privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்பரிதாப பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!

பரிதாப பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!

-

ஆறு மாதகால விசா பெற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்னை  வந்த பார்வதியம்மாளை விமானத்தை விட்டே இறங்க விடாமல் தமிழக போலீசின் உதவியோடு  திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள். இது தொடர்பாக வினவில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி விட்டோம். பார்வதியம்மாள் விவாகரம் தொடர்பாக முதலில் அறிக்கை வெளியிட்ட கருணாநிதி “நள்ளிரவு 12 மணிக்கு தகவல் தெரிந்து விமான நிலையத்தை தொடர்பு கொண்ட போது அவரை திருப்பி அனுப்பி விட்டதாகச் சொன்னார்கள்” என்றார். பின்னர் சட்டமன்றத்தில் இது தொடர்பாகப் பேசிய கருணாநிதி “காலையில் நாளிதழ்களைப் பார்த்தே நான் தெரிந்து கொண்டேன் என்று” மாற்றிப் பேசினார்.

ஆனால் கருணாநிதி ஆதரவு தமிழுணர்வாளர்களோ வைகோவும், நெடுமாறனும் பார்வதியம்மாளை வைத்து தமிழின எழுச்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்ததாக உளவு நிறுவனம் கொடுத்த தகவலின் பேரிலேயே  பார்வதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஆளும் கட்சிக்கு நெருக்கமான திருமா, சுப.வீரபாண்டியன் போன்றோர் மூலம் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் கருணாநிதியிடம் பேசி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.

நெடுமாறன், வைகோ போன்றவர்கள் பார்வதியம்மாளை வைத்து ஆடிய ஐ.பி;எல்- ஆட்டம் தோற்றுப் போக அதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட திருமா, சு,ப. வீரபாண்டியன், கி.வீரமணி போன்றோர் பார்வதியம்மாளை திருப்பி அனுப்ப முன்னர் கடிதம் எழுதிய ஜெயலலிதாவைக் கண்டித்து பெரியார் திடலில் கூட்டம் நடத்தினார்கள்.  தொடர்ந்து கருணாநிதியை நேரில் சந்தித்து வீரமணியும், சு,ப.வீரபாண்டியனும் பார்வதியம்மாளுக்கு சிகிச்சை வேண்டி கோரிக்கை விடுத்தனர். வெளியில் வந்து பேசிய சுப.வீ. “பார்வதியம்மாள் மனுக் கொடுத்தால் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார்”” என்றார்.

இதற்கிடையில் மூத்த வழக்கறிஞர் கருப்பன் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு வழக்கறிஞர் ,”மனுத்தாக்கல் செய்துள்ளவர் பார்வதியம்மாளின் உறவினரோ, அவருக்கு தொடர்பானரவோ கிடையாது, இந்தியரல்லாத ஒருவரின் விசாவை ரத்து செய்யும் உரிமை குடியுரிமை அதிகாரிகளுக்கு உண்டு எனவும், 2003- ல் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே மத்திய அரசு பார்வதியம்மாள் பெயரை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதாகவும், இந்த நடைமுறையை அறியாத மலேஷியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தவறுதலாக விசா கொடுத்துள்ளதாகவும்”  விளக்கமளித்திருக்கிறார்.”

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் “’இந்த ஏழு ஆண்டுகளில் அதாவது பார்வதியம்மாள் வன்னிக்குத் திருபிச் சென்ற 2003- ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை எவ்வளவோ மாற்றங்கள் நடந்து விட்ட நிலையில் தமிழக அரசு தனது நிலையை பரிசீலித்து தனது முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்””” என்று தெரிவித்திருக்கிறது. மறுநாள் 30-04-2010 அன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு வழக்கறிஞர்  ரவீந்திரன் மாநில அரசு கேட்டுக் கொண்டால் மத்திய அரசு பார்வதியம்மாளுக்கு சிகிச்சை தொடர்பாக பரிசீலிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மாநில அரசு வழக்கறிஞர் ராஜாகலிபுல்லா “’பார்வதியம்மாளிடம் இருந்து மனு எதுவும் இன்னும் வரவில்லை. வந்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோரப்படும்”” என்றிருக்கிறார். இந்த அளவில் இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதம்.

வழக்கு – மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கபடிப் போட்டி

ஈழ ஆதரவாளர்களும், தமிழுணர்வாளர்களும் இன்று இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். ஒன்று சுப.வீ, வீரமணி, திருமா தலைமையிலான கருணாநிதிக் கூட்டணி, இன்னொன்று நெடுமாறன் வைகோ, தலைமையிலான ஜெ கூட்டணி. முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் தொடங்கிய இந்தக் கேடுகெட்ட துரோகத்தனம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெ, கருணா என்ற இந்த இரண்டு தமிழின விரோதிகளாலும் குறைந்த பட்ச மனித நேய உதவிகளைக் கூட செய்ய முடியாத இரக்கமற்ற போக்கை ஈழ ஆதரவாளர்கள் கண்டுணரத் தயங்குகிறார்கள்.

2003-ல் பார்வதியம்மாளை அனுமதிக்க மறுத்த ஜெயலலிதா அதற்கு முன்னரும் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதி கோரிய புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத்தலைவர் ஆண்டன் பாலசிங்கத்தையும் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்தவர் என்பதோடு, ஆண்டன் பாலசிங்கமும் கருணாநிதி அரசிடம் இவ்விதமாய் மருத்துவ உதவி வேண்டி கேட்ட போது ஜெயலலிதாவைக் காட்டியே கருணாநிதியும் ஆண்டனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கதைகள் முன்னுதாரணங்களாய் கிடக்கின்றன. சரி 2003-ல் ஜெயலிதா மறுத்தார்; கருணாநிதி ஆட்சிக்கு வந்து ஆட்சியும் முடியப் போகிறதே இந்தக் காலத்திலேனும் அந்த எச்சரிக்கைப் பட்டியலில் இருந்து பார்வதியம்மாள் பெயரை நீக்க முடியாதா? என்ற கேள்விகள் எல்லாம் இருந்த போதும் பார்வதியம்மாள் விவாகரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கபடியாட்டத்தையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசோ’’ 2003-ல் மாநில அரசு கேட்டுக் கொண்டதன் மூலமே விசா மறுத்ததாகவும் மாநில அரசு விரும்பினால் பார்வதியம்மாள் சிகிச்சை தொடர்பான விஷயத்தை மைய அரசு பரிசீலிக்கும்” என்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது. மாநில அரசோ, “’பார்வதியம்மாளிடம் இருந்து கடிதம் வந்தால் மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோருவோம்”” என்று சொல்கிறது. சரி அப்படியானால் ஜெயலலிதா 2003-ல் பார்வதியம்மாளுக்கு கொண்டு வந்த தடையை நீக்க வேண்டியது யார் பொறுப்பு? அந்தத் தடையை நீக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாலேயே மீண்டும் மலேஷியத் தூதரகம் விசா வழங்கிவிடுமா, என்ன?

ஆக ஜெ மத்திய அரசுக்கு மாநில அரசின் சார்பில் செய்த பரிந்துரை ரத்து செய்யப்படாதவரை பாவதியம்மாள் சிகிச்சைக்கு வர சாத்தியமில்லை.  ஆனால் மாநில அரசோ “மனுக்கொடுத்தால் மத்தியா அரசுக்கு அனுப்புவோம், அதாவது நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம், செய்யச் சொல்லி நிர்பந்திக்கவும் மாட்டோம், கடிதமோ, மனுவோ எது வந்தாலும் மத்திய அரசுக்கு அனுப்புவோம்” என்று நரித்தனத்துடன் பேசுகிறது. ஆனால் மத்திய அரசோ “இதில் நாங்கள் செய்ய எதுவும் இல்லை எல்லாம் மாநில அரசின் கையில்தான் இருக்கிறது, அவர்கள்தான் பார்வதியம்மாளை அனுமதிக்க வேண்டாம் என்றார்கள், ஆகவே அவர்கள்தான் இப்போது பார்வதியம்மாள் விவாகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேச வேண்டும்” என்று சொல்கிறது.

பாருங்கள் யார் முதுகில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. வார்த்தைகளில் விளையாடிய இந்த மத்திய மாநில துரோகிகளின் நிலையைப் பார்த்து புரிந்து கொண்ட நீதிமன்றமோ வழக்கை ஒரு மாதம் தள்ளிப் போட்டு விட்டது. அப்பாடா……. ஒரு மாதம் இந்த ஒரு மாதத்தில் ஈழத்து தமிழறிஞர்களை எல்லாம் அழைத்து தனக்கு ஒரு பாராட்டு விழாவும் விருதும் கூட கருணாநிதி வாங்கிவிடுவார். ஆனால் பார்வதியம்மாள் என்ற எண்பது வயதைக் கடந்து விட்ட அந்த தாய்க்கு பக்கவாதம். சரியாக நினைவில்லை.

ஒரு மாதத்தில் அவருக்கு ஏதாவது ஒன்று ஆனால் கருணாநிதி என்ன செய்வார்? பழியைத் தூக்கி அப்படியே ஜெயலிதா மீது போடுவார். திருமா போய் அஞ்சலி செலுத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். ஏதோ ஒரு வார இதழில் தொடர் எழுதுவார். நெடுமாறனும், வைகோவும் கருணாநிதிதான் காரணம் என்று அறிக்கை விடுவார்கள். கடைசி வரை நிம்மதியில்லாத நிலையில் அவர் மரித்துப் போகக் கூடும். மீண்டும் சில காலத்திற்கு நீங்கள் உற்சாகமிழந்த பின் மீண்டும் உங்களின் கபடி ஆட்டத்திற்கு இன்னொரு ஈழத்து இழிச்சவாயன் கிடைப்பான்.

பார்வதியம்மாளின் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

பார்வதியம்மாள் கடிதம் – சில கசப்பான உண்மைகள்!

பார்வதியம்மாள் தொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த (30-04-2010) அன்றே பார்வதியம்மாளிடம் இருந்து கருணாநிதிக்கு கடிதமும் வந்து விட்டது. மனிதம் அறக்கட்டளையின் அமைப்பாளர் அக்னி சுப்பிரமணியன் என்பவர் மூலம் வந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கடிதம் தமிழுணர்வாளர் சுப.வீரபாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுய நினைவு பாதித்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதியம்மாளால் இப்படி ஒரு கடிதத்தை சுய நினைவோடு எப்படி எழுத முடியும்? பார்வதியம்மாள் எழுதியதாகச் சொல்லப்படும் இக்கடிதத்தின் படி விசா விண்ணப்பித்தால் அதற்கான நேர்முகத்திற்கு அவரே செல்வாரா? அவரால் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலுமா? என்பதெல்லாம் இக்கடித்ததின் பின்னால் எழும் கேள்விகள். ஒரு வயதான சுயநினைவு சரியாக இல்லாத அம்மாள் தனது கைப்படக் கடிதம் எழுதவேண்டுமென்றால் இதை விட வக்கிரமும், ஆபாசமும் என்ன இருக்கிறது?

பார்வதியம்மாள் பெற்ற பிள்ளையான விநோதினி எழுதிய கடிதத்தை மறுத்து பார்வதியம்மாளிடமே கடிதம் கேட்கும் மனோபாவம் ஆளும்வர்க்கங்களின் வக்கிர புத்தியா?அல்லது செய்ய முடியாத நிலையை சட்டத்தின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளும் முயற்ச்சியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஆனாலும் பார்வதியம்மாளுக்கு  சிகிச்சையளிக்க மத்திய மாநில அரசுகள் அனுமதித்தால் போதும் என்ற மன நிலையே எல்லோரிடமும் இருக்கிறது.

பார்வதியம்மாள் கடிதம் எழுதுவதற்கு முன்னர் பிரபாகரனின் சகோதரி விநோதினி தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் ஆனால் பார்வதியம்மாள் கைப்பட மட்டுமே கடிதம் வேண்டும் என்று கேட்கவே இப்போது பார்வதியம்மாளின் கைநாட்டில் கடிதத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். பார்வதியம்மாள் சென்னையில் வைத்து திருப்பியனுப்பப்பட்ட போது “’இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவுக்கு வந்ததா?” என்று கேட்ட சுப. வீரபாண்டியன் “சிறிது நேரம் முன்னால் பேசியிருந்தால் கலைஞரிடம் பேசி ஏற்பாடு செய்திருப்பேனே””  என்று அங்கலாய்த்திருக்கிறார்.

இப்போது பார்வதியம்மாள் எழுதிய கடிதம் அவர் கையில்; நெடுமாறனோ, வைகோவோ, ஜெயலலிதாவோ இதில் தலையிட முடியாது. வந்து தடுத்தால் கருணாநிதிக்கு கிடைத்துள்ள துரோகப் பட்டம் அவர்களுக்கும் கிடைக்கும். சுப.வீரபாண்டியனே கலைஞரிடம் பேசி மத்திய அரசுக்கு சம்பிரதாய கடிதம் அல்ல, பார்வதியம்மாளுக்கு சிகிச்சை செய்யும் படியான நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஜெகத்ரட்சகன் நடத்திய வள்ளுவர் கோட்டம் விழாவில் கலந்து கொண்டு பல மணிநேரம் குத்தாட்டம் பார்த்ததால் தனக்கு ஏற்பட்ட முதுவலியை ஏதோ உலகப் பிரச்சனை ரேஞ்சுக்கு ஊதிப் பெருக்கிய கருணாநிதி அடுத்தவர் வலிகளையும் அதுவும் தன்னை விட வயதில் மூத்தவரான ஒரு தாயின் வலிகளைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது ‘ஆசை’.

நளினி, பார்வதியம்மாள் ஒரு ஒற்றுமை

“நளினி விடுதலையில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமே இல்லை, ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு” என்றது மத்திய அரசு.  முதலில் காலம் கடத்தி  நளினி விஷயத்தில் பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்த மாநில அரசோ கடைசியில் ” நளினி விவாகரத்தில் நாங்கள் எங்களுக்கு சுயக்கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளோம்”  என்று விடுதலைக்கு ஆப்பு வைத்தது. நளினி மீண்டும் மனு செய்தார். அது விசாரணைக்கு வருவதற்கு முன்னரே நளினியின் அறையில் செல் போனைக் கண்டு பிடித்து அடுத்த ஆப்பை இறுக்கமாக இறுக்கி விட்டார்கள்.

இனி சில ஆண்டுகளுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை கோர முடியாத அளவுக்கு பொய் பிரச்சாரம் ஒன்றை நளினிக்கு எதிராக செய்து விட்டது கருணாநிதி அரசு. இதோ பார்வதியம்மாள் விவாகரத்திலும் மத்திய அரசு செய்ய எதுவும் இல்லை எல்லாமே மாநில அரசு கையில்தான் இருக்கிறது என்று விட்டது மத்திய அரசு. மாநில அரசோ பார்வதியம்மாளிடம் மனு வந்தால் மத்திய அரசுக்கு போஸ்ட் பண்ணுவோம் கடிதம் எழுதுவோம் என்று காலம் கடத்தத் துவங்கிவிட்டது.  பல சூழல்களில் பார்வதியம்மாள் விஷயத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வீர்களா? செய்ய மாட்டீர்களா? என்ற நெருக்கடி வரும் போது பார்வதியம்மாள் மீதும் குண்டு வீசப்படலாம். கருணாநிதி வீசாத குண்டுகளா?  அதை எந்த நேரத்திலும் யார் மீதும் செய்யத் தயங்காதவர் அவர். பார்ப்போம் பார்வதியம்மாளை வைத்து எப்படி எல்லாம் விளையாடுகிறார் என்று?

வன்னியில் பல ஆயிரம் மக்களைக்கொன்ற சிங்கள இனவெறியின் அழிவுப் போர் நடந்து ஓராண்டு ஆகப்போகிறது. அப்போது போரின் முடிவைத் தெரிந்து கொண்டே போரை நிறுத்துவதாக நாடகமாடிய இந்த அரசுகளும், தலைவர்களும் இப்போது ஒரு முதிய ஈழத்து பெண்மணிக்கு மருத்துவத்தைக்கூட தரமுடியாமல் சட்ட மொழியில் குள்ளநரித் தந்திரத்துடன் விளையாடுகிறார்கள். இந்த நரிகளை எப்போது வேட்டையாடப் போகிறோம்? நரிகளுக்கு பஜனை பாடும் ஈழ, தமிழின ஆதர்வாளர்களை எப்போது சட்டையைப் பிடித்து நாக்கை பிடுங்குமளவு கேட்கப் போகிறோம்?

_____________________________________________

–          இராவணன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்