Sunday, September 24, 2023
முகப்புஇதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?
Array

இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?

-

வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது.
இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?

_______________________________________________________________________

2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,

“…. அரசியல் புத்தகம் படிப்பதற்குத்தான் தோழர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனக்கென்னவோ அரசியலும் இலக்கியமும் இரண்டு தண்டவாளங்கள். ஒன்றுக்கொன்று இணையாகச் சென்றால்தான் நாம் நம்மை வறண்டு போகாமல் இருக்கச் செய்ய முடியும். துன்பப்படுகிற மக்களைப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும் என ஈரத்தோடு உள்ளே வருகிறவர்கள், எல்லாவற்றிற்கும் அறிவு ரீதியான விளக்கங்கள் அறிந்து கொண்ட பிறகு நெஞ்சில் இருந்த ஈரம் வற்றி விடுகின்றது. இந்த ஈரம் வற்றாமல் பாதுகாப்பது என்னைப் பொறுத்தவரையில் இலக்கியங்கள்தான்…”

என்று குறிப்பிட்டிருந்தார்.

புரட்சிகர அமைப்பிற்குள் புதிதாக வரும் தோழர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு, அறிவுரீதியான அரசியல் விளக்கத்தைத் தெரிந்து கொண்ட பிறகு மங்கி விடுகிறது; அப்படி மங்காமல் தங்குவதற்கு அரசியலுக்கு இணையாக இலக்கியமும் அவசியம் என்கிறார் இந்த வாசகர். அரசியலின் அறிவு, இலக்கியத்தின் உணர்வு இரண்டோடும் உறவு கொள்ளும் புதிய தோழர்களைப் பற்றிய இம்மதிப்பீடு தவறாக இருக்கின்றது. மேலும், அரசியல், மார்க்சியம், கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் உருவாக்கியிருக்கும் பொது உளவியலும், அரசியல்வாதிகள் இரக்கமற்றவர்கள், இலக்கியவாதிகள் ஈரமிக்கவர்கள் என்பதையே அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இத்தகைய இலக்கியவாதிகளைத்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆரத் தழுவி அங்கீகரிக்கின்றனர். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கென்றே த.மு.எ.ச. போன்ற அரட்டை மடங்களை நடத்துகின்றனர். இலக்கியத்தின் அற்பவாதிகளும், கம்யூனிசத்தின் போலிகளும் ஒருவரையொருவர் பற்றி நிற்பதில் முரண்பாடு ஏதுமில்லை.

ஆனால் புரட்சியை நேசிக்கும் புதிய தோழர்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள ஒரு கம்யூனிஸ்டாக மாறுவது குறித்த ஆழ்ந்த பரிசீலனையைத்தான் முதலில் கற்க வேண்டும். வாழ்வில் முதன்முதலாக மார்க்சியத்தைக் கற்கும் இவர்கள் அறிவுரீதியாகப் பெறும் விளக்கம்தான் என்ன?

ஆரம்பமே அவர்களது பழைய அறிவு அழிவதுதான். உலகம், சமூகம், அரசு, பண்பாடு, குடும்பம் அனைத்தும் புதிய பொருளுடன் தென்பட ஆரம்பிக்கின்றன. இவைகள் பற்றிய புதிர்களுக்கு விடை தராத பழைய உலகக் கண்ணோட்டம் உதிர்ந்து போகிறது. விடை தரும் புதிய கண்ணோட்டம் பழைய உலகின் உணர்ச்சிகளை அழிப்பதிலும் தவறுவதில்லை. ஆம். கட்சிக்குள் வரும் புதியவர்கள் தங்களிடமிருக்கும் “ஈரத்தையும், உணர்வையும்’ வெட்டி எறிகிறார்கள். காரணம் அவை புதிய உலகிற்குத் தேவைப்படாத, சுயநலத்திலிருந்து எழும் அற்பவாத மிகையுணர்ச்சிகள்.

இதை எப்படிப் புரிந்து கொள்வது? உயிரின் இயக்கத்தையும் அது நின்று போவதையும் மருத்துவ அறிவியலாகக் கற்றுத் தேறும் ஒரு மருத்துவர் அவரது மனைவி இறந்து போனால் வருந்துவாரா? வருந்துவார். உயிரின் அறிவுரீதியான விளக்கத்தைக் கற்றதனாலேயே அவர் வருந்தாமல் இருக்க மாட்டார். காரணம் அவரது மனைவியுடன் நெருக்கமான ஒரு வாழ்க்கை உறவு உள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தருமபுரியின் கூலி விவசாயி, எலிக்கறி சாப்பிடும் தஞ்சையின் கூலி விவசாயிகளைக் கேள்விப்பட்டாலே வருத்தப்படுவார். இவருக்கு அறிவு ரீதியான விளக்கமோ, இதயத்தைத் தொடும் இலக்கியமோ தேவைப்படுவதில்லை. காரணம் கூலி விவசாயியாகச் சமூகத்தில் கொண்டிருக்கும் உறவு அந்தத் துயரத்தை எந்தப் பீடிகையுமில்லாமலேயே உணர்த்தி விடுகிறது.

இப்படிச் சமூகத்திலிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் கல்வியின்றியே, அறிவு விளக்கமின்றியே சக மனிதனை நேசிக்கும் உணர்வு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இதில் சுயநலம் சார்ந்த உறவு (குடும்பம், உறவினர்) பொருளாதார அடிப்படையிலிருப்பதால் நீடிக்கின்றது. அத்தகைய அடிப்படை ஏதுமற்ற பொதுநலம் சார்ந்த உணர்வு (இலக்கியம் மட்டும் படிப்பவர்களையும் உள்ளிட்டு) வெறும் அனுதாபம் என்ற அளவிலே விரைவில் நீர்த்தும் போகிறது. அரசியல் கல்வி நடைமுறையற்ற சகல பிரிவினருக்கும் இதைத் தவிர்த்த உணர்வு ஏதும் கிடையாது.

ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.

வெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது. உடன் பிறந்தோரை வரதட்சணை, சடங்கு, சாதி எனப் பிற்போக்குச் சங்கிலியுடன் மணம் செய்து கொடுக்கும் தந்தையுடன், கண்டிப்புடன் கூடிய அந்தப் பழைய மரியாதையை இனிமேலும் கொடுக்க முடியாது. பழைய அந்தஸ்தின் மூலம் கிடைத்த நண்பர்கள், கம்யூனிஸ்டு என்ற இந்தப் புதிய தகுதியை விரும்பாத போது அந்த நட்பு எப்படி நீடிக்க முடியும்? கந்து வட்டிக்கு விடும் தாய் மாமனேயானாலும் இனியும் ஒட்டி உறவாட முடியாது. பழைய வாழ்க்கை வழங்கியிருக்கும் இத்தகைய அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் புதிய வாழ்வின் செயலூக்கத்தில் நிச்சயம் வறண்டு போகும்.

அதேபோன்று முதல் வாழ்க்கையில் தோன்றியும் புரிந்துமிராத உணர்ச்சிகளெல்லாம் இந்த இரண்டாம் வாழ்க்கையில் புதிது புதிதாய்ப் பிறந்து வளரும். இன்று தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடும் ஒரு தோழர், அவர் தேவராக வாழ்ந்த நாட்களில் இதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அதிகார வர்க்கத்தையும், காக்கிச் சட்டையையும் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஒரு தோழர், அவர் கூலி விவசாயியாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இவையெல்லாம் இயற்கைக்கு மாறானது என்றே நம்பியிருப்பார். மனைவியுடன் ஜனநாயக முறைப்படி வாழும் ஒரு தோழர் அவர் ஆணாதிக்கவாதியாக ஆட்சி நடத்திய நாட்களை நினைத்து இப்போது வெட்கப்படுவார். சிறைவாசம் அனுபவித்திருக்கும் பெண் தோழருக்கு அவரது பழைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து வெளியேறிய போராட்டம் இப்போதும் நம்பிக்கையளிக்கும்.

இப்படிச் சமூக வாழ்க்கையில் பழைய உணர்வுகள் நீர்த்துப் போய் புதிய உணர்வுகள் மலருகின்றன. கூடவே அரசியல் அரங்கிலும் புதிய கடமைகளுக்கேற்ற உணர்வுகள் பிறக்கின்றன. கம்யூனிசத்தை அறிவியல் ரீதியாகக் கற்பதன் மூலம் புரட்சி சமூக மாற்றம் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட சித்திரங்கள் மறைகின்றன. ராபின்ஹூட் பாணியிலான சாகசம், புரட்சி என்பது ஒரு ரம்மியமான மாலை நேர விருந்து போன்ற “ரொமாண்டிக்’ கற்பனைகள் விரைவிலேயே வெட்கத்துடன் விடை பெறுகின்றன. அதனால்தான் துன்பப்படுகின்ற மக்களைப் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மறைந்து இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி பிறக்கின்றது.

ஏழைகளைப் பார்த்து வெறுமனே இரக்கப்படும் பழைய உலகின் இலக்கியங்களும், திரைப்படங்களும் இனிமேலும் புதிய தோழர்களை உணர்ச்சிவசப்படுத்துவதில்லை. தன்னுடைய இயலாமை அற்பவாதத்தையே தியாகமாக நினைக்கும் “அழகி’யின் சண்முகமோ, இந்து மதவெறியை மறைப்பதற்காகச் சோகங்கொள்ளும் “பம்பாயின்’ காதலர்களோ, ஒரு மாபெரும் வரலாற்றுக் காலத்தைத் தன்னுடைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சாகேத ராமனின் (ஹேராம் திரைப்படம்) வேதனையோ நமது இதயத்திற்குள் இறங்குவதில்லை.

நம்மைத் தவிர முழு உலகமும் இத்தகைய காவியத் திரைப்படங்களின் கண்ணீரில் முழுகியபோது இந்த மிகையுணர்ச்சிக் கண்ணீரின் கிளிசரின் மோசடியை அகற்றிவிட்டு உண்மையான கண்களையும் கண்ணீரையும் நமக்கு உணர்த்தியது நாம் கற்றுக் கொண்ட கம்யூனிச அரசியல்தான்.

எனவே அரசியல் அறிவு உங்களின் பழைய உணர்ச்சிகளைக் காவு கொள்வதில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது; கூடவே புதிய உணர்ச்சிகளை உருவாக்க இடையறாது போராடுகிறது. புதிய தோழர்கள் பெறும் அறிவு விளக்கத்திற்கும், அது அழித்து உருவாக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான இயங்கியல் உறவு இப்படித்தான் இருக்கிறது. ஆதலால் அரசியல் அறிவு உணர்ச்சியை வற்ற வைப்பதில்லை; உண்மையான ஊற்றைத் தோண்டிச் சுரக்க வைக்கின்றது; கண்ணீர்க் குளமாக்குகிறது; இதுவரையிலும் அழாதவற்றுக்கும் அழவைக்கிறது.

ஆயினும் இந்த உண்மையான உணர்ச்சி அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டுவிடுவதில்லை. இதையே “எல்லாவற்றிற்கும் விளக்கங்கள் அறிவுரீதியாக அறிந்து கொண்ட பிறகு நெஞ்சிலிருந்த ஈரம் வற்றி விடுகின்றது” என்று வாசகர் சாக்ரடீஸ் தவறாகக் குறிப்பிடுகிறார். நீக்கமற நிரவியிருக்கும் பிற்போக்கான வாழ்க்கை மதிப்பீடுகளிலிருந்து வரும் ஒரு நபர், ஒரு தோழராக மாறுவதில் பல்வேறு சிக்கல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.

முதலில் புதிய தோழர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அறிவுரீதியான விளக்கங்களை அறிந்து கொள்வதில்லை; அது சாத்தியமுமில்லை. “முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் முழக்கங்கள் உதவியுடன் மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு” எதிராக லெனின் எப்போதும் எச்சரிக்கை செய்தார். நாம் கற்கும் முதல் விசயமே நமது பழைய உலகக் கண்ணோட்டம் தவறு என்பதைத்தான். அதனாலேயே நாம் உருவாக்க விரும்பும் புதிய உலகைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கற்று விட்டோம் என்பதல்ல. அதற்கு அரசியல் அறிவு மட்டும் போதுமானதல்ல; செயலூக்கம் நிறைந்த நடைமுறைப் போராட்டம் தேவை. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சமூகத்தை ஆய்வு செய்து வினையாற்றுவதற்கு நம்மிடம் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த வாளே மார்க்சிய லெனினிய ஆய்வு முறையாகும்; ஆயினும் அந்த வாளைத் திறமையாகச் சுழற்றக் கற்றுக் கொள்வதில்தான் அதன் பலம் உறைந்திருக்கிறதே ஒழிய உறையில் போட்டு வைத்திருப்பதனால் அல்ல.

வெளிஉலகில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் அக உலகில் நாம் வரைந்து வைத்திருக்கும் புரட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினை, கேள்வி, ஆய்வு, போராட்டங்கள் ஒரு கம்யூனிஸ்ட கட்சி உயிர் வாழ்வதன் அடிப்படையாகும். இதிலிருந்து மாறுபடுகிறவர்களையே போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கிறோம். மேலும் கட்சியில் புதிதாக வரும் தோழர்களும் தங்களை இறுதி வரை கம்யூனிஸ்டாக வைத்திருப்பதன் பொருளும் மேற்கண்ட பிரச்சினையையும் போராட்டத்தையும் இறுதிவரை செய்வது என்பதே.

முக்கியமாக, இந்தப் போராட்டத்தில்தான் அவர்களது பழைய வர்க்கக் கழிவுகள் நீக்கப்பட்டு மறுவார்ப்பு செய்யப்படுகிறார்கள். அது “நானேதான்’ என்று உறுதியான அகந்தையை அழிக்கிறது; சக தோழர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வரும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சும் கோழைத்தனத்தை ஒழிக்கிறது; தனது தவறுகளைத் தானே கண்டுபிடித்து ஏற்கும் வீரத்தைக் கொடுக்கிறது; கற்றுக் கொள்வதில் பணிவையும், கற்றுக் கொடுப்பதில் பொறுமையையும் உருவாக்குகிறது; அடக்குமுறைக்குப் பணியாத கம்பீரத்தைத் தருகிறது; மக்களுடன் இரண்டறக் கலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் ஓரிரு வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ கற்றுக் கொள்ளும் பாடமல்ல. சாகும் வரையிலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய புரட்சியின் கடினமான பாடம். ஏனெனில் புரட்சியை நேசித்துக் கட்சியால் ஈர்க்கப்படும் தோழர்கள் உழைக்கும் மக்களையும் அப்படி ஈர்க்கின்ற வேலையே அவர்களது அரசியல் வேலையின் சாரமாக இருக்கின்றது.

கள்ளங்கபடமற்ற கூலி விவசாயிகளோ, அரசியல் அறியாமையிலிருக்கும் தொழிலாளிகளோ, கருத்தாதரவும் செயலின்மையும் ஒருங்கே கொண்ட நடுத்தர மக்களோ, புத்தம் புது மலர்களாக இருக்கும் மாணவர்களோ இத்தகைய மக்கட் பிரிவினரிடம் சென்று, ஒன்றி, வாழ்ந்து, கேட்டு, கற்று, இறுதியில் வென்று காட்டும் அந்த பாடம்தான் புதியவர்களைக் கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் காட்டும். பழைய உலகின் உணர்ச்சிகள் சூழ வாழும் புதிய தோழர்கள் இந்தப் பாதையின் செங்குத்துச் சரிவில் களைப்படைவதும், சோர்வடைவதும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களிடமிருக்கும் உற்சாகமும், துடிப்பும், உணர்வும் இடையில் சற்று வறண்டு போவதன் காரணம் இதுதான். ஆயினும் இறுதியில் சிகரத்தின் உச்சியைத் தொடுவோம் என்பதால் இடையில் வரும் இந்தத் தடங்கல்களுக்கு அயர வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் நடைமுறையில் ஈடுபட வேண்டும். இதைத் தவிர நமது இதயம் ஈரத்தைத் தக்கவைப்பதற்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.

ஆகவே, இலக்கியம் ஏதும் தேவையில்லை என்கிறோமா? இல்லை. இன்றிருக்கும் பெரும்பான்மை கலை இலக்கியங்கள் பழைய உலகின் உணர்ச்சிகளோடு கட்டுண்டு கிடப்பவையே. நமது புதிய உலகின் உணர்ச்சிகளுக்கு உற்சாகமளிக்கும் இலக்கியங்கள் குறைவுதான். இருப்பினும் கிடைக்கும் எதனையும் படியுங்கள். அவை பழைய உலகம் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்த நிச்சயம் பயன்படும். அதுவும் உங்களின் அரசியல் கல்வி போராட்ட நடைமுறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைய முடியும்.

ஆம். இலக்கியங்களிலிருந்து உணர்வும், உற்சாகமும் தன்னியல்பாய்ப் பிறக்க முடியாது. பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.
_____________________________________________

– புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழு, செப்டம்பர்- 2002

_____________________________________________

தொடர்புடைய பதிவுகள்

  1. இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா? | வினவு!…

    வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?…

  2. […] This post was mentioned on Twitter by ஏழர and ஏழர, சங்கமம். சங்கமம் said: இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?: வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் … http://bit.ly/bz8xLB […]

  3. எனக்கு இது மிக முக்கியமான பதிவு.நன்றி. கள்ளங்கபடமற்ற கூலி விவசாயிகள்னு இருக்கே, அது என்னங்க ஏழைங்கனாவே கள்ளங்கபடமற்றவர்களா? இந்த கள்ளங்கபடமற்றவர்கள்,வெள்ளந்தி மனிதர்கள்னா என்னங்க டெஃபனிஷன் ?

  4. Enathu ippothaiya kulappangal, thayakkangal palavatrai intha katturai thelivakkukirathu.. pala naatkalukku piragu velichathai paarthathu pol ullathu.

    katturaiyai pathivetriyatharkku mikka nandri..

    Sorry tamil fonts illai.

  5. சுற்றி உள்ள நண்பர்கள் அனைவரின் கருத்துகளோடு மாறுபட்டு விவாதித்து ஏதோ தனிமை பட்டு தனி உலகத்தில் இருப்பதை போன்ற உணர்வு தொற்றிக்கொண்டு இருந்த வேளையில் உற்ற நண்பனை போல அருகில் இருந்து அதன் காரண காரியத்தை விளக்கி தெளிவுபடுத்திய கட்டுரை நன்றி தொடர்து இது போன்ற கட்டுரைகளை மறு பதிப்பு செய்யுங்கள்

  6. ஏன் சாருவின் ம்றுமொழியை நீக்கி விட்டீர்கள். குப்பையிலும் காணவில்லை. சாருவின் மறுமொழியின் மூலம் சாருவைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் அல்லவா!

  7. //அதனால்தான் துன்பப்படுகின்ற மக்களைப் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மறைந்து இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி பிறக்கின்றது.//

    அருமையான வரிகள்.

  8. இலக்கியம் மனிதவாழ்வியலை மனிதர்கள்மூலமே விடாது உணர்த்திக்கொண்டே இருக்கிறது. இலக்கியப் படைப்பாளிகள் கையாழும் வேறுபட்ட எழுத்துப் படிமுறைகளுக்கேற்ப கவரப்படும் மனிதர்கள் மூலமே வாழ்வியலும் வேறுபட்டு ஏற்றத்தாழ்வுகளுக்கு உரமிடுகின்றன. பொதுவுடைமை சார்ந்து இலக்கியம் எழுத்தப்படுவது மனித வாழ்விற்கு வளமளிக்கும். ஏனெனில் எல்லோருக்குமே பொதுவுடைமைக் கண்ணோட்டம் ஏதாவது ஒரு வயதில் ஏற்படுவது இயல்பானது. அவை நீடித்து வாழ்வதற்கு பொதுவுடைமை சார்ந்த இலக்கியம் நிச்சயம் உதவிபுரியும். இலக்கியம் இதயத்தை ஈரமாக்கும். ஒருவனுடைய இதயத்தை ஈரமாக்க பசும்பால், கள்ளிப்பால் இரண்டாயும் தேர்ந்தெடுப்பது இலக்கிய எழுத்துக்களே.
    அரசியலுக்கு தனது இருப்பை தொடர்ந்து தக்கவைக்க வேண்டி தேவையுள்ளது. இன்றைய உலக அரசியலானது வேறுபட்ட மனித மனங்களையும் தனது வாக்குவங்கியில் சேமித்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது ஆகவேதான் பசும்பால், கள்ளிப்பால் இரண்டுமே ஈரத்தன்மை கொண்டுள்ளதாக அரசியல் நியாயப்படுத்தி, மனித இதயங்கள் அவை இரண்டாலுமே நனைவதற்கு உதவிபுரிகின்றது.
    இலக்கியத்திற்கு அதிகாரம் கிடையாது அதனை விமர்ச்சிப்பவன் தான்தோன்றியாக, இன்பப்பட்டோ, துன்பப்பட்டோ வாழ்ந்துவிட முடியும். ஆனால் அரசியலுக்குள்ள அதிகாரம் அதனை விமர்ச்சிப்பவனை பயங்கரமாக அழித்துவிடும். இன்று தமிழ்நாட்டில் தோற்றம்பெற்றுள்ள இரண்டு பெரும் இலக்கியங்களை இவற்றிற்கு உதாரணமாக தரலாம். ஒன்று தமிழக அரசியல் தலைவனாக விளங்கும் கலைஞர் கருணாநிதி. மற்றது மக்கள் மனங்களில் பெருமதிப்புடன் இடம்பிடித்து மறைந்த இளைஞன் முத்துக்குமரன்.

  9. //“முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் முழக்கங்கள் உதவியுடன் மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு” எதிராக லெனின் எப்போதும் எச்சரிக்கை செய்தார். நாம் கற்கும் முதல் விசயமே நமது பழைய உலகக் கண்ணோட்டம் தவறு என்பதைத்தான். அதனாலேயே நாம் உருவாக்க விரும்பும் புதிய உலகைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கற்று விட்டோம் என்பதல்ல. அதற்கு அரசியல் அறிவு மட்டும் போதுமானதல்ல; செயலூக்கம் நிறைந்த நடைமுறைப் போராட்டம் தேவை.//

    அருமையான வரிகள்!!

  10. ஆழ் மனதுள் ஊடுருவி சென்று தனி மனிதர்களீன் மனசாட்சியுடன் உறவாடும் ஈரமான இது போன்ற கட்டுரைகள் வினவில் இப்போது எல்லாம் ஏன் வருவது இல்லை ?

  11. பாமாவின் “கருக்கு”களை தீய்க்கும் பெருமாள் முருகனின் “ஆளண்டாப் பட்சி” -விமர்சனம்

    “………ஆளண்டாப் பட்சி தீய்க்கும் கருக்குளின் [கருக்குகளின் கலகக் குரலை மொக்கையாக்கும் ஆளண்டாப் பட்சியின் சமரசத்தை ] வாசத்தை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை. ……..”

    ஒரே காலக் கட்டத்தில் [1990களின் ஆரம்பத்தில்] நாவல் வடிவ சுய மற்றும் புனைக் கதைகளை எழுதத் தொடங்கிய பாமா ,பெமு- வின் முதல் ,ஆறாம் கதைகள் தான் கருக்கு மற்றும் ஆளாண்டாப் பட்சி. இரு கதைகளுமே நாட்டார் வழவியலை மையமாக கொண்டு, “மதுரை–தலித்” மற்றும் “கொங்கு–கவுண்ட” வட்டார வழக்கில் எழுதப்பட்ட மண் சார் கதைகள். இக் கதைகளை படித்து உனர மண் சார்ந்த மக்கள் மீது கரிசனமும் , மொழி மீது குறைந்த பற்றும் இருந்தாலே போதும்.

    கருக்கு,ஆளண்டாப் பட்சி கதைகள் மனிதர்களின் வலிகளையும்,தேடல்களையும் முன்னிலைப் படுத்தும் வகையில் அமைந்து இருந்தாலும் கதை மாந்தர்கள் வெளிப் படுத்தும் உள்ளார்ந்த அரசியலும் ,வர்க்கப் பார்வையும் வேறு வேறாக உள்ளது. துறவு வாழ்வை துறந்த பாமாவின் கருக்கு நிலம் இல்லாத தலித் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் ,முன்னால் புரட்சியாளர் பெமு வின் ஆளாண்டாப் பட்சி நிலவுடைமை கவுண்ட விவசாயிகளையும் முன்னிலை படுத்துகின்றன.

    எல்லா மனிதர்களுக்கும் வலியும்,தேடல்களும் பொதுவனது தான் என்றாலும் அவர்கள் வர்க்கம் சார்ந்து அதன் நோக்கம் வேறுபடுகின்றது. கருக்கு நாவலில் நிலம் இல்லாத தலித்தியர் கூலித் விவசாயத் தொழிலாளர்களின் வழ்க்கையை தன் சுய கதையுடன் இணைத்து கூறும் பாமா அவர்கள் ,பக்கத்துக்கு பக்கம் ,வார்த்தைக்கு வார்த்தை நிலம் உடமை சாதிகளுக்கு எதிராக வலிக் குரல் எழுப்புகின்றார். ஆளாண்டாப் பட்சி நாவலில் பங்காளிச் சூழ்ச்சியில் நிலம் இழந்த நிலம் உடமை கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவரின் புது நிலம் நோக்கிய அகதிப் பயணத்தில் தன் அடிமையுடன் நடத்தும் கதையாடல்களில் பெமு அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கவுண்டர் சாதியை ,தலித்தியர்களுடன் சமரசம் செய்து கொள்ள சொல்கின்றார்.

    சாதீய அடக்கு முறைகளுக்கு எதீராக மூத்த தமிழர்களிடம்[ தலித்தியர்களிடம்] கலகக் குரல் எழுப்புச் சொல்லும் கருக்குவின் வர்க்கப் பார்வையும் , தலித்தியர்களிடம் சமரசம் செய்து கொள்ள சொல்லும் ஆளண்டாப் பட்சியின் சமரசப் [வர்க்கப்] பார்வையும் முறையே அடிமை ,ஆண்டான் வர்க்கங்களை சார்ந்து உள்ளன.

    கருக்கு நாவலின் கதைக் களம் , தலித்தியர் சமூகத்தைச் சேர்ந்த பாமா என்ற பச்சை தமிழச்சியின் வாழ்வில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளைகளால் கட்டியமைக்கப்பட்டது மட்டுமல்ல. அதன்வழியே தலித்தியர்களின் நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இதனை மூன்று பிரிவுகளாக ஆசிரியர் கையாண்டுள்ளதாகவே தோன்றுகிறது. பள்ளி செல்லும் பிராயத்தில் தீண்டாமை கொடுமை அவரை எவ்வாறு தீண்டியது. அப்போது ஊரில் நிலவிக் கொண்டிருந்த சூழல் என்ன என்பதையும், வெளியூர் சென்று கல்வி கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பதையும், படித்து பட்டம் பெற்று வேலை செய்த கால கட்டங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சித்தப் போதும் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதையும் எழுத்தில் வடித்துள்ளார் பாமா.

    ஆளண்டாப் பட்சி நாவலின் கதைக் களம், பங்காளிச் சூழ்ச்சியில் நிலம் இழந்த நிலம் உடமை கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவரின் புது நிலம் நோக்கிய அகதிப் பயணத்தில் தன் அடிமையுடன் நடத்தும் கதையாடல்களின் தொகுப்பு.

    இரண்டையும் படித்த பின் “ஆளண்டாப் பட்சி” தீய்க்கும் “கருக்குளின் [கருக்குகளின் கலகக் குரலை மொக்கையாக்கும் ஆளண்டாப் பட்சியின் சமரசத்தை ] வாசத்தை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை.

    //ஆகவே, இலக்கியம் ஏதும் தேவையில்லை என்கிறோமா? இல்லை. இன்றிருக்கும் பெரும்பான்மை கலை இலக்கியங்கள் பழைய உலகின் உணர்ச்சிகளோடு கட்டுண்டு கிடப்பவையே. நமது புதிய உலகின் உணர்ச்சிகளுக்கு உற்சாகமளிக்கும் இலக்கியங்கள் குறைவுதான். இருப்பினும் கிடைக்கும் எதனையும் படியுங்கள். அவை பழைய உலகம் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்த நிச்சயம் பயன்படும். அதுவும் உங்களின் அரசியல் கல்வி போராட்ட நடைமுறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைய முடியும்.//

  12. ஐந்து வருடங்களுக்கு முந்தைய பதிவு, தற்பொது படிக்க கிடைக்க பெற்றேன்..! பலவிதமான குழப்பஙகளை தீர்த்தது..! செல்ல வேண்டிய அடுத்த நிலைகளை தெளிவுபடுத்தியது..! ஆழ்ந்த அரசியல் வகுப்பில் கிடைக்கும் அனுபவம்..! வினவிற்கு நன்றிகள்..!

    //ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.

    வெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது. உடன் பிறந்தோரை வரதட்சணை, சடங்கு, சாதி எனப் பிற்போக்குச் சங்கிலியுடன் மணம் செய்து கொடுக்கும் தந்தையுடன், கண்டிப்புடன் கூடிய அந்தப் பழைய மரியாதையை இனிமேலும் கொடுக்க முடியாது. பழைய அந்தஸ்தின் மூலம் கிடைத்த நண்பர்கள், கம்யூனிஸ்டு என்ற இந்தப் புதிய தகுதியை விரும்பாத போது அந்த நட்பு எப்படி நீடிக்க முடியும்? கந்து வட்டிக்கு விடும் தாய் மாமனேயானாலும் இனியும் ஒட்டி உறவாட முடியாது. பழைய வாழ்க்கை வழங்கியிருக்கும் இத்தகைய அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் புதிய வாழ்வின் செயலூக்கத்தில் நிச்சயம் வறண்டு போகும்.

    அதேபோன்று முதல் வாழ்க்கையில் தோன்றியும் புரிந்துமிராத உணர்ச்சிகளெல்லாம் இந்த இரண்டாம் வாழ்க்கையில் புதிது புதிதாய்ப் பிறந்து வளரும். இன்று தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடும் ஒரு தோழர், அவர் தேவராக வாழ்ந்த நாட்களில் இதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அதிகார வர்க்கத்தையும், காக்கிச் சட்டையையும் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஒரு தோழர், அவர் கூலி விவசாயியாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இவையெல்லாம் இயற்கைக்கு மாறானது என்றே நம்பியிருப்பார். மனைவியுடன் ஜனநாயக முறைப்படி வாழும் ஒரு தோழர் அவர் ஆணாதிக்கவாதியாக ஆட்சி நடத்திய நாட்களை நினைத்து இப்போது வெட்கப்படுவார். சிறைவாசம் அனுபவித்திருக்கும் பெண் தோழருக்கு அவரது பழைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து வெளியேறிய போராட்டம் இப்போதும் நம்பிக்கையளிக்கும்.//

    உண்மையான அனுபவத்தில் கிடைக்கப்பெற்றோரின் வார்த்தைகள்..!

  13. நான் படிக்க தவறிய முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக பார்க்கிறேன்.” மகிழ்ச்சியின் தருணங்கள்” கட்டுரைபோல் உற்சாகமடைய வைக்கிறது. வரட்டுத்தனமாக பேசுகிறார்கள் என்று மனசாட்சியுடன் வாதிடும் சில விசயங்களுக்கு தோலை தட்டிக்கொடுத்து விளக்கமளிக்கிறது. நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க