privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்“ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?

“ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?

-

தினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலைகிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களைப் வெள்ளி மணியில் பார்க்க முடியும். ‘மக்கள் மகிழ்ச்சி’ என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.

“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை.  எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?”

“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். …… மேலும் திருமணம் எப்போது நடக்கும்?”

“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”

“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும?”

“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”

“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

இவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட  கேள்விகள்.

“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்….ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”

“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”

“உங்கள் மகளுக்கு…..அசுபக்கிரகச் சேர்க்கை பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”

“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”

“உங்கள் மகனுக்கு…..களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ….”

“உங்கள் மகனுக்கு…..அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்….”

இப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி ‘காலம் உங்கள் கையில்’ பகுதியில் பட்டியலிடுகிறார்.

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.

இவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா? ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா?

படிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடு இல்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.  மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்வார்கள்.

வரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில்  சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, ‘அவ சரியல்லை’, ‘அவளோட அம்மா சரியில்லை’, இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம்,   பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் ‘முன்ன பின்ன’ இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வார்கள்.

இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.

___________________________________________________

–   ஊரான்.

தோழர் ஊரானது வலைப்பூ: http://www.hooraan.blogspot.com/

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ஐயர் பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?…

    ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் என்ன? ஜோதிடர் சொல்லும் காரணமா? பரிகாரத்தினால்தான் திருமணம் நடந்துவிடுமா?…

  2. இது எப்படியிருக்கு?

    எட்டு வயதுக்குள் மகளுக்கு திருமணம் செய்து பிடித்துக் கொடுத்துவிடு.!!!..அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரரின் இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. 45. 46 ல் இருந்து சுருக்கம்

    கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின்போது பூமியை காக்க அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் அவரால் நியமிக்கப்பட்டவர்தான் மநு என்கிறார்கள்.மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுஷன் என்ற பதமும் வந்தது என்றொரு மொழிக் குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

    வேதத்தை எளிமையாக்கி அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்?

    இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் அந்த அப்பாக்கள்.

    அது என்ன தண்டனை? “மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா பிதா பிபதி கோனிதம்…”

    இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது… தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

    அது என்னவென்றால்…அடே கையாலாகாத அப்பா… உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள். ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்… அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

    அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை… உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

    பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல… இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.

    மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை?… கொடுமை?… எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி… இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு. அப்படியா? என்ன பரிகாரம்?…

    உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்மஹத்தி தோஷத்தை (மாதவிலக்கை) சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா?… அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின்போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம்தான் உனக்கு பரிகாரம். அதாவது… மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ… அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?

    அடுத்த ஒருவருஷம் வரை… அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்? அக்னி காரியம்/ தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் இந்த ஒரு வருடம் வரை… அவள் கணவன் வீட்டில் இருந்தாலும்… கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும்… ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது.

    ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம். இதற்கிடையில்… ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன்… இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.

    நமது சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்…. – ராமானுஜ தாத்தாச்சாரியார்
    ——————————
    கருத்து சுருக்கப்பட்டிருக்கின்றது. விரிவாக ‍அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே போகினறது ? என்ற புத்தகத்தில் படிக்கலாம்.

    இந்த சுட்டியிலும்

    <a href=http://thathachariyar.blogspot.com/இந்து மதம் எங்கே போகினறது?

    http://thathachariyar.blogspot.com/

    பகுதிகளாக வந்து கொண்டிருக்கின்றது.

  3. //இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அ//

    எனது நண்பர்களில் சிலர் முதிர் கன்னர்களாக(கன்னிக்கு ஆண்பால்) வலம் வருகிறார்கள். காரணம், ஜாதகப் பொருத்தம், சாதிப் பொருத்தம், இத்துடன் சேர்ந்து பணப் பொருத்தம் இவை ஒன்று கூடி வரும் பெண் கிடைக்கவில்லை.

    பையனது இயல்பான பாலியல் தேவைகள் பற்றியோ அல்லது குடும்ப வாழ்விற்கான ஆன்மீக தேவைகள் பற்றியோ அந்தப் பெற்றோர்களுக்குக் கவலையில்லை. அவர்கள்து கவலையெல்லாம் சாதியும், ஜாதகமும்தான்.

    இதை சாக்காக வைத்தே அவர்களை சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு, தாலி மறுப்பு திருமணம் செய்வதற்கு வீட்டில் போராட தூண்டி வருகிறேன்.

  4. தங்க தட்டுல எதையோ வெச்சு தின்னா எப்புடி இருக்கும் அது மாதிரி ஐடி துறையில் சில காமெடி கொடுமைகள்…

    ஆணுக்கு…:

    மாப்பிள்ளை பேரிக்காவில் இருக்கவேண்டும், அல்லது போகும் வாய்ப்புள்ளவராக இருக்கவேண்டும்… குறைந்த பட்சம் ஒரு தடவை போய்ட்டு வந்தவராகவாவது இருக்கனும்.

    பெண்ணின் சம்பளத்தை விட பையனின் சம்பளம் குறைந்த பட்சம் முப்பது சதவீதமாவது அதிகமாக இருக்கவேண்டும்.

    பெண் வேலை பாக்குற கம்பெனிய விட பையன் வேலை பாக்குற கம்பெனி பெருசா (MNC) இருக்கவேணும்…

    பெண்ணுக்கு… :

    என்ன தான் அட்வான்ஸ்டு டெக்னாலஜில வேலை பார்த்தாலும், நெத்தியில நாலு கலர் பூசனும்…

    பியூட்டி பார்லர் போனாலும், ஹைஹீல்ஸ் போடக்கூடாது…

    ஒரு சிலருக்கு, ஜீன்ஸ் போட்ட குத்துவிளக்காக வேணும்!

    (சில பல விடுபட்டவைகளுடன்..)
    இப்படி பல பல்பொடிகள் திரியுதுகள்…… இதை கேட்டா சிரிச்சுகிட்டே அழனும் போல இருக்கும்…

  5. இதை விட சில முட்டா….கள் கோர்ட்டில் நடக்கும் எங்கள் கேசில் சாதகமான தீர்ப்பு வருமா?ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார் செய்யலாமா?என் பையன் ஒழுங்காக கோர்ஸ் முடிப்பானா?அரசு வேலை கிடைக்குமா?என்றும் கேட்கிறார்கள்.இந்த மட்டும் பதில்கள் மிக மிக கவனத்துடன் சொல்லப்பட்டிருக்கும் கொஞ்சம் அறிவு இருந்தால் கூட இது எவ்வளவு பெரிய மோசடி என்று புரிந்துவிடும்.என்னை பொறுத்தவரை நம் நாட்டில் களை எடுக்கப்பட வேண்டிய மிக முக்கிய விஷயம் இதுதான். கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு ஜோதிடம் உண்டா? ஒரு நாளைக்கு 10 டிவோர்ஸ் சென்னையில் வழங்கப்படுகிறது அவன் எல்லாம் இந்த நாய்கள் மீது கேஸ் போட்டால் என்ன செய்வான்?

  6. நீங்கள் என்ன எழுதினாலும் சிலர் திருந்தமாட்டார்கள் சார். முற்ப்போக்கு பத்திரிகை என்று சொல்லிக்கொள்ளும் சிலரே தங்கள் பத்திரிகையில் போலி மந்திரவாதி கைது என்றுதான் செய்திப்போடுகிரார்கள். (அப்போ நிஜ மந்திரவாதி என்று சிலர் இருப்பதாக கருதுகிறார்களா?!) மோசடி மந்திரவாதி என்றாவது போடலாம் அல்லவா? ஜோதிடத்தை நம்பி கெட்டவர்கள் காலம் போன கடைசியில் அதை உணர்வார்கள். அப்போது அவர்கள் வாழ்வதற்கு வாழ்க்கை இருக்காது.

  7. ஆம் பரிகாரம் தேவை,,, அந்த பரிகாரம் என்னவென்றால் புரட்சி,, புரட்சி ஒன்றே இதக்கான பரிகாரம்,

    மேலும் இந்த ஜோதிடர்கள் போன்றவர்களை இல்லாமல் ஒழித்து கட்டவேண்டும், குறிப்பாக பாப்பானை ஒழித்து கட்டவேண்டும்,,,,,,
    பிறகு எல்லாம் சரியாகிவிடும்.

  8. நாளை என்பது
    நம்பிக்கை
    நடக்கலாம் என்பது
    எதிர்பார்ப்பு
    எதற்கதற்கு
    நாடவேண்டும்
    நாடி சோதிடம்

    என்னவாக இருந்தோமென
    எல்லோரும் அறிவதால்
    என்னவாக வேண்டும்
    எனஅறிய ஆசை

    பிரச்சனைகளாலும்
    பின்னடைவுகளாலும்
    பிரம்மித்தால்
    எதிர்கொள்வதெப்படி

    பிறந்த நேரமும்
    பிரம்மன் எழுதியதும்
    பிறழாது என
    பேதலிப்பதோ புத்தி

    பிறழும்
    அதனை அணுகி
    அடிபணிய வைப்பதே
    மானுட சக்தி

    வாய்ப்புகள் இருப்பதாக
    வாய்மொழியாய் கூறியது
    வேத வாக்கென்று
    வாளாயிருந்தால்
    வாய்க்குமோ – பதவி

    உய்யவும் துய்யவும்
    உழைப்பும் முயற்சியும்
    உண்மையில் முக்கியம்
    உதவுமோ கைரேகை சோதிடம்

    இருக்கும் நிலையறிந்து
    இன்னும் உழைத்தால்
    இமயமாகலாம்

    நம்பிக்கை இழந்து
    நாடி சோதிடம் பார்த்தால்
    நடுத்தெருவிலும் நிற்கலாம்

    ஆக செயலில்தான்
    ஏற்றமும் இறக்கமும்
    இடையில்
    எதற்கு சோதிடம்

    கையில் பணமிருந்தால்
    சுக்கிர திசை
    கோர்ட்டில் ஜாமீனிலிருந்தால்
    ஏழரை நாட்டு சனி

    ராகும் கேதும்
    ரணமல்ல
    சுக்கிரனும், சந்திரனும்
    சந்தோஷமல்ல
    அவ்வாறு நினைக்கும்
    மனமும் நம்பிக்கையும்

    செவ்வாயும் புதனும்
    சோதிடமல்ல – விஞ்ஞானம்
    சோதிக்க வேண்டுமானால்
    சிந்திக்கும் உறுப்பை செயல்படுத்து

    சோதிடத்தில் இவை
    உனக்கு ஏழாமிடம்
    எனக்கு எட்டாமிடம்
    எதனால் வருகிறது

    வகுத்த மனமே
    வலையில் சிக்கியது
    பகுக்கும் ஞானமிருந்தும்
    பகற்கனவு காணுது

    கிரகப் பெயர்ச்சியில்
    கிரகச்சாரம் கணிப்பதாக
    கிராதக சோதிடனுரைப்பதை
    கிஞ்சித்து நம்பாதே

    எதிர்காலம்
    எடுத்தியம்பும் இவர்களால்
    இறந்தகாலத்தை
    இருந்தபடி உரைப்பார்களா

    ஏனெனில்…………
    இறந்தகாலம்
    ஒரு காலத்தில்
    எதிர்காலமாய் இருந்ததுதானே

    அறுதியிட்டு கூறாமல்
    ஆகலாம் என
    இயம்பும் இவர்கள்
    ஈவிரக்க மில்லாதவர்கள்
    உண்டி கொழுக்க
    ஊருக்கு பொயுரைப்பர்
    எதிர் காலமாததால்
    ஏமாறுவது பலர்

    நிகழ்தகவு – இரண்டு
    நிஜம்தானே
    நடக்கும் – நடக்காது
    இதற்கெதற்கு
    சோதிடம்

    செயலின் முடிவு
    எப்படியுமிருக்கலாம்
    செய்வதை பொருத்தே
    செயம் ஆகிறது

    ஆகவே
    செயத்திற்கான வழியை
    சிந்திப்போம்
    சிந்திப்பதை துண்டிக்கும்
    சோதிடத்தை நிந்திப்போம்

  9. ஜோசியம், குறி சொல்லுவது – இவை எல்லா கலாசாரத்திலும் உள்ளன…
    நான் சொடாகுடித்துக்குறி சொல்பவர், லிவ்-ஓ ஜோசியர், சோழி ஜோசியர், முக ஜோசியர், முனியான்டி சித்தர் என்று பல டுபாக்கூர்களைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன்…

    இவர்களுக்குச்சமமான ஆபத்தை சமூகத்திற்க்கு விளைவிப்பவர்கள் போலி பகுத்தறிவாளர்….
    இவர்கள் தமிழரின் ‘பகுத்தறிவை’ மழுங்கடித்ததற்க்குச்சான்று – எல்லாவற்றிற்க்கும் பிராமனரைச்சாடும் போக்கு, இதற்க்கு வினவு, சவுக்கு போன்ற தளங்களில் வரும் பின்னூட்டங்கள் ஒரு எடுத்துக்காட்டு…

    பார்ப்பான் தான் காரணம் என்றால் சீனாவிலும், ஐரொப்பாவிலும் ஏன் ஜோசியர்களை பலர்நாடுகின்றனர்?
    யோசி…உன் மூளையை ஆட்டு மூளை போல் மாற்றிக்கொள்ளாதே…

Leave a Reply to THATHACHARIYAR பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க