privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்நான் ஒரு பெண் - ஆலங்கட்டி

நான் ஒரு பெண் – ஆலங்கட்டி

-

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 10

பெண்ணாக என்னை உணரத் தொடங்கிய அந்நாள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளது. பத்து வயது வரை என் வயதையொத்த தம்பியுடனும் அவன் நண்பர்களுடனும் ஊரிலுள்ள கால்வாய், குளங்களிலெல்லாம் மீன் பிடித்தும்,அறுவடை முடிந்த வயற்காட்டில் பந்தயப் புறாக்களைப் பறக்க விட்டும், ஓணத்தையொட்டி ஊர் மைதானத்தில் ஓணப் பந்தாடியும், வீட்டிற்கு ஒரு பொருள் தேவையென்றால் கடைக்கு சளைக்காமல் நூறு முறை ஓடியும் திரிந்த காலத்தில் அவர்களெல்லாம்  ஆண்களென்றும் நான் மட்டும் பெண்ணென்றும் எனக்குத் தெரியாது.

திடீரென்று ஒரு நாள் அம்மா என்னிடம் ‘நீ இன்றைக்கு கடைக்குப் போக வேண்டாம். இனி தம்பி பொருள் வாங்கி வருவான்’ என்று சொன்னார்கள். நான் ஆடிப் போய் விட்டேன். அம்மா பலமுறை அவனைக் கெஞ்சிக் கேட்டால் தான் ஒரு பொருளை வாங்க கடைக்குச் செல்வான். நானென்றால் சொல்வதற்குள் ஒரே ஓட்டமாகப் போய் வாங்கி வருவேன். கடைசியாக முந்தைய நாள் எவ்வளவு வேகமாகப் போய் தீப்பெட்டி வாங்கி வந்தேனென்பதை எல்லாம் சுட்டிக்காட்டினேன். கெஞ்சிப் பார்த்தேன். அம்மா அசைந்து கொடுக்கவேயில்லை. காரணம் நான் இன்னும் குழந்தையில்லையாம். அன்று முதல் நான் ‘பெண்’ ணாம். அப்படி நானன்று பெண்ணானேன். என் ‘பொது வெளி’ (public  sphere) என்பது வெறும் பள்ளிக்கூடமாகச் சுருங்கியது. அம்மா வழி குடும்பத்திலெல்லாம் ஆண் பிள்ளைகளான‌ அவர்களுடனான எனது உறவும் ‘என்ன எப்படி இருக்க. நல்லாப் படிக்கிறியா’ என்பது மாதிரியான கேள்விகளில் ஒதுங்கியது. கிராமமாக  இருந்தாலும் அழிந்து கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ எச்சங்களும், வளர்ந்து கொண்டிருந்த குட்டி முதலாளித்துவ வாழ்க்கை முறையும் காரணமாக எங்கள் குடும்பம் பொதுவாக கிராமங்களிலிருப்பது போல பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து அரட்டையடிப்பது, அடுத்த வீட்டுப்பெண்களுடன் கோயில் குளமென்று சுற்றுவது போன்ற எந்தப் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இது என்னைப் பள்ளிக்கூடமில்லாத விடுமுறை நாட்களில் நான்கு சுவருக்குள் மட்டும் புழங்க வைத்து, என் எல்லைகளை மேலும் சுருக்கியது. நான் பார்த்திருக்க என்னுடனே வளர்ந்த என் தம்பி எந்தவிதக் கட்டுபாடுகளுமில்லாமல் விளயாடச் சென்றான். அவனது நண்பர்களுடன்  மாலை நேரங்களில் அரட்டையடித்தான். இரவு தாமதமாக‌ வந்தாலும் யாரும் அவனைக் கேள்வி கேட்பதில்லை. எனது பள்ளித் தோழியின் வீடு பள்ளிக்குப் போகும் வழியிலிருந்தது. வரும் வழியில் அவள் கூப்பிட்டால் என்பதால் போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். வழக்கத்தை விட வீட்டையடைய ஐந்து நிமிடம் தாமதமானது. அன்று முதல் பள்ளித் தோழிகளின் வீட்டிற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

நான் படித்தது அரசுப் பள்ளிக்கூடத்தில். அங்கு மாணவர்களெல்லாம் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்துவிட்டு தான் படிக்க வருவார்கள். நான் மட்டும் தான் டீச்சர் பொண்ணு. ஆதிக்க சாதியான  நாயர் வேறு. இயல்பிலேயே அவர்களுக்கு என்னுடன் சகஜ‌மாகப் பழகக்  கூச்சமுண்டு. இந்நிலையில் எனது வீட்டிற்கு அவர்கள் வர முடியாது, அவர்கள் வீட்டிற்கும் நான் செல்ல முடியாதென்பதால் எனது தோழிகள் வட்டமும் மூன்று, நான்கெனச் சுருங்கியது. ஆண் நண்பர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஐந்தாம் வகுப்பு வரை கூடவேயிருந்து படித்தவனெல்லாம், ஆறாம் வகுப்பானதும் என்னுடைய முகத்தில் விழிக்கவே மாட்டார்கள். இப்படி எனது உலகம் வீடு பள்ளிக்கூடமெனச் சுருங்கிக் கொண்டிருந்த போது, என் தம்பியின் உலகமோ கராத்தே வகுப்பு, தியேட்டர், கால்ப்பந்து, நகைச்சுவை என விரிந்துகொண்டே  போனது. எனக்கிருந்த ஒரேயொரு பொழுதுபோக்கு அப்பா வாங்கித்தரும் புத்தகங்களும், பத்திரிக்கைகளும்  தான்.

போதாக்குறைக்கு  இப்போதெல்லாம் வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பதில் அம்மா பாரிய வேறுபாடுகளைக் காட்டத் தொடங்கினார். வீட்டைச் சுத்தம் செய்வதும், பாத்திரம் விளக்குவதும் எனது கட்டாயப் பணியாக்கப்பட்டது. ஒரு நாள் உடம்பு முடியாமலிருந்தாலும் என் தட்டு நான் அதைக் கழுவும் வரை மேசை மேல் தீண்டப்படாமல்  கிடக்கும். ஆனால் தம்பியோ ஆண்பிள்ளை. எச்சிலைத் தொடக் கூடாது. துடைப்பத்தை எடுத்தால் அவனுக்கு மீசை முளைக்காதாம். எனவே வந்து சாப்பிடுவான். கீழே விழும் எச்சிலைக் கூட பெறுக்கிப் போட மாட்டான். தட்டை நானோ அம்மாவோ தான் கழுவுவோம். நாள்தோறும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை. எனது எதிர்ப்பும் கோப‌மும் வார்த்தைகளாக வெடித்தது. அந்த நாட்கள் என் வாழ்கையின் மிகவும் மோசமான நாட்கள். வீட்டில் அப்பா மட்டும் எனக்காகப் பேசுவார். ஆனால் அம்மா மட்டும் எனக்கு எதிரியானார். தம்பி பல நேரங்களில் இதனைப் புரிந்து கொண்டு நடந்தாலும் அவனிடம் முளைவிட்டிருந்த  ஆணாதிக்கம் எனக்கெதிராகவே இருந்தது. அவனை ஒரு சின்ன எறும்பு கடித்தாலும் நான் பொறுப்பேற்க வேண்டியதாயிற்று.

ஒரு நாள் இப்படிப்பட்டதொரு நிகழ்விற்கு அம்மா என்னைப்  பொறுப்பாக்கி ஒரு விறகுக்கட்டையை என் மீது வீசி, என்னைத் திட்டிக் கொண்டேயிருந்தார். அடியின் வலியை விட அவர்களின் குற்றச்சாட்டால் நான் மேலும் உடைந்து அழுதேன். பார்த்துக் கொண்டிருந்த அப்பாவால் தாங்க முடியவில்லை. அவர் என்னை அழைத்து கையில் சிக்கிய‌ சில்லறையைக்  கொடுத்து ‘நீ எங்காவது கடலில் விழுந்து செத்திடு. பொண்ணா பொறந்ததால தானே இப்படிப் பண்றா. இனி நீ வீட்டுக்கு வர வேண்டாம்’ என்று அழுதுகொண்டே சொன்னார். நான் தயங்கி நின்றேன். அவர்களுக்கிடையேயான  சண்டை மேலும் வலுத்தது. நான் அங்கு மேலும் நின்ற கொண்டிருந்தால் சண்டை அதிகமாகுமென்று நினைத்து வெளியே சென்றேன். சிறிது நேரத்தில் என் தம்பி பின்னால் ஓடி வந்து “எங்க போற? நானும் உன் கூட வர்றேன்” என்றான்.’அப்பா கொல்லங்கோட்டு கடலில் விழுந்து சாகச் சொன்னார். கொல்லங்கோடு  எங்கிருக்கென்று   தெரியாது’ என்றேன். எங்களுக்குத் தெரிந்த ஒரே வீடு அப்பாவைப் பெற்ற‌ பாட்டி வீடுதான். அவன் அங்கு செல்லலாம்  என்றான். இரண்டு பஸ் ஏறி பாட்டி வீட்டிற்கு முன் கையில் ஒரு ரூபாயுடன் இறங்கும்போது நேரம் இருட்டி விட்டது.

பாட்டி விஷயம் தெரியாமல் எங்களைத் தனியாக அனுப்பிய அப்பாவைத்  திட்டிக் கொண்டேயிருந்தார். வீட்டில் சித்தப்பாவும் இல்லாததால் பாட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்பொழுது போல் தகவல் சொல்ல போன் இல்லாத காலம் அது. இரவு அண்ணனும் (பெரியம்மா பையன்) அவன் நண்பனும்  பைக்கில் வந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் ஒன்றும் பேசவேயில்லை. வீட்டிற்குப் போகும் முன்னரே சாலையெங்கும்  ஆட்கள். நிறைய வாகனங்கள் இருமருங்கிலும். ஊர் மக்களும் உறவினர்களும் வீட்டில் குழுமியிருந்தனர். உள்ளே அம்மாவும் உறவினர்களும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அப்பா வாசலில் நின்றபடி தலையில் கைவைத்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அம்மா ஓடி வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். ‘அப்போ அம்மாவுக்கு என்னைப் பிடிக்கும். அவர்களுக்கு நான் வேண்டும்’ என்ற உண்மையே என் கண்ணிலிருந்து மலைமலையாகக் கண்ணீரை வரவழைத்தது. பிறகு தான் தெரிந்து கொண்டேன், நாங்கள் போனவுடன் அம்மாவும் அப்பாவும் சமாதானமாகி எங்களை உறவினர்களின் வீடுகளிலெல்லாம் தேடியும் எங்கும் காணாததால் ஊரிலுள்ள  கிணறு குளமெல்லாம் தேடியுள்ளனர்.

இச்சம்பவம்  நடக்கும் போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். செய்தி பள்ளிக்கூடத்திற்கும் பரவியது. என் அம்மாவும் அங்கே ஆசிரியராக‌ இருந்ததால் நடந்ததை சக ஆசிரியையிடம் சொல்லிருப்பார்  போலும். எனது வகுப்பாசிரியை  என்னிடம் ‘நீ வீட்டில் சண்டை போடுகிறாயாம். அம்மா பேச்சைக் கேட்காமலிருக்கும் அளவுக்கு  உனக்கு என்ன பிரச்சனை’ என்றார். நான் வரிசையாக அடுக்க ஆரம்பித்தேன். ‘அவனுக்கு சைக்கிள்  வாங்கிக் கொடுத்தாங்க. எனக்கு சைக்கிள் ஓட்டவே கத்து தரல.  எனக்கு நீச்சல் சொல்லித் தரல. குளத்துல குளிக்கவும் விடறதில்ல. ஆனா அவன் மட்டும் தினமும் ஒரு மணி நேரம் குளத்தின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நண்பர்களுடன் நீச்சல் போட்டி நடத்துகிறான். அவன் கேட்டான் என்பதாலே நூறு ரூபாய்க்கு கலர் மீனும், தொட்டியும் அதில் வைக்க மோட்டாரும் வாங்கிக் கொடுக்கின்றனர். நான் என்னவெல்லாம் கேட்டுருக்கேன், வாங்கித் தந்தாங்களா?. ஏன் அவன் சும்மா இருக்கும்போது என்னை மட்டும் வீட்டு வேலை செய்ய வைக்கிறார். அவன் தின்ற பாத்திரத்தைக் கூட என்னைக் கழுவச் சொல்றாங்களே!’ என அடுக்கிக்கொண்டே போனேன். டீச்சர் சொன்னார் ‘அவன் ஆண்பிள்ளை. நீ தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போக‌ணும்ய. வீட்டுக்கு வந்தபோது மீண்டும் ஆரம்பித்தது குற்றச்சாட்டு. இப்போது எனக்கு தம்பி மேல் பொறாமை என்று சித்தரிக்கப்பட்டது. இன்றைய‌ எனது முப்பது வயதிலும் கூட அம்மா அச்சம்பவத்தைச் சுட்டிக்காட்டி குறைபடுவதுண்டு, அதற்குப் பின்னால் இருந்த வலியை உணராமலேயே.

வளர்ந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் போதெல்லாம் எனக்கும் அம்மாவுக்குமிடையே கடக்க முடியாத இடைவெளி உருவாகியிருந்தது. தம்பி அம்மா பக்கமும், அப்பா என் பக்கமுமாக வீடே இரண்டு பட்டது. அப்பா அம்மாவையும் என்னையும் சமாளிக்க முடியாமல் திணறினார். பிளஸ் டூ வில்  மதிப்பெண்கள் மிகக் குறைவாகவே  வந்தது. அந்நேரம் அப்பாவைத் தவிர பிற ஆண்களிடம் இனம்புரியாத வெறுப்பு ஏற்பட்டிருந்தது. நான் வீட்டிலிருந்தால் பிரச்சினை மேலும் பெரிதாகும் என்றெண்ணிய  அப்பா என்னை விடுதியுள்ள பெண்கள் கல்லூரியில் சேர்த்தார். எனக்கு ஒரு இடைவேளை  கிடைத்தது. எனக்கு மனம் விட்டுப் பேச தோழிகளிருந்தனர்.நூலகத்திலுள்ள எல்லா நாவல்களையும்  படித்தேன். அப்பா எனக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி இருந்தது, நூற்களை  தேர்வு செய்ய வெகுவாகக் கைகொடுத்தது. கராத்தே கற்றுக் கொண்டேன். என் தோழிகளுடன் குடும்பரீதியான நட்பைப் பேண ஆரம்பித்தேன். இங்கு என்னைக் கட்டுப்படுத்த நான் மட்டுமே இருந்தது என் சமூகரீதியான வளர்ச்சியை மேலும் ஊக்குவித்தது.

முதுகலைக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்தேன். அங்கும் விடுதி. பல ஆண் நண்பர்களும் இருந்தனர். பள்ளி நாட்களில் என் பின்னே நடந்து வந்து, கிண்டலடித்து, கேலி பேசி ஆதிக்கம் செலுத்திய ஆண்களைப் போல இல்லாமல் இவர்கள் என்ன மரியாதையாக நடத்தினர் என்பதே ஆண்கள் மீதான என் வெறுப்பை மாற்றியது.

இக்காலகட்டங்களில் என் தோழிகள் என் வீட்டுக்கு  வந்து போயினர். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எங்கள் சாதி தவிர்த்த அனைவருக்கும் எங்கள் உறவினர் வீடுகளிலெல்லாம் வாழையிலையில்  தான் உணவு பரிமாறுவார்கள். என் அம்மாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இதை அவர் என் தோழிகளிடமும் கடைபிடிப்பார். இதனால் பள்ளி நாட்களிலிருந்தே அம்மா வீட்டிலிருந்தால்  தோழிகளை வீட்டிற்கு அழைத்து வர மாட்டேன். கல்லூரிக் காலத்திலும் வாழையிலைக் கதை தொடர்ந்தபோது நான் அவர்களுக்கு அம்மா முன்னிலையிலேயே  பாத்திரத்தில் பரிமாறினேன். அம்மா பாத்திரங்களை அடுப்பில் போட்டு சுட்டார். மீண்டும் வீட்டுக்கு செல்லும் நாட்களெல்லாம் சண்டை. ஒரு முறை எம்.எஸ்.சி தோழிகள் வீட்டில் இரண்டு நாள் தங்கிச் சென்றனர். இம்முறை அப்பாவின் முயற்சியால் தட்டில் சோறு பரிமாறப்பட்டது. பிரச்சினைகள் தீர்ந்தது எனச் சந்தோஷப்பட்டிருந்த நேரம் ‘அவர்கள் என்ன சாதி’ என்று அம்மா என்னை விசாரித்தார். கோபத்தில் எனக்குக் கண் மண் தெரியவில்லை. ‘நான் ஒரு தலித்தைத் தான் கல்யாணம் செய்வேன். உங்க கையாலேயே அவருக்கு தட்டில் சோறு போட  வைப்பேன் அம்மா’ என்று அப்பாவின் தலையிலடித்து ஆணையிட்டேன். வீட்டில் பயங்கர ரகளை. அது வரைக்கும் எல்லாவற்றுக்கும் எனக்காக வாதாடும் அப்பா கூட ஆடிப் போய் விட்டார். அம்மாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இது நடந்தது இரவு. காலை நான்கு மணி வரை தொடர்ந்த சண்டையால் நான் விடியற்காலையிலேயே பல்கலைக்கழகத்துக்குக் கிளம்பினேன். போகும் வழியெல்லாம் அம்மாவின் நிலப்பிரபுத்துவ பின்னணியும், அதனால் தான் அவர்கள் அப்படி நடக்கிறார்கள் என்றும் புரியவைக்க முயற்சி செய்தார் அப்பா. நான் சிறிதும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

நாட்கள் வேகமாகச் சென்றது. அம்மாவும் அப்பாவும் நடந்ததை மறந்து என்னுடன் சகஜ‌மாயினர். இதற்கிடையே தோழர் ரகுபதியை ஓர் ஆர்ப்பாட்டத்தினூடே சந்தித்தேன். எங்களுக்கிடையே  கொள்கைரீதியான  நட்பு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர் பேச்சிலிருந்தும் எனக்குப் படிக்கக் கொடுத்த புத்தகங்களிலிருந்தும் அவர் ஒடுக்கப்பட்ட ஏதோ ஒரு சாதியைச் சேர்ந்தவரென்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் நான் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. எம்.எஸ்.சி  முடித்து ஊருக்குப் போகும்போது, திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.
நான் சரியென்றேன். என்னுடைய வீட்டில் சொல்லிப் போராடி ரப்பர் பாண்ட் மாதிரி இழுக்க எனக்கு விருப்பமில்லையென்றேன். மறுநாளே அவர் அண்ணன் வீட்டில் வைத்து பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தன்று காலையில் அவரது அண்ணன் அவரிடம் ‘நாம என்ன சாதின்னு அவளுக்குத் தெரியுமா’ என்றார். அவர் தெரியாதென்றதும், அவரிடமே சொல்லச் சொன்னார் அண்ணன்.’நான் இந்து பறையர் சாதி. உனக்கொன்றும் பிரச்சனையில்லையேய என்றார். ‘இதில் எனக்கென்ன பிரச்சனையிருக்கிறதுய என்றேன். தாலியில்லாமல், மாலையில்லாமல், அய்யர்  இல்லாமல் என‌து திருமணம் நடந்தது.

வீட்டில் அதுவரை நான் இப்படியெல்லாம் இருப்பேனென்று தெரியாததால், முதலில் அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியடைந்தனர். முதலில் சுதாரித்தது அம்மாதான் என்று அப்பா பிறிதொரு முறை சொன்னார். தம்பியிடமும் அவர்களே பேசி, அடுத்த வாரத்திலேயே எங்களை நேரில் சந்தித்து வீட்டிற்கு அழைத்தனர். நெஞ்சில் வலியிருந்தாலும் கம்யூனிஸ்ட் என்பதாலேயே அவரை ஏற்றுக்கொண்டனர். திருமணம் முடியும் போது எங்களிருவருக்கும் வேலையில்லை. அவர் SFI ல்  முழுநேரமாக  இருந்தார். இருவருக்கும் வெறும் பிஜி  மட்டுமே இருந்தது. என் பெற்றோர் எனக்காகச் சேர்த்துவைத்த நகையையும் பணத்தையும்  கொடுத்து ‘மேலும் படியுங்கள். நீங்கள் இன்னும் வளர்ந்தால் தான்  உங்களை சமூகம் மதிக்கும்’ என்றனர். என் அப்பா கூடுதலாக  ‘நீ சமூக மாற்றத்திற்கு ஒரு முன்னுதாரணமாக  இருக்க வேண்டும். அதுக்கு உன் கல்வி மட்டும்தான் முதலீடு’ என்றார்.

நாங்களிருவரும் ஆராய்ச்சிக்குச் சேர்ந்தோம். அப்பா அம்மா செலவு செய்தனர். அவரின் குணத்தைப் பார்த்து அம்மாவும், என் உறவினர்களுமே அசந்து விட்டனர். நாங்கள் பார்த்திருந்தால் இப்படியொரு மாப்பிள்ளை கிடைத்திருக்காது என்று அடிக்கடி சொல்வார்கள். அவர் எல்லா வீட்டு வேலைகளையும் தயக்கமின்றி செய்வார். சமைப்பார். வீட்டை சுத்தம் செய்வார். எங்கள் எட்டு ஆண்டு திருமண வாழ்க்கையில் நான் அவரிடம் ஒரு துளியளவு கூட ஆணாதிக்கத்தை உணர்ந்ததில்லை. குழந்தையைக் கூட நான் ஆய்வேட்டை சமர்ப்பித்த பின்னரே பெற்றுக் கொண்டோம். ஊரிலுள்ள பெண்களெல்லாம் தன் கணவரைத் திட்ட அவரை உதாரண‌மாக்கிய போது, ஆண்களெல்லாம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தனர் – வீட்டு வேலையெல்லாம் ஒரு ஆணைக் கொண்டு செய்விப்பதற்காக. எங்கள் திருமணத்தின் காரணமாக SFI இல் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். எங்கள் பொது வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட அது மேலும் உரம் சேர்த்தது. காலப்போக்கில் அவர் சிறந்த சமூக ஆய்வாளரானார். நானும்  இயற்பியலில்  முனைவர் பட்டத்தை முடித்து, முதுமுனைவர் ஆய்வுக்காக ஒரு ஆண்டாக மீண்டும் விடுதியில் தங்கியுள்ளேன். மகள் அம்மாவுடன் ஊரில் இருக்கிறாள். அவருக்கு அரசுக் கல்லூரியில் கடந்த‌ மாதம் வேலை கிடைத்தது. யாரிடமாவது மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொள்ளலாமென்றால் உடனே கேள்விகளால் என்னைத் துளைத்தெடுக்கின்றனர். ‘நீ எப்போ அவர் கூட வாழப் போற. பெண்ணைக் கூட்டிட்டு வந்து ஒண்ணா இருக்கறத விட்டுட்டு நீ ஏன் படிக்கறேன்னு  இங்கே இருக்க’ என்பது போன்ற கேள்விகளினூடே  நான் குடும்பம் என்ற அமைப்பையே உடைத்தது போல‌ அங்கலாய்க்கின்றனர். கணவ‌ரோ ‘உனக்கு மூன்று வருட முதுமுனைவர் ஆய்வு மூப்பிருந்தால் தான் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்ய என்கிறார். அம்மாவோ ‘நீ எதுனாலும் படி. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார்.

இப்பொழுது எனது போராட்டக்களம் குடும்பத்திலிருந்து பொதுவெளிக்கு வந்துள்ளது. வட மாநிலங்களில் இரயில் பயணங்களின் போதும், இயற்கைச் சுற்றுலாத் தலங்களில் மலையேறப் போகும் போதும், விடுதியில் கடைநிலை ஊழியர்களை ஒடுக்கும் நிர்வாகியிட‌மும், பேருந்துகளில் பின்னாலிருந்து நோண்டும் மனநோயளிகளிடமும் எனப் பொதுவெளியை மற்ற எவரையும் போல் பயன்படுத்த எமக்கிருக்கும் உரிமைக்காகப் போராடுகிறேன். ஒவ்வொரு போராட்டமும் என்னை மீண்டும் மீண்டும் பெண்ணாக உணர வைக்கிறது.

_________________________________________________

ஆலங்கட்டி
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010