privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபுதிய வடிவமைப்பில் வினவு! தொடரும் பயணம்!!

புதிய வடிவமைப்பில் வினவு! தொடரும் பயணம்!!

-

அன்பார்ந்த வாசகர்களே, பதிவர்களே, தோழர்களே,

ன்று 22.04.2011 ஆசான் லெனினது பிறந்த தினம் மற்றும் இந்தியப் புரட்சியின் விடிவெள்ளியாக தோன்றிய நக்சல்பாரிக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமுடைய நாளில் வினவின் புதிய வடிவமைப்பை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

2008-ஜூலையில் தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வினவுக்கு இன்றோடு இரண்டு வருடம் ஒன்பது மாதங்கள் வயதாகிறது. இந்தக் காலத்தில் 831 பதிவுகள் வெளியிடப்பட்டு ஏறக்குறைய 40,000 மறுமொழிகள் வந்திருக்கின்றன. இந்தக் காலத்தில் சுமார் முப்பது இலட்சம் வாசகர் பார்வைகள். ஆரம்பத்தில் 500, 1000 என்று இருந்த வாசகர் வருகை தற்போது சராசரியாக 5000-த்தை தொட்டிருக்கிறது.

சினிமா, நடப்பு அரசியல், தேர்தல் போன்ற பதிவுகளுக்கு எப்போதும் வாசகர் வருகை அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் சென்சேஷன்னுக்கா பதிவுகள் என்று எதையும் நாங்கள் எழுதுவதில்லை. வினவின் மொத்த இடுகைகளில் பெரும்பாலானவை அரசியல துறையைச் சேர்ந்தவைதான். இதற்கு அடுத்தபடியாக சமூக பண்பாட்டுக் கட்டுரைகளும் வெகு சில சினிமா, இலக்கியம், குறித்த கட்டுரைகளை வெளியிடுகிறோம். எனினும் அதிகம் படிக்கப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புவதற்கும், வாசகர் அதிகம் விரும்பி படிப்பதற்கும் வேறுபாடு இல்லாமல் இல்லை. இந்த வேறுபாட்டை வெல்ல வேண்டும் என்பதே எமது மையமான குறிக்கோள்.

இணையம் கட்டற்ற செய்திகளை அள்ளிக் கொடுத்தாலும், நவீன ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக செய்திகள், அடுத்த கணத்தில் உலகம் முழுவதும் வெளியாகின்றன என்றாலும் அந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இங்கும், எங்கும் அதிகரித்துவிடவில்லை. எந்த விசயங்களை பார்க்க வேண்டுமென்பதையும், அவற்றை எப்படி பார்க்க வேண்டுமென்பதையும் ‘அவர்கள்’ தீர்மானிக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு இணையம் கட்டற்ற சுதந்திரத்தை அளிப்பது போல தோன்றினாலும் உண்மையில் அப்படி ஒரு சுதந்திரம் நமக்கு இல்லை.

இதனால் நாம் விரக்தியடையத் தேவையில்லை. உண்மையில் இணையத்தை மக்கள் நலன் சார்ந்த ஊடகமாக மாற்றுவது தொடர்ச்சியான நமது போராட்டத்தில் உறைந்து கிடக்கிறது. சரியாகக் கூற வேண்டுமென்றால் இணையத்திற்கு வெளியே மக்கள் களத்தில் நடக்கும் போராட்டங்கள், முன்னேற்றங்களுக்கு இணையாகவே அல்லது அதன் பிரதிபலிப்பாகவே இணையமும் விளங்க முடியும்.

மக்களிடம் இயல்பாக நல்ல விதமாக இருக்கும் பொதுவான மனிதாபிமான விசயங்களை ஆளும் வர்க்க ஊடகங்கள் தவறாக பயன்படுத்தி தமது கொள்கைகளைத் திணிக்கின்றன. அதாவது பாசிசத்தை நோக்கி நமது மனிதாபிமானம் நமக்குத் தெரியாமல் வேகமாக இழுத்துச் செல்லப்படுகிறது. கோவை என்கவுண்டர் பற்றி தினசரிகளும் பதிவுலகமும் எப்படி ஆரவாரத்துடன் வரவேற்றன என்பதறிவோம். இரண்டு குழந்தைகள் மீதான படுகொலை என்பது போலீசின் கட்டற்ற சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக திட்டமிட்டு மாற்றப்பட்டது.

அதே போல அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை அதுதான் இந்திய மக்களின் முதல் போராட்டம் போல சித்தரித்தார்கள். அதை கேள்வியின்றி ஆதரிப்பதே தேசபக்தியென மாற்றினார்கள். இப்படி நமது அடிப்படையான பிரச்சினைகள் பலவும் மேலோட்டமான பரபரப்பான நிகழ்வுகள் மூலம் சரி செய்யப்படலாம் என்ற மாயையை விதைத்திருக்கின்றன.

இத்தகைய சூழலில்தான் வினவு பரபரப்பான பொதுப்புத்தியின் கிளர்ச்சிக்கு எதிராகவும், மாற்றாகவும் சமூகத்தில் காணப்படும் உண்மைகளை வாசகர் முன் வைக்கிறது. அதனால்தான் எங்களை “எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்பவர்கள்” என்று சிலர் விமரிசிக்கின்றனர். கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நாம் முன்னேற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். கிடைத்திருக்கும் வாய்ப்பு என்பது ஏதோ நம்மாலும் கொஞ்சம் முடியும் என்ற மாயை அன்றி வேறல்ல என்று நாங்கள் சொல்கிறோம். உண்மையில் பிரச்சினையின் அடிவேரை காணமறுக்கும் இத்தகைய சமரச அணுகுமுறை குறித்து நாங்கள் எப்போதும் விமரிசித்தே வந்திருக்கிறோம்.

இத்தகைய சமரசக் கருத்துக்கள்தான் சமூகத்தில் எப்போதும் செல்வாக்கு செலுத்துவபையாக இருக்கின்றன. வைகோவின் சமரசத்தையே தியாகமாக போற்றுவதும், ஈழத்தின் துயருக்கு காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில் ஜெயாவை ஆதரிப்பதும், தேர்தலில் சிக்கி சின்னாபின்னமான போலிக் கம்யூனிஸ்டுகள் அதை நியாயப்படுத்த கூடிய விரைவில் புரட்சி கிடையாது என்று சுயதிருப்தி அடைவதும், எந்திரன் திரைப்படத்தின் கொள்ளையை காணமறுத்து அதனை சிறந்த பொழுது போக்காகக் கொள்வதும், என்று இந்த சமரசங்கள் முடிவின்றி எல்லா துறைகளிலும் விரவிக் கிடக்கின்றன.

சுருங்கக் கூறின் உலகோடு ஒட்ட ஒழுகல் எனும் செல்வாக்கான சித்தாந்தம்தான் அநீதியான இந்த உலகை ஏற்றுக் கொண்டு வாழ காரணமாகிறது. புதிய உலகை படைக்க விரும்பும் எவரும் இப்படி ஒட்டி ஒழுகிக் கொண்டிருக்க முடியாது. அதே நேரம் இதையே வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசி மட்டும் மாற்றிவிட முடியாது. அதற்கு அளவில்லாத பொறுமையும் இடைவிடாத போராட்டமும் வேண்டும்.

காஷ்மீர் குறித்து ஏராளமான கட்டுரைகள் வினவில் வந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் ‘தேசபக்தி’யில் நின்று கொண்டு துப்பாக்கிக்கு எதிராக கல்லெறியும் மக்களை ‘பயங்கரவாதிகளாக’ கருதிக் கொண்டு வெறுப்பைக் காட்டும் கேள்விகள் வரத்தான் செய்கின்றது. எது பார்ப்பனியம், இந்து மதவெறியின் பயங்கரவாதங்கள் குறித்து நிறைய கட்டுரைகள் வந்திருந்தாலும் இன்னமும் பார்ப்பனியம் என்பதை பார்ப்பனராக மட்டும் சுருக்கிப் பார்ப்பதும், இந்து மதவெறியை நியாயப்படுத்த கோத்ரா ரயில் பெட்டி எறிப்பு முதலானவற்றை முன் வைப்பதும் இன்றும் குறைந்தபாடில்லை.

வாழ்க்கையிலிருந்து பிரச்சினையை அணுகவேண்டும், பிற்போக்கான மதத்திலிருந்து அல்ல என்று இசுலாமிய மதவாதத்தை கண்டித்தால், உடனே குர்ஆனில் அப்படி சொல்லப்படவில்லை என்று முயலுக்கு மூணுகால் சமாச்சாரங்கள் இன்னும் நின்றபாடில்லை.

எனினும் ஒரு சில விதிவிலக்குகள் தவிர வினவு எழுதும் எல்லாவற்றையும் எப்போதும் எதிர்ப்பவர் யாருமில்லை. தங்களது சொந்த அரசியல் பார்வைக்கேற்ப அவர்கள் ஏதோ ஒன்றில் வினவை ஆதரிக்கவே செய்கிறார்கள். இந்திய தேசியத்தை விமரிசித்தால் தமிழினவாதிகள் விரும்புவதும், தமிழனிவாதிகளை விமரிசித்தால் ‘இந்து’ தேசியவாதிகள் விரும்பவதும், இந்துமதவெறியரை விமரிசித்தால் இசுலாமிய நண்பர்கள் ஆதரிப்பதும், இசுலாமிய அடிப்படைவாதத்தை விமரிசித்தால் ‘இந்து’ மத அமைப்பின் கருத்தியல் ஆதரவாளர்கள் விரும்புவதும், ஆதிக்க சாதியினரை எதிர்த்தால் தலித்துக்கள் ஆதரிப்பதும், அதையே விடுதலைச் சிறுத்தைகளை விமரிசித்தால் தலித்தியவாதிகள் கோபமடைவதும், ரஜினியை எதிர்த்தால் கமல் ரசிகர்கள் மகிழ்வதும், விஜயை விமரிசித்தால் அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதும் என்று இந்த இரட்டை மனநிலை அணுகுமுறைக்கு முடிவேயில்லை.

ஆனாலும் எமது விமரிசனப்பார்வை அனைத்தும் ஒரிழையில்தான் பின்னப்படுகின்றன. விமரிசிக்கும் பிரச்சினைகள் வேறுவேறாக இருந்தாலும் அந்த விமரிசனத்தின் அடிப்படை என்பது ஒன்றுதான். ஆதலால் இன்று ஒரு பிரச்சினைக்காக எம்மை ஒதுக்குபவர்கள் கூட ஒரு தொடர்ச்சியான அணுகுமுறையில் எங்களை புரிந்து கொள்வார்கள்; புரிந்தும் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் பல்வேறு மத, இன, சாதி, கட்சி குழுக்களின் சார்போடும்தான் அரசியல் பார்வையினை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பிரிவினைகளை விட வர்க்கம் என்ற உண்மையான அடையாளத்தை உணர்வதன் மூலமே உழைக்கும் மக்களின் ஒற்றுமையும், விடுதலையும் சாத்தியம் என்பதே எமது விமரிசன அடிப்படையின் இரகசியம். இதன்றி வேறு எது குறித்தும் நாங்கள் விமரிசனத்தை எழுதுவதில்லை.

ஆதலால் உண்மையை முன்னரே சொல்லிவிட்டோமே என்று சுயதிருப்தியோடு ஓய்ந்திருந்தால் மாற்றத்தை இம்மியளவும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் நாங்கள் உண்மையினை புதிது புதிதாகவும், புத்துயிர்ப்பாகவும், விதவிதமாகவும், புதிய சூழ்நிலைகளுக்கு பொருத்தமாகவும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க முயல்கிறோம். இதில் நாங்கள் எந்த அளவு முன்னேற்றத்தை கொண்டிருக்கிறோம் என்பதை வாசகர் கருத்தின் மூலம் சோதித்துக் கொள்கிறோம். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறோம்.

அந்த வகையில் வினவு சொல்லும் விமரிசனங்கள் சரியானவை என்பதோடு ஒரு பத்திரிகையின் கட்டுரை என்பதைத் தாண்டி அது நடைமுறைக்கு செல்ல வேண்டிய கடமையையும் ஓரளவுக்கு வாசகரிடம் ஏற்படுத்தியிருக்கிறோம். ஆயினும் இது ஒரு சாதனை என்ற அளவில் இல்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம். சமூக விழிப்புணர்வு என்பது ஒரு கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி விடும் ஒன்றல்ல. அது எப்போதும் இடையறாது கற்றுக் கொள்ளவேண்டிய விசயம். அந்த வகையில் அதை நாங்கள் பயின்று கொண்டும், கற்பித்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஆளும் வர்க்கங்களின் சமரசப் பார்வை இத்தனை செல்வாக்கோடு இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த பார்வை அதை ஏற்பவரிடம் எதையும் இழக்குமாறு கோருவதில்லை. பாதுகாப்பான இந்த வாழ்க்கையில் இருந்து எதையும் இழக்க வேண்டாம் என்ற நிலையே நடுத்தரவர்க்கத்தின் அரசியல் பார்வையின் அடிநாதமாக இருக்கிறது. ஆனால் சமூக மாற்றம் என்பது தனிமனிதனிடம் காத்திரமான மாற்றத்தை கோருகிறது. தனி மனிதர்கள் மாறினால்தான் சமூகமும் மாறும். கிடைத்திருக்கும் இந்த வசதியான வாழ்க்கை, வசதியற்ற மனிதர்களிடம் பறிக்கப்பட்டதில் ஒரு பங்கு என்பதை குற்ற உணர்வோடு உணரும்போது மட்டுமே நம்மை ‘இழப்பதற்கு’ நாம் கொள்கை ரீதியில் தயாராவோம்.

அந்த ‘இழப்பை’ வாசகர்களிடம் உருவாக்குவதே வினவின் நோக்கம். அல்லது சமூக மாற்றத்திற்காக நடைமுறையில் இறங்கும் வண்ணம் வாசகரை தோழராக உயர்த்துவதே எங்கள் இலட்சியம். அந்த இலட்சியத்தில் சில படிகளை அடைந்திருக்கிறோம் என்பதில் பெருமையும் அதேநேரம் எதிரிகளோடு பலத்தோடு ஒப்பிடும் போது அது சிறு துளி என்பதையும் அறிவோம்.

அந்த வகையில் வினவின் சிறு வெற்றி ஒரு துவக்கமாக இருக்கிறது. அந்த நிலையை அடைவதற்கு பதிவுலகம் முக்கியமான பங்காற்றியிருக்கிறது. பதிவர்களும், வாசர்களும் தொடர்ச்சியாக வினவை படிப்பதும், விவாதிப்பதும் என்று எங்களை உற்சாகமூட்டியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தோழர்களாகவும் மாறியிருக்கிறார்கள். பலர் மாறி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. அதேபோல வினவை பல புதியவர்களிடம் கொண்டு போக தமிழ்மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளும் காரணமாயிருந்திருக்கின்றன. தீவிரமான எமது அரசியல் நிலை அவர்களுக்கும் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும் அதைப் பற்றி கவலைப்படாமல் தமிழில் இத்தகைய முற்போக்கு தளங்கள் வளரவேண்டும் என்ற அக்கறையுடன் ஆதரவளித்த திரட்டிகளுக்கும் குறிப்பாக தமிழ்மணத்திற்கும் எமது நன்றிகள்.

டிவிட்டர், கூகிள் கனெக்ட், பஸ், ஃபேஸ்புக் மூலம் எங்கள் பின்தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இத்தனைக்கும் சமூக வலைத்தளங்களில் வினவு கட்டுரைக்கான இணைப்பை மட்டுமே கொடுக்கிறோம். அந்தந்த ஊடகங்களுக்கென்ற பங்களிப்பை நாங்கள் செய்வதில்லை. வினவுக்கான விளம்பர ஊடகமாக மட்டும் அதை பயன்படுத்துகிறோம். கருத்துக்கள் பலரையும் சென்றடைவதற்கு இந்த சமூக வலைப்பின்னல் உதவுகின்றன. அதனால் இதில் பங்கேற்கும் நண்பர்கள் தமது நட்பு வட்டம் முழுமைக்கும் வினவை கொண்டு சேர்க்குமாறு கோருகிறோம். உங்கள் பங்களிப்போடுதான் வினவு வட்டம் இன்னும் அதிகமாக விரிவடையும்.

ஆரம்பத்தில் நாங்கள் மட்டுமே எழுத வேண்டுமென்ற நிலை இன்று இல்லை. நண்பர்கள், தோழர்கள், பதிவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என்று பலரும் வினவின் இந்த பயணத்தில் நிறைய உதவி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். அதே போல பின்னூட்ட விவாதங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும் தொடர்ச்சியாக உரையாடும் நண்பர்களுக்கும் நன்றிகள். எல்லா விவாதங்களிலும் எங்களால் கலந்து கொள்ள இயலாது என்றாலும் அந்தக் குறையை போக்கும் வண்ணம் சில தோழர்கள் தொடர்ந்து விவாதிக்கிறார்கள். அந்த தோழர்களுக்கும் நன்றிகள்.

வினவில் விளம்பரம் போடுமாறு அவ்வப்போது கோரிக்கைகள் வருவதுண்டு. அவர்களில் சிலர் கருத்து ரீதியாகவே வினவை ஆதரிப்பவர்கள் என்றாலும் வினவில் எப்போதும் விளம்பரங்கள் போடுவதாக இல்லை. விளம்பரதாரர்களின் பலத்தில் பத்திரிகை நடத்தக் கூடாது, மக்கள் பங்களிப்பில்தான் பத்திரிகை நடத்த வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் கடைபிடிக்கின்றன. நாங்களும் அந்த வழியிலேயே செல்கிறோம். எமது தேவைகட்கு வாசகரிடம் பெறும் நன்கொடைகள் மூலம் ஈடு செய்வோம். அதற்காக விரைவில் பேபால் முறை மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்துகிறோம். விளம்பரம் அளிக்க முன்வந்த நண்பர்கள் இதை புரிந்து கொள்வார்கள், அவர்களுக்கும் எமது நன்றிகள்!

____________________________________________

புதிய வினவில் தற்போது போல கட்டுரைகள் தினம் ஒன்று வெளிவரும். கூடுதலாக பார்க்க வேண்டிய செய்திகள், தெரிவு செய்யப்பட்டு சுருக்கமான விமரிசனத்துடன் தினம் நான்கைந்து வரலாம். ஏன் இந்த லாம்? எமது வேலைச்சுமைகளின் விருப்பத்திற்கேற்பவே செயல்பட வேண்டியிருப்பதால் அதை தொடர்ச்சியாக நிறைவேற்றுவோம் என்று உறுதி கூற இயலவில்லை. ஆனாலும் எழுதும் தோழர்களை முறைப்படுத்தி திட்டமிட்ட முறையில் அதை எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ கண்டிப்பாக செய்வோம்.

பழைய வடிவமைப்பில் வினவு வந்த போது நிறைய தொழில்நுட்ப பிரச்சினைகள் இருந்தன.  முக்கியமாக தளம் திறப்பதற்கு நிறைய நேரம் எடுத்தது. அப்போதே புதிய தேவைகளுக்கேற்ப தளம் வடிவமைக்கும் வேலையை துவக்கினோம். கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆகி தளம் ஒரு நிலையை அடைந்து,  வேறு சில குறுக்கீடுகள் காரணமாக கொஞ்சம் தாமதத்தோடு இப்போது அறிமுகம் செய்கிறோம்.

பத்திரிகைகள் கொண்டுள்ள வசதிகள் மற்றும் வலைப்பூக்கள் தோற்றுவிக்கும் ஒரு நெருக்கமான உணர்வு இரண்டையும் புதிய வினவு கொண்டிருக்கிறது. பத்திரிகை என்றால் அதிகம் செய்திகளே வெளியிடப்படுவதால் தலைப்பு வாரியாக செய்திகளை தெரிந்து கொள்ளும் வசதியே அங்கே முக்கியமானதாக இருக்கும். அங்கே வாசகருக்கும், எழுதுபவருக்கும் உறவு ஏற்பட வழியில்லை. வலைப்பூக்கள் தனிப்பட்ட டயரிக் குறிப்புகளை மனமொத்தவர்களோடு பகிருபவை. முடிந்த அளவு இந்த இரண்டையும் புதிய வினவில் கொண்டுவருவதே நாங்கள் விரும்பியது. பத்திரிகை போல தலைப்பு வாரியாக கட்டுரைகள், செய்திகளை தேடவும், வலைப்பூக்கள் போல நெருக்கமாகவும் இருக்கும்  உணர்வை இந்த புதிய வடிவமைப்பு தரும் என்று நம்புகிறோம்.

புதிய தளத்தின் வசதிகள்:

1) புதிய தளம் விரைவாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

2) முகப்பு பக்கத்தின் இடது மேல்பக்கத்தில் ஹோம், அங்காடி, அறிமுகம், நூல்கள் முதலான பக்கங்கள் இருக்கும். மேலும் எழுத்துக்களை பெரிதாக்கவும், சிறிதாக்கவும், பிளஸ், மைனசை அழுத்தி மாற்றலாம். எழுத்தை சீரான நிலைக்கு திரும்பவதற்கும் அதன் அருகிலேயே வசதி இருக்கிறது.

3) முகப்பு பக்கத்தின் வலது மேல்பக்கத்தில் சமூக வலைத்தளங்களின் இலச்சனைகள் இருக்கும். அதை அழுத்துவதன் மூலம் நீங்கள் அந்தந்த தளங்களை அடைய முடியும். அதன் அருகிலேயே லாகின் செய்யவும் ரிஜிஸ்டர் செய்யும் வசதி இருக்கிறது. உங்களது மின்னஞ்சல் முகவரியுடன் உங்களது பெயரோடு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு முடிந்ததும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆக்டிவேஷன் மின்னஞ்சல் ஒன்று வினவிலிருந்து வரும். அதன் மூலம் நீங்கள் பதிவு செய்த உறுப்பினர் தகுதியை அடையலாம்.

விரைவில் உறுப்பினராக இணைந்தவருக்கு மட்டும் மட்டறுத்தலில்லாத மறுமொழி அளிக்கும் சேவையை வழங்க இருக்கிறோம் , இது அனானிகள் பின்னூட்டங்களை குறைத்து விவாதம் மேலும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறோம்.உங்கள் புகைப்படத்தையோ அல்லது நீங்கள் விரும்பும் படத்தையோ கிரவதார் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதனால் நீங்கள் எங்கு சென்று பின்னூட்டம் இட்டாலும் உங்கள் பெயர்  படத்தோடு சேர்ந்து வரும். கிரவதார் பதிவு செய்யாதவர்களுக்கு தானியங்கி முறையில் கார்ட்டூன் படம் இங்கு அளிக்கப்படும். இது ஒவ்வொரு முறையும் நீங்கள் பின்னூட்டமிடும் போது வெளிவரும். படத்தின் மூலம் பின்னூட்டமிடுபவரை வாசகர் எளிதில் அடையாளம் காணலாம்.

4) முகப்பு பக்கத்தின் வினவு டைட்டிலுக்கு கீழே அறிவிப்புப்  படங்கள் தேவையை ஒட்டி வெளியடப்படும். தளத்தை திறப்பவர்களுக்கு சுற்று முறையில் படங்கள் ரேண்டமாக வரும்.

5) படத்திற்கு கீழே நடப்பு நிகழ்வுகள் என்ற ஒரு வரி பிளாஷ் மூலம் கடைசியாக வந்த கட்டுரைகளை காணலாம். அதில் தோன்றி மறையும் கட்டுரைகளை அழுத்தினால் அந்த கட்டுரையின் பக்கத்திற்கு செல்ல்லாம். இந்த ஒரு வரி ப்ளாஷ் லைனுக்கு அருகிலேயே தளத்தில் தேட கூகிள் தேடல் பெட்டியும் உள்ளது.

6) இதற்கு கீழே இடது பக்கம் உள்ள சிறு பத்தியில் பக்கங்களும், கேட்டகிரி எனப்படும் உட்தலைப்பு வகைகளும் இடம் பெறும்.  கட்சிகள், அதிகார வர்க்கம், நாடாளுமன்றம், உலகமயம், அமெரிக்கா,  அனுபவம், படைப்பு என வினவில் வரும் எல்லா கட்டுரைகளும் இந்த வகைகளில் இடம்பெறும் என்பதால் குறிப்பிட்ட தலைப்பில் நீங்கள் தேடுவதற்கு இந்த தலைப்புகளை அழுத்தினால் போதும். அது தொடர்பான அனைத்து கட்டுரைகளையும் காணலாம்.

7) நடுமத்தியில் நான்கு தலைப்பில் பெட்டிகள் நீலநிறத்தில் இடம்பெறுகின்றன. “புதிய பதிவுகள்” என்ற தலைப்பில் புதியதாக வெளிவரும் கட்டுரைகள் இடம்பெறும். ஒவ்வொன்றிலும் கட்டுரை வெளியான தேதி, நேரம், தலைப்பு, ஒருவரிச் சுருக்கம், பின்னூட்டங்கள் எண்ணிக்கை, மேலும் வாசிக்க என்பவை இடம்பெற்றிருக்கும். இந்த பக்கதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் போக மீதியை கீழே உள்ள பக்க எண்ணை அழுத்துவதன் மூலம் அறியலாம்.

8.  இதற்கு அடுத்தபடியாக “இப்போது விவாதத்தில்” என்ற பெட்டி இருக்கும். இதை அழுத்தினால் கடைசியாக மறுமொழி வந்துள்ள  கட்டுரைகளின் பின்னூட்டங்களை பார்க்கலாம். ஒவ்வொரு பின்னூட்டமும் கட்டுரையின் தலைப்பு, மற்றும் கடைசியாக அந்தக் கட்டுரைக்கு வந்துள்ள ஐந்து பின்னூட்டங்களின் ஒருவரிச் சுருக்கத்தோடு இருக்கும். இதில் தேவையானவற்றை அழுத்தினால் அந்தெந்த பின்னூட்டதத்திற்கு செல்லலாம். தொடர்ச்சியாக விவாதிப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

9) அடுத்து சிறப்பு பதிவுகள் என்ற பெட்டி இருக்கும். இதில் வினவில் கடைசியாக வந்துள்ள சிறப்பு கட்டுரைகளின் தலைப்புகள் விவரங்களோடு இருக்கும். இக்கட்டுரைகள் வினவு ஆசிரியர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவை.

10 முகப்பு பத்தியின் வலது பக்கத்தில் உள்ள பகுதியில் சமூக வளைத்தளங்களில் இணையும் வசதியும், அறிவிப்புகளும் இடம்பெறும்

11) அடுத்து முகப்பு பக்கத்திலிருந்து ஒரு கட்டுரையின் தலைப்பை அழுத்தினால் அதன் பக்கம் திறக்கும். இதில் கட்டுரை தலைப்பு, ஆசிரியர் பெயர், நேரம், தேதி மற்றும் கட்டுரையின் ஒரு வரிச்சுருக்கம் இருக்கும். இதன் கீழ் பின்னூட்டங்களின் எண்ணிக்கை, சமூக வலைத்தளங்கள் பகிர மற்றும் புக்மார்க் செய்வதற்கான வசதி இருக்கிறது. கூடவே பிடிஎப், அச்சிடுதல் ஆகியவற்றுக்கும் வசதிகள் இருக்கும்.

12) இதன் கீழே பதிவு, மறுமொழிகள் என்று இரண்டுபெட்டிகள் இருக்கும். பதிவை அழுத்தினால் முழுக்கட்டுரையும் வரும். கட்டுரையின் முடிவில் தொடர்புடைய பதிவுகள் பட்டியலும் அதன் கீழ் இந்த பக்கத்தின் மேலே உள்ள சமூக வலைத்தளங்களில் பகிரும் வசதி, பிடிஎப், அச்சிடுக அனைத்தும் இங்கேயும் இருக்கும்.

13) இந்த பதிவு பக்கத்தின் வலது பத்தியில் இந்த கட்டுரையை யார் எழுதினார்களோ அவர்களது  கடைசி ஐந்து கட்டுரைகளின் இணைப்புகளும், இந்த கட்டுரை எந்த உட்தலைப்பு, குறிச்சொற்களில் இடம் பெற்றிருக்கிறதோ அவற்றில் இருந்து ஒரிரு தலைப்புகளில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் இணைப்பும் இருக்கும். ஒரு கட்டுரையை வைத்து இன்னும் விரிந்த அளவில் பல கட்டுரைகளை தேடும் ஆர்வத்தை இந்த வசதிகள் ஊக்குவிக்கும் என நம்புகிறோம்.

14) அடுத்து பதிவு பக்கத்தின் மறுமொழிகள் வசதியைப் பார்க்கலாம். கட்டுரையின் பக்கத்துக்கு வந்ததும் பதிவு, மறுமொழிகள் என்ற இரண்டு பெட்டிகளை பார்க்கலாம். அதில் மறுமொழி பெட்டியை அழுத்தினால் அந்தக் கட்டுரையின் மறுமொழிகள் பக்கத்துக்கு நேரடியாக செல்லலாம். ஒவ்வொரு மறுமொழியிலும் விவாதிப்பவரது பெயர், பின்னூட்டமிட்ட நேரம், தேதி, மற்றும் அதன் யூஆர்எல்லை சுட்டும் இரட்டைச் சங்கிலியையும் பார்க்கலாம். இந்த சங்கிலியில் மவுசை வைத்தால் திரையின் கீழே அதன் யூஆர்எல் முகவரி வரும். இதன் மூலம் விவாதத்தில் நீங்கள் எவருடைய பின்னூட்டத்தின் இணைப்பையும் சுலபமாக அளிக்க முடியும்.

பின்னூட்டங்களை கடைசியில் உள்ள பின்னூட்டப்பெட்டியின் மூலமும் அளிக்கலாம். இல்லையேல் யாருக்காவது பதிலளிக்க விரும்பினால் அவரது பின்னூட்டத்தின் கீழே உள்ள ரிப்ளையை அழுத்தினால் போதும். இப்போது பின்னூட்ட பெட்டி அவரது பின்னூட்டத்திற்கு கீழேயே தோன்றும். இதனால் அவரது பின்னூட்டத்தை திரையில் பார்த்தவாறே உங்கள் பதிலை எழுதலாம். முன்பு ரிப்ளையை அழுத்தினால் பின்னூட்ட பெட்டி கடைசியில் எல்லா பின்னூட்டங்களுக்கும் இறுதியில்தான் தோன்றும். தற்போது அந்த இடர் இல்லை.பின்னூட்டங்கள் அனைத்தும் எண்ணால் வலது பக்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும். விவதாங்கள் நடந்தால் அது அந்த எண்ணின் உட்பிரிவு எண்ணாக தோன்றும். இதனால் எண்ணை வைத்தும் மனதில் கொண்டு சுலபமாக விவாதிக்கலாம்.

15) மறுமொழி, பதிவு என்ற இரண்டு பெட்டிகளும் ஒரே பக்கத்தில் இருப்பதால் இவற்றை அதிவேகமாக திறக்கலாம். ஒவ்வொன்றும் லோடாகி திறக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டையும் இப்படி அதிவேகத்தில் திறக்கும் வசதி இருப்பதால் மறுமொழிகளின் தேவையைப் பொறுத்து நீங்கள் கட்டுரையை படிக்க வேண்டியிருந்தால் அதற்கு இந்த வசதி உதவியாக இருக்கும்.

16) இடது பக்கத்தில் உள்ள கேட்டகிரி எனும் உட்தலைப்புகள் அழுத்தினால் சம்பந்தப்பட்ட தலைப்புகள் உள்ள பக்கங்களுக்கு செல்வதோடு கீழே பக்க எண்ணை வைத்து அதில் எத்தனை கட்டுரைகள் உள்ளன என்பதையும் அறியலாம். இதுவரை வந்த கட்டுரைகளை அனைத்தையும் இந்த தலைப்புகளின் இணைக்கும் பணியில் இருக்கிறோம். முடிந்தவுடன் அறிவிக்கிறோம்

ந்த அறிமுகம் உங்களுக்கு போதுமானதாக இல்லை என்றால் விரைவில் படக்குறிப்புகளுடன் விளக்குகிறோம். தொடர்ந்த பழக்கத்தில் இந்த வசதிகளை பயன்படுத்தும் முறையை எளிதாக அறியலாம். மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள், விளக்குகிறோம்.

இவையெல்லாம் பல ஆங்கிலத் தளங்களில் இடம்பெறும் வசதிகள் என்றாலும் தமிழ்ப்பதிவுலகின் பெரும்பான்மையினர் பயன்படுத்தும் இலவச சேவை வழங்கிகளால் தரப்படுவதில்லை. முடிந்த வரையில் அந்த வசதிகளை இங்கே அளித்திருக்கிறோம்.

எனினும் இவையெல்லாம் வினவும், வாசகர்களும் வளர்வதினூடாகத்தான் சிறப்பாக பயன்படுத்த முடியும். ஒருவேளை ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் நமது வளர்ச்சி புதிய சிகரங்களை அடைந்தால் இப்போதைய வசதிகள் போதாததாக இருக்கலாம். அப்போது அடுத்த வெர்ஷனை ஆலோசிப்போம்.

அது வரை இந்த புதிய வினவை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம். நன்றி.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!