முகப்புதில்லைக்கோயில் தீண்டாமைச் சுவர்: மார்க்சிஸ்டு – கலைஞர் நிழற்சண்டை!
Array

தில்லைக்கோயில் தீண்டாமைச் சுவர்: மார்க்சிஸ்டு – கலைஞர் நிழற்சண்டை!

-

“தில்லைக் கோயிலின் தீண்டாமைச் சுவரை அகற்றவேண்டும்” என்று  ஜூலை 14 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியினர் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் வலது கம்யூனிஸ்டு கட்சி சிதம்பரத்தில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இது குறித்து அறிக்கை விட்டுவிட்டார். அடுத்து பா.ஜ.க வின் போராட்ட அறிவிப்பும் வெளிவரக்கூடும். அவ்வளவு ஏன்,  தீண்டாமைச் சுவரை அகற்றக்கோரி தீட்சிதர்களும் போராடக்கூடும். சிங்கள கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து திமுகவும் காவிரிக்காக காங்கிரசும் போராடுவதில்லையா, அதுபோலத்தான்.

ஒரு நியாயமான கோரிக்கையைப் பலரும் ஆதரிக்கும்போது நாம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் சிதம்பரம் பிரச்சினை தமிழகத்தின் சர்வகட்சிப் பிரச்சினையாக மாறிவருவதால், காவிரிப் பிரச்சினையின் கதி இதற்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. அதைத் தடுக்கும் பொருட்டு சில உண்மைகளை மீண்டும் மீண்டும் உரத்துக் கூறவேண்டியிருக்கிறது.

மார்க்சிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்திய மறுநாளே தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. முதல்வரின் அறிவுரையின்படி  தீட்சிதர்கள் வசமிருந்த சிதம்பரம் நடராசர் கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், இதற்கெதிராக தீட்சிதர்கள்  போட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில் கட்டுமானங்கள் எதையும் இடிக்கக் கூடாதென்று 15.3.2010 அன்று உத்தரவிட்டிருப்பதாகவும், சுவரை அகற்றக்கோரும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் அரசு மேற்கொண்டுவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதுதான் என்றும் கூறியது அந்த செய்திக்குறிப்பு.

மறுநாள் காமராசர் பிறந்தநாள் விழாவில் பேசிய கருணாநிதி, “கேட்கக் கூடாததை வேண்டுமென்றே கேட்டு, ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே இப்போராட்டத்தின் நோக்கம்” என்று சாடியது மட்டுமின்றி, “நந்தனார் இருந்தாரா இல்லையா என்பதை பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்”  என்று கூறி  தீட்சிதர்களுக்கு ஆதரவாகப் பெரியாரை இழுத்து வந்து ஆஜராக்கினார்.

‘கோபுரத்தை தாங்குவது நீயா நானா’ என்று இரு பொம்மைகள் அடித்துக்கொள்வதை  அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள் குனிந்து அஸ்திவாரத்தைப் பார்ப்பதில்லை. தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு திடீரென்று களம் இறங்கியிருக்கும் மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதையை முதலில் பார்ப்போம். 2006 ஆம் ஆண்டில் சிதம்பரம் நகரில் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டுப் போராட்டக்குழுவிலிருந்து வெளியேறினார் மார்க்சிஸ்டு கட்சியின்  நகரச்செயலர் மூசா. ‘தீட்சிதப் பார்ப்பனர்கள்’ என்று கூறுவது பிராமணர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதுதான் அவர் தெரிவித்த காரணம். பிறப்பால் இசுலாமியராக இருந்தபோதிலும் மூசாவுக்கு கோயிலுக்குள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள் தீட்சிதர்கள்.

தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டியதும், கோயிலை அரசு மேற்கொள்ளும் உத்தரவை உயர்நீதிமன்றத்தில் பெற்றதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும்தான் என்பதையும், இப்போராட்டத்தில் துவக்கமுதல் துணநின்றவர்கள் முன்னாள் அமைச்சர் விவி.எஸ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்   போன்றோர்தான் என்பதையும் தமிழகம் அறியும்.

இருப்பினும் கடுகளவும் கூச்சமில்லாமல் இவை தங்களுடைய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சிதம்பரம் நகரில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டார்கள் மார்க்சிஸ்டுகள். அக்கட்சியின் வழக்குரைஞர் செந்தில்நாதன், தில்லைக்கோயில் வழக்குகள் பற்றி எழுதிய சிறுநூலில், வழக்கை நடத்திய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பெயரை  ஒரு விவரம் என்ற அடிப்படையில் கூடப் பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்தார்.

இப்போது தீண்டாமைச் சுவர் விவகாரத்தில் திடீரென்று தலை நுழைத்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். அவர்களுக்கு  உச்சநீதிமன்றத்  தடை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோயிலை அரசு மேற்கொண்ட மறுகணமே தீட்சிதர்கள் அம்மாவின்  காலில் விழுந்ததும், அம்மாவை சு.சாமி சந்தித்ததும், அவர்தான் இந்தத் தடையை வாங்கியவர் என்பதும் மார்க்சிஸ்டுகளுக்குத் தெரியுமா, தோழமைக் கட்சியாகிய தீட்சிதர்களை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்துவதற்கு அம்மாவிடம் அவர்கள் அனுமதி பெற்றிருக்கிறார்களா என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை.  “சுவரை அரசு இடிக்காவிட்டால் நாங்கள் இடிப்போம்” என்று சிதம்பரத்தில் வீரவசனம் பேசியிருக்கிறார்கள் மார்க்சிஸ்டு தலைவர்கள். ‘புனிதமான’ உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மீது மார்க்சிஸ்டுகள் கடப்பாரையை இறக்கும் காட்சியையும், தீட்சிதப் பார்ப்பனர்களின் திருவுள்ளத்தைப் புண்படுத்தும் காட்சியையும் தரிசிப்பதற்கு நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மார்க்சிஸ்டுகள் கதையை விடவும் மாணப்பெரியது கலைஞரின் வசனம். தில்லைக் கோயிலை அரசாங்கத்தின் பிடியில் கொண்டு வந்துவிட்டதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறார் முதல்வர். ‘இந்தா பிடி’ என்று தீட்சிதரின் குடுமியை அரசின் கையில் கொடுத்தது நீதிபதி பானுமதியின் தீர்ப்பு. ஆனால் அதனைப் பிடிக்கின்ற தைரியம் அரசுக்கு இல்லை. இந்தக் கணம் வரை கோயில் நகை, சொத்துக் கணக்கு முதல் கொத்துச் சாவி வரை எதையும் தீட்சிதர்கள் அரசிடம் ஒப்படைக்கவில்லை. அதைக்கேட்கின்ற தைரியமும் இந்த அரசுக்கு இல்லை. தீர்ப்பை அமலாக்க மறுக்கும் குற்றத்துக்காக தீட்சிதர்களை உள்ளே போட்டிருக்கலாம். கோயிலுக்கு வெளியே தூக்கியும் போட்டிருக்கலாம். கலைஞரின் அரசோ தீட்சிதர்களுக்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூடப் போடவில்லை. கோயிலுக்குள் அறநிலையத்துறை அலுவலகம் திறந்துவிட்டது. ஆனால் வீட்டுச் சொந்தக்காரனைக் கண்டு நடுங்கும் குடித்தனக்காரனைப் போல அங்கே குடியிருக்கிறார் நிர்வாக அதிகாரி.

கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்த மறுகணமே, தீண்டாமைச் சுவரை இடிக்கவேண்டுமென்று கோரினோம். உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் வரை அரசு அசைந்து கொடுக்கவில்லை. இப்போது ‘தடை உத்தரவைக் காட்டி ‘கேட்கக்கூடாததைக் கேட்கிறார்கள்’ என்கிறார் கருணாநிதி.

‘தமிழில் பாடி வழிபடவேண்டும்’ என்ற கோரிக்கை கேட்கக் கூடிய கோரிக்கைதானே!  கலைஞர் ஆட்சி செய்த 2000 ஆண்டில் திருவாசகம் பாடிய குற்றத்துக்காகத்தானே ஆறுமுகசாமியை அடித்து வீசினார்கள் தீட்சிதர்கள். இச்செய்தியை பார்ப்பனப் பத்திரிகையான கல்கி அன்று பிரசுரித்த பின்னரும், ‘சூத்திர’ திமுக அரசு செய்தது என்ன?
அதன்பின் இக்கோரிக்கைக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சிதம்பரத்தில் நடத்திய பொதுக்கூட்டங்களும், தமிழ் பாடச்சென்று கைதான நிகழ்வுகளும் எத்தனை? தமிழுக்கு ஆதரவாக உள்ளூர் திமுகவினர் ஒருவர்கூட குரல் எழுப்பியதில்லை என்பதே உண்மை. தமிழ் பாடும் போராட்டத்தின் வெற்றியைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறக்கவிரும்பிய கல்வெட்டில் அம்மாவட்டத்தின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் பெயர் இல்லை என்ற காரணத்துக்காக, அக்கல்வெட்டையே இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்தனர் கழககக் கண்மணிகள் என்பதும் உண்மை.

தமிழ் பாடுவதற்கான அரசாணையாக இருக்கட்டும், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இருக்கட்டும் இரண்டிலுமே திமுக அரசின் வலது கையை பிடித்து இழுத்து, கட்டை விரலில் மை தடவி உத்தரவில் கைநாட்டு போட வைத்தது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். மக்கள் மன்றத்தில் அதற்கான அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கியவை ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும். இதுதான் உண்மை. ‘கட்டைவிரல் கழக அரசுக்கு சொந்தம்’ என்கிறார் கலைஞர். அந்த உண்மையை நாம் மறுக்கமுடியுமா என்ன? எனினும் இத்தனை ஆண்டுகளில் திமுக அரசு தீட்சிதர்களுக்கு எதிராகத் தனது சுண்டுவிரலைக்கூட உயர்த்தியதில்லை என்பதற்கான ஆதாரங்களை நாம் அடுக்கமுடியும்.

1997 இல் திமுக அரசு கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தபோது அவரது அலுவலகத்தையே நொறுக்கினார்கள் தீட்சிதர்கள். நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரை ‘உண்மையல்ல’ என்று தூக்கி வீசியது சிதம்பரம் போலீசு. “ஐயோ பாவம் வருமானமில்லாத தீட்சிதர்கள்” என்று சட்டமன்றத்தில் கண்ணீர் வடித்தார் காங்கிரசு எம்.எல்.ஏ அழகிரி. அடுத்த சில நாட்களில் தீட்சிதர்கள் போர்த்திய சால்வைக்குள் அடைக்கலமானார் கலைஞர்.

நகைக்களவு உள்ளிட்ட பல குற்றங்களை தீட்சிதர்கள் இழைத்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் கூறியது அறநிலையத்துறை. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு போட்டு உள்ளே தள்ளுமாறு தனது தீர்ப்பில் (1997) குறிப்பிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலய்யா. உள்ளே தள்ளுவது இருக்கட்டும். திமுக அரசு தீட்சிதர்கள் மீது பெயருக்கு ஒரு திருட்டு கேஸ் கூடப் போடவில்லை.

கோயிலுக்குள் கடந்த 25 ஆண்டுகளில் நடந்த மர்ம மரணங்கள், பாலியல் வன்முறைகள்,  களவுகள் ஆகியவை குறித்த ஆதாரங்களைக் கொடுத்தும் சிதம்பரம் போலீசு வழக்கு பதிவு செய்ய மறுத்ததால், சிபிஐ விசாரணை  கேட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர்நீதி மன்றத்தில் மனுச்செய்திருக்கிறது. இதனை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு.  திமுக அரசின் வலது கை ஆறுமுகசாமிக்கு சன்மானம் கொடுத்து விளம்பரம் தேடுகிறது. இடது கையோ கள்ளத்தனமாக தீட்சிதர்களை  அரவணைக்கிறது.

2008 இல் அரசாணைப்படி தமிழ் பாடச்சென்ற ஆறுமுகசாமியை மட்டுமின்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே தீட்சிதர்கள் தாக்கியதை தொலைக்காட்சியில் நாடே பார்த்தது. அந்தத் தீட்சிதர்கள் தனிச்சமையல் செய்து சாப்பிட சிறையில் அடுப்பும் அரிசியும் கொடுத்து அவர்களுடைய பார்ப்பனப் புனிதத்தை பேணியது சிறை நிர்வாகம்.

பல கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை தீட்சிதர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு திருட்டுத்தனமாக விற்றிருப்பதற்கான ஆவணங்களை  தேடிப்பிடித்து புகார் கொடுத்தும் திமுக அரசு தீட்சிதர்கள் மீது வழக்கு போடவில்லை. அதற்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் வேறு வழியில்லாமல் ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. இப்படி தீட்சிதர்களுக்கு எதிராகத் தனது சுண்டுவிரலைக் கூட அசைக்காத திமுக அரசு, கோயிலைக் கைப்பற்றி சாதனை படைத்துவிட்டதாகக் கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறது.

இப்போது தீட்சிதர்களே எதிர்பார்த்திராத கோணத்தில் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் கலைஞர். “பெரியபுராணம் கற்பனை, நந்தன் கதையே கட்டுக்கதை” என்று பகுத்தறிவு விளக்கம் சொல்லி, தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்கு பெரியாரைத் துணைக்கு அழைக்கிறார்.

பெரியபுராணத்தில் சிவபெருமான் எப்போதுமே அந்தணன்  வடிவில் வருவதும், குயவனும், வேடனும், சலவைத்தொழிலாளியுமான நாயன்மார்கள் அந்தணர்களுக்கு பாதசேவை செய்வதும் கற்பனைகள் அல்ல, நிகழ்காலத்திலும் தொடரும் உண்மைகள். தீண்டாமை இன்றும் உண்மை. அந்த அளவில் நந்தன் கதையும் உண்மை. தீண்டாமைச் சுவரும் உண்மை.

பழங்கதை கிடக்கட்டும். புதுக்கதைக்கே வருவோம். 1880 களில் “தில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரே, நந்தனாரின் ஆள் உயரச்சிலை இருந்ததாகவும், அங்கே அமர்ந்துதான் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் கீர்த்தனை எழுதினார்” என்றும் உ.வே.சா பதிவு செய்திருக்கிறார். 1935 இல் அந்தச் சிலையை அங்கே பார்த்திருப்பதாகவும், பின்னர் 1943 இல் அதனைக் காணவில்லை என்றும் முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பேராசிரியர் கொண்டல் சு மகாதேவனும் எழுதியிருக்கிறார்.

இது அய்யரே கூறியிருக்கும் உண்மை என்பதால் கலைஞர் தைரியமாகப் பேசலாம். ராமர் பாலத்தையோ தீண்டாமைச் சுவரையோ இடிப்பது ‘சாமி’ குத்தம் ஆகிவிடும் என்று அவர் அஞ்சக்கூடும். அழிவு வேலை என்று தயங்கவும் கூடும். சிலை வைப்பதென்பது ‘ஆக்கபூர்வமான’ வேலை மட்டுமின்றி கலைஞரின் மனதுக்கிசைந்த கலையும் அல்லவா? உளியின் ஓசையை அவர் உள்ளே எழுப்பட்டும். வெளியே, தீண்டாமைச் சுவரின் மீது கடப்பாரையின் இசையை நாம் எழுப்புவோம்.

___________________________________________

தொரட்டி, புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010

___________________________________________

தொடர்புடைய பதிவுகள்

 1. தில்லைக்கோயில் தீண்டாமைச் சுவர்: மார்க்சிஸ்டு – கலைஞர் நிழற்சண்டை!…

  ‘தீட்சிதப் பார்ப்பனர்கள்’ என்று கூறுவது பிராமணர்களின் மனதைப் புண்படுத்தும் என்று கூட்டுப் போராட்டக்குழுவிலிருந்து வெளியேறினார் மார்க்சிஸ்டு கட்சியின் நகரச்செயலர் மூசா….

 2. நீங்கள் எழுதியுள்ளவற்றில் எதுவெல்லாம் உண்மை எனத் தெரியவில்லை. எனினும், தீண்டாமையை எதிர்ப்பதில் நானும் உங்களுடன் பங்கு கொள்கிறேன்.

 3. என்ன தோழர் கலைஞரை இப்படி இக்கட்டில் மாட்டி விடுகின்றீர்கள் ?.

  பெரிய மாறன் மற்றும் சின்ன மாறனின் பத்தினிகள், பார்ப்பன குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தானே ?

  (ஒரு சம்பந்தி வகையறா இந்து ராம் குடும்பம்)

  மற்ற சம்பந்தி வகையறா (பார்ப்பனர்) பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாராவது கலைஞரின் திராவிட வெற்றிகள் பற்றி பிஹெடி செய்பவர்களை கேட்கவேண்டும்.

  பெரியாருக்குப் பின்பு திராவிட இயக்கத்தில் வந்தவர்கள் எல்லோரும் பிழைப்புவாதிகள்.

 4. தோழர்களே,

  கீழ்கண்ட பதிவு தில்லைப் போராட்ட காலங்களில் எழுதப்பட்டது. இப்பதிவுடன் தொடர்புடைய தகவல் என்பதால் இத்தனை நெடிய பதிவை இங்கே பதிவிட்டுள்ளேன். சிரமம் கருதாமல் தோழர்கள் படிக்கவேண்டும். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி!
  ==============================================

  Thursday, March 27, 2008
  தில்லைத் தீண்டாமைப் போராட்ட‌மும், சி.பி.எம். மின் புர‌ட்டுக்க‌ளும்…..

  அன்பார்ந்த தோழ‌ர்க‌ளே!

  சென்ற 22/03/2008 சனிக்கிழமையன்று நடப்பதாக இருந்த, ‘சிதம்பரத்தில் நடந்துவரும் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் பங்கெடுத்து போலீசின் கடுமையான தாக்குதலுக்குள்ளான, மற்றும் சிறை சென்ற போராளிகளுக்கு பாராட்டுவிழா’ப் பொதுக்கூட்டம், தொடர்ச்சியான மழையால் வரும் 29/03/2008க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

  இந்தப் பொதுக்கூட்டம் இதுவரை நடந்த இடைவிடாத போராட்டதை மக்கள்முன் தெளிவாக எடுத்துவைப்பதற்காக‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீட்சிதபார்ப்பன‌ர்கள் தமிழுக்கு எதிரியே அல்ல என்றும் கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திககம்யூனிஸ்டுகள் தான் (கம்யூனிஸ்டு என்றாலே நாத்திகத்தையும் உள்ள‌ட‌க்கிய‌துதானே, இதுல என்ன ‘நாத்திககம்யூனிஸ்டு’ன்னு! என்று யாரும் குழம்பவேண்டாம், இது போலிகளை மனதில் வைத்து ஏற்படுத்தப்பட்ட சொல்லாடல்) இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி ‘ஏதோ பிராமணர்கள் எல்லோரும் தமிழுக்கு எதிரிகள்’ என்று தவறாக சித்தரிக்க முயலுகிறார்கள். இப்படிக் கூப்பாடு போடுகின்ற பார்ப்பனக்கும்பலின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் இந்தக் கூட்டம் அமையப்போகிறது. எனவே, கம்யூனிச/நாத்திக ஆதரவாளர்களைவிட அக்கிரகாரத்து அம்பிகளையும், அம்பிகளின் எடுப்பு,தொடுப்புகளையும், இந்தக்கூட்டத்தில் பங்குபெற அழைக்கிறேன்.

  இந்தப் போராட்டத்தை எமது தோழ்ர்கள் அரும்பாடுபட்டு வெற்றியின் முகட்டிற்கு தரதரவென இழுத்துவந்திருக்கிறார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையத்தை (HRPC) சார்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களிலும், மக்கள் கலை இலக்கியக்கழகம், விவசாயிகள் விடுதலை முன்னனி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி போன்ற அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் சிதம்பரம் வீதிகளிலும் தொடர்ச்சியாக போராடியிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசானை வந்தபிறகும் நடைபெற்ற போராட்டங்களில், சிவனடியாரைத் தவிர கைது செய்யப்பட்ட அனைவருமே மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள்தான்.

  எம‌து இய‌க்க‌ங்க‌ளின் பெருமை பேசுவ‌தற்காக‌ நான் இதையெல்லாம் இங்கே ப‌ட்டிய‌லிட‌வில்லை. மாறாக‌, இதுநாள்வ‌ரை தீட்சித‌பார்ப்ப‌ன‌ர்க‌ளின் செருப்புக‌ளுக்கு காவ‌ல்காத்துக்கிட‌ந்த‌ மான‌ங்கெட்ட‌ கும்ப‌ல் ஒன்று இப்போது த‌மிழ‌க‌மெங்கும் சென்று இத‌னைச்சாதித்த‌து நாங்க‌ள்தான் என்று ச‌ந்த‌டிச்சாக்கில் சிறிதும் கூச்ச‌மின்றி பித‌ற்றிவ‌ருகிற‌து. இது மேற்க‌ண்ட‌ பார்ப்ப‌ன‌க்கும்ப‌லின் ஓல‌த்தைவிட‌ சிறிது சுருதி குறைந்து இர‌க‌சிய‌மாக‌ (திருட்டுத்த‌ன‌மாக‌ ந‌ம் காதுக‌ளிலிருந்து த‌ப்பிக்கும் நோக்கில்) ஒலித்தாலும், அது பார்ப‌ன‌ஓல‌த்தைவிஞ்சும்‌ கேவ‌லமான‌தொரு தோற்ற‌த்தைத் த‌ழுவி அம்ம‌ன‌மாக‌ நிற்பது அம்பலமாகிற‌து.

  சித‌ம்ப‌ர‌ம் ந‌க‌ர‌த்தில் தி.மு.க‌., அ.தி.மு.க‌.வுக்கு இணையான‌ செல்வாக்குட‌ன் (பொறுக்கித்திண்ப‌தில்) திக‌ழும் போலிக‌ம்யூனிஸ்டு என்று ம‌க்க‌ளால் அழைக்க‌ப்ப‌டுகிற‌ சி.பி.எம். க‌ட்சிதான் அது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட சிதம்பரம் தொகுதி சி.பி.எம். கட்சிக்கே ஒதுக்கப்பட்கது. தி.மு.க. கூட்டனி வேட்பாளராக பாலகிருஷ்ணன் என்பவர் நிறுத்தப்பட்டு மண்ணைக்கவ்வினார் என்பது வேறுவிஷயம். இப்போது விஷயத்திற்கு வருவோம்.

  ம‌க்க‌ள் பிர‌ச்சினையைப் பேசுவ‌தைவிட‌ க‌ட்ட‌ப்ப‌ஞ்சாய‌த்து பேசி காசுபார்ப்ப‌த‌ற்காக‌வே க‌ட்சியின் முக்கிய‌ பொறுப்பிலிருக்கும் பொறுக்கிக‌ள் நிர‌ம்பிய‌ சித‌ம்ப‌ர‌ம் ந‌க‌ர‌ சி.பி.எம். க‌ட்சியின் ‘முக்கிய‌’ பிர‌முக‌ர்தான் சித‌ம்ப‌ர‌ம் ந‌க‌ர‌செய‌லாள‌ராக‌ இருக்கும் ‘மூசா’ என்ப‌வ‌ர்.தீட்சித‌பார்ப்ப‌ன‌ர்கள் கோவிலுக்குள்ளேயே செய்த‌ கொலைகளுக்காக‌ போலீசுக்கு முதலில் புகார் கொடுத்த‌‌வ‌ரும் இவ‌ரே. இவ்வ‌ள‌வு போர்க்குண‌ம் நிர‌ம்பிய‌(!) மாபெரும் த‌லைவ‌ர்(!!) பிற‌கு இந்த புகார் குறித்து என்ன‌ செய்தார் என்று தெரிந்துகொள்ள‌ அவ‌லாயிருக்கிறீர்க‌ள் தானே? இந்த‌ செய்தியைக் கேள்விப‌ட்ட‌தும், முஸ்லீம் குடும்ப‌த்தைச் சார்ந்த‌ ‘மூசா’வை கோயிலுக்குள் அழைத்துச் சென்று ப‌ட்டுத்துண்டு போர்த்தி மாலைபோட்டு, கொஞ்ச‌ம் விபூதியை அவ‌ர் வாயில் (அதான் நெற்றியில் பூச‌மாட்டாரே, க‌ம்யூனிஸ்ட்ல்ல!!) திணித்து அனுப்பிவிட்ட‌ன‌ர் தீட்சித‌ர்க‌ள். இன்று வ‌ரை அதை விழுங்க‌வும் முடியாம‌ல் துப்ப‌வும் முடியாம‌ல் த‌ன்து பேச்சையே நிறுத்திவிட்டார். இதுதான் இவ‌ர்க‌ள் ப‌ங்குபெற்ற‌ சித‌ம்ப‌ர‌ம் போராட்ட‌த்தின் வீர‌காதை!.

  இத‌ற்கிடையில் இந்த‌ப் போலிக்க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக்குட்ப‌ட்ட‌ அல்ல‌க்கை அமைப்புகளான த‌மிழ்நாடு முற்போக்கு(!) எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம், இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாலிப‌ர் ச‌ங்க‌ம் போன்ற‌ அமைப்புக‌ள் சித‌ம்ப‌ர‌ம் போராட்டத்தை ந‌ட‌த்திய‌து நாங்க‌ள் தான் என்று கூவிவ‌ருகின்ற‌ன‌ர்.

  ஆறுமுக‌சாமிக்கும் த‌மிழுக்கும் எதிரான‌ நீதிம‌ன்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ம‌ற்ற‌ ப‌த்திரிக்கைக‌ள் வெளியிட்ட‌ அள‌விற்குக்கூட‌ அல்லாம‌ல் துண்டுசெய்தியாக‌க் கூட‌ வெளியிடாத‌ இவ‌ர்க‌ள‌து ப‌த்திரிக்கை, அர‌சாணை வ‌ந்த‌பிற‌கு ஆறுமுக‌சாமி சென்று பாடிய‌பிறகு, “இந்த‌ப்போராட்ட‌த்தின் வெற்றிக்குக் கார‌ண‌மான‌ இ.ஜ‌.வா.ச‌ங்க‌த்திற்கு பாராட்டுக்க‌ளை”த் தெரிவித்து ஈன‌த்த‌ன‌மாக‌ செய்தி வெளியிட்ட‌து.வேறுவ‌ழியில்லாமல், எம‌து அமைப்பின் பெய‌ர்க‌ளைக்கூட‌ வெளியிட்டுவிடாம‌ல் மிகுந்த‌ க‌வ‌ன‌த்தோடு எம்மையும் பாராட்டிய‌து.

  இத‌ன் தொட‌ர்ச்சியாக‌ சென்ற‌ 21/03/2008 அன்று திருச்சியில் த‌.மு.எ.ச‌.சார்பில்,’சித‌ம்ப‌ர‌ம் கோயில் – சில‌ உண்மைக‌ள்’ என்று நூல் வெளியிட்டு அத‌ன்மூல‌ம் ஆறுமுக‌சாமியின் வெற்றிக்கு வ‌ழிவ‌குத்த‌தாகச்(?!) சொல்லி த‌ம்முடைய‌ க‌ட்சியைச் சார்ந்த‌ ச. செந்தில்நாத‌ன் என்ப‌வ‌ரை அல்ப‌த்த‌ன‌மாக‌ப் பாராட்டிக்கொண்ட‌து.ஆறுமுக‌சாமிக்கு ஆத‌ர‌வாக‌ ஒரு பிட் நோட்டீசைக்கூட‌ போட‌முடியாத‌ இந்த‌ மான‌ங்கெட்ட‌ கூட்ட‌ம் சிறிதும் வெட்க‌மின்றி இந்நிகழ்ச்சிக்காக‌ திருச்சி ந‌க‌ர‌ சுவ‌ர்க‌ளை த‌ன‌து போஸ்ட‌ர்க‌ளால் நிர‌ப்பிய‌து.

  இப்போது ப‌திவ‌ர் ப‌க‌த்(bagathh.blogspot.com) அவ‌ர்க‌ளுடைய‌ வ‌லைத‌ள‌த்தில் இந்த‌க்கூட்ட‌த்தைச் சார்ந்த‌‌ ர‌மேஷ் என்ற‌ அல்பை கீழ்க‌ண்ட‌வாறு சொல்லியுள்ள‌து கூடுத‌லாக இங்கே உங்களது பார்வைக்கு வைக்க‌ப்ப‌டுகிற‌து.

  ///// NATPUTAN RAMESH said… “புத்தக புரட்சியாளர்களிண் கூடாரம்” த நா.மா.லெ.க யோக்கியர்களே! சிதம்பரம் கோயில் பிரச்சினையில் 2000 பேருடன் இந்திய ஜனனாயக வாலிபர் சங்க தோழர்கள் போராடியதை, 500 பேர் கைது செய்யப்பட்டதை மூடி மறைப்பது தான் உங்கள் யோகிதையா. ஒரு போராட்டத்தில் யார் இணைந்தாலும் மறைப்பதுதான் உங்கள் கேவலமாண புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றீர்.
  March 22, 2008 2:35 AM //////

  க‌ள‌த்தில் போராடிய‌வ‌ர்க‌ள் யார் என்ப‌து சித‌ம்ப‌ர‌ம் ம‌க்க‌ளுக்குத் தெரியும். ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் யார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் இது அந்த‌ ம‌டைய‌னுக்குத் தெரியாது. இந்த‌ வெற்றியின் இர‌க‌சிய‌ம் அவ‌ன் சார்ந்திருக்கிற‌ க‌ட்சிக்கும் தெரியாது.

  வெறும் பிழைப்புவாத‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்தி, சாதார‌ண‌ உழைக்கும் ம‌க்க‌ளிட‌ம் பொறுக்கித்தின்ப‌த‌ற்காக‌ மாநாடு, பேர‌ணி என்று அடையாள‌ நிக‌ழ்ச்சிக‌ளை ம‌ட்டும் ந‌ட‌த்தும் இந்த‌க் கோழைக‌ள் கொல்லைபுற‌மாக‌ வ‌ந்து, எதிர‌னியின் ப‌க்க‌ம் நின்றுகொண்டு லாவ‌னிபாடுவ‌து இவ‌ர்க‌ளுடைய‌ போலித்த‌ன‌த்தை இன்னும் கூடுத‌லாக‌த்தான் காட்டுகிற‌து.

  இது உங்க‌ளுக்கு விய‌ப்பையும் கேலியையும் உண்டாக்க‌லாம். இது உங்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை ஒரு செய்தி. ஆனால் இது தான் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாறு. பா.ஜ‌.க‌.கும்ப‌லின் காவித்துணி அத‌ன் கொலைமுக‌த்தை மூடியிருப்ப‌தைப்போல், சி.பி.எம். க‌ட்சியின் சிவ‌ப்புத்துணி இத்தகைய‌ கேவலங்களை முற்றிலும் மூடியிருக்கிற‌து. இந்த‌ போலி முக‌த்திரை தொட‌ர்ச்சியான எம‌து க‌ள‌ப்போராட்ட‌ங்களில் கிழியும் அல்ல‌து கிழிக்க‌ப்ப‌டும்.

  ஆயிர‌மாண்டுக‌ளுக்கும் மேலாக‌ தீண்டாமையை இந்த‌ ம‌ண்ணில் நிலைநாட்டி வ‌ரும் பார்ப்ப‌னிய‌ம், இந்த‌ சிறு ச‌றுக்க‌லைக்கூட‌ பொறுக்க‌முடியாம‌ல் அர‌ற்றுகிற‌து. இத்த‌னைக்கால‌ம் அத‌ன் கால‌டியில் ப‌ம்மிக்கிட‌ந்த‌ இந்த‌ப் போலிக்க‌ய‌வ‌ர் கூட்ட‌ம் வெற்றுக் கூச்சலிடுகிறது. கிண‌று தோண்ட‌ப்போய் பூத‌ம் கிடைத்த‌து. நாம் பூதத்தின் ப‌ல்லைப்பிடுங்கியாகிவிட்ட‌து, பார்ப்ப‌ன‌ பூத‌ம் செய‌லிழ‌ந்துகொண்டிருக்கிற‌து. இப்போது அத‌ன் புழுக்கைக‌ளின் ஓல‌ம் ம‌ட்டும் கேட்கிற‌து வேறுவித‌மாக‌…….

  ந‌ன்றி!
  தொட‌ர்ந்து பேசுவோம்!

  தோழ‌மையுட‌ன்,
  ஏக‌லைவ‌ன்.

 5. //அவ்வளவு ஏன், தீண்டாமைச் சுவரை அகற்றக்கோரி தீட்சிதர்களும் போராடக்கூடும். சிங்கள கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து திமுகவும் காவிரிக்காக காங்கிரசும் போராடுவதில்லையா, அதுபோலத்தான்//

  மிக ரசித்த வரிகள்

  உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்

 6. […] This post was mentioned on Twitter by வினவு and Ragu, ஏழர. ஏழர said: http://bit.ly/bwuMll திமுக அரசு தீட்சிதனுடன் கைகோர்து தீண்டாமையை நிலைநாட்டும் அயோக்கியத்தனம் #vinavu […]

 7. நான் சிதம்பரம் வந்ததில்லை ,ஆனாலும் கம்யூனிஸ்ட் நடத்திய போராட்டங்கள் குறித்து தெரியும்,கலைஞர் குறித்தும் இது ஒன்றும் புதிதல்ல ,காஞ்சி சாமியார புடிச்சு ஜெயில்ல போட்டது யாரு ?(காரணம் எதுவாக இருந்தாலும் ) அது ஒரு ப்ராமின் தானே,எனவே எந்த ஜாதி என்பது முக்கியமில்ல ,யாருக்காக என்பது தான் முக்கியம்.கலைஞரையும் கம்யுனிஷ்டுகளையும் ஒன்றாக சேர்த்து சொல்லி இருப்பதை படித்தால்,பிரச்னைகளை தாண்டி உங்கள் இருவருக்கும் உள்ள அரசியல் எதிர்ப்பில் இருந்து எழுதி உள்ளதுதெரிகிறது..இது தான் எதிரிக்கு பலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க