//குறுக்கு வெட்டு – 25.08.2010// பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!!

  13
  9

  பரிசோதனை எலிகளா இந்தியக்குழந்தைகள்?

  “உத்தரப் பிரதேசத்தில் 4 குழந்தைகள் சாவு: பிரேத பரிசோதனையில் காரணம் தெரியவில்லை உத்தரப் பிரதேசத்தின் மோகன்லால்கஞ்சில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக்கிழமை  4 குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 9 மாதத்துக்கும் குறைவான
  4 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்த பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் மருத்துவமனைகளுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால்  மருத்துவமனை செல்வதற்குள் குழந்தைகள் இறந்துவிட்டன. தட்டம்மை மருந்து கொடுத்த பின்னர்  குழந்தைகள் இறந்ததால் தங்களது குழந்தைகளுக்கு கெட்டுப்போன மருந்தை கொடுத்ததாகவும், அந்த மருந்தே தங்களது குழந்தைகளின் உயிரை பறித்துவிட்டதாகவும் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.” – தினமணி செய்தி

  நோய்நொடி இல்லாமல் தடுத்து ஆரோக்கியமான வாழ்வை  தமது குழந்தைகளுக்கு  தருவதற்கு தடுப்பூசி போட நினைத்ததுதான் பெற்றோரின் தவறா? தடுப்பூசி போடுமுன்னர் தான் இவ்வாறு நிகழுமென்று அவர்கள் எதிர்பார்த்திருக்கத்தான் வேண்டுமா?  தடுப்பூசி போட்டதற்காக நான்கு குழந்தைகள் இறந்து போனார்கள் என்ற சம்பவம் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடக்க முடியுமா?

  அல்லது இந்தியக் குழந்தைகள் தான் பரிசோதனை எலிகளா? வல்லரசு நாட்டுக் குழந்தைகளின் நலனுக்காக மூன்றாம் உலக நாடுகள்தான் பரிசோதனைக்கூடங்களா?
  ________________________________________________________________________________

  ஈராக்கிலிருந்து வாபஸ்! அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்பு எது?

  ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் 50 ஆயிரத்திற்க்கும் குறைவான எண்ணிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது. அதிபர் ஒபாமா ஏற்கனவே அறிவித்தது போல் ஆகஸ்ட் – 31க்குள் பெரும்பாலான அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என சொல்கிறார்கள். ஆனால் இதிலிருந்து ஈராக்குடனான ராஜ்ஜிய உறவுகளில் எந்த பாதிப்பும் வாரது என துணை அதிபர் கூறியிருக்கிறார்.

  ஈராக்கில் நினைத்தது போல நாட்டையும் மக்களையும் அடக்குவதற்கு அமெரிக்காவால் முடியவில்லை. புதைகுழிக்குள் புதைந்து கொண்டே போனதன் விளைவுதான் இந்த படை திருப்பம். நினைத்தது போல அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களால் போதுமான அளவில் ஈராக்கின் எண்ணெயை குடிக்க முடியவில்லை. படை இருக்கும் செலவுக்கு ஏற்ற ரிடர்ன்ஸ் கிடைக்க வில்லை. அதே சமயம் அரசியல் ரீதியாக ஈராக் என்பது அமெரிக்காவின் காலனி நாடாக மாற்றப்பட்டது. வளைகுடாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க நிலையிலிருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை.

  ஈராக்கிலிருந்து வாபஸ் என்றாலும் அமெரிக்க படைகள் அடுத்து ஆக்கிரமிக்கப் போகும் நாடு எது? ஈரானா, வடகொரியாவா?
  ________________________________________________________________________________________

  “கேப்டனிடம் கருப்புப் பணம்!” கலைஞரிடம் இருப்பது வெள்ளையா?

  அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரண்டும் ஊழல் கட்சிகள் என்று விஜயகாந்த் சொன்னது கலைஞருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தாங்கள் ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை. நீ மட்டும் யோக்கியமா என்று விஜயகாந்த் கருப்பு பணமாக வருவாயை பெருக்கியிருப்பதை கேட்கிறார். அடுத்து சினிமா படங்களுக்கு வசனம் எழுதி வந்த பணத்தையும், கோபாலபுரம் வீட்டையும் மக்களுக்கு வழங்கியதை ஒரு பண்ணையாருக்குரிய பெருமையோடு பட்டியலிடுகிறார்.

  வசனம் எழுதுவதற்கு இந்தியாவிலேயே அதிக வருமானம் பெறுபவர் நம்ம கலைஞர்தான். இருந்தாலும் வசனம் எழுதுவதை விட தமிழின் எல்லா படங்களும் கலைஞர் குடும்ப வாரிசுகளால்தான் ரிலீஸ் செய்யப்படுகிறது. வசனத்திற்கே இவ்வளவு வருமானமென்றால் படத்தயாரிப்பு, வினியோகத்தில் எவ்வளவு இலாபம் கிடைக்கும்? அதெல்லாம் வெள்ளையா, கருப்பா, சிவப்பா யாருக்கும் தெரியாது. மேலும் தான் சில்லறைகளை வீசி தானம் செய்ததை பட்டியிலிடும் கருணாநிதி தனது குடும்ப வாரிசுகளின் மொத்த சொத்து, வருமானங்களை ஏன் பட்டியலிடவில்லை?

  கேப்டன் கருப்பில் வாங்கியது உண்மைதான், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதை சொன்னவரின் உள்ளம் மட்டுமல்ல வெளியேயும் இருப்பது கருப்புதான்.
  _____________________________________________________________

  மக்கள் தாலியறுத்தா புதிய விமான நிலையம்?

  ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன் பீல்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியிரிடம் மனு கொடுக்க வந்த மக்கள் மீது போலிஸ் தடியடி பிரயோகிக்கப்பட்டது. இதையெல்லாம் வளர்ச்சி திட்டங்களுக்கு காண்பிக்கப்படும் எதிர்ப்பு, இதனால் மக்களுக்குத்தான் இழப்பு என்று கருணாநிதி பேசுகிறார்.

  ஏற்கனவே மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கிறது. இது போக புதிய விமான நிலையத்தின் அவசியம் என்ன? அரசுப் பேருந்துகளிலும், இரயில்களிலும் மந்தை போல அடைத்துக் கொண்டு பயணம் செல்லும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய அழகுமிகு பச்சைப் பசுமையான விமானநிலையம் என்பது ஆபாசமில்லையா? பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளின் கண்களுக்கு குளிர்ச்சியாக விமானநிலையம் அமைப்பதைத்தான் அரசுகள் விரும்புகின்றன. அதற்கு தடையாக இருக்கும் கிராமங்களும், மக்களும் கேள்வி கேட்பாரின்றி தூக்கி எறியப்படுவர். ஆனாலும் இந்த ஆட்டம் இப்படியே நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு காலம் வரும். இப்போது தூக்கி எறியப்படுபவர்கள் இந்த அரசுகளை தூக்கி எறிவார்கள்!
  _________________________________________________________

  ஊதிய உயர்வும், சுயமரியாதையும்!!

  புதிய ஊதிய உயர்வின் படி படிகள் எல்லாம் சேர்த்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் மொத்தம் 1.40 இலட்சம் ரூபாய்கள். இது கூட போதாது என்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இரகளை செய்தார்கள். ஆவேசமாக கேள்வி எழுப்பினார்கள். சபையையே முடக்கினார்கள். அவர்களது ஊதிய உயர்வின் நியாயம் குறித்து பல வாதங்களை முன்வைத்தார்கள்.

  மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு அதிக பணம் தேவை என்று யாரும் சொல்லவில்லை. அவர்களின் கவலை எல்லாம் அரசுத்துறை செயலர் 80,000 ரூபாய் சம்பளம் வாங்கும் போது தங்களுக்கு மட்டும் 50,000 ரூபாய்தானா என்றுதான் கொந்தளித்தார்கள். உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்தெல்லாம் அவர்கள் அவமரியாதையாக எண்ணவில்லை. ஆப்டரால் ஒரு செக்கரட்டரி சம்பளம் கூட எங்களுக்கு இல்லையா என்பதே அவர்களைப் பொறுத்தவரை இழிவாக கருதப்படுகிறது.

  மற்றபடி பாராளுமன்றம் முன்னெப்போதை விடவும் அரட்டை அரங்கமாக மாறிவரும் நிலையில், கேள்வி கேட்பதற்கு கூட பணம் வாங்கிக் கொண்டு செயல்படும் நிலையில், நம்பிக்கை வாக்களிப்பிற்காக குதிரை பேரத்தில் ஈடுபடும் நிலையில் இவர்களைப் பற்றி மக்களுக்கு எந்த ஆர்வமோ, மரியாதையோ இல்லை. அதனால் ஊதிய உயர்வு என்பது விலைவாசி உயர்வினால் தத்தளிக்கும் பெரும்பான்மை மக்களிடம் மேலும் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும். எனினும் அதைப்பற்றிக் கூட சுரணையற்ற இந்த ஜந்துக்கள் கவலைப்படப் போவதில்லை.
  _______________________________________________________________________

  ரக்ஷா பந்தன் – பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!!

  ரக்ஷா பந்தன் விழா என்றால் சைட்டடிக்கும் இளைஞர்களை கலாய்ப்பதற்காக பெண்கள் கையில் கையிறு கட்டி அண்ணன்களாக்கி நோகடிப்பார்கள் என்ற அளவுதான் இங்கே அது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாக்களிலும் அவ்வாறே காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

  ஆனால் உண்மையில் ரக்ஷா பந்தன் விழா வடக்கில்தான் முதன்மையாக கொண்டாடப்படுகிறது. தெற்கில் இந்த விழாவை ஆர்.எஸ்.எஸ் பிரபலமாக்க முயற்சிக்கிறது. அப்படி இந்த கயிறு கட்டலின் வரலாறு என்ன?

  பெண்கள் தங்கள் மானம், உயிர், கற்பு, உடமை அனைத்திற்கும் தனது சகோதரனே காப்பு என்று கயிறு கட்டுவதுதான் இதன் வரலாற்று வழக்கம். பெண்களையே சாதி, இன, மத கௌரவமாக ஆணாதிக்க சமூக அமைப்பு வைத்திருக்கிறது. குழுச் சண்டையில் கூட எதிர்க்குழுவின் பெண்ணை பாலியல் வன்முறை செய்வதே பெரிய நடவடிக்கையாக இருக்கிறது. அப்படி எல்லா கௌரவங்களையும் சுமந்து திரியும் பெண்களது கற்பை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம்.

  தனது கற்பையும், உயிரையும் தனது சகோதரனது பாதுகாப்பில்தான் ஒரு பெண் காப்பாற்ற முடியுமென்றால் அந்த சமூகம் எவ்வளவு பெரிய வன்முறை சமூகமாக இருக்க வேண்டும்? கூடவே ஆண்களின் கவுரவப் பாதுகாப்பில்தான் பெண்களின் உயிர் சிக்கியிருக்கிறது என்பது பச்சையான அடிமைத்தனமாக இருக்கிறது. பார்ப்பனியம் கற்றுத் தந்த எல்லா பண்டிகைகளையும் அதன் வரலாற்று பொருளோடு புரிந்து கொண்டால் அவற்றை புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.

  _______________________________________________

  செய்தித் தொகுப்பு: வினவு செய்தியாளர் குழு.
  ________________________________________________

  வினவுடன் இணையுங்கள்

  தொடர்புடைய பதிவுகள்

  சந்தா