privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்பெண் புன்னகையின் பின்னே..... - ரதி

பெண் புன்னகையின் பின்னே….. – ரதி

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 5

பெண், எனது பெயர், இனம் மற்றும் இன்ன பிற, இத்யாதிகள் எல்லாமே இது தான். எனக்கு பல கோடி முகங்கள். பல கோடிப் பெயர்கள். எனக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியல்ல. வேதனையே. என் உரிமைகள் பிறப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் பிறகேன் எனக்கென்றோர் தினம். இயற்கையின் படைப்பில், விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின் சாதனையல்ல. பெண்ணாய் பிறப்பது வரமா, சாபமா என்ற விதண்டாவாதங்களை விலக்கிவிட்டு நானும் சாதாரண மனிதப் பிறவியாகவே பார்க்கப்படவேண்டும்.

பெண் என்றால் சிசுக்கொலை, உடன்கட்டையேறுதல், கற்பழிப்பு, துன்புறுத்தல், வன்முறை என்ற வடிவங்களில்தான் நான் நூற்றாண்டுகளாய் எத்தனையோ நாட்டில், எத்தனையோ ஊரில் துன்புறுத்தப்பட்டேன். இன்றும் துன்புறுத்தப்படுகிறேன். என் உடம்பை துன்புறுத்துபவர்கள் உள்ளத்தை சும்மா விடுவார்களா. அதையெல்லாம் பட்டியலிட்டு மாளாது. என் உள்ளச்சுமைகள் என்னை அழுத்தினாலும் இதழ்களில் புன்னகையை கடை விரிக்கத்தவறுவதில்லை. என் வலிகளை எனக்குள் புதைத்து நான் எப்போதுமே புன்னகைக்க வேண்டும். அப்படித்தான் எனக்கு எழுதப்படாத சமூக விதிகள், விழுமியங்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றன.

என் அறிவைப்பற்றியும் நான் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். என் கற்பூர மூளை சட்டென்று பற்றிக்கொண்டால் பெண் என்று ஓரங்கட்டப்படுவேன். அதையே காற்றில் கரைய விட்டால் எல்லா சமூக சம்பிரதாயங்களிலும் உள்வாங்கப்படுவேன். என்ன! எனக்குத்தான் வாயை, அறிவை மூடிவைக்க சிரமப்படவேண்டியுள்ளது. மனிதன் மிருகங்கள் போல் வேட்டையாடி திரிந்த காலங்களில் நான் ஆணுக்கு அடிமை சேவகம் செய்ததில்லை. என் உடற்கூறா அல்லது சமூக கலாச்சார ஏற்பாடுகள், அபத்தங்கள் இவற்றில் எது என் உரிமைகளை மட்டும் காலவெள்ளத்தில் மூழ்கடித்து என் சடலத்தை மட்டும் கரையேற்றியிருக்கிறது?

என் தடைகளையெல்லாம் தாண்டி நூற்றாண்டு காலமாய் மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.

ஆணின் உயிர்க்காற்று நான். அவனுக்காய் நான் மகளாய், தங்கையாய், அக்காவாய், தாயாய், தாரமாய், மற்றும் எல்லா “ய்” களாகவும் ஆண்டாண்டுகாலம் உடனிருக்கிறேன். வறுமைக்கோடு என் வாழ்வில் ஓவியங்களை வரையவில்லை என்றால் என் வாழ்விலும் பெரும்பாலும் சந்தோசங்கள் நிரம்பியிருக்கும். இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியானது “Female Circumcision”. அற்ப விடயத்திற்காய் என் பெண்ணுறுப்பை அறுத்துப்போடும் இழிசெயல். ஏனென்று நான் கேள்வி கேட்டால், இது என்னை, அதாவது பெண்ணை திருமணத்திற்கு தயார்ப்படுத்தலாமாம்.

இது எனக்கிழைக்கப்படும் அநியாயம் என உலக சுகாதார ஸ்தாபனமே கண்டித்தாலும், அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இன்றும் தொடர்கிறது. இது என் அறியா வயதில் உடலுக்கு இழைக்கப்படும் கொடுமை. இந்த கண்டங்களை தாண்டி நான் குமரியானதும் எனக்கு பிரச்சனை என் பருவமும் ஆண்களும்தான். என் அறிவை பருவம் விழுங்கும் ஆபத்து இருக்கிறது என்று அறியாவிட்டால் என் வாழ்வில் அத்தனையும் பாழாய்ப்போகும். அதை சிலர் அக்கறையோடு அறிவுரையாய் சொன்னால் அதை ஓர் ஏளனப் பார்வையில் என் வயது அலட்சியம் செய்யும்.

என் பருவமும் ஹோர்மோன்களும் காந்தமாய் ஆண் என்ற இரும்பை கவர்ந்து அவனோடு காதலாகி, கல்யாணமாகி, கடுப்பாகி அங்கேயும் நான் தான், பெண், அதிகம் காயப்படுகிறேன். ஆனாலும், விதிவிலக்காய் பெண் என்ற காந்தத்தை இரும்புகள் கவர்ந்திழுப்பதும் அதில் காந்தம் தன்னிலை மறப்பதும் பின்னர் கண்ணீர் வடிப்பதும் பெண்ணுக்கே உரிய பேதமைகள். நான் எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், அவஸ்தைப்படுகிறேன். காதலாகட்டும், கல்யாணமாகட்டும் பெண் எப்போதுமே வீட்டுக்கு கட்டுப்படவேண்டும் என்பது ஓர் சமூகவிதி.

காதல், கல்யாணத்தில் நான் படும் காயங்கள், வடுக்கள் என் வீட்டுச் சுவர்களைத் தாண்ட அனுமதிப்பதில்லை. அதனால் என்னோடு என் உணர்வுகளுக்கு என் மனதிலேயே சிதை மூட்டிகொள்ளப் பழகிக்கொண்டேன். காலங்காலமாய் நான் திருமணத்திற்கே தயாற்படுத்தப்படுகிறேன். திருமணம் அபத்தமா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், திருமணம் என் அடிப்படை உரிமைகளை கபளீகரம் செய்தால் அதை அபத்தம் என்று கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

உலக இயங்குவிதிகள், சமூக ஒழுங்குகள் மாற நானும் கல்வியில், தொழிலில், விளையாட்டில் என்று ஒரு சில படிகளைத் தாண்டி முன்னேற முயன்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தடையையும் தாண்டி எனக்காய் விதிக்கப்பட்டிருக்கும் மகள், மனைவி, தாய் என்ற கடமைகளோடு என் வீட்டின் பொருளாதார சுமையையும் கட்டியழுதுகொண்டு பொதிமாடாய் அல்லும் பகலும் அல்லாடுகிறேன். கல்விதான் பெண்களின் விடுதலைக்கு சிறந்தவழி. அந்த கல்வியில் கரை சேர்வதற்குள் காதல், கல்யாணம் என்று கதவை தட்டுகிறது. பெண்ணுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த உணர்வுகள்தான் பின்னர் அதளபாதாளத்திலும் அவளை விழவைக்கின்றன.

விழுந்த பின் எழமுடியாமல் தவிக்கும்போது ஒன்று காலம் கடந்துவிட்டிருக்கும். அல்லது ஓர் ஆணின் அன்புக்காய், அரவணைப்புக்காய் மனம் தேவையற்ற விட்டுக்கொடுப்புகளுக்கு பழகிப்போய் இருக்கும். அந்த பலவீனம் ஆணுக்கு பலமாகிப்போகிறது. பெண்ணே! காதலியாய், மனைவியாய் காதலி, காதலிக்கப்படு அது உன் பிறப்புரிமை. அந்தக் காதலுக்காய் அன்புக்காய் எத்தனை விட்டுக்கொடுப்புகள்! பெண்ணுக்கு பூட்டப்பட்ட விலங்குகள் கண்ணுக்கு தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பதாலேயே என் அடிமைத்தனத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறேன்.

வேலைத்தளத்திலும் ஓடாய்த்தேய்ந்து பின்னர் பெண் தான் வீட்டு வேலையும் கட்டி அழவேண்டும் என்ற Stereo Type சிந்தனைகள் கால காலமாய் சமூகத்தில் புண்ணாய் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நான் செய்யாவிட்டால் அது ஓர் குற்ற உணர்வாக எனக்குள் உருவெடுக்கும்படி என்னை என் வீடும், சமூகமும் என்னை பழக்கியிருக்கிறது. “ஏண்டி, உன் புருஷன் கசங்கின சட்டைய போட்டிட்டிருக்கானே, அதை அயர்ன் செய்து  குடுக்க மாட்டியா” என்று யாராவது ஒருவர் என் பவித்திரமான பதிவிரதத்தை பழிசொல்லக்கூடாதல்லவா. ஏன் ஓர் ஆண் தன் அன்றாட, சொந்த வேலைகளை கவனிக்க ஓர் பெண்ணின் அடிமை சேவகம் தேவைப்படுகிறது?

இதைப்படிப்பவர்கள் யாராவது இல்லை நான் என் மனைவியை அடிமைச்சேவகம் செய்ய ஏவுவதில்லை, என் மனைவிக்கு நான் வீட்டு வேலைகளில் சின்ன, சின்ன உதவிகள் செய்து அவள் புன்னகையை ரசிக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெண் என்ற உழைக்கும் இயந்திரத்தின் வேலைகளை இப்போதெல்லாம் ஓரளவுக்கு இலத்திரனியல் இயந்திரங்கள் பகிர்ந்துகொள்வதால் சிலர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.

வீட்டின் பொருளாதார சுமையை பகிர்ந்துகொள்ள வேலை என்ற பளுவை வேறு சுமந்துகொண்டிருப்பவர்களை அவர்களின் வலிகளை பேசாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஓர் நூறு அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நான் கணவனையும் குழந்தைகளையும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன். உலகப்போர்களுக்குப் பின்னால்தான் நான் வேலைதலங்களுக்கும் பணிகளுக்கும் பழக்கப்படுத்தப்பட்டேன் என்று அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எறும்பாய் ஊர்ந்து என்னில் சிலபேர் இப்போது விண்வெளியை, நிலவைத்தொட்டிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தோசம்.

என் சிந்தனையை அலைக்கழிக்கும் விடயம் என்னவென்றால், இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவுக்குக் கீழே என் பெண் இனம் ஒருவேளை உணவுக்காய் கல்லும், மண்ணும், குப்பையும் சுமந்துகொண்டிருக்கிறதே! அந்த உழைக்கும் பெண்களின் தலைவிதியை யார் மாற்றுவார்கள்? ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப்  பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்? Malls, Restaurants, House keeping (Cleaning), Factories etc. எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. இதே வேலைகளை ஆண்கள் செய்தால் அவர்களுக்கு கூலி கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படவேண்டும். அது ஆணின் உழைப்பல்லவா. கணணி, தொழில் நுட்பம் ஆகட்டும் இல்லை வீட்டு வேலையாகட்டும் ஆணின் உழைப்புக்கு எப்போதுமே மதிப்பும் ஊழியமும் மதிப்பாகவே கொடுக்கப்படவேண்டும் என்பது ஓர் பாரபட்சமான அணுகுமுறை.

ஊடகங்கள் என்னை எதற்கும் குறியீடாகவே பார்க்கும் அவலமும் கொஞ்சமல்ல. வியாபாரப் பொருளுக்கும், போதைக்கும் நான்தான் குறியீடு. தாய்மைக்கும் நான்தான் குறியீடு. Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும். எனக்கு ஒரேயொரு விடயம் மட்டும் புரிவதில்லை. பெண் விளம்பரங்களில் அழகு காட்டாவிட்டால் யாருமே எந்தப்பொருளையுமே தொடமாட்டார்களா?

இதெல்லாம் வெறும் Cliche` என்று பலர் வாதாடினாலும் அல்லது ஒதுக்கினாலும் அதை மீண்டும், மீண்டும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் மீண்டும் அதைப் பேசவேண்டியுள்ளது. அது தவிர, ஓர் பேச்சு வழக்கில் உள்ளது போல், ஆணின் போதைக்கும் பெண்தான் ஊறுகாய். சாமானியனின் போதை, சாமியார்களின் போதை எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள பெண் தான். அவரவர் தகுதிக்கும், தராதரத்திற்கும் ஏற்றாற்போல் பெண் பலியாகிறாள் என்பதற்கு சமூகத்தின் எல்லா நிலைகளிலும், அளவுகளிலும் நிறைந்திருக்கும் அவலங்களே சாட்சி. அதை நான் அதிகம் பேசவேண்டியதில்லை. தாய்மை பற்றி நான் பேசவே வேண்டியதில்லை. அதற்கு எந்தப்பெண்ணும் சன்மானம் கேட்பதில்லை. அது இயற்கை அளித்த வரம். விவாதப்பொருளல்ல.

_______________________________________

இப்போது பொதுவாய் பெண்ணாய் பேசாமல் இந்த பதிவை எழுதியவர் என்கிற ரீதியில் பேசுகிறேன். சமூகத்தில் எல்லா தரங்களிலும் (Level) பெண் உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நீண்ட நாட்களுக்கு முன் பெண்கள் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை படித்ததாய் ஞாபகம். அதில் குறிப்பிட்டிருந்தார்கள் சமூகத்தின் எல்லா தரங்களிலும் பெண்ணுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக. ஆனால், மத்திய, செல்வந்த வர்க்கங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளியே அதிகம் கசிவதில்லை என்று. ஆக, இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள் கூட பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை என்பதைத்தான் அந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது.

இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் நாங்களும் மெளனமாய் அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த மகளிர் தினத்திலாவது இந்த சமூக ஏற்பாடுகள், பெண்ணின் மன அழுத்தங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம், சிந்திப்போம், செயற்படுவோம்.

–       ரதி.

_____________________________________________

ரதி ஈழத்தைச் சேர்ந்தவர். இனவெறிப் போரினால் அகதியாகி இப்போது கனடாவில் வாழ்கிறார். வினவில் “ஈழத்தின் நினைவுகள்” எனும் தொடர் எழுதுகிறார்.

அவரது வலைப்பு – http://lulurathi.blogspot.in/

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்