privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்தி//குறுக்கு வெட்டு – 27.08.2010// வறண்ட மாவட்டத்தில் ஒரு வக்கிரத் திருமணம்!!

//குறுக்கு வெட்டு – 27.08.2010// வறண்ட மாவட்டத்தில் ஒரு வக்கிரத் திருமணம்!!

-

வறண்ட மாவட்டத்தில் ஒரு வக்கிரத் திருமணம்!!

குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த ஒரு செய்தி இது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு திருமணம் நடந்திருக்கிறது. பிரபல தொழிலதிபர் பி.கே.பவுன்ராஜின் மகள் டாக்டர் சரண்யாவுக்கும், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி. இளங்கோவனின் மகன் இன்ஜினியர் கார்த்திக்குக்கும் நடந்த திருமணத்தின் செலவு கோடிகளிலாம்.

தர்மபுரியின் முக்கியக் கோயில்களின் வழியாக திருமணம் நடந்த இலக்கியம்பட்டி திருமண அரங்கம் வரையில் ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவும் நிகழ்ச்சி நடந்ததாம். இதற்கு மட்டும் 20 இலட்சம் செலவு. செம்மொழி மாநாட்டு அரங்கை வடிவமைத்த குழுவினர்தான் இந்தத் திருமணத்திற்கான அரங்கையும் வடிவமைத்தனராம்.

மணமக்களை ஏற்றிய சாரட் வண்டி ஊர்வலத்தில் 20 யானைகள், 40 குதிரைகள், கேரளத்தின் 100 சென்டை வாத்தியக் கலைஞர்கள் கலந்து கொண்டனராம். நாட்டியக் குதிரை ஒரு பக்கம் ஆட, மறுபக்கம் சிவகாசி பிரபல ஃபயர் ஒர்க்ஸ் கம்பெனியின் வாணவேடிக்கை ஒலிம்பிக்கை விஞ்சும் வண்ணம் இருந்ததாம். ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு புகையில் தர்மபுரியே புகை மண்டலமாக காணப்பட்டதாம்.

தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான தர்மபுரியில்தான் இந்த ஆடம்பர திருமணம் தனது வக்கிரத்தை காட்டியவாறு நடந்திருக்கிறது. விதர்பாவில் திருமணத்தை கூட தனியாக நடத்த முடியாமல் விவசாயிகள் பல ஜோடிகளை சேர்த்து நடத்துகின்றனர். அப்படியாவது செலவு குறையாதா என்பதுதான். ஆனால் பணக்காரர்களோ தமது ஆடம்பரத்தை காட்டுவதற்கு பணத்தை அள்ளி வீசுகிறார்கள். இதுதான் இன்றைய இந்தியா!
___________________________________________________________________________

“இட ஒதுக்கீட்டை காப்பாற்றுங்கள்” – இராமதாஸின் வருமுன் காப்போம் திட்டம்

இட ஒதுக்கீடு முறையை காப்பாற்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தமாறும், நீதிக்கட்சி வழிவந்தவர்களே இதனை மீறலாமா என்றும் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பகிறார். இட ஒதுக்கீட்டிற்கு காரணமான சாதி ஒடுக்குமுறையை மற்றும் அதற்கு காரணமான பார்ப்பனீயத்தை சமூகத்தில் வேரறுப்பதுதான் இலட்சியம் என்பதற்கு பதிலாக, அதாவது சாதி ஒழிப்புக்கு முயற்சித்தீர்களா என மு.க•வை விமர்சிப்பதற்கு பதிலாக இட ஒதுக்கீட்டை காப்பாற்றுங்கள் என்ற வட்டத்திற்குள் மாத்திரமே குதிரை ஓட்டுகிறார் மருத்துவர் ராமதாஸ். எல்லா சமூக நீதிக் கட்சிகளும் இட ஒதுக்கீடு தவிர சாதிய ஒழிப்பு பற்றி பேசுவதோ, போராடுவதோ இல்லை. ஆதிக்க சாதிகளில் உள்ள நடுத்தர வர்க்க மக்களின் நலனை மட்டுமே அவை அக்கறை கொண்டிருக்கின்றன. நோயை குணப்படுத்த சாக்கடையை ஒழியுங்கள் என்று சொன்னால் சமூக மருத்துவரோ மருந்துகளை காப்பாற்றுங்கள் என்கிறார். நோய்க்கு கொண்டாட்டம்தான்!
______________________________________________________________________

சட்டத்தை அமல்படுத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை! – ஹரியாணா முதல்வர் ஹூடே

கவுரவ கொலைகளை தடுப்பதற்கான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு முன்னர் மாநில அரசுகளின் கருத்துக்களை ப. சிதம்பரம் கோரி இருந்தார். ராஜஸ்தான், உபி மாநில முதல்வர்கள் இச்சட்டத்திற்கு ஆதரவாக இருந்தாலும், மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் சட்ட வழியில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகளை மீண்டும் ஒரு  முறை ஞாபகப்படுத்தி இருக்கிறார்.

மாநில சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதற்காக ப.சி மாநில அமைச்சர்களின் கருத்துக்களை கேட்க முயற்சித்தார். இதுபற்றி சட்ட ஆலோசகர்கள் மற்றும் காவல்துறையினரிடம் பேசிய பிறகு காப் பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கும் அல்லது பங்கேற்கும் அனைவரையும் கொலை குற்றத்திற்கு நிகராக வைத்துதான் பரிசீலிக்க முடியும் என அவர்களும் சொன்னார்கள்.

அதன்பிறகும் சட்டத்தை அமல்செய்வதன் மூலம் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சத்துடன் பேசுகிறார் ஹரியானா முதல்வர் ஹூடே. பின்னே ஆதிக்க சாதிகளின் செல்வாக்கை வைத்து அரசியலில் பிழைப்பது சட்டத்தை அமல்படுத்துவதை விட முக்கியமாயிற்றே?
____________________________________________________________________________

அமெரிக்கா: சொர்க்கத்திலிருந்து நரகத்தை நோக்கி!

நேற்று அமெரிக்க்காவின் முக்கிய பங்கு வர்தக மையமான டவ்( Dow Jones Industrial Average- DJIA) 10, 000 குறைவான புள்ளிகளாக குறைந்து அமெரிக்க பொருளாதார நிபுணர்களையும், வர்தகர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இத்ற்க்கு முக்கிய காரணங்களாக அமெரிக்காவின்  வேலையில்லாதவர்களின்  எண்ணிக்கை திடிரென 31,000 இருந்து 473000 மாக உயர்ந்தது, ஸ்பெயின் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம், வீட்டு கடன் வாங்கியவர்கள் திரும்ப செலுத்தாதது, மக்களின் நுகர்வுகள் குறைந்தது, இதர பெரிய நிறுவனங்களான சிஸ்கோ, ஐபிஎம், போன்றவர்களின் பங்கு விலைகள் குறைந்தது, ஜப்பன் நாணயமான யென் -அமெரிக்க டாலரின் விலை நிர்ணய குழப்பம்,எண்ணேய் விலையேற்றேம், பொதுவான அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் என்று பட்டியிலடப்பட்டிருக்கிறது.

எத்தனை நாளுக்கு பூசணிக்காயை சோற்றில் மறைப்பார்கள்? கொஞ்சம் காரணிகளை பாருங்கள், ஒன்றுடன் ஒன்று சம்ந்தபட்டிருக்கிறது. வேலையில்லை, வாங்கும் சக்தி குறைந்துவிட்டது, கடனை திருப்ப செலுத்த பணமில்லை. ஆனால் தேவை குறைந்த நிலையில் விலை குறைய வேண்டிய பொருட்களின் விலை எகிறுகிறது. முதலாளித்துவ பொருளாதாரம் மக்களின் நலனை வைத்து அல்ல, முதலாளிகளின் இலாபம், சந்தையை வைத்தே இயங்குகிறது. ஆக வெறுமனே நுகர்வோர் என்ற தகுதிதான் மக்களுக்கு. ஆனாலும் அந்த நுகர்வோர் முதலாளித்துவ புண்ணியவான்களின் தயவால் நலிந்து போயிருக்கின்றனர். பின்னர் எப்படி பொருளாதாரம் உருப்படும்?

பூலோக சொர்க்கமான அமெரிக்காவில் இப்போது நரக வாழ்க்கைதான் என்பதை அமெரிக்க பக்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
________________________________________________________________________________

ஃபாக்ஸ்கான் நிறுவனம் – SUCIDE EXPRESS !!

சீனாவில் உள்ள FOXCONN நிறுவனத்தில் தற்கொலைகள் அதிகமாய் நடக்கின்றன. சமீபத்தில் சுமார் பனிரெண்டு தொழிலாளர்கள், அனைவருக்கும் 18  முதல்  24  வயதே கொண்டவர்கள் தற்கொலை  செய்து கொண்டுள்ளனர் . தற்கொலைக்கு  காரணம் கடுமையான வேலைச் சூழல்தான். அந்தச்  சூழல் எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

FOXCONN  நிறுவனம் போட்டிகளில் இருந்து தன்னை தக்கவைத்து கொள்ள குறைந்த விலைக்கே செய்து தருவோம் என்று APPLE போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பேசுகிறது. மேலும் குறைந்த விலை மட்டுமல்ல, குறைந்த நேரத்தில் முடித்து தருவோம் என்றும் தனது கஸ்டமர்களிடம் உறுதியளித்திருக்கிறது. அதற்க்கு பலிகடாவாக தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கும் அதிக வேலையுமாய் சக்கையாய் பிழிகிறது . சீனாவின் ஊடகங்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை SUCIDE EXPRESS என்று அழைக்கின்றது.

தற்போது இந்த நிறுவனம் நிலைமையை சரிகட்ட புத்த பிட்சுகளையும்  மன நல மருத்துவர்களையும்  நாடியுள்ளது. அப்படியும் நிலைமை சீரடையவில்லை. Terry Gou என்ற FOXCONN நிறுவனர்  தற்கொலைகளுக்கு குடும்ப பிரச்சனைகளே காரணம் என்கிறார். உண்மைதான். ஃபாக்ஸ்கானில் வேலை செய்தால் குடும்ப வாழ்க்கையே பிரச்சினைதானே?
__________________________________________________________________

காமன்வெல்த் போட்டிக்கு காமன்மேனின் பணம்!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 628 கோடி ரூபாயை காமன்வெல்த் விளையாட்டிற்கு தேவையான கட்டுமான வசதிக்காக டெல்லி காங்கிரசு அரசு பயன்படுத்தி உள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் இந்த அயோக்கியத்தனத்தை கேள்வி கேட்டதற்கு ப. சிதம்பரம்  சொன்ன பதில் – “எல்லோருக்கும்தானே கட்டமைப்பு வசதி பயன்பட போகிறது”.

அழகான சாலைகளும், எழில் மிகு கட்டிடங்களும், கண்கவரும் மைதானங்களும் எந்த சாமானியனுக்கு பயன்படப்போகிறது? காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி முழுவதுமுள்ள சேரிகளை ஈவிறக்கமின்றி வெளியே தூக்கி எறிந்து விட்டு இப்போது எல்லா மக்களுக்கும் பயன்படும் என்கிறார் ப.சிதம்பரம்.
இது எப்படியிருக்கிறது என்றால் ஏழைகளுக்கு பிச்சையிடவே தான் பணக்காரனாக ஆனேன் என்றுகூட சொல்லலாமே?

_______________________________________________

செய்தித் தொகுப்பு: வினவு செய்தியாளர் குழு.
________________________________________________