போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

  7

  போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை..

  போபால் – காலம் கடந்த அநீதி

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

  போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

  1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

  அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.

  தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்

  குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

  இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

  26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

  இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

  காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

  நீதி வேண்டுமா?.
  நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
  நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..

  கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

  முற்றுகை

  ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

  பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.

  பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

  அனைவரும் வருக‌

  மக்கள் கலை இலக்கிய கழகம்
  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
  பெண்கள் விடுதலை முன்னணி
  விவசாயிகள் விடுதலை முன்னனி

  தொடர்பு கொள்ள:

  ம.க.இ.க :  94446 48879
  பு.ம.இ.மு :  94451 12675
  பு.ஜ.தொ.மு :  94448 34519
  பெ.வி.மு :  98849 50952
  வினவு :  97100 82506

  _________________________________________________________

  வினவுடன் இணையுங்கள்

  தொடர்புடைய பதிவுகள்

  சந்தா செலுத்துங்கள்

  உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

  7 மறுமொழிகள்

  1. போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !! | வினவு!…

   காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது போபால்….

  2. […] This post was mentioned on Twitter by வினவு, Kirubakaran S. Kirubakaran S said: போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !! http://bit.ly/bPN64D […]

  3. ஹைய்யா…! ஆகஸ்டு பதினஞ்சி…!

   எனக்கொண்ணும் தலகால் புரியலீங்க,
   இந்தா அந்தான்னு வந்துருச்சி
   ஆகஸ்டு பதினஞ்சி.
   சொதந்தரம் வாங்கி எத்தனியோ வருஷமாச்சாம்.
   இந்தப் பாமரனுக்குப் புல்லரிக்குதுங்க…
   தீவாளி, பொங்க மதிரி,
   நல்ல வேளையா செலவு வைக்காத பண்டிகை.
   தீவாளின்னா சங்கராச்சாரி சாமி
   சன் டிவில வந்து
   இன்னைனைக்குத்தான் தீவாளி,
   இன்னின்னைக்கு கறி சாப்பிடலாம் / சாப்பிடகூடாது
   அப்படீன்னு தெள்ளத் தெளிவா
   மொத நாளே, முக்கிய அறிவிப்பா,
   அற்புதமா சொல்லிப்போடுவாரு.

   நல்லவேளை,
   நேத்தைக்குத்தான் ஒரு குடிகாரன்
   அறிவிச்சிக்கிட்டே, ஒளரிக்கிட்டே போனான் :
   “டேய், தீவிரவாதிங்க
   டெல்லியில ரெண்டுபேர் மாட்டிகிட்டாங்களாம்,
   சுதந்திர தின விழாவிலே
   குண்டு போடப்பாத்தாங்களாம்,
   எண்டிடிவில சொல்றாங்களாம்.
   கைது பண்ணிட்டாங்களாம்.
   உளவுத்துறை செய்திடா,
   எச்சரிக்கையாயிருங்க…”
   அவன் உளருகிறான் என்றாலும்
   அந்த உளரல் சரிதானோ?
   எப்பவும் போல உளவுத்துறை அறிக்கைவிட்டால்…
   அடுத்து வரப்போவது ஆகஸ்ட்டுப் பதினஞ்சி.
   கண்றாவி – அந்தப்பக்கம் பாகிஸ்தான் இருக்குறதால
   நம்பாம இருக்கமுடியுமா?
   அட ராமா… காலங்கெட்டுப்போச்சிடா.

   ***

   எது எக்கேடும் கெட்டுப்போகட்டும்,
   டாஸ்மாக் மூடலைன்னா சரிதான்,
   ஆஊன்னா, காந்திஜெயந்தி
   மகாவீரு மண்ணாங்கட்டீன்னு
   கடைய மூடிரானுவோ…

   ஆகஸ்டுப் பதினஞ்சண்ணிக்கி
   வந்தேமாதரம் – புது தொனியிலே
   புத்தம்புது மெட்டுல
   ஏஆர் ரகுமான் பாடும்போது
   ஏகப்பட்ட இந்தியாவும்
   என் கண்முன்னே
   கலர் கலராய் கிளர்ந்தெழும்.

   சன் டிவிய திருப்பினா
   சாலமன் பாப்பைய்யா.
   ‘சந்தோஷம் கொடுப்பது
   ஆணா அல்லது பெண்ணா’
   பட்ட்டிமண்டபத்தை நினைத்தாலே
   பட்டா, கிளுகிளுப்பூட்டுது.
   பிளஸ் – திரைக்குவந்த சில நாட்களேயான
   புத்தம்புது திரைப்படம்.

   கலைஞ்சர் டிவில முழு நேரத்துக்கும்
   மானாட – மயிலாட.
   நேரம் அனுமதித்தால்
   பேரன்மார்களின் புத்தம்புது,
   திரைக்கு வந்த சில நாட்களேயான…
   புரியலன்னா… போடாங்கொய்யா!

   விஜை டிவில
   அறிவுபூர்வமான நிக்ழ்ச்சிகள்
   ஆக்கபூர்வமான வாக்குவாதங்கள்.
   சிந்தனயளர்களுக்கு விஜை பரவாயில்லை.

   ராஜ் டிவில எப்பவும்போல
   வீரபண்டிய கட்டபொம்மன்.

   சிறப்பு ஒளிபரப்பாக
   டில்லியிலிருந்து
   காலங்க்காத்தாத்தால,
   டாஸ்மாக் தொறக்கரதுக்கு முன்னாலயே
   உயிருள்ள ஒலிபரப்பு.
   தூர்தர்ஷன்லதான்.
   நாட்டுப் பற்றுள்ளவங்க
   கண்டிப்பாப் பாத்தேயாகணும்.
   ஜன நாயகத்தின் ஜனாதிபதி
   ஓரிரு உரையாற்றுவார்.
   அவரைப் பின்னூட்டமிட்டு
   பிரதமரும் பிரமாதிப்பார்.
   அந்தப் பேருரையில்
   பாகிஸ்தான் வெட்கங்க்கெட்டுப் போகும்.
   எதிரிகளை எச்சரிப்பதிலேயே
   பேருரையிருப்பதால்
   எதிரில் அமர்ந்திருக்கும்
   சீட்டுப் பிடித்தவர்கள்
   சற்று நெளிந்துதான் போவார்கள்.
   நல்ல வேளையாக எலிகாப்டரும் ஏரொப்ளானும்
   எமகாதக வேகத்தில் பூவைத்தூவும்போதுதான்
   புளகாங்கிதமடைவார்கள்.

   ***

   என் குழந்தைகளுக்கு
   இனிக்கும் மிட்டாய்கள்.

   என் மனைவியும் தயங்கித் தயங்கி
   கையேந்தி ரெண்டு மிட்டாய்கள்
   தவராமல் வாங்கிவிடுவாள்.
   ஒன்று அவளுக்கு.
   இன்னொன்று எனக்கு.
   ஆனால் திரை மின்னல்காளாலும்
   சின்னத்திரைச் சீரல்களாலும்
   குவார்ட்டர் போதையினாலும்
   மறுதலித்துக் குறட்டை விட்டதால்.
   மறு நாள் காலைவரை
   அதாவது –
   ஆகஸ்டுப் பதினாறு காலைவரை
   ஈ மொய்த்துக்கொண்டிருக்கும்
   அந்த மிட்டாய்.
   மறு நாள், யாரும் பார்க்காதவாறு,
   அதைக் காலால் எட்டி உதைத்துவிட்டு
   எப்பவும்போல ‘வேலைக்கு ஓடு’.

   ***

   ஆகஸ்ட்டுப் பதினஞ்சி –
   ஒரு நாள் உற்சாகம்;
   நாளை எப்போதும்போல
   வாழ்க்கை ஒரு ‘சாகசம்’.

   – புதிய பாமரன்.

  4. 1500 தோழர்கள் கைது ! சுதந்திர தினத்தில் சுதந்திரத்தை பறித்து கருணாநிதி அரசு அடக்குமுறை.

   வெள்ளெமென கூடிய தோழர்கள், காசி தியேட்டர் அருகில் டெளவ் கெமிக்கல்ஸை எதிர்த்து பேரணி நடத்துவதற்காக கூடினர். ஆனால் பேரணி தொடங்கும் முன்பே காவல்துறையினர் தோழர்கள் அனைவரையும் 10.20 மணி அளவில் கைது செய்தனர்.

  விவாதியுங்கள்

  உங்கள் மறுமொழியை பதிவு செய்க
  உங்கள் பெயரைப் பதிவு செய்க