privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்!

துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்!

-

1876 களில் விக்டோரியா ராணி ஒட்டுமொத்த இந்தியாவையும் கைப்பற்றியதற்காக இந்தியாவின் அன்றைய வைசிராயாக இருந்த லிட்டன் பிரபு டில்லியில் மிகப்பெரிய விழா மற்றும் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைத்து குறு நில ராஜா, ராணிகளும் கலந்து கொண்ட, ஒரு வார காலம் நடைபெற்ற இந்த விருந்து உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத மிகப் பெரிய விருந்தாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒரு பக்கம் விருந்து, ஆடல் பாடல்களால் அலங்கரிக்கப்பட மறுபக்கம் அன்றைய மதராஸ் மாகாணத்தில் கடுமையான வறட்சியால் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தினால் லட்சக் கணக்கான மக்கள் உண்ண உணவில்லாமல் வீதிகளில் செத்து வீழ்ந்ததும் மிகச்சரியாக இக்காலகட்டத்தில் தான் அரங்கேறியது.

உலக வரலாற்றில் அதிக மக்களைக் காவு கொண்ட இவ்வறட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைப் போக்க அன்றைய வைசிராய் லிட்டன் பிரபு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் மீது பரிதாபப்பட்ட அன்றைய மதராஸ் கவர்னராக இருந்த பக்கிங்காம் உணவு தானியங்களை உள்ளூர் சந்தைக்குக் கொடுக்க முனைந்த பொழுது, லிட்டன் பிரபுவால் தடுக்கப்பட்டு அவையெல்லாம் லிட்டனின் திருவிழாவிற்காக அனுப்பப்பட்டதாக வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இந்த மாபலித் திருவிழாவிற்கு சற்றேதும் குறைவில்லாமல் அதற்கு சரிநிகராக, ஒரு புறம் 70.000 கோடிக்கும் மேற்பட்ட செலவில் காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழாவும் மறுபுறம் அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் மத்திய இந்தியவில் நடைபற்றுவருகின்ற படுகொலைகளையும் உதாரணமாகக் கூறலாம்.

மத்திய இந்தியக் காடுகளில் காட்டு வேட்டை என்ற பெயரில் ஒட்டுமொத்த பழங்குடியின மக்களும் நேரடியாகப் படுகொலை செய்வது ஒருபுறமிருக்க மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டத்திங்களில் இருந்து அம்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் உண்ண உணவின்றியும், சுகாதாரக் குறைபாடுகளாலும் அம்மக்கள் மறைமுகமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாகவே சத்திஸ்கரில் உள்ள தாண்டேவடா மாவட்டத்தில் வாந்தி, பேதி போன்ற சுகாதாரக் குறைவினால் ஏற்படும் நோய்களால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் கும்பல் கும்பலாகப் பிணங்களைத் தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாந்தி பேதியால் இறந்துள்ளனர்.

ஆந்திர – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தாண்டேவடா மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் சுகாதாரக் குறைவால் இறந்து வருகின்றனர். இந்த சாவு எண்ணிக்கை இந்திய அரசிற்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்பட்டதை விட மிக அதிகமாகும். தாண்டேவடா மாவட்டத்தில் உள்ள தர்முத்லா, சிந்தகுப்ஹா, புர்கப்பால் மற்றும் சிந்தல்நார் பகுதிகளில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி மயக்கத்தினால் இறந்துள்ளனர். மேலும் பலர் நோய்பட்டு சிகிச்சையின்றி அவதியுறுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பின் படி ஒரு வாரத்தில் மட்டும் 19 பேர் வாந்தி பேதியால் இறந்துள்ளனர், ஆயினும் புர்கப்பாலில் உள்ள மாதவி துலே போன்ற பல குழந்தைகள் இறந்தும் அவை மாவட்ட நிர்வாகத்தினால் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் புதைக்கப்பட்டுள்ளன.

பருவமழை பெய்கின்ற காலமாதலால் நீர் மூலம் பரவுகின்ற நோய்கள் இங்கு அதிகமாகி வருகின்றன. அடிகுழாய்ப் பம்புகள் யாவும் வேலைசெய்யாமல் இருப்பதால், குட்டைகளில் தேங்கி நிற்கும் நீரையே இம்மக்கள் அனைவரும் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாதாரணக் காய்ச்சலில் ஆரம்பித்து வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு கடைசியில் சுயநினைவை இழந்து செத்து மடிகின்றனர். மேலும் உடம்பில் உயிரைத்தக்க வைத்துக் கொள்ளவே போதுமான சத்தில்லாத இவர்கள், நோயில் கிடக்கும் பொழுது மிச்சமிருக்கும் நீர்ச் சத்தையும் பேதியின் மூலம் இழந்து விடுகிறார்கள், இறுதியாக சுகாதாரமற்ற குட்டை நீரையும் பருகுவதால் உடல் நிலை இன்னும் மோசமாகிச் செத்து மடிகின்றனர்.

தாண்டேவடாவின் கிராமப்பகுதி முழுக்க அவசரத்திற்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத நிலையே இன்னும் நீடிக்கிறது. வத்தி என்றழைக்கப்படுகின்ற உள்ளூர் நாட்டு வைத்தியர்கள்தாம் பெரும்பாலும் மக்களுக்குச் சிகிச்சையளிக்கின்றனர். வத்திகளின் சிகிச்சையினால் அதிர்ஷ்டவசமாக இம்மக்கள் பிழைத்துக் கொண்டாலும் அதே குட்டை நீரைக் குடிப்பதால் மறுபடி நோய்தொற்று ஏற்பட்டு இறக்கின்றனர். ஏழு லட்சம் மக்கள் தொகை கொண்ட தாண்டேவடாவில் மொத்தம் 12 ஆங்கில மருத்துவர்கள்தான் உள்ளனர். இவர்களில் 3 பேர் பர்சூர், கிரண்டல் மற்றும் பச்சேலி போன்ற நகர்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்கின்றனர். மீதி 9 பேர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில் ஒருவர் கூட பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பணியாற்றவில்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமும் போர்க்கால அடிபடையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த ஒரு ஆங்கில மருத்துவரையும், நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்த ஒரு ஆயுர்வேத மருத்துவரையும் கொண்டு செயல்பட வேண்டும் என்கிற நிலையில், தாண்டேவடா மற்றும் பீஜப்பூர் மாவட்டம் முழுக்க மொத்தம் 30 ஆரம்ப சுகாதார நிலையங்களே உள்ளன. அவற்றில் 24 நிலையங்களில் வெறும் ஆயுர்வேத மருத்துவர்களும், எஞ்சியுள்ள ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களே இல்லாத நிலைதான் நீடிக்கிறது. ஆயுர்வேத மருந்துகள் போர்க்கால அடிப்படையில் உடனடி நிவாரணம் கொடுக்காது என்ற போதிலும், இம்மருத்துவர்கள் தான் பழங்குடி மக்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர். மேலும் அவசரத்திற்கு கூட இவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரை செய்யக் கூடாது என்ற சட்டமும் உள்ளதால் ஆயுர்வேத மருந்துகளையே இவர்கள் கொடுக்கின்றனர்.

தண்டேவடா மாவட்ட கலெக்டர் அதிகச் சம்பளம் கொடுத்து மருத்துவர்களை நியமனம் செய்ய முயற்சி எடுத்தாலும், நகரங்களிலேயே சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்ட மருத்துவர்கள் இங்கு வந்து மக்கள் பணி செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.மேலும் மக்களுக்காகப் போராடிவரும் மாவோயிஸ்டுகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயமும் மேலோங்கியிருக்கிறது. ஆனால் இப்பகுதிகளில் பணி செய்து கொண்டு வரும் மருத்துவரில் ஒருவர் கூட மாவோயிஸ்டுகளால் குறைந்தபட்சம் தாக்கப்பட்டது கூட இல்லை என்பதே நிதர்சனம்.சமீப காலங்களாக தாண்டேவடா மட்டுமல்லாமல் பீஜப்பூர் மாவட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் இறந்தது அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த மருத்துவ மற்றும் குடிமை நிர்வாகமே செயலற்றுப் போயுள்ளதை உணர்த்துகின்றன. இது அப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களையும் மத்திய மாநில அரசுகள் புறக்கணித்து வருவதையே காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில், இவையெல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் உள்ள பஞ்சாயத்துக்களின் நிலை பற்றிய அறிக்கையை (State of Panchayat’s Report) வெளியிட்டார். குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள கிராமப்புற நிர்வாகவியலுக்கான கல்வி நிறுவனமும் (IRMA) பஞ்சாயத்து ராஜுக்கான அமைச்சரவையும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் (MOU) IRMA இந்த அறிக்கையை சமர்ப்பித்தது. அரசுக்கு அளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் 1996 ல் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்த்தின்படி PESA (Panchayats – Extension to Scheduled Areas) என்கிற பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான பஞ்சாயத்தின் அறிக்கையும் இடம்பெற்றிருந்தது. IRMA அம்மலைப் பிரதேசங்களில் அரசின் நில ஆக்கிரமிப்பு உட்பட அங்குள்ள மக்களின் மிக மோசமான வாழ்நிலை வரை அனைத்தையும் பக்கம் பக்கமாக அம்பலப்படுத்தி அவ்வறிக்கையை சமர்ப்பித்தது.

ஆயினும் மேதகு மன்மோகன் சிங் அவர்களால் அறிக்கை வெளியிடப்பட்ட பொழுது அப்பக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு வேண்டுமென்றே நீக்கப்பட்டிருந்த்தது. சாதாரணமாக ஒரு அறிக்கை சமர்பிப்பதிலேயே அரசின் இலட்சணம் இவ்வாறு நேர்மையற்றிருக்கும் பொழுது, சுகாதாரக் கேட்டினால் கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் பழங்குடி மக்களின் நலவாழ்விற்காகப் தம் அரசு பாடுபடுகின்றது என்று வெற்றுக்கூச்சலிடும் ப.சிதம்பரத்திற்கு இம்மக்களின் மரண ஓலம் கேட்கிறதா எனத் தெரியவில்லை. பாதி வெளுத்துப்போன சாயம் முழுதாக வெளுத்துவிட்ட நிலையில், அரசின் உறுதிமொழிகள் நீரில் எழுதியவையாக மாயமாய் மறைந்துவிடுகின்றன.

ஒரு புறம் காட்டுவேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது மாபெரும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் இந்திய அரசு மறுபுறம் தனது அலட்சியத்தினாலும் அம்மக்களை கொன்று வருகிறது. தண்டகாரண்யாவில் பாதுகாப்பு படைகள் செல்வதற்கு வசதியாக சாலைகளை அதிவேகத்தில் அமைக்கும் அரசு தொற்று நோய்களால் கூட்டம் கூட்டமாக இறக்கும் மக்களுக்கு குறைந்த பட்ச மருத்துவ வசதிகளைக்கூட செய்ய மறுக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளை பழங்குடி மக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று பலருக்கு புரிவதில்லை. அத்தகைய அறிஞர் பெருமக்கள் மேற்கண்ட செய்திகளை வைத்தாவது புரிந்து கொள்வது நல்லது.

_____________________________

– சிங்காரம் (வாசகர் படைப்பு)
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்