Sunday, April 2, 2023
முகப்புதஞ்சை பெரிய கோவில் - கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!
Array

தஞ்சை பெரிய கோவில் – கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!

-

வரும் செப்டம்பர் 25, 26 தேதிகளில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், கலைஞர்கள், வாரிசுகள் அனைவருமாய் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர்.

இதன்படி தஞ்சை நகர் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் தெருவோர நிகழ்ச்சிகள், பெரிய கோவிலில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி, நூறு ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம், பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலையில் திலகர் திடலில் கருணாநிதி தலைமையில் அஞ்சல் தலை, நாணயம் வெளியிடுதல், பெரிய கோவிலின் வரலாற்றை நினைவு கூரும் கண்காட்சி, இந்த விழாவுக்காக தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் எல்லாம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இனி செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும். ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு அமைச்சர் தலைமையில் நியமிக்கப்படும் குழு அடிக்கடி கலந்து பேசி நடத்தும். தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளும் இனி இரண்டு மாதங்களாய் பெரிய கோவில் விழாவுக்கான வேலையை கவனிப்பார்கள். ஊடகங்களும் இது குறித்து சிறப்பு மலர் வெளியிட்டு கருணாநிதி சோழனது புகழ் பாடும். தொலைக்காட்சிகளில் இசையும், காட்சியும் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு ஓடும்.

இந்தக் குத்தாட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசு இன்னும் சொல்லவில்லை. இதிலிருந்து அவர்களது பட்ஜெட் இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. மக்களும் தமது வாழ்வியல் பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு இனி இரண்டு மாதங்களாக இந்த கிளாடியேடட்ர் ஷோவை இரசிப்பார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை நினைவுகூரும் வண்ணம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அன்றைய நிலைமையில் இருந்த நிலவுடைமை சமூகத்தின் மிகவும் குறைவான உபரி உற்பத்தி இந்தக் கோவிலுக்காக பயன்பட்டிருக்கிறது. அதன் பொருள் மிகவும் வறிய நிலையில் பசியும் பட்டினியுமாகவே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள். பாறையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கற்கோவில்கள் ஏராளமிருக்கின்றன. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்ததால் நமது கட்டிடக் கலையின் மகத்துவத்தை விட மக்கள் பட்ட துன்பங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

ராஜராஜ சோழன் காலத்து மக்கள் வாழ்க்கை நிலையிலிருந்து இன்றும் நமது மக்களின் நிலைமை பெரிதும் மாறவிடவில்லை. ஒரு ரூபாய் அரிசிக்கும், குடிசை வீட்டின் பத்து ரூபாய் மின்கட்டணத்திற்கும், வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணத்திற்கும்தான் நமது மக்கள் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனில் இந்த ஆயிரம் வருட நிறைவின் பொருள் என்ன?

அன்று ராஜராஜ சோழன் தனது சாம்ராஜ்ஜியத்தின் வலிமையினை பறைசாற்றும் வண்ணம் இந்தக் கோவிலை கட்டினான். இன்று அதே கோவிலின் ஆயிரமாண்டு நிறைவை கருணாநிதி சோழன் தனது கட்சி, குடும்ப சாம்ராஜ்ஜியத்திற்காக கொண்டாடுகிறார். ஆக சோழர்களின் சர்வாதிகார ஆட்சி இன்னும் நீடிக்கிறது. அன்று பட்டினியுடன் கோவிலுக்கான கற்களைச் சுமந்த மக்கள் இன்று பசியுடன் அந்த கோவில் கொண்டாட்டத்தினை கண்டு களிக்கிறார்கள். ஆக அன்றைக்கு மேட்டுக்குடிக்கு மட்டும் இருந்த பொழுது போக்கு இன்று எல்லோருக்கும் இருக்கிறது என்பதுதான் இந்த ஆயிரமாண்டு இடைவெளியின் முன்னேற்றமா?

சரி, கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்ட திருவிழா எதுவோ, நினைத்தாலே கிலியாக இருக்கிறது!

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்