privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விபார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?

பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?

-

பார்ப்பனீயம் குறித்தும் முதலாளித்துவம் குறித்தும் பல கட்டுரைகள் வெளியிடுகிறீர்கள். ஒன்று மற்றதன் தயவில் நிலைத்திருப்பது குறித்த கருத்தையும் இங்குதான் தெரிந்து கொண்டேன் ஆனால் இதுவரை எந்த கட்டுரையும் தெளிவாக விளக்கவில்லை. இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா? முடிந்தால் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன்.

– பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்,

இந்தக் கேள்விக்கான பதிலை பொதுவான வாசகரும் புரிந்து கொள்ளும் பொருட்டு சற்று எளிமையாகவும் விரிவாகவும் எழுதுகிறோம்.

பார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டும் இரு வேறுபட்ட சமூக அமைப்பு முறைகள். முதலாவது நிலத்தையும், விவசாயத்தையும், நாட்டுப்புறத்தையும், அதற்கு பொருத்தமான ‘மத’த்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலவுடமைச் சமூகம். இரண்டாவது  பெருந்தொழில்கள், பெருநகரங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன சமூகம். பார்ப்பனியம் இந்தியாவின் விசேடமான நிலவுடமைச் சமூக அமைப்பு முறை. மற்ற நாடுகளில் உள்ள நிலவுடமைச் சமூக அமைப்புகளோடு இதற்கு பல பொதுத்தன்மைகள் இருந்தாலும் சாதி என்ற தனித்தன்மை இந்தியாவில் மட்டுமே உண்டு. எனினும் இந்த தனித்தன்மை என்பது நிலவுடமை பொருளாதார அமைப்பு என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. வெறும் கருத்து, சிந்தனை சார்ந்த அமைப்பல்ல. சிலர் பார்ப்பனியத்தை வெறும் கருத்தியல் சார்ந்த அமைப்பாகவே பார்க்கின்றனர். அது தவறானது.

1789-இல் நடந்த பிரான்சில் நடந்த பிரெஞ்சுப் புரட்சிதான் முதன்முறையாக நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை புரட்சி மூலம் அழித்துவிட்டு முதலாளித்துவ சமூக அமைப்பிற்கான விதையை விதைக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் பறிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டு, கல்வி – சட்டம் இரண்டிலும் மதம் நீக்கப்படுகிறது. கத்தோலிக்க மதம் என்பது இங்கு பார்ப்பனியம் போன்று ஐரோப்பாவில் இருந்த மத ஆதிக்க நிறுவனம். இது மதத்தோடு மட்டுமல்லாமல் அரசு, சொத்து, சட்டம் அனைத்திலும் அதிகாரம் கொண்டிருந்தது.

பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்ற உழைக்கும் வர்க்கத்தினரின் வன்முறையை பார்த்து அச்சமுற்ற இங்கிலாந்து நாட்டில், நிலவுடமைச் சமூகம் புரட்சி மூலம் அழிக்கப்படவில்லை. வன்முறையற்ற சீர்திருத்தங்கள் மூலமே முதலாளித்துவம் கொண்டு வரப்படுகிறது. அப்படித்தான் படிப்படியாக அரசரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, முதலாளிகளின் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டுவரப்படுகிறது. இந்த மாற்றத்தை பல ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதலாளிகளும் பின்பற்றுகின்றனர். சாதாரண மக்களது எழுச்சியைக் கண்டு பயம் கொண்ட அவர்கள், முழுமையாக நிலவுடமை சமூகத்தின் மதம், பண்பாடுகளை விட விரும்பவில்லை. தொழிலாளிகள் அரசியல் எழுச்சி கொள்ளாது இருக்க மதம் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படித்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுடமைச் சமூகத்தை முற்றிலும் அழிக்காமல் அல்லது பண்பாட்டு துறையில் மட்டும் தேவையான அளவுக்கு விட்டு வைத்தது.

1917-இல் தொழிலாளிகள் தலைமையில் ரசியப் புரட்சி நடக்கிறது. முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிந்து விட்டு சோசலிச அமைப்பிற்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது. இதைக் கண்டு அஞ்சிய முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் அதன் பிறகு உலகம் முழுவதுமிருந்த குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் இருந்த நிலவுடமை சமூக அமைப்பை தகர்க்காமல், அதனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு காலனிய நாடுகளில் சுரண்டி வந்தனர். இப்படித்தான் பார்ப்பனியமும் ஆங்கிலேயர்களின் ஆசிர்வாதத்தோடு இந்தியாவில் தனது ஆதிக்கத்தை தக்க வைத்தது.

ஆங்கிலேயர் காலத்தில் பார்ப்பன இந்து மதத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வரப்பட்டாலும் அதன் அடிப்படையான சாதிய சமூகத்தை அப்படியே விட்டு வைத்தார்கள். பிரிட்டனுக்கு முன் சாதிய அமைப்பின் மீதான சுரண்டல் மன்னர்களுக்கும், ‘மேல்’ சாதியினருக்கும் சென்றது. இங்கிலாந்து வந்தபின்னர் அது கைமாறுகிறது. பார்ப்பனிய சாதிய அமைப்பின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அரசு, அரசாங்கம், காங்கிரசு, ஜமீன்தார்கள், என அதிகாரத்தை சுவைத்த போது கீழ்மட்டத்தில் உள்ள உழைக்கும் சாதிகள் உடலுழைப்பு கொண்ட வேலைகளுக்கு பயன்பட்டனர். மேலும் இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் உள்ள ஆங்கிலேயர்களின் தோட்டத்திற்கும் அனுப்பப்பட்டனர். இப்படித்தான் இந்தியாவில் காலனிய ஆட்சி தங்கு தடையின்றி நடந்தது.

சூத்திர, பஞ்சம சாதிகளைச் சேர்ந்தோர் பார்ப்பன சாதியமைப்பில் கீழ்நிலையில் உள்ளவர்கள். கிராமங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டு விதிக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டு, தரப்பட்ட பொருளைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள். மற்றபடி இவர்கள் யாரும் படித்து, வியாபாரம் செய்து, வேறு தொழில் செய்தெல்லாம் ஆளாவது என்பது கனவில் கூட நடவாது. அந்த வகையில் இந்த உழைப்பு ரிசர்வ் சக்திகள், காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற இரயில்வே, தோட்டங்கள், ஆலைகள், இராணுவ சிப்பாய் என்று அடிக்கட்டுமான வேலைக்கு மலிவான கூலிக்கு கிடைத்தார்கள்.

சாராமாகச் சொன்னால் ‘மேல்’ சாதியினர் நீதிபதிகள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் என்றும், இடைத்தர சாதியினர் குமாஸ்தாக்களாகவும், போலீசாகவும், சிறு வியாபாரம் என்றும், அடித்தட்டு சாதியினர் உடலுழைப்பு வேலைகளுக்காகவும் பயன்பட்டனர். இத்தகைய அருமையான சுரண்டல் அமைப்பை வழங்கிய பார்ப்பனியத்தை வெள்ளையர்கள் ஏன் அழிக்க வேண்டும்? ஆகவே அதை திட்டமிட்டு பாதுகாத்தார்கள்.

சரி வெள்ளையர்கள் சென்ற பிறகும், இந்த நிலைமை இன்னும் மாறிவிடவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக சில சீர்திருத்தங்கள் மூலம் சில பல ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மேல்மட்ட வேலைகளுக்கு வந்தாலும், பெரும்பான்மையான மக்கள் பழைய பார்ப்பனிய நிலவுடமை சாதிய அமைப்பின் படிதான் வாழ்கின்றனர். அதாவது அவர்களுக்கு நிலம் சொந்தமில்லை, கூலி வேலை செய்துதான் வாழ முடியும், படிப்பு, தொழில் என்று வேறு வாய்ப்புகள் இப்போதும் சாத்தியமில்லை என்றுதான் வாழ்கின்றனர்.

பார்ப்பனியம் மனிதரில் ஏற்றத்தாழ்வு வைத்து பிரிப்பதைப் போல முதலாளித்துவம் சந்தை, இலாபத்தை வைத்து நாட்டில் ஏற்றத் தாழ்வை கொண்டு வருகிறது. அதாவது தொழில் வாய்ப்பு, திறமையான உழைப்பாளிகள், போக்கு வரத்து வசதிகள், துறைமுகம், தடையற்ற மின்சாரம், சந்தைக்கு அருகாமை என்று தங்களது தொழிலுக்கு சாதகமான இடங்களை மட்டுமே குறி வைப்பார்கள். அந்த வகையில் வடக்கு தமிழகம், குஜராத், மேற்கு மராட்டியம், கடற்கைரையோர ஒரிசா, ஆந்திராவின் சில பகுதிகள், கர்நாடகாவின் சில பகுதிகள், ஹரியாணா என்று இந்தப் பகுதிகளை மட்டும் தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசும் இத்தகைய இடங்களை மட்டும் செல்வு செய்து வளரச் செய்கிறது.

ஆனால் இத்தகைய வசதிகள் அற்ற ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம், போன்ற மாநிலங்கள் எல்லா அளவுகோல்கள் படியும் மிகவும் கீழ்மட்ட வாழ்வில் உள்ளன. முக்கியமாக இந்த மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் உள்ளூரில் உள்ள பார்ப்பனிய நிலவுடைமை அமைப்பு முறையால் குறைந்த பட்ச வாழ்க்கையைக் கூட வாழமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள்தான் இந்தியாவில் மாபெரும் ரிசர்வ் பட்டாளமாக இருக்கின்றனர்.

தற்போது இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பகுதி நேர தொழிலாளிகளாக இவர்களே கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இன்று தமிழகம் முழுவதிலுமுள்ள சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்த வடமாநிலத் தொழிலாளர்களை பார்க்கலாம். இவர்களில் யாரும் பார்ப்பன ‘மேல்’ சாதியைச் சேர்ந்தோர் கிடையாது என்பதை விளக்கத் தேவையில்லை.

தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கிராமங்கள், நகரங்களில் உள்ள அக்ரகாரத்தை சேர்ந்த பார்பனர்களும், மேலத்தெருவைச் சேர்ந்த நாயுடு, ரெட்டி, செட்டியார், சைவ வேளாளர் முதலானோர் சென்னை, டெல்லி, லண்டன், அமெரிக்கா என்று செட்டிலாகிவிட்டார்கள். கீழத்தெருவைச் சேர்ந்த சில ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர் கொஞ்சம் நிலம் வைத்து ஏதோ விவசாயம் செய்கிறார்கள். சிலர் சிறு தொழில்கள், கீழ்மட்ட அரசு, தனியார் வேலை என்று வாழ்கிறார்கள். மீதிப்பேரும், கிராமத்தின் எல்லையிலிருக்கும் சேரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரும் உடலுழைப்பு வேலைகளுக்காக பெரு நகரங்களை நோக்கி செல்கின்றனர்.

தஞ்சையைச் சேர்ந்த கூலி விவசாயிகள் கேரளாவில் கம்பி கட்டும் வேலைக்கு போவது, தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர், மும்பை, திருப்பூருக்கு செல்வது, தரும்புரியைச் சேர்ந்தோர் பெங்களூரூவில் கட்டிட வேலைக்கு செல்வது, வட மாவட்டங்களைச் சேரந்தோர் சென்னைக்கு வந்து பிழைப்பது என்று இங்கேயே அந்த நாடோடி வாழ்க்கை இருக்கிறது.

ஆக மறுகாலனியாக்கத்திற்கு தேவைப்படும் மனித வளத்தை சாதியைப் பாதுகாக்கும் பார்ப்பனிய அமைப்பு இப்படித்தான் வழங்குகிறது. அடுத்து உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்கம் அரசியல் உணர்வு பெறக்கூடாது என்பதற்காகவே இங்கே பார்ப்பன இந்து மதம் பெரும் பொருட்செலவில் பின்பற்றப்படுகிறது. சாதிக்கு ஏற்ற சாமியார்கள், மடங்கள், நவீன கார்ப்பரேட் சாமியார்கள், ஆதினங்கள், கோவில்கள் எல்லாம் அரசு, முதலாளிகளால் செவ்வனே பராமரிக்கப்படுகிறது.

ஐ.டி துறை நடுத்தர வர்க்கத்தை ஆற்றுப்படுத்தும் வேலையை டபுள் ஸ்ரீ ரவி சங்கர் பார்த்துக் கொள்வது போல உடலுழைப்பு மக்களை பங்காரு பாதுகாக்கிறார். சங்கர மடத்தின் முன் முழு இந்தியாவின் அதிகார வர்க்கமும் மண்டியிடும். வட இந்தியாவில் உள்ள நாட்டுப்புறங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஆட்சியாளராக பண்ணையார்கள்தான் இன்றும் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதைக்கூட இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அதே போல நகரங்களில் சொத்துக்களை வைத்துக் கொண்டு அரசியலில் ஒரு ஆளாக வருவதும் இந்த பண்ணையார்கள்தான்.

ஆக பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பு இந்தியாவின் முதலாளித்துவத்திற்கு அளப்பரிய சேவை செய்வதை புரிந்து கொள்ள முடியும். தீபாவளி, புத்தாண்டு, அஷ்யத் திரியை இதர பார்ப்பனியப் பண்டிகளெல்லாம் மக்களிடையே நுகர்வுபொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான நாட்களாக முதலாளிகளால் கொண்டாடப்படுகின்றன.

இறுதியாக கிராமங்களில் விவசாயம் அழிக்கப்டுவதால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த வர்க்கங்களின் உழைப்பை மலிவாகச் சுரண்டிதான் நகரங்களும், முதலாளிகளும் வாழ்கின்றனர். கிராமங்களில் உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தமாகி, விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நிலை வந்தால் நகரத்து முதலாளிகளுக்கு மலிவான உழைப்பாளிகள் கிடைக்கமாட்டார்கள். ஆதலால் பார்ப்பனிய நிலவுடமை அமைப்பு இங்கே சமூக ரீதியாக இருப்பதோடு முதலாளித்துவத்திற்கும் சேவை செய்கிறது. பதிலுக்கு முதலாளித்துவம் அதை அழிக்காமல் தேவையான அளவு சீர்திருத்தம் செய்கிறது. இடையில் சிக்கிக் கொண்ட உழைக்கும் மக்கள் என்னடா வாழ்க்கை இது என்று நாட்களை கழிக்கிறார்கள்.

தற்போது இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறோம். சரிதானா?

நன்றி.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: