Friday, June 9, 2023
முகப்புசெம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?
Array

செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

-

vote-012முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்..  எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை  தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது.

அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வாளி தூக்கவைத்த போதிலும், குடும்ப விழாவை அரசு விழா என்று அறிவிக்கத் தயங்கிய புரட்சித்தலைவியின் நேர்மையுள்ளத்தை வியப்பதா, அன்றி, அரசு விழா என்ற அறிவிப்பின் கீழ் குடும்ப விழாவை நடத்திக் காட்டிய  கலைஞரின் ராஜதந்திரத்தை வியப்பதா தெரியவில்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலென்ன, ரோஜா ரோஜாதான்!

இது சுயவிளம்பர மாநாடு அல்ல என்று ஜெயலலிதாவுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. “சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு. கலைஞர் அழைக்கிறார், தளபதி அழைக்கிறார், அழகிரி அழைக்கிறார் என்று தனித்தனியாக போஸ்டர் அடித்து எதிர்கோஷ்டியின் பொல்லாப்பை சம்பாதிப்பதை விட குடும்பம் என்று குறிப்பிடுவது பாதுகாப்பானதல்லவா?

செம்மொழி மாநாட்டின்  இனியவை நாற்பது பேரணியைப் பார்வையிடுவதற்குப் போடப்பட்டிருந்த மேடையில் நாற்காலிகள் அனைத்தையும் சூரியக் குடும்பத்தின் கோள்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், வ.மு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர் பெருமக்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்றபடி பேரணியை எக்கி எக்கிப் பார்த்தனர் என்று எழுதி அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தது ஜூனியர் விகடன். சாலையில் “இனியவை நாற்பது”. மேடையில் “இன்னா நாற்பது” என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்

லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” என்ற தனது நூலில், பிரான்சில் திடீர்புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய லும்பன் கூட்டத்தைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதியது நினைவுக்கு வருகிறது.

“அதிகமான கூச்சல் போட்டுக் கொண்டு கவுரவம் என்பதே சிறிதுமில்லாமல் பிடுங்கித் தின்பதைப் பிழைப்பாகக் கொண்ட கூட்டம்… கோமாளித்தனமான கம்பீரத்தோடு, விலையுயர்ந்த கோட்டுகளுக்குள் உடலைத் திணித்துக் கொண்டு.. அரசவைக்குள், மந்திரிசபைக்குள், நிர்வாகத்தின் தலைமையான இடத்துக்குள்.. முண்டியடித்துக் கொண்டு நுழைகிறது… இந்தக் கூட்டத்திலேயே மிக நல்லவர்களைக் கூட அவர் எங்கே இருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்கிறது மார்க்ஸின் வருணனை.

மன்னார்குடி குடும்பத்துக்குப் பொருந்தக் கூடிய இந்த வருணனை கோபாலபுரம் குடும்பத்துக்குப் பொருந்தாதா என்ன? நீ மந்திரியா நானும் மந்திரி; நீ கவிதாயினியா, நானும் கவிதாயினி; உன் மகன் சினிமா தயாரிப்பாளனா, என் மகனும் சினிமா தயாரிப்பாளன்; நீ கேபிள் டிவியா, நானும் கேபிள் டிவி; உனக்கு வி.ஐ.பி நாற்காலியா, எனக்கும் வி.ஐ.பி நாற்காலி; உனக்கு வலப்புறமா, எனக்கு இடப்புறம்; உனக்குத் தலைமாடா, எனக்கு கால்மாடு… என்ற இந்த அடிதடியில் தமிழறிஞர்களுக்கு நாற்காலி கிடைக்காததா பிரச்சினை?  மிதிபட்டுச் சாகாமல் தப்பினார்களே, அதுவே தமிழ்த்தாய் செய்த தவப்பயன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் பதினைந்து இருபது நிமிடம் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கத்தை மட்டும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பேன். “இப்படியொரு கூட்டத்தை யார் கூட்டமுடியும், கலைஞரே நீர் கூட்டமுடியும்” – இது அப்துல் ரகுமான். “மேகங்களே நீங்கள் அங்கிருந்தே கைதட்டுங்கள், கீழே தமிழர்கள் இருக்கிறார்கள் கைதட்டுவதற்கு”- இது வைரமுத்து. “நீங்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததனால்தான் தண்டவாளமும் தமிழ் கற்றுக் கொண்டது” – இது ந.முத்துக்குமார். இவர்களையெல்லாம் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளும் தமிழ் கூறும் நல்லுலகம், அழகிரியின் மகள் கயல்விழியை மட்டும் கவிஞர் இல்லை நிராகரித்துவிடுமா?

தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியில், ஹீரோவின் பாட்டையும் அய்யனார் சிலையின் குளோசப்பையும் மாற்றி மாற்றிக் காட்டுவது போல, கலைஞரைப் புகழ்ந்து பாடப்படும் ஒவ்வொரு வரிக்கும், முன்வரிசையில் அமர்ந்திருக்கும் கலைஞரின் முகத்தை நோக்கி காமெரா திரும்பியது. பெரும்பாலும் கலைஞரின் முகத்தில் சலனம் இல்லை.

“ஒன்று இரண்டு என்று வகைப்படுத்தி என்னைப் பாடு” என்று சிவபெருமான் சொன்னவுடனே கே.பி.சுந்தராம்பாள் “ ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..” என்று பாடுவதையும், அதற்கு சிவபெருமான் ரியாக்சன் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம். ஒரு அவ்வையார் பாடினால் ரியாக்சன் கொடுக்கலாம். இருபது முப்பது அவ்வையார்களை மேடையேற்றி விட்டு, அடுத்தடுத்துப் பாடவிட்டால் எப்பேர்ப்பட்ட சிவாஜி கணேசனாக இருந்தாலும் முகபாவம் காட்டுவது கஷ்டம்தானே?  “முடியலடா சாமி” என்று கலைஞர் எழுந்து போய்விடுவார் என்றுதான் நினைத்தேன். இல்லையே.

ரியாக்சன் காட்டவில்லை என்ற காரணத்தினால், இத்தகைய “முகத்துதிக் கவிதைகளை  கலைஞர் விரும்பவில்லை போலும்” என்று அவசரப்பட்டு முடிவுக்கு வருபவர்கள் வரலாறு தெரியாதவர்கள். அல்லது மாநாட்டில் கலைஞர் ஆற்றிய துவக்கவுரையைக் கேட்காதவர்கள். அஞ்சுகம் முத்துவேலருக்கு மகனாகப் பிறந்து, அரை டவுசர் போட்ட காலத்திலேயே தமிழ்த்தொண்டாற்றி.. என்று தனது உரையைத் தொடங்கினார் கலைஞர். இந்தக் கதையை எத்தனை ஆயிரம் முறை கூறிய பின்னரும் “போதும்” என்று அவருக்குத் தோன்றவில்லை. இது தெரிந்திருப்பதனால்தான் ரத்தம் வரும் வரை சொறிகிறார்கள் கவிஞர்கள்.

இருப்பினும் எந்தப் புகழுரையைக் கேட்டாலும், நினைவாற்றல் மிக்க கலைஞருக்கு அது ஏற்கனவே எங்கேயோ கேட்டது போலப் பொறி தட்டுகிறது. 460 கோடியை வாரி இரைத்தும் கலைஞரை முகம் மலரச் செய்யும் ஒரு கவிதை வரியைக் கூட கவிஞர்களால் துப்பமுடியவில்லை. கலைஞர் முகம் மலர்வது இருக்கட்டும். கூட்டத்திடமிருந்து கூட கைதட்டல் வாங்கமுடியவில்லை. முகத்துதியில் ஒருவரை ஒருவர் முந்த முயன்று மூச்சிரைத்த கவிஞர்களுக்கும் கூட “முடியலடா சாமி” என்ற நிலைதான்.

அன்றாடம் புதிது புதிதாக மன்னனைப் புகழ்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த அரசவைக் கவிஞர்கள் எனப்படுவோர், தம் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அந்தக் காலத்தில் என்னபாடு பட்டிருப்பார்கள், தமிழ் என்னபாடு பட்டிருக்கும் என்ற கோணத்தில், தமிழின் வரலாற்றையும், தமிழனின் வரலாற்றையும் புரிந்து கொள்வதற்க்கு ஏற்ற மிகச்சிறந்த காட்சி விளக்கமாக அமைந்திருந்தது கவியரங்கம்.

“கலைஞருக்குக் கொஞ்சம் கூடக் கூச்சமாக இருந்திருக்காதா?” என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். கூச்சமா?  வசனத்துக்கு வாயசைக்கும் நடிகன் தனக்கு ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளக் கூச்சப்படுகிறானா? தெருமுனைக்குத் தெருமுனை தனது திருமுகத்தையே டிஜிட்டல் பானரில் பார்த்துக் கொள்ள தலைவர்கள் கூச்சப்படுகிறார்களா? லஞ்சம் கேட்க போலீசார் கூச்சப்படுகிறார்களா?  பேராசிரியப் பெருமக்கள் வட்டிக்கு விடக் கூச்சப்படுகிறார்களா? ஐந்திலக்க சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்ய கூச்சப்படுகிறார்களா? அதிகாரிகளும் அறிஞர் பெருமக்களும் அழகிரிக்கு கூழைக்கும்பிடு போடக் கூச்சப்படுகிறார்களா? கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

அப்படியெல்லாம் கூச்சப்படுவதென்றால் அதற்கு ஒரு பண்பாடு வேண்டும். அந்தப் பண்பாட்டுக்கு ஒரு அறமும் சில விழுமியங்களும் அடிப்படையாக இருக்கவேண்டும். அவ்வாறு கூச்சப்படாதவர்களைக் கண்டு காறி உமிழும் மனோபாவம் அந்தச் சமூகத்தின் உளவியலில் கொஞ்சமாவது எஞ்சியிருக்க வேண்டும். இருக்கிறதா?

இந்தக் கூத்தில் பங்கேற்ற ஆன்றோர்கள், சான்றோர்கள். அறிஞர்களில் எத்தனை பேர் அடிக்கு பயந்து வந்தவர்கள். எத்தனை பேர் அப்படி சொல்லிக் கொள்கின்ற காரியவாதிகள்?  யாராவது கண்டுபிடிக்க முடியுமா?

ஈழத்தமிழனுகாகக் குரல்கொடுத்த தமிழர்களையெல்லாம் தடாவில் தூக்கி உள்ளே போட்ட காலத்தில்தான் தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார் ஜெயலலிதா. சிவத்தம்பி அதற்கும் வர விழைந்தார். எனினும் விரட்டப்பட்டார். இன்று ஈழத்தின் கல்லறை மீது நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து “அரசியல் வேறு – தமிழ் வேறு” என்று  தத்துவம் கூறுகிறார். இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் ஒரு முத்தமிழ் மாநாட்டை நடத்தினால் அதற்கும் அவரே தலைவர். ஒருவேளை தனி ஈழம் கண்டு அங்கே ஒரு உலகத்தமிழ் மாநாட்டை தம்பி நடத்தியிருக்கக் கூடுமானால், அதற்கும் அவரே தலைமை தாங்கியிருக்க கூடும்.

கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்பட வேண்டும்?

தான் ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டுக்கு உரிய மரியாதையை வழங்கத் தெரியாத தமிழனுக்கு, அவன் வரிப்பணத்திலிருந்தே தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக் கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் கலைஞரும், நியாயமான முறையில் பாகம் பிரிக்கப்படாத தங்களது பிதுரார்ஜித சொத்தாக தமிழகத்தைக் கருதும் அவரது குடும்பத்தினரும் எப்படிக் கூச்சப்பட முடியும்?  கனிமொழிதான் பாவம், ரொம்பவும் கஷ்டப்பட்டு கூச்சப்படுகிறார்.

இலக்கியவாதிகள் முகத்தில்தான் என்ன கம்பீரம்! வார்த்தைகளால் நக்கிய புலவர் பெருமக்களின் மீசையில்தான் எத்தனை முறுக்கு? மேடையை அலங்கரித்த நாற்காலிகளுக்குத்தான் எத்தனை மிடுக்கு!

யாரும், எதுவும் கடுகளவும் கூச்சப்பட்ட மாதிரி தெரியவில்லை. நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும் – அவை தமிழனுக்கு எதற்கு? திராவிட இயக்கத்தின் நிழலில் தழைத்த புலவர் பெருமக்களின் பாரம்பரியம் மிக்க பிழைப்புவாதம் ஒருபுறம். தாராளமயக் கொள்கைகளால் அதிகாரபூர்வப் பண்பாடாக ஞானஸ்நானம் பெற்றிருக்கும் புதிய பிழைப்புவாதம் ஒருபுறம். செம்மொழி மாநாடு முன்னைப் பழைமையும் பின்னைப் புதுமையும் இணைந்த புதியதொரு வீரிய ஒட்டு ரகத் தமிழ்ப் பண்பாட்டை நம் கண்முன்னே விரித்துக் காட்டியது.

இதுதான் தமிழகம்.

“ஈழப்படுகொலைக்குப் பின்னரும் திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் வெற்றி பெற முடிந்தது எப்படி?” என அன்று வியந்தோர் உண்டு. “தமிழர்களின் வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டார்கள்” என்பது பாதி உண்மைதான். “விற்றுக் கொள்ள முன்வந்தது” மீதி உண்மை. அன்று ஈழப்படுகொலைக்கு எதிராகப் பாமரத் தமிழர்கள் சிலர் தீக்குளித்தார்கள், பலர் சிறை சென்றார்கள். இன்று படித்த அறிஞர்கள் யாரும் “குற்றம் குற்றமே” என்று முழங்கிச செம்மொழி மாநாட்டை எதிர்த்துச் சிறை சென்றதாகத் தகவல் இல்லை.

பாலைவனச் சோலை போல மதுரை வழக்குரைஞர்கள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரி உண்ணாவிரதத்தைத் துவக்கினார்கள். சென்னை வழக்குரைஞர்கள் தொடர்ந்தார்கள். “நீதிமன்ற வளாகத்துக்குள் நீதியின் குரலையும் காக்கையின் குரலையும் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது சட்டவிரோதம்” என்று நீதியரசர்கள் கூறிவிட்டார்கள். “வளாகத்துக்கு வெளியே காக்கையின் குரலைத் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது செம்மொழிக்கு விரோதம்” என்று காவல்துறை கூறிவிட்டது. எனவே, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ், தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக ரிமாண்டில் வைக்கப்பட்டு மாநாடு முடியும் வரை பாதுகாக்கப்பட்டது.

“சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று உடன்பிறப்புகள் கூறியிருந்த உண்மையை மொழிபெயர்த்து, “இது கருணாநிதியின் குடும்பவிழா”என்று சுவரொட்டி ஒட்டினார்கள் ம.க.இ.க தோழர்கள். “அதை நாங்க சொல்ல்லாம். நீ சொல்லக்கூடாது” என்று சிறை வைக்கப்பட்டார்கள்.

தமிழகமெங்கும் தேடுதல் வேட்டை, கியூ பிரிவின் கண்காணிப்பு. ஒரு பகுதியில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் குதித்து தமிழ் விரோதிகளான ம.க.இ.க தோழர்களைத் தேடியது போலீசு. திருச்சியில் ரயில்வே பிளாட்பார்மில் சுமை இறக்கிக் கொண்டிருந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 15 பேரை, அங்கேயே போலீசு வளைத்துப் பிடித்தது. சென்னையில் சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட பெண்கள் விடுதலை முன்னணியின் செயலர், ஊடகங்களைத் தொலைபேசியில் அழைத்து செய்தி சொன்னபோது, “அம்மா நாங்கள் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக எந்தச் செய்தியும் கவர் பண்ணுவதில்லை” என்று பதிலளித்திருக்கின்றனர் பத்திரிகையாளர்கள். ஊடகங்கள் செம்மொழியால் எப்படி கவர் பண்ணப்பட்டிருக்கின்றன என்பது தினமணி தலையங்கத்தைப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்ததே! தினமலர் பரவாயில்லை, “செம்மொழி மாநாட்டை எதிர்த்த நக்சலைட்டுகள் கைது” என்று செய்தி போட்டு, தமிழின விரோதிகளைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது.

வழக்குரைஞர் போராட்டத்தைச் சிக்கெனப் பற்றிக் கொண்ட ஜெயலலிதா, உடனே ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அதில் தோழமைக் கட்சிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டார். வலது, இடது கம்யூனிஸ்டு தொண்டர்கள் தலா 4 கொடியுடன் கலந்து கொண்டனர் . ராஜாவும் எச்சூரியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர். கூட்டணியால் வேறுபட்டாலும் தமிழால் ஒன்றுபடுவது என்பது இதுதான் போலும்!

“தமிழர்களே, கலைஞர் அழைக்கிறார். சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து  செம்மொழி மாநாட்டில் ஒன்றுபடுவோம் வாரீர்!” என்று திமுகவினர் சென்னையில் ஒரு விளம்பரத் தட்டி வைத்திருந்தனர். மொழி வேறுபாட்டைக் கடந்த மொழி உணர்வு! அடடா, எப்பேர்ப்பட்ட கவிதை! “சூடு, சொரணை, சுயமரியாதை கடந்து” என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம். விசேடமாகக் குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல என்று உடன்பிறப்புகள் எண்ணியிருக்கக் கூடும்.

ஐந்து நாள் மாநாடு, கவியரங்கம், ஆய்வரங்குகள், 998.4 ஆய்வுக் கட்டுரைகள், ரகுமானின் யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஆகிய அனைத்தின் சாரப்பொருளையும் ஒரே வரியில் கூறிவிட்டது, உடன்பிறப்புகளின் விளம்பரத்தட்டி உதிர்த்திருந்த அந்தக் கவிதை.

அம்மா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக்கும் அய்யா நடத்திய செம்மொழி மாநாட்டுக்கும் என்ன வேறுபாடு? அம்மா நடத்திய குடும்ப விழாவுக்கும் அய்யா நடத்தியிருக்கும் அரசு விழாவுக்கும் என்ன வேறுபாடு? அம்மா ஆட்சிக்கும் அய்யா ஆட்சிக்கும் என்ன வேறுபாடு?

“கோலெடுத்தால் குரங்காடும்” என்பது அம்மாவின் அரசாட்சித் தத்துவம். “கோல் முனையில் வாழைப்பழத்தை தொங்கவிட்டால் எப்பேர்ப்பட்ட குரங்கும் கரணம் போடும்” என்பது அய்யாவின் ஆட்சித் தத்துவம்.

மாநாட்டின் இறுதியில் தமிழுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் கலைஞர். அப்படியானால் ஏற்கெனவே செம்மொழி மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 460 கோடி?

அதுதான் கோலின் முனையில் கட்டப்பட்ட வாழைப்பழம்.

அப்போ இந்த வாழைப்பழம்? அதாண்ணே  இது.

______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. […] This post was mentioned on Twitter by vinavu, kaasethu. kaasethu said: RT @vinavu: செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்? http://wp.me/pvMZE-27i RT Pls. […]

  2. மிகவும் நல்ல பதிவு. சிறை சென்ற தோழர்களுக்கு வாழ்த்துகள். ஜெ. ஆட்சிக்கும், கருணாநிதியின் ஆட்சிக்கும் 5 வித்தியாசம் கூறுங்கள்.

  3. Vinavu Back in track.
    A masterpiece article from vinavu in the recent time.
    Keep going comrades.
    We expect this kind of sharp and depth articles continuously from Vinavu comrades.
    Kudos to Team vinavu

  4. அருமையான கட்டுரை. பதினைந்து இருபது நிமிடம் பார்த்ததிற்கே… இவ்வளவு சிறப்பான கட்டுரை என்றால்…உங்களை 5 நாள் நிகழ்ச்சிகளையும் உட்கார வைத்து… கட்டாயப்படுத்தி பார்க்க வைத்திருந்தால்… இன்னும் சிறப்பான, அருமையான கட்டுரை கிடைத்திருக்கும்.

    ஐந்து நாளும் செம்மொழி மாநாட்டிற்காக…கழக உடன்பிறப்புக்களுக்கு பிரச்சனையில் வந்துவிடக்கூடாது என்பதற்காக… அரசிடமிருந்து கோவை டாஸ்மார்க் கடைகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

    *டாஸ்மார்க் கடைகள் எவ்வளவு முடியுமோ… அவ்வளவு சரக்கு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்
    *காலை தொடங்கி, இரவு வரை திறந்து வைத்திருக்க வேண்டும்.
    *ஒவ்வொரு நாளும் விற்பனைத்தொகையை அன்றே கருவூலத்தில் கட்டிவிட வேண்டும்.

    செம்மொழி மாநாட்டினை அம்ப்லப்படுத்தி போராடியவர்களை… வளைத்து பிடித்தற்காக போலீசுக்கு சிறப்பு ஊக்கத்தொகை கொடுத்து கருணாநிதி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

  5. “ஈழப்படுகொலைக்குப் பின்னரும் திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் வெற்றி பெற முடிந்தது எப்படி?” என அன்று வியந்தோர் உண்டு. “தமிழர்களின் வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டார்கள்” என்பது பாதி உண்மைதான். “விற்றுக் கொள்ள முன்வந்தது” மீதி உண்மை.

    – 100 % unmai. Vote podave panam vangum makkal..! Velai seiyave panam vangum politicians. Panam vangum pothey politician-i kurai sollum eligiblity ezanthu vittan. Kooti kazichu parthal kanakku sari than. Including Media. Vangamal nermaiyaga, suyamariyathaiyaga erupavanukku per “Paithiyakaran”. “Elichavayan” “Polaika theriyathavan”…!

    “Paithiyakaran”. “Elichavayan” “Polaika theriyathavan”…! 🙂

  6. நல்ல கட்டுரை. அரசாங்கம் என்னவும் செய்யலாம், நாம் எதுவும் பேச முடியாது. இதுதான் புதிய உலக ஒழுங்கு.

  7. ellorum ninnachatha neenka appadiye eluthiirukinga, itha vizhavalla tamizh oru munntraumum akkathu nammala parthu tamihza kolai pannama irunthathan athu azhium

  8. ellaam charithaan. pona ulakath thamiz maanaadu paRRiyO, chatta chabaiyil tamilai maranthathu guriththo yaarum pechuvathillaaithaane. ithe eelaththin tamilchelvanukku kavithai ezhuthiyatharge kalaignarin aatchiyai galaikka korikkai viduththa cheythigalai naam maranthu poi viduginrome.  

  9. கலைநிகழ்ச்சி முடிந்து சுமார் 30 நிமிடம் ஒன்றும் இல்லை, சரியார் 3.52 க்கு கருணாநிதி வந்தார். வந்தவுடன் அவருக்கு வாழ்த்துப்பா பாடினார்கள். ஆகவேண்டிதெல்லாம் ஆனது. கருணா பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அளவில் கலை நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்த்த பலர் கிளம்பினார்கள். 6.00 மணிக்கு விழா முடிந்தது. இது திமுக விழா அல்ல என்றார் கருணாநிதி, எனக்குத்தெரிந்து வந்திருந்தவர்களில் திமுவினர்தான் மிக அதிகப்பங்கு. போலீசு பொதுமக்களை திட்டிக்கொண்டிருந்தது.திமுவி
    னரோ போலீசைத்திட்டிக்கொண்டிருந்தார்கள். மாநாட்டிற்கு வெளியே திமுக சம்பந்தமான புத்தகங்கள், படங்கள், கேசட்டுகள் அழகிரியின் படங்கள் குறிப்பாக விற்பனை செய்யப்பட்டன. வேறு கட்சிப்புழுக்கையைகூட காணமுடியவில்லை.

    மக்கள் கூட்டம் என்பது திட்டமிட்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது, உள்ளே வரும் கூட்டத்தை வெளியே அனுப்பி மீண்டும் உள்ளே வரவைத்துக்கொள்ளப்பட்டது. உள்ளே செல்வதற்கு மிகக்குறைந்த அளவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வளவு கெடுபிடி இல்லையயன்றால் கண்டிப்பாக இவ்வளவு கூட்டம் உள்ளே இருந்திருக்க வாய்ப்பில்லை,. முத்தமிழறிஞரின் பேச்சைக்கேட்காமல் ஓடிய தமிழ்க்கூட்டத்தை பார்த்த போது இது மெய்யயன்றானது

  10. அருமையான கட்டுரை வினவு …கனிமொழியும் கயல்விழியும் கூட கவிஞர் என்று போட்டுக்கொள்கின்றனர்….இவர்களை புகழ் செய்பவர்களே அறிஞர்கள் …….சரி ஈழம் பற்றி கலைஞரை திட்டிய பதிவர்கள் மாநாட்டிற்கு போய் வந்திருக்கிறார்கள் அவர்களையும் ஒரு பிடி
    பிடித்து இருந்க்கலாம்

    arumaiyaana katturai . …………..

    • //கனிமொழியும் கயல்விழியும் கூட கவிஞர் என்று போட்டுக்கொள்கின்றனர்\\
      சரியாப்போச்சி போங்க,
      இன்னும் ஒரு பத்து வருஷம் இவங்க குடும்ப ஆட்சியே தொடர்ந்துச்சினா, எவனோ ஒரு அல்லக்கை கவிஞன் ‘உன் வாயில் சுரக்கும் உமிழ் நீர் எங்களுக்கு, தமிழ் நீர்’ னு இவங்களப்பார்த்து பாட மாட்டானா?

      எல்லாம் நம்ம தலைஎழுத்து!

  11. பதிவுலகில் பலப் பதிவர்கள் இப்போதெல்லாம் காசு பர்க்கும் ஊடக வியபாரிகளாகி இருக்கிறார்கள் “வெண்ணிற இரவுகள்” நண்பரே.           //கோலெடுத்தால் குரங்காடும்” என்பது அம்மாவின் அரசாட்சித் தத்துவம். “கோல் முனையில் வாழைப்பழத்தை தொங்கவிட்டால் எப்பேர்ப்பட்ட குரங்கும் கரணம் போடும்” என்பது அய்யாவின் ஆட்சித் தத்துவம்//  அப்பட்டமான உண்மை.

  12. இருமாப்பு வேண்டும் ஆனால் நிச்சயம் ஒரு சார்புடைய கோட்பாடுகளுக்கு நான் வெட்கப்படுகிறேன். தமிழ் வளர நீ என்ன செய்தாய் அதை நினைத்துப்பார். வாய் கிழிய நீ பேசும் வார்தைகளுக்கு செவி சாய்க்க என்னால் முடியாது. தான் செய்ய இயலாத ஒன்றை பிறர் செய்ய பாராட்டு. ஒரு சார்பு பேச்சு நலன் பயக்காது.

  13. கவியரங்கத்தில் ஜால்ராக்களின் சத்தம் அதிகமாவே கேட்டது.சகிக்க முடியல, இதவிட கொடும தமிழ் வளர்த்த செம்மல்களான ஸ்ரீதர் வண்டார், பூவை மூர்த்தி,திருமா மற்றும் பல பெரும் ஜால்ராக்கள் வேற, காலகொடும என்ன செய்ய????

  14. அருமையான கட்டுரை என்று சொல்வதோடு நண்பர்கள் அனைவரும் வரும் போலி ஜனநாயகத் தேர்தல்களை புறக்கணிக்க முன்வரவேண்டும். நன்றி.

  15. While most of what is wtritten in the article is correct, one important point to note is that the common man in Tamil Nadu is not really bothered about what is happening in Sri Lanka. I think a lot of Tamil ‘enthusiasts’ do not understand that Sri lankan tamils are a different lot as compared to us. They are Sri Lankans and they lik it that way. Prabhakaran joined hands with premadasa to try and finish off Jayawardane – beacuse Jayawardane was perceived to be close to India. Most Sri Lankan tamils dont like Indians and Indian tamils. They think they are superior to us. Linking Indian politics to sri lankan tamil is foolish. it is a different country. we can sympathise and that’s it. Why is the same concern not being shown to Malaysian tamils – because they are Hindus?

  16. இன்று இந்த உலகில் யுத குலத்தை விட வாரலாற்றில் இதுவரை கண்டிராத பாரிய இன அழிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களின் விடுதலையை விரும்பும் புரட்சிகர ஜனநாயகசக்திகளுக்கு வணக்கம். இந்த இணையதளத்தை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் இந்த இணையதளம் (ம க இ க)தமிழர்களின் விடுதலைக்காக நிற்பதாகவும் கொலைஞர் போன்ற தமிழின துரோகிகளுக்கு எதிராக இருப்பாதாக நீங்கள் கருதலாம். ஆனால் ம க இ க என்ற புரட்சிகர? அமைப்பின் அரசியல் நிலைபாடும் கொலைஞர் துரோக கும்பலின் அரசியல் நிலைபாடுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ராஜபக்செ பாசிஸ்ட், விடுதலைப்புலிகள் பாசிஸ்ட், ஒடுக்கும் இனத்தையும் ஒடுக்கப்படும் இனத்தையும் ஒரே தட்டில் வைக்க சொல்கிறது, இந்த எதிர் புரட்சிகரகும்பல்.
    நீங்கள் கூறுங்கள் நேற்றைய விடுதலைப்புலிகள் ஆட்சியும் இன்றைய முள்வேளிக்குள் ஈழமக்களை அடைத்து வைத்து இலங்கை தீவில் தமிழன் என்று ஒரு இனமே இல்லாமல் பூண்டோடு அழித்துகொண்டிக்கும் இனவெறியன் ராஜபக்செ ஆட்சியும் ஒன்றா?

  17. இன்று இந்த உலகில் யுத குலத்தை விட வாரலாற்றில் இதுவரை கண்டிராத பாரிய இன அழிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களின் விடுதலையை விரும்பும் புரட்சிகர ஜனநாயகசக்திகளுக்கு வணக்கம். இந்த இணையதளத்தை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் இந்த இணையதளம் (ம க இ க)தமிழர்களின் விடுதலைக்காக நிற்பதாகவும் கொலைஞர் போன்ற தமிழின துரோகிகளுக்கு எதிராக இருப்பாதாக நீங்கள் கருதலாம். ஆனால் ம க இ க என்ற புரட்சிகர? அமைப்பின் அரசியல் நிலைபாடும் கொலைஞர் துரோக கும்பலின் அரசியல் நிலைபாடுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ராஜபக்செ பாசிஸ்ட், விடுதலைப்புலிகள் பாசிஸ்ட், ஒடுக்கும் இனத்தையும் ஒடுக்கப்படும் இனத்தையும் ஒரே தட்டில் வைக்க சொல்கிறது, இந்த எதிர் புரட்சிகரகும்பல்.நீங்கள் கூறுங்கள் நேற்றைய விடுதலைப்புலிகள் ஆட்சியும் இன்றைய முள்வேளிக்குள் ஈழமக்களை அடைத்து வைத்து இலங்கை தீவில் தமிழன் என்று ஒரு இனமே இல்லாமல் பூண்டோடு அழித்துகொண்டிக்கும் இனவெறியன் ராஜபக்செ ஆட்சியும் ஒன்றா?

  18. மிக அருமையான ஆக்கம். ஆனால் நம் மக்கள் பத்த்தோடு பதினொன்றக இதையும் மறந்து விடுவார்கள். அது தானே கொடுமை. //லஞ்சம் கேட்க போலீசார் கூச்சப்படுகிறார்களா?// இந்த வார்த்தையோடு லஞ்சம் கேட்க அரசு அதிகாரிகள் கூச்சப்படுகிறார்களா? என்று இதையும் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். மக்கள் வரிப்பணத்தில் வ்யிறு வளர்க்கும் கூட்டம் வேலையை செய்வதற்கே லஞ்சம் கேட்கிறதே.

  19. கட்டுரை அருமை. இது போன்ற கருத்துக்கள் பொது மக்களை சென்றடைய வேண்டும்.

  20. There is no point blaming ourself. Let me put it in simpler way.
    The first point, our mindset is not accepting elam tamil as one of ours.
    2nd, As long as I(Tamilan) don’t have any problem I am okay with myself( selfishness).
    3rd, I am happy now why I should bother about bloody people struggling somewhere. it is waste of my time and energy.
    4th, people like you will do critics,, people like me to read and give some comments.,… people like karuna they will keep on doing their things.. so no change…

  21. தெளிவான விளக்கமான பதிவு –

    //“மேகங்களே நீங்கள் அங்கிருந்தே கைதட்டுங்கள், கீழே தமிழர்கள் இருக்கிறார்கள் கைதட்டுவதற்கு”- இது வைரமுத்து. //
    //“கோலெடுத்தால் குரங்காடும்” என்பது அம்மாவின் அரசாட்சித் தத்துவம். “கோல் முனையில் வாழைப்பழத்தை தொங்கவிட்டால் எப்பேர்ப்பட்ட குரங்கும் கரணம் போடும்” என்பது அய்யாவின் ஆட்சித் தத்துவம்.//
    கைத்தட்டிக் கைத்தட்டியே கையோடு மூளையும் தேய்க்கும் அறிவியலில் முக-விற்கும் ஜெ-விற்கும் வேறுபாடில்லை என்பதை இன்னொரு முறை படங்காட்டியிருக்கின்றனர்.

  22. தமிழை பாராட்ட வந்தவர்கள் கலைஞரை பாராட்டினார்கள் என்றால் தமிழையும், கலைஞரையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியவில்லை என்பதே பொருள்! -லக்கிலுக்

  23. இதுதான் தமிழகம்! இதுதான் செம்மொழி மாநாடு!

    super super

    “முடியலடா சாமி”

  24. அருமையான பதிவு, எண்ணத்தை எழுத்தில் கொண்டரும் உங்கள் திறமை பொறாமைப்பட வைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுத் தமிழனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், கருணநிதியின் பூட்டன் வந்தாலும் இதே கதிதான்  தமிழனுக்கு……..

  25. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
    அன்புள்ள சகோதர சகோதரிகளேஒரு முக்கியவேண்டுகோள்.
    நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராகராஜன்+வால்பையன்இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.
    இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.
    ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமானவார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.
    நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.
    நான் கூறுவது சரியா தவரா?பதில் கூறவும்.வஸ்ஸலாம். 

    • தமிழைப் பற்றி அவனவன் கவலைப்படும்போது, நீ முகமதுவ பத்தி கவலைப்படுற. அவர் யாரு தமிழுக்கு என்ன பண்ணாரு?

  26. /நம் உயிரினும் மேலான முஹம்மது நபி

    /

    நான் ஆல் இன் ஆல் ல் வெளியிடப் பட்ட பக்கத்தை படித்தேன் .திரு முகமது அவர்கள் இறக்கும் போது ஆயிஷாவுடன் இருந்தார் என்ற ஒரு ஹதிதை வெளியிட்டு அதன் மீது அவர்கள் பணியில் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
    எல்லா மதங்களின் வேத்ங்களிலும் இக்காலத்திற்கு ஏற்பில்லாத பல கருத்துகள்/செயல்கள் குறிப்பிட பட்டுள்ளது. அவற்றை விமசிப்பவர்கள் இருந்து கொன்டுதான் இருக்கிறார்கள்.குரானும்,ஹதீத்களும் சுமார் 5 வருடங்களாகவே தமிழில் இனையத்தில் சுலபமாக கிடைக்கிறது.படிப்பவர்கள் விமர்சனம் செய்வது தவிர்க்க முடியாது. இன்று இவர்கள் நாளை வேறு எவர் வேண்டுமானாலும் செய்யலாம். இதை ஒரு விஷயம் ஆக்குவதை விட்டு விட்டு முஸ்லீம்களின் கல்வி,வேலை வாய்ப்பு மற்றும் சுகாதாரம் முதலியவற்றில் முஸ்லீம் தலைவர்கள் கவனம் செலுத்தினால்(இத்வரை செய்யாதது)ந‌ன்றாக இருக்கும்.

  27. தினமலர் தங்களால் பாராட்டு வாங்க வேண்டும் என்று செய்தி வெளியிட்டதா அல்ல நக்சலைட்டு என்பதால் வெளியிட்டதா அவர்களுக்கே வெளிச்சம்

  28. எல்லாம் தெரிஞ்சிருந்தும் பேசாம வாய மூடிகிட்டு இருக்குறது நமக்கென்ன புதுசா?
    காலங்காலமா இத தான பண்ணிட்டு இருக்கோம்….

    வன்முறை வளரட்டும்
    என் வீட்டு ஜன்னல்
    உடையாத வரை….

    தீவிரவாதம் ஓங்கட்டும்
    என் தம்பி
    அக்கூட்டம் சேராத வரை….

    கற்பழிப்பு தொடரட்டும்
    என் தங்கை
    பாத்திக்கப் படாத வரை….

    நாடு நாசமாய் போகட்டும்
    என் அமெரிக்க வீசா
    முடியாத வரை….

    இப்டி தான எல்லாரும் இருக்கோம்…..

  29. \\இந்த அடிதடியில் தமிழறிஞர்களுக்கு நாற்காலி கிடைக்காததா பிரச்சினை? மிதிபட்டுச் சாகாமல் தப்பினார்களே, அதுவே தமிழ்த்தாய் செய்த தவப்பயன்\\
    \\இவர்களையெல்லாம் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளும் தமிழ் கூறும் நல்லுலகம், அழகிரியின் மகள் கயல்விழியை மட்டும் கவிஞர் இல்லை நிராகரித்துவிடுமா?\\

    Good

  30. தமிழக அரசாங்கம் சிரிப்பா சிரிப்பதைக்கண்டு ஈழத்தமிழனுக்கும் சிரிப்பு வரும் வகையில் படைக்கப்பட்ட இக்கட்டுரைக்கு மதிப்பு அதிகம்.மகாமகம் சம்பவத்தையும் சுட்டிக்காட்டிருந்திருக்க வேண்டும். கட்டுரைப் படைத்தப் படைப்பாளிக்கு என் பாராட்டுக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க