privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்பெண் புன்னகையின் பின்னே..... - ரதி

பெண் புன்னகையின் பின்னே….. – ரதி

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 5

பெண், எனது பெயர், இனம் மற்றும் இன்ன பிற, இத்யாதிகள் எல்லாமே இது தான். எனக்கு பல கோடி முகங்கள். பல கோடிப் பெயர்கள். எனக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியல்ல. வேதனையே. என் உரிமைகள் பிறப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் பிறகேன் எனக்கென்றோர் தினம். இயற்கையின் படைப்பில், விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின் சாதனையல்ல. பெண்ணாய் பிறப்பது வரமா, சாபமா என்ற விதண்டாவாதங்களை விலக்கிவிட்டு நானும் சாதாரண மனிதப் பிறவியாகவே பார்க்கப்படவேண்டும்.

பெண் என்றால் சிசுக்கொலை, உடன்கட்டையேறுதல், கற்பழிப்பு, துன்புறுத்தல், வன்முறை என்ற வடிவங்களில்தான் நான் நூற்றாண்டுகளாய் எத்தனையோ நாட்டில், எத்தனையோ ஊரில் துன்புறுத்தப்பட்டேன். இன்றும் துன்புறுத்தப்படுகிறேன். என் உடம்பை துன்புறுத்துபவர்கள் உள்ளத்தை சும்மா விடுவார்களா. அதையெல்லாம் பட்டியலிட்டு மாளாது. என் உள்ளச்சுமைகள் என்னை அழுத்தினாலும் இதழ்களில் புன்னகையை கடை விரிக்கத்தவறுவதில்லை. என் வலிகளை எனக்குள் புதைத்து நான் எப்போதுமே புன்னகைக்க வேண்டும். அப்படித்தான் எனக்கு எழுதப்படாத சமூக விதிகள், விழுமியங்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றன.

என் அறிவைப்பற்றியும் நான் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். என் கற்பூர மூளை சட்டென்று பற்றிக்கொண்டால் பெண் என்று ஓரங்கட்டப்படுவேன். அதையே காற்றில் கரைய விட்டால் எல்லா சமூக சம்பிரதாயங்களிலும் உள்வாங்கப்படுவேன். என்ன! எனக்குத்தான் வாயை, அறிவை மூடிவைக்க சிரமப்படவேண்டியுள்ளது. மனிதன் மிருகங்கள் போல் வேட்டையாடி திரிந்த காலங்களில் நான் ஆணுக்கு அடிமை சேவகம் செய்ததில்லை. என் உடற்கூறா அல்லது சமூக கலாச்சார ஏற்பாடுகள், அபத்தங்கள் இவற்றில் எது என் உரிமைகளை மட்டும் காலவெள்ளத்தில் மூழ்கடித்து என் சடலத்தை மட்டும் கரையேற்றியிருக்கிறது?

என் தடைகளையெல்லாம் தாண்டி நூற்றாண்டு காலமாய் மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.

ஆணின் உயிர்க்காற்று நான். அவனுக்காய் நான் மகளாய், தங்கையாய், அக்காவாய், தாயாய், தாரமாய், மற்றும் எல்லா “ய்” களாகவும் ஆண்டாண்டுகாலம் உடனிருக்கிறேன். வறுமைக்கோடு என் வாழ்வில் ஓவியங்களை வரையவில்லை என்றால் என் வாழ்விலும் பெரும்பாலும் சந்தோசங்கள் நிரம்பியிருக்கும். இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியானது “Female Circumcision”. அற்ப விடயத்திற்காய் என் பெண்ணுறுப்பை அறுத்துப்போடும் இழிசெயல். ஏனென்று நான் கேள்வி கேட்டால், இது என்னை, அதாவது பெண்ணை திருமணத்திற்கு தயார்ப்படுத்தலாமாம்.

இது எனக்கிழைக்கப்படும் அநியாயம் என உலக சுகாதார ஸ்தாபனமே கண்டித்தாலும், அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இன்றும் தொடர்கிறது. இது என் அறியா வயதில் உடலுக்கு இழைக்கப்படும் கொடுமை. இந்த கண்டங்களை தாண்டி நான் குமரியானதும் எனக்கு பிரச்சனை என் பருவமும் ஆண்களும்தான். என் அறிவை பருவம் விழுங்கும் ஆபத்து இருக்கிறது என்று அறியாவிட்டால் என் வாழ்வில் அத்தனையும் பாழாய்ப்போகும். அதை சிலர் அக்கறையோடு அறிவுரையாய் சொன்னால் அதை ஓர் ஏளனப் பார்வையில் என் வயது அலட்சியம் செய்யும்.

என் பருவமும் ஹோர்மோன்களும் காந்தமாய் ஆண் என்ற இரும்பை கவர்ந்து அவனோடு காதலாகி, கல்யாணமாகி, கடுப்பாகி அங்கேயும் நான் தான், பெண், அதிகம் காயப்படுகிறேன். ஆனாலும், விதிவிலக்காய் பெண் என்ற காந்தத்தை இரும்புகள் கவர்ந்திழுப்பதும் அதில் காந்தம் தன்னிலை மறப்பதும் பின்னர் கண்ணீர் வடிப்பதும் பெண்ணுக்கே உரிய பேதமைகள். நான் எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், அவஸ்தைப்படுகிறேன். காதலாகட்டும், கல்யாணமாகட்டும் பெண் எப்போதுமே வீட்டுக்கு கட்டுப்படவேண்டும் என்பது ஓர் சமூகவிதி.

காதல், கல்யாணத்தில் நான் படும் காயங்கள், வடுக்கள் என் வீட்டுச் சுவர்களைத் தாண்ட அனுமதிப்பதில்லை. அதனால் என்னோடு என் உணர்வுகளுக்கு என் மனதிலேயே சிதை மூட்டிகொள்ளப் பழகிக்கொண்டேன். காலங்காலமாய் நான் திருமணத்திற்கே தயாற்படுத்தப்படுகிறேன். திருமணம் அபத்தமா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், திருமணம் என் அடிப்படை உரிமைகளை கபளீகரம் செய்தால் அதை அபத்தம் என்று கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

உலக இயங்குவிதிகள், சமூக ஒழுங்குகள் மாற நானும் கல்வியில், தொழிலில், விளையாட்டில் என்று ஒரு சில படிகளைத் தாண்டி முன்னேற முயன்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தடையையும் தாண்டி எனக்காய் விதிக்கப்பட்டிருக்கும் மகள், மனைவி, தாய் என்ற கடமைகளோடு என் வீட்டின் பொருளாதார சுமையையும் கட்டியழுதுகொண்டு பொதிமாடாய் அல்லும் பகலும் அல்லாடுகிறேன். கல்விதான் பெண்களின் விடுதலைக்கு சிறந்தவழி. அந்த கல்வியில் கரை சேர்வதற்குள் காதல், கல்யாணம் என்று கதவை தட்டுகிறது. பெண்ணுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த உணர்வுகள்தான் பின்னர் அதளபாதாளத்திலும் அவளை விழவைக்கின்றன.

விழுந்த பின் எழமுடியாமல் தவிக்கும்போது ஒன்று காலம் கடந்துவிட்டிருக்கும். அல்லது ஓர் ஆணின் அன்புக்காய், அரவணைப்புக்காய் மனம் தேவையற்ற விட்டுக்கொடுப்புகளுக்கு பழகிப்போய் இருக்கும். அந்த பலவீனம் ஆணுக்கு பலமாகிப்போகிறது. பெண்ணே! காதலியாய், மனைவியாய் காதலி, காதலிக்கப்படு அது உன் பிறப்புரிமை. அந்தக் காதலுக்காய் அன்புக்காய் எத்தனை விட்டுக்கொடுப்புகள்! பெண்ணுக்கு பூட்டப்பட்ட விலங்குகள் கண்ணுக்கு தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பதாலேயே என் அடிமைத்தனத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறேன்.

வேலைத்தளத்திலும் ஓடாய்த்தேய்ந்து பின்னர் பெண் தான் வீட்டு வேலையும் கட்டி அழவேண்டும் என்ற Stereo Type சிந்தனைகள் கால காலமாய் சமூகத்தில் புண்ணாய் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நான் செய்யாவிட்டால் அது ஓர் குற்ற உணர்வாக எனக்குள் உருவெடுக்கும்படி என்னை என் வீடும், சமூகமும் என்னை பழக்கியிருக்கிறது. “ஏண்டி, உன் புருஷன் கசங்கின சட்டைய போட்டிட்டிருக்கானே, அதை அயர்ன் செய்து  குடுக்க மாட்டியா” என்று யாராவது ஒருவர் என் பவித்திரமான பதிவிரதத்தை பழிசொல்லக்கூடாதல்லவா. ஏன் ஓர் ஆண் தன் அன்றாட, சொந்த வேலைகளை கவனிக்க ஓர் பெண்ணின் அடிமை சேவகம் தேவைப்படுகிறது?

இதைப்படிப்பவர்கள் யாராவது இல்லை நான் என் மனைவியை அடிமைச்சேவகம் செய்ய ஏவுவதில்லை, என் மனைவிக்கு நான் வீட்டு வேலைகளில் சின்ன, சின்ன உதவிகள் செய்து அவள் புன்னகையை ரசிக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெண் என்ற உழைக்கும் இயந்திரத்தின் வேலைகளை இப்போதெல்லாம் ஓரளவுக்கு இலத்திரனியல் இயந்திரங்கள் பகிர்ந்துகொள்வதால் சிலர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.

வீட்டின் பொருளாதார சுமையை பகிர்ந்துகொள்ள வேலை என்ற பளுவை வேறு சுமந்துகொண்டிருப்பவர்களை அவர்களின் வலிகளை பேசாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஓர் நூறு அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நான் கணவனையும் குழந்தைகளையும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன். உலகப்போர்களுக்குப் பின்னால்தான் நான் வேலைதலங்களுக்கும் பணிகளுக்கும் பழக்கப்படுத்தப்பட்டேன் என்று அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எறும்பாய் ஊர்ந்து என்னில் சிலபேர் இப்போது விண்வெளியை, நிலவைத்தொட்டிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தோசம்.

என் சிந்தனையை அலைக்கழிக்கும் விடயம் என்னவென்றால், இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவுக்குக் கீழே என் பெண் இனம் ஒருவேளை உணவுக்காய் கல்லும், மண்ணும், குப்பையும் சுமந்துகொண்டிருக்கிறதே! அந்த உழைக்கும் பெண்களின் தலைவிதியை யார் மாற்றுவார்கள்? ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப்  பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்? Malls, Restaurants, House keeping (Cleaning), Factories etc. எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. இதே வேலைகளை ஆண்கள் செய்தால் அவர்களுக்கு கூலி கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படவேண்டும். அது ஆணின் உழைப்பல்லவா. கணணி, தொழில் நுட்பம் ஆகட்டும் இல்லை வீட்டு வேலையாகட்டும் ஆணின் உழைப்புக்கு எப்போதுமே மதிப்பும் ஊழியமும் மதிப்பாகவே கொடுக்கப்படவேண்டும் என்பது ஓர் பாரபட்சமான அணுகுமுறை.

ஊடகங்கள் என்னை எதற்கும் குறியீடாகவே பார்க்கும் அவலமும் கொஞ்சமல்ல. வியாபாரப் பொருளுக்கும், போதைக்கும் நான்தான் குறியீடு. தாய்மைக்கும் நான்தான் குறியீடு. Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும். எனக்கு ஒரேயொரு விடயம் மட்டும் புரிவதில்லை. பெண் விளம்பரங்களில் அழகு காட்டாவிட்டால் யாருமே எந்தப்பொருளையுமே தொடமாட்டார்களா?

இதெல்லாம் வெறும் Cliche` என்று பலர் வாதாடினாலும் அல்லது ஒதுக்கினாலும் அதை மீண்டும், மீண்டும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் மீண்டும் அதைப் பேசவேண்டியுள்ளது. அது தவிர, ஓர் பேச்சு வழக்கில் உள்ளது போல், ஆணின் போதைக்கும் பெண்தான் ஊறுகாய். சாமானியனின் போதை, சாமியார்களின் போதை எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள பெண் தான். அவரவர் தகுதிக்கும், தராதரத்திற்கும் ஏற்றாற்போல் பெண் பலியாகிறாள் என்பதற்கு சமூகத்தின் எல்லா நிலைகளிலும், அளவுகளிலும் நிறைந்திருக்கும் அவலங்களே சாட்சி. அதை நான் அதிகம் பேசவேண்டியதில்லை. தாய்மை பற்றி நான் பேசவே வேண்டியதில்லை. அதற்கு எந்தப்பெண்ணும் சன்மானம் கேட்பதில்லை. அது இயற்கை அளித்த வரம். விவாதப்பொருளல்ல.

_______________________________________

இப்போது பொதுவாய் பெண்ணாய் பேசாமல் இந்த பதிவை எழுதியவர் என்கிற ரீதியில் பேசுகிறேன். சமூகத்தில் எல்லா தரங்களிலும் (Level) பெண் உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நீண்ட நாட்களுக்கு முன் பெண்கள் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை படித்ததாய் ஞாபகம். அதில் குறிப்பிட்டிருந்தார்கள் சமூகத்தின் எல்லா தரங்களிலும் பெண்ணுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக. ஆனால், மத்திய, செல்வந்த வர்க்கங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளியே அதிகம் கசிவதில்லை என்று. ஆக, இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள் கூட பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை என்பதைத்தான் அந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது.

இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் நாங்களும் மெளனமாய் அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த மகளிர் தினத்திலாவது இந்த சமூக ஏற்பாடுகள், பெண்ணின் மன அழுத்தங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம், சிந்திப்போம், செயற்படுவோம்.

–       ரதி.

_____________________________________________

ரதி ஈழத்தைச் சேர்ந்தவர். இனவெறிப் போரினால் அகதியாகி இப்போது கனடாவில் வாழ்கிறார். வினவில் “ஈழத்தின் நினைவுகள்” எனும் தொடர் எழுதுகிறார்.

அவரது வலைப்பு – http://lulurathi.blogspot.in/

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. என் உள்ளச்சுமைகள் என்னை அழுத்தினாலும் இதழ்களில் புன்னகையை கடை விரிக்கத்தவறுவதில்லை. என் வலிகளை எனக்குள் புதைத்து நான் எப்போதுமே புன்னகைக்க வேண்டும். அப்படித்தான் எனக்கு எழுதப்படாத சமூக விதிகள், விழுமியங்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றன

     என் கற்பூர மூளை சட்டென்று பற்றிக்கொண்டால் பெண் என்று ஓரங்கட்டப்படுவேன். அதையே காற்றில் கரைய விட்டால் எல்லா சமூக சம்பிரதாயங்களிலும் உள்வாங்கப்படுவேன். என்ன! எனக்குத்தான் வாயை, அறிவை மூடிவைக்க சிரமப்படவேண்டியுள்ளது. 
     நான் எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், 
     என்னோடு என் உணர்வுகளுக்கு என் மனதிலேயே சிதை மூட்டிகொள்ளப் பழகிக்கொண்டேன்

    இதற்குமேல் எதையும் குறிப்பிட முடியவில்லை..ரதி

    ஒருபெண்ணின் காயங்கள் அவளன்றி யாருக்கும் தெரியாது..

    ஆனால் அதிலிருந்து மீண்டுவர அவள் பெரும் முயற்சி எடுக்கவேண்டும்..

    உங்கள் குமுறல் ஒவ்வொரு பெண்ணின் இதயக்குமுறல்…காலகால்மாய் அடக்கிவைக்கப்பட்ட குமுறல்.

    உங்கள் பதிவு மிகவும் மனதை கனக்க வைத்துவிட்டது…

  2. //எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், அவஸ்தைப்படுகிறேன்.// முகத்தில் அறையும் உண்மை. மிகச் சிறந்த, அழுத்தமான இடுகை. தோழமையுடன் பைத்தியக்காரன்

  3.  ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப்  பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்? //
     கபடவேடதாரிகளை அம்பலப்படுத்த இது போதுமே. பெண்கள் விண்ணை தொட்டு விட்டார்கள் என்று கூவி கூவி ஒரு வித மாயை உருவாக்கி விட்டு அதன் பின்னணியில் பெண்களை அடக்கி ஒடுக்கும் ஒரு கும்பல் எங்கள் மத்தியில் உலவிக்கொண்டேதான் இருக்கிறது. இதற்கு நாடுநாடாக பறந்து மாநாடுகள் நடத்தி கைகள் குலுக்கி, மினரல் நீர் போத்தல்களை அரையும் குறையுமாக காலியாக்கி. மாநாடுகளில் உப்புச்சப்பற்ற விடயங்களை பேசி நாங்களும் பெண்ணியம் பேசுகிறோம் என பிதற்றும் சில போலி பெண்ணியவாதிகளை என்ன செய்யலாம்?. 

  4. மகளிர் தினச் சிறப்புக் கட்டுரைகளில் அதிகளவு கழிவிரக்கம் தெரிவது போல உணர்கிறேன்.

    ம்….லேசாக ரமனி சந்திரன் நெடி? (நாங்கெல்லாம் எவ்வளவு பாவம் தெரியுமா….?) – மன்னிக்கவும் தோழர்களே..!

    தீர்வு என்ன? பெண் விடுதலையின் சாத்தியப்பாடுகள் என்ன? இன்றைய சமூக அமைப்பில் அது எவ்வாறு சாத்தியம்? இன்றைக்குள்ள சமூக
    பொருளாதார அமைப்பில் பெண் விடுதலைக்கு தடைகளாய் இருப்பது யார் / என்ன / எது? என்பவைகளை நோக்கிய பார்வைகளை
    இக்கட்டுரைகளில் என்னால் காண முடியவில்லை. ஊடகங்களை அதிகம் சாடியிருப்பதை காண முடிந்தது – ஆனால் அவர்கள் ஏன் அவ்வாறு
    எழுதுகிறார்கள் / காட்சிப்படுத்துகிறார்கள்?

    • கார்க்கி, ஒவ்வொரு கட்டுரையிலும் என்ன பிரச்சினை என்று விவாதித்திருக்கலாம். மற்றபடி கழிவிரக்கம் என்று பொதுமைப்படுத்துவதை ஒரு ‘ஆண்’தான் செய்ய முடியுமோ என்று தோன்றுகிறது. ரமணி சந்திரன் கூட பத்திரிகை படிக்கும் பெண்களின் அங்கீகாரத்தைப் பெற்றவர்தான். கழிவிரக்கத்தைக்கூட ஒரு கதையில் படித்து திருப்தி காணும் நிலையில்பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அது அவலநிலை. முதலில் பெண்களின் நிலையை உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டால்தான் சமூக விடுதலை என்ற அடுத்தபடிக்கு நகர முடியும். இந்த தொடர் அதற்கான ஒரு தொடக்கமே. நமது விருப்பங்களிலிருந்து யதார்த்தத்தை அணுகவோ புரிந்து கொள்ளவோ முடியாது. யதார்த்தத்தை உள்ளது உள்ளபடி புரிந்து கொண்டால்தான் நமது கனவுகளை நனவாக்கும் முயற்சிகளைத் தொடங்க முடியும். வேறு வகையில் சொன்னால் பெண் விடுதலைக்கும், சமூக விடுதலைக்கும் சரியான கொள்கைகளைக்கொண்டிருக்கும் புரட்சிகர அமைப்புகள் கூட அதிக அளவில் பெண்களைத் திரட்டமுடியவில்லையே என்று யோசித்தால் கூட இதைப் புரிந்து கொள்ள முடியும். தனது சராசரியான வாழ்க்கையில் கூட ஒரு அங்கீகாரத்தையோ, நிறைவையோ பெறாமல் அடிமைகளாய் வாழும் பெண்களை முதலில் அந்த நிலை குறித்து உணர்த்துவதே சரியாக இருக்கமுடியும்.

      • கார்க்கி,
        வினவு ஏற்கனவே உங்களுக்கு பதிலளித்திருந்தாலும் என் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இங்கே இந்த பதிவுகளில் எல்லாமே பொதுமைப்படுத்தலாக உள்ளதாக  சிலர் சொல்வது என் காதிலும் விழாமல் இல்லை. இது பெண்கள் பற்றிய controlled or quasi experimental study கிடையாது, முடிவுகளை விவாதிக்க. இதற்குப் பெயர் கழிவிரக்கம் இல்லை, social stigma. சமூக களங்கங்களை, அவலங்களை அனுபவங்களாய் கதைகளாய் சொல்லும் போதுதான் அது அதிகம் அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளளவும் படுகிறது. அவற்றின் மூலம் முதலில் பெண்கள் தங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒத்துக்கொள்ளவேண்டும். அது நடந்தபின்னர் தான் ஓரளவிற்கு தாங்களாகவே தீர்வுகளை பற்றி யோசிப்பார்கள் (இதை நான் என் சொந்த அனுபவத்திலிருந்து தான் சொல்கிறேன்). தீர்வு என்பது பெண்கள் மட்டுமல்ல நான், நீங்கள், ஊடகங்கள், இந்த சமூகம் எல்லோரும் சேர்ந்து சிந்தித்து காணப்படவேண்டியது என்பது என் கருத்து. அது ஓர் இரவில் மாயமாய் மந்திரமாய் நடக்காது கார்க்கி. 
        ஓர் உதாரணத்திற்காய் சொல்கிறேன், இந்தியா இன்று கணனித் துறையில் பல்வேறு தேசங்களால் அறியப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியப் பெண்கள் என்றவுடன் ஏன் ஐஸ்வர்யா ராய் என்பவர் மட்டுமே குறியீடாகிப்போனார்? இன்றும், கனடாவில் week-end செய்தித்தாள்களில் இந்தியாவின் பெண்களின் உரிமைகள் பற்றி அவ்வப்போது வரும் சில பெண்களின் உண்மைக்கதைகள் மூலம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்? 

      • வினவு,

        //மற்றபடி கழிவிரக்கம் என்று பொதுமைப்படுத்துவதை ஒரு ‘ஆண்’தான் செய்ய முடியுமோ என்று தோன்றுகிறது.//
        //யதார்த்தத்தை உள்ளது உள்ளபடி புரிந்து கொண்டால்தான் நமது கனவுகளை நனவாக்கும் முயற்சிகளைத் தொடங்க முடியும்.//
        //தனது சராசரியான வாழ்க்கையில் கூட ஒரு அங்கீகாரத்தையோ, நிறைவையோ பெறாமல் அடிமைகளாய் வாழும் பெண்களை முதலில் அந்த நிலை குறித்து உணர்த்துவதே சரியாக இருக்கமுடியும்.//

        அதீதமான நெகிழ்வுத் தன்மையிலிருந்து நீங்கள் பார்க்கிறீர்களோ.. அல்லது நான் ஒரு கறார் தன்மையோடு அணுகுகிறானோ. எதுவாயினும்,
        எதார்த்தத்திலிருக்கும் பிரச்சினைகளை உள்ளது உள்ளபடி அங்கீகரித்து விட்டு அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்று நீங்கள் சொன்னதை
        நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இது (வினவு தளம் / இணையம்) முழு எதார்த்தமான உலகம் அல்ல – இங்கே இணையத்தை பாவிப்பவர்கள்
        சந்திக்கும் சிக்கல்களும் சமூகத்தில் பொதுவாக பெண்கள் சந்திக்கும் சிக்கல்களும் சாராம்சத்தில் ஒன்றாயிருப்பினும்; இங்கே இருப்பவர்கள்
        “இது பிரச்சினை / இது ஒரு சிக்கல் / இது ஆணாதிக்கம்” என்று இது – இன்னது என்று பிரித்தறியும் அறிவு கொண்டிருப்பார்கள் என்றே
        அனுமானிக்கிறேன். இந்த அனுமானமே ஆணாய் இருப்பதால் தான் வருகிறது என்று நீங்கள் சொல்வீர்களானால் – அப்படி இருக்கவும் கூட
        வாய்ப்பு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை.

        எதார்த்தம் இது என்பது சரி – அடுத்து என்ன என்பது கட்டுரையாளர்கள் முன் நான் வைக்கும் கேள்வி.

        ரமனி சந்திரன் நெடி என்று சொன்னது பற்றி –

        பொதுவாக ரமனி சந்திரன் கதைகளில் நாயகிகள் சந்திக்கும் தொல்லைகளுக்கு நேரடியான காரணமான ஆண் திமிரின் முன் அவள்
        சப்மிஸ்ஸிவாக செல்வது போல கொண்டு செல்வார். இங்கே வந்த கட்டுரைகளில் அந்த சப்மிஸ்ஸிவ் தன்மை இல்லை என்றாலும் கூட
        தீர்வுகள் இல்லாத / தீர்வு நோக்கிய ஒரு ஆய்வு இல்லாத / பொட்டிலடித்தது போல ஒரு தீர்க்கமற்ற எழுத்துக்கள் ஒட்டுமொத்தமாக
        என்ன விதமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?

        “பொட்டிலடித்தது போல ஒரு தீர்க்கமற்ற” – இது கொஞ்சம் கடுமையான தோற்றம் தருவதாக நினைக்கிறேன். ஆனால், “உணர்வது”,
        “தீவிரமாக யோசிப்பது” போன்றவற்றோடு பெண்விடுதலை நிறைவடைந்து என்ற அர்த்தம் தொனிக்கிறதே. ஆனால் மொத்த தீர்வுக்கு அது தான்
        முதல் அடி என்றும் – அதன் பின் நிறைவேற்றப்பட வேண்டியது அதிகம் என்றும் கருதுகிறேன்.

        இவை தான் எனது விமர்சனங்கள் –

        மற்றபடி

        இந்த முயற்சியே ஒரு சிறப்பான முன்னெடுப்பு என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. நான்கு கட்டுரைகளுமே மிகச் சரியான விதத்தில்
        எதார்த்தத்தை எடுத்து வைக்கும் கட்டுரைகள்.

        ரதி,

        //இங்கே இந்த பதிவுகளில் எல்லாமே பொதுமைப்படுத்தலாக உள்ளதாக சிலர் சொல்வது என் காதிலும் விழாமல் இல்லை. இது பெண்கள் பற்றிய controlled or quasi experimental study கிடையாது, முடிவுகளை விவாதிக்க. இதற்குப் பெயர் கழிவிரக்கம் இல்லை, social stigma. சமூக களங்கங்களை, அவலங்களை அனுபவங்களாய் கதைகளாய் சொல்லும் போதுதான் அது அதிகம் அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளளவும் படுகிறது.//

        //அவற்றின் மூலம் முதலில் பெண்கள் தங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒத்துக்கொள்ளவேண்டும். அது நடந்தபின்னர் தான் ஓரளவிற்கு தாங்களாகவே தீர்வுகளை பற்றி யோசிப்பார்கள் (இதை நான் என் சொந்த அனுபவத்திலிருந்து தான் சொல்கிறேன்)//

        மேலே தோழர் வினவிடம் சொன்னதே தான் – இணையம் பாவிக்கும் பெண்களும் கூடவா பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்து
        கொள்ளாத நிலையில் இருப்பார்?

        உழைக்கும் வர்க்கத்துப் பெண்களும் நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் பரவலாக இணையத்தை பாவிக்கும் நிலை இல்லை தானே. மேல் நடுத்தர
        வர்க்கத்துப் பெண்கள் ஆண் மேலாதிக்கம் பற்றி தெரிந்தே இருப்பார்கள் என்று அனுமானிக்கிறேன்.

        எனது கருத்து தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள் – இந்தக் கருத்து வெளிப்படுவதே ‘ஆண்’ தன்மையின் காரணமாகத் தான் என்பதை நீங்கள் (வினவு / ரதி ) விளக்கினால் நிச்சயம் திருத்திக் கொள்கிறேன்.

        தோழமையுடன்

        கார்க்கி

  5. தமிழை ஆங்கில உச்சரிப்பில் எழுத. அம்மா = AMMA. (To type in English, press Ctrl+g)குறிப்பு: வார்த்தையை உள்ளீடு செய்த பின்பு SPACE BAR அழுத்தவும்
    tholar  வினவு ,அம்மா என்பதே பெண்ணை அடிமை படுத்தும் சொல் ,
    எனவே, தோழர் = tholar என மாற்றலாமே !  

    • அம்மா என்பதே பெண்ணை அடிமை படுத்தும் சொல்லா? இல்லை, தன்னிலையில் அது மனிதம் அடிமைப்படவேண்டிய சொல். ஆனால், தனியுடைமையின் அடிமையாகிவிட்ட சமுதாயத்தில், முதல் அடிமையாகிவிட்டவரைக் குறிக்கும் சொல்; தனியுடைமையின் முடிவில், வீழ்ச்சியின் ஒவ்வொரு படியிலும் கூட தன் புனிதத்தை இயற்கை மீட்டெடுத்துக் கொள்ளப்போகும் சொல்.

  6. இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் நாங்களும் மெளனமாய் அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். // ம்
    ஒரு ரப்பர் இருந்தால் இந்த கற்பிதங்களை எல்லாம் மாயமாய் அழித்து விடலாம்.. 

  7. மீண்டும் படிக்க வேண்டும். முதல் வாசிப்பிலேயே வாழ்த்தத் தோன்றுகிறது.

  8. //எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. //
    //படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள் கூட பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை//
    பல பெண்களின் குரலாய் ஒலித்ததற்கு நன்றி.

  9. நல்ல கட்டுரை. முன்னர் பாராட்டிய அனைவரையும் வழிமொழிகிறேன்.
    //Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும்….// பொருளைத் தேவைக்குத் தேர்ந்தெடுப்பதும் இல்லை; அதற்கு மூளையைப் பயன்படுத்துவதும் இல்லை; இல்லாத மூளையைவிட இருக்கும் அவர்களின் ஆண் அடையாளத்தை ஈர்ப்பதே புத்திசாலித்தனம் என்று முதலாளிகள் முடிவுசெய்துவிட்டார்கள் போலும்.
    //எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. // அடிமாட்டு ஊதியத்துக்கு மட்டுமல்ல; செக்குமாடுபோல் கேள்வி கேட்காமல், சங்கம், உரிமை என்றெல்லாம் பேசாமல் வேலை செய்யவேண்டும். இதுதான் இன்றைய முதலாளித்துவ உலகம் மக்களிடம் எதிர்பார்ப்பது. இதற்கு சமுதாயம் பெண்களை தயார்ப்படுத்தி வைத்திருப்பதால் அவர்களுக்குத் தோதாகப் போய்விட்டது. ஒத்த மாட்டுக்கு ரெட்ட வண்டி.

  10. //எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. //

    True, True…….

  11. கை கொடுங்கள் ரதி. அற்புதமான இடுகை. மிக முக்கியமான விஷயங்களை அழுத்தமாகச சொல்லி இருக்கிறீர்கள்.

    //இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவுக்குக் கீழே என் பெண் இனம் ஒருவேளை உணவுக்காய் கல்லும், மண்ணும், குப்பையும் சுமந்துகொண்டிருக்கிறதே! அந்த உழைக்கும் பெண்களின் தலைவிதியை யார் மாற்றுவார்கள்? ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப் பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்?//

    //ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின் சாதனையல்ல. பெண்ணாய் பிறப்பது வரமா, சாபமா என்ற விதண்டாவாதங்களை விலக்கிவிட்டு நானும் சாதாரண மனிதப் பிறவியாகவே பார்க்கப்படவேண்டும்.//உண்மை.

  12. ”இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது”
    இதை மாற்ற என்ன செய்யலாம் சொல் தோழி.

  13. பெண்களின் மீதான அனைத்து சுரண்டலைகளையும் சொல்லிவீட்டீர்கள், பாராட்டுகள்.

    என் நண்பனின் வாழ்வில் நடந்த நிகழ்வை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,

    ///இதைப்படிப்பவர்கள் யாராவது இல்லை நான் என் மனைவியை அடிமைச்சேவகம் செய்ய ஏவுவதில்லை, என் மனைவிக்கு நான் வீட்டு வேலைகளில் சின்ன, சின்ன உதவிகள் செய்து அவள் புன்னகையை ரசிக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெண் என்ற உழைக்கும் இயந்திரத்தின் வேலைகளை இப்போதெல்லாம் ஓரளவுக்கு இலத்திரனியல் இயந்திரங்கள் பகிர்ந்துகொள்வதால் சிலர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்….////

    தோழி என் நண்பன் ஒருவன் முற்போக்கு எண்ணத்தோடு காதல் திருமணம் செய்து கொண்டவன்.ஏற்கனவே நகரத்தில் பேச்சிலராக தனி வீட்டில் இருந்த காரணத்தால் வீட்டு வேலைகள் அனைத்தும் அவனுக்கு அத்துபடி. அவன் வாரத்தின் இறுதி நாட்களில் நண்பர்கள் அவன் வீட்டுக்கு செல்லும் போது எங்களை உபசரிப்பது அவன்தான். வீட்டு வேலைகளில் தன் துணைக்கு இணையாக வேலை செய்வான், இவன் துணி துவைப்பான் அவள் சமையல் செய்வாள், அசைவ உணவு தயார் செய்யவதும் இவனே, எந்த வேலையும் செய்வான். இயல்பாகவே. எந்த சங்கடமின்றி. தன் குழந்தையினைக் குளிக்க வைத்து அவளைப் பாராமரிப்பதும் இவனே, (சிறுகுழந்தை இரண்டு வயதிற்குள் இருக்கும்) இது குறித்து வரும் கிண்டல்களை ரசித்தபடியே ஒதுக்கிவிடுவான்.

    நான்கு வருடங்கள் கழித்து, இரண்டு மாதத்திற்கு முன் அவனின் சொந்த கிராமத்திற்கு சென்ற போது அதிர்ந்தேன். அவன் எந்த வேலையும் செய்வதில்லை, அருகில் இருக்கும் பொருளை எடுக்க கூட அவன் மனைவியை அழைக்கிறான். என் அதிர்ச்சிக்கு காரணம் அவனின் மாற்றம் மட்டுமல்ல, அவன் மனைவியும் மாறியிருப்பதை அறிந்து,

    மன வேதனையோடு அவனை வினவியபோது தான்
    இந்திய சமூகம் பெண்களை மதிப்பவர்களை எப்படி நடத்துகிறது என்பதை அறிந்து கொண்டேன்,
    என் நண்பன் நகரத்தில் பேச்சிலராக இருந்தபோது சமைத்து துவைத்து தன் வேலைகளை செய்து வந்தான். அப்போதெல்லாம் அவனைக் காதலித்த அந்தப்பெண் தான் ஒரு புண்ணியவதி என்று பெருமைபடுவாள். இவனும் பெண் உரிமைப் பற்றி கவிதை, கட்டுரை எழுதிவந்தான், காதல் திருமணத்திற்குப்பின் (சாதி கலப்பு மணம் இது) எப்போதும் போல் வீட்டு வேலைகளை செய்து வந்தவனைக் கொஞ்சமாக அந்தப் பெண் வீட்டார்கள் கிண்டலடிக்க ஆரம்பிக்க இவன் வழக்கம் போல் அதனை ஒதுக்கித் தள்ளி விட்டு வீட்டு வேலைகளை செய்து வந்தான். காதல் திருமணத்திற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை(சாதியைக் காட்டி) தெரிவித்த பெண்ணின் அம்மா அதன் பின் இவன் வீட்டிற்கு வருவதும் தன் மகளை இவனுக்குத் தெரியாமலே தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதுமாய் இருந்திருக்கிறாள். இவனும் பெரிது படுத்தாமல் இருக்க, இருக்க அதுவே அவனுக்குத் தொடர் கதையாக போயிருக்கிறது. காதலித்த போது இருந்த உறதி அந்த பெண்ணிடம் தற்போது காணாமல் போய்விட்டது.( என் நண்பன் ஏழை) வீட்டில் செல்வ செழிப்பாக இருந்த அப்பெண் இவனை தன் தாய்வீட்டிற்கு அழைத்து செல்லும் போதெல்லாம் என் நண்பனுக்கு உணவு தராமல் அவனாகவே சமையலறைக்குச் சென்று சாப்பிடமாறு சொல்ல இவனும் ஓரிரு முறை அதனை செய்ய, அதன் பின்தான் அவர்களை சுயரூபம் தெரிய வருந்திருக்கிறது. இவன் சாப்பிட்ட தட்டைக் கழுவி வைக்கச் சொன்ன மனைவி பின்பு சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி வைக்கச் சொல்ல இவன் மறுக்க இவன் சாதியைச் சொல்லி அவள் ஏச இறுதியில் விவாகரத்தில் முடிந்திருக்கிறது, அவனின் திருமணம்.

    தற்போது அவன் கிராமத்தில் சாரசரி ஆண்மகனாக இருக்கிறான். அவனின் இரண்டாம் மனைவியோ இவனுக்கு அனைத்து வேலைகளையும் ( காலையில் பிரஷ் எடுத்துக் கொடுப்பதிலிருந்து ) மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்கிறாள். நண்பனின் முதல் திருமண முறிவு தந்த அதிர்ச்சியைக் காட்டிலும் அவனின் மாற்றம் என்னை வெகுவாக பாதித்தது. அவனிடம் கேட்க துணிச்சலின்றி விடைபெற்றேன்,
    அடிமையாக வாழத்தலைப்பட்ட சமூகம் அதனையே பிறரிடமும் எதிர்ப்பார்கிறதோ என்ற அச்சம் என் மனதில் ,,,,
    என்ன சொல்லுகிறீர்கள் பதிவர்களே???

    —-புதியவன்——

  14. தேசம் கடந்து வாழ்கின்ற படிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள முயற்சி பயனடைந்தவன் என்ற முறையில் நன்றிகளும் வாழ்த்துக்களும். இன்னும் பல புத்தகங்களை வலை ஏற்ற வேண்டுகிறேன்.

  15. குறியீடாகவே பார்க்கும் அவலமும் கொஞ்சமல்ல. வியாபாரப் பொருளுக்கும், போதைக்கும் நான்தான் குறியீடு. தாய்மைக்கும் நான்தான் குறியீடு. Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும். எனக்கு ஒரேயொரு விடயம் மட்டும் புரிவதில்லை. பெண் விளம்பரங்களில் அழகு காட்டாவிட்டால் யாருமே எந்தப்பொருளையுமே தொடமாட்டார்களா?//
    இங்கே எங்கே பார்த்தாலும்
    இதே நிலைமை தான் ஊடகங்களில் பெண் போக பொருள்
    குமுதத்தில் பெண் குனிந்து கொண்டு போஸ் கொடுப்பாள் …….இங்கே போகமாக பார்க்கபடுவது சுதந்திரம் என்ற போர்வையில் உள்ளது ………..

  16. ரதி அவர்களே,
    எனக்கும் இந்தக் கட்டுரை கார்க்கிக்குத் தோன்றியது போலத் தான் தோன்றியது. குடும்பம் என்கிற அமைப்பு கொடுக்கல் வாங்கல் என்கிற அடிப்படையில் அமைந்தது. பெண் அதில் தியாகங்கள் செய்து தான் அவளுடைய முக்கியமான இடத்தை நிறுவியுள்ளாள். பெண் நினைக்கவில்லை என்றால் குடும்பம் இல்லை. குடும்பத்தில் ஆணின் பங்கு முக்கியத்தன்மை குறைவானது என்பதால் தான் ஆண் குடும்பத்தில் அதிகாரத்தை கைப்பற்றி பெண்களை தனக்குக் கீழே கொண்டு வந்ததன் மூலம் தனக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

    இப்போது பெண் நினைக்கிறாள் இந்தக் குடும்பம் என்கிற சுரண்டல் அமைப்பு எனக்குத் தேவையா ? தேவையில்லை என்பது தான் முற்போக்காளர்கள் என்று கருதப்படுபவர்களின் பதில். ஆண்கள் குடும்பம் என்கிற அமைப்பில் கட்டற்ற அதிகாரங்களை அனுபவித்த காலம் போய்விட்டது. இனி சுயமாக நிற்கும் பெண், தனது குடும்பத்தை தானே பேணிக் கொள்ளக்கூடிய பெண்ணின் முன் இனி ஆணின் தேவை குடும்பத்தில் இல்லை. இது தான் உண்மை. சமூக உறுப்பாக ஆண் தனிமைப் படுத்தப்படும் காலம் இனிமேல் வளரும்.

    முதலாளிகள் சுரண்டலை எளிதுபடுத்த ஆண் பெண்ணுக்கிடையேயான வேறுபாடுகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெண்களுக்கு சரிநிகர் ஊதியம் தரமறுப்பதன் மூலம், குறைந்த கூலியில் வேலையைப் பெறுவதுடன், ஆண்கள் உரிய ஊதியம் வேலை கோரிப் போராடுவதை நிறுத்த அதே வேலையை பெண்ணுக்கு குறைந்த ஊதியத்துக்கு தருவதன் மூலம் ஆண் பெண்ணுக்கிடையே வாழ்வியல் போட்டியை உருவாக்கி குளிர்காய்கிறார்கள். செய்யப்படும் வேலைக்கு ஆண் பெண் பால் வித்தியாசமின்றி ஊதியம் பெறும் நிலை முதலில் ஏற்பட வேண்டும்.

    இந்த விடுதலைக்கான சூழலில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இணக்கமான உறவு நீடித்திருக்கும் வாய்ப்பும் குறைகிறது. பொருளாதார அடித்தளத்தை தானே சுயமாக அமைத்துக் கொள்வதில் உள்ள போட்டியானது எல்லா மனித உறவுகளுக்கிடையேயும், ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயும் கூட வெளிப்படும். அதன் முடிவுகள் சமூகத்தை வேறு திசைக்குப் பயணப்படுத்தும்.

    இன்று அண்டார்டிகாவில் பனி உருகினால் என்ன, கடல் நீர் மட்டம் உயர்ந்தால் எனக்கென்ன என்று வாழும் மனிதர்களாக நாம் உருவாகியிருப்பது பொருளாதாரத்தை மட்டும் நோக்கிய கன்சுயூமரிஸ வாழ்க்கை முறை தான். பெண்ணியத்தையும் இது எங்கோ இழுத்துச் செல்கிறது. அதன் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட நாம் யாரும் அப்போது உயிருடன் இருக்கப்போவதில்லை.

    வரலாற்றில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் இன்றும் படும் துயரங்கள் நிறைய உண்டு. அவற்றைக் களைய ஆண்களும் பெண்களும் சேர்ந்து போராட வேண்டும். மாறாக அது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட போராய் மாறினால் அதன் அழிவுகள் மனித குலத்தையே பாதிக்கும். அம்மா சுரண்டலின் வடிவம் என்றால் இனி சமூகத்தை உருவாக்க அம்மாக்களும் கிடைக்க மாட்டார்கள். சமூகம் சும்மா அப்படியே தானாக உருவாகிவிடுமா என்ன ?

  17. கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒற்றைவரிப் பின்னூட்டங்கள் எழுதுவதினும்விட நிறைய எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்ததால் மறுமொழிய இயலவில்லை. ஆனால் கார்க்கியும், அம்பேதனும் முன்னெடுத்திருக்கிற உரையாடல்கள் முக்கியமானவை. அவை மேலும் பேசப்படுவது நல்லது. இப்பொதைக்கு இதைச் சொல்லத் தோன்றியது, எனவே இப்பின்னூட்டம் (எனது நேரப்படி ராத்திரி இரண்டு மணிக்கு)

  18. நன்பர் அம்பேதன் அவர்கள் ஒரு பின்னவீனத்துவ சிந்தனாவாதியா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். 🙂

    அவரின் கருத்துக்களில் சில அம்சங்களிலிருந்து நான் மாறுபடுகிறேன் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

    //இப்போது பெண் நினைக்கிறாள் இந்தக் குடும்பம் என்கிற சுரண்டல் அமைப்பு எனக்குத் தேவையா ? தேவையில்லை என்பது தான் முற்போக்காளர்கள் என்று கருதப்படுபவர்களின் பதில். ஆண்கள் குடும்பம் என்கிற அமைப்பில் கட்டற்ற அதிகாரங்களை அனுபவித்த காலம் போய்விட்டது. இனி சுயமாக நிற்கும் பெண், தனது குடும்பத்தை தானே பேணிக் கொள்ளக்கூடிய பெண்ணின் முன் இனி ஆணின் தேவை குடும்பத்தில் இல்லை. இது தான் உண்மை. சமூக உறுப்பாக ஆண் தனிமைப் படுத்தப்படும் காலம் இனிமேல் வளரும்.//

    “ஆண்கள் குடும்பம் என்கிற அமைப்பில் கட்டற்ற அதிகாரங்களை அனுபவித்த காலம் போய்விட்டது”

    இல்லை. அந்தக் காலம் அப்படியே தான் நீடிக்கிறது. அது தான் இன்றைக்குச் சமூக எதார்த்தமாக இருக்கிறது. பெண்கள் வேலைக்குப்
    போவதை வைத்தும் சம்பாதிப்பதை வைத்தும் அவர்கள் பொருளாதார விடுதலையும் தற்சார்பும் பெற்றுவிட்டார்கள் என்று கருதுவதற்கில்லை என்பதை
    தினத்தந்தியில் வரும் என்னற்ற செய்திகளிலிருந்தும் நாமே நேரடியாகக் காண்பதன் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.

    லீணா மனிமேகலை விவகாரத்தில் வினவு எழுப்பியிருந்த ஒரு முக்கியமான கேள்வி இங்கே நினைவுகூறத்தக்கது. அனைத்து ஆண்களையும்
    ஆண் பிறப்புறுப்பின் பிம்பமாகக் காண்பதாக சொல்லும் லீணா, ஒரு பெரும் பட்டியலை வைத்திருந்தார் (அதில் போராளியும் பாஸிஸ்ட்டும் ஒன்றாக
    பட்டியலிடப்பட்டிருந்தார்கள்) ஆனால், மிகக் கவனமாக தனது கனவர் பற்றியோ தான் சம்பாதிக்கும் துறையான திறைத்துறையின் ஆண்கள்
    பற்றியோ குறிப்புகள் வருவதை தவிர்த்திருந்தார்.

    சமூக விடுதலைக்குப் போராடும் போராளியையும் பாஸிஸ்ட்டையும் ஒன்றாக வைத்திருந்தது ஒரு அயோக்கியத்தனம் என்பது ஒரு பக்கம்
    வைத்துக் கொண்டாலும் – இது வரையறைக்குட்பட்ட போலி முற்போக்கு / போலி பெண் விடுதலை என்பதை யாராவது மறுக்க முடியுமா? அந்தக் கவிதைகளில் தொனித்த வெட்கம் கெட்ட போலித்தனத்தை எவரும் உணர முடியும்.. இங்கே வெறும் அவயங்களை பட்டியலிடுவதும், பாலியல்
    வேட்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவதும் மட்டுமே பெண்விடுதலையின் உச்சம் என்பது எனது கருத்து இல்லை என்பதை சொல்லி
    விடுகிறேன். நமது கேள்வி – அப்படி அதையே விடுதலைக்கான பென்ச் மார்க்காக சொல்பவர்கள் வசதியாக இந்த காரியவாத விடுபடலை பற்றி பேச மறுத்தார்களே?

    அடுத்து “தியாகம் செய்து தனக்கான….” என்பதைப் பற்றி எனது கருத்து – தியாகம் எனப்படுவது தானே செய்வது; நிர்பந்தத்தின் மூலம் செய்ய
    வைக்கப்படுவதல்ல.

    கட்டுரைகளில் வெளிப்பட்ட யதார்த்தம் மிக மிக உண்மையானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. அதை உள்ளது உள்ளபடி புரிந்து
    கொள்ள வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அடுத்து என்ன என்பதே எனது கேள்வியும், அதை ஒட்டியே
    எனது விமர்சமும்.

    பொதுவாக நீங்கள் ரமனி சந்திரன் / தேவியின் கண்மனி மாத நாவலில் வரும் கதைகளைப் படித்திருப்பீர்கள். இந்தக் கதைகளுக்கு பெரும்பாலும்
    ஒரே பேட்டர்ன் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு நாயகன் – உயரமானவன் – கரடு முரடானவன் – நாயகியிடம் ஆரம்பத்தில்
    எடுத்தெரிந்து பேசுபவன் – நாயகியின் அழகாலோ அல்லது பாந்தமான / அடக்க ஒடுக்கமான ‘நற்குணங்களாலோ’ கவரப்பட்டு அவள்
    மேல் மைய்யல் கொள்வான் – நாயகிக்கு வேறு என்ன வழி.. அவளும் அவன் மேல் காதல் கொண்டேயாக வேண்டும் – அதில் ஒரு சிக்கல் –
    பெரும்பாலும் நாயகனின் குடுப்பத்தாரால் – அதை அந்த நாயகி அணுசரித்துப் போகும் தன் குணத்தின் மூலம் எதிர் கொண்டு, இறுதியில்
    நாயகனோடு இணைவாள்.

    சாம்பிளுக்கு ஒரு கதை –

    இரண்டு மாதங்களுக்கு முன் தேவியின் கண்மனியில் வந்த ஒரு கதை. இரண்டு தோழிகள், அதில் ஒருத்தி பணக்காரி, பருமனானவள்.
    இன்னொருத்தி மேல் நடுத்தர வர்க்கத்து அடக்க ஒடுக்கமான ‘நல்ல’ பெண். அழகு என்பதற்கு ஃபேர் & லவ்லியும், சோனா பெல்ட் விளம்ப்ரமும்
    என்ன அளவுகோல் வைத்திருக்கிறதோ அந்த அளவுகோளுக்குத் தக்க ‘அழகி’. நாயகன் மேல் பணக்கார தோழி காதலாய் இருக்கிறாள். அவனோ அவளை கண்டு கொள்ளாமல் எதேச்சையாய் பார்க்கும் ‘நல்ல’ பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். இதில் அவனது அணுகுமுறை
    கவனிக்கத் தக்கது – அவன் அவளை எடுத்ததும் திடுக்கிடச் செய்கிறான் (என்னை உத்துப் பார்த்து மயக்க நினைக்கிறாயா?) பின் தடாலடியாக
    காதலைத் தெரிவிக்கிறான். நாயகி ஆரம்பத்தில் அவன் மேல் அசூசை கொள்கிறாள் (ஆனால் உள்ளூர அவனை – அவனது முரட்டு சுபாவத்தை –
    இரசிக்கிறாள்) ஆனால் அவன் காதலைச் சொன்ன உடன் அதற்காகவே காத்திருந்தது போல ஒப்புக்கொள்கிறாள்.

    இந்த இடத்தில் ‘நல்ல’ பெண்ணின் மேல் ஒருதலைக் காதல் கொண்டிருந்த பணக்காரத் தோழியின் அண்ணன் நாயகனுக்கு ஒரு மொட்டைக்
    கடுதாசி போட்டு விடுகிறான். இதை நம்பி அவனும் நாயகியோடு பிணக்கு கொள்கிறான் – தண்டிக்கிறான். ( எப்படி…? அவளோடு தாம்பத்தியத்தை தவிர்ப்பதன் மூலம்).. ஒருவழியாக க்ளைமேக்சில் நாயகி தனது புனிதத்தன்மையை நிரூபித்து நாயகனோடு இணைகிறாள்.

    இந்த எலக்கியத்தைப் படைக்க ஊக்கம் கொடுத்தற்காக அந்த பெண் எழுத்தாளர் (அவர் பெயர் அமுதா என்று நினைக்கிறேன்) பின்னட்டையில்
    தனது கணவருக்கும் மாமியாருக்கும் பெற்றோருக்கும் நன்றிகளை வாரியிறைத்திருந்தார்.

    இது ஒரு குரூப் என்றால் இன்னொரு கும்பல் இவர்களுக்கு எதிராக கலக இலக்கியம் படைப்பவர்களாக காணப்படுபவர்கள் வெறும் அவயங்களை பட்டியலிட்டு விட்டு அதையே முற்போக்கு என்று புருடா விடும் கும்பல்.

    முற்போக்கான ஜனநாயக இலக்கியம் என்பதற்கு ஒரு மாபெரும் வெற்றிடம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்கள் தானே?

    இங்கே மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை எழுதிய கட்டுரையாளர்கள் அவ்வாறான இலக்கியத்தைப் படைக்குமளவிற்கு எழுத்து வண்மை
    கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக கதை சொல்லும் திறன் வாய்த்திருக்கிறது. எதார்த்தத்தை மிகச் சரியாகவும் சிறப்பாகவும் விளங்கிக்
    கொண்டிருக்கிறார்கள். இவர்களால் எதார்த்தத்தை விளக்குவது மட்டுமல்லாது அதையும் தாண்டிச் சென்று அதற்கான தீர்வுகளாகக்
    கருதுவதை சிறப்பான இலக்கியமாக வடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இவர்களது எழுத்து எனக்கு ஏற்படுத்துகிறது.

    நிலவும் இற்றுப் போன பழைய சமூக பொருளாதார அமைப்பை நியாயப்படுத்தும் இலக்கியங்கள் ஏற்கனவே வந்து கொண்டிருக்கிறது. அது
    நிலவும் அமைப்பை தனது அடித்தளமாகக் கொண்டிருந்தாலும், அந்த அடித்தளத்தில் வேறு மாற்றங்கள் ஏற்பட்டு விடாமல் மேலிருந்து சிந்தனை
    ரீதியிலான அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது நமது புதிய இலக்கியத்தை ஏற்கனவே செல்வாக்கு செலுத்தும்
    பழைய இலக்கியப் படைப்புகளோடு மோதவிட்டு அதை தோற்கடிப்பது அவசியமானது.

    அச்சு ஊடகங்களில் புதிய வகைப்பட்ட இலக்கியத்தை – மெய்யான பெண் விடுதலையைக் கோரும் இலக்கியப் படைப்பை வெளியிடுமளவுக்கு
    சூழல் இல்லாவிட்டாலும் கூட, இணையத்தில் அதற்கான வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அதனை கட்டுரையளர்கள் பயன்படுத்திக் கொண்டு
    இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்று தாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இந்த மறுமொழியை மிகுந்த தயக்கத்தோடே அனுப்புகிறேன் – இது எவ்வகையிலும் இம்மாதத்தில் தொடர்ந்து கட்டுரைகளை அளிக்கப் போகும்
    பிற படைப்பாளிகளுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தி விடுமோ எனும் அச்சம் இருக்கிறது. பெண்பதிவர்களிடம் கட்டுரைகளைக்
    கோரியிருக்கும் வினவு தோழர்கள் இந்த மறுமொழி அவ்வாறான ஒரு அழுத்தத்தைக் கொடுத்து அவர்களை தயக்கம் கொள்ளச் செய்யும் எனக்
    கருதினால், இதை தடுத்து வைக்க முழு உரிமையும் இருக்கிறது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

    தோழமையுடன்
    கார்க்கி

    •  தோழர்,
      முன்பு ஒருமுறை ஈழத்தின் நினைவுகள் குறித்து ரதி அவர்கள் எழுதும்போது ஏற்பட்ட சூழ்நிலை நிர்ப்பந்தத்தை உருவாக்க வேண்டாமே. முதலில் பெண்கள் எழுதட்டும்,அவர்களின் யதார்த்த வடிவில். 

    • கார்க்கி, நீங்கள் விவாதிப்பதால் பெண் பதிவர்கள் எழுதுவதற்கு அழுத்தம் ஏதும் இருக்காது. எனவே நீங்கள் தாராளமாக விவாதிக்கலாம். அது பலருக்கும் பயனுள்ளதாகத்தான் இருக்கும். நன்றி

  19. பதிவைப் படித்து யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஆரோக்கியமான விவாதத்தை முன்வைத்தவர்களுக்கும் என் நன்றிகள்.

  20. எதார்த்தமான பதிவு.சமீபத்தில் ம.க.இ.க.ஆதரவு பெண் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் பேசச் சென்ற போது அக்கூட்டத்தில் பேசிய அம்பிகா என்ற ஹோமியோபதி மருத்துவர் ‘”இக் கூட்டத்திற்கு வந்த பின்புதான் இவ்வளவு காலம் ஓர் குறுகிய வட்டத்தில் வாழ்ந்து வந்ததை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்'”.இப்படி பெண்கள் குடும்ப வட்டத்தை தாண்டி சமூகப் போராட்டத்தில் ஈடுபடும்போதுதான் பெண்ணடிமைத்தனம் நடைமுறையில் உடைபடும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க