privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஆருயிர் நண்பன் சாதிக் பாட்சாவிற்கு ஆ.ராசாவின் இரங்கற் கவிதை!

ஆருயிர் நண்பன் சாதிக் பாட்சாவிற்கு ஆ.ராசாவின் இரங்கற் கவிதை!

-

(சிற்சில காரணங்களால், திகார் சிறையிலிருக்கும் ராசா நேரடியாக எழுத இயலாமையால்.. அண்ணனின் இதயக் குமுறலை இங்கே கொட்டித் தீர்க்கிறோம்…)

_______________________________________________________

டியெனத் தாக்கிய
உன் இறப்பின் செய்தியால்,
திகார் சிறையில் – நான்
தின்பதற்காக எடுத்து வைக்கப்பட்ட முட்டைகள்
கருக்கலைந்து போயின.
திரண்டதோர் கண்ணீரோ – உனது
திராவிட இயக்க பங்களிப்பெண்ணி
உருக்குலைந்து போனது!

எனது பெரம்பலூர் பெருங்கனவே!
சாவிலும் என்னை நீ வென்று விட்டாய்..
எனக்கெதிராம் சாட்சிகளை
செத்த பின்பும் கொன்று விட்டாய்…!

செத்ததனால்… கலைஞர் மனதிலும்
நீங்காமல் நின்று விட்டாய்!
நிலைத்திடும் உன் கிரீன் புரமோட்டர்ஸ்,
அண்ணா அறிவாலயத்தின் குட்டிச் சுவரில் பாசமாய்…

நீதிக்கும் நமக்கும் நெடுந்தூரம் – ஆயினும்
சாதிக்கும் வெறியோடு
வெகுதூரம் பறந்த சாதிக்கே!
அசன் அலி போல் ஜொலிப்பாயென நினைத்திருக்க,

வயல் எலிபோல் மருண்டாய்… சுருண்டாய்!
வடக்கிருந்து உயிர் துறந்த
தமிழ் மன்னன் மானம் என்ன? – சி.பி.ஐ.
வழக்கிருந்து உயிர்துறந்த
உன் தமிழ் மானம் விட பெரிதாமோ?!

அதியமான் நெடுநாள் வாழ
அவ்வை தந்தாளாம் நெல்லிக்கனி…
ஸ்பெக்ட்ரம் நட்புக்காக உன் உயிரையே தந்த
நீ தானடா உண்மையான கழகக் கண்மணி!

சுனாமியாய் சி.பி.ஐ. தாக்கியபோது
என் ஆவியை, உன் ஆவியாய்க் காத்து நின்ற பினாமியே…
உனது.. வங்கி லாக்கரின்
தகத்தகாய கொள்கைத் தங்கத்தையும்,
உனது ஏ.டி.எம். சிரிப்பொலியையும்
எப்போது காண்பேன் இனி?

அய்யகோ…! மேவிய என் சொத்துக்கள் அனைத்திலும்
உன் ஆவி துடிக்குதே!
பாவி எனக்கு பழைய நினைவுகள் வந்து தொலைக்குதே!
ஆயினும் நண்பா ஆறுதல் கொள்!
உன் சாவின் மீது சத்தியம்!
‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’ என
நமது மங்காத ‘புகழை’
மறுபடியும் சேர்ப்பேன் வங்கிக் கணக்கில்…
வருந்த வேண்டாம்! நண்பா
ஆகையால் அமைதி கொள்!

ஸ்பெக்ட்ரம் ஊழ்வினை வந்து உறுத்தையில் – இனி வாழ்வது
குற்றம் என உயிர் கொடையீந்த உடன்பிறப்பே,
காற்புள்ளியாய் தொடங்கி
முற்றுப் புள்ளியாய் முடிந்து போன உன் புகழ்
கழக வரலாற்றில் பெரும்புள்ளியாய் பதியப்படும்
திராவிட இயக்கத்தின் தியாகக் குண்டலத்தில்
ஒளிரும் உன் முகம் பார்த்து… குழறும் நாக்கோடு
பெருமிதமாய் பற்றி அழவும் எனக்கு தோளில்லை…
பக்கத்து அறையில் ‘பல்வாவின்’ குறட்டை தொல்லை!

தண்டவாளத்தில் தலைவைத்த தலைவனின்
வண்டவாளங்களுக்காக தலைகொடுத்த குமணனே…
கழக வரலாற்றில் களப்பலி புதிதல்ல…
அன்று அண்ணா நகர் ரமேஷ்.. இன்று நீ…
நாளை?.. அது நானாக கூட இருக்கலாம்…
ஆயினும்,
எடுத்த ஸ்பெக்ட்ரம் முடிக்கும் வரைக்கும்
எந்த தியாகத்திற்கும் தயாராயிருக்கும்
கொள்கை மறவர்களைக் கொண்டதடா நம் கழகக் குடும்பம்,
அதில் முன்ஏர் பிடித்த உன் சாவைப் பார்த்து
கண்ணேறு படுதடா… சாதிக்… கட்சிக்கே!

கவச குண்டலங்களையும்
கழக குண்டலங்களையும்
காப்பாற்றுவதற்காக,
நீ உயிரையே கழட்டிக் கொடுத்த
உசத்தியான கர்ணனடா!

நீ சாகவில்லை சாதிக்!
கலைஞரின் பேனாவில் மையாய்…
ஸ்டாலின் கைப்பேசியில் ரிங் டோனாய்…
அழகிரி உருட்டுக்கட்டையில் உணர்ச்சிக் கொதிப்பாய்…
இந்த ஆ.ராசாவின் அடிமனதில்… ரகசியமாய்
நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் நண்பா!
வாழ்வதற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில்
உனக்கு இடமில்லை என்றாலும்
வரலாற்றில் உனக்கு நிச்சயம் இடமுண்டு!

உடன்பிறப்புகளே… உருக்குலையாமல்
சாதிக்கின் சமாதியின் மேல் சபதமேற்போம்…
“நண்பா உன் தியாகம் வீண் போகாது..
ஆயிரம் ஸ்பெக்ட்ரங்கள் நம்மை அடையக் காத்திருக்கின்றன…

தோழர்களே!
சாதிக்கைப் போல தியாகத்திற்கு தயாராய் இருங்கள்
தேர்தல் கிடக்கட்டும் தியாகிகளே வரிசையில் நில்லுங்கள்
விரைவில்… தலைவர் தேதி குறிப்பார்…!

________________________________________________________

– துரை.சண்முகம்

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011