privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்பதிவுலகில் பெண்கள்

பதிவுலகில் பெண்கள்

-

26.12.2010 அன்று கீழைக்காற்று புத்தக வெளியீட்டு விழாவில் பதிவர் சந்தனமுல்லை ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம்.

வினவு

_____________________________________________________________________

இங்கு கூடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் சித்திரக்கூடம் என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறேன். பெரும்பாலும் எனது மகளைப் பற்றி, என்னை பாதித்த/ நான் பார்க்கின்ற விஷயங்களை அங்கு பகிர்ந்துக்கொள்கிறேன். இது போல பல தளங்கள் இருக்கின்றன. அரசியல், சமூக விமரிசனங்கள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, சினிமா விமரிசனங்கள், தனி மனித வலைப்பதிவுகள் என்று ஏராளம் இருக்கின்றன. தமிழ்மணம் என்ற திரட்டியின்  மூலம் பெரும்பாலான தளங்கள் திரட்டப்பட்டு வாசகர்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

இதில் வலைப்பதிவுகளை வைத்திருக்கும், அதிலும் தொடர்ந்து  இயங்கும் பெண்கள் மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் பெண்களின்  நிலை எப்படி இருக்கிறது? எதை நாங்கள் எழுதுகிறோம்? நாங்கள் நாங்களாகவே எங்களை முற்றிலும் வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில்.

முதலில் பயனர் கணக்கிலிருந்து ஆரம்பிப்போம். வலைப்பதிவு வைத்திருக்க வேண்டுமாயின் முதலில் ஒரு பயன்ர் கணக்கு தொடங்க வேண்டும். அதாவது ஐடி. நமது சுயவிபரங்களை  உள்ளடக்கியது அது. ஆணா பெண்ணா, பிறந்த வருடம், உங்களுக்கு பிடித்தமானவை பற்றி, பிறகு  படம் – இது போன்ற விபரங்களை, அதாவது வலைப்பதிவர் பற்றிய ஒரு சுயஅறிமுகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதில், ஆண்கள் தங்களுடைய விபரங்களை, புகைப்படத்தை எதைப்பற்றியும் யோசிக்காமல் கொடுத்துவிடலாம்.ஆனால், எங்களால் அப்படி இருக்க முடியாது.

அதிலும் எங்களது  புகைப்படங்களையோ, உண்மையான வயதையோ இருமுறை யோசிக்காமல் சொல்லிவிட முடியாது. அவற்றை வெளியிடுவதன் மூலம் வரும் பாலியல் தொல்லைகள்தான் காரணம். அதாவது, பெண்ணாக இருப்பதனாலே வரும் ரிஸ்க்தான் அது. வயதை, புகைப்படத்தை போட்டுவிட்டால் வரும் தொல்லைகளை சமாளிக்கவே இணையத்தில் புர்காவுக்குள் வலம் வரவேண்டியிருக்கிறது. அப்படியும் புகைப்படத்தை அல்லது சுயவிவரங்களை வெளியிடவேண்டுமானால் அதை சமாளிக்கும் திறன் கொண்டவராக அல்லதுஒரு பின்புலம் உள்ளவராக இருந்தால் தைரியமாக  போட்டுக்கொள்ளமுடியும்.

இணையத்தை வெர்ச்சுவல் வேர்ல்ட் அல்லது மெய் நிகர் உலகு என்று கூறுகிறார்கள். உண்மையில், எங்களுக்கு மெய் உலகும் சரி,  மெய் நிகர் உலகும் சரி, இரண்டும் ஒன்றுதான். பெரிதாக வேறுபாடுகள் ஒன்றும் கிடையாது.  இங்கு என்ன சமூக நிர்பந்தங்களுக்கு உள்ளாகிறோமோ, அத்தனையும் மெய் நிகர் உலகிலும் உள்ளன. சொல்லப்போனால், இரண்டுமடங்கு அதிகமாக என்று கூட சொல்லலாம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சமூக இணையத்தளங்களில்  பங்கேற்க  ப்ரைவசி செட்டிங்க்ஸ் மிக முக்கியமாக இருக்கிறது. எங்கள் கருத்துகள்/புகைப்படங்கள் “நண்பர்கள் மட்டும்”,ட்வீட்கள் – “ப்ரொக்டட்”என்று பூட்டு போட வேண்டியுள்ளது. தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் கொடுக்க வேண்டாம் என்றுதான் ஆண்கள் பெண்கள் எல்லாருக்கும் அனைவரும் அறிவுறுத்துகிறார்கள். இருந்தாலும், ஒரு ஆண் சர்வசாதாரணமாக  அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தை அளந்து அளந்து – யோசித்து யோசித்துதான் நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூக சூழல் போலத்தான் இணையச் சூழலும்  இருக்கிறது.

இது குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே தொடங்கி விடுகிறது இல்லையா. ஆணை வளர்ப்பதும் பெண்ணை வளர்ப்பதும் நிச்சயம் வேறு வேறுதானே.’வெளிலே போறியா,  தம்பியை கூட்டிட்டு போ.’  ‘ட்யூஷனுக்கு போறியா, கூட யாராவது துணைக்கு’  இப்படிதான் பெரும்பாலான பெண்களை வளர்க்கிறோம். ‘ஏழு மணியாகிடுச்சா, வீட்டு வந்து சேர்’  ‘விளக்கு வைக்கிற நேரமாகிடுச்சா, அவ்ளோ நேரத்துக்கு மேல உனக்கு என்ன வேல” என்றுதானே கேள்விகள்.

அதற்கு ஏற்றாற்போலத்தான் எத்தனை கதைகளைக் கேள்விப்படுகிறோம். பின்னால் தொடர்ந்து வந்து கலாட்டா செய்வது, கேலி கிண்டல் பேச்சுகள், பாலியல் தொந்திரவுகள், அவமானங்கள்…இரவு எட்டு அல்லது ஒன்பது  மணிக்கு மேல் பெண்களை தெருவில் பார்க்க முடியுமா?ஆனால் ஒரு நாளும் நமது அம்மாக்களும், ஆயாக்களும் தம்பிகளைப் பற்றியோ அல்லது அண்ணன்களைப் பற்றியோ இபப்டி  கவலைப்பட்டிருக்க் மாட்டார்கள். என் தம்பி தைரியமாக இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டால் நான் எப்போதும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்றுதான் அறிவுறுத்தப்பட்டேன். இதுதான் மெய் உலகு.

இதற்கு சற்றும் குறைந்ததில்லை மெய்நிகர் உலகு..குழந்தை வளர்ப்பு, காதல் கவிதைகள், சமையல் குறிப்புகள் என்றெல்லாம் பெண்கள் எழுதலாம்.  யாருக்கும் எந்த பிரச்சினையுமில்லை. இதுவே, பெண்கள் உரிமைகள் அல்லது  ஆணாதிக்கம், மதம், மூட நம்பிக்கைகள் பற்றி எழுதினால் போதும். மேலோட்டமாக பார்த்தால், இன்றைய சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் பற்றி ஒரு இடுகை எழுதினால் அதுக்கு சப்போர்ட் செய்யும் ஆண்கள்தான் அதிகம். அதுவும்,” நாம எதுவும் சொல்லலைன்னா,  நம்மையும் பெண்களுக்கு விரோதின்னுசொல்லிடுவாங்களோ, இல்லன்னா பிற்போக்குவாதின்னு நினைச்சுடுவாங்களோன்னு” ஓடி ஓடி வந்து ‘செமயா, பிரிச்சு மேய்சுட்டீங்க’ ‘சூப்பர் போஸ்ட், புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி’ , – அதாவது இவர் புரிந்துக்கொண்டவாராம். வாழ்க்கையில் பெண்ணடிமைத்தனம் இல்லாமல் வாழ்ப்வராம். பார்த்தால்இவர்தான்  ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு பெண்கள் தொட்டால் தீட்டு என்று   ஆச்சாரமாக வாழ்ந்துக்கொண்டிருப்பார்’ ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்…-  என்றெல்லாம் இமெஜுக்காக மறுமொழிகள்  இடுவார்கள். பாராட்டுவார்கள். ஆனால்,பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது வெளுத்துவிடும்  இவர்களது சாயம். நான் எல்லா ஆண்களையும் குற்றம் சொல்லவில்லை. பதிவுலகின் பொதுப் போக்கு குறித்தே பேசுகிறேன்.

அதிலும், பெண்கள் பிரச்சினைகள் பற்றி எழுதினால்,  பெண்களுக்கு அள்ளி தெளித்துவிடும் அறிவுரைகள் இருக்கிறதே, அதைப் பற்றி பேச ஒரு நாள் போதாது. அதிலும் இலக்கியவாதிகள்,மெத்த படித்தவர்கள்  என்று  சொல்லிக்கொள்வார்களது விஷயத்தில் அவர்களது கருத்துகள் கூட பார்த்தால் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கும்.

ஒரு பெண் எழுதியிருந்தார் – “திருமணமாகிவிட்டால்  குடும்பத்திற்காக, குழந்தைக்காக வேலையை விட வேண்டியிருக்கிறது. ஆணுக்கு அப்படிபட்ட நிலை இல்லை” என்று எழுதியிருந்தார். அதற்கு, நிறைய புத்தகங்கள் படிக்கிறவர் என்று  சொல்லிக்கொள்பவர் எழுதிய மறுமொழி ஆச்சரியமாக இருந்தது. “கல்யாணம் ஆனா பெண்கள் வேலையை விட்டுவிடுவதுதான் சிறந்தது. எனக்குத் தெரிந்த பெண்கள் கல்யாண  பத்திரிகை வைக்கும்போதே நான் அவங்களுக்கு கொடுக்கிற அட்வைஸ் என்னன்னா,முதல்ல வேலையை விட்டுடுன்னுதான்”. இவர்கள் மெத்த படித்து  என்ன? உலக இலக்கியங்களை தேடித் தேடி கரைத்து குடித்துதான் என்ன? பெண்கள் வேலைக்குப் போகத் தேவையில்லை என்றுதானே மதங்கள் முதல் நமது சினிமா ஸ்டார்கள் வரை கருத்து தெரிவிக்கிறார்கள்? வேலையா குடும்பமா என்று வந்தால் குடும்பமே பெண்ணுக்கு அழகு என்று வலியுறுத்தப்படுகிறது. இதில் பெண்களை விட சமூகமே தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பொருளாதாரத் தேவைகளுக்காக வீட்டிலும் வெளியிலும் உழைக்கும் பெண்களே அதிகம். நிறைமாதமாக இருந்தாலும் ஆணுக்கு இணையாக ஜல்லி, செங்கல்  சுமந்து வீடு கட்டும் பெண்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் சணல் கட்டி காலில் அணிந்துக்கொண்டு சாலை போடும் பெண்கள் என்று ஆணுக்கிணையாய் உழைக்கும் பெண்களுக்கு இவர் சொல்லும் அட்வைஸ்\ சரி வருமா? சொல்லப்போனால், அப்படி உழைக்கும் பெண்களுக்கு ஆணுக்கு சமமான கூலி கூட கிடையாது. அவ்வளவு ஏன், ஐடி துறைகளில் 10 ஆண் மேனேஜர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் மேனேஜரைத்தான் பார்க்க முடிகிறது. கணவனால்  கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்கள் என்னதான் தன் சம்பாத்தியம் கொண்டு பிள்ளைகளை வளர்த்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு திருமணம் என்று வரும்போதுகூட தன் உறவினர்களிலிருந்து இன்னொரு ஆணை அழைத்துதான் முன்னின்று நடத்தச் சொல்ல வேண்டிவரும்.

இதில் பெண் விடுதலை என்பது பெண்களின் பிரச்சினையா?

இல்லை அது, சமூகத்தின் பிரச்சினை. அதைக் களைவதில் ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே சமமான கடமைகள் உண்டு. ஆணாதிக்கம் என்றால் ஆண்கள் மட்டும் என்று நினைத்துவிட வேண்டாம், சமயங்களில் அதை தலையில் சுமந்து சிதைக்காமல்  பாதுகாக்கும் வேலையை பெண்கள் பெண்கள்தான் செய்கிறார்கள்.

எனக்கு ஒரு இடுகை நினைவுக்கு வருகிறது. சமையல் வேலைகளில் ஆண் உதவ வேண்டும் என்று ஒரு பெண் எழுதியிருந்தார். அதற்கு பல மறுமொழிகள். அதில்  மறக்க முடியாதது. “மனைவிக்கு  உடம்பு சரியில்லைன்னா  கணவன் உதவி செய்யலாம், தப்பில்லை, ஆனா, எனக்கு வர்ற மனைவி சமைச்சதை குறை சொல்லிக்கிட்டே சாப்பிடனும், அதுதான் அன்பு” என்ற ரீதியில் எழுதியிருந்தார். அவரது அன்பிற்கான விளக்கம், அந்த லாஜிக் எனக்கு சுத்தமாக புரியவில்லை.

இதைத்தாண்டி, நீங்கள் எதிலாவது எதிர்கருத்துகள் கொண்டிருந்தால் அதை வெளிப்படுத்தினால் அவ்வள்வுதான். இருக்கவே இருக்கிறது, தனி நபர் தாக்குதல்கள். அப்படியும் ஈகோவை தணித்துக்கொள்ள முடியவில்லையா, இருக்கவே இருக்கிறது பெண்ணின் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவது. இது உட்சபட்ச ஆயுதம். பாலியல் ரீதியாக குதறிப் போடுவது. மெய் உலகிலும் இப்படித்தானே நடைபெறுகிறது. ‘விபச்சாரி’ எனறு சொன்னால் போதும், ஒரு பெண்ணை  இழிவுபடுத்துவதற்கு. மெய்நிகர் உலகத்திலும் இதுதான். ஒரு பெண்ணை கருத்து ரீதியாக் எதிர் கொள்ள முடியவில்லையா, உடனே கிசுகிசுக்களையும், வதந்திகளையும் போலியான  ஐடிகளிலிருந்து எழுத வேண்டியது. இதுக்கும் குட்டிசுவரில் அமர்ந்துக்கொண்டு கேலி பேசும் ரவுடிகளுக்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் இல்லை. அவர்களுடன் நட்பாக இருக்கும் ஆண் நண்பர்களுடன் தொடர்புபடுத்தி பேசுவது…மெத்தப் படித்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று நாம் நினைக்கும் கன்வான்கள்தான்  இப்படி  நடந்துக்கொள்கிறார்கள். கழிப்பறை சுவர்களில் அவதூறுகளை கிறுக்கி வைக்கும் செயலுக்கு சற்றும் குறைந்தது இல்லை இது. பாவம்,  ஒழுக்கம் என்பது  இருபாலருக்கும்  பொதுவானது என்பது தெரியாதவர்கள் இவர்கள்.

இதற்கு எத்தனையோ பெண்கள் பலியாகி இருக்கிறார்கள். பதிவுகள் எழுதுவதிலிருந்து விலகி இருக்கிறார்கள். அல்லது எழுதும் பொருளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இல்லையேல்,  ‘தோல் கெட்டியாக’இருக்க வேண்டும். அதாவது எருமை மாட்டுத் தோல் கொண்டிருந்தால் நீங்கள் தொடர்ந்து இயங்கலாம். இதுதான் பெரும்பாலான பெண்பதிவர்களுக்கு  கிடைக்கும் அறிவுரை. “இந்த அவதூறுகளை எல்லாம் கண்டுக்கொள்ளாதே, புறக்கணி, பெரிசா எடுத்துக்காதே, அப்புறம் உனக்குதான் மன உளைச்சல்.” சொல்லப்போனால், பெண்கள்  எல்லா இடங்களிலும் இதை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பேருந்துகளில், வேலை செய்யும் இடங்களில், தெருக்களில் என்று…

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு  அமைதியாக் கடந்து போ அல்லது இதுவும் கடந்து போகும் என்று அறிவுரை செய்வதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. அல்லது அப்படி கடந்து செல்வதுதான் நாசுக்கு அல்லது டீசன்ட் என்று உணர்த்தப்படுகிறது. இதே அறிவுரைதானே, ‘அட்ஜஸ்  பண்ணிக்கோ’ என்று சொல்வதுதான் காலம் காலமாக பெண்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், “கணவன் அடித்தால் வாங்கிக்கொள்வேன், கணவன் செய்தால் சரியாக இருக்கும்” என்று பெண்களால் நீயா நானாவில் பேச முடிகிறது. எதிர்த்து நிற்கும்படியோ அல்லது  உன்னுடன் நானும் எதிர்த்து குரல் கொடுப்பேன் என்றோ பொதுவாக பார்க்க முடிவதில்லை. அப்படி குரல் கொடுக்கும் ஒன்றிரண்டு பேரின் குரல்களும் மற்றவர்கள் எழுப்பும் விமரிசன குரலில் காணாமல் போய்விடுகிறது. இல்லையெனில், “நீ ஏன் இதயெல்லாம் வர வைச்சுக்கிற, நீ ஒழுங்கா இருந்தினா ஏன் இப்படில்லாம் வரப்போகுது?”  என்ற எதையும் விவாதிக்காமல், கணக்கில்கூட எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பெண்கள்தான் அதற்குக் காரணம் என்பது போல திருப்பி விடப்படுகிறது.

கல்லூரி ஹாஸ்டலுக்குச் செல்ல பத்து மணி நேரம்  ரயில் பயணம் செய்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் , நான் கிளம்பும்போதெல்லாம் என் ஆயாவிற்கு மிகுந்த பதட்டமாக இருக்கும், தனியாக  போகிறேனே என்று. ஒவ்வொரு முறையும், சின்னக்குழந்தைக்கு சொல்வது போல அறிவுரை சொல்வார். “ட்ரெயின்லே யார் கேட்டாலும் உன் பேரை, ஊரை காலேஜை எல்லாம் சொல்லிடாதே” என்று. நானும் அப்படியே செய்துமிருக்கிறேன். யாராவது நட்பாகக்  கேட்டால் கூட, வேறு ஏதோ பெயரை, தவறான கல்லூரியை பொய் சொல்லியிருக்கிறேன். ஏன், ஒரு பெண் எப்போதும் பாதுகாப்பாக நடந்துக்கொள்ள வேன்டிய நிர்பந்த்ததிலேயே வாழ வேண்டிய சூழலாகவே இருக்கிறது. இன்றும் அது, பெரிதாக மாறிவிடவில்லை என்று  நினைக்கிறேன்.

அதுவும் ஆண்களுக்கிடையே இருக்கும் இந்த “மேல் பாண்டிங்” எனபதை கண்கூடாகக் காணலாம். இதுவரை பதிவுலகில், பதிவுகள் வைத்திருக்கும் ஆண்கள் எண்ணற்ற  சந்திப்புகளை முன்னெடுத்திருக்கிறார்கள். சந்தித்திருக்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு பெண்களும் கலந்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளில் பெண்கள் கலந்துக்கொள்ளவதுமில்லை. இதைக் குறித்து ஆண்களும் அங்கலாய்க்கலாம். அதனால் என்ன, பயமென்றோ அலல்து தயக்கமோ வேலை பளுவோ ஏதோ ஒன்று….பெண்கள் கலந்துக்கொள்வதில்லை. அப்படியும்  நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு முறை ஒரே முறை சந்தித்தோம். அவ்வளவுதான். அதை ஒட்டி சில பரபரப்புகள் கிளம்பின. சண்டைகள், விவாதங்கள். அடுத்த முறை பெண்கள்  மட்டுமே சந்திப்பதற்கான முகாந்திரமே இல்லாமல் போய்விட்டது. எதற்குச் சொல்கிறேனென்றால், “மேல் பான்டிங்க்” –  மற்றும் ஆண்கள் எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்வார்கள்,  கருத்து ஒற்றுமை இல்லாவிட்டால் கூட நட்பாக இருக்க முடியும், எங்கே பெண்கள் நாலு பேரை கொஞ்சம்நேரம் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கச் சொல்லுங்கள்” என்ற பொதுபுத்தியை  நிலைநாட்டுவதற்குதான்.பெண்கள் கூட்டு முயற்சிகள் கேலி செய்யப்பட்டு நகைப்புக்கு ஆளாக்கப்படுகின்றன. கருத்து மோதல்களும் முரண்களும் ஆண்களிடையே இல்லாதது போல  பேசப்படுகின்றன. பிரச்சினைகளை பேசிக்கொள்வதும் அதைப்பற்றி விவாதிப்பதும் கூட சிறந்தவைதான்.

இன்னொன்று, நீங்கள் புரட்சிகர கருத்துகளை  முற்போக்கான கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்த வேண்டுமென்றால்,  ஒன்று உங்களுக்கு பலமான பின்னணி இருக்க வேண்டும். அல்லது பதிவுலகின் ஆண்களின் சப்போர்ட் இருகக் வேண்டும். இப்படிபட்ட சூழல்தான் இன்று பதிவுலகில் நிலவுகிறது.

மேலும், நான் கவனித்த இன்னொரு ஆட்டியூட் : சகோதரர் என்று  அழைப்பது. சகோதர அன்பிற்கெல்லாம் நான் எதிரியல்ல. ஆனால், பாதுகாப்பிற்காக அப்படி சொல்லும்போது அது சுத்த ஹம்பக்காகத் தோன்றுகிறது. அல்லது நீங்கள் அண்ணா என்றோ சகோதரி என்றோ சொல்லாதவர்களை  அல்லது சகோதரி அல்லாதவர்க்ளை நான் கண்ணியமாக நடத்தமாட்டேன் என்பது என்னவகை மனோபாவம் என்று  எனக்குப் புரியவில்லை.

மத நம்பிக்கைகளை, மூட நம்பிக்கைகளை அதிலிருக்கும் பெண்ணடிமைத்தனத்தைக் நீங்கள் கேள்வி கேட்டால் போதும். எங்கிருந்துதான் வருவார்ர்களோ தெரியாது, ‘சாமி கண்னைக்  குத்திடும்’ ரேஞ்சிலேருந்து ‘உனக்கு சொர்க்கம் கிடைக்காது’ என்பதில் தொடங்கி ‘எச்சரிக்கை செய்கிறேன் புரட்சி புதுமை எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது’ என்பது வரை மிக  நாகரிகமாக மிரட்டல்கள் விடப்படும்.

சிலமாதங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில்   வலைப்பதிவுகளைக்  குறித்து ஒரு கட்டுரை வாசித்தேன்.  இணையத்தில், தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகள், அரசியல்,  நகைச்சுவை, மாற்றுக்கருத்துகள் மற்றும் இணையத்தில் காணப்படும் பெண்கள் பதிவுகள் குறித்த கட்டுரை அது. அதில், எனக்குத் தெரிந்த சிலரது பதிவுகள் மற்றும் எனது பதிவும்  குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வலைப்பதிவுகள் எழுதும்  பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்றும் இருந்தது.

“‘எப்போவும் அந்த கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கோ” என்று பெரிம்மா திட்டிக்கொண்டிருக்கிறாரே, நான் ஒன்னும் நேரத்தை வீணாக்கவில்லை என்று உணர்த்த விரும்பி பெரிம்மாவிடம் அந்தக் கட்டுரையைக் காண்பித்தேன். அவரும்  வாசித்துவிட்டு அசால்டாக சொன்னார்,  “உன்ன மாதிரி, எத்தன பொண்ணுங்களுக்கு நேரம் இருக்கு? எல்லாரும் குழந்தைய பார்ப்பேனா, மாமியாரை பார்ப்பேனான்னு வீட்டுக்கும்,  வெளிலே வேலைக்கும் ஓடிக்கிட்டிருக்காங்க. இதுல எங்க ப்லாக்கிங்?” என்று.

இதுதான் யதார்த்தம். கணினி தொடர்பான வேலையில் நான் உள்ளதால், எனது அலுவல்களின் இடையில் ஒரு புத்துணர்ச்சிக்காக வலைப்பதிவுகள் பக்கம்  வரத் தொடங்கினேன். அப்படிதான் வலைப்பதிவுகள் எனக்கு பரிச்சயமாயின. இணையத்தில் வலைப்பதிவுகள்  பற்றிய பரிச்சயம் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வது இதுதான். பதிவுகள் எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. இன்னும் பெண்கள் எழுத வர  வேண்டும்.  யாருக்குத்தான் இந்த ஆசை இல்லை?  நேரமும், வீட்டுப்பணிச் சுமைகள் குறித்த கவலைகள் மட்டும் இல்லாமல் இருந்தால் ‍  எழுத விரும்பாத அல்லது எழுத வராத பெண்கள்தான் யார்?  நிச்சயம் பல பெண்கள் எழுத வருவார்கள். சொல்வதற்கும் பேசுவதற்கும்தான் எத்தனை இருக்கிறது.

இதிலும் ஆண்பதிவர்களிடம் கேட்க எனக்கு ஒன்றுண்டு. அதிகமாக பெண்கள் எழுத வர வேண்டும் என்று சொல்பவர்களில் எத்தனைப் பேர் தங்கள் வீட்டுப் பெண்கள் பதிவுகள் எழுதுவதை  ஊக்குவிப்பார்கள்? அப்படி ஒன்று இருப்பதைப் பற்றி பகிர்ந்துக் கொண்டிருப்பார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம். எல்லோரும், எங்கிருந்தாவது பெண்கள் எழுத வர வேண்டுமென்றுதான்  விரும்புகிறார்களே ஒழிய தங்கள் வீட்டிலிருந்து அம்மாவோ, மனைவியோ தங்கையோ எழுத வரவேண்டும் என்று முயற்சிகள் எடுத்திருப்பார்களா  என்று கேட்க வேண்டும்போல  தோன்றுவதுண்டு.

சாதியமும், பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும் நிறைந்த சூழலாகவே மெய்நிகர் உலகும் இருக்கிறது. ஒரு பெண்ணை இழிவுபடுத்த அவளைப் பற்றி கீழ்த்தரமாக  புனைவெழுதலாம். அதே மூடத்தனத்தில் ஊறிப் போயிருக்கும் உங்கள் நண்பர்களும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள், பிறகென்ன கண்ணியமான மனிதர் போல உலா வரலாம். சமூகத்தின்  மேல் அக்கறை இருப்பவராக, இலக்கியவாதியாக, கவிஞராக படம் காட்டிக்கொள்ளலாம். இவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்தவும், சூழலை மாற்றவும் நாங்கள் தொடர்ந்து இயங்குவதே பதிலடியாக இருக்க முடியும்.

அதற்கு பெண்கள் மட்டுமல்லமால் ஆண் பதிவர்களும் முன்வர  வேண்டும். நாம் பாதுகாப்பிற்காக எழுதும் மொக்கைகளே எவ்வளவு ஆபத்தானதாக வந்து முடிகிறது என்பதை உணர வேண்டும். என் மனக்குமுறல்களையும், எண்ணங்களையும் பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பளித்த தோழர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!

_________________

– சந்தனமுல்லை
_________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்