privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉமாசங்கர் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் ! பதிவர் “சவுக்கு” சங்கர் கைது !!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் ! பதிவர் “சவுக்கு” சங்கர் கைது !!

-

உமாசங்கர் IAS சஸ்பெண்ட் !

சிறுசேமிப்புத்துறை ஆணையராக இருந்த உமாசங்கர் 21.7.2010 அன்று தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக பலிகடாவாக்கப்பட்டிருக்கும் உமாசங்கரைப் பற்றி சமீபத்தில்தான்  கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தோம்.

ஜெயா ஆட்சியின் போது சுடுகாட்டுக்கூரை ஊழலை வெளிக்கொணர்ந்த உமாசங்கர் மீது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் தி.மு.க அரசு ஆரம்பத்தில் உறவு கொண்டது. அதன்படி அரசு கேபிள் டி.வி இயக்குநராக நியமிக்கப்பட்டதும் மாறன் சகோதரர்களது சுமங்கலி டி.வியின் முறைகேடுகளுக்கு எதிராக உமாசங்கர் செயல்பட ஆரம்பித்தார்.

பின்னர் மாறன்களும் கருணாநிதி குடும்பமும் சேர்ந்து கொண்ட போது உமாசங்கர் வில்லனாக்கப்பட்டார். சுமங்கலி டி.வியை நாட்டுடமையாக்கவும், தயாநிதி மாறனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியதை மாறன்கள் மறக்கவோ மன்னிக்கவோ  தயாரில்லை. அதை தடுப்பதற்கு கருணாநிதியும் தயாரில்லை. பிரிவினை வந்த குறுகிய காலத்திலும் மாறன்களுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நல்லுறவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் உமா சங்கரை பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று சொல்லி விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்ற உமாசங்கர் தான் பழிவாங்கப்படுவதற்கான காரணத்தையும் தெளிவாகவே தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் வழியாக தண்டிப்பதற்கு காலதாமதம் ஆகுமென்ற காரணத்தைக் கூட தாங்கிக்கொள்ளாத தி.மு.க அரசு நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து தனது பாசிச வெறியை தணித்துக் கொண்டது. அவரை என்ன முகாந்திரத்தில் சஸ்பெண்ட் செய்தார்கள் என்பது எந்த நாளிதழிலும் வெளிவரவில்லை. விசாரித்தாலும் தெரியவில்லை.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டை விசாரிக்கலாமா என்பது நீதிமன்ற வழக்கில் உள்ளதால் அதன்படி இடை நீக்கம் செய்ய வாய்ப்பில்லை. மற்றபடி கிறித்தவ தலித்தான உமா சங்கர் தன்னை இந்து தலித்தாக பொய் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார் என்று ஒரு பழைய புகாரை வைத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த புகாரை தூசிதட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த காலதாமதமே இது பொய் என்பதை தெளிவாகக் கூறுகிறது.

இரண்டு கழகங்களின் ஆட்சியிலும் நடந்த ஊழல் முறைகேடுகளை அவர் தடுக்க நினைத்ததால்இப்போது அவரே பொய்யான ஊழல் புகாருக்கு ஆளாகிவிட்டார். அதிகார வர்க்கமும், ஊடகங்களும் அவரைக் கொண்டு கொள்ளவில்லை.

___________________________________________________________

பதிவர் “சவுக்கு” சங்கர் கைது !

2008ஆம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், இவரோடு அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் வெளிவந்தன.

தெரிந்தவர்களை ஊழல் புகாரில் காப்பாற்றும் முயற்சிகள் இதன் மூலம் வெளிவந்தன. வழக்கமாக அரசுக்கு எதிரானவர்களின் தொலைபேசி பேச்சுக்கள் வரும்போது அரசுக்கு ஆதரவானர்களின் பேச்சுக்கள் வெளிவந்தது கருணாநிதி அரசுக்கு கடும் எரிச்சலை தந்தது.

இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ.சங்கர் என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கர், புழல் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்தார். இந்த வழக்கும், இவர் தொடர்பான பணி விசாரணையும் இப்போது நிலுவையில் இருக்கிறது.

சங்கர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழக மனித உரிமைக் கழகம் என்ற இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் “சவுக்கு” எனும் இணையத் தளத்தில் தி.மு.க அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்தார். குறிப்பாக காவல் துறை ஐ.ஜிக்கள் ஜாபர் சேட், சங்கர் ஜிவால் இருவரும், மற்றும் நக்கீரன் காமராஜ் போன்றவர்கள் திடீரேன பெரும் சொத்து சேர்த்ததையும், அதற்கு தி.மு.க அரசை பயன்படுத்தியதையும் விவரங்களோடு சவுக்கு இணைய தளம் எழுதி வந்தது.

தி.மு.க அரசால் பழிவாங்கப்பட்ட நிலையில் சவுக்கு இந்த புலனாய்வுகளை மற்ற ஊடகங்களில் இல்லாத அளவில் செய்து வந்தது. சவுக்கு தளத்திற்கு தகவல் தருபவர்களில் போலீசு, உளவுத்துறை, அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அனைவரும் உண்டு. தனிப்பட்ட காரணங்களினால் கூட சம்பந்தப்பட்டவர்கள் இந்த தகவல்களை தந்திருக்கக்கூடும்.

சவுக்கு இணையதளம் குறிப்பாக பத்திரிகையாளர்களிடம் பிரபலமாகி வந்தது. அதனால் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டவர்கள் எவரும் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சங்கர் எழுதுவதை நிறுத்துவதற்கு அதிகார வர்க்கம் அடக்குமுறையை கையிலெடுத்திருக்கிறது.

நேற்று புதன்கிழமை காலை மதுரவாயிலில் மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்த ஒருவரை தாக்கியதாக சங்கர்மீது வழக்குப் பதிவு செய்து மதுரவாயல் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர். இது முற்றிலும் பொய் வழக்காகும். எந்த சட்டப்பிரிவுகளில் சுலபமாக பிணையில் வரமுடியாதோ அந்த பிரிவுகளில் வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்குதான் இது.

மேலும் சங்கரை போலீசார் சித்திரவதை செய்திருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அவரது எழுத்து அம்பலப்படுத்தல்களை எதிர்கொள்ள முடியாத அதிகார வர்க்கம் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை வைத்து அடக்க நினைக்கிறது.

_______________________________________________________________

உமாசங்கர் இரு கழக ஆட்சிகளின் ஊழலையும் எதிர்த்து நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் இன்று பழிவாங்கப்பட்டுள்ளார். பொதுவில் அரசு, அரசாங்கம் என்று இரண்டையும் நாம் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள், அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதிமன்றம், சிறை ஆகிய துறைகளை உள்ளடக்கியதுதான் அரசு.  இதில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் அமைப்பு மட்டுமே அரசாங்கம். அவ்வகையில் அரசாங்கம் என்பது அரசின் ஒரு உறுப்பு மட்டுமே.

எல்லா அரசுகளும் குறிப்பிட்ட ஆளும் வர்க்கங்களின் நலனை வைத்தே செயல்படும். இந்தியாவில் அது முதலாளிகள், நிலப்பிரபுக்கள், பன்னாட்டுநிறுவனங்கள் அடங்கிய ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது. இந்தியாவின் அரசு எந்திரம் முதலாளிகளின் நலனுக்காக செயல்படுவதை அன்றாடம் நாளிதழ்களில் வரும் பல செய்திகளிலிருந்து அறியமுடியும்.

இந்த எந்திரத்தில் ஒரு அதிகாரி நேர்மையாக செயல்படுவது என்பது ஆளும் வர்க்கம் விதித்திருக்கும் எல்லையை மீறாமல் இருப்பதுதான். அந்த எல்லையை மீறிவிட்டார் என்பதனாலேயே உமாசங்கர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்து செயல்படும் அரசு, நீண்ட கால நோக்கில் முதலாளிகளின் நலனுக்காக முரண்படாமலேதான் செயல்படுகிறது.

ஒரு வேளை முரண்பட்டால் அது முதலாளிகளின் நலனை மையமாக வைத்தே முடிவு செய்யப்படும். மாறன்கள் என்ற தரகு முதலாளிகளும், தி.மு.க என்ற கட்சி இப்போது தரகு முதலாளிகளைக் கொண்ட கட்சியாக மாறியிருக்கும் சூழலில் உமாசங்கரது நடவடிக்கை என்பது முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். அதனால்தான் ‘நேர்மையாக’ செயல்படுவதாக ஊடகங்களால் போற்றப்படும் சில அதிகாரிகள் கூட உமாசங்கருக்கு ஆதரவாக பேசவில்லை.

அரசியல்வாதிகளின் ஊழலைக்கூட எழுதிவிடலாம். ஆனால் அதிகாரவர்க்கத்தின் ஊழலை எழுதினால் அதை எதிர்கொள்வது சிரமம். ஏனெனில் அரசின் திட்டங்கள், கொள்கைகள், கண்காணிப்பு, வழக்கு தொடுத்தல், சிறையிலடைத்தல் முதலான அனைத்து அதிகாரங்களையும் அதிகார வர்க்கமே கையில் வைத்திருக்கிறது. இவர்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள் இல்லை என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இவர்களது அதிகார பலத்தின் வீச்சை புரிந்து கொள்ளலாம்.

ஜாபர்சேட்டின் ஊழல் முறைகேடுகளைப் பற்றி சங்கர் எழுதியிருக்கிறார் என்றால் அதை அந்த  அதிகாரி சட்டத்தினால், ஜனநாயகப்பூர்வமாக  எதிர்கொள்ளவில்லை. தனது மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விளக்கமும் சொல்லவில்லை. எளிமையாக ஒருபொய் வழக்கு போட்டு சங்கர் பிணையில் வராதபடி செய்து விட்டார்.

நக்கீரன் பத்திரிகை பாசிச ஜெயாவை எதிர் கொண்டு வளர்ந்தது எவ்வளவு உண்மையோ அந்த அளவு தி.மு.கவுக்கு ஜால்ரா கும்பலாக மாறியதனாலும் ஆதாயம் அடைந்திருக்கிறது. அதை சங்கர் அம்பலப்படுத்தியதும் தனது தி.மு.க ஆதரவு பலத்தினால் நக்கீரன் அதை எதிர்கொள்ளத்தானே செய்யும்? கேட்டால் நக்கீரன் காமராஜ் ரொம்ப நியாயமாக சங்கர் கைது செய்யப்பட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று கூறுவார். இருந்தாலும் இந்தக் கைதினால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தவரும் அவர்தான் என்பதை அவரால் மறுக்க முடியுமா?

தி.மு.க அரசாங்கம் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசாக மாறி, அதன் தலைமையே பெரும் முதலாளிகளாக மாறிவிட்ட நிலையில் அதிகார வர்க்கம் முழுதும் அதன் அடியாளாகவே செயல்படும். அதன் விளைவுதான் உமாசங்கரையும், சங்கரையும் அதிகார வர்க்கம் தனது அதிகார பலத்தினால் தற்போது தண்டித்திருக்கின்றது. இனியும் தண்டிக்கும்.

இணையத்தில் எழுதுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் ஆளாய் சங்கர் இருப்பார் என்று தோன்றுகிறது. எனினும் இந்த பட்டியல் சங்கரோடு முடிவடையாது. அல்லது எழுதும் மற்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கு பணிந்து போவதா எதிர்கொள்வதா என்பது எழுதுபவர்களின் அரசியல் புரிதல், அர்ப்பணிப்பைச் சார்ந்தது. ஆனானப்பட்ட பழ கருப்பையா வீட்டுக்கே ஆட்டோ வரும்போது சங்கரெல்லாம் எம்மாத்திரம்?

இதனால் நாம் தளர்ந்து போவோம் என்பதுதான் அதிகார வர்க்கங்களின் கணிப்பு.  அது பொய் என்று காண்பிப்பது நமது கையில். இல்லையேல் உமாசங்கர், சங்கர் வரிசையில் இன்னும் சிலர் சேரக்கூடும்.

ஆயினும் இதை அமைதியாக ஏற்கப் போகிறோமா? இல்லை இந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கப் போகிறோமா?

________________________________________________________________