privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோவை என்.டி.சி தேர்தல்: கைக்கூலிகளை எதிர்த்து புரட்சியாளர்களின் சமர்!

கோவை என்.டி.சி தேர்தல்: கைக்கூலிகளை எதிர்த்து புரட்சியாளர்களின் சமர்!

-

அந்த வாக்குச் சீட்டுகள் டிசம்பர் 18ம் தேதிக்காக காத்திருக்கின்றன. அன்றுதான் தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் நடைபெறப் போகிறது. இந்த 7 ஆலைகளில் 5 ஆலைகள் கோவையிலும், மற்ற இரண்டு ஆலைகள் முறையே சிவகங்கையிலும், இராமநாதபுர மாவட்டத்திலும் இருக்கின்றன.

தேர்தல் அன்று தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று அச்சடிக்கப்பட்ட அந்த வாக்குச் சீட்டுகளுக்கு நன்றாக தெரியும். மறுநாள் – அதாவது டிசம்பர் 19ம் தேதி அன்று – வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, எந்த திசையை நோக்கி வருங்காலம் நகரப் போகிறது என்பதையும் அவைகள் துல்லியமாக அறியும்.

அதனாலேயே ஆவலுடன் டிசம்பர் 18ம் தேதிக்காக வாக்குச் சீட்டுகள் காத்திருக்கின்றன.

அதனாலேயே இந்தத் தேர்தலில் நாம் தோற்றாலும் பரவாயில்லை. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் மட்டும் வெற்றி பெறக் கூடாது என ஒவ்வொரு ஓட்டுக் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் முழுமூச்சுடன் போராடி வருகின்றன. ‘எங்க தொழிற்சங்கத்துக்கு ஓட்டுப் போடலைனாலும் பரவால. அவனுங்களுக்கு மட்டும் தயவு செஞ்சு ஓட்டுப் போடாதீங்க…’ என ஒவ்வொரு தொழிலாளியின் காலிலும் விழுந்து கெஞ்சுகின்றன, கையெடுத்து கும்பிடுகின்றன.

இப்படி ஓட்டுக் கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் நடந்துக் கொள்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கோவை பஞ்சாலைகளில் பிடிப்பு இருந்தால்தான் கோவையை சுற்றியிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுக் கட்சி தொறிசங்கங்களால் கோலோச்ச முடியும். தொழிலாளர்களை ஏமாற்றி, முதலாளிகளுக்கு சாதகமாக நடக்க முடியும். முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டை பாய்ந்து கவ்வ முடியும்.

அப்படியென்ன கோவை பஞ்சாலை தொழிற்சங்கங்களுக்கு முக்கியத்துவம் இருக்கின்றன என்பதை அறிய சுருக்கமாக ஆங்கிலேயர் காலம் தொட்டு கோவையின் வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்து பலகோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருப்பது ஜவுளித்துறைதான். லாபம் கொழிக்கும் இந்தத் துறையை குறித்து ஆங்கிலேயர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். சுற்றுப் புறங்களில் பருத்தி விளைய வேண்டும். விளைந்த பருத்தியை நூலாக நூற்பதற்கு மிதமான தட்பவெப்பம் நிலவ வேண்டும். இப்படி இந்தியாவில் எந்தெந்த பகுதிகள் இருக்கின்றன என துல்லியமாக கணக்கிட்டு 3 பகுதிகளை தேர்ந்தெடுத்தார்கள். அந்தப் பகுதிகளில் சாலைகளையும், இரயில் பாதைகளையும் அமைத்து ஜவுளித்துறை சாதனை மையங்களாக உருவாக்கினார்கள். அப்படி தோன்றியதுதான் ஏ,பி,சி எனப்படும் 3 நகரங்கள். இதில், ஏ – அகமதாபாத்; பி – மும்பை; ஆகியவை வடமாநிலங்களில் இருக்க, சி – கோயமுத்தூர் மட்டும் தென்னகத்தில் – அதிலும் தமிழகத்தில் இருக்கிறது.

குறைவான கூலியில் பல மணிநேரங்கள் வேலை செய்ய கோவையில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்பதை புரிந்துக் கொண்ட சர்.ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர், 1888ல் கோவையில் முதல் பஞ்சாலையை தொடங்கினார். ஸ்டேன்ஸ் மில் என்றழைக்கப்பட்ட இந்த பஞ்சாலையை அன்று ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் மக்கள் பார்த்தார்கள். அங்கிருந்த பஞ்சை நூலாக்கும் இயந்திரங்களை ஒரு அணா செலுத்தி மக்கள் பார்க்கலாம் என நிர்வாகம் அனுமதித்தது. அதாவது இந்த வகையிலும் மக்களை சுரண்டியது. அப்படி சென்று பார்த்த ஜி.குப்புசாமி நாயுடு, தானும் ஒரு பஞ்சாலையை தொடங்க விரும்பினார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று பல கிளைகளாக வளர்ந்து நிற்கும் லட்சுமி மில்ஸ்.

ஸ்டேன்ஸ் மில்லை தொடர்ந்து 1900ல் மால் மில், 1906ல் காளீஸ்வரர் மில், ரங்க விலாஸ் மில், ராதாகிருஷ்ணா மில்… என 1930 வரை 8 மில்கள் தோன்றின. பைகாரா திட்டத்தின் மூலம் மின்சாரம் கிடைப்பதற்கு முன்புவரை இந்த பஞ்சாலைகள் நீராவி சக்தியினாலேயே  இயங்கி வந்தன. 1930க்கு பிறகு மின்சாரம் முன்பை விட மலிவாக கிடைக்க ஆரம்பித்தப் பின் பஞ்சாலைகள் வேகமாக வளர்ந்தன. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும், இங்கிலாந்தின் உற்பத்தி இலக்குகள் யுத்த சேவையை நோக்கி திரும்பின. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நூலுக்கும், துணிகளுக்கும் உருவான தேவையை கோவை பஞ்சாலைகள் பயன்படுத்திக் கொண்டன.

இதற்கு முன்பாகவே மில் அதிபர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இங்கிலாந்தில் ஜவுளித் தொழில்நுட்பம் கற்க அனுப்பப்பட்டனர். தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து சுரண்டும் கல்வியை – மேலாண்மைத் திறனை, வணிக நுட்பங்களை – அவர்கள் கற்று வந்து கோவையில் அமல்படுத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக 1940களில், ஆங்கிலேய அரசு, நேசநாடுகளின் இராணுவத்துக்குத் தேவையான ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கவும், உறுதி செய்யவும் இந்திய தரகு முதலாளிகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்கியது.

இந்தக் காலகட்டத்தில்தான், கோவையிலிருந்து ஏறக்குறைய 8 கி.மீ தொலைவிலுள்ள சின்னியம்பாளையம் ரங்கவிலாஸ் மில்லில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகவும், பணி நேரங்களை ஒழுங்குப்படுத்தவும் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 4 தொழிலாளர்களையும் கைது செய்த ஆங்கிலேய காவல்துறை, ஒருவருக்கு தூக்கு மற்ற மூவருக்கு ஆயுள்தண்டனை என தீர்ப்பு வழங்கியது. ஆனால், நெஞ்சுரம் மிக்க அத்தொழிலாளர்கள், எங்கள் நால்வருக்கும் ஒரே தண்டனைதான் வழங்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்லி தூக்குக் கயிறை ஒன்றாக முத்தமிட்டார்கள். வீரம் செறிந்த இந்த சின்னியம்பாளைய தியாகிகளின் போராட்டத்தை இன்றளவும் கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் மறக்கவில்லை.

அதேபோல் கோவையில் தொடங்கப்பட்ட முதல் பஞ்சாலை நிறுவனமான ஸ்டேன்ஸ் மில்லில் ஊதிய உயர்வுக்காகப் போராடிய பெண் தொழிலாளர்கள், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான சம்பவத்தையும் கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் மறக்கவில்லை. இந்த இரு ஆலைகளிலும் நடைபெற்ற போராட்டங்கள் ஒட்டுமொத்தமான அனைத்து கோவை பஞ்சாலைகளுக்கும் சேர்த்துத்தான் என்பது தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்படியாக நீளும் கோவை பஞ்சாலைகளின் வரலாற்றில், அடுத்தகட்டமாக 1974ம் ஆண்டு வந்து சேர்ந்தது. இந்திரா காந்தி தலைமையிலான அரசு, இக்காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான பஞ்சாலைகளை நாடு முழுவதும் நாட்டுடைமையாக்கியது. அதில், தமிழகம், புதுச்சேரியில் இருந்த 15 பஞ்சாலைகளும் அடக்கம். இப்படித் தோன்றிய தேசிய பஞ்சாலைக் கழகத்தில் இன்று கோவையில் 5ம், சிவகங்கை மற்றும் இராமநாதபுர மாவட்டங்களில் தலா ஒன்றுமாக சேர்த்து மொத்தம் 7 பஞ்சாலைகளே இயங்கி வருகின்றன. மீதமுள்ளவை அனைத்தும் ‘நஷ்டத்தில் இயங்குவதாகக்’ கூறி மூடப்பட்டு விட்டன. அதற்காக இயங்கி வரும் மற்ற 7ம் லாபத்தில் இயங்குவதாக அர்த்தமில்லை. இவையும் நஷ்டத்தில்தான் இயங்கி வருவதாக அரசு கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறது.

ஆனால் இந்த ஆலைகள் எதுவும் நஷ்டத்தில் இயங்கவில்லை என்பதும், செயற்கையாக அப்படியான தோற்றத்தைத் தருகிறது என்பதும் தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும். சான்றாக, இன்றையதினத்தில் இந்திய அளவில் ஜவுளி ஆலைகளுக்கு தேவைப்படும் பஞ்சின் அளவு 246 இலட்சம் பேல்கள். (ஒரு பேல் என்பது 176 கிலோவைக் கொண்டது). ஆனால், இந்தாண்டு இந்திய அளவில் விளைந்துள்ள பஞ்சின் அளவு 295 இலட்சம் பேல்கள். அதாவது தேவையைவிட, 50 இலட்சம் பேல்கள் அதிகம் விளைந்துள்ளது. இதுதவிர, சென்ற ஆண்டு கூடுதலாக விளைந்த 55 இலட்சம் பேல்களும் கையிருப்பில் உள்ளன. இப்படி கிட்டத்தட்ட 105 இலட்சம் பேல்கள் கையிருப்பில் இருக்கும்போதும், பஞ்சின் விலை ஏன் உயர்கிறது? ஏன் பஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு கணக்குக் காட்டுகிறது? எதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்காமல் இருக்கிறது?

இந்தக் கேள்விகளை முன்னிறுத்தி எந்த ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை அணிதிரட்டவில்லை. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி நியாயமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை பெற்றுத் தரவில்லை.

இதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், குரல் கொடுத்தது. 30 ஆண்டுகளாக தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. தேர்தலை நடத்த வழிவகை செய்தது.

ஆனால், ஒரேநாளில் ஏதோ ‘ஜீ பூம்பா’ கதையாக இது நடந்துவிடவில்லை. இந்தத் தேர்தலை நடத்துவதற்காகவே கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம், மிக நீண்ட போராட்டத்தை சந்தித்திருக்கிறது.

பொதுவாக ஓர் ஆலை அல்லது நிறுவனத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை (புஜாதொமு) தொடங்க வேண்டும் என அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் விரும்பினால், உடனே சங்கம் தோன்றிவிடாது. அதே ஆலை அல்லது நிறுவனத்தில் இருக்கும் மற்ற தொழிற்சங்கங்களில் – அது ஓட்டுக்கட்சிகளின் தலைமையிலான தொழிற்சங்கமாக இருந்தாலும் – இணைந்து செயலாற்றும்படியாகவே அறிவுறுத்தப்படுவார்கள். காரணம், தொழிலாளர்களின் ஒற்றுமையை ஒவ்வொரு விநாடியும் வலியுறுத்தும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தானாகவே ஒரு பிளவை உருவாக்க ஒருபோதும் விரும்பியதுமில்லை; செயல்படுத்தியதும் இல்லை.

அந்தவகையிலேயே கோவை என்.டி.சி. ஆலைகளில் பணிபுரிந்த விளவை இராமசாமி உட்பட பல தோழர்கள், புஜாதொமு-வை தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த ஏஐடியுசி (சி.பி.ஐ), சிஐடியு (மார்க்சிஸ்ட்) தொழிற்சங்கங்களில் ஒன்றில் இணைந்து செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். தோழர்களும் அதன்படியே ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களில் இணைந்து நியாயமான கோரிக்கைகளை பெற்றுத் தரும்படி தொழிற்சங்க தலைமையை வலியுறுத்த ஆரம்பித்தார்கள்.

இயங்கி வரும் 7 என்.டி.சி. மில்களிலும் 2,500 ஆண் – பெண் நிரந்தரத் தொழிலாளர்களும், இதே எண்ணிக்கையிலான தினக்கூலி ஆண் – பெண் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களான இந்த மில்கள் அனைத்திலும் அரசாங்க சட்டங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. 240 நாட்கள் தொடர்ச்சியாக வேலைப் பார்க்கும் தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டுமென சட்டம் சொல்கிறது. ஆனால், 15 முதல் 20 ஆண்டுகளாக என்.டி.சி. ஆலைகளில் தினக்கூலிகளாகவே அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தோழர்கள் குரல் கொடுத்தபோது ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்க தலைமை ஏதேதோ காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்தது.

அதேபோல் ஒரு வருடத்தில் ஒரு நாள் பணிபுரிந்தாலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து ஓட்டுக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைமை அதை வருடத்துக்கு 240 நாட்களுக்கு பணிபுரிந்தால்தான் பணிக்கொடை என மாற்றியிருக்கிறது. அத்துடன் 215 நாட்களுக்கு குறைவாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இன்சென்டிவ் இல்லை என்றும் அறிவித்துவிட்டார்கள்.

இவையனைத்துக்கும் மேலாக இன்னொரு கொடுமை என்.டி.சி. ஆலைகளில் நடக்கிறது. இங்குள்ள அதிகாரிகள் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பெறுகிறார்கள். ஆனால், தொழிலாளர்கள் – அவர்கள் நிரந்தர தொழிலாளர்களாக இருந்தாலும் சரி – மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பெறவில்லை. ஒரே மில்லுக்குள், ஒரே காம்பவுண்ட்டுக்குள் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வு இந்தியாவிலுள்ள எந்த பொதுத்துறையிலும் கிடையாது என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

என்.டி.சி. நலிவடைந்துவிட்டது என்று சொல்லி 20 ஆண்டுகளாக எந்தத் தொழிலாளிக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால், நிர்வாகிகளுக்கு மட்டும் மற்ற மத்திய அரசு நிறுவனங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படும் போதெல்லாம் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்? என்.டி.சி. நஷ்டத்தில் இயங்குகிறது என்றால், அதற்கு நிர்வாகிகளும்தானே பொறுப்பு? அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் அரசு, ஏன் தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்காமல் இருக்கிறது?

அதேபோல் பிற மாநிலங்களில் இயங்கும் என்.டி.சி. ஆலைத் தொழிலாளர்களுக்கும் தமிழக என்.டி.சி. ஆலைத் தொழிலாளர்களுக்கும் கேண்டீன் முதற்கொண்டு மருத்துவ இழப்பீடு, மானியவிலையில் பொருட்கள் வாங்குவது வரை அனைத்து சலுகைகளிலும் வித்தியாசம் காணப்படுகிறது. ஏன் இந்த ஏற்றத் தாழ்வு? இதை ஏன் அகற்றக் கூடாது? இருக்கும் உரிமைகளை எல்லாம் நிர்வாகத்துடனும், அரசுடனும் போராடி ஏன் பெற்றுத் தரக் கூடாது? 30 ஆண்டுகளாக ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்… என ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்க தலைமையிடம் தோழர்கள் கேட்டார்கள். கேட்டவர்களை அத்தலைமை அலட்சியப்படுத்தியது.

பதிலாக, தொழிலாளர்களிடம் வி.ஆர்.எஸ். வாங்கித் தருகிறோம் என நைச்சியமாக பேசி லஞ்சம் வாங்க ஆரம்பித்தார்கள். என்.டி.சி. குவார்ட்டர்ஸ் பெற்றுத் தருகிறோம் என கமிஷன் பெற தொடங்கினார்கள். தினக்கூலி தொழிலாளர்களிடம், உங்களை பணி நிரந்தரம் செய்ய குரல் கொடுக்கிறோம் என்று சொல்லாமல், நாளொன்றுக்கு ரூபாய் 250 பெற்றுத் தருகிறோம்… அதற்கு இவ்வளவு ஆயிரம் லஞ்சமாக கொடுங்கள் என பிச்சை கேட்க ஆரம்பித்தார்கள்.

இதற்கு மேலும் ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களை நம்பிப் பயனில்லை என்ற நிலை உருவான பிறகே சென்ற ஆண்டு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் உதயமானது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் இச்சங்கத்தில் ஆர்வத்துடன் வந்து இணைந்தார்கள்.

காரணம், பிற ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களை பொறுத்தவரை ஒரு மாவட்டம் முழுக்க இருக்கும் ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் செயல்படும் அவர்களது தொழிற்சங்கங்கள் அனைத்துக்கும் ஒருவரே தலைவராக இருப்பார். ஒருவரே செயலாளராக இருப்பார். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இதுதான் நிலமை. அதுமட்டுமல்ல, மாவட்ட தொழிற்சங்க தலைமையில் இருப்பவர்கள், சொந்தமாக ஆலைகளையும் வைத்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சங்க தலைமையே முதலாளியாகவும் இருக்கிறது. இவர்களால் எப்படி இன்னொரு முதலாளியிடம் தொழிலாளர்களுக்கு சாதகமாக பேச முடியும்? உரிய உரிமைகளை பெற்றுத் தர முடியும்?

ஆனால், புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி ஒருபோதும் இப்படி செயல்படுவதில்லை. எந்த ஆலை அல்லது தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் சங்கம் ஆரம்பிக்கப்படுகிறதோ அந்த ஆலை அல்லது தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் பணிபுரிபவர்களே அந்தந்த சங்கத்துக்கு தலைவர், செயலாளராக இருப்பார்கள். கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளார் சங்கமும் இப்படித்தான் இயங்கி வருகிறது. தொழிலாளர்கள் மனமுவந்து இச்சங்கத்தில் இணைய இதுதான் காரணம். தங்களில் ஒருவர் அரசுடனும், நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்திருக்கிறது.

ஆக, டிசம்பர் 18 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் எந்த தொழிற்சங்கம் அங்கீகாரம் பெறப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. அதுவேதான் ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நாடி நரம்புகளில் ஜன்னி கண்டு பிதற்றவும் காரணமாக அமைந்துவிட்டது.

‘புஜதொமு-க்கு எம்.எல்.ஏ., எம்.பி. இல்லை. எனவே இவர்களது இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தால் உங்களுக்கான உரிமையை பெற்றுத் தர முடியாது…’ என என்.டி.சி. தொழிலாளர்கள் மத்தியில்  தீவிரமாக பிற ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், இதைக் கேட்டு தொழிலாளர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இவர்கள் இதுவரை என்ன உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார்கள்? 20 ஆண்டுகளாக ஒருமுறைக் கூட நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை பெற்றுத் தரவில்லையே? அதுமட்டுமா… 30 ஆண்டுகளாக தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலைக் கூட நடத்த அனுமதி பெறவில்லையே..? எம்.எல்.ஏ., எம்.பி. இல்லாத கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்தானே நீதிமன்றம் சென்று, தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை நடத்த வழிவகை செய்திருக்கிறது… என்று கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்ற ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள், புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து பிரச்சாரத்தில் அடுத்த கேள்வியை கேட்கின்றன.

‘சட்டமன்ற – நாடாளுமன்ற தேர்தலை போலி ஜனநாயகத் தேர்தல் என்று சொல்லி புறக்கணிக்கும் படி சொல்லும் இவர்கள், தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் மட்டும் பங்கேற்ப்பது ஏன்? இதிலிருந்தே இவர்களது இரட்டை வேடம் புரியவில்லையா? என தொண்டைத் தண்ணீர் வற்ற கூக்குரல் இடுகிறார்கள். ஆனால், இப்படி கூக்குரல் இடுபவர்கள்தான் இரட்டை வேடம் பூண்டிருக்கிறார்கள் என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தால், அத்தொகுதியில் இருக்கும் அனைவரும் ஓட்டுப் போடுவதில்லை. 40% ஓட்டு பதிவானாலே அதிகம். இந்த 40% வாக்கிலும் 20 முதல் 30 சதவிகித வாக்கு பெறுபவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்தவகையில் மொத்தமாகப் பார்த்தால், வெற்றி பெற்றவரை எதிர்த்து வாக்களித்தவர்களே அதிக சதவிகிதமாக இருப்பார்கள். அப்படி வெற்றி பெற்றவரும் அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பதுமில்லை. தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுப்பதுமில்லை.

ஆனால், தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் என்பது அப்படியில்லை. அனைத்து தொழிலாளர்களும் சேர்ந்துதான் எந்தத் தொழிற்சங்கம் தங்கள் சார்பாக நிர்வாகத்துடனும் அரசுடனும் பேச வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தலில் பங்கேற்கும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தை பொறுத்தவரை – இவர்கள் வெற்றி பெற்றால் அரசுடனும், நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறவர்கள், அதே தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள்தான். அதாவது வெளியிலிருந்து வரும் மூன்றாவது நபரல்ல. தினமும் தொழிற்சாலைக்கு வந்து தங்களைப் போலவே பணிபுரியப் போகிறவர்தான் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் இருக்கிறார். தாங்கள் அனுபவிக்கும் அதே சிரமங்களைத்தான் அவரும் அனுபவிக்கிறார். எனவே தொழிலாளர்களின் நிலை – கஷ்டம் – அவருக்கும் தெரியும்.

ஒருவேளை அவர் விலைபோய் விட்டாலும் அவரை நேருக்கு நேர் கேள்வி கேட்கலாம். பெரும்பான்மை பலத்துடன் பதவியிலிருந்து அவரை நீக்கவும் செய்யலாம்… என்ற உண்மை என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதே உண்மையின் காரணமாகத்தான் புஜாதொமு தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் பங்கேற்கிறது. இதன் வழியாக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அவர்களுக்குள்ளேயே பிரச்னைகளை களைய கற்றுத் தருகிறது. சுருக்கமாக சொல்வதென்றால், சோஷலிசத்துக்கான பயிற்சியாகவே தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை புஜாதொமு கருதுகிறது.

இப்படி மிக வலுவாக ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நினைத்த இரு அஸ்திரங்களும் வலுவிழந்த நிலையில் மூன்றாவதாக ஒரு அஸ்திரத்தை எடுத்திருக்கிறது. ‘இவர்கள் தீவிரவாதிகள். இவர்கள் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த என்.டி.சி. ஆலைகளையும் மூடிவிடுவார்கள். உங்களை குடும்பத்துடன் நடுத்தெருவில் நிறுத்துவார்கள்…’

இதை வேறு யாரிடமாவது சொன்னால் ஒருவேளை நம்பலாம். ஆனால், என்.டி.சி. தொழிலாளர்களிடமே சொல்வதுதான் மிகப்பெரிய நகைச்சுவையாக அமைந்துவிட்டது. காரணம், என்.டி.சி.ஆலைகளில் ஓர் அங்கமான முருகன் மில்லில் வலுவாக கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இருப்பதால்தான் 2009 – 2010ல் 100 சதவிகித இலாபத்தை அந்த மில் அடைந்திருக்கிறது. இதை தொழிலாளர்கள் சொல்லவில்லை. தன் கைப்பட மேலிடத்துக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில் அந்த மில்லின் நிர்வாகியே இதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஆக, ஆலைகளை மூடுவது ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கத்தின் வேலைதான் என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு அனுபவப்பூர்வமாக தெரியும். சமீபகாலத்தில் ஏறக்குறைய 50 நிறுவனங்களை கோவையில் மூடியது இவர்கள்தானே!

ஆனால், இதற்கு நேர்மாறாக புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி செயல்பட்டிருக்கிறது என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக ஓசூர் கமாஸ் பெக்ட்ரா தொழிற்சாலையில் புஜாதொமு இயங்க ஆரம்பித்தப் பிறகுதான் சட்டவிரோதமாக அத்தொழிற்சாலை புரிந்து வந்த பல காரியங்களை தடுத்து நிறுத்தியது. பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு கிடைக்காமல் இருந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் ஊதிய உயர்வை பெற்றுத் தந்திருக்கிறது.

அதேபோல் புதுச்சேரியில் இயங்கி வரும் குட்நைட் ஆலையில் இதுவரை இருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம், புஜாதொமு.

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் அய்யப்பன் இண்டஸ்டிரீஸில் இதுவரை 6 முறை ஊதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக போடப்பட்டு, 6 முறையும் அமலுக்கு வந்திருக்கிறது. காரணம், புஜாதொமு.

இவையனைத்தையும் கவனித்தபடி டிசம்பர் 18 அன்று தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று உணர்ந்தபடி காத்திருக்கின்றன வாக்குச்சீட்டுகள்.

அனைத்து பொய்ப் பிரச்சாரங்களும் வலுவிழந்த நிலையில் இறுதியாக ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள், ‘படித்தவர்கள் தலைமைக்கு வந்தால்தான் நல்லது நடக்கும்’ என ஒவ்வொரு தொழிலாளியின் செவியிலும் ஓதி வருகின்றன.

அப்படி ஓதப்படும் செவிகளுக்கு சொந்தமான தொழிலாளர்களின் இதயத்துக்கு மிகப்பெரிய வரலாற்று உண்மை ஒன்று தெரியும் என்பது பாவம் ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்த மெத்த படித்தவர்களுக்கு தெரியவில்லை.

பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்தான். அதுமட்டுமல்ல, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்றும் உணர்த்தியது லெனின் உருவாக்கிய ரசிய கம்யூனிஸ்ட் கட்சிதான்.

அப்படி செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாக 1878ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று பிறந்த ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் என்கிற ஜோசப் ஸ்டாலினின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையும், புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களாலும்தான் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது. மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை 15 ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சதவீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930களில் ரசியா மட்டும் முன்னேறியதும், இட்லரிடம் இருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய தொழிலாளர் வர்க்கம் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.

இவையனைத்தையும் சாதித்தது, மெத்தப் படித்த அறிவாளிகள் அல்ல. விவசாயிகளை உள்ளடக்கிய ரசிய தொழிலாளர் வர்க்கம்தான். அதை தலைமையேற்று வழிநடத்திய செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஜோசப் ஸ்டாலின்தான்.

அவர் பிறந்த அதே டிசம்பர் 18 அன்றுதான், என்.டி.சி.க்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் நடக்கப் போகிறது. அன்றைய தினம் தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று அச்சடிக்கப்பட்ட அந்த வாக்குச் சீட்டுகளுக்கு மட்டுமல்ல, எழுதப்போகும் என்.டி.சி. தொழிலாளார்களுக்கும் நன்றாகத் தெரியும்.

சின்னியம்பாளைய தியாகிகளைக் கண்ட ரங்கவிலாஸ் மில்லும், துப்பாக்கிச் சூட்டில் பலியான தோழர்களின் நினைவை ஏந்தியபடி வலம் வரும் ஸ்டேன்ஸ் மில்லும், என்.டி.சி.யின் அங்கமாகத்தான் இன்று இருக்கின்றன என்பது தொழிலாளர்களுக்குத் தெரியாதா என்ன?

கோவை மாவட்டத்தில் புதிய விடியலுக்கான அத்தியாயத்தை எழுதப் போகும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளார் சங்கத்துக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்