privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்தலாக் - ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !

தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !

-

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 11

இசுலாமியப் பெண்களைப் பற்றி எங்கு விவாதம் நடந்தாலும் “புர்கா”வும் தலாக் என்பதும் முதன்மையான தலைப்பாக அமைந்துவிடுகிறது. மற்ற பிரச்சினைகளெல்லாம் பிற மத பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து, இவ்விரண்டிலும் மட்டும் இசுலாமியப் பெண்கள் தனித்து எதிர் கொள்வதால்  இவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது, அது தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. உயர் கல்வியும் வேலைக்குச் செல்வதும் பிரச்சனையான ஒன்றாக இருந்தாலும் இப்பொழுது அது வெகுவாக உடைக்கப்பட்டுவிட்டது.

புர்கா, தலாக் குறித்த பிரச்சனைகளில் 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலையே தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்பி சமூகத்தை பார்ப்போமானால் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். காலத்திற்கு ஏற்ப மாறிவரும் இவர்களிடம் இது குறித்தான சரியத் சட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இன்னும் நாம் அதில் செய்யவேண்டியதைப் பற்றி பேசினால் உடனே அவர்களிடம் வரட்டுத்தனமான விவாதம் தலை தூக்கிவிடுகிறது. மத நம்பிக்கையில் மட்டும், அதாவது மதம் சார்ந்த இயக்கங்களில் அணி திரட்டப்படாதவர்களிடம் இது குறித்தான விவாதங்களை முன் வைக்கும் போது காலத்திற்கேற்ற மாற்றங்களை வரவேற்கவே செய்கின்றனர். இதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்பதையும் உணர்கின்றனர். ஆனாலும் அதனை ஒரு தீர்மானகரமாக நடைமுறைப்படுத்த ஏனோ பயப்படுகின்றனர். தமது சொந்தப் பிரச்சினைகளில் ஜமாத்துகளோடு இவர்கள் போராடினாலும் இமாம்கள் அல்லது அமைப்புகளின் முன்னோடிகள் “சரியத்” என்ற ஆயுதத்தைக் கொண்டு வெட்டி வீழ்த்தி விடுகின்றனர்.

அதனால் “தலாக்” பற்றிய சரியத் சட்டம், நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தேவையான மாற்றம் என்ற வகையில் இக் கட்டுரையை எழுத முயற்சித்துள்ளேன். சற்று நீளமாக இருக்கலாம். தவிர்க்க முடியாதது என்பதை புரிந்து கொண்டு கருத்தாய்வு தாருங்கள்.

சரியத் சட்டம் என்பது இந்திய பீனல்கோடு போல வரிசையாக தெளிவாக எழுதி வைக்கப்பட்ட புத்தகம் அல்ல. குர்ஆன் வசனங்களிலும் நபிமொழிகளிலும் ஆங்காங்கே காணப்படுபவைகளைக் கொண்டு எடுத்தாளப்படுபவைகள். அவற்றில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இன்று சுன்னத் ஜமாத்தினரும் தவ்ஹீத் ஜமாத்தினரும், முரண்பாடுகளை அவரவருக்குப் பிடித்த மாதிரி எடுத்துக் கொண்டு சண்டையிடுவதும், தமக்குத்தாமே அக்மார்க் முத்திரைக் குத்திக் கொள்வதும் போல அன்று முதல் இன்றுவரை தர்க்கமும் சண்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு அரபிமொழியின் வளமின்மையும் ஒரு காரணம்.

எடுத்துக்காட்டாக குர்ஆன் 2:228-ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குருஉ எனும் சொல்லின் வினைச் சொல்லான அக்ரஅத் எனும் சொல்லுக்கு ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் ஆரம்பம்) என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் நின்றுவிட்டது) என்ற எதிரிடையான பொருளும் உண்டு. இதனை நான் கூறவில்லை. புகாரி அவர்களே பதிவுசெய்துள்ளார்கள். (பார்க்க பாகம்:6 பக்கம் 78) எக்காலத்திற்கும் பொருந்தும் அருள்மறை என்று கூறும் குர்ஆனின் சொல்லிலேயே குழப்பம் என்றால் என்ன சொல்லவது?

தலாக் என்றால் என்ன?

மணவிலக்கு என்று புத்தகங்களில் எழுதுகின்றனர். விவாகரத்து (திருமண முறிவு) என்று பொதுவானவர்கள் புரிந்து வைத்துள்ளனர். நடைமுறையும் இதனையே உணர்த்துகிறது. ஆனால் அதன் நேரடிப் பொருள் விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் ஆகியன. ஒரு அரபி இச்சொல்லினை எப்படி புரிந்து கொள்வார் என்பதிலிருந்து தலாக் என்பதன் மூலம் ifif, நடைமுறையில் பெண்ணின் உணர்வுக்கும் உரிமைக்கும் எவ்வளவு மதிப்பளித்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தலாக் என்பதுபோல் ஈலா, ழிஹார் என் இருவகை மணமுறிவுகளும் இருந்துள்ளன. ஈலா என்றால் நீ எனக்கு விலக்கப்பட்டவள் (ஹராம்) என சத்தியம் செய்வதால் ஏற்படும் மணமுறிவு. ழிஹார் என்றால் நீ என்க்கு தாயைப் போன்றவள் என்று கூறிவிடுவதால் ஏற்படும் மணமுறிவு. இன்று இது ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இல்லை. அதனால் இதற்குள் செல்ல வேண்டாம் என் கருதுகிறேன்.

ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் “அவிழ்த்து விடுகிறேன்” அதாங்க தலாக் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். இதனை ஏறக்குறைய ஒருமாத கால இடைவெளியில் மூன்று தவணையாகச் சொல்ல வேண்டும் என்றும் ஒரே தவணையில் சொல்லிவிடலாம் என்றும் அன்றுமுதல் இன்று வரை அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டும் தர்க்கம் செய்துகொண்டும் இருக்கின்றனர். சாதாரண மக்கள் எப்படிச் சொன்னாலும் ஒன்றுதான் என்ற புரிதலிலும் நடைமுறையிலும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எப்படிச் சொன்னாலும் பலன் ஒன்றுதான்.

ஒரு ஆண் மூன்று தவணைகளில் தலாக் சொல்லுகிறான் என்று வைத்துகொள்வோம். தலாக்கிற்கு காரணமான தன் கோபம் தனியவோ, அல்லது தன் மனைவி ஒழுங்கங் கெட்டவள் என்று கருதி தலாக் சொல்லியிருந்தால் அது உண்மையா பொய்யா என்று நிதானமாக புரிந்து கொள்ளவோ அவகாசம் கிடைக்கும். மூன்றாவது தலாக் சொல்வதற்கு முன் தன் மனைவியை சேர்த்துக் கொள்ளலாம். பெண்ணைப் பொறுத்தவரை தன் கணவன் மனம் மாறி தன் மீது இரக்கம் காட்டமாட்டானா என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒருமுறை தலாக் என்று சொல்லிவிட்டாலே பெண்ணானவள் “இத்தா” இருக்கத் தொடங்கவேண்டும். (இத்தா பற்றி இங்கு படித்துக்கொள்ளுங்கள்) மூன்றுமுறை சொல்லாவிட்டாலும் ஒரு முறை இந்தச் சிந்தனைக் கணவனுக்கு தோன்றிவிட்டால் காலம் முழுவதும் இந்த நெருக்கடியிலிருந்து அவள் மீளவே முடியாது. அதாவது ஆணாதிக்க வடிவமே “கைவிடுதல்” என்ற சரியத் சட்டம். முத்தலாக்கையும் ஒரே தடவையில் சொன்னாலும் ஆணாதிக்கமே கோலோச்சும். அதுவே ஒரு பெண் தன் சுய வருமானத்தில் இருந்தால்…..

பாத்திமா . அரசுத் துறையில் ஒரு பொறியாளர். கணவர் ஒரு ஆசிரியர். கை நிறைய சம்பளம் வாங்கும் பாத்திமாவிற்கு மேலும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. வெளிநாட்டில் அரசுத் துறையில் பொறியாளர் வேலை. இலகரத்தில் ஊதியம். வீடு கார் மற்றும் குடும்பத்திற்கான விசா என்று அனைத்து வகையிலும் ஏராளமான சலுகை. ஆனால் பிரிந்து வாழ மனைவியை அனுமதிப்பதில் கணவனுக்கு அளவில்லாத தன்மான உணர்வு. மனைவியை தடுக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாத்திமாவிற்கு இந்த பொன்னான வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. முதலாளித்துவ உலகத்தில் வாழும் அவரால் அதை இழக்க முடியாதுதானே. அப்படி இழக்க பொதுவாக எவரும் விரும்பவும் மாட்டார்கள். பாத்திமா தனது விருப்பத்தில் மாற்றம் செய்துகொள்ள தயாரில்லை. தன் கணவனையும் வேலையை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு அழைக்கிறார். பெண் உழைப்பில் தாம் வாழ்வதா என்ற உணர்வு அவருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. தலாக் செய்து விடுவதாக மிரட்டுகிறார். பலனில்லை. குடும்பத்திலுள்ளவர்கள் சமாதானம் செய்ய இன்று அவர்கள் இருவரும் வெளிநாட்டில். இது நடந்து பதினைந்தாண்டுகளுக்கு மேலாகிறது. இப்பொழுது அவர்கள் அந்நாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளிகள்.

பொதுவாக வருமானம் ஈட்டும் பெண்களுக்கு தும்மினாலும் தலாக் என்ற நெருக்கடி இல்லை. அந்த பயமுறுத்தலையும் பெண்கள் எளிதாக கைகொள்கின்றனர். அதுபோல ஆண்களிடமும் மணவாழ்க்கையின் காதல் உணர்வை புரிந்து கொள்ளும் மனமுதிர்ச்சியையும் இன்று நிறையவே காணமுடிகிறது. அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது.

தலாக் என்பதற்கான “நபிவழி” என்று பின்வருமாறு கூறுகின்றனர். 1. மாதவிடாய், பிரசவ இரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்து நீங்கி மனைவி தூய்மையாக இருக்க வேண்டும். 2. மனைவியுடன் தலாக் சொன்னபிறகு உடலுறவுக் கொள்ளக்கூடாது. 3. இரு சாட்சிகள் முன்னிலையில் மணவிலக்கு அளிக்க வேண்டும்.

இரண்டாவது விதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தலாக் என்றாலே அதுதானே. முதலாவது விதிப்படி மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக்கூடாது. ஆனால் சொல்லக்கூடாது என்ற தலைப்பில் குர்ஆன் வசனம் 65: 1 ஐ ஆதாரமாகக் கூறும் புகாரி அவர்கள், அடுத்த தலைப்பிலேயே தலாக் செல்லும் என்றும் தலைப்பிட்டு, இரண்டிற்கும் சாட்சியாக காலிபா உமர் அவர்களின் மகன் அப்துல்லா செய்த ஒரே தலாக் நிகழ்ச்சியை (புகாரி 5251, 5252, 5253) ஆதாரமாக எழுதியுள்ளார். வேடிக்கையான முரண்பாடு. இவர்கள் ஏன் தங்களுக்குள் காலம் காலமாக அடித்துக் கொள்கிறார்கள் என்று புரிகிறதா? இதற்குப் பெயர் தெளிவான மார்க்கமாம்.

தலாக் பற்றி புகாரி அவர்கள் தொகுத்துள்ள எந்த நபிமொழியிலும் இரு சாட்சிகள் முன்னிலையில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்பதற்கான நபிமொழி ஒன்றும் இல்லை. தலாக் சொல்லிவிட்டு வந்து தான் தலாக் சொல்லிவிட்டதாக பிறரிடம் கூறியதான நபிமொழிகளே காணப்படுகிறது. முகம்மது நபியும் தனது ஒரு மனைவியை தலாக் செய்தபோது எந்த சாட்சியையும் முன்னிருத்தியும் தலாக் செய்யவில்லை. உமையா என்ற அப்பெண்ணிடம் தாம்பத்திய உறவுகொள்ள முற்பட்டபோது அப்பெண் குலப் பெருமைகூறி இணங்க மறுத்துவிடவே, முகம்மதுநபி “உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு” என்று கூறிவிட்டு வெளியில் வந்து அபு உசைத் என்பவரிடம் இரு வெண்ணிற சணலால் நெய்யப்பட்ட ஆடைகளை உமையா அவர்களுக்கு கொடுத்து அவரது குடும்பத்தாரிடம் கொண்டு விட்டுவிடுங்கள் என்று கூறியதாக (புகாரி: 5254,5255) நபிமொழி உள்ளது. இந்நிகழ்சி முத்தலாக்கையும் ஒரேதடவையில் முகம்மதுநபியே கூறியதற்கு சாட்சியாகவும் இருக்கிறது.

ஒருவர் தம் மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டைக் கூறினால் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரத் தவறினால் அவருக்கு எண்பது கசையடிகள் தண்டனையும் அதன் பிறகு அவர் அளிக்கும் எந்த சாட்சியும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்று குர்ஆன் வசன எண் : 24:4 கூறுகிறது.

ஹிலால் பின் உமய்யா என்பவர் ( மற்றொரு நபிமொழியில் இவர் பெயர் உவைமிர் அல் அஜ்லானி என்றுள்ளது. ஆனால் நிகழ்சி ஒரே மாதிரியுள்ளது. பெயரிலுமா இவர்களுக்குள் குழப்பம்?) தன் மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முகம்மது நபியிடம் கூறி தனக்கு என்ன தீர்வு எனக் கேட்கிறார். அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்படியும் இல்லையேல் கசையடி கொடுக்கப்படும் என்றும் முகம்மது நபி கூறுகிறார்கள். அதற்கு ஹிலால் அவர்கள் தன் மனைவி அடுத்தவருடன் உடலுறவு கொள்வதை பார்த்ததிற்குமா நான்கு சாட்சிகள் வேண்டும் என்று மீண்டும் கேட்க நடைமுறைச் சிக்கலை புரிந்துகொண்ட முகம்மது நபி தமக்கு வேறு கட்டளை அல்லாவிடமிருந்து வந்துவிட்டதாக (குர்ஆன் வசனம் 24:6-9) கூறி நான்கு முறை தாம் சொன்னது உண்மை என்று சத்தியம் செய்து அதன் பிறகு அப்படி தாம் செய்த சத்தியம் பொய்யானால் தன்மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும் என்று கூறினால் போதும் என்றும் கூறிவிடுகிறார்கள். இதற்கு லிஆன் செய்தல் என்று பெயர். அது சரி குற்றம் சுமத்தப்பட்ட பெண் என்ன செய்ய வேண்டும்? ஹிலால் அவர்களின் மனைவி ஷரீக் பின் சஹ்மா அவர்களையும் இவ்வாறு சத்தியம் செய்யச் சொல்லகிறார்கள். (அதாவது அல்லாவிற்கு அஞ்சி சொல்லமாட்டார் என்ற கருத்தில் என கருதுகிறேன்) அவரும் அதேமாதிரி சத்தியம் செய்கிறார். இருவருமே தம் மீது குற்றமில்லை என்று கூறிவிட்டபொழுது என்ன தீர்ப்புச் சொல்லவது? தீர்ப்பை குற்றம் சுமத்தியவரே எழுதிவிடுகிறார். “ நான் இவள் மீது குற்றம் சுமத்திவிட்ட பிறகு இவளை கைவிடாவிட்டால் (தலாக் சொல்லாவிட்டால்) நான் சொன்னது பொய் என்றாகிவிடும் என்று கைவிட்டுவிட்டார். (புகாரி 4747, 5308)

இன்றைய நடைமுறையில் அப்படி தன் விருப்பத்திற்கு ஏற்ப தலாக் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் அதற்கான காரணத்தை சொல்லி தன்னுடைய ஜமாத்தில் சொல்லவேண்டும். காரணம் சொல்லத் தேவையில்லை என்று சரியத் சட்டமிருந்தாலும் காரணம் சொல்லாமல் ஜமாத் ஏற்றுக் கொள்வதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குத் தவிர பிற காரணங்களுக்கு தலாக் என்பதை உடனடியாக அனுமதிப்பதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குக் கூட தீர விசாரிக்காமல், அதற்கான சாட்சிகள் இல்லாமல் அனுமதிப்பதில்லை. பிறவகை குற்றச்சாட்டுகளுக்கு சில மாதங்கள், வருடங்கள் கூட தீர்ப்புக் கூறாமல் தள்ளிவைத்து பின்னர்தான் தலாக் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனாலும் உலமாக்கள் மன்றங்களும் இசுலாமிய அமைப்புகளும் தன்னிச்சையாக சொல்லப்படும் தலாக்குகளை அங்கீகரிக்கின்றனர். செல்போன் மூலமும் தலாக் சொல்லலாம் என்றும் இவர்கள் அனுமதித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். விதிவிலக்காக ஜமாத்துகள் கூட பிரச்சனைக்குரியவரின் வசதி வாய்ப்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்கிறது.

குலா

தலாக் – ஆண் தன் மனைவியைக் கைவிடுதல்- என்பது போல பெண் தன் கணவனை தலாக் சொல்ல முடியுமா?

குலா (அல்குல்வு) என்ற இச்சொல்லிற்கும் கழற்றிவிடுதல் என்றுதான் பொருள். ஆனால் தன்வினையில் பயன்படுத்தக் கூடாது. பிறவினையில் பயன்படுத்த வேண்டும். அதவது பெண் தன் கணவனைப் பிடிக்காவிட்டால் நடுவரிடமோ அல்லது தமக்குப் பொறுப்பாக இருந்து யார் திருமணம் செய்து வைத்தார்களோ அவர்களிடம் முறையிட்டு தன் கணவனை “கழற்றிவிடச் சொல்லுங்கள்” என்று சொல்வதாகும். இதற்கு ஒருமுறை, மூன்றுமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. கழற்றிவிடச் சொல்ல விரும்பும் பெண் தான் பெற்ற மகர் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். அல்லது ஏதாவது நட்ட ஈட்டுத்தொகை கொடுக்க வேண்டும்

இதிலும் முரண்பாடு இவர்களிடையே உள்ளது. குலா என்பது முழுமையான தலாக் என்றும் இல்லை என்றும் இரண்டு கருத்துண்டு. அதாவது இசுலாமியச் சட்டப்படி தலாக் சொல்லி விட்டால் அவ்விருவரும் மீண்டும் இணைந்து (திருமணம்) வாழ முடியாது. அவ்வாறு வாழ விரும்பினால் அப்பெண் வேறொருவரை திருமண்ம் செய்து அவருடன் உடலுறவு கொண்ட பிறகு அவரிடமிருந்து தலாக் பெற்று அதன் பிறகே ஏற்கனவே வாழ்ந்தவருடன் இணைய முடியும். குலாவில் அதுபோல் வேறு திருமணம் செய்யத் தேவை இல்லை; விரும்பினால் இணைந்து கொள்ளலாம். அது பிரிவினையே தவிர தலாக் இல்லை என்பது ஒருசாரரின் கருத்து.

இதற்கு அவர்கள் கூறும் ஆதாரம் குர்ஆன் வசனம் 4:20. அது, “ஒரு மனைவியிடத்தில் (விவாகரத்து செய்துவிட்டு) மற்றொரு மனைவியை (திருமணம் மூலம்) மாற்றிக் கொள்ள விரும்பினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள்.” என்று கூறுகிறது.

குலாவும் தலாக்தான் என்று கூறுபவர்கள் குர்ஆன் வசனம் 2:229 மற்றும் புகாரி 5373 மற்றும் 5230 ஆகியவற்றை ஆதாரமாக கூறுகிறார்கள். “கணவன் மனைவியிடையே இசுலாமிய நெறிப்படி வாழ முடியாது என்று பிணக்கு எற்பட்டால் மனைவியிடம் ஈட்டுத் தொகை பெறுவதில் குற்றமில்லை” என்று குர்ஆன் கூறுகிறது. (குர்ஆனின் எந்த வசனத்தை சரி என்று எடுத்துக்கொள்வது? உங்களுக்கு எதுபிடிக்குதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.)

ஸாயித் பின் கைஸ் என்பவரின் மனைவி முகம்மது நபியிடம் சென்று தனது கணவர் உடலுறவுக்கான தகுதியில்லாததைக் குறிப்பிட்டு தமக்கு தலாக் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அதற்கு முகம்மது நபி, அப்பெண்ணிடம் கணவரிடமிருந்து பெற்ற தோட்டத்தை திருப்பிக் கொடுத்துவிட சம்மதம் பெற்றுக்கொண்டு  ஸாயித் பின் கைஸ் அவர்களை தலாக் செய்யச் சொல்லுகிறார்கள். (புகாரி 5373)

பனூமுகிரா குலத்தினர் தங்கள் புதல்வியை அலி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். ஆனால் அதற்கு முகம்மது நபி அனுமதியளிக்க மறுத்துவிட்டு, “பாத்திமா  என்னில் பாதியாவார். அவரை வருத்தமடையச் செய்வது என்னை வருத்தமடையச் செய்வது போலாகும். வேண்டுமானால் பாத்திமாவை தலாக் செய்துவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று கூறுகிறார்கள். (4 மனைவி ஆதரவாளர்கள் கவனிக்க)

இவைகள் மூலம் முரண்பாடு ஒருபக்கமும், குலா என்பது தலாக் போலல்லாத கழற்றிவிடச் சொல்லி சொல்லுதல் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

குலா என்பது எப்படியிருந்தாலும் பெண், ஜமாத்தில் முறையிட விசாரணை நடத்தும் ஜமாத் கணவன் மீது குற்றமிருப்பின் கணவனுக்கு தண்டத் தொகை வழங்கவும், அவன் பெற்ற வரதட்சிணையை திருப்பித் தரவும் உத்தரவிடுகின்றனர். வரதட்சணை பெறாவிட்டாலும் இழப்பீட்டுத் தொகை உண்டு. குற்றம் யாருடையது என்பது மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. ஆண் தலாக் செய்தாலும் இதுவே இன்றைய நடைமுறை. உலமாக்களின் தலையீடும் செல்லுபடியாவதாகத் தெரியவில்லை. காரணம் திருமணம் என்பதில் பெண்ணைப் பெற்றவர்கள் அல்லவா பெரிதும் இழக்கின்றனர். வரதட்சிணை மட்டுமல்ல பிரச்சனை. திருமணச் செலவு என்பதும் திரும்பப் பெறமுடியாத இழப்பல்லவா. பெண்ணைப் பொறுத்தவரை மறுமணம் என்பது முதல் திருமணத்தை விட கூடுதலாகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. அல்லது கொஞ்சமும் பொருத்தமில்லாத வயது கூடியவர்களை திருமணம் செய்ய வேண்டும். ஏழைகளைப் பொறுத்தவரை மறுமணம் என்பது கானல் நீர்தான்.

மணவிலக்கு நடந்தால் சரியத் சட்டப்படி குழந்தைகள் கணவனையே சாரும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் பெண்ணே குழந்தைகளைப் பொறுப்பேற்று கொள்கிறாள். மறுமணம் என்று வரும்போது ஏற்படும் பிரச்சனையால் ஆண் தற்காலத்தில் குழந்தைகளை ஏற்றுக் கொள்வதில்லை. பெண்ணைப் பொறுத்தவரை உணர்வுவகை சார்ந்த பாசம் என்ற பிணைப்பால் குழந்தைகளை தன்மீது திணிக்கப்படுவதாக கருதுவதில்லை. குழந்தைகளுக்கான எதிர்காலம், பராமரிப்பு என்ற வகையில் மாதம் மாதம் அல்லது ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையையும் ஜமாத் கணவனிடமிருந்து பெற்றுத் தருகிறது.

அந்தக் காலத்தில் சந்தையில் வாங்கும் பொருள்போல பெண்களை அன்பளிப்பு (மகர்) கொடுத்து திருமணம் செய்துகொண்டனர். பெற்றவர்களும் யாராவது வாங்கிக் கொண்டால் சரிதான் என்று பருவமடையாத பெண்களைக்கூட 50 வயதுக் கிழவனுக்கும் திருமணம் செய்துகொடுத்தனர். ஒவ்வொருவரும் 5, 10 என்று பெண்களை திருமணம் செய்துகொண்டனர். இன்று அப்படி முடியுமா? என்னதான் சரியத்தைக் காக்கும் சட்டமேதையாக இருந்தாலும் தனது 6 வயது மகளுக்கு திருமணம் செய்து வைப்பாரா? இல்லை இரண்டாந்தாரமாக தன் மகளை மணமுடித்துக் கொடுப்பாரா? எந்தப் பெண்ணாவது தன் கணவன் வேறு திருமண்ம் செய்துக் கொள்ளத்தான் அனுமதிப்பாரா? காலம் ரொம்பத்தானே மாறிவிட்டது!

ஆமாம்! மிகவும் மாறிவிட்டதுதான். ஆனாலும் இசுலாமிய ஆண்கள் மனதில் தலாக் பற்றிய சிந்தனை மட்டும் மாறவில்லை. இரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பேரூந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு இசுலாமிய ஜோடி மூன்றுபேர் இருக்கையில் பயணித்தனர். ஜன்னலோரத்தில் மனைவி. அவருக்கு அருகில் அவரது கணவர். அதற்கடுத்து வேறு ஒருவர். திடீரென்று அவர்களது கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. எவ்வளவு சமாதனம் செய்தும் அழுகை நிற்கவில்லை. கணவராகப்பட்டவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி கூறுகிறார். மனைவி வெட்கப்பட்டுக்கொண்டு மறுக்கிறார். சர்ச்சை முற்றி அப்பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு இறங்கப் போவதாக எழுந்திருக்க, அவரது கணவன் அடித்துவிட, மூன்றாவதாக இருந்தவர் மேல் அந்தப் பெண் விழுந்துவிடுகிறார். எதிர் இருக்கையில் அதுவரை அமைதியாக இருந்த ஒருப்பெண் (அநேகமாக அப் பெண்ணின் தாயார்போல் தெரிகிறது) குழந்தையை தூக்கிக் கொண்டு “இப்படி பஸ்ஸிலயும் சண்டை போடுகிறீர்களே” என்று கூறுகிறார். கணவராகப்பட்டவருக்கு கோபம் உச்சமடைய மேலும் அதிகமாக அப்பெண்ணை (அசிங்கமாகவும்) திட்டிவிட்டு “உன்னை தலாக் சொன்னாதான்டி சரிவரும். எனக்கு ஒரு தம்ளர் பால் போதும்டி தலாக் சொல்ல. (பால் எதுக்கு என்று எனக்குப் புரியவில்லை) எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும்டி” என்று கத்திக் கொண்டே வருகிறார். நல்லவேளையாக ப்ட்டுக்கோட்டை வந்துவிடுகிறது. முன்னாடியே உள்ள நிறுத்தத்தில் நம்ம அற்புதவிளக்கு இறங்க வேண்டிருந்ததால் இறங்கிவிட பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம்.

இலட்சாதிபதி முகம்மது அலி. 55 வயதிருக்கும் அவருக்கு. திருமணம் செய்தநாளிலிருந்து அவரது மனைவிமீது அவருக்கு அலாதியான அன்பு. எதற்கெடுத்தாலும் மஹ்மூதாபீ என்று கூப்பிடாமல் அவருக்கு நேரம் நகராது. எதையும் தன் மனைவியிடம் கலந்து கொள்ளாமல் முடிவெடுக்கமாட்டார். ஆனால் அவருக்கு இந்த வயதில் திடீரென்று என்னானது என்று புரியவில்லை. சில மாதங்களாக இருவருக்கும் பிணக்கு. ஒருநாள் திடீரென்று தம் மனைவியை தலாக் சொல்லிவிடுகிறார். ஜமாத்திற்கெல்லாம் செல்லவில்லை. அவரது பேத்திகளே பிள்ளை பெற்றுவிட்ட இந்த வயதில் பஞ்சாயத்தெல்லாம் சரிபட்டுவருமா? பணக்காரராகவும் உள்ள அவருக்கு அதெல்லாம் அசிங்கமில்லையா! அவரது மகன்களால் (3பேர்) ஏதும் சொல்ல முடியவில்லை. காரணம் சொத்து முழுவதும், இந்து மதத்திலிருந்து சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து இசுலாத்தில் இணைந்த அவரே உழைத்து சேர்த்த சொத்து. (கொஞ்சம் கடத்தல் தொழிலும்தான்). மூச்சுவிட்டால் அனைவரும் வெளியே போகவேண்டியதுதான். அதனால் தந்தைக்கு பிள்ளைகளும் ஆதரவு. அதற்கு சரியத்தும் சென்னை உலமாக்களும் ஆதரவு. சில தினங்களில் தலாக்கிற்கான காரணம் புரிந்தது. முகம்மதலி கேரளப் பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

நிறைய எடுத்துக்காட்டுகள் தரலாம். தானும் ஒரு பெண்ணுக்கு தகப்பனாக இருந்தாலும் தலாக் என்பதை எளிதாகச் செய்துவிடலாம் என்ற மனநிலையில், அது தன்னுடை ஆண்மைக்கான அடையாளம் என்ற சிந்தனையில் இவர்கள் இன்றும் வாழ்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இசுலாமிய சமூகத்திலும் சரியத்திற்கு அப்பாற்பட்டு நிறையவே மாற்றங்கள் நடந்துள்ளன. சரியத்தை கடைபிடிப்பதும் முடியாத காரியமாக உள்ளதையும் பார்க்கிறோம். சில பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் தொடர் ஜீவனாம்சம் கேட்கும்போது மட்டும் இந்த “சரியத்தின் காவலர்கள் என்ற போலிகள்” உச்சாணிக் கொம்பில் ஏறிகொண்டு அனைவரையும் உசுப்பிவிட்டு அதாவது இசுலாத்தை சிதைக்க ஆர்.எஸ்.எஸ்சின் சதி, கம்யூனிஸ்டகளின் சதி என்று இசுலாமியர்களை உசுப்பிவிடுகின்றனர். வழக்கு தொடுப்பவரே இசுலாம் அழிந்துவிடுமோ என்று பயந்துபோய் தனது கோரிக்கையை திரும்பப் பெறும்வகையில் தமது பிற்போக்குத்தனத்தை சாதித்துக் கொள்கின்றனர்.

ஆண்களின் நேரடியாக மணவிலக்கு செய்வதற்கான உரிமையை தடுப்பது, முறைகேடான மணவிலக்கிற்கு ஜீவனாம்சம் பெறுவது, எல்லாவற்றிற்கும் மேலாக சுயமாக வருமானம் ஈட்டவும் அதனை தனது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் உரிமையைப் பெறுவது ஆகியனவற்றில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக பொருளாதாரச் சூழ்நிலை இன்றுள்ளது. இசுலாமியப் பெண்கள் இதனைப் புரிந்துகொண்டு காலத்திற்கேற்ற தமது உரிமைகளை பெறுவதற்கு போராடவேண்டும். வாழும் உரிமைக்கும் மத நம்பிக்கைக்கும் முடிச்சுப்போட முயற்சிப்பவர்களை அடையாளங்கண்டு அம்பலப்படுத்த வேண்டும்.

__________________________________________________

– சாகித்
__________________________________________________