செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ் !!

  25
  25

  vote-012செம்மொழி மாநாடு என்ற பெயரில் 500 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் கருணாநிதி நடத்தும் ஜால்ரா மாநாட்டின் காட்சிகளை பார்த்து தமிழகமே காறித் துப்பி வருகிறது. செம்மொழி மாநாட்டினை அம்பலப்படுத்தியும், கருணாநிதி தமிழுக்கு செய்திருக்கும் துரோகத்தை விளக்கியும் எமது தோழர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் நகரங்கள், கிராமங்கள், பேருந்துகள், ரயில்கள் என்று எல்லா இடமும் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

  இந்த ஜனநாயக உரிமை கூட நமக்கு இல்லை எனும் விதமாக கருணாநிதி அரசு பாசிச வெறியுடன் பல இடங்களில் தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. இது பற்றி எந்த ஊடகமும், செய்தித்தாட்களும் மூச்சு விடவில்லை. தோழர்கள் அது பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தாலும் அவற்றை படிப்பதற்கே பத்திரிகை முதலாளிகள் அச்சப்படுகின்றனர்.

  சென்னை குரோம் பேட்டையை சுவரொட்டிகளால் நிறைத்து தோழர்கள் செய்த பிரச்சாரத்தைக் கண்டு உறுமிய போலீசு, பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை அமைப்பாளர் தோழர் உஷாவையும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் இரு தோழர்களையும் வீடு தேடிக் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கிறது. பல தோழர்களது வீடுகளுக்கு சென்று அவர்கள் இல்லாத காரணத்தினால் அச்சுறுத்தியும் ஆட்டம் போட்டிருக்கிறது.

  விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் நீதிமன்றத்தில் தமிழுக்காக போராடும் வழக்குறைஞர்களை ஆதரித்து சுவரொட்டி ஒட்டியிருக்கின்றனர். அதனால் ஆத்திரமடைந்த போலீசு இரு தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. கடலூரில் இதே காரணத்திற்காக பு.மா.இ.மு அமைப்பாளரான தோழர் பாலு உட்பட இரு தோழர்கள் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

  செம்மொழி மாநாடு நடக்கும் கோவையில் போலீசு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீரமுடன் பகுதி மக்களிடம் துண்டறிக்கை விநியோகித்த மக்கள் கலை இலக்கிய கழக கோவை அமைப்பாளர் தோழர் மணிவண்ண்ணையும் வேறு இரு தோழர்களையும் கோவை போலீசு கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. காங்கேயத்தில் போபால் பிரச்சினைக்காக சுவரொட்டி ஒட்டிய இரு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாநாடு நடக்கும் போது எந்த சுவரொட்டியும் அரசை எதிர்த்து ஒட்டக்கூடாது என்று காங்கேயம் போலீசு அதற்கு ‘ஜனநாயக’ முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறது.

  திருச்சியில் சுமை பணி பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த நான்கு தோழர்கள் ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருவெறும்பூரிலும் தோழர்கள் கைது. திருச்சி நகரமெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மெனக்கெட்டு கிழித்து வருகிறது திருச்சி நகர போலீசு. கோவில்பட்டியில் நான்கு தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விளாத்திகுளத்தில் ஒரு தோழரைக் கைது செய்ய முடியாத போலீசு அவரது ஆட்டோவை கொண்டு சென்று வீட்டாரை அச்சுறுத்தியிருக்கிறது. மதுரையில் இந்த முழக்கங்களை அச்சிடுவதற்கு எந்த அச்சகமும் தயாராக இல்லை.

  இது போக இன்னும் பல இடங்களிலும் தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த விவரங்கள் எமக்கு கிடைக்கவில்லை. செம்மொழி மாநாட்டை எதிர்த்து ஒரு சிறு எதிர்ப்பு கூட வரக்கூடாது என்பதற்காக கருணாநிதியின் காட்டு தர்பார் தொடர்கிறது.

  செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் பாதத்தை நக்கி தமிழத் தொண்டு புரியும் அறிஞர்களுக்கு போட்டியாக வெளியே கருணாநிதியின் நிழலுக்கு கூட ஆபத்து வரக்கூடாது என்று தமிழக போலீசு லத்தித் தொண்டு புரிகிறது.ஆனாலும் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கும் இந்த மக்கள் விரோத ஆடம்பர கேளிக்கையை எமது தோழர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவார்கள். அடக்குமுறைக்கும், கைது, சிறையடைப்புக்கும் அஞ்சமாட்டார்கள்.

  ______________________________________________

  vote-012

  தொடர்புடைய பதிவுகள்

  ______________________________________________

  கருணாநிதி அரசை அம்பலப்படுத்திய எமது முழக்கங்கள் கீழே:

  தமிழால் ஏய்த்து தமிழினத் துரோகத்தால் கொழுத்த கருணாநிதி குடும்பத்தாரின் இல்லத் திருவிழாவே செம்மொழி மாநாடு!!

  கலைஞர் என்பது பெயரல்ல… அது தமிழினத் துரோகத்தின் வரலாறு!
  கலைஞரின் துரோகத்தால் ஈழமே சுடுகாடு
  துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு!…

  பள்ளிகளில் தமிழ் இல்லை
  கல்லூரிகளில் தமிழ் இல்லை
  நீதிமன்றத்தில் தமிழ் இல்லை
  தமிழில் படித்தால் வேலை இல்லை
  தமிழ் கற்ற தமிழனுக்கு திருவோடு –
  உயர் தனிச் செம்மொழிக்கு மாநாடு!
  ***
  அமெரிக்கா பறக்கிறான் ஐ.டி. தமிழன்
  சிங்கப்பூர் குருவியாய் தஞ்சைத் தமிழன்
  துபாயில் துவள்கிறான் துறையூர்த் தமிழன்
  அகதியாய் அலைகிறான் ஈழத்தமிழன்
  உள்ளூர்த் தமிழா … ஊர் ஊராய் ஓடு!..
  உலகத் தமிழா …! கோவையில் கூடு!..
  ***
  விவசாயித் தமிழனுக்குத் தண்ணியில்ல…
  நெசவாளித் தமிழனுக்கு நூல் இல்ல…
  தொழிலாளித் தமிழனுக்கு உரிமையில்ல..
  பட்டதாரித் தமிழனுக்கு வேலையில்ல…
  மாணவத் தமிழனுக்கு கல்வியில்ல…
  மீனவத் தமிழனுக்கு கடல் இல்ல…
  தமிழன் வாழாமல் தமிழ் வாழுமா?
  தண்ணியே இல்லாமல் மீன் வாழுமா?
  ***
  மழலையர் வாயிலிருந்து
  அம்மா அப்பாவை பிடுங்கிவிட்டு
  மம்மி டாடியை ஊட்டியவர் யார்?
  தமிழைப் படிப்பது தரக்குறைவு என்று
  தமிழனையே சிந்திக்கத் தூண்டிய
  தலைமகன் யார்?
  கொள்ளையர் மனம் குளிர
  கோவிந்தராசன் கமிட்டி அமைத்த
  கொற்றவன் யார்?

  ’’தண்ணி’’யையே பிளேடாக்கி
  தமிழச்சிகளின் தாலியறுத்த
  தவப் புதல்வன் யார்?
  உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட
  உண்ணாவிரதமிருந்த வழக்குரைஞர்களை
  உள்ளே தள்ளி அழகு பார்த்த
  காவல் தெய்வம் யார்?
  அவர் தான் கலைஞர்…
  அவ்ர் தா………ன் கலைஞர்!.
  ***
  ஃபோர்டுக்கு சேர நாடு
  சோனிக்கு சோழ நாடு
  கோக்குக்கு பாண்டிய நாடு
  ஹூண்டாய்க்கு தொண்டை நாடு
  நாதியற்ற தமிழனுக்கு
  நாலுநாள் மாநாடு!
  வள்ளலுக்கு வள்ளலாம்
  கலைஞருக்கு ஓ போடு!
  ***
  மம்மி டாடி படிக்கும் நர்சரிகளே!
  மெட்ரிக் படிக்கும் ஸ்டூடண்டுகளே!
  கான்வெண்டில் தமிழ் கற்ற கனிமொழி
  அழைக்கிறார்!
  “கோவைக்கு வெல்கம்!”
  ***
  மக்கள் கலை இலக்கியக் கழகம்.
  விவசாயிகள் விடுதலை முன்னணி.
  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

  ______________________________________________

  மேலும் தொடர்புடைய பதிவுகள்

  சந்தா