுயமரியாதையை இழிவுபடுத்துவதாக எண்ணம். மற்றபடி அப்போது நான் கடைசி பெஞ்ச், வகுப்பு லீடர் என்றெல்லாம் ஆதிக்கம் செய்ததோடு கொஞ்சம் நன்றாக படிக்கும் மாணவன் எனுமளவுக்கு முன்னேறியிருந்தேன். அரையாண்டு ரேங்கிலெல்லாம் முதல் பத்துக்குள் வந்த்தாக ஞாபகம். அதுவே பெரிய விசயம்தானே.
தேர்வுக்கு முந்தைய மாதம் தீடிரென்று ஒரு பல்பு மூளையில் பிரகாசிக்க இப்போதாவது கொஞ்சம் தீவிரமாகப் படிப்போமே என்று இறங்கினேன். பத்தாவதுக்கு பிட்டடித்தது போல அமைந்த வீரர் குழாம் இங்கில்லை. பலரும் அப்துல்கலாம் டைப் மாணவர்கள்தான். அந்தப் பள்ளியும் மாவட்டத்தில் பிரபலமானது என்பதால் சிறுநகர சண்டித்தனங்கள் இங்கே எடுபட முடியாது.
எப்படியோ வீட்டு முற்றத்தில் ஒரு மாதத்திற்கான திட்டத்தோடு படித்தேன். படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். அப்போது அப்பாவும் உடன்பிறந்தோரும் வேறு வேறு ஊர்களில். நானும் அம்மாவும்தான். அம்மா எனக்காக இரவு தூங்கிக் கொண்டிருந்த நேரத்திலும் திடீரென்று விழித்து தேநீர் போட்டுக் கொடுப்பாள். அம்மாவைப் பற்றியும் இந்த மகளிர் தினத்திற்காக “கம்யூனிஸ்ட்டுகளும் அம்மாக்களும்” என்ற தலைப்பில் முக்கால்வாசி எழுதி அப்படியே நிற்கிறது. அடுத்த வருடம் வெளியிட வாய்ப்பு வரலாம். அதனால் இங்கே அம்மாவுக்கு பெரிய இடமில்லை.
நானே இப்படி என்றால் அப்துல் கலாம் டைப் மாணவர்கள் எல்லாம் எவ்வளவு தீவிரமாக படித்துக் கொண்டிருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனது நண்பன் ஒருவன் யாரெல்லாம் எப்படி எவ்வளவு படிக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வான். கடைசியில் தேர்வு வந்தது.
எங்கள் பிரிவு தமிழ் வழிக் கல்வியில் வருகிறது. எல்லோரும் பள்ளிப்படிப்பை தமிழில் படித்து வந்தவர்கள்தான். இதனால் எல்லாரும் பயந்த பாடம் ஆங்கிலம். மற்ற பாடங்களையெல்லாம் நம்பிக்கையோடு படித்தவர்கள் கூட ஆங்கிலத்திற்கு வெகுவாக அஞ்சினார்கள். முக்கியமாக இரண்டாம் தாளில் உள்ள இலக்கணப் பிரிவு. என் வரலாற்றில் நல்ல ஆசிரியர்கள் இருந்தார்களோ என்னமோ எனக்கு ஆங்கில இலக்கணம் எப்படியோ உள்ளே சென்று விட்டது. தேர்வுக்கு முந்தைய நாட்களில் சில மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நம்பிக்கை ஊட்டினேன். இருப்பினும் அன்று மட்டும் எனது விடைத்தாளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சிலர் கோர நானும் ஏற்றுக் கொண்டேன்.
அன்றைக்கு ஒருவரிக் கேள்விகளை எழுதி முடித்த பிறகு எனது விடைத்தாள் நானிருந்த அறையில் சுற்றுப் பிரயாணம் செய்து கடைசி அரை மணிநேரத்திற்கு முன்னர் என்னிடம் திரும்பியது. அது வந்த ஐந்து நிமிடங்களுக்குள் பறக்கும்படை என்ற வில்லன்கள் வந்து கழுகு போல சுற்றி வந்தார்கள். என்னைப் பார்த்து எழுதிய மாணவன் ஒருவன் அவனுக்குப் பின்னால் உள்ள மாணவனுக்கு தாளைக் கொடுத்திருந்தான். இருவரும் அந்த வில்லன்களிடம் சிக்கிவிட்டார்கள்.
பிறகென்ன. இருவரும் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களது பிளஸ் 2 வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் வரை அவர்கள் தேர்வெழுதமுடியாது என்று ஆனதாக நினைவு. அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போனோம். அன்றைக்கு அந்த வில்லன்கள் சற்று முன்னாடி வந்திருந்தால் நான் உள்ளிட்டு பலரும் மாட்டியிருப்போம். பிறகு அந்த மாணவர்கள் எங்கள் நினைவுகளை விட்டு அகன்று போனார்கள். பின்னாடி அதில் ஒருவன் எல்லாப்பாதுகாப்பு படையில் இருப்பதாக கேள்விப்பட்டு ஆறுதலடைந்தோம்.
பரிட்சை முடிவுகள் வந்தன. எனது நண்பன் ஓடி வந்து ” நீதான் வகுப்பில் முதல் மார்க், 947″ என்றதோடு அப்துல்கலாம் டைப் மாணவர்கள் எவரும் 900த்தை தாண்டவில்லை என்பதால் வருத்தத்தில் இருப்பதாகக் கூறினான். சரி அதுதான் ‘இறைவனின்’ திருவிளையாடல் என்றால் யார் என்ன செய்வது? அப்புறம் அந்த நண்பர்களை தேற்றி விட்டு வீடு திரும்பினேன்.
பத்தாவதில் பிட்டடித்துப் பாஸாகி பன்னிரெண்டாவதில் வகுப்பில் முதலிடமென்றால் என்னால் நம்ப முடியவில்லை. அப்பாவிடம் நான் சொன்ன முதல் விசயம் அக்காவை விட இரண்டு மார்க் அதிகம் என்ற பந்தாதான். அதையே என் தந்தை எல்லோரிடத்திலும் சொல்லிச் சொல்லி திருப்தி அடைந்தார். அடுத்து கல்லூரி வாழ்க்கை.
____________________________________________
கல்லூரியில் கடமைக்காக படித்த கதை!
எங்கள் நகரில் இரண்டு கல்லூரிகள் பிரபலம். ஒன்று நன்றாகப் படிப்பவர்களின் கல்லூரி என்றால் மற்றது சுமாராகப் படிக்கும் சாதாரண மாணவர்களின் கல்லூரி. எல்லோரும் இரண்டிலும் விண்ணப்பித்தோம். எனக்கு மட்டும் அப்துல்கலாம் டைப் கல்லூரியில் இடம் கிடைத்தது. மற்ற வகுப்புத் தோழர்கள் சாதா கல்லூரிக்கு சென்றார்கள். அவர்களை பிரிய நேர்ந்தது இன்றைக்கும் எனக்கு வருத்தமே. மற்றபடி புதிய கல்லூரியில் மாணவிகளும் வருகிறார்கள் என்பதுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.
அந்த ஆறுதலும் நேரில் பார்த்த சில நாட்களில் கரைந்து போனது. மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும் கீ கொடுக்கப்பட்ட பொம்மைகளைப் போல வந்து போனார்கள். பரபரப்போ, கலாட்டாவோ, குதூகலமா எதுவும் இல்லை. கல்லூரிக் காலங்களில் எனது அரசியல் ஆர்வம் முளைவிட்டு எண்ணத்தை ஆக்கிரமித்திருந்த காலம். சமூகப்பணிகளை முடித்து விட்டு கடனே என்று கல்லூரி சென்று வந்தேன். அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த சைக்கிள் ஊரைச் சுற்றுவதற்கு கை கொடுத்தது.
தமிழ் வழியில் கற்றிருந்த எனக்கு அதாவது ” உள்வருவன பற்று, வெளிச்செல்வன வரவு ” என்று புரிந்து, கணக்குப் பதிவியலில் – அதாங்க அக்கவுண்டன்சி – கிட்டத்தட்ட சென்டம் வாங்கியிருந்த எனக்கு ஆங்கிலம் புரிபடவில்லை. இதில் ஏதோ சுக்லாவோ, பக்லாவோ அவருடைய தலையணை சைஸ் புத்தகத்தை தினசரி சைக்கிளில் சுமந்து செல்லவேண்டும். உடற்பயிற்சி, அம்மாவின் வக்கனையான சாப்பாடு, நீண்ட சைக்கிள் பயணம் எல்லாம் சேர்ந்து கண்களைச் செருகும். திறந்தபடியே தூங்கும் கலையைக் கற்றுக் கொண்டேன். அந்தப் பேராசிரியரும் அதை தெரிந்தே அனுமதித்திருப்பாரோ?
பொருளாதாரம், வணிகவியல் பேராசிரியர்களெல்லாம் தாங்கள் ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்ற அளவில் மட்டும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் அது ஆங்கிலத்திலும், பாடத்திலும் தரமில்லாத மொக்கைகள் என்று தெரிகிறது. சரி எப்படியோ மூன்று வருடம் குப்பை கொட்டி இறுதி பருவத் தேர்வுக்கு வந்துவிட்டேன்.
இடையில் சாதாரண மாணவர்கள் படிக்கும் கல்லூரி நண்பர்களை அடிக்கடி சந்தித்து அளவளாவுவேன். அப்போதுதான் அங்கே மட்டுமல்ல தமிழகத்தில் பல அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில வழியில் படித்து விட்டு தமிழில் தேர்வு எழுதும் விசயம் அறிந்தோம். இதில் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்காது என்றாலும் முதலுக்கு மோசமில்லை. ஆகவே எல்லாத் தியரி பேப்பர்களையும் தமிழில்தான் எழுதி சுமாராக மதிப்பெண் பெற்று இறுதி ஆண்டு வந்தடைந்தோம்.
அப்போது நானும், எனது நண்பனும் என்ன செய்வோமென்றால் பரிட்சைக்கு முந்தைய நாட்களில் அநேக தடவை முதல்நாளில் அந்த கோனார் நோட்ஸ் போன்ற புத்தகத்தை வாங்கி இரண்டாக கிழித்து மாற்றி மாற்றி படிப்போம். அப்துல்கலாம் டைப் மாணவர்கள் இதை கேலியுடன் பார்த்தாலும் யாரும் பயம் காரணமாக நேரில் காட்டுவதில்லை.
இறுதியாண்டு தேர்வுகளில் அதையே கடைபிடித்தோம். எனினும் புள்ளியியல், கணக்குப் பதிவியல் இரண்டுக்கும் தமிழ் உதவாது. அதை மட்டும் முன் பக்கம் இருந்த அப்துல் கலாம் டைப் மாணவனைப் பார்த்து எழுதினேன். அவன் இப்போது கண்டிப்பாக சி.ஏ படித்துவிட்டு ஏதோ ஒரு அம்பானி கம்பெனியில் கள்ளக்கணக்கு எழுதிக் கொண்டிருப்பான் என்பது மட்டும் நிச்சயம். கடைசியில் புள்ளியலில் மட்டும் ஃபெயில். அதை மட்டும் அடுத்த ஆண்டு டியூஷன் சென்று முடித்தேன். இப்படியாக பி.காம் முடிந்தது.
அப்பறும் பொழுது போகாமல் அஞ்சல் வழிக் கல்வியல் இரண்டு எம்.ஏ படித்து ஒன்றில் தேர்வானேன். அதுவும் எனக்குப் பிடித்த வரலாறும், அரசியல் விஞ்ஞானமும். வரலாற்று பாடங்களையெல்லாம் முன்னதாகவே நூலகத்தில் படித்து முடித்திருந்த படியால் தேர்வில் சுவாரசியமில்லை. இருந்தும் ரசிய வரலாறோ இல்லை ஐரோப்பிய வரலாறோ ஏதோ ஒரு பாடத்தில் மிக நன்றாக எழுதியும் பெயிலாக்கியிருந்தார்கள். இந்த பாடத்தில் நான் டியூஷன் எடுத்த நண்பன் பாசாகியதுதான் கேலிக்கூத்து. இதுதான் அஞ்சல் வழிக்கல்வியின் இலட்சணம். இரண்டாவது எம்.ஏவிற்காக அரசியல் விஞ்ஞானம் படிக்கும் போது தந்தை ஒரு பட்டயப் படிப்பிற்காக சென்னைக்கு அனுப்பவதாக கூறினார். அது படித்தால் வெளிநாட்டிலெல்லாம் வேலை வாய்ப்பு குவியுமாம்.
அப்பாவின் ஆசைக்கு தலையாட்டிய நானோ அரசியல் தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாக சென்னைக்கு விரும்பி வந்தேன். வந்து ம.க.இ.கவில் தோழராகி உண்மையான கல்வி, அறிவு, வாழ்க்கையை இன்றும் தொடர்கிறேன். இன்றுவரை எனது டிகிரி சான்றிதழ்களை வாங்கவில்லை. அதற்கான தேவையுமில்லை. மற்றபடி எனக்கே தெரியாமல் நடக்கும் உறவினர் திருமணங்களில் எனது பெயர் பி.காம், எம்.ஏ என்று பின்னிணைப்புகளுடன் வருவதாக தம்பி கூறுவான். அதைத் தவிர எனது வரலாற்றில் இந்த மொக்கை டிகிரிகளுக்கு மதிப்பேதுமில்லை.
மார்க்சியத்தை அறிந்த பின்தான் எது கல்வி என்பதையும், சமகால வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் அதன் வியப்பூட்டும் பலத்தையும், இளமைத் துடிப்பையும் அனுபவித்து கற்றிருக்கிறேன். அப்போது ரசியாவில் போலி சோசலிசம் உடைந்து கம்யூனிசம் என்றாலே தோல்வி மனப்பான்மை என்று மற்றவர்கள் எக்காளமிட்ட காலம். அக்காலத்தில் மார்க்சியத்தை தோழர்களின் உதவியால் படித்ததும், அதையே நடைமுறையில் மாற்று அரசியல் கொண்டோரிடம் விவாதித்து செழுமைப் படுத்தியதும் என்னைப் பொறுத்தவரை முக்கியமான காலகட்டம். அது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, பல தோழர்களுக்கும் பொருந்தும்.
____________________________________________
காப்பி அடிப்பதை எப்படி நிறுத்துவது?
சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த தோழர் படித்து முடித்த கையோடு ஒரு கல்லூரியில் மாலைநேர பகுதி ஆசிரியராகச் சேர்ந்திருந்தார். தினசரி கல்லூரி அனுபவங்களை தொலை பேசுவார். வினவிலும் அவ்வப்போது பின்னூட்டமிடுவார். ஒரு முறை பேசும் போது ஆங்கிலப் பாடத்திற்காக காப்பி அடித்த இரு மாணவர்களை நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்தாக கூறினார். எனக்கு கடுமையான கோபம். இருவரும் காரசாரமாக விவாதித்தோம்.
அவரைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம், அதை இந்த வயதில்தான் கற்றுக் கொடுக்க வேண்டும், தேவையென்றால் இத்தகைய தண்டனைகள் அவசியம் என்கிறார். என்னைப் பொறுத்தவரை சென்னை நகரில் இருக்கும் அந்தக் கல்லூரியில் ஏழை, நடுத்தர மாணவர்கள் படிக்கிறார்கள். ஆங்கிலத்தை நேர்த்தியுடன் பேசும் பின்புலமற்ற, ஆங்கிலம் என்றாலே தாழ்வு மனப்பான்மைக்குள்ளாகும் அவர்களை அப்படி தண்டிப்பது தவறு. ஆங்கிலம் என்ற வில்லனால் அறிவுக்கூர்மையும், திறமையும் கொண்ட பல மாணவர்கள் தத்தமது துறையில் நீர்த்துப் போயிருப்பதை நேரிலேயே கண்டிருக்கிறேன்.
ஆகவே இந்தப் பின்புலத்தைக் கணக்கில் கொண்டு ஆங்கிலப் பாடத்தை காப்பியடிக்கும் அந்த மாணவர்களை அந்த தோழர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதுதான் எனது வாதம். கடைசிவரை தோழர் அதை ஏற்கவே இல்லை.
சென்னையில் கல்லூரியின் படிக்கட்டுக்களைக் கூட மிதிக்காமல் பல ஆயிரங்களை செலவிட்டால் டிகிரி வாங்க முடியும். அப்படி சிலர் வாங்குவதாக பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன. ஏழை மாணவர்களோ எப்பாடு பட்டாவது படித்து ஒரு வேலை தேட நினைக்கின்றனர். ஆங்கிலம் போன்ற பிரச்சினைக்குரிய பாடங்களில் காப்பி அடிப்பதும் அப்படித்தான்.
இதனால் காப்பி அடிப்பதை நியாயப்படுத்தவில்லை. அதன் பின்புலத்தை மாற்றுவது குறித்தே என் அக்கறை. காப்பி அடிப்பதால் மாணவர்கள் ஒன்றும் கலகக்காரர்களாகி விடுவதில்லை. அவர்களது சமூக அக்கறையையும் அது தீர்மானிப்பதில்லை. காப்பி அடிப்பதின் தேவையும் வர்க்க பின்புலத்தை வைத்து மாறுகின்றன. பொதுவில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை, அவர்களது கல்லூரி வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் சிறு சிறு தண்டனைகள் என்று இருக்கலாம். மற்றபடி மெக்காலே பாணி குமாஸ்தாக்களை பொம்மை போல உருவாக்கும் இந்தப் பாடங்களை படித்தோ, காப்பியடித்தோ பாசானாலும் எந்தப் புண்ணியுமும் இல்லை.
பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் ரிசல்ட் காட்டவேண்டுமென்பதற்காக பார்த்து எழுதுவதை ஏதோ ஒரு முறையில் அனுமதிக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் மாணவர்கள் காப்பி அடிக்கக் கூடாது என்பதை தீவிரமாக அமுல்படுத்தும் போது காப்பி அடிப்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணிதொடர்பான பிரச்சினையாக மாற்றவேண்டும்.
அதாவது மாணவர்களின் தவறுகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குவது. மாணவன் காப்பி அடித்தால் ஆசிரியரின் ஊக்கத்தொகையை குறைப்பது, அவனுக்கு தனி இலவச டியூஷன் எடுப்பது என்று மாற்றினால் நன்றாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை இந்த மொக்கைப் பாடத்திட்டங்களை ஓரிரு மாதங்களுக்கு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பதை உணரவேண்டும். எங்களைக் கேட்டால் மாணவர்களின் வாழ்க்கையில் அரசியல் செயல்பாடுகள் கலந்தால் இந்த காப்பி அடிக்கும் பிரச்சினை மட்டுமல்ல, விடலைப் பருவ பிரச்சினைகள் கூட தீரும் என்று கருதுகிறோம்.
“என்னது மாணவர்களுக்கு அரசியலா” என்பவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களை சந்தித்து தெளிவடையலாம்.
_________________________________________________
பின் குறிப்பு: இதையே ஒரு தொடராக எழுதுமாறு பதிவுலக நண்பர்களைக் கோருகிறோம். எது கல்வி, எது அறிவு, காப்பியடிப்பது, கல்வி முறை, தேர்வுமுறை, ஆங்கிலம் படிப்பதில் உள்ள பிரச்சினைகள் என்று உங்கள் அனுபவத்தோடு எழுதலாம். வாசகர்கள் இங்கேயே விவாதிக்கலாம்.
_______________________________________
தொடர்புடைய பதிவுகள்:
- அனுபவம்: வைகையில் முன்பதிவில்லாமல் ஒரு பயணம் !
- பொட்டை!
- ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி !
- வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள்!
- அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும்
- அழகு – சில குறிப்புக்கள் !