privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்...

மன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்…

-

மன்மோகன் சிங்கள்ளனிடமே கஜானா சாவியைத் தூக்கிக் கொடுத்து காவலுக்கு நிறுத்திய கதையாக 91ஆம் ஆண்டு கேரளத்தில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் நடந்த ஊழலில் தொடர்புடைய பி.ஜே தாமஸ், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப் பட்டார். பி.ஜே தாமஸ் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் மவுனமோகன் சிங், தாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்வதே முக்கியமானது என்று தெரிவித்து விட்டார்.

பிரதமரின் இந்த ‘விளக்கத்துக்காகவே’ காத்திருந்த எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பிரதமரே தனது தவறை ‘உணர்ந்து’ பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதால், இந்த விவகாரத்தை இத்தோடு ஊத்தி மூடி விடுவது நல்லது என்று திருவாய் மலர்ந்துள்ளார். அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதற்கு மேலாக மன்மோகன்சிங் பொறுப்பேற்றுக் கொண்டதோடு நில்லாமல் மன்னிப்பு ஒன்றையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரகாஷ் காரத்தோ, பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுக்கப் போகும் விளக்கத்துக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தேசியளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் ஏதோ நெம்ப நல்லவரான மவுனமோகன் சிங்கிற்கு இந்தச் சம்பவம் தீராத களங்கத்தை இப்போது தான் புதிதாக ஏற்படுத்தி விட்டது போலவும், அதற்கு அவரே தனது நீண்ட மவுன விரதத்தைக் கலைத்து ஒரு பதிலைச் சொல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது போலவும் மக்களுக்குக் கதை சொல்லி வருகின்றன. என்னதான் புளுகினாலும், பித்தலாட்டம் செய்தாலும், கொள்ளையடித்தாலும் இவரு ரொம்ப நல்லவருன்னு எல்லாரும் சேர்ந்து பாடும் கோரஸ் சப்தம் நம் காதில் காய்ச்சிய ஈயம் போய் பாய்கிறது.

ஏதோ தவறு நடந்து போச்சு என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு இப்போது சொல்லும் இதே பிரதமர் தான் இந்தாண்டு ஜனவரி மாதம் தாமஸின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாணைகளின் போது தாமஸின் மேல் இருக்கும் ஊழல் புகார்கள் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். தாமஸின் மேல் நடந்து வரும் ஊழல் வழக்கு பற்றிய விபரங்கள் அவரது சுயவிவரத்தில் (பயோடேட்டா) காணப்படவில்லையென்றும் அதனால் அது பற்றித் தமக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கூசாமல் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

ஒரு சாதாரணக் குடிமகன் பாஸ்போர்ட் பெற வேண்டி விண்ணப்பித்தாலே அவர் மேல் ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா, இன்ன முகவரியில் தான் இருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் காவல் துறையைக் கொண்டு விசாரித்து உறுதி செய்து கொள்கிறார்கள். ஒரு சாதாரண குமாஸ்தா வேலைக்கு ஆள் எடுப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தையே தோண்டியெடுத்து விசாரிக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டின் ஊழல் கண்காணிப்பு அமைப்பின் முக்கியமான பதவியொன்றிற்கு ஒருவரை நியமிக்கும் போது மட்டும் அவரே கொடுத்த சுயவிவரத்தை மட்டும் தான் கணக்கில் எடுத்தார்களாம் – அவரது பின்னணி குறித்து விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளவில்லையாம். இதையும் எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி நீதிமன்றத்தில் சொன்னது நாட்டின் மிக உயர்ந்த பதவில் இருக்கும் ஒருவர்!

இந்தக் புளுகுணிக் கதைகளையெல்லாம் எந்தக் எதிர்க் கேள்வியும் இன்றி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள். இவர்களெல்லாம் படித்தவர்களாம்.

தேசியளவிலான ஊடகங்களில் தாமஸ் 91ஆம் ஆண்டு கேரள உணவுத் துறைச் செயலாளராக இருந்த போது பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்து அது பற்றி நடக்கும் விசாரணையில் அவரும் அக்கியூஸ்டு லிஸ்ட்டில் இருப்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் அவரது பெயரும் இருப்பதைப் பற்றியும் அம்பலப்படுத்தி எழுதி நாறடித்துக் கொண்டிருந்த  போதும் கூட அவரது பதவியைப் பறிக்காமல் விட்டு வைத்திருந்தார் நெம்ப நல்லவரான மவுனமோகன்.

மன்மோகன் சொல்லும் இந்தத் “தெரியாது” என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் அவரின் இந்தத் “தெரியாது” அஸ்திரத்தை மக்களை நோக்கி ஏவி விட்டுள்ளார். இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவ ஊடகங்கள் அந்தக் கதைகளை கர்ம சிரத்தையாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தற்போது தலைப்புச் செய்தியிலிருந்து இரண்டாம் பக்கத்துக்கும் மூன்றாம் பக்கத்துக்கும் நகர்ந்து விட்டது – கூடிய விரைவில் எட்டாம் பக்கத்தின் எட்டாம் பத்திக்கும் போய் விடும். ஸ்பெக்ட்ரம் நாடகத்தின் பலியாடான ஆ. ராசாவைக் கம்பிகளுக்குப் பின்னே தள்ளியாகி விட்டது. ஆனால், அந்தப் பதவிக்கு அவரை ரெக்கமன்டேசன் செய்த – ஊழலில் பலனடைந்த –  டாடாவும், மிட்டலும், அம்பானியும் எஸ்கேப்பாகி விட்டனர். தன் உள்ளங்கைகளுக்குள்ளேயே ஊழல் நடந்து கொண்டிருந்த போது மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் அப்பாவியாகி விட்டார்.

அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. நம் நாட்டின் அணு விஞ்ஞானிகள் எத்தனையோ வருடங்களாக ராப்பகலாக உழைத்து சொந்த முயற்சியில் உருவாக்கிய அணு உலைகள் அனைத்தையும் கொண்டு போய் தனது அமெரிக்க எஜமானர்களுக்கு பாத காணிக்கையாக்கி விட்டார் மன்மோகன். அதற்கு வழிவகை செய்த அமெரிக்க ஹைட் சட்டம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைக்குக் கேள்வி கேட்டபோதும் இன்று பி.ஜே தாமஸ் விவகாரத்திற்குச் சொன்ன அதே பதிலைத் தான் சொன்னார் – “ஹைட் சட்டமா…? அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே”

எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை வழங்கும் செயற்கைக்கோள் ட்ரான்ஸ்பான்டர்களை தேவாஸ் எனும் தனியார் கம்பெனிக்கு தாரைவார்க்க 2005ம் ஆண்டே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இஸ்ரோ நிறுவனத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸும் தேவாஸ் நிறுவனமும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்திற்கான அனுமதியை அளித்தது பிரதமர் உள்ளிட்ட காபினெட் அமைச்சர்களின் கூட்டம். வின்வெளித் துறையோ நேரடியாக பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடியது.

பின்னர் இந்த ஒப்பந்தத்தின் விபரங்கள் ஊடகங்களில் அம்பலமாகி ஊரே நாற்றமடித்துக் கொண்டிருந்த போது இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயரோ,  ட்ராஸ்பான்டர்களை தனியார் கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தான் எங்கள் பணி. அதிலிருந்து கிடைக்கும் ஸ்பெக்ட்ரம் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்றார். அதாவது எல்லாரும் சேர்ந்து கொண்டு “நாங்கள் தாம்புக் கயிறைத் தான் விற்றோம் அதில் கட்டப்பட்டிருந்த மாட்டைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றனர்”

நமது மவுனச்சாமியார் வாய் திறந்து அளித்த ‘விளக்கமும்’ இது தான் – “எனக்குத் தெரியாது” . தனக்குக் கீழ் நேரடியாக இயங்கும் ஒரு துறையில் நடந்துள்ள இந்த முறைகேடுகள் பற்றியே ஒரு பிரதமருக்குத் தெரியாதென்று சொல்வாராம், அவரை நாமும் மெத்தப் படித்தவர், பொருளாதாரத்தில் புலி, நேர்மையில் எலி என்றெல்லாம் நம்ப வேண்டுமாம் – அப்படித்தான் முதலாளித்துவ ஊடகங்கள் நம்மிடம் சொல்லுகின்றன.

இன்ன துறைகளுக்கு இன்னின்ன அமைச்சர்கள் தான் இருக்க வேண்டும் என்று பெருமுதலாளிகள் கோருகிறார்கள்  என்றால், அதன் மூலம் அவர்கள் அடையக் கூடிய ஆதாயம் என்னவாய் இருக்கும் என்று புரிந்து கொள்ளத் தெரியாது. தனது அரசின் கீழ் இருக்கும் ஒரு துறையே கார்ப்பரேட்  தரகர்களுக்கும் தனது கட்சியின் முக்கிய தலைகளுக்குமான பேச்சுவார்த்தைகளை இரசியமாய் பதிவு செய்திருப்பது பற்றித் தெரியாது. அதில் ஊழல் நடத்தப்படும் விதம் குறித்தும் ஆதாயம் அடைந்தது குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்  என்றும் தெரியாது.

இதெல்லாம் ஒன்றும் தெரியாது என்றால் வேறு என்ன எழவு தான் தெரியும்? விசயம் அம்பலமான பின் தெரியாது என்று கூசாமல் புளுகத் தெரியும். அப்படிப் புளுகுவதையும் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டே செய்யத் தெரியும். அறிவாளியாயும் முட்டாளாயும் ஒரே நேரத்தில் நடிக்கத் தெரியும்.

மேற்படித் திறமைகளும் நடுத்தர வர்க்கத்தினரிடையே எடுபடும் ‘படித்தவர்’ எனும் இமேஜும் சேர்த்து தான் அவரை பிரதமர் நாற்காலியில் நீடிக்க விட்டுள்ளது. இன்று தேசத்தின் வளங்களனைத்தையும் கொள்ளையிட்டுப் போகும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகு முதளாளிகளுக்கும் இப்போதைக்கு இப்படி ஒரு அப்பிராணி மூஞ்சி தேவையாக இருக்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் பகல் கொள்ளைகளுக்குப் பயன்படுவார்களென்றால் மோடி போன்ற ஒரு ரத்தக் காட்டேரி ‘திறமையான’ நிர்வாகியாக அவதரிக்க முடியும். மன்மோகன் போன்ற ஒரு காரியவாதக் கல்லூளிமங்கன் ‘நல்லவராகவும், அப்பாவியாகவும்’ வேடம் போட்டுக் கொள்ள முடியும்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: