privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமதராசபட்டினம்: அருங்காட்சியக துணுக்குகளில் ஒரு அரதப் பழசான காதல் கதை !!

மதராசபட்டினம்: அருங்காட்சியக துணுக்குகளில் ஒரு அரதப் பழசான காதல் கதை !!

-

பழமையை நினைவு கூறும் வெளிறிப்போன காகிதமாய் இருக்கும் தமிழக வரைபடத்தில் படக்குழுவினரை அறிமுகப்படுத்தும் ஆரம்ப டைட்டில் வரும்போது ஏதோ புதுமை என்ற உணர்வு ஏற்படுகிறது. இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகியும் சென்டரல் ரயில் நிலையத்தின் முன் இணையும் சலனக்காட்சி வரையோவியமாய் மங்கும் போது நிச்சயமான சலிப்பே மிஞ்சுகிறது.

1945ஆம் ஆண்டு சென்னைக் கவர்னரின் மகளாய் இலண்டனிலிருந்து வந்திறங்கும் நாயகி சென்னையின் சலவைத் தொழிலாளர்கள் குடியிருக்கும் வண்ணாரப்பேட்டையில் வாட்டசாட்டமாய் இருக்கும் பரிதியை (ஆர்யா) தற்செயலாய் சந்தித்து பின் காதல் வயப்படுகிறாள். அவளைச் சுற்றியிருக்கும் வெள்ளையர்கள் இரக்கமற்றவர்களாக இருக்கும் போது அவள் மட்டும் மனிதாபிமானியாய் இருக்கிறாள். இருந்தாக வேண்டும்.

47இல் வெள்ளையர்கள் வெளியேறும் தருணத்தில் தன் காதல் நிறைவேறாமல் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு இலண்டன் திரும்புகிறாள். அறுபது வருடம் கழித்து ஆர்யாவின் குடும்பத் தாலியை எடுத்துக் கொண்டு பேத்தியுடன் சென்னை வருகிறாள். சலவைத் தொழிலாளியான பரிதி ஏழைகளுக்கு உதவும் நிறுவனங்களை உருவாக்கிவிட்டு இறந்து போகிறானாம். அவனது சமாதியில் கண்ணீர் விடும் அந்த வெள்ளைக்காரப் பாட்டியின் இளைமைக்கால நினைவுடன் படம் முடிகிறது.

இலண்டனில் அந்தப்பாட்டிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நேரத்தில் அவள் சென்னையில் ஒரு கடமை இருக்கிறதென்று கிளம்புவதும், சென்னையில் பேத்தியுடன் பரிதியைத் தேடி அலைவதும் உணர்ச்சி என்ற வகையில் டைட்டானிக்கை நினைவுபடுத்துகிறது. பின்னணி இசையும் டைட்டானிக்கின் தீம் மீயுசிக்கை கண்டிப்பாய் மீட்டு வருகிறது.

டோபிகனால் கிராமம், மழைப்பாட்டு, வெள்ளை அதிகாரியுடன் மல்யுத்தம் எல்லாம் லகானை நினைவுபடுத்துகிறது. மல்யுத்தத்தில் அந்தக்கால கட்டத்தில் இல்லாத காலடி பல்டிகள் “அன்டிஸ்பியூட்டட்” படக் காட்சிகளை சார்ந்திருக்கிறது. அப்போகலிப்டோ படத்தில் அம்புகள் விரட்ட வளைந்து வளைந்து ஓடுவது போல இங்கு ஆர்யா துப்பாக்கி தோட்டக்கள் விரட்ட அப்படி ஓடி தப்பிக்கிறார். அந்த வெள்ளைக்கார நாயகியின் பாட்டுக்களும், காட்சிகளும் கூட லகானில் பார்த்தவைதான். மணிக்கூண்டு சண்டைகள் ஜாக்கிசான் படத்தில் வந்தது போலவே இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விஜய் இப்படி பல படங்களைப்பார்த்து அதன் பாதிப்பில் ஒரு கதையை எழுதினார் என்று சொல்லவில்லை. அதே சமயம் படத்தின் கருவும், உணர்ச்சியும் உண்மையாகவோ, இயல்பாகவோ இல்லை என்பாதல் ஒரு வித செயற்கைத் தன்மையைத்தான் வலிந்து உணர்கிறோம். அதனாலேயே எல்லாக் காட்சிகளும் முன்னர் கூறிய படங்களை நினைவு படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏன்?

படத்தில் நாற்பதுகளின் சென்னைக் காட்சிகளை காட்டுவதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்தக்கால மவுண்ட்ரோடு, சென்டரல் நிலையம், ட்ராம் வண்டிகள், நீராவி என்ஜின் ரயில்கள், அமிர்தாஞ்சன், லக்ஸ், கோல்கேட் விளம்பரங்கள், பழைய கார்கள் எல்லாம் சரிதான். இவையனைத்தும் கழுவி துடைத்த புதுமைப் பொருட்களாகத்தான் இரசிகனால் உணரப்படுகின்றன. இந்த அருங்காட்சியக உணர்வை வரவழைப்பதில் மிகவும் சராசரியான கதை முக்கிய பங்காற்றுகிறது.

காதல் கதையின் வரலாற்றுப் பின்புலத்தில் சுதந்திரப் போராட்டக் காட்சிகள் இருக்கின்றன. அவையும் கூட டெக்ஸ்ட்புக் வரலாற்றின் தரத்தில் கூட இல்லை. இறுதிக் காட்சியில் இந்தியா சுதந்திரம் வாங்கும் தருணத்தில் இரசிகன் காதலர்கள் எப்படியாவது சேரமாட்டார்களா என்று ஏங்குகிறான்.

கால்ப் மைதானத்திற்காக டோபிகனாலை அப்புறப்படுத்தும் அநீதியை எதிர்த்து பரிதியும் அவனது நண்பர்களும் வெள்ளையர்களைத் தாக்குவது கூட காதலின் நியாயத்திற்காகவே வலிந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. வெள்ளை அதிகாரிகள் காலனிய ஆட்சியினாலும், காதலுக்கு எதிரிகள் என்ற முறையிலும் வில்லன்கள். வண்ணாரப் பேட்டையின் குஸ்தி வீரனாக நாயகன். தமிழ் வெட்கத்தை என்னவென்றே அறிந்திராத வெள்ளையினப் பெண் நாயகி. எனில் இங்கே வரலாற்றுக்கு தேவையே இல்லை என்றாகி விடுகிறது.

இலண்டனில் இருந்து வந்த இளம்பெண் வண்ணாரப்பேட்டை நாயகனை காதலிப்பதான இயக்குநரின் துணிச்சல் அந்தக்கால எம்.ஜி.ஆர் ஃபார்முலாபடி இரசிகன் ஏற்றுக் கொள்வான் என்பதில்தான் படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சுண்டினால் சிவக்கும் வெள்ளை நிறப் பெண்ணை மாநிற இரசிகர்களான தமிழ் ஆண்கள் ஒன்றிப்பார்ப்பார்கள். கூடவே வெள்ளைப் பெண்ணை அடைய வெள்ளை ஆண்களை வீழ்த்தும் தமிழ் நாயகனது ஹீரோயிசத்திலும் இரசிகன் ஒன்றுவான் என்பது இயக்குநரின் மலிவான நம்பிக்கை. அது வீண்போகாமல் கூட இருக்கலாம்.

ஆனால் இப்படி ஒரு கதையின் தேவை என்ன? வழக்கமான தமிழ் ஃபார்முலாவையே ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் எடுக்கலாம் என்பதைத் தவிர இயக்குநர் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. அதனால்தான் இங்கு வரலாறு என்பது அருங்காட்சியக அலங்காரங்களாய் உறைந்து போகிறது. இந்திய வரலாற்றின் கொந்தளிப்பான அந்த காலகட்டத்தின் வரலாற்று உணர்ச்சியை இயக்குநர் தன்னளவில் கற்றிருக்கவில்லை.

வெள்ளையர்களை வில்லன்களாக காட்டியிருப்பது கூட காதலின் நியாயத்தில்தான் நிற்கிறதே அன்றி காலனிய ஆதிக்கத்தில் அல்ல. காலனியாதிக்க காட்சிகளெல்லாம் சமூக தளத்திலல்லாமல் காதல் தளத்தில் நின்று கொண்டு பக்கவாத்தியமாய் அதுவும் அபஸ்வரமாய் துருத்துகின்றன. நாயகி கோரியபடி தமிழ்ப் பண்பாட்டை நாயகன் அறிமுகப்படுத்தும் பாடலில் பாம்பாட்டி, கழைக்கூத்தாடி, மசூதி செல்லும் இசுலாமியர்கள், ஐயர், இவர்கள் சர்வமத சகோதரத்துவமாக கட்டிப்பிடித்தல், யானை ஆசிர்வாதம், கடற்கரை, மாமல்லபுரம் என்று வரும் காட்சியிலேயே பண்பாடு என்றால் என்னவென்று இயக்குநர் எழுதியிருப்பது பளிச்சென்று தெரிகிறது. உண்மையில் இந்தப் பண்பாடு அற்ற பார்வை மேலோட்டமான, ஆதிக்கமான வெள்ளையறிவினால் முன்முடிவோடு கருதப்பட்ட சலிப்பூட்டும் பார்வை. ஆக வெள்ளையறிவினால் புனையப்படும் அறிவு தமிழ் இயக்குநரின் வழியே பிதுங்குகிறது என்றால் இன்னும் நமது படைப்பாளிகள் காலனிய அடிமைச் சிந்தனையிலிருந்து விடுதலையாகவில்லை என்றுதானே பொருள்?

1945களில் தென்னிந்திய வரலாறு என்பது திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம், விடுதலை இயக்கம் என்று அரசியல், சமூக, பொருளாதாரத்துறைகள் மிகவும் ஊக்கத்துடன் இயங்கிய நேரம். தெலுங்கானா இயக்கம், கீழத்தஞ்சையில் கம்யூனிச இயக்கம், பெரியார் செயலூக்கத்துடன் இயங்கிய காலம், காங்கிரசின் வழியாக ஆதிக்கத்தை தொடர நினைத்த மிட்டா மிராசுதார்கள், பத்திரிகைகள் அரசியல் அமைப்பாளனாய் வெளிவந்த தருணம், இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் புதுமைப்பித்தன் என்று எவ்வளவோ இருக்கிறது. இவை எதுவும் இயக்குநர் அறிந்திருக்கவில்லை அல்லது அவரது கதைக்கு தேவைப்படவில்லை.

அப்படி என்றால் இந்த அந்தக்கால காதல் கதைக்கு என்ன முக்கியத்துவம்? ஒரு வராலற்றுப் பின்புலத்தில் எழுதப்படும் கதை அந்த வரலாற்றுக்கு உண்மையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த வரலாற்றுணர்வு சமூகத்தை பாதித்திருக்கும் இயங்கியலை அறிந்திருக்க வேண்டும். இருந்திருந்தால் இதே காதல் கதையை இப்படியான மொக்கைப் பார்வையில் தந்திருக்க முடியாது.

வரலாறு எனும் மேடையில் ஒரு கதையை எழுதுவென்பது உண்மையில் சிரமமான ஆனால் மிகவும் விருப்பமான விசயம். இயக்குநர் இந்த இரண்டையும் ஒதுக்கிவிட்டு, தமிழ் சினிமா ஃபார்முலாவில் வரலாற்றை வெறும் தோற்றக் காட்சிகளாய் பயன்படுத்தி ஒரு கதை எழுதியிருக்கிறார். ஆதாலால் படம் வளர வளர நாமும் வரலாற்றுணர்வை இழந்து, வெரைட்டியான காட்சிகளில் வரும் காதல் கதையை ஒரு மாற்றத்திற்காக இரசிக்க நினைத்து பின்னர் அதுவும் இல்லாமல் இறுதியில் வெற்றுணர்வை மட்டுமே அடைகிறோம்.

தமிழ் படைப்பாளிகள் அநேகர் தமது படைப்புகளில் குறிப்பிட்ட பாத்திரங்களின் வழியேதான் சமூகத்தை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல தேர்ந்த படைப்பாளி சமூக இயக்கத்தின் சூட்சுமத்தை அறிந்து கொண்டு அதன் வழியில் பாத்திரங்களை செதுக்க வேண்டும். மதராசபட்டினத்தில் அந்த சூட்சுமம் இல்லை என்பதால் நாம் நிறைவான படைப்புணர்வு தரும் அனுபவத்தை பெறமுடிவதில்லை.

பிறகு?

ஆர்யா என்ற நடிகர் ஒரு நட்சத்திரமானது நிச்சயம் அதிர்ஷடம்தான். எல்லா தருணங்களிலும் அவரது முகம் ஒரே உணர்ச்சியைத்தான் வெளிப்படுத்துகிறது. நாயகி பரவாயில்லை, வெள்ளைக்காரப் பெண்ணாக இருந்தாலும் தமிழ் வெட்கத்தைக் காட்டி காதல் வயப்படுவதை செய்திருக்கிறார். கலை இயக்குநர் எல்லாவற்றையும் புதிதாக எழுப்பியிருக்கிறார். அதில் குறிப்பிட்ட காலகட்டத்தின் தேய்மானம் எந்த பொருட்களிலும் இல்லை. பாலிஷ் போடப்பட்ட அருங்காட்சியகத்தை படம் முழுக்க பார்க்கிறோம். மேலும் படத்தின் கருவுக்கு இதுதான் தேவைப்பட்டது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

இசையும், பாடல்களும், உரையாடல்களும் சலித்துப்போன வழமையான உணர்ச்சிகளையே மீட்டுவருகிறது. இயக்குநர் நேட்டிவிட்டிக்காக நிறைய மெனக்கெட்டு, தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்துதான் இந்தப்படத்தை போராடி எடுத்திருக்கவேண்டும். எனினும் அந்த போராட்டம் எதையும் நமக்கு அனுபவமாக வழங்கிடவில்லை என்பதால் ஆயாசம்தான் மிஞ்சுகிறது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமா எப்போதும், இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வாழ்க்கைக்கு  அருகாமையில் வரப்போவதில்லை என்ற நீதியை மதராசபட்டினமும் நிரூபிக்கிறது.
கஷ்டப்பட்டு பலரது உழைப்பில் எடுக்கப்படும் இத்தகைய படங்களை நோகாமல் விமரிசிப்பதுதான் வினவின் நோக்கம் என்று சிலர் இப்போதும் மறுமொழி இடக்கூடும். ஒருவர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பது முக்கியமல்ல, அந்த உழைப்பின் சமூக விளைவு என்ன என்பதே நம் கரிசனத்திற்குரியது.

திருடன் கூட ஜாலியாக திருடுவதில்லை. கஷ்டப்பட்டு திட்டம் போட்டு, நோட்டம் பார்த்து, ரிஸ்க் எடுத்துதான் திருடுகிறான். என்னதான் ஊழல் செய்தாலும் அம்பானி சகோதரர்கள் தமது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை தக்கவைக்கவும், விரிவு படுத்தவும் கஷ்டப்பட்டுத்தான் உழைக்கிறார்கள். என்னதான் குடும்ப ஆட்சிக்காக பாடுபட்டாலும் கருணாநிதி கூட கஷ்டப்பட்டுத்தான் உழைக்கிறார். ஆப்கானில் உள்ள அமெரிக்க இராணுவம் கூட சுடும் பாலைவனத்தில் கஷ்டப்ப்டடுத்தான் மக்களைக் கொல்கிறது. இவர்கள் அளவு நாம் கஷ்டப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனாலும் நாம் இவர்களை ஆதரிப்பதில்லையே?