Tuesday, September 26, 2023
முகப்புவீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன்
Array

வீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன்

-

மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஆசாத், மற்றும் உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹேம் சந்திர பாண்டே ஆகியோரைச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றுவிட்டு, துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகக் கதையளந்திருக்கிறது ஆந்திர போலீசு. மாவோயிஸ்டு அமைப்பின் முக்கியமான தலைவர் ஒருவரைக் கொன்றுவிட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது காங்கிரசு அரசு.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த ஒப்புதலின் பேரில், மாவோயிஸ்டுகளுடன் ஒரு போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை சுவாமி அக்னிவேஷ் நடத்திக் கொண்டிருந்த சூழலில் நடத்தப் பட்டிருக்கிறது இந்தப் படுகொலை. போர்நிறுத்தம் தொடங்குவதற்கான தேதியை மட்டுமே முடிவு செய்யவேண்டியிருந்தது என்றும், அது தொடர்பான செய்தியை  தோழர் ஆசாத்திடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த சூழலில்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் சுவாமி அக்னிவேஷ். ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து, இந்தப் படுகொலை குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று கோரியதற்கு, “அதுபற்றியெல்லாம் ஆந்திர அரசுதான் முடிவு செய்யவேண்டும்” என்று சிதம்பரம் மிக அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் கூறியிருக்கிறார் அக்னிவேஷ். “அன்று நான் வேறு சிதம்பரத்தைப் பார்த்தேன். அவரது தோரணையே பகைமையாக இருந்தது. அவர் என் கண்ணைப் பார்த்துப் பேசுவதையே தவிர்த்தார். போர்நிறுத்தம் பற்றிய பேச்சே அவரிடமிருந்து வரவில்லை” என்று கூறியிருக்கிறார் அக்னிவேஷ்.

இம்மாதம் டெல்லியில் நடத்தப்பட்ட நக்சல் பாதிப்புக்குள்ளான மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களின் மாநாடு, அக்னிவேஷின் ஏமாற்றத்துக்கும் சிதம்பரத்தின் அணுகுமுறைக்கும் விளக்கமளிக்கின்றது. போலீசு நிலையங்கள் நவீனமயம், சல்வா ஜுடும் போன்ற சிறப்பு காவலர் படை விரிவாக்கம், துணை இராணுவத்துக்கு ஆளெடுப்பு என பலநூறு கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் உள்நாட்டுப் போருக்கான திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நக்சல் எதிர்ப்புப் போருக்கு மனரீதியில் தயாராகுமாறு துருப்புகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் இராணுவ ஜெனரல். விமான ஓடுபாதைகளும் தளங்களும் போர்க்கால வேகத்தில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பின்புலத்தில்தான் “72 மணிநேரத்துக்கு மாவோயிஸ்டுகள் தமது வன்முறையை நிறுத்தினால், பன்னாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்டிருக்கும் எல்லா ஒப்பந்தங்கள் குறித்தும் பகிரங்கமாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகக்” கூறினார் சிதம்பரம். இந்தச் சவடால் பேச்சும், சமாதானத் தூதும் அநீதியான இந்தப் போருக்கெதிராகக் குரல் கொடுப்போரைத் திசைதிருப்புவதற்கான சூழ்ச்சிகள் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் முழுவீச்சிலான இறுதிப் போரை நடத்தவதற்கு சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து திட்டம் போட்டுவிட்டு, தமிழக மக்களை ஏய்ப்பதற்காக, போர்நிறுத்தம் என்று தேர்தலுக்கு முன்  நாடகமாடினாரே சிதம்பரம், அதே நாடகம்தான்; அதே சிதம்பரம்தான்.

மத்திய இந்தியாவின் கனிமவளங்களை விழுங்குவதற்கு பசித்த மிருகங்கள் போலக் காத்திருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். எந்தக் காரணத்துக்காகவும் கணநேரத் தாமதத்தைக்கூடப் பொறுத்துக்  கொள்ளவோ, ஒப்பந்தங்களைக் கேள்விக்குள்ளாக்கும் மிகச்சிறிய ஆட்சேபங்களையும் சகித்துக் கொள்ளவோ அவர்கள் தயாரில்லை. மத்திய வனத்துறையின் ஆட்சேபங்களையே தூக்கிக் குப்பையில் வீசிவிட்டு, போஸ்கோவுக்கு இடம் பிடித்துக் கொடுக்க ஒரிசா அரசாங்கம் நேரடியாகக் களத்தில் இறங்கியிருக்கிறது. “இத்தகைய அணுகுமுறை பழங்குடி மக்களை மென்மேலும் மாவோயிஸ்டுகளின் பக்கம் தள்ளுவதற்கே வழிவகுக்கும்” என்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் விடுக்கும் கவலை தோய்ந்த எச்சரிக்கைகளையோ, விட்டில் பூச்சிகளைப்போல மாவோயிஸ்டுகளின் தோட்டாக்களுக்குப் பலியாகிவரும் துணை இராணுவப்படை சிப்பாய்கள் மத்தியில் பெருகிவரும் அதிருப்தியையோ கூடக் காதில் போட்டுக்கொள்வதற்கு மன்மோகன் அரசு தயாராக இல்லை.

மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்ற ஆளும்வர்க்கத்தின் அரசியல் நோக்கம் மட்டுமே இந்தப் போரின் வேகத்தைத் தீர்மானிக்கவில்லை.  அரசியல் நிர்ப்பந்தங்கள், இராணுவரீதியான தோல்விகள், மக்களின் கோபம் போன்ற எல்லாக் காரணிகளையும் புறந்தள்ளிவிட்டு, போரை மேலும் முடுக்கி முன்தள்ளுமாறு பன்னாட்டு நிறுவனங்களின் திட்டங்களும் இலாப இலக்குகளும் அரசைத் தார்க்குச்சி போட்டுத் துரத்துகின்றன. தான் அணிந்திருக்கும் ஜனநாயக வெள்ளுடை கோருகின்ற நாசூக்கு கருதி, அக்னிவேஷ் போன்றோரின் முகத்தில் விழிக்கும்போது கூடத் தனது சமாதான முகமூடியையும், பச்சைச் சிரிப்பையும் பராமரிக்க, ப.சிதம்பரத்தால் முடியவில்லை. “போலி மோதலா? நான் நீதி விசாரணை குறித்து பரிசீலிக்கிறேன்” என்று ஒரு விளக்கெண்ணெய் பதிலை வெண்ணெய் போலப் பேசுவதற்குத் தெரியாதவரல்ல சிதம்பரம். அத்தகைய ஜனநாயக சம்பிரதாயங்களின்  காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை.

கைது செய்து, நீதிமன்றத்தில் விசாரித்து அதன் பின்னர்தான் தண்டிக்கவேண்டும் என்ற சட்டபூர்வ வழிமுறையை, அரசியல் சட்டத்தையே மதிக்காத மாவோயிஸ்டுகள் விசயத்தில் எதற்காகப் பிரயோகிக்க வேண்டும்? அரசியல் சட்டத்தையே ஒப்புக் கொள்ளாதவனைச் சுட்டுக் கொல்வதில் என்ன தவறு? என்று பகிரங்கமாக வாதிடுகிறார்கள் பல ஆளும் வர்க்க அறிவுஜீவிகள். “ஆயுதப் புரட்சியின் மூலம் அரசைத் தூக்கி எறிவதுதான் மாவோயிஸ்டுகளின் கொள்கை. சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டாலும் அவர்கள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. பிறகு ஒப்பந்தங்களைப் பற்றி ஏன் பேசவேண்டும். துப்பாக்கிதான் ஒரே தீர்வு” என்று சிதம்பரத்தின் உள்ளக்குரலை ஒலிக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.

புதிய தாராளவாதக் கொள்கைகளை முன்தள்ளும் ஊடகங்கள் உருவாக்கிவரும் பொதுக்கருத்தும் இதுதான். தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது, ஓட்டுப் போடாதவர்களுடைய உரிமையைப் பறிக்க வேண்டும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டு வந்த கருத்துகள் முற்றி, ‘அரசியல் சட்டத்தை ஏற்க மறுப்பவர்களின் ஜனநாயக உரிமைகளை மட்டுமல்ல, அவர்களது உயிர் வாழும் உரிமையையும் பறிக்கலாம்’ என்று கனிந்திருக்கின்றன.

தமது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பழங்குடி மக்களின் கருத்துரிமையை அங்கீகரிப்பதாக மிகுந்த பெருந்தன்மையுடன் கூறும் ஆளும்வர்க்கங்கள், தோழர் ஆசாத்தின் உயிர்வாழும் உரிமையை மூர்க்கமாக நிராகரிக்கின்றன. டாடாவும், மித்தலும், போஸ்கோவும் தண்டகாரண்யாவில் கால் வைத்திருக்கவில்லையென்றாலும் இந்த அரசமைப்புக்கு எதிராக அவர் ஆயுதம் ஏந்தியிருப்பார் என்பதுதான் ஆசாத்தைக் கொல்வதற்கு ஆளும்வர்க்கம் கூறும் நியாயம். டாடாவும் மித்தலும் தண்டகாரண்யாவுக்கு விஜயம் செய்வதற்கு முந்தைய பொற்காலத்திலும், ஆளும் வர்க்கங்களின் சுரண்டலைப் பாதுகாப்பதற்காக இந்த அரசு அங்கம் முழுதும் ஆயுதம் தரித்துத்தான்  நிற்கிறது என்ற உண்மைதான் ஆசாத்தை ஆயுதம் ஏந்த வைத்த புரட்சியின் நியாயம்.

எந்த ‘புனிதமான’ அரசியல் சட்டத்தின் பலிபீடத்தில் தோழர் ஆசாத்தின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தப் புனிதமான அரசியல் சட்டத்தின் மீது உலக வர்த்தகக் கழகமோ, ஒபாமாவோ,ரெட்டி சகோதரர்களோ, சல்வா ஜூடுமோ, துணை இராணுவப் படைகளோ சிறுநீர் கழிப்பதையும் காறி உமிழ்வதையும் இந்த அரசு பொருட்படுத்துவதில்லை. அவையெல்லாம் ஆளும் வர்க்கங்கள் தமது சொந்த நலனை ஈடேற்றிக் கொள்ளும் பொருட்டு அரசியல் சட்டத்துக்கு இழைக்க வேண்டியிருக்கும் தவிர்க்க முடியாத அவமதிப்புகள். இவையெல்லாம் மறுகாலனியாக்கப் புதுயுகத்துக்குப் பொருத்தமான புதிய பூசை முறைகளாகவே அங்கீகரிக்கப் பட்டுவிட்டன. ஆனால் ஆசாத் தனது சொந்த நலன் எதையும் ஈடேற்றிக் கொள்வதற்காக ஆயுதம் ஏந்தவில்லை. ஒடுக்கப்படும் வர்க்கங்களின் நலனுக்காக ஆயுதம் ஏந்தினார் என்பதுதான் அவரது தலைக்கு விலை வைக்கப்படுவதற்கான காரணம். மீறல் அல்ல பிரச்சினை. அந்த மீறல் யாருடைய நலனுக்கானது என்பதுதான் பிரச்சினை. இந்தப் போரின் பொருளை இப்படியும் விளங்கிக் கொள்ளலாம். இது ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுபவர்களுக்கும், ஆளப்படும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுவோருக்கும் இடையிலான போர்.

கடற்படை ஒன்று போக மற்றெல்லாப் படைகளும்  தண்டகாரண்யாவைச் சுற்றி வியூகம் அமைத்துத் தாக்குதல் தொடுத்த போதிலும், ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் இந்த ஆக்கிரமிப்புப் போரை நடத்த வேண்டிய அவசியம் குறித்து இராணுவ மொழியில் உள்துறை அமைச்சர் அடிக்கடி உரையாற்றிய போதிலும், இதனை ஒரு ‘உள்நாட்டுப் போர்’ என்று அறிவிக்க முடியாமல் வல்லரசுப் பெருமிதம் டெல்லியைத் தடுக்கிறது.

அன்று இந்திய சமஸ்தானங்களில் கிளர்ந்தெழுந்த உள்நாட்டுப் போர்களை ஒடுக்கி, மன்னர்களைப் பாதுகாப்பதற்காக 1939 இல் பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய மத்திய ரிசர்வ் போலீசுப் படையும், 1965 இல் இந்திய-பாக் போரை ஒட்டி ‘எல்லைப்பகுதியில் வாழும் இந்திய மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில்’ உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையும் இன்று ஜார்கண்டிலும், சட்டீஸ்கரிலும் முகாமிட்டிருக்கின்றன. 60 ஆண்டுகளாக மணிப்பூருக்குக் காவல் நிற்கிறது இந்திய இராணுவம். இந்திய இராணுவத்தின் 50% படைகள் காஷ்மீரில் ‘அமைதியை’ நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. தற்போது, தண்டகாரண்யாவுக்கு இராணுவத்தை அனுப்புவதற்கு தளபதிகள் தயங்கக் காரணம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இராணுவத்தை ஏவக்கூடாது என்ற தரும சிந்தனையல்ல. இந்தியர்களிடமிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்கே மொத்த இராணுவத்தையும் இறக்கிவிட்டால், அந்நியர்களிடமிருந்து இந்திய எல்லைகளைப் பாதுகாக்க ஆளில்லை என்பதுதான் அந்தத் தளபதிகள் வெளிப்படையாகக் கூறவிரும்பாத உண்மை. இப்படி இந்தியப் பேரரரசின் ‘எல்லை’, அதன் இதயப்பகுதியையே நெருங்கி விட்டதென்ற உண்மையை ஒப்புக் கொள்வது வல்லரசுப் பெருமிதத்துக்கு வேட்டு வைத்து விடுமென்பதால், ‘இது போர் அல்ல’ என்று பம்மாத்து செய்கிறார் சிதம்பரம்.

உண்மையிடமிருந்து தப்புவதற்கு சுயமோசடியைக் காட்டிலும் வீரியம் செறிந்த மருந்துண்டா என்ன? கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பது முதலாளி வர்க்கத்தின் மூடநம்பிக்கை. அந்த நம்பிக்கை தன் கண்முன்னே பொய்த்துக் கொண்டிருப்பதால், தன்னையும் தன் நம்பிக்கையையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, ‘தோற்றுப்போன’ கம்யூனிசத்தைத் தோற்கடிக்கத் தவிக்கிறது முதலாளி வர்க்கம். தான் மரணத்தின் முகத்தில் விழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புரட்சியைக் கொல்ல முனைகிறது ஆளும் வர்க்கம்.

அக்னிவேஷின் கண்களைச் சந்திக்க முடியாமல் சிதம்பரம் முகம் திருப்பிக் கொள்ளக் காரணம் அறம் வழுவிய குற்றவுணர்வோ, நடிப்புத் திறனின்மையோ அல்ல. முயன்றாலும் வெற்றிப் பெருமிதத்தை வரவழைத்துக் கொள்ளமுடியாத அளவிற்கு சவக்களை சிதம்பரத்தின் முகத்தை ஆக்கிரமித்திருப்பதை நாடே பார்த்திருக்கும்போது, சிதம்பரம் மட்டும் பார்த்திருக்க மாட்டாரா என்ன?

எனினும், உண்மை வேறுவிதமாக இருக்கவேண்டும் என்றே சிதம்பரம் விரும்புகிறார். ஆளும் வர்க்கங்களும் அவ்வாறே விரும்புகின்றன. 20 ஆண்டுகள் போர் நடத்தி இலட்சம் பேரைக் காவு கொடுத்த பின்னரும், காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வுக்குக் காரணம் பாகிஸ்தானின் தூண்டுதல்தான் என்று தீர்க்கமாக நம்புகிறது இந்திய ஆளும் வர்க்கம். கிராமங்களை எரித்து, நிலங்களைப் பிடுங்கி, பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி, இளைஞர்களைப் பிடித்துச் சென்று, விலங்குகளினும் கீழாக அமெரிக்கப் பழங்குடிகளை வேட்டையாடிய ஐரோப்பியக் காலனியாதிக்கவாதிகள், அம்மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள முடியும் என்று ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் செவ்விந்திய மக்களை வேட்டையாடிய ஐரோப்பியர்களைப் போலவே, பழங்குடி மக்களை வேட்டையாடும் இந்திய ஆளும் வர்க்கமோ, மாவோயிஸ்டுகளை அகற்றிவிட்டால், தங்களது வளர்ச்சித் திட்டத்தால் பழங்குடி மக்களை வளைத்து விடமுடியும் என்று நம்புகிறது.

அதனால்தான் தோழர் ஆசாத்தின் தலைக்கும், கணபதியின் தலைக்கும் விலை. தலைகளைக் கிள்ளும் கலையில் தேர்ந்த இசுரேல் கொலைப்படைத் தலைவர்களைத் தருவித்து நக்சல் எதிர்ப்புப் படையினருக்குப் பயிற்சி. கிளியோபாட்ராவின் மூக்குதான் சாம்ராச்சியத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்தென்று கருதும் ஆய்வுமுறை வரலாற்றின் குப்பைக்குப் போய்விட்டது உண்மையேயெனினும், வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குச் செல்லக் காத்திருக்கும் வர்க்கங்களும், அவற்றுக்குத் தலைமை தாங்கும் அறிவாளிகளும் அந்த முறையில் சிந்திக்கும்படியே விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்று தங்களது கட்சியின் உயிர்வாழ்வுக்கே தலைகளை நம்பியிருக்கும் கும்பல், ‘தலைகளைக் கிள்ளிவிட்டால் புரட்சி அழிந்துவிடும்’ என்று சிந்திப்பதில் வியப்பேதுமில்லை. முன்னர் ஆசாத் என்பதை ஒரு பெயர்ச்சொல்லாகக் கருதித்தான் பிரிட்டிஷ் சாம்ராச்சியவாதிகள் அவரைப் படுகொலை செய்தனர். பின்னர் தெலிங்கானா முதல் நக்சல்பாரி வரை தேசமெங்கும் முளைத்த புரட்சிகளின் தலைகளைக் கிள்ளிக்கிள்ளி கை ஓய்ந்த பின்னரும் ‘ஆசாத் என்பது வினைச்சொல்’ என்ற உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது ஆளும் வர்க்கம்.

‘தலையைக் கிள்ளினால் புரட்சியைத் தடுத்துவிடலாம்’ என்ற தத்துவத்தின்படி, புரட்சியின் தலையைப் பிடிப்பதற்குத் ‘தேடுதல் வேட்டை’ நடத்திக் கொண்டிருக்கின்றன சிதம்பரத்தின் படைகள். ‘ஆசாத்’ தின் உயிர் தலையில் இல்லை என்ற ஞானம் தமது தலைகள் உருளும் தருணத்தில்தான் அவரகளது மண்டைக்குள் பளிச்சிடும் போலும். அப்படியொரு தருணம் வரமாட்டாது என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழட்டும். அந்தத் தருணத்தை நாம் வரவழைப்போம்.

வீரவணக்கம் தோழர் ஆசாத்!

_____________________________________________

மருதையன், புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010
_____________________________________________

தொடர்புடைய பதிவுகள்

  1. வீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன் | வினவு!…

    கம்யூனிசத்தைத் தோற்கடிக்கத் தவிக்கிறது முதலாளி வர்க்கம்.. தான் மரணத்தின் முகத்தில் விழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புரட்சியைக் கொல்ல முனைகிறது ஆளும் வர்க்கம்….

  2. இந்த அரசாங்கத்தால் மக்களின் போராட்ட நிலமையை புரிந்து கொள்ள முடிய வில்லையே? 🙁 பேருதான் மக்களாட்சி, ஒரு சிலர் நினைத்தை நடத்துகின்றனர். என்ன எழவோ… இந்த கொள்கையை எதிர்பவர்களை சுட்டு கொள்கிறார்கள். ஆசாத் மற்றும் ஹேம் சந்திர பாண்டே அவர்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி.

  3. //இது ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுபவர்களுக்கும், ஆளப்படும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுவோருக்கும் இடையிலான போர்.//

    //தருணம் வரமாட்டாது என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழட்டும். அந்தத் தருணத்தை நாம் வரவழைப்போம்.//

    தோழர் ஆசாத்துக்கு வீரவணக்கம்

  4. கொஞ்ச நாளின் இந்த கும்பல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்த்துவிடும்.

  5. ”அப்படியொரு தருணம் வரமாட்டாது என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழட்டும். அந்தத் தருணத்தை நாம் வரவழைப்போம்.”

    தோழர் ஆசாத்துக்கு வீரவணக்கம்

  6. தோழர் ஆசாத்துக்கு வீரவணக்கம்.
    எழுச்சி மிக்க எழுத்து. மகத்தான நன்றிகள்.

  7. தோழர் ஆசாத்துக்கு வீரவணக்கம்..

    புரட்சியாளர்கள் சமூக எதார்த்தத்திலிருந்தே உருவாகிறார்கள். இந்திய அரசு மக்கள் மீது ஏவி விட்டுள்ள ஒடுக்குமுறைகளும்
    பயங்கரவாதமும் நிலவும் வரை ஆயிரம் ஆசாத்கள் உருவாகி வந்து கொண்டேயிருப்பார்கள்..

  8. தேசமெங்கும் முளைத்த புரட்சிகளின் தலைகளைக் கிள்ளிக்கிள்ளி கை ஓய்ந்த பின்னரும் ‘ஆசாத் என்பது வினைச்சொல்’ என்ற உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது ஆளும் வர்க்கம்.

    தமது தலைகள் உருளும் தருணம் வரமாட்டாது என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழட்டும். அந்தத் தருணத்தை நாம் வரவழைப்போம்.

    வீரவணக்கம் தோழர் ஆசாத்!

  9. புன்னகையுடன் தூக்கி
    எறிந்த வாய்ப்புகளுக்காக‌
    புளித்த வாயுடன்
    காத்திருப்போருக்கு !
    .
    .
    .

    ஆசாத்
    அன்றும் இன்றும்
    ம‌ரணத்தால்
    வலிமை சேர்த்தவன்.

  10. தோழர் ஆசாத்திற்கு வீரவணக்கம்.

    ஆசாத்தின் வழியில் மக்களுக்கு என்றும் பணி செய்வோம்.

  11. மிக அருமையான பதிவுக்கு நன்றி.
    தோழர் மருதையன் பதிவுகளை அடிக்கடி வெளியிடுங்கள் வினவு!
    முடிந்தால் போராடும் தருணங்களையும்

  12. //இது ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுபவர்களுக்கும், ஆளப்படும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுவோருக்கும் இடையிலான போர்.//

    //தருணம் வரமாட்டாது என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழட்டும். அந்தத் தருணத்தை நாம் வரவழைப்போம்.//

    தோழர் ஆசாத்துக்கு வீரவணக்கம்

  13. //இது ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுபவர்களுக்கும், ஆளப்படும் வர்க்கங்களின் நலனுக்காக அரசியல் சட்டத்தை மீறுவோருக்கும் இடையிலான போர்.//‘

    //ஆசாத் என்பது வினைச்சொல்’ என்ற உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது ஆளும் வர்க்கம்//

    //தருணம் வரமாட்டாது என்ற நம்பிக்கையில் அவர்கள் வாழட்டும். அந்தத் தருணத்தை நாம் வரவழைப்போம்.//

    தோழர் ஆசாத்துக்கு வீரவணக்கம!

  14. முன்னர் ஆசாத் என்பதை ஒரு பெயர்ச்சொல்லாகக் கருதித்தான் பிரிட்டிஷ் சாம்ராச்சியவாதிகள் அவரைப் படுகொலை செய்தனர். பின்னர் தெலிங்கானா முதல் நக்சல்பாரி வரை தேசமெங்கும் முளைத்த புரட்சிகளின் தலைகளைக் கிள்ளிக்கிள்ளி கை ஓய்ந்த பின்னரும் ‘ஆசாத் என்பது வினைச்சொல்’ என்ற உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது ஆளும் வர்க்கம்

  15. வல்லமை கொண்டகொடுங்கோலா்கள் ஒருநாள் வீழ்வர்..வீழ்வர்…அப்போது கணக்கு நோ் செய்யப்படும்.தியாகத்தோழர்களுக்கு வீரவணக்கம்.

  16. வல்லமைகொண்ட
    கொடுங்கோலர்களாலும் அவர்களின் ஏவல்நாய்களின் ஈனத்தனத்தினாலும்
    தன்இன்னுயிரை இழந்த தியகத் தோழர்க்களுக்கு எனது சிவப்பு அஞ்சலியை செலுத்துகிறேன்-
    –மாநகர்எருமை.

  17. \\தோற்றுப்போன’ கம்யூனிசத்தைத் தோற்கடிக்கத் தவிக்கிறது முதலாளி வர்க்கம்\\ \\‘அரசியல் சட்டத்தை ஏற்க மறுப்பவர்களின் ஜனநாயக உரிமைகளை மட்டுமல்ல, அவர்களது உயிர் வாழும் உரிமையையும் பறிக்கலாம்\\

  18. தண்டகாரண்யத்தில் பற்றிக்கொண்ட தீ தேசம் முழுதும் பரவும் நாட்கள் வெகுதூரம் இல்லை. அன்று எத்தனை ஆசாத்களை இந்திய ஏகாதிபத்தியம் கொலைசெய்ய முடியும்???

  19. An article of comrade Azad that appeared in ‘Outlook’ clearly reveals his clarity of thought and his commitment to working class. There he equates Indian Constitution to toilet paper. The killing of Azad is a terrible loss to the maoist movement. In today’s ‘Hindu’ Srikant a maoist leader said the police intelligence had tracked the slain maoist leader’s movements knowing his constant touch with swami Agnivesh. It will do good if the CPI[Maoist] party plans its strategy in a way not losing stalwarts like Azad. Their deaths wouldn’t be some personal loss but a nation’s.

  20. தியாகிகளுக்கு வீரவணக்கம்.ஆசாத்தின் வழியில் மக்களுக்கு என்றும் பணி செய்வோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க