privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!

மைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!

-

அதியமான் ஒரு மதவாதி! – மைக்மோகன் தீர்ப்பு!

மைக்மோகன்வினவில் எந்தக் கட்டுரை வந்தாலும் பின்னூட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் அபாயம் குறித்து தவறாது லிங்க் போட்டு பேசும் அதியமானை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவ்வப்போது கோபித்துக் கொண்டு வினவில் மறுமொழி இடாமலும் இருப்பார். ஆனால் தவறாது படிப்பார்.

ஒருமுறை ஜெயமோகன் எனும் மைக்மோகன் தளத்தில் “வினவில் உரையாடுவது வீண் வேலை, இனி அங்கே விவாதிக்கப் போவதில்லை” என்று அவர் பிரகடனம் செய்த கடிதம் வெளிவந்தது. மைக்மோகனும் கூட அதை மாபெரும் வெற்றிச் செய்தியாக வாசகர்களுக்கு அறிவிப்பதற்காக வெளியிட்டிருக்கலாம். ஆனாலும் அதியமானால் அப்படி இருக்க முடியவில்லை. மீண்டும் வினவில் வந்து பேச ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் அவர் வெறுக்கும் கம்யூனிசம், வினவு வழியாக ஆயிரக்கணக்கான வாசகரை ‘தவறான’ பாதைக்கு அழைத்துச் செல்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் இனி எழுதமாட்டேன் என்ற வெற்றுப் பிரகடனத்தை தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் வினவுக்கு வந்தார்.

பிறகு அன்றாடம் நான்கைந்து புதிய புதிய பெயர்களில் வந்து புலம்ப ஆரம்பித்தார். இது வாசகரை குழப்பும் வேலை என்றும் ஏதாவது ஒரு பெயரில் மட்டும் பேசுமாறு கோரியதற்கு அவர் இணங்கவில்லை. மீண்டும் கோபித்துக் கொண்டிருக்கிறார்…

இங்கு வாசகர்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதியமானுக்கு எதிர் கருத்து கொண்டிருப்பவர்களை அவர் தகாத வார்த்தைகளால் பேசுவது வினவில் மட்டும்தான். வினவைக் கூட அவர் அப்படி அவ்வப்போது அழைப்பார். ஆனால் மைக்மோகன் தளத்திற்கு சென்றால் ஜெயேந்திரனது கால்களில் விழுந்து கிடக்கும் அவாள்கள் போல பவ்யமாக பணிந்து பேசுவார். மைக்மோகனோடு கருத்து வேறுபாடு  இருந்தாலும் அதை ” என்ன ஆண்டவரே, கொஞ்சம் எங்களையும் பரிசீலியுங்கள்” என்றுதான் முன்வைப்பார்.

முக்கியமாக மைக்மோகனது தளத்தில் மறுமொழி என்ற ஜனநாயக உரிமை இல்லை. இடையில் அப்படி அனுமதித்து, தனது இ(ம்சை)சத்தை புரிந்து  கொள்ளும் தரம் இந்த தமிழுலகிற்கு இல்லையே என்று தடாலடியாக பின்னூட்டப் பெட்டியை நீக்கியும் விட்டார். எனினும் விவாதங்களை மறுக்கும் மைக்மோகனை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், விவாதங்களை தடையின்றி ஊக்குவிக்கும் வினவை மாபெரும் பாசிஸ்ட்டாகவும்தான் அதியமான் கருதுகிறார்.

அதியமானது இந்த பக்திக்கு அடிப்படை என்ன? கம்யூனிசத்தை விக்கி பீடியா லிங்கு மூலம் அழித்து விடலாம் என்று எண்ணிய அதியமான் அதற்கு மேல் சிந்திக்கும் திறனுடையவர் அல்லர். அவரால் விவரங்கள், புள்ளிவிவரங்களை தரமுடிந்த அளவுக்கு அவற்றிலிருந்து உண்மையை கண்டறியும் கலையை அறிய முடியவில்லை.

மைக்மோகனோ இத்தகைய விவரங்களை தவிர்த்து விட்டு உள்ளொளி, அறம், மனித குலத்தின் ஆகப்பெரும் கனவு என்று அகநிலை அம்சங்களை அதாவது வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட எண்ணப் படிமங்களை அடித்து விடுவதில் வல்லவர். இன்னமும் கூட கோடம்பாக்கம் “அண்ணன் தங்கை சென்டிமெண்ட்” மூலம் தமிழக மக்களை அழவைக்கும் போது மைக்மோகனது சென்டிமெண்டிற்கும் மார்கெட் இருந்தாக வேண்டுமே? எனினும் இந்த வார்த்தை சென்டிமெண்ட் எல்லை மீறும் போது விவரங்களையும், புள்ளிவிவரங்களையும் பொய்யாகக்கூட சொல்வார் மைக்மோகன்.

மைக்மோகன் அளவுக்கு கம்யூனிசத்தை எதிர்த்து கன்வின்சிங்காக நம்மால் பேச முடியவில்லையே என்ற மரியாதைதான் மைக்மோகன் மீது அதியமான் கொண்டிருக்கும் பக்திக்கு அடிப்படை. ஆனாலும் அண்ணன் அதியமான் ஒரு போதும் மைக்மோகனது உளவியலை தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் சோகம். அந்த சோகத்தை டபுள் ஸ்கொயராக்கி சமீபத்தில் ஒரு மாபெரும் சோகம் அதியமானுக்கு நடந்திருக்கிறது. வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர் சகஜமாக இருக்க முயன்றாலும் அண்ணன் பட்ட சோகத்தை இங்கே அனைவரும் புரிந்து கொண்டு உச்சு கொட்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அந்த கதையினை இங்கு தருகிறோம்.

மைக்மோகனிசம், முதலாளித்துவம்: யார் பெரியவர்?

அண்ணா ஹாசாரே, காந்தியம், ஊழல்கள் குறித்து சமீபத்தில் மைக்மோகன் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதிய அதியமான்,” அருமையான கட்டுரைகள், பல விடயங்களை தெளிவுபடுத்தின, முக்கியமாக இடதுசாரி எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றி…” என்று போற்றுதலோடு குறிப்பிடுகிறார். கூடுதலாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் ஊழல் அரசுகள் இருந்தன என்று மைக்மோகன் கூறியிருந்ததை ஏற்க முடியவில்லை என்று வழக்கம் போல பணிவாகவே மற்றும் லிங்குகளுடன் தெரிவித்திருந்தார்.

இது அதியமான் எப்போதும் கூறும் கருத்துதான். வினவில் கூட நல்ல முதலாளித்துவ அரசுகளாக அவர் சில பல ஐரோப்பிய நாடுகளின் பட்டியலை திரும்பத் திரும்பக் கூறுவார். ஒரு முறை ரியல் என்கவுண்டர் என்ற தோழர் அந்த தூய முதலாளித்துவ நாடுகளின் உண்மைகளை, லிங்குகள் மூலம் போட்டு சவால் விட்ட பிறகு, அதியமான் அதை மறுக்க வில்லை. மாறாக ஊழல் இல்லாத நாடு, சொக்கத் தங்கமான நாடு எதுவும் கிடையது என்று ஒரே போடாக முடித்துக் கொண்டார்.

அதியமானைப் பொறுத்த வரை தனது குருநாதர் மைக்மோகன் எல்லா விசயத்திலும் சரியான கருத்துக் கொண்டிருக்கும் போது முதலாளித்துவத்தோடு மட்டும் கொஞ்சம் மாறான கருத்து கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. அதை மட்டும் குருநாதர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அதியமான் நோக்கம்.

அதியமானது இந்தக் கடிதத்தை வெளியிட்ட மைக்மோகன் விரிவான பதில் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில்,

அன்புள்ள அதியமான்,

பொதுவாக நான் வாதங்களை தவிர்க்க விரும்புகிறவன். முன்முடிவுள்ள ஒருவரிடம் விரோதம் வரை விவாதித்துச் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே மதவாதிகளிடம் விவாதிப்பதில்லை. அதே கரணத்தால்தான் அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.

மன்னிக்கவும் அதியமான், நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளியல் முன்மாதிரியை ஒரு மத நம்பிக்கை போல முன்வைக்கிறீர்கள். நீங்கள் நம்புவதை நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.” என்று ஆரம்பிக்கிறார்.

இதன் பொருளென்ன? அதியமான் ஒரு மதவாதி. மத நம்பிக்கை போல முதலாளித்துவத்தை நம்புகிறார். அதற்காகவே எந்த விசயத்தையும் தனது மதநம்பிக்கைக்கேற்ப மறுக்கவோ, நிறுவவோ முயற்சிக்கிறார். இத்தகைய மதவாதிகளிடம் தான் பேசும் வழக்கம் கொண்டவனில்லை என்கிறார் மைக்மோகன். தோழர் அசுரன் கூட ஒரு போதும் மதவாதி என்று அதியமானை விளித்ததில்லை  என்பது இங்கே நினைவுகூறத்தக்க ஒன்று.

அதியமான் மதவாதி என்றால் டோண்டு ராவகன் போன்றோர் அறிவார்ந்தவாதியா? தெரியவில்லை. ஏனெனில் இந்த பார்ப்பனிய தாசரான டோண்டு இன்னமும் மைக்மோகனோடு ‘உரையாடு’கிறார். இது போல பல ஆர்.எஸ்.எஸ் அம்பிகளெல்லாம் மைக்மோகனோடு தொடர்ச்சியான ‘உரையாடல்களில்’ இருப்பவர்கள்தான். மைக் மோகனது வாசகர்கள் யார் என்று சர்வே செய்து பார்த்தால் அதில் பெரும்பான்மையினர் அட்சர சுத்தரமான மதவாதிகள்தான்.

சரி, இப்போது அதியமானை மதவாதி என்று சொல்லும் அளவுக்கு என்ன வந்தது? அதுதான் மைக்மோகனது உளவியலை அதியமான் புரிந்து கொள்ளவில்லை என்கிறோம். இந்த உலகில் கம்யூனிசம், ‘இந்துயிசம்’, முதலாளித்துவ இசம் என்று எத்தனை இசங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மைக்மோகன் எப்போதும் நிராகரிப்பார். ஏனெனில் இந்த இசங்களை விட மைக்மோகனிசம் என்ற இசம்தான் உலகிலேயே உயர்ந்த இசம். அதை ஏற்றுக் கொண்டவர்களோடு மட்டும்தான் மைக்மோகன் உரையாடுவார். யாரெல்லாம் மைக் மோகனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ, இல்லை அதில் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் மைக்மோகனைப் பொறுத்த வரை மதவாதிகள்தான். மைக்மோகனிசம் என்றதும் ஏதோ புதுச் சரக்கு என்று நினைத்து விடாதீர்கள். அது நவீனப் பார்ப்பனியம் என்ற புதிய மொந்தைச் சரக்குதான்.

சுயமோகனிசத்தை கேள்விக்கிடமற்ற நம்பிக்கையோடு பின்பற்றாதவர்களை மைக்மோகன் மதவாதி என்கிறார் என்றால் எதைக் கொண்டு அடிக்க, என்னத்தைச் சொல்லி அழ? ஒரு மத ஆதினம், தனது மத நம்பிக்கையை ஏற்காதவர்களை மதவாதி என்றால் எது மதம், எது மத நம்பிக்கை, எது  மதவாதம்?

அதியமான் ஜோசியம், பாரத தர்மம், யோகம், இலக்கியம், நல்ல இந்து மதம்,  கலை, கம்யூனிச எதிர்ப்பு என்று எல்லாவற்றிலும் சுயமோகனிசத்தை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் முதலாளித்துவத்தை மட்டும் சுயமோகனிசத்திற்கு மேல் கருதுகிறார் இல்லையா, இதுதான் பிரச்சினை. கூடவே அவர் ஒன்ஸ் அப்பான் எ டைமில் எழுதிய அரதப் பழசான இத்துப் போன கட்டுரைகளை மாபெரும் அறிவுப்படையலாக லிங்குகள் என்ற பெயரில் போட்டிருப்பது மைக் மோகனை நிச்சயம் படுத்தியிருக்கும். இதை அன்றாடம் பார்க்கும் நமக்கே எரிச்சல் வரும்போது மைக் மோகனுக்கு எவ்வளவு லார்ஜ்ஜாக இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

ஊழல்: மைக் மோகன், அதியமானது அபத்த உளறல்கள்!

னினும் அதியமானை வெறுமனே மதவாதி என்று முத்திரை குத்தி மட்டும் மைக்மோகன் சென்று விடவில்லை. முதலாளித்துவ நாடுகளில் முன்னர் ஊழல் இருந்ததை விவரிக்கிறார். அதன்மூலம் அதியமானது முதலாளித்துவ தூய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறார். அதில் அவர் சொல்லியுள்ளதின் சுருக்கத்தை மட்டும் பார்ப்போம்.

மைக்மோகன் கருத்துப்படி, மன்னராட்சியாக இருந்த ஐரோப்பிய நாடுகளில் குடியரசு வந்த போது பண்ணையார்களும், முதலாளிகளுமே அரசின் இடங்களை நிரப்பியதால் ஊழல் மலிந்திருந்ததாம். பின்னர் மக்கள் போராட்டங்களின் காரணமாக அரசியலில் சாதாரணமானவர்கள் வந்த போது ஊழல் கிடையாதாம். எனினும் இன்று முதலாளித்துவ நாடுகளில் நாம் நினைக்கும் ஊழல்களை சட்டப் பூர்வமாக்கியிருக்கிறார்களாம். இருந்த போதும் மக்கள் நலத்திட்டங்கள், அன்றாட அரசியல் வாழ்வில் ஊழல் கிடையாதாம், இதுதான் மைக்மோகனது கருத்து.

எதை எடுத்தாலும் ஆதி முதல் அந்தம் வரை அரசியல், தத்துவம், சித்தாந்தம், கலை, கட்சிகள், நபர்கள் என்று இந்த உலகில் உள்ள சகலவற்றையும் ‘ஆய்வு’ செய்து கூறும் மைக்மோகனது கூற்றில் உள்ள அபத்தங்களை எளிமையாக சுட்டிக் காட்ட முடியுமென்றாலும் நாமும் அதே போல ஆதி முதல் அந்தம் வரை எல்லா எழவையும் பேச வேண்டியிருக்கிறது. இதுவே மைக்மோகனைப் பற்றி எழுதுவதற்கு மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. இதை இன்னும் ஆழமாக ஏங்கெல்ஸ் ” டூரிக்கிற்கு மறுப்பு” நூலில் ஜெர்மன் அறிவாளிகள் குறித்து விளக்கியிருப்பார். போகட்டும்.

முதலாளித்துவம் என்றால் என்ன என்று மைக்மோகனுக்கும் சரி, அதியமானுக்கும் சரி நிச்சயமாகத் தெரியவில்லை. அவர்கள் இருவருமே தத்தமது விருப்பம் போல அதை தயாரித்திருக்கிறார்கள்.

தனி முதலாளி, தனது இருப்பைக் காக்கவும், அதிகரிக்கவும், போட்டி முதலாளியாகி, பின்னர் தான் மட்டுமே இருந்தால்தான் இலாபம் அதிக அளவில் ஈட்ட முடியும் என்று ஏக போக முதலாளியாகி, பின்னர் அதை அரசு மூலம் நிலை நிறுத்த காலனிய நாடுகளை பிடிக்கும் ஏகாதிபத்தியங்களை உருவாக்கி, தற்போது ஒட்டு மொத்த உலகையும் ஒரே மூச்சில் சுரண்டுவதற்காக மேல் நிலை வல்லராசாகவும் தங்களது அரசுகளை மாற்றி விட்டார்கள்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்ன வென்றால் ஒரு முதலாளியும், முதலாளி வர்க்கமும் தனது தொழிலை நிறுவதற்காக மற்ற முதலாளிகள், மற்ற வர்க்கங்கள், மற்ற நாடுகள் அனைத்தையும் வென்று காட்டுவதே அவர்களது உயர்வாழும் தன்மையின் இரகசியம். இதை ஆயுத பலத்தினாலா, இல்லை அரசு பலத்தினாலா, இல்லை ஊழல் பலத்தினாலா எதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் சூழல், தேவையைப் பொறுத்தது.

முதலாளித்துவ சமூகம் என்று அடிக்கடி பலரும் பேசுகிறார்கள். இதில் ஏதோ சில முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள் என்று மட்டும் எளிமையாக புரிந்து கொள்வது சரியல்ல. ஒரு முதலாளித்துவ சமூகம் நீடிக்க நீடிக்க என்ன நடக்கிறது, சமூகம் எப்படி மாறுகிறது என்பதே முக்கியமானது. அதன்படி அந்த சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், சில முதலாளிகள் மேலும் மேலும் சொத்துக்களை சேர்ப்பதும் நடக்கிறது. அதனால்தான் இன்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏழைகள், பணக்காரர்களுக்கான சொத்து இடைவெளி இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதில் மேலை நாடுகளில் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தனது நிலையினை ஒத்த வர்க்கங்களை விட அதிக சம்பளம், தரமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறது என்பதன் காரணம் அந்த நாடுகளின் முதலாளிகள் முழு உலகையும் சுரண்டி அதில் கொஞ்சம் தனது நாட்டு தொழிலாளி, நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கிறார்கள் என்பதே. தற்போது இதுவும் பிரச்சினைக்குள்ளாகி வருகிறது.

இந்த கட்டுரையின் வரம்பிற்குள் நின்று மட்டும் பேசுவதாக இருந்தால் முதலாளி வர்க்கம் தனது நலன்களுக்காக அரசு, அரசாங்கத்தை செயல்படவைப்பதில் முனைப்பாக இருக்கும். சொல்லப் போனால் அந்த அரசாங்கங்களே முதலாளிகளது வர்க்கத்தின் பிரதிநிதியாகவே செயல்படும். ஆனால் ஒரு தொழிலில், ஒரு நாட்டில், ஒரு கண்டத்தில் முதலாளிகளுக்கிடையே இருக்கும் போட்டி என்பது அரசிலும் பிரதிபலிக்கும். அப்போது தனது குறிப்பான தேவைகளுக்காக குறிப்பிட்ட முதலாளிகள் ஊழல் முறையின் மூலம் அந்தந்தக் கால அரசாங்கங்களை விலைக்கு வாங்குகிறார்கள், அல்லது செயல்பட வைக்கிறார்கள்.

ஆக மனித சமூகத்தின் வரலாற்றுக் காலத்தில் முதலாளித்துவ சமூகங்களில்தான் முதன்முதலில் ஊழல் என்பது பிரம்மாண்டமாக உருவெடுக்கிறது. அல்லது அப்படி தோன்றுவதற்கான சமூக நிலைமைகள் உருவாகிறது. இதை மன்னராட்சிக் காலத்தில் பெண் கொடுத்தான், தங்கம் கொடுத்தான் என்று ஒப்பிட்டு இணை வைத்துப் பேசுவது அபத்தம. தன்மையிலும், பொருளிலும், அது வேறு, இது வேறு.

இன்று ஊழல் என்பது முதலாளித்துவ நாடுகளில் சட்டப்பூர்வமாகியிருக்கிறது என்பதை மைக்மோகன் ஒத்துக்கொள்கிறார், அதியமான் ஒத்துக் கொள்ளவில்லை. அதியமானைப் பொறுத்த வரை சூதாட்டத்தைக் கூட சட்டப்பூர்வமாக நடத்தலாம். இதில் மைக்மோகன் புரிந்து கொள்ளத் தவறியிருக்கும் விசயம் என்னவென்றால் முதலாளித்துவ நாடுகளில் ஊழல் என்பது ஒன்று சட்ட பூர்வமாகவோ, இல்லை சட்ட விரோதமாகவோ இருந்தே தீரும். ஏனெனில் முதலாளித்துவத்தின் அடிப்படையான வாழ்க்கைக்கு அது மிகவும் அத்தியாவசியம். முதலாளித்துவம் என்பதே ஊழலை அடிப்படையாக வைத்து இயங்கும் ஒன்றுதான்.

ஊழலில் கடைசி இடம், முதல் இடம்: எது அளவு கோல்?

தியமான் போற்றும் ஸ்காண்டிநேவிய (டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து) நாடுகளை எடுத்துக் கொள்வோம். ஸ்வீடனது போபார்ஸ் ஆயுத கம்பெனி தனது விற்பனைக்காக புரோக்கர்களை பிடித்து கமிஷன் கொடுத்து இந்தியாவுக்கு விற்கிறது. இந்த கமிஷன் இல்லை என்றால் அந்த தொகை விற்பனைத் தொகையில் கழிக்கப்பட்டிருக்கும். எனவே இது இந்தியாவுக்கு நட்டம் அல்லது ஊழல் என்றாலும் ஸ்வீடனைப் பொறுத்தவரை ஊழல் கிடையாது. ஸ்வீடனுக்கு மட்டுமல்ல எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் தமது விற்பனையைப் பெருக்க இப்படி இலஞ்சம் கொடுப்பதை வழமையாக கொண்டிருக்கின்றன.

அடுத்து இந்த உலகில் ஆயுதங்களின் தேவை அதிகம் இருந்தால்தான் போபார்ஸ் நிறுவனம் தனது ஆயுங்களை தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதும், அந்த நாடுகள் செயற்கையான ஒரு பதட்டத்தில் இருப்பதையும் அவர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் புரட்சி நடத்த விரும்பும் ஒரு போராளிக் குழுவுக்கு இவர்கள் கடன் கொடுத்தாவது விற்பது வழக்கம். மேலும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் ஆயுதங்களில் பெரும்பான்மை மேலை நாடுகளைச் சேர்ந்தவைதான்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா கம்பெனி ஸ்ரீபெரும்புதூரில் ஒரு ஆலை அமைத்து 3000 ரூபாய் குறைவான கூலி கொடுத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுத்து, இன்னும் பல சலுகைகளோடும், சுரண்டல்களோடும் தொழில் நடத்துகிறது. பெரும் இலாபத்தை இங்கிருந்து கொண்டு செல்கிறது. இதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும், சட்ட பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் இவர்கள் அரசு அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சி அரசிசயல்வாதிகளுக்கும் இலஞ்சம் கொடுக்கிறார்கள். இப்போது உலகளவில் இலஞ்சம் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பின்லாந்து, ஸ்வீடன் கடைசி இடத்திலும் வருகிறதென்றால் இதை நாம் ஏற்க இயலுமா? மைக்மோகனும், அதியமானும் ஏற்கிறார்கள்.

அடுத்து மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் ஊழல் இல்லை என்பதால் மக்கள் நிம்மதியாக மேலை நாடுகளில் வாழ்வதாக மைக்மோகன் நம்புகிறார். அந்த நிலை இங்கு வர அண்ணா ஹாசாரே போன்றவர்களது போராட்டங்கள் உதவும் என்பதும் அவரது புரிதல்.

இதையும் கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம்.

மேற்குலகின் மக்கள் நலத் திட்டங்கள் – காரணம், பின்னணி என்ன?

முதலில் மேலை நாடுகள் அத்தனையும் 50 ஆண்டுகள் முன்புவரை முழு உலகிலும் காலனிய நாடுகளைக் கொண்டிருந்தன. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், தென்னமெரிக்காவிலும் இருந்து இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தை தற்போது வட்டியில்லாமலாவது திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு அவர்கள் அப்படி கொடுத்து விட்டால், மறுகணமே அந்த மேலை நாடுகள் பிச்சைக்கார நாடுகளாகிவிடும். எனவே இப்படி கொள்ளையடித்த பணம்தான் அந்தெந்த நாடுகளில் சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனால்தான் அந்த நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கம் பிற்போக்காக இருந்தது. அந்த வகையில் இது போராடாமல் இருப்பதற்கான ஊழல் என்றும் சொல்லலாம்.

மேலும் ரசிய, சீன புரட்சிகளுக்குப் பிறகு முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச அபாயம் கருதியும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை வேறுவழியின்றி கொண்டுவந்தன. எனினும் மேலை நாடுகள் பல தற்போதைய முதாளித்துவ நெருக்கடிகளால் அந்த நலத்திட்டங்களை ரத்து செய்து வருகின்றன. இதை எதிர்த்து பிரான்சு முதல் கிரேக்கம் வரை மக்கள் போராடுகிறார்கள். பொதுவில் ஐரோப்பாவின் தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தகைய போராட்ட மரபு கிட்டத்தட்ட 200 வருடங்களாகவே உண்டு. ரசியப் புரட்சி அதன் உச்சம்.

இடையில் தொழிலாளி வர்க்கத்தை முடக்குவதற்காக செய்த நலத்திட்டங்கள் இப்போது இல்லை எனும் போது அந்த போராட்டங்கள் மீண்டும் வருகிறது. எனினும் இந்த போராட்டங்கள் எவையும் முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற அரசியல் நிலையிலிருந்து நடக்கவில்லை. தங்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற நிர்ப்பந்தித்திலேயே நடக்கிறது. தொடர்ச்சியான போக்கில் இது தனது பிரச்சினை என்ற குறுகிய வட்டத்திலிருந்து நமது பிரச்சினை என்ற தளத்திற்கு நகரும் போது அதன் அரசியல் தன்மை மேலும் மேலும் முன்னேறும்.

காலனியாதிக்கத்தின் மூலம் மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டிய மேலை நாடுகள் தற்போது அதை விட அதிகமாக உலகமயத்தின் மூலம் பூமி முழுவதையும் சுரண்டுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலகின் அனைத்து வளங்களையும் சூறையாடுகின்றன. அது நீர் வளமாகவோ, இல்லை கனிம வளமாகவோ, இல்லை மனித வளமாகவோ எதையும் விடாமல் அனைத்தையும் சுருட்டுகின்றன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் வரலாறும், அரசியலும் அவற்றினை இயக்கும் விதிகளோடும் பரிச்சயம் இருக்க வேண்டும்.

இனி மைக்மோகனது சமூக வாழ்வு திட்டங்கள், அன்றாட அரசியலில் ஊழல் இல்லை என்பதைப் பார்ப்போம். ஐரோப்பாவில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாடு அநேக மனித உரிமைகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பிரபலமான நாடாகும். வெளிப்பார்வையில் பார்க்கும் போது இந்த நாட்டில் பிறந்திருக்கலாகாதா என்று கூட நம்ம அதியமானுக்கும், மைக்மோகனுக்கும் தோன்றலாம்.

ஆனால் உண்மை என்ன? ஸ்விட்சர்லாந்து நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் பாதி அளவை அந்நாட்டின் வங்கிகள் கொண்டிருக்கின்றன. எனில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு படியளப்பதற்கு வங்கிகளே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சரி, இந்த வங்கிகளுக்கு எப்படி பணம் வருகின்றன? உலக நாடுகளில் உள்ள முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் தமது கருப்பு, ஊழல் பணத்தை இந்த நாட்டின் வங்கிகளில்தான் போடுகின்றன. அவற்றின் மதிப்பு மிக மிக அதிகம். இப்படி ஊரைக் கொள்ளியடித்த கயவர்களின் கந்து வட்டி பைனான்ஸ் வங்கியாகத்தான் ஸ்விஸ் இருக்கிறது. இப்படி எந்த தொழிலும் செய்யாமலே, உட்கார்ந்த இடத்தில் பலப் பல டிரில்லியன் டாலரை, யூரோவை, இரத்தப் பணத்தை வைத்திருக்கும் நாடு தனது சொந்த நாட்டு மக்களின் சில நலத்திட்டங்களுக்கு பிச்சை போடுகிறது என்றால் அதை போற்றுபவர்களை என்னவென்று அழைப்பது?

நம்மூரில் அயோத்தி குப்பம் வீரமணி, பங்க் குமார், ஜான் பாண்டியன் முதலான ரவுடிகள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், மாமூல் மூலம் பல இலட்சங்களை சம்பாதிக்கிறார்கள். அதிலிருந்து தத்தமது ஊர்கள், சாதிகளைச் சேர்ந்தோருக்கு கோவில் கொடை, படிப்பு உதவி போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு செலவிடுகிறார்கள். மைக்மோகனது பார்வைப்படி யாருக்கும் ஐந்து காசு கொடுக்காத வினவை விட இத்தகைய அண்ணன்கள், வள்ளல்கள் மேலானவர்கள்!

முதலாளித்துவ அமைப்பே ஊழல்தான் எனும் போது அன்றாட வாழ்வில் ஊழல் இல்லை என்பது முட்டாள்தனம்!

தாசில்தார் ஆபிஸ், கலெக்டர் ஆபிஸ், பாஸ்போர்ட் அலுவலகம் என்று மிகச் சுருங்கிய உலகை மட்டும் மக்களோடு தொடர்புடைய அரசியலாக மைக்மோகன் பார்க்கிறார். இத்தகைய துறைகளில் மேலை நாடுகளில் ஊழல் இல்லையென அதிசயிக்கிறார். இந்தியாவைப் போன்று மின்சாரம், இரயில்வே, கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்று சகல துறைகளிலும் அரசு இருப்பதைப் போன்று அங்கில்லை. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். தனியாரின் சேவை என்பது இலாபத்தின் மேல் நின்று கொண்டிருப்பதைப் போன்று அரசு துறைகள் செயல்படுவதில்லை. அவை லாப நோக்கமற்ற சேவை அடிப்படையில்தான் நடக்கிறது. அந்த வகையில் மேலைநாடுகளில் உள்ள சாதாரண மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக கணிசமான வருமானத்தை தனியார் முதலாளிகளிடம் இழக்கின்றனர். அமைப்பு முறையின் இந்த ஊழலைப் பார்க்காமல் ஒரு சிப்பந்தி லஞ்சம் வாங்குவதில்லை என்று சுயதிருப்தி அடைவது அபத்தம்.

ஐரோப்பாவில் சில நாடுகளில் இத்தகைய அரசு துறைகள் இன்றும் உண்டு என்றாலும், மொத்தத்தில் அது தீர்மானிக்கவில்லை. இந்திய அரசு வங்கிகளில் கடன் வாங்குவதற்கு படாதபாடு படவேண்டும். ஆனால் ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் கடன் வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு எந்த சிக்கலுமின்றி அள்ளிக் கொடுக்கின்றன. கடன் அட்டையை அடிக்கடி தேய்க்குமாறும் வலியுறுத்துகின்றன. இறுதியில் 50,000 செலவழித்திருந்தால் அது பல சிக்கலான கணக்குகளோடு 3 இலட்சம் என்று வருகிறது. கட்டத் தவறினால் ஆள்வைத்து மிரட்டி வசூலிக்கிறார்கள். எனில் அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகள் அதிகம் சேவை தருகின்றன என்று மெச்ச முடியுமா?

தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்கள் எந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களோ அந்த அளவுக்கு அந்நாட்டின் சமூக நலத்திட்டங்கள் செயல்படும். முதலாளிகளது ஊழல் அமைப்பும் சுலபமாக செயல்படாத படி தடைகள் இருக்கும். ஆனால் இன்று இந்த நிலைமை எந்த நாட்டிலும் இல்லை என்பதால் நம் புலனறிவு அறியாத படி ஊழல்தான் இந்த முதலாளித்துவ உலகை வழிநடத்துகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ, பிரான்சிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களெல்லாம் தொண்டர்களின் பலத்தால் வந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு எவ்வளவு பணம் வசூலித்து கொடுக்க முடியும் என்பதை வைத்தே தலைவராகிறார்கள்.

இதற்கு மேலும் ஒவ்வொரு தேர்தலையும் ஆயுதம், சேவைத்துறை, நிதி வங்கி, காப்பீடு, மருந்து என்று பல்வேறு முதலாளிகளின் செல்வாக்கே தீர்மானிக்கிறது. ஜார்ஜ் புஷ்ஷை ஆயுத, எண்ணெய் முதலாளிகளும், அல்கோரை மருந்து முதலாளிகளும் முன்னிறுத்தினர் என்பது மேலை நாடுகளின் எல்லா தேர்தல்களுக்கும் பொருந்தும். ஆக தமிழகத்தில் நூறு ரூபாய்க்கு வோட்டுப் போடுவதை ஊழல் என்றும் அமெரிக்காவில் ஆயிரம் டாலர் கட்டி அதிபர் விருந்தில் கலந்து கொள்வது ஊழலற்ற ஜனநாயகம் என்றும் பார்ப்பது முட்டாள்தனம், பாமரத்தனம், அயோக்கியத்தனம்.

தேர்தலில் ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்பதையும், லிமிடெட் கம்பெனியில் ஒரு பங்குக்கு ஒரு வோட்டு என்பதையும்  ஜனநாயகம் என்ற முறையில் ஒன்று என்று சொல்ல முடியுமா? ஒன்றுதான் என மைக்மோகனும், அதியமானும் சொல்கிறார்கள்.

மைக்மோகன் தனக்கு தெரிந்த வாழ்க்கையில் நடமாடும் சில கதை மாந்தர்களது பாத்திரத்தை அசைபோடுவது போல, உலக அரசியல், பொருளாதாரம், சமூகத்தை எடை போடுகிறார். கதை சொல்லும் திறனாலேயே, கதைகளை தீர்மானிக்கும் முதலாளித்து சமூகத்தை புரிந்து கொள்ளலாம் என்பது அசட்டுத்தனம்.

மைக்மோகனிசம் ஒன்றுதான் இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட மைக்மோகனது சன்னிதானத்தை அதியமான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் மதவாதி என்ற பட்டம் வாங்கிய பிறகும் சுரணையில்லாமல் மீண்டும் மைக்மோகனிடம் பேசுகிறார். ஒருவர் வார்த்தைகளால் வாழும் மதவாதி. மற்றொருவர் லிங்குகளால் வாழும் காரியவாதி. எனினும் லிங்குகளை விட வார்த்தைகள் மேம்பட்டது என்ற காரணத்தினால் காரியவாதி மீண்டும் மீண்டும் வார்த்தை மதவாதியிடம் சரணடைகிறார்.  மைக்மோகனோ “எவ்வளவு அடித்தாலும் தாங்குறானே” என்று புன்னகையுடன் அதியமானை கடந்து செல்கிறார்.

____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: