Saturday, February 4, 2023
முகப்புஎவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?
Array

எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?

-

யாரங்கே?
டௌ கெமிக்கல்சை எதிர்த்து சவுண்டு கொடுப்பவன் எவன்?

முதலில் இந்த வீடியோவை பாருங்கள்

வெறி கொண்ட வலதுசாரி சானலான டைம்ஸ் நௌவுக்கே பொறுக்க முடியவில்லையா? அல்லது தனது கோர முகத்தை மறைத்துக் கொள்ள அந்த தொலைக்காட்சிக்கு இப்படி ஒரு அமெரிக்க எதிர்ப்பு சவடால் தேவைப்பட்டதா, தெரியவில்லை. அடேங்கப்பா, அமெரிக்க அரசை அம்பலப்படுத்தி விட்டது டைம்ஸ் நௌ.

விசயத்துக்கு வருவோம். இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பறவைப்பார்வையில் சில விவரங்கள்.

போபால் நீதிமன்றம் கேசவ் மகிந்திராவை ஜாமீனில் விட்டதைத் தொடர்ந்து மறுபிறவி எடுத்த போபால் பிரச்சினையைக் கேள்விப்பட்டு, துணுக்குற்றுப்போன நமது பிரதமர் “யாரங்கே, போபால் வழக்கில் என்ன நடந்தது என்ற ரிப்போர்ட் பத்து நாளில் என் டேபிளுக்கு வரவேண்டும்” என்று உத்தரவிட்டு அமைச்சர் குழுவின் தலைவராக ப.சிதம்பரத்தையும் நியமித்தார். எட்டே நாளில் அறிக்கையை பிரதமரின் டேபிளுக்கு கொண்டுவந்தார் சிதம்பரம்.

இப்பேர்ப்பட்ட சுறுசுறுப்புக்கு காரணம் என்ன? இந்தோ அமெரிக்கன் சி.இ.ஓ ஃபோரம் அமெரிக்காவில் கூட இருந்தது. போபால் பிரச்சினை குறித்த இந்திய அரசின் அதிகாரபூர்வமான முடிவை, அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்காவிட்டால் அமெரிக்க முதலாளிகள் அப்பிரச்சினையை அந்தக் கூட்டத்தில் கிளப்புவார்கள் என்பது இந்திய முதலாளிகளின் அச்சம்.

2001 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ கெமிக்கல்ஸ் வாங்கியது. 1984 இல் நடைபெற்ற விபத்து மற்றும் அதற்கான நிவாரணம் போன்றவையெல்லாம் யூனியன் கார்பைடுடன் முடிந்த்து. அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது டௌ கெமிக்கல்சின் முதல் வாதம்.

போபாலில் யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது. அது யூனியன் கார்பைடுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை யூனியன் கார்பைடு ம.பி அரசிடம் ஒப்படைத்து விட்டதால், அங்கே குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான டன் இரசாயனக் கழிவுகளைச் சுத்தம் செய்வதும் (இதற்கான உத்தேச செலவு 150 கோடி ரூபாய்) அந்தக் கழிவுகளை வேறு எங்காவது கொண்டு சென்று அப்புறப்படுத்துவதும் தன்னுடைய பொறுப்பல்ல, ம.பி அரசின் பொறுப்புதான் என்பது டௌவின் இரண்டாவது வாதம்.

போபாலில் யூனியன் கார்பைடு ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறது. அந்த மருத்துவமனையை நடத்தும் செலவுக்கும் தான் பொறுப்பேற்க இயலாது. அதையும் அரசாங்கம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது டௌ கெமிக்கல்சின் மூன்றாவது வாதம்.

“கூடுதல் நட்ட ஈட்டை அரசே வழங்கும். ஆலையின் கழிவுகளை அரசே சுத்தம் செய்யும். மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும்” இவை மூன்றும் மேற்கூறிய பிரச்சினைகளில் சிதம்பரம் தலைமையிலான குழு அறிவித்த முடிவுகள்.

இந்திய அரசின் தரப்பிலிருந்து டௌ கெமிக்கல்சுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டௌ கெமிக்கல்சுக்கு எதிராக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல தனிநபர்கள் தொடுத்திருக்கும் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் மன்மோகன் அரசு உறுதியாக மறுத்து வருகிறது. இப்படியெல்லாம் வழக்கு போட்டு தொந்திரவு செய்தால் அமெரிக்க முதலாளிகள் இந்தியாவில் மூலதனம் போடமாட்டார்கள் என்றும், அத்தகைய எல்லா வழக்குகளையும் மூட்டை கட்டிவிட வேண்டும் என்றும் ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் பிரதமருக்கு சிபாரிசு செய்திருக்கின்றனர்.

ஆக, டௌ வுக்கு எதிராக இந்திய அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பதே உண்மை. தனக்கெதிராக எந்தவித நடவடிக்கையும் இந்தியாவில் எடுக்கப்படாதபோது, டௌ வுக்கு ஏன் கோபம் வருகிறது? நடவடிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தனக்கு எதிராக இந்தியாவில் பேசுகிறார்களே அவர்கள் வாயையும் அடைக்கவேண்டும். அதுதான் டௌ எழுப்பும் பிரச்சினை.

போபால் பிரச்சினையை மையப்படுத்தி இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று, போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் 50 பேரை அழைத்து வந்து, சென்ற ஆண்டு சென்னையில் உள்ள டௌ கெமிக்கல்ஸ் அலுவலக வாயிலில் ஒரு போராட்டம் நடத்தியது. தனக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தனது தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டௌ கெமிக்கல்ஸ் ஒரு மனு தாக்கல் செய்ததுடன், போராடியவர்கள் 20 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கும் தொடுத்த்து. ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்காக இந்தியக் குடிமகனின் கருத்துரிமையைத் தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சந்துரு. மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்புக்கும் ஒரு தடையாணை வாங்கி வைத்திருக்கிறது டௌ கெமிக்கல்ஸ். இது போன வருசத்துக் கதை.

தற்போது நாடாளுமன்றத்தில் போபால் பற்றி நடந்த விவாதத்தில் பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜும், மார்க்சிஸ்டுகளும் கொஞ்சம் சவுண்டு கிளப்பினர். பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்டுகளின் சவுண்டு பற்றி அமெரிக்கா கவலைப்படுவதுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை.

வேறு யார் “குரல்” எழுப்புவதைப் பற்றி அமெரிக்க அரசு மான்டேக் சிங் அலுவாலியாவிடம் கவலை தெரிவிக்கிறது? டௌ கெமிக்கல்சுக்கு எதிராக குரல் எழுப்புவதைக் கூட அமெரிக்க முதலீட்டாளர்களால் சகித்துக் கொள்ள இயலாது என்கிறார் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் துணைச் செயலர்.

அலுவாலியா பேசிய விசயம் உலகவங்கியிடம் கடன் வாங்குவது குறித்த பிரச்சினை. பேசியதோ பாதுகாப்புத் துறை துணைச்செயலரிடம். அவர் அளித்த பதிலோ அமெரிக்க கார்ப்பரேட் நிறவனங்களின் நலனை மட்டுமின்றி, இந்தியக் குடிமக்களின் ஜனநாயக உரிமையை நசுக்க கோருகிறது. அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு, இராணுவம் வேறு என்று கூறும் அறிஞர்களின் பார்வைக்கு இதனை சமர்ப்பிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களின் குமுறலை, இந்திய மக்களின் குரலை சித்தரிக்க அமெரிக்க அதிகாரி பயன்படுத்தும் வார்த்தையைக் கவனித்தீர்களா? NOISE!

போலி சுதந்திரம், மறுகாலனியாதிக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் (yuppies) இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude…என்பார்களோ? அதை அர்னாப் கோஸ்வாமியிடம் சொல்லட்டும்.

ஆனானப்பட்ட அர்னாபுக்கே ஆத்திரம் வருகிறது என்றால் என்ன சொல்வது?

“டைம்ஸ்…. தே ஆர் சேஞ்சிங்..” என்ற பாப் டைலனின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.

_____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்