privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇந்தக் கதை இதோடு முடியவில்லை…..

இந்தக் கதை இதோடு முடியவில்லை…..

-

படம் – www.thehindu.com

இந்த கதை இதோடு முடியவில்லை…..

டெள கெமிக்கல்ஸ் நிர்வாகத்தின் முன்பாக கீழ்கண்ட இரண்டு கேள்விகள் வைக்கப்பட்டது.

(1) 2008 செப்டம்பரில் திரு சிட்காரா என்பவர் அமெரிக்க தூதரக அதிகாரியை மும்பையில் சந்தித்த போது மகாராஷ்டிர மாநிலம் புனேயில் டெள கெமிக்கல் நிறுவனத்தினை அமைக்கும் திட்டத்திற்கு அங்குள்ள வர்க்காரி இன மக்கள் மிகுதியான எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை மேற்கொண்டு வருவதால், அவற்றை சமாளிக்க சிவசேனா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் அந்தலரோ பாட்டிலால் தெரிவிக்கப்பட்ட மக்கள் தொடர்பு நிபுணர் ஒருவரை மாதம் 20,000 டாலர் சம்பளத்திற்கு நியமித்ததாக‌ தெரிவிக்கப்பட்டதே, அவர் எவ்வளவு காலம் பணியிலிருந்தார் ?  அவரின் சேவையை டெள கெமிக்கல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுள்ளதா?

(2) அதே சிட்காரா தெரிவித்த மற்றொரு தகவலின்படி டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் குஜராத் அரசிடமிருந்து அந்நிய முதலீட்டிற்கான அனுமதி பெறுவதில் சிரமம் இருந்ததாக சொல்லப்பட்ட பிரச்சினை எப்போது சரி செய்யப்பட்டது? அங்கே அரசின் அனுமதி பெறப்பட்டதா?

அதற்கு டெள அளித்த எழுத்து பூர்வ பதிலில், ஒரு படத்தில் கவுண்டமணி சொல்கிற “அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா” என்பது போல் எல்லா பன்னாட்டு நிறுவனங்களையும் போல் நாங்கள் எங்கெல்லாம் (பிஸினஸ்) வணிகம் செய்கிறோமோ, எங்கெல்லாம் வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கெல்லாம் அரசியல் வாதிகளை, அதிகாரிகளை சந்திப்பதும், நாங்கள் சந்திக்கிற சவால்களை எதிர்கொள்ள நடைமுறைத் தந்திரங்களைக் கையாள்வதும் இயல்புதான். இது இந்த நாட்டில் எங்கும் வியாபாரிகள் கையாள்கிற விஷ‌யம்தான் என்று தெரிவித்துள்ளது. மற்றபடி நீங்கள் கேட்கும் விவ‌ரமெல்லாம் அமெரிக்க அரசின் உள்நாட்டு கடித போக்குவரத்து விபரமாகும், எனவே அவற்றை அரசிடம்தான் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பதிலளித்துள்ளது டௌ கெமிக்கல்ஸ்.

இனி இந்தக் கட்டுரையின் விவ‌ரத்திற்கு வருவோம்.  கடந்த 20 தினங்களுக்கும் மேலாக இந்தியாவின் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளிலும் அமெரிக்காவின் தலையீடு இருப்பதைப் பற்றியும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் சாக்கடை நடவடிக்கைகள் பற்றியும் விக்கிலீக் இணையதளத்தின் மூலம் கசிந்த அசிங்கங்கள் ஆங்கில நாளிதழான தி இந்துவில் வெளிவந்து கொண்டிருப்பதும், அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் அரசு நீடித்திருக்க வாக்களிப்ப‌தற்காகப் பணம் வாங்கிய விவ‌ரத்தினை மட்டும் (ஏதோ தங்கள் சம்பந்தப்பட்ட நாற்றமாக இருக்கிறதே என்பதற்காக) 2, 3 நாட்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டுவிட்டு அதோடு தம் கடமை முடிந்துவிட்டதாக கருதி பாராளுமன்ற கூட்டத்தொடரை முடித்துக்கொண்டு, அவரவர் சார்ந்த மாநிலத்தின் தேர்தலைக் கவனிக்கச் சென்று விட்டனர்.  ஆனால் ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதி தி இந்து வெளியிட்ட விக்கி லீக் விபரங்கள், கொலைகார டெள கெமிக்கலோடு இந்திய அரசியல்வாதிகளின் உறவுகளை அம்பலப்படுத்தி விரிவாக நாறடித்திருக்கிறது.
_____________________________________________

1984ல் மத்தியப்பிரதேசம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த விஷ‌வாயுக் கசிவினால் ஆயிரக்கணக்கான‌ குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழந்ததையும், இன்று வரை அந்த மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ‌வாயுக் கசிவினால் கண்ணிழந்து, உறுப்புகள் இழந்து நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டு வருவதையும், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்கில் சொற்ப நஷ்ட ஈட்டுத் தொகையே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதையும் அந்த மக்கள் இன்னும் பெறவில்லை என்கிற விபரமெல்லாம் வினவு வாசகர்கள் அறிந்த ஒன்றே. அதே போல் அமெரிக்காவின் மற்றொரு பன்னாட்டு நிறுவனமான டெள கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ளது என்பதும், ஏற்கெனவே அந்த பூமியில் இருக்கிற யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ரசாயானக் கழிவுகளை அகற்றிட‌ மறுக்கிறது என்பதும், இந்திய ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் அதற்கு துணை போவதுடன், அந்தக் கழிவுகளை நாங்கள் அகற்றிக் கொள்கிறோம் எனச் சொல்வதும் அனைவரும் அறிந்த தகவலே.  அதனால்தான் “நாசகார டெள வே  நாட்டை விட்டு வெளியேறு” என கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.

_____________________________________________

தற்போது கசிந்த நாற்றத்தைப் பார்ப்போம். டெள கெமிக்கல் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மகாராஷ்டிரத்திலும், குஜராத்திலும் தனது தொழில் விரிவாக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதால் அதைச் சமாளிக்க சிவசேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் அடல்ரோ பாட்டிலை தொடர்பு கொண்டபோது, மக்கள் போராட்டங்களை சமாளிக்க நான் ஒரு சிறந்த மக்கள் தொடர்பு அலுவலரைச் சொல்கிறேன், அவரை நியமித்துக் கொள்ளுங்கள் எனப் பரிந்துரைத்ததின் பேரில் அவர் மாதம் 20000 டாலர் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  மற்றபடி அரசின் அனுமதிகள் பெறுவதற்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நேரத்தில் மத்திய இரசாயனத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் “மிக அதிகமான தொகை லஞ்சமாக கேட்கிறார்” என்கிறது அந்த தகவல் பரிமாற்றம். இது பற்றி இந்து பத்திரிக்கை ராம்விலாஸ் பாஸ்வானிடம் கேட்டதற்கு, டெள எங்கள் அந்தஸ்தை கீழிறக்க வைப்பதற்காக இவ்வாறு தெரிவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்கத் தூதரக அலுவலர் அமெரிக்காவுக்குத் தெரிவித்திருக்கும் தகவலில், போபால் இழப்புகள் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையாமல் இருப்பதால் சற்று சிரமமாக இருக்கிறது.  மேலும், 2009 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தமது ஓட்டுக்கள் பாதிக்கும் என்பதால் இதைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என இந்திய அரசியல்வாதிகள் கருதுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெள கெமிக்கல்ஸின் புனே திட்டம் என்பது சாகான் மற்றும் சிண்டே கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்களை வளைத்துப் போட்டு அமையவிருக்கிறது.  இங்குள்ள வர்க்காரி இன மக்கள் இது போன்ற ரசாயன கம்பெனி வந்தால் தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருக்கிற தங்களின் ஆறு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியன கடுமையாகப் பாதிக்கும் என்பதால் தீவிரமாக‌ எதிர்க்கின்றனர். தேர்தலை ஒட்டி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக மகாராஷ்டிர அரசு தற்காலிகமாக கெமிக்கல் கம்பெனிக்கான அனுமதியை நிறுத்தி வைத்ததுடன்,  விசாரிக்க ஒரு விசாரணை கமிசனை நிறுவுகிறது.

இதன் நடுவில் (சிவசேனா) பாட்டீலையும், பாஸ்வானையும் பலமுறை டெள கெமிக்கல்ஸ் நிர்வாகிகள் தொடர்பு கொள்கின்றனர்.  அதற்கு பாட்டீல், இருய்யா! மக்களுக்கு உங்கள் கெமிக்கலால் இழப்புக்கள் வரும் என்பதும், நீங்கள்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியவர்கள் என்பதும் தெரிந்து விட்டது, அதனால் சற்றுப் பொறுத்து நெளிவு, சுளிவாகத்தான் இதைக் கையாள வேண்டும் அவசரப் படாதீர்கள் எனத் தெரிவித்ததாகவும் விக்கி லீக் செய்திக்கசிவு தெரிவிக்கிறது.  இதெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் சற்று செலவாகும், எங்களுக்கு பல   கோடி டாலர்கள் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள்.  அதே அரசியல்வாதிகள், இந்த போபால் மக்களுக்கான நஷ்ட ஈட்டு எலும்புத் துண்டுகள் சிலவற்றை டெள கெமிக்கல் வீசியெறிந்து விட்டால், வேலை சற்று சுலபமாகி விடும்  என டெள க்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு நடுவில் டெள நிர்வாகிகளைச் சந்தித்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஏன் மகாராஷ்டிரத்தில பிரச்சனைன்னா அதை சற்று நிறுத்தி வைத்து விட்டு எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள் எனச் சிவப்புக் கம்பளம் விரித்ததையும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்கெனவே உள்ள ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனமான அல்கலீஸ் அண்டு கெமிக்கல் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொழில் நடத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதென மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

டெள கெமிக்கல்ஸ் நிறுவன அதிகாரிகள் இந்திய திட்டக் கமிசன் துணைத் தலைவர் (உலக வங்கி கைக்கூலி) மான்டேக் சிங் அலுவாலியாவைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டதற்கு “உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணை அதிகமாக இருப்பதால் சற்றுப் பொறுங்கள்’ எனத் தெரிவித்ததாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.  அமெரிக்கத் தூதர் தன் நாட்டிற்குத் தெரிவித்த செய்தியின் முடிவுரையாக “டெள கெமிக்கல்ஸ் நிர்வாகம் அரசின் அனுமதி பெறுவது சுலபம் என்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.  ஆனால் போபால் நிகழ்வுகளை மக்கள் இன்னும் மறக்காத நிலையில் அனுமதி பெறுவதென்பது டெள நிர்வாகம் மதிப்பிடுவதை விடச் சற்று சிரமமானது” என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கதை இதோடு முடியவில்லை… என்ற இக்கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்து விடுங்கள்.

போபால் சம்பவ நஷ்டங்களுக்கு, இழப்புகளுக்கு டெள கெமிக்கல்ஸை பொறுப்பாக்காமல் விடுவியுங்கள் என அமெரிக்கத் தூதரக அதிகாரி முல்போர்டு மற்றும் கருவூலச் செயலாளர் பால்சன் ஆகியோர் இந்திய அரசியல்வாதிகளிடம் தரகு பேசிய விபரங்கள் 2ம் தேதி தி இந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் மற்றும் ஒரு மாநில முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தவறுகளுக்கு டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியதில்லை என ஒப்புக் கொண்டதாக ஜூலை யிலிருந்து நவம்பர் 2007 வரை தூதரகத்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பிய தகவல்களின் வழியே தெரிய வருகிறது.

இந்தியா வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் வணிகத்துறை அமைச்சர் கமல்நாத் மற்றும் இந்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா டெள இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கிற முதலீட்டை வரவேற்பதாகவும், யூனியன் கார்பைடு நிகழ்விற்கும் அந்தப் பேரழிவு நடந்த இடத்தில் உள்ள இரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கும் டெள-தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதைத் தாங்கள் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  (அந்த இடத்திலுள்ள இரசாயனக் கழிவுகளை அகற்ற மறுக்கும் டெள நிர்வாகத்தை எதிர்த்துதான் மக்கள் போராட்டம் என்பது ஒரு புறமிருக்க, கழிவுகளை அகற்றவும், நட்டஈடு தரவும் டெள பொறுப்பேற்க முடியாது என நமது அரசியல் சிகாமணிகளே ஒப்புதல் வாக்குமூலம் தருவது என்ன விதமான கொடுமை)

அந்த ரகசிய கேபிளில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ள விவ‌ரங்கள் யாதெனில், அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரி டேவிட் சி முல்போர்டு, துணைத் தலைவர் ஸ்டீபன் ஜே ஒயிட், கல்கத்தா பிரிவு தூதரக அலுவலர் ஹென்றி வி ஜார்டைன், மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோருக்கிடையே இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக உறவு மேம்பட வேண்டுமானால் இந்த விஷ‌யத்தில் விரைவாக ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள் என அமெரிக்கா இந்தியாவை நெருக்கடி செய்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமெனில், நஷ்ட ஈடு போன்ற வழக்குகள் இருந்தால் எப்படி முதலீடு செய்ய முடியும், நஷ்ட ஈடு தர வேண்டும் என்ற பொறுப்பிலிருந்து டெள நிறுவனத்தைக் கழற்றி விடுங்கள் என்பதே தொடர்ந்து அமெரிக்காவின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது.  இந்த விஷயத்தில் அலுவாலியா தனது திருவாய் மலர்ந்து, மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.  டெள போன்ற மற்றொரு நிறுவனத்தைப் பின்னாளில் எடுத்துக் கொண்ட நிறுவனம், முதன்மை நிறுவனத்தின் நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என சட்டப்படி சொல்ல முடியாது, இருந்தாலும் எங்கள் பெரிய வக்கீல் ப.சிதம்பரத்துடன் தாங்கள் தொடர்பு கொண்டால் அவர் தங்களுக்கு நல்ல சட்டப்பூர்வ ஆலோசனைகள் அளிப்பார் (என மற்றொரு அமெரிக்க உலக வங்கிக் கைக்கூலியின் முகவரியைக் கொடுத்துள்ளார்) என்றாராம்.

அமெரிக்கக் கருவூலச் செயலாளர் பால்சன் அக்டோபர் 28ம் தேதி மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை சந்தித்த பின், தனது நாட்டுக்குத் தெரிவித்த தகவலில் ஒரளவுக்குப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது, சில சட்டப்பூர்வ வழக்குகள் தவிர.  மேற்கு வங்க முதல்வர் தனது மாநிலத்தில் டெள நிறுவனம் தொழில் துவங்க வர வேண்டுமென ஆர்வமாக உள்ளார்.  மேலும் சிபிஎம் முதல்வர் தெரிவிக்கையில் உங்களுக்கு எந்தத் தடங்கல் வந்தாலும் அவற்றை நீக்க நான் உறுதுணையாக இருப்பேன்,  இருந்தாலும் நீங்கள் ஒருமுறை எங்கள் நாட்டின் பிரதம மந்திரியையும், நிதி அமைச்சரையும் சந்தித்து விடுங்கள் என அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

டெள நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரு லிவரிஸ், ரோனன் சென் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் போபால் நிகழ்விற்கு டெள நிறுவனம் பொறுப்பேற்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். போபால் நிகழ்வு என்பது ஒரு சிறு தடங்கல்தான்,  மற்றபடி இந்திய நாட்டில் மான்டேக் சிங் அலுவாலியா, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், புத்ததேவ் பட்டாச்சார்யா போன்ற நல்லவர்களெல்லாம் இருப்பதால், இங்கு தொழில் துவங்குவதோ முதலீடு செய்வதோ பெரிய சிரமம் இல்லை.  மக்கள் போராட்டம் என்ற சிறிய தடங்கலை எல்லாம் அரசியல்வாதிகளைக் காசால் அடித்துச் சரிசெய்து விடலாம் – எனவே அந்நிய முதலீடுகள் தாராளமாக இந்தியாவிற்குள் வரலாம் என்பதுதான் ஒட்டுமொத்த செய்திக்கசிவின் சாராம்சம்.

இனி மீண்டும் இந்தக் கதை இதோடு முடிவதில்லை.. என்ற முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்வோம்.

_____________________________________________

இந்திய வளங்களைச் சுரண்டுவது, மக்களின் உயிர்களைத் துச்சமாக மதிப்பிட்டு அபாயகரமான ரசாயன நிறுவனங்கள், அணு உலைகளை இந்தியாவில் நிறுவுவது போன்ற அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து அவ்வப்போது எதிர்கட்சி அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்கள் என ஊடகங்களைப் பார்த்து மக்களாகிய நாம் நம்பினால் நிச்சயமாக மோசம் போவோம் என்பது மேற்கண்ட தூதரக செய்திக் கசிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.  எனவே மக்களை அரசியல்படுத்தி போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.

நாசகார டெள-வே இந்தியாவை விட்டு வெளியேறு ! என்ற போராட்டத்தை மீண்டும் கையிலெடுத்து, தீவிரப்படுத்த வேண்டியது இன்றைய உடனடித் தேவையாகும்.

_____________________________________________

சித்ரகுப்தன்
நன்றி- தி இந்து மற்றும் அதன் செய்தியாளர்கள்
_____________________________________________