privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் - அன்னா

y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 12
*இக்கட்டுரை சமூகத்தால் ஆணுக்கென அங்கீகரிக்கப்பட்ட குணங்களுடன் அப்பாலினத்திற்கு சமூகம் அமைத்த கட்டமைப்புக்குள் வாழும் மனிதர்களிற்கு சமூகம் கொடுக்கும் சலுகைகளைப் பற்றியது.

நான் பெண்ணுரிமை பற்றிக் கதைக்கத் தொடங்கினால், இப்போது எல்லாம் பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு, இனியும் எதற்கு இதைப் பற்றியே கத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்ற பதிலைப் பலரிடமிருந்து கேட்டுள்ளேன். இப்பதிவு அவர்களைப் போன்றவர்களை சிறிது சிந்திக்க வைப்பதற்காக…….

எமது சமூகம் ஆண்டாண்டு காலமாக ஆணுக்காகவே உருவாக்கப்பட்டு எல்லோராலும் கட்டிக் காக்கப்பட்டு வருவதால் சமூகத்தில் பல விடயங்களில் ஆண்களுக்கு நிறைய சலுகைகள் உள்ளன. சமூகம், கலாச்சாரம் என்றால் இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்றே காலம், காலமாக எமது சிந்தனைகள் கட்டியமைக்கப்படுவதால் அதுவே இயல்பு நிலையாகி விடுகிறது. ஒரு ஆணின் நிலையை, உணர்வுகளை பெண்களினதையும் விட உயர்வாக வைத்திருப்பது இயல்பானதாகவும், அதுவே இயற்கையான நிலையாகவும் பார்க்கப்படுகின்றது. இவற்றைப் பற்றி யாருக்கும் யோசிக்கவே தோன்றுவதில்லை.

அவ்வாறு ஆணாயிருப்பதால் வரும் எனக்குத்தோன்றிய சில‌ சிறப்புரிமைகளை இங்கே தருகின்றேன். ‍இவற்றில் சில வெளிப்படையானவை. சில பரம்பரை பரம்பரையாக பின்பற்றுபவையாதலால் உணரப்படாதவை.

  • ஆணாகப் பிறந்ததிலிருந்தே சமூகத்திற்கும்/குடும்பத்திற்கும் மிகவும் வேண்டப்பட்டவர் ஆவீர்கள். மிகவும் மதிக்கப்படுவீர்கள்.

உங்கள் அம்மாவின் “மதிப்பு” கூட ஒரு ஆண் பிள்ளைக்குத் தாய் என்ற ஒரு காரணத்தினாலேயே ஒரு படி கூடிவிடும். இங்கு எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் திருமணம்.  மணப்பெண்ணின் அப்பா சில வருடங்களிற்கு முன் இறந்து விட்டார்.அவர்களுக்குப் பெரிதாக இங்கு ஆட்களைத் தெரியாது. அதனால் அவரின் அம்மாவிற்குப் பதிலாக என்னையும் எனது வாழ்க்கைத் துணைவரையும் தெத்தம் பண்ணிக் கொடுக்கக் கேட்டார்கள். கேட்டவர்களில் ஒரு பெண்மணியே சொன்னார், “உங்களுக்கு மகன் இருப்பதால் இன்னும் விஷேசம், அதனால் நீங்களே செய்யுங்கள்” என்று.

எமது குடும்பத்தில் நாம் ஜந்து பெண் பிள்ளைகள். என் பெரியப்பாவே, என் அப்பா போன பிறப்பில் நிறையப் பாவங்கள் செய்ததாலேயே இப்பிறப்பில் நாம் ஜவரும் பெண்களாகப் பிறந்துள்ளோம் என்று சொன்னார்.

என் பெற்றோர் மிகவும் எளிமையானவர்கள். எதற்கும் ஆடம்பரமாக செலவழிக்க மாட்டார்கள். அவர்கள் நாம் பிறக்கு முன்னும் அவ்வாறே வாழ்ந்தவர்கள். ஆனாலும் நாம் பிறந்ததும் சிலர் அவர்களின் எளிமையைப் பார்த்துக் கேட்பது “என்ன, இப்பவே சேமிக்கத் தொடங்கியாச்சுப் போல?” ‍ ஜந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது நான் அடிக்கடி கேட்டு வளர்ந்த‌ பழமொழி. இவற்றைப் போன்ற பல சிறு சிறு அனுபவங்களால் என் சமூகம் சொல்வது, நினைப்பது பிழை என நிரூபிக்கவேண்டும் என்ற இலட்சியம்/வெறி எனக்கு 8‍, 9 வயதிருக்கும் போது முளைவிட்டது, ‍ எனது முதலாவது பெண்ணிய சிந்தனை இதுவேன்றே நினைக்கின்றேன்.

ஆண் பிள்ளை ஒரு சொத்து பெண் பிள்ளை ஒரு பொறுப்பு என்றே இன்னமும் எம்சமூகம் சொல்லிக்கொண்டிருக்குது. இங்கு நியூசிலாந்திலேயே இன்னமும் இந்திய இளம் தம்பதியினர் பெண் குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக கருக் கலைப்பிற்கு வைத்தியர்களிடம் வருகின்றனர். நம்பமுடியவில்லை.

  • வளரும் போது ஆண் பிள்ளைகள் சுதந்திரமாக, தைரியமாக‌ தன்னம்பிக்கையுடன் வளரக் கூடிய சந்தர்ப்பம் கொடுக்கும் சமூகம் பெண் பிள்ளைகளை திருமணத்திற்காக மட்டுமே வளர்க்கிறது. அடக்கவொடுக்கம், பொறுமை, கீழ்ப்படிதல் போன்ற குணங்களே போதிக்கப் பட்டு சிறுவயதிலிருந்தே படிப்புடன் வீட்டுவேலைகள், சமையல் எல்லாவற்றையும் அவளையே செய்யப்பழக்கி விடுகிறது.
  • வளரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் மாற்றங்களால் உங்களின் வாழ்க்கை திடீரென குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே கொண்டு வரப்படாது.
  • ஆண்கள் திருமணமானவராயின், வீட்டில் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் அநேகமாக அவர்களின் மனைவியே செய்து முடிப்பார். குழந்தைகள் பிறப்பின், அக்குழந்தைகளின் அன்றாடத் தேவைகள் அனைத்திற்கும் மனைவியே பொறுப்பெடுத்துக் கொள்வார். மனைவி வீட்டுக்கு வெளியே வேலை செய்கிறாரோ இல்லையோ அதைப் பற்றி எவரும் கணக்கெடுக்கப் போவதில்லை. she has to be a super woman.

பல இடங்களில் ஒரே தகுதியுடன் ஒரே வேலை செய்யினும் ஆண்களுக்கு கூடிய கூலி கிடைக்கும்.

  • திருமணம் ஆண்களை நிர்ணயிப்பதில்லை.

திருமணச் சடங்குகள் எல்லாம் ஒவ்வோரு சமயத்திலும் ஆண்களை ஒரு சுதந்திரமான, மன முதிர்ச்சியடைந்த, சுய சிந்தனை உடைய மனிதப் பிறவியாக அங்கீகரிக்கின்றன. ஆண்களை யாரும் யாருக்கும் தானம் செய்வதில்லை/கொடுப்பதில்லை. அவர்களுக்குத்தான் லட்ச லட்சமாக லஞ்சத்துடன் தாம் பெற்ற பெண்ணை கொஞ்சமும் யோசிக்காமல் தாரை வார்ப்பர். எவ்வளவோ சொல்லிலடங்கா கொடுமைகளுக்கு ஆளான பின்னரும் ஈழத்தில் இந்தமாதிரியான முட்டாள்த்தனமான பண்பாட்டைத்தான் இன்னமும் கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இப்பவும் டாக்டர்மாருக்குத்தான் மிகக் கூடிய விலை. இதன் மூலம் வெறும் புத்தகப் படிப்பு மட்டும் எதையும் மாற்றாது என்பது தெரிகிறது.

திருமணத்திலிருந்து பெண்ணிடம் பெற்றவர் குடும்பத்திற்கு உரிமையில்லை. ஆண்கள் குடும்பப் பரம்பரைப் பெயரையோ தங்கள் பெயரையோ மாற்றி ஒரு புது மனிதனாக உருவெடுக்கத் தேவையில்லை. பழைய காலத்தில் அடிமைகளும் தமது எஜமானின் பெயரைத் தான் last name ஆக‌ வைப்பார்களாம். அவ்வடிமை யாருக்குச் சொந்தம் என்று கண்டு பிடிக்க.

திருமணத்திற்கு  முன்னும் பிறகும் ஆண்களை விளிக்கும் சொல் ‘திரு’ வாகவே இருக்கும். ஏனெனில் 18 வயதிலிருந்தே ஆண்கள் மன முதிர்ச்சியடைந்த, சுய சிந்தனை உடைய மனிதப் பிறவியாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுவிடுவர். பெண்கள் எப்போது திருமணம் முடிக்கிறார்களோ அப்போதுதான் ‘செல்வி’ யிலிருந்து ‘திருமதி’ ஆவார்கள். மனைவி ‘கணவனை’ விளிக்கும் போதும் அவரின் உன்னதத் தன்மையை/ மதிப்பை உணர்ந்து மரியாதையுடனே அவரை அழைப்பார். கணவன் அவளை எப்படி அழைத்தாலும் திட்டினாலும் அவளுக்கு உறைக்காது. அப்படி அவளுக்கு கொஞ்சமேனும் சூடு சுரணை இருந்தால் அவள் வில்லியாக மாற்றப்பட்டிருப்பாள்.

திருமணத்திற்குப் பிறகு பிள்ளைகள் குறுகிய காலத்தில் பிறக்காவிடில் சமூகத்திற்கு ஆண்களின் உடலுறுப்புகளில் கூடப் பிழையிருக்குமென சிந்திக்கவே தோன்றுவது இல்லை.

மனைவி இறந்தால் ஆண்களின் வாழ்க்கை திடீரென்று முடிவிற்கு வராது. அவர்களின் நடத்தைகளில்/உடைகளில் எந்தவித மாற்றமும் தேவையில்லை. அவர்களை மங்களமில்லாதவர்களென எவரும் நினைக்கவோ பேசவோ மாட்டார்கள். எமது அப்பா மிகவும் உடல் நலம் சரியில்லாமல் இருந்த காலத்தில் எதோ ஒரு விழாவிற்கு மங்கள விளக்கு ஏற்ற எமது அம்மாவை அழைத்தார்கள். அம்மா தனக்கு அவ்வாறெல்லாம் செய்ய விருப்பமில்லை என்று சொல்ல, அவர்கள் சொன்னது, “உங்களால் இன்னுமொரு கொஞ்சக்காலத்திற்குத் தான் இவை எல்லாம் செய்யலாம், அதற்குப் பிறகு முடியாது!!!”

ஆண்கள் வாழ்க்கையில் எந்தவொரு நிலையிலும் நீங்கள் மனைவியைச் சார்ந்து நீங்கள் வாழவேண்டிய அவசியமில்லை. மனைவி இருக்கிறாரோ இல்லையோ ஆண், ஆண்தான். கணவன் இல்லாவிடில் பெண் ஒன்றுமில்லை.

கன்னி, விதவை இவற்றிற்கு ஆண்பாற் சொற்கள் என்ன? விதவைக்கு தபுதாரன் எனக் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இது எத்தனை பேருக்குத் தெரியும்?

  • ஆண் ஒரு பெண்ணை பாலியல் வன்புணரின், அநேகமாக அவள் அதை எவரிடமும் சொல்ல மாட்டாள். அப்படியே அவள் புகாரிட முற்பட்டாலும் அவளின் மானம் மட்டுமல்ல, முழுக் குடும்ப மானமுமே போய்விடும் என்று அவளின் குடும்பத்தவர் தடுத்து விடுவர். எனக்கு தெரிந்த‌ குடும்பத்தினரில் ஒருவருக்கு இவ்வாறே நடந்தது. யாருக்கும் வெளியே தெரியாது. அப்படியே தப்பித் தவறி அவள் புகார் கொடுத்தாலும் அந்த ஆணின் குற்றத்திற்கு தண்டனை வழங்குவதற்கு முன், அப்பெண் அந்த ஆணை ஊக்குவிக்க என்ன செய்தாள், அவள் என்ன உடை உடுத்திருந்தாள், அவளின் நடத்தை என்ன, அவள் ஏன் தனியாக‌ வெளிக்கிட்டவள், என அவளையே ஆணின் செயலுக்கு பொறுப்பேற்க வைக்க சமூகம் மிகப் பாடுபடுமென ஆண்கள்  நம்பலாம்.
  • பெண்களை மிகக் கீழான நிலயில் வைத்திருப்பதாலும் அந்நிலைக்கு வருவது கேவலமாகப் பார்க்கப்படுவதாலும், ஆண்கள் கோபத்தில் மற்ற ஆண்களைக் கேவலப்படுத்த அவர்களைத் தூற்றுவதற்கு ‘பொட்டைப் பய’ போன்ற‌வையோடு சேர்த்து பெண்ணின் பாலியல் அங்கங்களைக் குறிக்கும் சொற்களையும் பயன் படுத்துவர். இவற்றைக் கேட்கும் போது பெண்களுக்கே கோபம் வராதளவு அச்செய்கை சமூகத்தில் இயல்பு நிலையாகிவிட்டது. ஆண்களை இவ்வாறு கேவலப்படுத்துவதோடு அவர்களின் அம்மாவையும் விட்டு வைக்கமாட்டார்கள் (உதாரணத்திற்கு, நீயெல்லாம் ஒரு அப்பனுக்கு பிறந்தவனா).
  • பெண் உரிமைகள் பற்றிக் கதையெடுக்கும் போது பலர் “அப்ப நீங்களும் புகையும் குடியுமென அலையப் போறியளோ” என்பர். புகையும் குடியும் நாம் செய்தால் பிழையெனில் அவை ஆண்கள் செய்தாலும் பிழையே.

மேற்சொன்ன பல சலுகைகளைப் பார்த்தீர்களேயானால் பெண்களுக்கு பல அடிப்படை மனித உரிமைகளே இன்னும் கிடைக்கவில்லை என்பது தெளிவாகும். மனித உரிமைகள் எவை என நீங்கள் நினைக்கிறீர்களோ அவையே பெண்களின் உரிமைகளும் ஆகும்.

_________________________________

–          அன்னா

அன்னா, நியூசிலாந்தில் குடும்பத்துடன் வாழ்கிறார்.
அவரது வலைப்பூ முகவரி:
http://annatheanalyst.blogspot.com/

____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள்…

    பெண்ணுரிமை பற்றிக் கதைக்கத் தொடங்கினால், இப்போது எல்லாம் பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு, இனியும் எதற்கு இதைப் பற்றியே கத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்ற பதிலைப் பலரிடமிருந்து கேட்டுள்ளேன். https://www.vinavu.com/2010/03/27/women-anna/trackback/

  2. // மனித உரிமைகள் எவை என நீங்கள் நினைக்கிறீர்களோ அவையே பெண்களின் உரிமைகளும் ஆகும்.// Spot On! நேர்த்தியான இடுகைக்கு நன்றி.

  3. “ஆண்கள் வாழ்க்கையில் எந்தவொரு நிலையிலும் நீங்கள் மனைவியைச் சார்ந்து நீங்கள் வாழவேண்டிய அவசியமில்லை.”
    எல்லார்க்கும் பொருந்தாவிடினும், இது யோசிக்க வேண்டியதுதான். வாழ்த்துகள்- இப்படி எழுத்துகள் வரவைக்கும் வினாவுக்கு.

  4. ஸூப்பர்! நச்சுனு இருக்கு அன்னா! /அப்படி அவளுக்கு கொஞ்சமேனும் சூடு சுரணை இருந்தால் அவள் வில்லியாக மாற்றப்பட்டிருப்பாள்./ மிகவும் உண்மை!

  5. சூடுகின்ற உண்மை என்ன தெரியுமா… இன்னும் நூறு வருஷமானாலும் இதே மாதிரியான ஒரு கட்டுரை எழுதும் சூழ்நிலையே உள்ளது.

  6. யோசித்துப் பார்த்தால்… இங்கு நீங்கள் சொன்னதை விட சொல்லாமல் விட்டது அதிகம் என நினைக்கிறேன்.

    நல்ல பதிவு.

  7. தனக்கு என்ன தேவை என் பெண்களுக்கு பல நேரங்களில் புரிவதில்லை

    பெண் உரிமைகள் பற்றிக் கதையெடுக்கும் போது பலர் “அப்ப நீங்களும் புகையும் குடியுமென அலையப் போறியளோ” என்பர். புகையும் குடியும் நாம் செய்தால் பிழையெனில் அவை ஆண்கள் செய்தாலும் பிழையே

    இது சர்வசாதாரண்மாகக் கிண்டலுடன் கேட்கப்படும் கேள்விகள்…

    அருமையான பதிவு…

  8.  இன்னமும் இந்திய இளம் தம்பதியினர் பெண் குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக கருக் கலைப்பிற்கு வைத்தியர்களிடம் வருகின்றனர். //

    த்தூஊ…….

    //கன்னி, விதவை இவற்றிற்கு ஆண்பாற் சொற்கள் என்ன? விதவைக்கு தபுதாரன் எனக் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இது எத்தனை பேருக்குத் தெரியும்?//

    கண்டிப்பாக இப்பொழுதுதான் தெரியும்….

  9. மற்றொரு சலுகை:
    ஆண், சுயமரியாதையுடன் வாழ்ந்தால் நான்கு பேரிடமாவது “நல்லவன்” என்கிற பெயர் வாங்கி விடுவான்.
    பெண், சுயமரியாதையுடன் வாழ முற்பட்டால் கூட “திமிர் பிடித்தவள்” என்கிற பெயர் வாங்கி விடுவாள் எல்லோரிடமும்.

  10. நல்ல பதிவு. ஆனாலும், ஆண் எந்த வர்க்கத்தில் இருந்து வருகிறான், பெண் எந்த வர்க்கத்தில் வருகிறான் என்பதைப் பொறுத்தது. நீங்கள் சொல்கின்ற ஆணும் பெண்ணும் சமமான வர்க்கத்தில் இருந்தால் அல்லது ஆண் கீழான வர்க்கத்திலும் பெண் மேலான வர்க்கத்திலும் இருந்தால் நீங்கள் சொல்லும் பெண்ணடிமை நூற்றுக்கு 95 சதவீதம் சாத்தியம் என்றால், பெண் மேலான வர்க்கத்தில் இருந்தால் குறைந்தபட்சம் 60 சதவீதமாவது ஆணுக்கு நாயிக்கு கிடைக்கின்ற மரியாதைதான் கிடைக்கும். இது சொல்ல மறந்த கதை அல்ல – ஆண்கள் கவுரத்திற்காகச் சொல்லாமல் போகின்ற (நிறைய) கதைகள் இது போல் உண்டு. எங்கள் குழந்தையை என் மனைவி பத்துமாதம் பெற்றார் என்பதற்காக என் பையனுக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வைக்கும் உரிமைக்காக நான் கடுமையாக போராட வேண்டி வந்தது. என் வயிற்றை அறுத்து நான் பெற்ற குழந்தைக்கு நான் பெயர் வைக்க கூடாதா என்ற் என் மனைவியும், “குழைந்தைக்கு பெயர் வைப்பது பெண்களின் வசதிக்கு விட்டுவிடுங்கள். நான் கூட இதெல்லாம் அவர்கள் வசதிக்கு விட்டு விட்டேன் என்று என் மாமனார் (தன் பெண்ணுக்காக) நியாய வாதம் பேசினார். பெண் வயிற்றில் சுமந்தது உண்மைதான். ஆனால் ஆண் நெஞ்சில் சுமக்கிறான். இது பெருதுளியில் ஒரு சிறு வெள்ளம்தான். அதுவும் ஆண் ஒரு வாய்ப் பூச்சியாக இருந்துவிட்டால் போதும் ஏறி மிதித்து விடுவார்கள். கணவன் சம்பாதிக்கின்ற பணம் , எங்கே தன் மாமனார் தன்னோடு இருந்தால், தான் செலவு செய்ய போதாதே என்று கணவனை அவர் அப்பாவை வீட்டை விட்டு போகச் சொல்லுகின்ற நிறைய பெண்களை நான் பார்த்து இருக்கிறேன்.
    அறிவுடைநம்பி

  11. Proponents of the women’s cause routinely attribute traits of low esteem, self pity, vagrancy, vulnerability and helplessness to women and girls. Champions of the women’s cause have pushed, arm-twisted and bullied the Government into passing many anti-male, anti-family provisions and policies in the name of women’s rights and empowerment. Women’s rights activists have convinced the society that in order to compensate for all the real or perceived disadvantages and sufferings endured by women in the past, present day women should be accorded special treatment in all areas of life, even if it is at the expense of the human rights and welfare of their male counterparts. Thoughtless emphasis on pampering women has not only been hurting men and children, but it is also doing much harm to women themselves, and preventing them from appreciating all the joys of womanhood, motherhood, family life, and harmonious coexistence with men. AIFWA endeavours to:enable young women to discover the beauty of womanhood and the true meaning of empowerment.inculcate self-esteem among young women and encourage them to appreciate true gender equality.help young women understand “Equal Means Equal”.urge young women to reject preferential treatment over men in all areas of life.encourage young women to make use of their strengths and excel in their chosen fields of study or vocation.promote among young women, a healthy attitude towards themselves as well as towards men.promote balanced, self-respecting, hard working women as positive female role models.TEN-India is based on the following principles:Equal does not mean same; Men and women are different but are equally entitled to constitutional rights and human rights.Equality of opportunity does not mean equality of outcome; Men and women must maintain their self-esteem and earn respect and reward by proving their true individual worth.Equality under law is essential irrespective of gender; Men and women should be given equal protection from and equal punishment for any crime.Equal rights beget equal responsibilities; Men and women must not only enjoy equal rights but they must also shoulder equal responsibilities.We would like to promote gender harmony through following The “TEN” Commandments:Doing injustice to men is not equal to Doing justice to women.Oppressing men is not equal to Uplifting women.Harming men is not equal to Protecting women.Disempowering men is not equal to Empowering women.Denying opportunities to men is not equal to Providing opportunities for women.Penalizing men is not equal to Rewarding women.Degrading men is not equal to Honouring women.Undermining men’s lives is not equal to Valuing women’s lives.Neglecting men’s welfare is not equal to Promoting women’s welfare.Violating men’s rights is not equal to Upholding women’s rights.
    http://www.merinews.com/article/true-equity-network-ten—india/15795973.shtml

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க