அறிவியல் உலகில் பெண்கள் – அன்னா

10

உழைக்கும் மகளிர்தின சிறப்புப் பதிவு – 5

“The great gain would be freedom of thought. Women, more than men, are bound by tradition and authority. What the father, the brother, the doctor and the minister have said has been received undoubtingly. Until women throw off this reverence for authority they will not develop. When they do this, when they come to the truth through their investigations, when doubt leads them to discover, the truth which they get will be theirs and their minds will work on and on, unfettered.”

“இதனால் வரும் அபாரமான நன்மை சிந்திக்கும் சுதந்திரம். பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அப்பாவாலும் சகோதரனாலும் மருத்துவராலும் போதகர்களாலும் சொல்லப்படும் எல்லாம் ஒரு சந்தேகமும் இன்றி பெண்களால் உள்வாங்கப்படுகிறது. அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது. இதைச் செய்யின் அவர்கள் தமது கண்டுபிடிப்பிகளினூடாக உண்மையை அறிவர். சந்தேகம் அவர்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும். அவர்கள் கண்டுபிடித்தவை அவர்களுடையதாகும். அவர்களின் மனதுகள் தொடர்ந்து ஒரு தடையுமின்றி வேலை செய்துகொண்டிருக்கும்.”

http://en.wikipedia.org/wiki/Maria_Mitchell – Maria Mitchell – first woman member of the American Association for the Advancement of Science and first professor of astronomy at Vassar College (1818-1889)

அறிவியல் உலகில் பெண்கள் - அன்னா

நம்மைச் சுற்றியுள்ள சூழலை, தொலைவிலிருக்கும் நட்சத்திரங்களை, கோள்களை, பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனைகளும் கணிப்புகளும் நாம் மனிதராக இவ்வுலகத்தில் வாழத் தொடங்கியதிலிருந்தே தொடங்கிவிட்டோம். ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இதைச் செய்தனர். ஆனாலும் மற்றைய இடங்களில் எல்லாம் எப்படி பெண்களின் சாதனைகள் மறக்கப்பட்டனவோ இங்கும் அவ்வாறே herstory பலருக்குத் தெரியாது. போன வருடம் Royal Society of London 350 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடியது. உலகின் முதலில் உருவாக்கப்பட்ட அறிவியல் ஸ்தாபனங்களில் ஒன்று. இதில் எத்தனையோ பிர‌ப‌ல‌மான‌ விஞ்ஞானிக‌ள் உறுப்பின‌ராக‌ இருந்தாலும் பெண்க‌ளுக்கு உறுப்பின‌ராகும் அனும‌தி 1945 ஆம் ஆண்டே வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

மேரி கியூரி, அநேக‌மான‌வ‌ர்க‌ளுக்குத் தெரிந்த‌ அறிவிய‌லாள‌ர். க‌திரிய‌க்க‌த்திற்கான‌ ஆய்வுக்காக‌ முத‌லில் அவ‌ர‌து துணைவ‌ரோடு சேர்ந்தும் பின் இரேடிய‌த்தைப் பிரித்தெடுத்த‌த‌ற்காக‌ தனியாக‌வும் நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர். இவ‌ருக்கே முத‌ன் முத‌லில் இரு நோப‌ல் ப‌ரிசுக‌ள் கிடைத்த‌ன‌. அதோடு இன்ற‌ள‌வில் இவ‌ர் ஒருவ‌ரே இரு வேறு அறியிய‌ல் த‌ள‌ங்க‌ளில் (பெள‌தீக‌விய‌ல், இர‌சாய‌ன‌விய‌ல்) நோப‌ல் ப‌ரிசு பெற்றுள்ளார். இவ்வ‌ள‌வு திற‌மைமிக்க‌வ‌ரை அவ‌ர‌து இர‌ண்டாவ‌து ப‌ரிசு பெற்ற‌ ஆண்டு கூட‌ பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான‌ ஸ்தாப‌ன‌ம் அவர் பெண் என்ற ஒரே காரணத்திற்காக உறுப்பின‌ராக‌ இணைக்க‌ ம‌றுத்த‌து.

இவ‌ருக்கும் முந்திய‌ கால‌த்தில் பெண்க‌ளின் மூளைக்கு அறிவிய‌ல் நோக்கில் சிந்திக்க‌ ச‌க்தியே இல்லை என்ப‌தே க‌ணிப்பீடாக‌ இருந்த‌து. பெண்க‌ள் எவ்வ‌ள‌வு திற‌மையான சிந்த‌னையாள‌ர்க‌ளாக‌ இருந்தார்கள் என்பதற்கும் அவர்களின் கணவர்களோடும் சகோதரர்களோடும் இணைந்து எத்தனையோ ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் செய்தார்கள் என்ப‌த‌ற்கும் நிறைய‌ சான்றுக‌ள் இருந்த‌ போதும் அந்நாட்க‌ளில் அவ‌ர்க‌ள் ஆய்வாளர்களின் மனைவிமாராகவும் சகோதரிகளாகவுமே அங்கீகரிக்கப்பட்டார்கள். ஆய்வுகளில் மட்டுமல்ல அறிவியல் எழுத்துகளிலும் அறிவியலை பொது சனத்திற்கும் சிறுவருக்கும் விளக்குவதிலும் அறிவியலைப் பிரபலப்படுத்துவதிலும் அக்காலப் பெண்கள் மிக‌ முக்கிய‌ ப‌ங்காற்றின‌ர்.

அறிவிய‌ல் ச‌மூக‌த்தில் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌தாலோ என்ன‌வோ ப‌ர‌ந்த‌ ச‌மூக‌த்தில் அறிவிய‌லின் ப‌ங்கு, க‌டமைக‌ள் பொறுப்புக‌ள் என்ப‌வ‌ற்றைப் ப‌ற்றி நாம் இப்போ யோசிக்கும‌ள‌வு அன்று அறிவிய‌ல் வ‌ட்ட‌த்திற்குள் இருந்த ஆண்களைவிடப் பெண்க‌ள் யோசித்தார்க‌ள். ம‌னித‌ ச‌முதாய‌த்தில் ம‌ற்றைய‌ வில‌ங்குக‌ளின் உரிமையைப் ப‌ற்றி முத‌லில் சிந்தித்த‌து அன்னா பர்போல்ட் (Anna)  எனும் பெண் விஞ்ஞானியே. அவ‌ரின் ஒக்ஸிச‌னைக் கண்டுபிடித்த மேல‌திகாரி யோச‌ப் பிறீஸ்லி எனும் இர‌சாய‌ன‌விய‌லாள‌ர் சுண்டெலிக‌ளில் ப‌ரிசோத‌னை செய்வார். ஒருமுறை சுண்டெலிகளை ஒரு வெற்றுக் கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்து காற்றை கொஞ்சம் கொஞ்சமாக அப்பாத்திரத்திலிருந்து வெளியேற்றும் போது சுண்டெலிகள் படும் அவஸ்தையைக் கண்ட அன்னா, அன்றிர‌வு சுண்டெலியே எழுதுவது போல் “கலாநிதி பிறீஸ்லிக்கு சுண்டெலியின் வேண்டுகோள்” எனத் தலைப்பிட்டு ஒரு கவிதை எழுதி அந்த எலிகளின் கூட்டில் ஒட்டி விட்டாராம்.

இக்காலத்தில் அறிவியலுக்கு பங்களிப்புச் செய்த என்னைக் கவர்ந்த இன்னொரு பெண்  http://en.wikipedia.org/wiki/Mary_Somerville மேரி சொமவில் (Mary Somerville). 1780 இல் பிறந்தவர். தனுக்குத்தானே கணிதத்தை கற்பித்துக் கொண்டவர். வானியலும் படித்தவர். ஒரு ஓவியரும் கூட. அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில் “ஏதாவதொன்றில் சாதிக்க வேண்டுமென்ற இலட்சியமுள்ளவள். உலகில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டதை விட உயர்ந்த நிலைக்குச் செல்லும் சக்தி பெண்களுக்கு உண்டென நம்புபவள்” என்றுள்ளார்.

மிகவும் திறமையான எழுத்தாளர். இவரின் அறிவியல் தொடர்பான எழுத்துக்களும் மொழிபெயர்ப்புகளும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. பொது மக்களிடையே அறிவியல் புரிதலுக்கும் இவரின் எழுத்துக்கள் மிகவும் உதவின. இவரின் சொந்தப் புத்தகமான “On the Connection of the Physical Sciences (1834), பல அறிவியல் துறைகளுக்குப் பொதுவான அடிப்படைத் தத்துவங்களையும் செய்முறைகளையும் அழகாக விளக்கியது. அது பற்றி ஒரு பெளதீகவியளாலர் இவ்வாறு கூறியிருந்தார், “இப்புத்தகம் பல விஞ்ஞானத்தின் ஆண்களின் மனதில் வேலைசெய்யும் எண்ணங்களை மிகவும் ஒருங்கிணைத்து இலகுவாக வழிகாட்டக்கூடியவாறு கூறியுள்ளதால் அவர்களின் பல கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும்.”

இவரின் எழுத்துக்களால் இவரின் பின்னால் வந்த பல இளம் பெண்களுக்கு ரோல் மொடலாக இருந்தவர். பதிவின் தொடக்கத்தில் கொடுத்த கூற்றைச் சொன்னவரும் இவரைப் பின்பற்றி அறிவியலுக்கு வந்தவரே. தனியே அறிவியலுடன் மட்டும் நின்று விடாமல் பெண்களுக்கு வாக்களிப்பு உரிமை கிடைப்பதற்கும் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் போராடியவர். அக்காலத்தில் விஞ்ஞானத்தின் அரசியாகக் கருதப்பட்ட இவருக்கு, பெண்ணிற்கு ஆய்வு செய்யச் சக்தியில்லை என்ற பொதுவான கருத்தால் அசலான எந்தவித ஆய்வும் செய்ய வாய்ப்புக் கிடைக்கவில்லை. முதலில் மிக நம்பிக்கையுடன் அறிவியல் பாதையில் கால் வைத்தவர், பின் “நான் ஒரு கண்டுபிடிப்பையும் செய்யவில்லை என உணர்கின்றேன். I had no originality. எனக்கு பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தும் நான் ஒரு மேதையல்ல. அதை சொர்க்கத்திலிருந்து என் பாலினத்திற்கு வழங்கவில்லை. உயர்ந்த சக்திகள் வேறொரு இருப்பு நிலையில் (another state of existence) எமக்கு வழங்கப்படுமா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.” என்கிறார். 🙁

இப்படி எத்தனையோ கஷ்டப்பட்டு சாதித்தவர்களின் சாதனைகளின் மேல் நின்று ஆய்வுகளில் ஈடுபடும் இன்றைய பல பெண்களிற்கு நிலைமை குறிப்பிடத்தக்களவு முன்னேறி இருப்பினும், மேரி சொமவில்லின் ஆரம்ப காலக் கூற்றையும் இறுதிக்காலக் கூற்றையும் வாசிக்கும் போது அதன் நிகழ்காலத்திற்கிணையான தன்மையை நினைக்க ஆச்சரியமாகவுள்ளது.

மிக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளியியல் விபரப்படி உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிலேயே கணித/விஞ்ஞானத்துறைகளில் பெண்கள் 20% பதவிகளில் மட்டுமே இருக்கிறார்கள். மேற்சொல்லப்பட்டது போல் அறிவியலின் herstory ஜக் கொஞ்சம் ஆராய்ந்தாலே தெளிவாகத் தெரியும், இது பெண்களுக்கு இயற்கையாகவே அறிவியல் ஞானம் இல்லாததால் அல்ல என்று. ஆனாலும் 2005 ஆம் ஆண்டு பிரபல ஹவேட் பல்கலைக்கழகத்தின் அந்நாள் president, Larry Summers கூட பெண்கள் பல்கலைக் கழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது சமுக்கத்தில் அவர்களுக்கெதிராகக் காட்டப்படும் பாகுபாடல்லாமல், இயற்கையிலேயே பெண்ணுக்கு அறிவியலில் நாட்டமோ திறனோ இல்லாமல் கூட இருக்கலாம் என்றார். அதன் பின்னே இப்பிரச்சனையைப் பற்றி ஓரளவிற்கு பலர் ஆராயத்தொடங்கினார்கள்.

கணித அறிவியல் பரீட்சைகளிலும் செய்முறைகளிலும் முன்னைய காலடட்டத்தில் இருந்த பால் வேறுபாடுகள் இப்போ மிகக் குறைந்துள்ள போதும், அறிவியல்/கணிதவியலில் அடிப்படைப் பட்டங்கள் எடுப்பதில் கூட 2000-ஆம் ஆண்டிலிருந்து ஆண்களை விடப் பெண்கள் கொஞ்சம் கூடுதலாக எண்ணிக்கையில் இருந்தும் அதன் பின் அறிவியல் துறையில் வேலை செய்யத் தயங்குவது ஏன்?

ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கும் பாலியல் பாகுபாடுகள் எத்தனையோ பல்கூட்டமான உளவியல் மாற்றங்களையும் சிக்கலான‌ எதிர் விளைவுகளையும் கொடுக்கக்கூடியதென்று இதுவரைக்கும் செய்யப்பட்ட எத்தனையோ ஆய்வுகள் கூறுகின்றன. சில உதாரணங்களை நான் http://annatheanalyst.blogspot.com/2011/02/blog-post.html இப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்விளைவுகளை எத்தனையோ வடிவத்தில் பார்க்கலாம். ஒரு கணிதப் பரீட்சை அறையில் ஆண்கள் எண்ணிக்கையில் மிகக் கூடுதலாகவும் பெண்கள் மிகக் குறைந்தும் காணப்பட்டால் அந்தப் பரீட்சையில் பெண்கள் ஆண்களைவிட மிகக் குறைவாகவே மதிப்பெண் வாங்குவார்கள். அதேநேரம் இருபாலினரும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பின் மதிப்பெண்களில் குறிப்பிட்டளவு வித்தியாசங்கள் இருக்காது. பரீட்சைத் தாளில் எழுதுபவர் என்ன பாலினம் என்று கேட்டிருப்பது கூட பரீட்சை செய்யும் திறனை குறிப்பிட்டளவு பாதிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன. இதிலிருந்து அடிமனதில் நாம் உணராமலே சமூகத்தின் கருதுகோள்கள் எம்மை எந்தளவிற்குப் பாதிக்கின்றன என அனுமானிக்கலாம்.

http://arts.uwaterloo.ca/~sspencer/spencerlab/articles/2002-Davies-Spencer-Quinn-Gerhardstein.pdf” இன்னொரு ஆய்வில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் சில ஆண்களையும் பெண்களையும் இரு கலப்புக் குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினருக்கு பாலியல் பாகுபாடுகளை முன்னிறுத்தும் விளம்பரங்களைக் (மிகவும் மெலிந்த பெண் diet soda வின் ருசியைச் சொல்வது, ஒரு குறிப்பிட்ட தோல் cream ஆல் தோலில் ஏற்படும் நன்மைகளை ஒரு பெண் சொல்வது போன்றவை)காட்டினர். மற்றைய குழுவிற்கு நடுநிலையான/ இருபாலாரும் கலந்து கொள்ளும் விளம்பரங்களைக் (insurance company/ கையடக்கத் தொலைபேசி பற்றிய விளம்பரங்கள்)காட்டினர். பின் இரு குழுக்களிடமும் எதிர்காலத்தில் வேலை செய்ய ஆர்வமான தொழில் துறைகள் பற்றிக் கேட்ட போது, முதல் குழுவிலிருந்த பெண்களை விட இரண்டாவது குழுவிலிருந்த பெண்கள் கூடுதலாக அறிவியல்/கணிதத்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இந்த மாற்றத்திற்குத் தேவையானதெல்லாம் சில குறிப்பிட்ட stereotypes ஜ மறைத்தது மட்டும் தான். அநேகமான தமிழ்ப் படங்களையும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் நித்தம் பார்க்கும் எம்மவர்களில் இதனால் ஏற்படும் வெளியில் தெரியாத எதிர் விளைவுகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

இந்த stereotype http://thesituationist.wordpress.com/2011/01/03/the-gendered-situation-of-recommendation-letters அறிவியல் துறையைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல பெண்களின் பதவியுயர்வுக்கு மேலதிகாரிகள் எழுதும் கடிதங்களின் மொழிகளையும் வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதையும் கூட‌ பாதிக்கின்றன. இதுமட்டுமல்ல‌, அப்படியே அடிபட்டு மேலே வந்து பெரிய பதவிகளில் இருக்கும் அநேகமான பெண்கள் திருமணமாகாதவர்கள் அல்லது பிள்ளைகள் இல்லாதவர்கள். எல்லாப் பெண்களும் திருமணம் செய்து பிள்ளை பெறத்தான் வேண்டுமென நிச்சயமாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் ஏன் திருமணமான, தாயான பெண்கள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாமலுள்ளது?

இந்த stereotypes இன் விளைவுகள் தனியே அறிவியல் தெரிவையோ பெண்களையோ மட்டும் பாதிப்பவை அல்ல. எந்த ஒடுக்கப்படும் குழுவிற்கும் எதிர் மறையான stereotype க்கும் பொருந்தும். உதாரணத்திற்கு எம் மகனுக்கு மொண்டோசொரி வகுப்பு தேர்ந்தெடுக்கும் போது பல இடங்களுக்கு சென்று வகுப்புகளைப் பார்வையிட்டு பிள்ளைகளை ஊக்குவிக்கும் தரத்தை அவதானிக்கச் சென்ற போது ஒன்று மிகத் தெளிவாகத் தெரிந்தது. நான் சென்ற ஒரு இடத்திலும் ஆண் ஆசிரியர்கள் இல்லாதது. இருபாலினரும் படிப்பித்தால் கூடிய நன்மை தரும் என்ற கருத்துக்கொண்டவள் நான், அத்தோடு மகனுக்கும் ஒரு balanced perspective வரும் என்பது என் கருத்து. விசாரித்துப் பார்த்ததில் ஒரேயொரு இடம் தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் ஆண்கள் மொண்டொசொரி சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் கதைத்த போது, இதே stereotype இன் தாக்கங்களையே பொறிந்து தள்ளினர். இதைப் பற்றி எம்மவர் சிலரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்னது “அப்பிடியே எங்காவது ஆண்கள் மொண்டொசொரி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பதை நிச்சயித்து அனுப்புங்கோ”. I was completely taken back. நம்பவே முடியவில்லை.

எப்படி இப்படியெல்லம் சிந்திக்கத் தோன்றுகிறது? ஏன் எம்மால் மனிதரை எம் வேறுபாடுகளையும் தாண்டி மனிதராக மதிக்க முடிவதில்லை. இந்தப் பாகுபாடுகளை ஒரு சமூகமாக முன்வந்து எப்போது மாற்றுவோம்?

______________________

– அன்னா
______________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

10 மறுமொழிகள்

  1. அறிவியல் உலகில் பெண்கள் – அன்னா -…

    பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது….

  2. எனக்கு பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தும் நான் ஒரு மேதையல்ல. அதை சொர்க்கத்திலிருந்து என் பாலினத்திற்கு வழங்கவில்லை. உயர்ந்த சக்திகள் வேறொரு இருப்பு நிலையில் (another state of existence) எமக்கு வழங்கப்படுமா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.” என்கிறார்.//

    எத்தனை நிஜம்..

    • அது நிஜமல்ல என்று தான் கட்டுரை கூற முயல்கிறது.
      நல்ல பதிவு.

  3. //பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது….//
    பெண்களுக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் மிக, மிக குறைவு, கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் பல பெண்கள் அறிய திறமைகளை தங்களுக்குள் வைத்துக்கொண்டு முடங்கி கிடக்கின்றார்கள்.

    நான் மென் துறையில் பணிபுரிகிறேன், நான் பெங்களூரு வந்த புதிதில் எனக்கு திருமண பேச்சு நடந்த போது, என்னுடன் விடுதியில் தங்கியிருந்த ஒரு அக்கா கூறியது இன்றும் என்னை அவரைப்பற்றி யோசிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.”மோகனா, வேலையில் அமரும் வரை கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளாதே, வேலையில் அமர்ந்து, உனக்கும், உன் வேலைக்கும் ஏற்ற வகையில் வரனைப்பார்த்து கல்யாணம் செய்துகொள்” என்பது தான் அது. என் அம்மா எனக்கு ஒரு வரணைப்பார்த்த போது அவர் அதிகம் படிக்கவில்லை(12வது கூட இல்லை) என்று நிச்சயம் செய்த பின் என்றும் பாராமல்(முன்னர் தெரியவரவில்லை) மறுத்துவிட்டேன், அந்த நபர் மிகவும் அன்பானவர், இன்றும் தொடர்பிலிருப்பவர், எனக்கும் அவரை பிடித்துதானிருந்தது, ஆனாலும் திருமணம் செய்ய ஒப்பவில்லை. எதற்கு கூற வந்தேனென்றால் பெண்கள் சரியான சமயத்தில் “no” சொல்ல பழக வேண்டும், அதன் பின் தன் காலில் நிற்கவும் பழக வேண்டும். நான் கூறிய அந்த அக்கா (HAL)லில் அறிவியல் துறையில் வேலை பார்த்து வந்தார், கணவன் மற்றும் 2 வயது குழந்தையை சென்னையில் விட்டுவிட்டு, வாராவாரம் பயணித்துக்கொண்டிருந்தார், கணவர் சாதாரண வேலையில் இருந்தார், அவர் மனதில் என்னென்ன போராட்டம் இருந்ததோ அவர் அப்படி எனக்கு அறிவுரை கூறினார். மிகவும் நல்லவர், நல்ல அம்மா மற்றும் நல்ல மனைவியும் கூட.

    “பெண் என்ற ஒரே காரணத்திற்காக நான் இழந்தவை ஏராளம். என் மெட்டர்னிட்டி விடுப்பிற்கு பின் நான் இழந்தவை இன்னும் அதிகம்., என்னிடம் சின்ன சின்ன விசயத்திற்கும் உதவிக்கு நின்றவர்கள்(என்னுடன் சேர்ந்த, என்னைப்போன்றே முன் அனுபவமுள்ள)கூட எனக்கு முன்னால் உயர்பதவி அடைந்தார்கள். (மெட்டர்னிட்டி விடுப்பிற்கு பின் என் அறிவு குறைந்துவிட்டதோ என்னவோ) என் பையனுக்கு 1.3வயது, இப்போதும் எனக்கு கொடுக்கப்படவேண்டிய உயர் பதவி கிடைக்கவில்லை, போதைய அனுபவமும், அறிவும், திறமையும் இருந்தும் கூட. இத்தனைக்கும் கைக்குழந்தை வைத்துள்ளேன் என்று எந்த ஒரு ஆதாயமும் எடுத்துக்கொள்ளவில்லை.

    நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் இவை அனைத்தையும் விட பெண் என்பது ஒரு தகுதி குறைபாடே, இருப்பினும் இன்றைய பொருளாதார யுகத்தில் இது வெகுவாக குறைந்து வருகின்றது, பெண்களும் இதற்கென போராட வேண்டும், ஒரு கருத்தாய்வில் பெண்கள் சம்பளத்திற்காகவும், உயர்பதவிக்காகவும் அப்ரைசல் பிராசசில் எதிர்த்து பேசுவது மிகவும் குறைவாம். எனவே பெண்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வதோடு, சரியான இடத்திற்காக போராடவும் வேண்டும்.

  4. சிறப்பான பகிர்வு அன்னா.
    //இந்த மாற்றத்திற்குத் தேவையானதெல்லாம் சில குறிப்பிட்ட stereotypes ஜ மறைத்தது மட்டும் தான். அநேகமான தமிழ்ப் படங்களையும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் நித்தம் பார்க்கும் எம்மவர்களில் இதனால் ஏற்படும் வெளியில் தெரியாத எதிர் விளைவுகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.//
    Well said.

    // எல்லாப் பெண்களும் திருமணம் செய்து பிள்ளை பெறத்தான் வேண்டுமென நிச்சயமாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் ஏன் திருமணமான, தாயான பெண்கள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாமலுள்ளது?// நல்ல கேள்வி அன்னா. பதில் தெரிந்தால் சொல்லுங்கள். 🙂

  5. மோகானாவின் எதார்த்த வாழ்க்கையில் இருந்து கொடுக்கப்பட்ட நிஜமான வருத்தப்பட வைக்கும் உண்மைகள் இந்த சமூகத்தில் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

  6. வாவ்! ரொம்ப நல்ல கட்டுரை அன்னா!
    மேரி கியூரிக்குப் பிறகு அடுத்ததாகத் தெரிந்த பெண் விஞ்ஞானி கல்பனா சாவ்லாதான்…எனக்கு! அறிவியல் வளர்ச்சிக்கு பங்களித்திருக்கும் பெண் விஞ்ஞானிகள் பலரை உங்கள் கட்டுரை அறிமுகப்படுத்தும் அதே நேரம், அவர்கள் பெண்கள் என்பதாலேயே அவர்களது உழைப்பு புறக்கணிக்கப்படுவதும் தெளிவாகப் புரிகிறது. …..ஹ்ம்ம்…:-( பல பெண்கள் கல்லூரிகளில், பெண்களுக்கென்றே, FLM (Family life management) Home Science போல படிப்புகள் உள்ளன. இதுவும் ஒருவகை ஸ்டீரியோடைப் போலவேத் தோன்றும்.

  7. பெண்களின் நிலை குறித்து சிறப்பாகவே அலசி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பெண்களின் நிலை ஏன் இவ்வாறு உள்ளது? அதற்கான காரணிகள் என்ன என்பது குறித்து சற்றே ஆழமான புரிதல் தேவைப்படகிறது.

    பொதுவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இச்சமூக அமைப்பை புரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் முரண்படுவதற்குக் காரணம் இச்சமூகத்தின் சாதி, மத, அரசியல், பண்பாட்டுக் கூறுகளே. இவைகளை வேரருக்காமல் பெண்களின் முன்னேற்றம் என்பது ஒரு சில பெண்களை சுட்டிக் காட்டுவதோடு நின்று விடும்.

    தனிப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் விடுதலையும் சமூக விடுதலையோடு தொடர்புடையது.

    அத்தகைய பாதையில் பயணிக்க வாழ்த்துக்கள்.

    “எல்லாப் பெண்களும் திருமணம் செய்து பிள்ளை பெறத்தான் வேண்டுமென நிச்சயமாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் ஏன் திருமணமான, தாயான பெண்கள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாமலுள்ளது”

    ஏன் ஒரு நிலைக்கு மேல் போகமுடியவில்லை என்பதற்கு விடைதேடுங்கள். அதைவிடுத்து திருமணம் செய்து பிள்ளை பெறத்தான் வேண்டுமா என்பது தவறான சிந்தனைப் போக்கு என்றே நான் கருதுகின்றேன்.

  8. நல்ல பதிவு அன்னா….

    இன்று வரை நானும் என்னை கேட்கும் கேள்வியும் இது தான்……
    ஏன் திருமணமான, தாயான பெண்கள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாமலுள்ளது?…..

    அவர்கள் சிறு வயதில் இருந்தே பிள்ளைகளை வளர்த்தல் மற்றும் கணவனை பார்த்து கொள்வதற்காகவே வளர்க்க படுகிறாள்…….

    இவ்ளோ பெண் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்று இன்று தான் எனக்கு தெரியும்…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க