privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

-

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை  அதாவது தீட்சிதர்களை!

பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப் பெயர்களால் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. தில்லியைப் போல தில்லையும் அதிகாரத்தின் ஒரு குறியீடு.

தில்லை நடராசர் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், தங்களது மத நம்பிக்கையிலும், மத உரிமையிலும் தமிழக அரசு அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு.

கோயிலுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலம், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை வரை பரவியிருக்கும் கோயிலின் சொத்துகள், இடுகாட்டுச் சாம்பல் பூசித் திருவோடேந்தித் தாண்டவமாடும் பெருமானின் தலைக்கு மேலே தகதகக்கும் பொன்னோடு, அவரது உடல் மீது வேயப்படும் ஆபரணங்கள் உள்ளிட்ட கிலோக் கணக்கிலான நகைகள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… இன்ன பிற சிவன் சொத்துகள் அனைத்தும் தங்கள் குலத்துக்கே சொந்தம் என்றும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி ‘அறங்கள்’  அத்தனைக்கும் தாங்களே ‘பரம்பரை அறங்காவலர்கள்’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

மேற்படி சொத்துக்களுக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடும் தீட்சிதர்களிடம் அதற்கான பட்டாவோ, பத்திரமோ, பகவான் எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டார்னியோ கிடையாது. எனினும் இந்த லவுகீக உடைமைகள் அனைத்தும் தங்களுடையவை என்பது அவர்களுடைய ‘ஆன்மீக நம்பிக்கை’யாக இருக்கிறது.

நடராசனின் ஆக்ஞைப்படி 3000 தீட்சிதர்கள் கைலாசகிரியிலிருந்து கிளம்பி சிதம்பரம் வந்ததாகவும், ஊர் வந்து சேர்ந்தபின் தலையை எண்ணிப்பார்த்தபோது, 2999 தீட்சிதர்கள் மட்டுமே இருந்ததாகவும், “காணாமல் போன அந்த ஒரு தீட்சிதன் நானே” என்று நடராசப் பெருமானே அறிவித்ததாகவும் ஒரு கதையை தீட்சிதர்கள் சொல்கிறார்கள். இந்தக் கதைப்படி தில்லை நடராசனும் ஒரு தீட்சிதனாகி விடுகிறான். எனவே, தீட்சிதர்களால், தீட்சிதர்களுக்காகப் பராமரிக்கப்படும் தீட்சிதருடைய கோவிலே தில்லைக் கோயில் என்று ஆகிறது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள லவுகீக சொத்துக்களுக்கு மத நம்பிக்கையின் பெயரால் ஒருவர் உரிமை கோர முடியுமா, சட்டம் இதை அனுமதிக்குமா  என்று நீங்கள் சிரிக்கலாம். ஒரு இந்தியக் குடிமகன் மதத்தை நம்புவதற்கும், கடைப்பிடிப்பதற்கும் உரிமை வழங்குகின்ற இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25, 26 இன் கீழ்தான் இந்த பாரம்பரிய உரிமையை இத்தனை காலமும் தீட்சிதர்கள் நிலைநாட்டி வந்திருக்கிறார்கள். இப்போதும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ்தான் தமிழக அரசின் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இது தில்லைச் சிதம்பரத்தின் கதை.

இனி தில்லி சிதம்பரத்திடம் வருவோம். சிதம்பரத்தின் காட்டு வேட்டைப் படைகள் கைப்பற்றத் துடிக்கும் முதல் இடம் ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலை. இந்த நியாம்கிரி மலையின் பாரம்பரியக் காவலர்கள் டோங்கிரியா கோண்டு என்ற இனத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். டோங்கர் என்ற ஒரியச் சொல்லுக்கு மலை என்று பொருள். அதுமட்டுமல்ல, இந்த வட்டாரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் கற்களும்கூட கோண்டலைட் கற்கள் என்றே அழைக்கப்படுவது இம்மக்களுடைய பாரம்பரிய உரிமைக்கான ‘கல்வெட்டு’ ஆதாரம்.

எனினும் அம்மக்கள் தம்மை ‘ஜார்னியாக்கள்’ என்றே அழைத்துக் கொள்கிறார்கள். அந்த மலைகளில்  நிறைந்திருக்கும் வற்றாத நீர்ச்சுனைகளே (ஜரனா) தங்கள் வாழ்வின் ஆதாரம் என்பதனால், தங்களை அந்த நீர்ச்சுனைகளின் புதல்வர்களாகவே அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். பூமித்தேவனும் (தரணி பெனு) நியாம் தேவனும் (நியாம் பெனு) தான் இம்மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள்.

நியாம்கிரி மலை இம்மக்களுடைய உடலின் நீட்சி. தம் சொந்தக் கைகளுக்கும் கால்களுக்கும் யாரும் பத்திரப் பதிவு செய்து வைத்துக் கொள்வதில்லை என்பதால், தங்கள் மலைக்கும் இவர்கள் பட்டாவோ பத்திரமோ வைத்திருக்கவில்லை. அந்த மலை  அவர்களால் பேணப்படும் உடல், அந்த மலைதான் அவர்களுக்குச் சோறு போடும் பொருள், அந்த மலையேதான் அவர்களது வழிபாட்டுக்குரிய ஆவி.

தங்களது பொருளாயத உரிமைகளையும், ஆன்மீக உரிமைகளையும் பிரித்துப் பார்ப்பதற்கோ, இந்திய அரசியல் சட்டத்தின் எந்ததெந்தப் பிரிவுகள் எவற்றைப் பாதுகாக்கின்றன என்று தீட்சிதர்களைப் போல, விவரமாக தெரிந்து வைத்திருப்பதற்கோ அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டதில்லை. சொல்லப் போனால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் சட்டம்தான் தங்களைப் ‘பாதுகாத்துக் கொண்டிருக்கிறது’ என்ற உண்மையே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை  சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் புல்டோசர்கள் நியாம்கிரி மலைக்கு விஜயம் செய்யும் வரை.

இது உலகமயமாக்கலின் காலமல்லவா? இம்மண்ணின் பூர்வகுடிகளை விடவும், வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களுக்குத் தாய்நாட்டுப் பாசம் தலைவிரித்து ஆடும் காலமல்லவா? லண்டனில் குடியேறிய இந்தியரான அனில் அகர்வால் என்ற உலகப்பணக்காரரும் நியாம்கிரி மலையில் தனது கடவுளைத் தரிசித்து விட்டார்.

பருவமழையின் நீரைப் பருகி, கடற்பஞ்சு போல அதனைச் சேமித்து வைத்து, அச்சேமிப்பில் விளைந்த அடர்ந்த காடுகளை ஆகாயத்தில் கரங்களாய் நீட்டி, மேகத்தின் நீரை மண்ணில் இறக்கி, வற்றாத அருவிகளையும், சுனைகளையும் வழங்கிய வண்ணம் அந்த மலைக்குள் மறைந்திருக்கும் கடவுள் யாராக இருக்கும் என்ற அவரது ஆன்மீகத் தேடலுக்கு அறிவியல் அளித்த விடை  பாக்சைட்.  இந்தக் கடவுளின் அறங்காவலராக உடனே பொறுப்பேற்க விரும்புகிறார் அகர்வால்.

தங்களது கடவுளான நியாம்கிரி மலைக்கு ஆடு கோழி அறுத்து பலியிடுவது டோங்கிரியா கோண்டு இன மக்களின் வழிபாட்டு முறை. கடவுளைத் தனக்குப் பலியிட்டுக் கொள்வது அகர்வாலின் வழிபாட்டு முறை. மலையின் மேற்பரப்பில் நிரம்பியிருக்கும் பாக்சைட் தாதுவுக்காக, அந்த 40 கி.மீ. நீள மலைத் தொடரின் தலையை மட்டும் அவர் சீவ விரும்புகிறார். பழங்குடி மக்களின் கடவுளரைத் தின்று செரிக்கும் இந்த வழிபாட்டு முறைக்குப் பொருத்தமான ஒரு பெயரை, அவர் தன்னுடைய நிறுவனத்திற்கு  ஏற்கெனவே சூட்டியிருக்கிறார்  ‘வேதாந்தா மைனிங் கார்ப்பரேசன்.’ இதனைத் தற்செயல் என்பதா, இறைவன் செயல் என்பதா?

வேதங்களின் அந்தமாக ஆதிசங்கரன் கண்டறிந்த தத்துவம் ‘அகம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மமாக இருக்கிறேன்). எனினும் நாம் காணும் இந்தப் பிரம்மம், எல்லைகள் கடந்த என்.ஆர்.ஐ பிரம்மம். மூலதனம் என்ற பெயரால் அழைக்கப்படும் பிரம்மம்.

‘பிரம்மம் சத்யம், ஜெகன் மித்யா’!  “பிரம்மமே மட்டுமே உண்மையானது, உலகம் என்பது வெறும் மாயத்தோற்றம்” என்பது சங்கரனின் தத்துவ விளக்கம். இந்த விளக்கத்தை மூலதனத்தின் மொழிக்குப் பெயர்த்தோமாகில், நாம் காணும் புதிர்கள் யாவும் நொடியில் விலகுகின்றன. இல்லாத மாயைகளான வீடுகளின் மீது, எழுதிக்கொடுக்கப்பட்ட பத்திரங்களே சத்தியமாக மாறியதும், பின்னர் அந்த அசத்தியங்களைச் சத்தியமாக மாற்றும் முயற்சியில் இந்த மாய உலகம் இன்னமும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதும் ஆதிசங்கரனின் தியரியை நிரூபிக்கவில்லையா என்ன?

நியாம்கிரியின் தலையில் நிறைந்திருக்கும் அடர்ந்த காடுகளை அழிக்க சுற்றுச்சூழல் சட்டம் தடையை ஏற்படுத்தியதால், உலகப்புகழ் பெற்ற அத்வைதிகளான ஜே.பி. மார்கன் நிறுவனத்தினரை வைத்து, நியாம்கிரியில் ‘இருக்கின்ற காட்டை இல்லை’ என்று எழுதி வாங்கினார் அகர்வால். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை!

அடுத்த தடை, பழங்குடி மக்களின் நிலத்தை நேரடியாகப் பன்னாட்டு நிறுவனத்துக்கு எழுதிவைக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தோற்றுவித்த இடையூறு. அட்டவணையையே நீக்குவதற்கு அவகாசம் தேவையென்பதால், தனது  இந்திய அவதாரமான ஸ்டெரிலைட் நிறுவனத்தின் பெயரில் சுரங்கம் தோண்டுவதாக அறிவித்தார் அகர்வால். ஆமோதித்தது உச்சநீதிமன்றம்.

காடுகளை அழித்து சுரங்கம் தோண்டினால், சூழலியல் பேரழிவு நிகழும் என்று உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவே ஆட்சேபித்தது. “காடுதானே, புதிதாக வளர்த்துக் கொள்ளலாம்” என்று அந்த ஆட்சேபத்தையும் ஒதுக்கி விட்டு, 200 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்சைட் தாதுவைத் தன்னகத்தே வைத்திருக்கும் நியாம்கிரி மலையை அகர்வாலுக்கு வழங்குவதாக, ஆகஸ்டு 2008இல்  தீர்ப்பளித்து விட்டது, கே.ஜி.பாலகிருஷ்ணன், அஜித் பசாயத், கபாடியா என்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு.

வனவிலங்குகளைப் பராமரிக்க 105 கோடி, பழங்குடி மக்களை முன்னேற்றுவதற்கு 12.2 கோடி, பழங்குடி மக்களுக்கான பள்ளி, மருத்துவமனைகளை பராமரிக்க அகர்வாலின் இலாபத்தில் 5 சதவீதம்  நியாம்கிரியின் தலையைச் சீவும் பாவத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள பரிகாரம் இது. கொலைக்குற்றத்துக்குப் பரிகாரமாக கோயிலுக்கு நெய்விளக்கு! இவ்வளவு மலிவானதொரு பரிகாரத்தை ஒரு பார்ப்பனப் புரோகிதனின் வாயிலிருந்து கூட யாரும் வரவழைத்திருக்க முடியாது.

“அப்பழங்குடி மக்களால் கடவுளாக வழிபடப்படும் மலையைத் தகர்ப்பது, அவர்களது மத நம்பிக்கையையே தகர்ப்பதாகும்” என்ற வாதத்தை நீதிபதிகளின் அறிவியல் உணர்ச்சியால் அங்கீகரிக்க இயலவில்லை. வளர்ச்சித் திட்டத்துக்கும் வல்லரசாவதற்கும் தடையாக ஈசனே வந்து நிற்பினும், குற்றம் குற்றமே என்றுரைக்கும் நக்கீரன் பரம்பரையல்லவா, நம் நீதிபதிகள்!

இருப்பினும், அந்தக் கடவுள் எந்தக் கடவுள், அந்த நம்பிக்கை யாருடைய நம்பிக்கை என்பதைப் பொருத்தும் நாட்டாமையின் தீர்ப்பு வேறுபடுகிறது. மரகதமலையாக ஒளிரும் நியாம்கிரி மலையைக் காட்டிலும், யாருக்கும் உதவாத ராமேசுவரத்தின் மணல்திட்டுகளை உச்சநீதிமன்றம் புனிதமாகக் கருதியதென்றால் அதற்குக் காரணம், அந்த நம்பிக்கை ஸ்ரீராமபிரான் தொடர்பானது என்பதுதான். நியாம்கிரி தொடர்பான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்ட பழங்குடி மக்களிடம் “உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டார்கள் நீதிபதிகள். ஆனால் இந்தக் கேள்வியை சிதம்பரம் வழக்கில் தலையிட்ட சுப்பிரமணியசாமியிடம் நீதிபதிகள் கேட்கவில்லை.

அதுமட்டுமல்ல, புனிதமான கைலாசத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக தீட்சிதர்கள் சொல்லிவரும் கதையை எந்த நீதிமன்றமும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில்லை. வெள்ளைக்காரன் காலம் தொட்டு எல்லா நீதிமன்றங்களும் அந்தக் கதையைக் கேட்டுத்தான் தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பெழுதி வருகின்றன. அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் தாழ்வாரங்களில் தில்லை தீட்சிதர்கள் நம்பிக்கையுடன் உலவுகிறார்கள். நியாம்கிரி பழங்குடிகளோ, தங்களிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தங்கள் தலைவிதியைத் திருத்தி எழுதிவிட்ட, உச்சநீதிமன்றத்தின் வாயிலில் அமர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

வர்க்க நலனும்  சாதி உணர்வும்  மத உணர்வும்  ஒன்றுகலக்கும் இந்த திரிவேணி சங்கமத்தின் சுழலில், மதநம்பிக்கை முடியும் இடம் எது, வர்க்கநலன் துவங்குமிடம் எது, சாதி உணர்வு ஊடாடும் இடம் எது என்று கண்டறிய முடியாமல், ஒன்று பிறிதொன்றாய்த் தோற்றம் காட்டி நம்மை மயக்குகிறது.

நியாம்கிரி வழக்கில் ஸ்டெரிலைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுதிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான கபாடியா, “நான் ஸ்டெரிலைட்டின் பங்குதாரர்” என்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டார். இந்திராவோ தீட்சிதர்களின் சொத்துரிமையைக் காக்க எம்ஜியாரிடம் இரகசியமாகத் தலையிட்டார். தமிழ்பாடும் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவான இடைக்காலத் தடையாணையை இரகசியமாக வழங்கிய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷா, தீட்சிதர்களுக்கும் தனக்குமிடையிலான உறவை சிதம்பர இரகசியமாகவே பேணினார். தீர்ப்புகள் கிடக்கட்டும், வாய்தாக்களின் பின்னாலும் வர்க்கநலன் உண்டு என்பதை சிதம்பரம் வழக்கின் 20 ஆண்டு உறக்கம், தனது குறட்டைச் சத்தத்தின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியது.

2004ஆம் ஆண்டு வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ப.சிதம்பரம், பின்னர் நிதி அமைச்சராக அவதரித்து அனில் அகர்வாலுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். 2009இல் அவரே உள்துறை அமைச்சராக உடுப்பணிந்து வந்து, இதோ கலிங்கத்தின் மீது படை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தீட்சிதர்களின் கைலாசக்கதை என்ற மத நம்பிக்கையை, தனி உடைமை என்ற ஆயிரம் கால் மண்டபம் தாங்கி நிற்கிறது.  சிவன் சொத்தில் குலம் வளர்த்த செட்டியார்கள், பிள்ளைவாள்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கட்டளைதாரர்கள், ஆதீனங்கள், ஆடல்வல்லானின் சந்நிதியில் மகளுக்கு அரங்கேற்றம் நடத்த வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் .. அனைவரும் இந்த நம்பிக்கையின் கால்கள். அதனால்தான் கைலாசக் கதையைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்காமல், “ஹரஹர மகாதேவா” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் டோங்கிரியா கோண்டு மக்களின் நம்பிக்கையையும் அவர்களது கடவுளையும் தாங்கி நிற்க அவர்களிடம் தனிஉடைமை இல்லை. அம்மக்கள் நியாம்கிரி மலையின் உண்மையான அறங்காவலர்களாக இருந்தார்கள். எனவேதான் ஒரு வெகுளிச் சிறுமியைத் தரையில் வீழ்த்தி, வல்லுறவு கொள்ளும் கயவனைப்போல, அந்தப் பழங்குடிப் பொதுவுடைமைச் சமூகத்தின் மீது, தனியுடைமையின் புல்டோசர்கள் வெறியுடன் படர்ந்து எறி இறங்குகின்றன. அவர்களுடைய கடவுளான நியாம்தேவனுக்கோ தூக்குதண்டனை விதித்து தீர்ப்பெழுதி விட்டது உச்ச நீதிமன்றம். தங்களுடைய கடவுளின் தலை சீவப்படுவதைக் காணமாட்டாமல் துடிக்கிறது மனித குலம் பெற்றெடுத்த அந்த மழலைச் சமுதாயம்!

···

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’   காட்டு வேட்டை என்று இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாம். காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கிய இந்தச் சொற்றொடர், பாரதப் பாரம்பரியத்தில் ஊறி உப்பிய மூளையிலிருந்து மட்டுமே பிறந்திருக்க முடியும்.

தண்டகாரண்ய காடுகள் இந்த வேட்டையின் களமாகியிருப்பதும் வரலாற்றின் விதியே போலும்! போர்க்களம் தண்டகாரண்யத்தின் காடுகளெங்கும் விரிய, விரிய, இராமாயணக்கதைகள் நம் நினைவில் நிழலாடுகின்றன. கிறிஸ்துவுக்குப் பின், 20 நூற்றாண்டுகள் முன்னோக்கி நடந்து, இதோ, இராமாயண காலத்தை எட்டிவிட்டோம்.

அங்க, வங்க, கலிங்க, கோசல, விதேக, மகத மன்னர்களின் இரதங்கள் உருண்ட பாட்டைகளின் மீது டாடா, எஸ்ஸார், மிட்டல், அகர்வால், பிர்லா, அம்பானிகளின் புஷ்பக விமானங்கள் தரையிறங்குகின்றன. வசிட்டனும் விசுவாமித்திரனும் கௌதமனும் துர்வாசனும் யாக்ஞவல்கியனும் வனாந்திரங்களில் அமைத்திருந்த பர்ணசாலைகள் ‘விருந்தினர் மாளிகை’ என்ற பெயர் தாங்கி மினுக்குகின்றன. வாயிலில் காக்கிச் சீருடையும் கதாயுதமும் தரித்த அனுமன்கள் காவல் நிற்கின்றன.

“இலங்கைத் தீர்வுதான் நமக்கு வழிகாட்டி” என்று கூறி பக்திப் பரவசத்துடன் தெற்கு நோக்கி நமஸ்கரிக்கிறார் சட்டிஸ்கார் டி.ஜி.பி விசுவ பந்து தாஸ். இராம சைன்யம் என்ற பழைய பெயர் அரக்கர்களின் மனதில் அச்சத்தைத் தோற்றுவிப்பதில்லை என்பதால்,  பாம்புப்படை, கீரிப்படை, கருந்தேள்படை என்று குலமரபுச் சின்னங்கள் தாங்கிய படைகள் அணி வகுத்து நிற்கின்றன. சுக்ரீவனின் சேனைகூட, ‘சல்வா ஜுடும்’ என்று ராட்சஸ மொழியில் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.

இராவண வதம் முடியும் வரை முடிசூட்டு விழாவுக்குக் காத்திருக்க முடியாதென முனகும் வீடணர்களுக்காக, விதவிதமான திரிசங்கு சொர்க்கங்களும் இந்திரப் பதவிகளும் ஆர்டரின் பேரில் தயாராகின்றன. போரில் அரக்கர் குலப் பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கூட வேட்டையாட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப தர்ம சாத்திரங்களைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள், சிதம்பரம், மன்மோகன், அலுவாலியா, புத்ததேவ், பட்நாயக் முதலான முனிபுங்கவர்கள்.

போர் முழக்கத்தையும் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைத்திருக்கிறார் திருவாளர் சிதம்பரம். இது தேவர் குலத்தைக் காக்க அசுரர்கள் மீது நடத்தப்படும் போர் அல்ல; அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர். அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகப் பூமியைப் பறிக்கும் போர்; வேலையை வழங்குவதற்காகத் தொழிலைப் பறிக்கும் போர்; சோறு போடுவதற்காக வயல்களை அழிக்கும் போர்; பிரம்ம ஞானத்தை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய தெய்வங்களைச் சம்காரம் செய்யும் போர்.

இதோ, நியாம்கிரியின் புதையலின் மீது, அதன் மதிப்பே தெரியாத ஒரு கோண்டு இனப்பெண்,  சுள்ளிக் கட்டைச் சுமந்து நடக்கிறாள். அவளுடைய கருமைநிறக் கழுத்தில் கிடக்கும் பித்தனை வளையங்களில் வியர்வைத்துளி வழிந்து மின்னுகிறது. கைகளின் அசைவில் அவளது வளையல்கள் எழுப்பும் இரும்பின் ஒலி இசையாய் எழும்புகிறது. அந்தக் கானகத்தின் வண்ணங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்ட வண்ணத்துப் பூச்சியாய் அவள் ஆடை அசைகிறது.

“ராமா, அதோ.. அவள்தான். எடு வில்லை, பூட்டு பாணத்தை’’! என்று ஆணையிடுகிறான் விசுவாமித்திரன். “ஒரு பெண்ணைக் கொல்வதற்கா நான் வித்தை பயின்றேன்?” என்று தயங்கித் தடுமாறுகின்றன சிப்பாயின் விரல்கள். “இவள் பெண்ணல்ல, தாடகை! நம் தர்மத்தை அழிக்க வந்திருக்கும் அரக்கி! சுடு….!”  என்று உறுமுகிறார் சிதம்பரம்.

சுள்ளிக்கட்டு சரிந்து சிதறுகிறது. மிரட்சியும் கோபமும் உறைந்த அவளது கருவிழிகள் நிலைகுத்தி நிற்கின்றன. வேதாந்தத்தின் வெடிமருந்துக் குச்சிகள் நியாம்தேவனின் மார்பைப் பிளந்து எறிகின்றன.

இந்தப் போர்க்களத்திலிருந்து வெகு தூரத்தில் அயோத்தி நகரின் அமைதிச் சூழலில் தவமிருந்து கொண்டிருக்கிறான் சம்பூகன் என்றொரு ‘சூத்திரன்’. அவன் கேட்க விழையும் வரம் என்னவாக இருக்கக் கூடும்? ஒரு துண்டு நிலம் அல்லது ஒரு வேலை அல்லது மூன்று வேளைச் சோறு அல்லது ஒரு வீடு?

சிதம்பரத்தின் காட்டு வேட்டையை சம்பூகன் அறியமாட்டான். ஆயுதம் ஏந்திப் போரிடும் அரக்கர்களின் மார்பை மட்டுமே அண்ணல் இராமபிரானின் பாணங்கள் குறிவைக்கும் என்ற அரண்மனைப் பொய்யைத் தவிர, இந்தப் போரைப்பற்றி வேறு எதையும் அவன் அறியமாட்டான். தாடகை வதம் அவனுக்குத் தெரியாது. வாலி வதமும் தெரியாது. தன் முன்னே தோன்றக்கூடிய இறைவனிடம், தான் கேட்க விழையும் வரங்களைத் தவிர, வேறு எதன் மீதும் கவனம் செலுத்த அவனது தவம் இடம் கொடுக்கவில்லை. “தவமிருத்தல் மட்டுமல்ல, வரம் கேட்பதும் குற்றமே” என்று தரும சாத்திரத்தின் ஷரத்துகள் திருத்தப்பட்டு விட்டதையும் அவன் அறியமாட்டான்.

நியாம்கிரியின் தலையைக் கொய்த வேதாந்தத்தின் கொடுவாள், உன் கழுத்தையும் குறிவைக்கும் என்பதைச் சம்பூகனுக்குப் புரிய வைத்தால் தவம் கலைத்து அவனும் வாளேந்தக்கூடும்.

ஏந்துவானாயின், இந்த முறை ஆரண்ய காண்டத்துடன் இராமாயணம் முடியவும் கூடும்.