privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்பதிவரசியல்: நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?

பதிவரசியல்: நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?

-

சாந்தி மீதான தாக்குதலுக்கு பதிலளிக்காமல் திசைதிருப்பவது ஏன்?

எதிர்பார்த்தபடியே பதிவர் சாந்தி எழுதிய கட்டுரையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு பதிவுலகத்தினர் கண்டித்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. எதிர்பார்த்தபடியே சிலர் இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா என்று நீர்த்து போக வைப்பதற்கு முயல்கிறார்கள். சாந்தியின் முழு ஜாதகத்தையும் தோண்டி வெளியே இழுத்துப் போடுவதன் மூலம் இந்த பிரச்சினையை திசை திருப்புவதற்கும் சிலர் முனைகிறார்க்ள்.

நண்பர்களே, பதிவர் சாந்தி பதிவுலகில் அரசியல் சார்பாகவோ, மொக்கையாளராகவோ, முற்போக்கனாவராகாவோ இருந்தாரா என்பதல்ல பிரச்சினை. அவரே குறிப்பிட்டுள்ளது போல சீரியசான விவாதங்களையும், எளிமையாக அணுக வேண்டி மொக்கை போட்டதையும் சென்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளார். இங்கே பிரச்சினை என்னவென்றால் அவருடன் சில பொதுவிவாதங்களில் ஈடுபட்ட இருவர் அதற்கு பழிவாங்கும் வண்ணம் புனைவு எழுதி தமது வக்கிரத்தை காட்டியிருக்கிறார்கள் என்பதே. அந்த பொதுவிவாதங்களில் பதிவர் சாந்தி தனக்கு நியாயம் என்று கருதிய விசயத்தை கேட்டிருக்கிறார். புலவன் புலிகேசி கவிதைக்காக பதிவர் முகிலன் எழுதிய கவிதையில் ஏழைகளையும், ஏழை எழுத்தாளரளையும் இழிவு செய்திருக்கிறார் என்று அவர் கேட்கக்கூடாதா என்ன? இதில் சாந்தியின் தனிப்பட்ட நலன் எதுவமில்லையே? ஆனால் முகிலன் இதை தனிப்பட்ட நலனுக்காக பழிவாங்கும் வண்ணம் மிரட்டலைக் கையிலெடுக்கிறார். இரும்புத்திரை அரவிந்த அதை தொடர்கிறார்.

ஒரு பெண் பதிவர் தனிப்பட்ட நட்பு காரணமாகவும், நம்பிக்கை காரணமாகவும் பலருடன் பேசுகிறார், சாட் செய்கிறார், தன்னைப் பற்றிய விவரங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்கிறார். அதே உரிமை காரணமாக மாற்று கருத்து இருக்கும் போது விவாதிக்கிறார். இதில் மற்ற விசயங்களில் அவரோடு நட்புடன் பழகும் சில ஆண்கள், அந்த பெண் பதிவர் விவாதிக்க ஆரம்பித்த பிறகு தமது ஆணாதிக்க வக்கிரத்தை ஆயுதமாக ஏந்துவது என்ன நீதி?

ஒரு பெண்பதிவரை குறிப்பிட்ட ஆண்பதிவர் தகாத முறையில் பேசுகிறார். இதை இன்னொரு ஆண் பதிவர் தட்டிக் கேட்காமல் அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவரின் எழுத்து ரொம்ப பிடிக்கும் என்று குறிப்பிட்டால் இந்த பிரச்சினையை பேச நினைக்கும் நம்மைப் போன்றவர்கள் என்ன நினைப்போம்? அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவருக்கு வக்காலத்து வாங்கும் அவரது நண்பரை கண்டிப்போம். இதைத்தான் சாந்தி செய்தார். ஆனால் மதார் என்ற பெண்பதிவரோ அப்படி தட்டிக் கேட்க கூடாது என்கிறார். எனில் ஒரு கேள்வி வருகிறது. நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?

சந்தர்ப்பவாதத்தில் வளரும் நட்புதான் பூமிக்கு பாரம்!

பதிவுலகில் சிலர் நட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள். வலைப்பதிவுகள் மூலம் நம்மிடம் நட்பு அரும்புவதும், அது விரிந்த உரையாடலாக விரிவதும் வரவேற்கத்தக்க விசயம்தான். ஆனால் அதன் அளவு கோல் என்ன? சமூகத்தில் நிலவும் குறைந்த பட்ச மதிப்பீடுகளோ, நாகரீகமோ, மக்கள் நலனோ இருக்க வேண்டுமா, கூடாதா? அய்யா, ஒரு பதிவர் பலரை நண்பராக பெற்றவர்,” தலித் இளைஞர்களுக்கு என்னதான் வாய்ப்பு கொடுத்தாலும் அவர்களை மாற்ற முடியாது, அவன் பிறவி புத்தி அப்படி” என்று சொல்கிறார் என வைப்போம். அந்த பதிவரோடு நாம் இதற்கு மேலும் நட்பு பாராட்டி ஒன்றாக தண்ணி அடிப்பதற்கு முனைவோமா? இல்லை அவரை வன்மையாக கண்டித்து மன்னிப்பு கேட்க சொல்வோமா? இங்கே எது தீர்மானிக்கிறது? நட்பா, கொள்கையா?

ஒரு பதிவர் தனது திருமணத்தில் மிகுந்த வரதட்சணை வாங்கி பின்னர் தனது மனைவியை மேலும் வரதட்சணைக்காக துன்புறுத்துகிறார் என்ற செய்தி அவரது பதிவுல நண்பர்களுக்கு தெரிய வருகிறது என்று வைப்போம். ” இது தமது நண்பனின் தனிப்பட்ட பிரச்சினை, இதில் நாம் தலையிடுவது சரியல்ல” என்று முடிவு செய்து கொண்டு அந்த நட்பு தொடர்கிறது என்றால் இதை காறி உமிழ்வோமா, இல்லை முன்னுதாரணமாக கொண்டாடுவோமா?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவெளியில் ஒருவர் தவறிழைக்கிறார் என்றால் அந்த தவறின் தன்மையைப் பொறுத்து அதன் சமூக விளவைப் பொறுத்து அதை கண்டிக்கவேண்டாமா, இல்லையா? பூக்காரி புனைவு எழுதியவர் வினவு மேல் நல்ல நம்பிக்கை கொண்டிருக்கலாம். பதிவர் சங்கம் பிரச்சினையின் போது சங்கம் ஆரம்பிப்பது தொடர்பாக வினவு தோழர்களையும் உள்ளிட்டு கலந்தாலோசிக்க வேண்டுமென்று கூட அவர் எழுதியிருக்கிறார். இப்படி எங்களை மதிப்பவரை அவர் செய்த தப்பு காரணமாக கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் போயிருந்தால் அவர் இன்னும் எங்களை நெருங்கியிருக்கலாம். நாளையே எங்கள் அரசியல் நிகழ்வுக்காக அவரிடம் நன்கொடை கேட்டிருந்தால் ஒரு பெரிய தொகை கூட அவர் கொடுத்திருக்கலாம்.

ஆனால் பூக்காரி புனைவை படித்த பிறகு அதிலுள்ள வன்மும், வக்கிரமும், சாதி துவேஷமும் கண்ட பிறகு எங்களது கண்ணுக்கு அவை மட்டுமே தெரிந்தன. அதை வன்மையாக கண்டிப்பதோடு, பதிவுலகில் அது ஒரு மோசமான முன்மாதிரியாக அம்பலப்படுத்தப்படவேண்டும் என்பதற்குத்தான் முயற்சி செய்தோம். இதையெல்லாம் செய்யாமல் அவருடன் நட்பு பாராட்டியிருந்தால், அல்லது அந்த பிரச்சினையை ஒதுக்கியிருந்தால் எங்கள் பெயர் கம்யூனிஸ்டுகள் அல்ல. அதற்கு சந்ததர்ப்பவாதிகள், பிழைப்புவாதிகள் என்று பெயர். தோழர் பைத்தியக்காரன் கூட கொள்கைக்காக தனது நட்பை தூக்கி ஏறிந்ததை பலர் இன்னும் சீரணிக்க முடியாமல் அதை துரோகம் என்று ‘பொங்கி’ வருகின்றனர். பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதற்கு ஒத்தூதும் இத்தகைய நட்புகளை நாங்கள் வெறுக்கத்தக்க அறுவறுப்புகள் என்றே கருதுகிறோம்.

நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு இனிய மாலை நேரத்தில் மதுவருந்தும் இன்பம்தான் முக்கியமே அன்றி அந்த இன்பத்தை ரத்து செய்யக்கோரும் கொள்கைப் பிரச்சினைகள் எங்களுக்கு தேவையில்லை என்பவர்களை நாங்கள் மதிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நாங்கள் மதிக்கவில்லை என்பதற்காக கள்ளக்காதல் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பியவர்களையும் நாங்கள் அறிவோம். நட்புக்காக ஒரு பெண்ணை எழுத்தில் இழிவுபடுத்துவதோடு, பின்ன்ர் அதைக் கண்டிப்பவர்களை அவதூறு செய்து தங்கள் மேலான நட்பை பாதுகாக்க விரும்பும் அக்மார்க் சுயநல பிழைப்புவாதிகளால் இந்த சமூகத்திற்கு எந்த பயனுமில்லை. அவர்களெல்லாம் பூமிக்கு பாரமாகத்தான் வாழமுடியுமே அன்றி பூமித்தாய் பெருமை கொள்ளத்தக்க வாழ்வை அவர்களால் கனவிலும் தரவியலாது.

உழைக்கும் மக்களின் பண்பாடும், உலக இலக்கியவாதிகளின் தரமும்!

இங்கே ஒரு உண்மையை உரக்க கூறுகிறோம். சந்தனமுல்லை,  சாந்தி என்ற அநீதி இழைக்கப்பட்ட இரு பெண்களுக்காக நாங்கள் களத்தில் இறங்கியதால் எங்கள் நட்பு வட்டம் அழிந்து விடவில்லை. முன்பை விட வினவுக்கு வாசகர்களும் நண்பர்களும் அதிகமாயிருக்கிறார்கள். குறிப்ப்பிட்ட பிரச்சினையில் இனி யாரும் நடுநிலைமை என்ற பாதுகாப்பான சந்தர்ப்பவாதத்தை பின்பற்ற முடியாது என்ற வகையில் இங்கே அனைவரும் ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்ற தார்மீக அற உணர்வு குறித்த பார்வை உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசியல் பிரச்சினைகளுக்காக எங்களை ஆதரிக்கும் சிலர் இதில் எதிர் அணியில் இருக்கலாம். அல்லது நேற்று எதிர் அணியில் இருந்தவர்கள் இன்று தவறை உணர்ந்து அணி மாறியிருக்கலாம். நீண்ட கால நோக்கில் நீதிக்கான அணிதான் வளரும். நட்பு என்பதை வெறும் தண்ணி அடிக்கும் நிகழ்வாக மட்டும் கவலைப்படும் அல்லது பயப்படும் கோழைகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

பதிவரசியல் பிரச்சினைகளில் நாங்கள் இறங்குவதால் எங்களது அரசியலுக்கு ஆள் பிடிக்க முனைகிறோம் என்று வினவை அடையாளம் காட்டுகிறார் ஜ்யோவராம் சுந்தர். முதலில் ஒன்றை அவர் புரிந்து கொள்ளட்டும். புரட்சிக்காக ஆள் பிடிப்பதுதான் எங்கள் வேலை. அதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. அதுதான் எங்கள் அடையாளம். ஆனால் இந்த ஆள்பிடிப்புக் கலையில் சந்தர்ப்பவாதத்தை கடைபிடித்திருந்தால், அனைவருடனும் விமரிசனமற்ற முறையில் முதுகு சொறிந்து கொண்டிருந்தால் எங்களுக்கு நிறைய ஆட்கள் கிடைத்திருப்பார்கள். அந்த வட்டத்தில் சுந்தரும் கூட இருந்திருக்கலாம்.

ஆனால் அரசியல் உள்ளிட்டு அனைத்திலும் மக்கள் நலனுக்கான நோக்கில்  கறாரான விமரிசனத்தை வைத்து வரும் எங்களுக்கு அவ்வளவு சுலபமாக நட்பு கிடைத்துவிடுவதில்லை. ஆனால் இந்த நீண்ட கால போராட்டத்தில் எங்களுக்கு கிடைக்கும் நட்பு என்பது வைரத்தை போன்று உறுதியானது. அதனால் அந்த நட்புகளும் மக்களுக்கான சேவையில் வெளிச்சத்தை வழங்கும் அழகான வைரமாக ஜோலிக்கிறார்கள். இன்று சந்ததர்ப்பவாதிகளின் அணி பெரிதாக இருக்கலாம். ஆனாலும் அது காக்காய் கூட்டமென்பது ஒரு பிரச்சினை வரும் போது புரியும்.

பதிவர் சாந்தி வினவின் அரசியல் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டால்தான் அவரது பிரச்சனையை பேசுவோம் என்பதையெல்லாம் நிபந்தனையாக நாங்கள் வைக்கவில்லை. இதை சாந்தியும் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  சாந்தி எங்களது அரசியல் நிலைப்பாடுகள் பலவற்றை ஏற்காமல் இருக்கலாம். கவலையில்லை. அன்னை தெரசாவை கடும் விமரிசனம் செய்து வந்திருக்கும் எங்களது கட்டுரையைப் படித்தால் அவர் வினவின் மீது கோபம் கூட கொள்ளலாம். பாதகமில்லை. இங்கே அவரை புனைவு என்ற வசதியான வடிவத்தை வைத்துக் கொண்டு இரண்டுபேர்கள் வன்முறை செய்கிறார்கள்.

தெருவில் இந்த வன்முறையைப் பார்த்துக் கொண்டு அதில் அடிபடுபவர் எங்கள் அரசியலை ஏற்றுக் கொண்டவரா என்று நேர்காணல் செய்து உறுதிப்படுத்திக் கொண்டு தலையிட்டால் அது கட்டப்பஞ்சாயத்து. கண்ணெதிரே நடக்கும் வன்முறையை தன்னலத்தின் சாதக பாதகத்தை அளவிடாமல் தட்டிக் கேட்பதுதான் உழைக்கும் மக்களின் பண்பாடு. இந்த விசயத்தில் நாங்கள் மக்களின் வழியை பின்பற்றுகிறோம். உலக இலக்கியம் கற்றுத்தேர்ந்தவர்கள்தான் மக்கள் பிரச்சினைக்களுக்காக பொங்காமல் தங்களது அற்ப விசயங்களுக்காக குடித்துவிட்டு நண்பனின் மூக்கை உடைப்பார்கள். அப்படி மூக்குடைபட்டவர்கள் முதலில் தங்களது யோக்கியதை என்னவென்று பார்க்கட்டும். பிறகு எங்களை தராசில் நிற்கவைத்து தராதரம் பார்க்கலாம்.

ஆணாதிக்கத்திடம் சரணடையும் பதிவர் மதார்!

பதிவர் மதார் நாட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பெண் ஏதோ கூறுகிறாள் என்பதற்காக பலரும் வந்து ஆதரவு தருகிறார்கள் என்று கவலைப்படுகிறார். இவ்வளவு நாட்களும் அவரோ இல்லை முகிலனோ இல்லை இரும்புத்திரை அரவிந்தோ நாட்டுப்பிரச்சினைகளுக்காகத்தான் கதறி அழுது போராடியிருக்கிறார்கள் போலும். வினவில் வரும் எல்லா இடுகைகளும் என்ன பிரச்சினையை பேசுகின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள். ஏன் வினவின் அரசியல் எதிரிகள் கூட இங்கே சமூக பிரச்சினைகள்தான், பொது நலனுக்கான கட்டுரைகள்தான் வருகின்றன என்பதை மறுக்கமாட்டார்கள்.

இப்படிபொது நலனுக்கான பிரச்சினையைப் பேசத்தெரிந்தவர்களுக்கு இரண்டு மொக்களைகள் எழுதியிருக்கும் புனைவு பற்றி ஒன்றுமே தெரியாதாம். சாந்தி ஏதோ தவறாக எங்களை உசுப்பிவிட்டு பயன்படுத்திக் கொள்கிறாம். இதற்கெல்லாம் ட்யூஷன் எடுக்குமளவுக்கு மதாருக்கு பொறுப்புணர்வு இருந்தால் உண்மையில் வரவேற்கிறோம். ஆனால் சாந்தியைப் பற்றி இருவர் எழுதியிருக்கும் புனைவு எல்லாம் ஒரு விசயமே இல்லை என்று மதாரால் எப்படி கடந்து போக முடிகிறது?

இல்லை அந்த இருவர் எழுதியிருக்கும் புனைவின் பொருள் என்ன என்று மதாரே பொழிப்புரை எழுதட்டும். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு அவருக்கு என்ன் உரிமை இருக்கிறது? இந்த புனைவு சாந்தியைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்று மதார் கூறவில்லை. அது பெரிய விசயமில்லை என்பதே அவரது நிலை. நல்லது, அது பெரிய விசயமா, இல்லை சிறிய விசயமா என்று சொல்லுவதற்கு சாந்திக்கு மட்டுமே உரிமை உண்டு. அந்த புனைவாலும் அதன் பின் சாந்தியின் அந்தரங்கத்தை வெளியிடுவதாக வந்த மிரட்டலாலும் சாந்தி எந்த அளவு புண்பட்டிருப்பார் என்பதை உணர்வதற்கு கூட அருகதை இல்லாத மொக்கையாக முடங்கி போனதற்கு மதார்தான் வெட்கப்படவேண்டும்.

இதில் சாந்திக்கு பக்குவம் இல்லை என்று மதார் வருத்தப்படுகிறார். மேலும் ஒரு பெண் என்ற முறையில் விட்டுக் கொடுத்து போகவேண்டுமென்றும் கூறுகிறார். அப்படி விட்டுக்கொடுத்துப் போயிருந்தால் அதன்பெயர் அடிமைத்தனம் அல்லது சராணாகதி. அதன் விளைவு ஆண்டாண்டு காலத்திற்கும் ஆணாதிக்க வக்கிரத்தை எதிர்க்க முடியாது என்ற பாடம்தான்.  ராமன் சந்தேக்ப்பட்டான் என்பதற்கு சீதையை தீக்குளிக்க வைத்து கொன்றதை கதையாக பெருமைப்படும் நாடுதானே இது? சாந்தியும் அப்படி தீக்குளிப்பதுதான் பக்குவம் என்று மதார் மன்றாடுகிறார்.

குழந்தைகளை வயிற்றில் சுமந்து பின் வளர்த்தெடுத்து தன் வாழ்க்கையை கரைத்துக் கொள்ளும் அநேக பெண்களுக்கு தாய்மையின் அருமை பற்றி விளக்கத் தேவையில்லை. ஆனால் இந்த தாய்மை என்ற அந்த தன்னலமற்ற பண்பை உடலாலும் சமூக நிலைமையாலும் பெறாத ஆண்களுக்கு வேண்டுமானால் அது புரியாமல் இருக்கலாம். இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் சாந்தி எத்தனை தடவை யோசித்திருப்பார், தயங்கியிருப்பார், மென்று புழுங்கியிருப்பார்.

இங்கே ஒரு உண்மையினை பகிர்ந்து கொள்கிறோம். முதலில் இந்த பிரச்சினையை சாந்தி எங்களுக்கு தெரிவித்த போது,  இதை இப்போதைக்கு விட்டுவிட்டு பொருத்தமான தருணத்தில் அந்த பதிவர்களை அம்பலப்டுத்துவோம் என்றுதான் கூறினோம். அப்போது கூட அவர் அதை மறு வார்த்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். பின்னர் நடந்த பிரச்சினை என்னவென்று சில பதிவர்கள் மூலம் அறிந்த பிறகுதான் இதை வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். இந்த நிகழ்ச்சிப் போக்கில் சாந்தியிடம் வெளிப்பட்டது அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை தீர்ப்பதை விட இனி எந்த பெண்ணுக்கும் இது நேரக்கூடாது என்ற ஆதங்கம்தான். இதையெல்லாம் வலிந்தோ, செயற்கையாகவோ சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

சாந்தியின் கட்டுரையில் ஒரு விசயம் வருகிறது. வேறு ஒரு குழுமத்தில் ஒருவர் சாந்தியை தாய்லாந்தில் விபச்சாரம் செய்வதாக கூறியிருக்கிறார். பின்னர் அது தவறு என்பதை மனதார மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த மன்னிப்பை ஏற்கும் பெருந்தன்மையும், பக்குவமும் சாந்தியிடம் இருக்கிறது. ஆனால் அத்தகைய கயவர்களை கண்டிப்பதற்க்கான பக்குவம் அல்லது சுயமரியாதை மதாரிடம்தான் இல்லை. புனைவு எழுதிய அரவிந்தும், முகிலனும் அதன்பின்னர் அதை நியாயப்படுத்தியதோடு, மேற்கொண்டு இரகசியங்களை வெளியிடுவதாக மிரட்டியிருக்கின்றனர். இதை எப்படி எதிர் கொள்வது என்ற அவநம்பிக்கையில்தான் சாந்தி பலருக்கும் மடல் அனுப்பி நியாயம் கேட்கிறார். அப்போதுதான் பதிவுலகம் இந்த பிரச்சினையைக்கூட தட்டிக்கேட்பதற்கான ஆரோக்கியமான சூழலில் இல்லை என்ற உண்மை அவருக்கு புரிகிறது. இதற்குத்தான் நாம் வெட்கப்படவேண்டுமே அன்றி சாந்தி அல்ல.

தோழர் மாதவராஜ் ஏன் அவமானப்படுகிறார்?

மாதவராஜ் அப்படி பதிவுலகம் சார்பாக தான் அவமானப்படுவதாக எழுதியிருக்கிறார். இதை நன்கு கவனியுங்கள், இதில் சம்பந்தப்பட்ட புனைவு எழுதிய பதிவர்கள் வெட்கித் தலை குனியவேண்டுமென்று அவர் எழுதவில்லை. அவர்களிடமெல்லாம் அப்படி ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்த முடியாது என்பதற்காக அத்தகைய குற்றமெதனையும் செய்யாத மாதவராஜ் தன்னை முன்வைத்து தலைகுனிகிறார். ஒரு ஆண் என்ற முறையில் அவர் அவமானப்படுகிறார். வேதனைப்படுகிறார். ஆணாதிக்கம் குறித்த சமூகப் பார்வை கொண்ட எந்த மனிதனும் செய்யக்கூடிய நேர்மையான சுயவிமரிசனம் அது. அப்படியெல்லாம் மாதவராஜ் நடந்து கொள்ள எது தூண்டியது? இப்படி எழுதிய ‘ குற்றத்துக்காக’ அவரை கடித்துக் குதறக் காத்திருக்கும் ஆணாதிக்க மொக்கைகள் ஒரு நிமிடமாவது யோசித்துப் பார்க்கட்டும். மாதவராஜுக்கும் வினவுக்கும் பாரதூரமான அரசியல் வேறுபாடு இருக்கிறது. அவர் சார்ந்திருக்கும் கட்சி மீது எங்களுக்கு கடும் விமரிசனமிருக்கிறது. அதைப் போல எங்கள்மீது அவரது கட்சிக்கும் கடும் பகை இருக்கிறது.

இருப்பினும் இந்த பிரச்சனையை வைத்து  வினவை  தனிப்பட்ட முறையில் வஞ்சம் தீர்க்க அவர் முயலவில்லை. சொல்லப்போனால் சந்தனமுல்லை, சாந்தி இருவரது பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்ததால் அவர் தனது நட்பு வட்டத்தைத்தான் நிறைய இழந்திருக்கிறார். அவரது நேர்மைக்கும், கொள்கைக்காக நட்பு வட்டாரத்தை தக்கவைப்பதற்கு தலைவணங்காத அவரது உறுதிக்கும் தோழமை உணர்வுடன் தோள் கொடுப்போம். ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவை எதிர்த்தவர்கள் இப்போது வினவை வஞ்சம் தீர்க்க முயல்வதை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம்.

வினவுத் தோழர்களை ஆண்கள் என்ற முறையில் ஒரு பெண் சந்தேகப்படலமா?

பதிவுலகில் புதிதாக ஒரு பெண்பதிவர் எழுத வருகிறார். பின்னர் வினவு செயல்பாட்டை வைத்து எங்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறார். அப்போது மூத்த பெண்பதிவர் ஒருவர்,”வினவு தோழர்கள் முற்போக்காக இயங்கினாலும் அவர்களிடமும் ஜாக்ரதையாக இருங்கள். அவர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை பகிர்வதை தவிருங்கள், பதிவுலகில் வினவு தோழர்களே ஆனாலும் அவர்களும் சராசரியான ஆண்களாக இருக்கலாம், கவனம்” என்று சொல்வதாக வைப்போம். இது எங்களது கவனத்திற்கு வருகிறது. உடனே இதை எதிர்த்து நாங்கள் பொங்க வேண்டுமா? அவசியமில்லை. எல்லா ஆண்களையும் ஒரு பெண் சந்தேகப்படுவது சரியா,தவறா என்பது பிரச்சினை அல்ல. அப்படி சந்தேகப்படும் பட்சத்தில் அப்படி நாம் இல்லை என்றால் அதை நிரூபிப்பது நம் கடமைதானே அன்றி அந்த பெண் சந்தேகப்படுவதே தவறு என்று கூற வேண்டிய தேவையில்லை.

சந்தேகப்படுவதற்கு எந்த ஒரு பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது என்பது சமூகத்தின் தரம்தாழ்ந்த நிலைமையை காட்டுகிறதே அன்றி அந்த பெண்ணின் தவறல்ல. எனில் அப்படி சந்தேகப்படக்கூடியதற்க்கு வாய்ப்புள்ள அந்த எல்லா ஆண்கள் பட்டியலில் நாங்களும் இடம் பெறுவோம் என்பது ஒரு சமூக உண்மைதானே? அதில் நாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்பதில் எங்களுடைய வாழ்க்கையில் இடம்பெறும் ஆணாதிக்கமும் அடக்கம்தான். இவ்வளவிற்கும் அதை பரிசோதிப்பதற்கான அமைப்பு முறையில்தான் நாங்கள் செயல்படுகிறோம் என்றாலும் பொது வெளியில் அதை வைத்து நாங்கள் ஆணாதிக்கத்தை கடந்தவர்கள் என்று சுயதிருப்தி அடையவேண்டிய அவசியமில்லை. வாழ்க்கை எனும் சமூக இயக்கத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது சாகும் வரை தொடர வேண்டிய போராட்டம். அதில் இத்தனை வருடம் கடந்திருந்தால் கம்யூனிஸ்ட் என்ற சான்றிதழ் வழங்கப்படும் என்ற அபத்தமான கருத்து எங்களிடம் இல்லை. இதை நண்பர் அப்துல்லா புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

முன்னாள் பெண்ணுரிமை ‘போராளி’ முகிலனின் மனசாட்சிக்கு சில கேள்விகள்!

சாந்தியை அக்கா என்று அழைத்து பழகி பின்பு புனைவு எழுதிய முகிலன் கூட ஒரு காலத்தில் கம்யூனிச இயக்கத்தின் தொடர்பில் இருந்ததாக அறிகிறோம். இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகள் என்று அழைக்கப்படும் நக்சல்பரி இயக்கம் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் யுத்தக் கட்சி என்ற பெயரில் இயங்கியது. அந்த கட்சியின் அரசியலை ஆதரிக்க கூடிய பெண்கள் அமைப்பொன்று ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இயங்கி வந்தது. அப்போது அந்த இயக்கத்தின் பெண் தோழர்கள் பெண்களை இழிவு படுத்தும் ஆபாச இலக்கிய, திரைப்படங்களை எதிர்த்து ஒரு போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி ஆபாச படம் ஓடிய மதுரை திரையரங்கு ஒன்றில் நுழைந்து படச்சுருளை கைப்பற்றி முழக்கமிட்டவாறு தீவைத்துக் கொளுத்தினர். அந்த போராட்டத்தில் இந்த முகிலன் கலந்து கொண்டு போலீசிடம் அடிபட்டாராம். இதில் போலீசிடம் அடிபடுமளவு அந்த பெண்கள் தீவிரமாக போராடுவது குறித்து தனக்கு தெரியாது என்று முகிலன் வருத்தப்படுகிறார். இந்த பெண்கள் அமைப்பு ம.க.இ.க சார்பு அமைப்பு என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார். இல்லை ம.க.இ.கவிற்கும் அந்த பெண்கள் அமைப்பிற்கும் தொடர்பில்லை. சொல்லப்போன்னால் அந்த பெண்கள் அமைப்பு ஆதரிக்கும் மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் குறித்து ம.க.இ.கவிற்கு பெரும் விமரிசனங்கள், வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் மாவோயிஸ்ட்டு கட்சியை மாக்சிய லெனினிய இயக்கம் என்ற முறையில் தோழமையுடன்தான் அணுகுகிறோம்.

இப்போது அது பிரச்சினை அல்ல. முகிலனுடன் போராடிய அந்த பெண் தோழர்கள் பின்ன்ர் தரும்புரியில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற வழக்கு காரணமாக பல வருடங்கள் சிறையில் இருந்தனர். சிறையில் அவர்களது இளமை குன்றிய காலத்தில் முகிலன் படித்து ஆளாகி பின்னர் அமெரிக்காவிற்கு சென்று செட்டிலாகிவிட்டார். இன்று வசதியான அமெரிக்க வாழ்க்கை தந்த ஆணவத்தின் காரணமாக புலவன்புலிகேசி என்ற பதிவர் சமூக அக்கறை காரணமாக எழுதுவதைக் கூட கேலி செய்து அகமகிழும் உயர்ந்த இரசனைக்கு மாறிவிட்டார்.

முகிலன் நீங்களும் ஒரு காலத்தில் தோழர் முகிலனாக இருந்திருக்கிறீர்கள் என்ற உண்மையினை வைத்து கேட்கிறோம். உங்களுடன் சிறை சென்ற தோழர்கள் நினைத்திருந்தால் உங்களைப்போன்ற வசதியான வாழ்க்கையை எட்டியிருக்கலாம். அவர்களோ பல ஆண்டுகள் சிறை சென்றதோடு பல உடல் உபாதைகளோடு எந்நேரமும் தொடரும் போலீஸ் தொல்லையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொலைவில் தண்டகாரன்யாவில் உங்கள் முன்னாள் தோழர்கள் பழங்குடி மக்களுக்காக தனதுயிரை பணயமாக வைத்து எந்நேரமும் சாவை எதிர்பார்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய அமைப்பின் தொடர்பில் இருந்த நீங்கள் இன்று புனைவு எழுதியும், புலவன் புலிகேசியை கேலி செய்தும் உங்கள் ஓய்வு நேரத்தை இன்பமாக கழித்து வருகிறீர்கள். புரட்சியும், ஏழைகளும், தோழர்களும் இன்று உங்கள் பார்வையில் மட்டமான பொருட்களாகிப்போனார்கள். தோலர் என்றும் புர்ச்சி என்றும் அழைப்பது உங்களுக்கு அளவிலா மகிழ்வை தருகிறது. இரும்புத்திரை என்ற பெயரில் இயங்கும் மண்குதிரையான அரவிந்தைப் பற்றிக்  நாங்கள் கவலைப்படவில்லை.

ஆனால் ஒரு காலத்தில் இத்தகைய வாசனையுடன் உங்களது இளமையின் ஒரு பகுதியை செலவிட்ட நீங்கள் இன்று ஒரு பெண்ணையும், சமூக அக்கறை கொண்ட ஒரு இளைஞனையும் இழிவுபடுத்துகிறீர்கள் என்பது எத்தகை பரிணாம வளர்ச்சி முகிலன்? நாளை உங்களது வரலாற்றை நினைவு கூறும் போது இவற்றில் எதனை பெருமையாக கருதுவீர்கள்? ஆபாச திரைப்பட்த்தை எரிப்பதற்கு உடன் வந்த நீங்கள் இன்று இப்படி ஒரு புனைவை எழுதியிருக்கிறீர்கள் என்பதை அந்த பெண்கள் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்? அது குறித்தெல்லாம் உங்களுக்கு கவலை இல்லை என்றால் நீங்கள் யார் என்று தெரிவியுங்கள் முகிலன்.

கிடைத்திருப்பது நமக்கு ஒரு வாழ்க்கைதான் முகிலன். அதில் பணமும், ஆடம்பரமும், வசதியும், அதற்கு உகந்த நட்பும் கிடைத்திருக்கலாம். ஆனால் சமூக விடுதலைக்காக அந்த வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு மக்களுடன் தம்து வாழ்க்கையை இணைத்துக் கொள்பவர்களே மனித வாழ்க்கையின் முழுமையை கம்பீரத்துடன் அடைகிறார்கள். மனித குலத்தின் வரலாறு அதற்காக தியாகம் செய்த முன்னோடிகளால்தான் முன்னேறுகிறது. அந்த முன்னேற்றத்திற்கு தோள் கொடுக்காமல் அப்ப்டி பயணிப்ப்வர்களின் கால்களை தட்டிவிடுவதில் இன்பம் காணாதீர்கள். உங்களிடம் இன்னமும் நேர்மை என்று ஏதாவது குடியிருந்தால், கடுகளவாவது மனசாட்சியிருந்தால் நடந்தவற்றிக்கு மனதார வருந்துங்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அதனால் நீங்கள் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள்.

தனது தவறுகளை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் மனிதன்தான் வாழ்க்கை எனும் உலைக்களத்தில் புடம்போடப்ப்ட்டு மனநிறைவான வாழ்வை வாழமுடியும். அத்தகைய நிம்மதி வேண்டுமா இல்லை வாழ்க்கை முழுவதும் பின்தொடரக்கூடிய குற்ற உணர்வு வேண்டுமா முடிவு செய்யுங்கள். இந்த விவகாரத்திற்கு செலவிடப்பட்டுள்ள நேரத்தினை அர்த்தமுள்ளதாக்குங்கள். இந்த கோரிக்கையை உங்களிடம்தான் வைக்க முடியும் என்ற வகையில் இன்னமும் நாங்கள் உங்களிடம் சிறு நம்பிக்கையை கொண்டிருக்கிறோம். சாந்திக்கும் அந்த நம்பிக்கையை உருவாக்குவது உங்கள் கையில். மற்றபடி இரும்புத்ததிரை அரவிந்த் போன்ற உலக ‘அறிவாளிகளிடம்’ இதை புரியவைக்கமுடியாது.

பெண்களால் ஆண்கள் பாதிப்படைவதில்லையா? உண்மை என்ன?

அடிமைத்தனத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு நடக்கும் பெண்களாலேயே பல ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பின் மூலத்தை அந்த ஆண்கள் உணருவதில்லை. மாறாக பெண்களால் ஆண்கள் பாதிக்கவில்லையா என்று சரிக்கு சமமாக பார்க்கிறார்கள். அடிமைத்தனத்திலேயே ஊறித்திளைத்திருக்கும் பெண்களிடமும் ஜனநாயகத்தின் வாசனை கூட அறிமுகமாயிருக்காது. அதனால் அவர்களது எதிர்ப்பு நடவடிக்கைகளும் நேர்மையாக இருக்காது. பெண்கள் பொது வாழ்வில் ஒன்று கலப்பதும், சமூக,பொருளாதார தளங்களில் சுயேச்சை நிலையை அடைவதும்தான் அதற்கான மாற்றத்தை கொண்டுவரும். தனது வீட்டு குடும்ப் பெண்களை சமையலறைக்கும், வேலைக்குச் சென்றால் ஏ.டி.எம் எந்திரமாகவும் கருதும் ஆண்கள்தான் பெரும்பாலும் பெண்களால் பாதிப்பில்லையா என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

இத்தகை நிலைமையினை பல விடயங்களில் காணலாம். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை வைத்து தாங்கள் தவறாக குற்றம் சாட்டப்படுவதாக ஆதிக்க சாதியினர் இந்தியாவெங்கும் கூவுகின்றனர். ஆனால் இதுவரை இந்தியாவில் இந்த சட்டப்படி தண்டிக்கப்பட்டோரை எங்கும் கண இயலாது. கூடவே கயர்லாஞ்சி, மேலவளவு போன்ற கொடுமைகள் அன்றாடம் நடக்கின்றன. கோவைக் கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்த குற்றத்திற்காக தூக்குத்தண்டனையை உறுதி செய்யும் நீதிமன்றங்கள் அதை விட கொடுமையான கயர்லாஞ்சி படுகொலைகளுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதில்லை.

இத்தகைய முரண்பாடு சுட்டும் உண்மை என்னவென்றால் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் ஆதிக்க சாதியினரை தண்டிக்க முடியாது என்ற சமூக யதார்த்தத்தைத்தான். அது போல சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசுகள் பல சலுகை கொடுப்பதாக இந்து மதவெறியர்கள்கூறுகின்றனர். ஆனால் முன்பு பொடா சட்டத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்கள்தான் கைது செய்யப்பட்டார்கள். ஒரு வீடு வாடகைக்கு பிடிப்பதிலும், அல்லது ஒரு வேலைக்கு செல்வதிலும் முசுலீம் என்ற காரணத்தினால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலாக குஜராத் போன்ற சமீபத்திய இனப்படுகொலைகளுக்கு காரணமான ஒரு இந்து மதவெறியர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இத்தகைய நிலைமைதான் பாலினம் என்ற வகையில் பெண்களுக்கும் இருக்கிறது. ஆகவே தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்பாலினம் என்ற வகையில் இருக்கும் பிரச்சினைகளை அதன் எதிர் தரப்புக்கும் இல்லையா என்று கேட்கும் குரல் அநேகமாக ஆதிக்கவாதிகளின் குரலாகத்தான் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் எத்தனை பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது?

ஆண் பாதிப்படைவதும் பெண் பாதிப்படைவதும் சமமானவைகளா?

அடுத்து ஒரு பெண் பாதிக்கப்படும் போது அவளது பெண்மையை இழிவுபடுத்தும் கதைகள், கிசுகிசுக்கள், புனைவுகள் சுலபமாய் பிறக்கின்றன. சில பெண் பதிவர்களிடம் ஒரு வக்கிர ஆண் பதிவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்றால் உடனே சம்பந்தப்பட்ட பெண்பதிவர்களைப் பற்றிய கதைகள் வெகுவேகமாய் புனையப்ப்ட்டு  பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அதாவது அந்த பெண்பதிவர் அப்பாவியல்ல, அந்த ஆண் பதிவர் பொறுக்கியுமல்ல என்று பேசுகிறார்கள். சாந்தி தனது பதிவில் ஒரு விசயத்தை நறுக்கென்று குறிப்பிடுகிறார். ஒரு பெண் விபச்சாரியே ஆனாலும் அவளை கற்பழிப்பதற்கு எந்த பொறுக்கிக்கும் உரிமையில்லை. அவளது சம்மதமின்றி யாரும் அவளை தொட நினைப்பது கூட பாலியல் வன்முறைதான். ஆனால் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தவறாக பேசினான் என்றால் அந்த பெண்ணின் நடவடிக்கை சரியல்ல என்று பேசுவது காலம் காலமாய் தொடரும் ஆணாதிக்க தந்திரம். முல்லைக்கு ஏற்ப்பட்ட பிரச்சினையில் சூட்டோடு சூடாக எத்தனை உள்ளங்கள் கிசுகிசுக்களை பரப்பினார்கள் என்பதை அறிவோம். இன்றும் கூட அவை வெட்கம் கெட்ட முறையில் பேசப்படுவதையும் பார்க்கிறோம்.

அடுத்து பாதிக்கப்ப்ட்ட பெண்கள் அதை தைரியமாக வெளியே சொல்லமாட்டார்கள் என்பதை வைத்து தன்னை யோக்கியன் என்று அசால்ட்டாக சொல்லிக் கொள்ள முடியும்தான். அந்த பெண்ணே அதற்குரிய ஆதாரத்தை வெளியடாத வரை சம்பந்தப்பட்டவரை நாம் குற்றம் சாட்டுவது தவறா, இல்லையா என்பதைத்தான் இங்கே பலரும் பார்க்கிறார்களே அன்றி பாதிக்கப்பட்ட பெண்கள் அதை வெளியே சொல்ல முடியாத நிலை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் சம்பந்தப்பட்ட பெண்கள் அதை கூறாமல் இருந்தால்தான் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்குமென்று பலர் நினைக்கிறார்கள். எனில் நாம் எந்தக் காலத்திலும் ஆணாதிக்கத்தை வீழ்த்த்முடியாது என்று ஆகிறது. எனவே இதை ஒரு சட்ட சிக்கல் என்று பார்க்காமல் சமூக சிக்கல் என்றுபார்ப்பதும், அதில் பெண்களின் தரப்பை புரிந்து கொண்டுஆதரிப்பதும்தான்  நாம் செய்ய வேண்டிய சரியான அணுகுமுறையாக இருக்கும். இதை சாமர்த்தியாமன வக்கீல்களைப் போன்று ஆதாரத்தை வைத்து மடக்கி பேசுவதால் நாம் பெறப் போவது தண்டிக்க இயலாதா ஆணாதிக்கத்தின் வெற்றியைத்தான். இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

எல்லாவற்றும் மேலாக பெண்களின் பாதுகாப்பற்ற சமூக சூழ்நிலை காரணமாக அவர்கள் பாதிக்கப்படும் சமூக பரிமாணத்தை உள்ளது உள்ளபடி ஏற்கவேண்டும். ஆனால் இந்த பாதிப்பு ஆண்களுக்கு என்று வரும்போது அதன் சமூக பரிமாணம் அத்தனை கவலைப்படத்தக்கதாக இல்லை. ஊர் மேயும் ஆண்களை அவர்களது இயல்பு என்றுபார்க்கும் சமூகம்தான் அது பெண் என்றால் உடனே ஒழுக்க சாட்டையை கையில் ஏந்தி வீசுகிறது. அதில் மட்டும் இருபாலாருக்கும் ஒரே மாதிரி சவுக்கடி கிடைப்பதில்லை. ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒழுக்கம் குறித்த அளவு கோல்கள் இங்கு வேறானவை என்பதைக் கூட உலக இலக்கியம் படித்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இலக்கியம் குறித்த நமது பார்வையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

இனி நாங்கள் எழுத்தில் மட்டும் போராடப்போவதில்லை!

இறுதியாக பதிவர் சாந்தி எழுப்பியிருக்கும் பிரச்சினையை ஒரு சமூகப்பிரச்சினையாக பார்ப்பதும், அதை தனிப்பட்ட விவரங்களை வைத்து திசைதிருப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நீண்ட கட்டுரையை ஒரு முழு இரவு முழுவதும் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கள் அரசியல் பணிகளுக்கிடையே இதையும் ஒரு பணியாக கருதியே ஈடுபட்டிருப்பதால் ஏதோ நேரத்தை வீணாக்கினோம் என்ற குறை எங்களிடத்தில் இல்லை. ஆனால் இந்த நேரம் இன்னும் முக்கியமான பிரச்சினைகளுக்கு பயன்படவேண்டும் என்பதை சிலர் வலியுறுத்தலாம். இதெல்லாம் நாம் விரும்பியபடி அமைவதில்லை.

பதிவர் சாந்தி எழுப்பியிருக்கும் பிரச்சினையினை மட்டும் பரிசீலித்துப் பார்த்தால் அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியினை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை புரிந்து கொள்வதற்கு கூட உலகம் தோன்றிய காலத்திலிருந்து வருவோம் என்று ஆரம்பித்தால் நாம் அதை இலக்கில்லாமல் பேசிக் கொண்டே இருக்கலாம். எனவே பதிவர் முகிலனிடம் வினவு சார்பில் முன்னர் வைத்த கோரிக்கையை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு இப்போதைக்கு முடிக்கிறோம். இது தொடருமா, எழுதித்தீருமா என்ற கேள்விக்கு நாங்களோ சாந்தியோ பதில் சொல்வது இயலாது.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்