privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாவானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

-

 வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்! – திரைவிமரிசனம்

மகால தமிழ் சினிமாவின் முன்னுரிமை என்பது வெகுமக்கள் ‘ரசனையை’ அடிப்படையாகக் கொண்டது. ’மக்கள் எதை விரும்புறாங்களோ, அதைத்தான் நாங்க சினிமாவில் காட்டுறோம்’ என்பது சினிமாக்காரர்களின் டெம்ப்ளேட் ஸ்டேட்மெண்ட். ’சமூகத்தின் விருப்ப ரசனையை நாங்கள் காட்சிப் படுத்துகிறோம்’ எனச் சொல்லும் இவர்கள், அதில் எந்த அளவுக்கு நேர்மையோடு இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். அன்றாடம் நாம் காணும் புறவயமான உண்மைகளை, சமூக யதார்த்தங்களை திரையில் கொண்டு வருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ’வானம்’ திரைப்படம், மேற்கண்ட புள்ளிகளில் இருந்து விலகி, சமகால இந்தியாவை அதன் அசல் முகங்களோடு அணுகுகிறது.

ஐந்து வகை இந்தியா… ’வானம்’ கதையை இப்படி சுருக்கமாக மதிப்பிடலாம். ஆந்திரா, பெங்களூரூ, கோவை, தூத்துக்குடி, சென்னையின் சேரி என அசலான ஐந்து வகை இந்தியாவிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக ஐந்து வகையான பாத்திரங்கள் சென்னையை நோக்கி வருகிறார்கள். விபச்சாரி, யுப்பி வகை மேல்தட்டு இளைஞன், குப்பத்து ஏழை இளைஞன், வறுமையில் வாடும் நெசவாளி, நேர்மையாக வாழும் நடுத்தர வரக்க முசுலீம் என்று அந்த ஐந்து பாத்திரங்களும் சமகால இந்தியாவின் கதைகளை விவரிக்கின்றன.ஒரு திரைக்கதைக்குள் ஐந்து கதைகளைத் தனித்தனியே விவரித்து, அதன் இயல்பில் எதிர்பாராப் புள்ளி ஒன்றில் ஐந்தையும் சந்திக்க வைத்திருக்கும் இந்த திரைக்கதை யுத்தி வடிவத்தில் மட்டுமல்ல, அது எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்காகவும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தெலுங்கில் ‘வேதம்’ என்னும் பெயரில் வெளியான இந்த படத்தை இயக்கிய க்ரிஷ் என்பவரே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

நகர்ப்புற குப்பத்து இளைஞனாக வரும் சிம்புவின் பாத்திரப் படைப்பு ஒரு துல்லியமான சித்திரம். குப்பத்தில் பிறந்தாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவள், புத்தாண்டில் ஒரு  பார்ட்டிக்கு அழைத்துப் போகச் சொல்கிறாள். பார்ட்டிக்குச் செல்வதற்கு ஒரு இரவுக்கு 40 ஆயிரம் கட்டணம். இந்தப் பணத்தை ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருந்து செயின் அறுப்பது, திருடுவது என எந்த எல்லைக்கும் போகிறார் சிம்பு.

இன்றைய நகர்ப்புறத்து இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துடன் பின்னி பிணைந்திருக்கிறது. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும், வாழ விரும்பும் வாழ்க்கைக்குமான தொலைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்குச் செல்லவும் தயங்குவதில்லை.

இதை, செயின் அறுக்கும் சிம்புவின் பாத்திரத்தோடு நேரடியாக பொருத்திப் புரிந்துகொள்வது ஒரு பக்கம்.. மறுவளமாக பார்த்தால் உழைப்பு, மேலும் உழைப்பு, மேலும் மேலும் உழைப்பு என தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைத்து, தான் ஆசைப்பட்ட சுகவாழ்வை அடைவது இன்னொரு பக்கம். தனது உழைப்புக்கும், சம்பளத்துக்குமான இடைவெளி அதிகமாய் இருப்பதைப் பற்றியும், தான் சுரண்டப்படுவது பற்றியும் இவர்கள் யோசிப்பதில்லை. மாறாக, மேற்கொண்டு ஓவர்டைம் செய்து கூடுதலாக சில ஆயிரம் சம்பாதித்துவிட முடியாதா என்றுதான் தேடித் திரிகின்றனர். இப்படி நுகர்வுக் கலாசாரம் தின்று துப்பிய சக்கைகளாய் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நகர்ப்புறத்து அடித்தட்டு இளைஞர்களின் பிரதிநிதிதான் சிம்பு.

பொதுவாக தமிழ் சினிமாவில் குப்பத்து இளைஞர்கள் என்றால் அவர்களை அரசியல்வாதிகளின் அடியாட்களாக மட்டுமே சித்தரிக்கும் போக்கில் இருந்தும் இப்படம் விலகி நிற்கிறது. உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் விட்டேத்தியான இளைஞர்களாக சிம்புவும், சந்தானமும் வருகிறார்கள். இவர்கள்தான் இன்றைய சேரிகளின் யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பேசும் பல வசனங்கள் மிக கூர்மையாகவும், இயல்போடும் இருக்கின்றன. ‘சாவு நல்லாயிருக்கனும்னாக் கூட பணம் வேணும் போலருக்குதே’ என்பதில் தொடங்கி, ‘பணக்காரன்னா சிரிக்க மாட்டான், கை தட்ட மாட்டான், விசில் அடிக்க மாட்டான்’ என்பது போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

சிம்புவுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமான காதல் என்பதும் வழக்கமான தமிழ் சினிமாவின் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதே. காதலுக்காக எதையும் செய்யலாம் என புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஒரு ஏழை இளைஞனின் கோணத்தில் இருந்து பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என கணக்குப் போடுவதும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பெண் பார்ட்டிக்கு பாஸ் வாங்கும் 40 ஆயிரம் பணத்துக்கு சிம்புவைவே முழுக்க டார்ச்சர் செய்வதும்… காதல் என்பது காரியவாதமாக மாறிவிட்டிருப்பதையே நினைவூட்டுகிறது. தமிழ் சினிமா சித்தரிக்கும் ‘புனிதக்’ காதலில் இருந்து இந்தக் காதல் நிச்சயம் மாறுபட்டிருக்கிறது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சொந்த ரசனையை மட்டுமே பெரிதெனப் பேசித் திரியும் பரத் பாத்திரம் மேல்தட்டு இளைஞர்களின் அசல் பிம்பம். பல பணக்கார நண்பர்கள் தங்களின் மிகப்பெரிய சோகமாக சொல்லும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வரும். ‘நான் நாலு வருஷம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்போ நானே துணி துவைப்பேன். நல்ல ஹோட்டலைக் கண்டுபிடிச்சு சாப்பிடுறதே பெரிய டார்ச்சரா இருக்கும். ஆனால், நான் அவ்வளவு கஷ்டப்பட்டது எங்க வீட்டுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது.’ என்று சொன்னார் பணக்கார பிரபலம் ஒருவர். துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?

பரத் அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர். இறந்து விட்ட தந்தையைப் போல இராணுவத்தில் சேருவதற்கு தாய் வற்புறுத்துவதை அவர் மறுக்கிறார். இசைதான் தனது எதிர்காலம் என்று கூறுகிறார். ஓர் இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து தன் குழுவுடன் சென்னையை நோக்கி காரில் வரும் பரத், லாரி டிரைவர் சிங் ஒருவரை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார். பலர் அடிபட்டு சாலையில் விழ, அதைப்பற்றி கவலையேப்படாமல் காரை ஓட்டிக் கடந்துபோகிறார். ’காப்பாற்ற வேண்டாமா?’ என்கிறாள் கூடவே வரும் தோழி ‘அதுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க. பார்த்துப்பாங்க’ என்கிறார் பரத்.

தன்னால்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல், அடிபட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதையே அலட்சியமாக கருதும் அவரது நடத்தைதான் பணக்கார இந்திய இளைஞர்களின் பொதுப் பண்பு. மும்பையிலோ, டெல்லியிலோ அதிநவீன பி.எம்.டபிள்யூ காரில் குடி போதையில் அதி வேகத்துடன் ஓட்டி பாதசாரிகளைக் கொல்லும் இளைஞர்களெல்லாம் வேறு எப்படி இருப்பார்கள்? ஜெசிகாலால் எனும் மது பரிமாறும் பெண்ணைக் கொன்ற மனுசர்மா எனும் அதிகார வர்க்கத்து இளைஞன் மிகச்சாதாரண விசயத்துக்காக கோபம் கொண்டு துப்பாக்கி எடுத்தவன். பரத்தின் இந்த சுபாவம் கண்டு அவனது தோழி வருத்தம் கொள்கிறாள்.

அதையே அவனிடமும் தெரிவிக்கிறாள். அவனிடம் ஏதோ கொஞ்சம் மியூசிக் சென்ஸ் இருக்கிறது என்றாலும் அவன் பாடும் போது உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதில்லை என்று கூறுகிறாள். அந்த உணர்ச்சியற்ற பாவனைக்கும், சக மனிதர்களது துக்கத்தை உணர்ச்சியற்று பாராமுகமாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதை அந்த அழகான காட்சி கவித்துவமாக உணர்த்துகிறது.

எந்த சிங் டிரைவரை முந்திச் சென்று பரத் விபத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே சிங்-தான் பிற்பாடு பரத்துக்கு காவி காலிகளால் பிரச்னை ஏற்படும்போது தைரியத்துடன் இறங்கி நின்று அவர்களை அடித்து விரட்டி பரத்தின் உயிரை காப்பாற்றுகிறார். இதில் குறிப்பாக பரத் – வேகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ’ஃப்ரெண்ட்ஸா இருந்தா ராக்கி கட்டு. காதலர்கள்னா தாலியைக் கட்டு’ என பிரச்னை செய்கிறது இந்துத்துவ ரவுடிக் கும்பல். ’என்ன பாஸ் இதெல்லாம்?’ என அதிர்ச்சியாகும் பரத்தும், வேகாவும் முதல் முறையாக இப்படிப்பட்ட இந்துத்வ வன்முறையை எதிர் கொள்கின்றனர். இந்த அடாவடித்தனத்தை நிஜமாகவே வருடா வருடம் செய்யும் ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி காலிகள் நம் நினைவுக்கு வருகிறார்கள். கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த காவி ரவுடிகளின் வன்முறையை எதிர்த்துத் தாக்கி பரத்தையும் அவரது காதலியையும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிங் காப்பாற்றுகிறார். அதன்மூலம் பரத்தின் சுயநலப் பண்பு கடும் குற்ற உணர்ச்சி கொள்கிறது. அதற்கு பின் ஒரு சில நிமிடங்களே வரும் பாடலில் முதன்முறையாக பரத் உணர்ச்சி பாவத்துடன் பாடுகிறார். பாடல் வரிகளோ சக மனிதன் துன்பம் கண்டு ஒரு துளி கண்ணீரையாவது சிந்தும் மனிதாபிமானத்தை குறிக்கிறது. பெங்களூரூ நட்சத்திர விடுதிகளில் ராக், பாப் டான்சில் படுவேகமாக கிதாரை மீட்டி கடுமையான முகபாவனையோடு பாடும் இல்லை கத்தும் பரத் இங்கே மென்மையான அசைவில் பாடல் வரிகளோடு தோய்ந்து பாடுகிறார். படத்தில் இது ஒரு கவித்துவமான காட்சி.

பாலியல் தொழிலாளியாக வரும் அனுஷ்காவின் பாத்திரமும், ஊரும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமாக இருந்தாலும் காவல்துறையினருடன் அவர் பேசும் பல வசனங்கள், குறிப்பாக… ‘நாங்க டிரஸ்ஸை அவுத்துட்டு செய்யுறதை நீங்க டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு செய்யுறீங்க’ போன்றவை கூர்மையானவை. ஆந்திரா எல்லையில் ஒரு விபச்சார கும்பலில் மாட்டிக் கொண்ட அனுஷ்காவும், அவரது தோழியான திருநங்கையும் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்னையில் தனியாக தொழில் நடத்த ரயிலேறுகிறார்கள். திருநங்கை ஒருவருக்கு ஹீரோயின் முத்தம் இடும் காட்சி அநேகமாக தமிழ் சினிமாவில் இது முதல்முறையாக இருக்கக்கூடும். இறுதிக் காட்சியில் இந்த தொழிலை விட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் மறைகிறார்கள்.

கிராமப்புறங்களில் வாழ வழியற்று கந்துவட்டிக்கு பணம் வாங்கி, அந்தக் கடனை அடைப்பதற்கு மகனை அடகு வைத்து, அவனை மீட்பதற்கு கிட்னியை விற்று… என விவரிக்கப்பட்டிருக்கும் சரண்யாவின் பாத்திரத்தைப் பார்த்து, ‘இப்படியெல்லாமா நடக்குது?’ என்று பலர் நினைக்கக்கூடும். இந்தக் கதையிலாவது சரண்யா, தனக்குத் தெரிந்து தன் கிட்னியை விற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனைகள், பல அப்பாவி ஏழைகளிடம் அவர்களுக்கேத் தெரியாமல் கிட்னித் திருடிய கதைகளை நாம் படித்திருக்கிறோம். ’இந்தியா முன்னேறுகிறது, தொழில்வாய்ப்புகள் பெருகிக்கிடக்கின்றன’ என பிரசாரம் செய்யப்படும் இதே இந்தியாவில்தான் விவசாயம் பொய்த்துப்போய் வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது. சரண்யாவும் அவரது வயதான மாமனாரும் சென்னை வந்து கிட்னி விற்க முனையும் காட்சிகள் யதார்த்தமாகவும், ஏழ்மையில் அவலத்தை கூர்மையாகவும் காட்டுகின்றன.

‘வானம்’ படத்தின் மற்றொரு முக்கியமானதும், சிக்கலானதுமான பாத்திரம் பிரகாஷ்ராஜினுடையது. ’இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாதவதற்கான காரணமாக இருப்பது இந்துத் தீவிரவாதமே’ என்ற கருத்து முதல்முறையாக தமிழ்த் திரையில் மிக வெளிப்படையாகப் பேசப்படுகிறது. ஒரு சராசரி இஸ்லாமிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இந்து தீவிரவாதத்தின் வேர்களையும், அது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கான காரண சக்தியாக எப்படி விளங்குகிறது என்பதையும் ஓர் எளிய கதையோட்டத்தில் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் தெரு வழியே கர்ப்பிணி மனைவியுடன் டூ-வீலரில் போகிறார் பிரகாஷ்ராஜ். இந்துத்துவ காலிகள் பிரகாஷ்ராஜின் மனைவியை வம்புக்கு இழுத்து அனைவரையும் அடித்து நொறுக்குகின்றனர். அவரது மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிடுகிறது. இதில் தானும் அடிவாங்கி தன்னால் எதையும் செய்ய முடியாத பிரகாஷ்ராஜின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்கிறார்.. என்பதாகப் போகிறது பிரகாஷ்ராஜ் அத்தியாயத்தின் கதை.

3 வருடம் கழித்து தனது தம்பியைத்தேடி பிரகாஷ்ராஜூம் அவரது மனைவியும் சென்னை வருகிறார்கள். கோவையில் அவரை அடித்து நொறுக்கும் இந்துத்வ ஆதரவாளரான போலீஸ் ஒருவன் சென்னையில் அவரை தீவிரவாதியாக்கி கைது செய்கிறான். அப்பாவி முசுலீம்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பிரகாஷ்ராஜின் பாத்திரச் சித்தரிப்பு நேர்மையாக உணர்த்துகிறது.

பிரகாஷ்ராஜின் ஊர் கோயம்புத்தூர் என்பதில் தொடங்கும் அரசியல் மொத்த படத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த பாத்திரத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் சிலர், “இந்துக்கள் தங்களது ஊர்வலத்தின் இடையில் புகுந்த இஸ்லாமியர்களை மதவெறியோடு அடித்தார்கள். ஆனால், அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” என்கிறார்கள்.

இதை நாம் ஒரு பகுதி அளவில் பரிசீலிக்க வேண்டும் என்றாலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது இயக்குநருக்கு இப்படி நிறுவுவதற்கான அடிப்படைகள் இருப்பதாக தோன்றவில்லை. அதுபோலவே, பிரகாஷ்ராஜ் குடும்பம் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் எதிர்வன்முறையையும் இணை வைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறோம். ஏனெனில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களின்படி, இந்துக்களின் தீவிரவாதம், ஒரு சமூக வன்முறையாகவும், முஸ்லீம்களின் எதிர்வன்முறை தனிப்பட்ட தீவிரவாதக் குழுக்களுடையதாகவுமே சித்தரிக்கப்படுகிறது. எனினும் இறுதிக்காட்சியில் சில தீவிர இசுலாமிய இளைஞர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொதுமக்களை காக்காய் குருவி போல சுட்டுக் கொல்வது பொருத்தமாக இல்லை. இயக்குநர் அதை மும்பை தாக்குதலிருந்து எடுத்திருக்கலாம் என்றாலும் அந்தக் களம் வேறு. கோவையிலிருந்து வரும் ஒரு முசுலீம் இளைஞனது பார்வையில் இப்படி நடந்ததாக காட்டுவது பொருத்தமாகவும் இல்லை, சரியாகவும் இல்லை.

’வானம்’ படத்தின் மிக முக்கிய அரசியலாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, போலீஸின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி இருப்பதைத்தான். பிரகாஷ்ராஜின் கதையில் இந்திய இந்து மனநிலையின் கூட்டுவன்முறை மட்டும் சொல்லப்படவில்லை… அதற்கு இசைவான வகையில், இந்துத்துவத்தின் மொத்த அஜண்டாவையும் நிறைவேற்றித் தரும் கூலிப்படையாக இந்தியக் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டராக வரும் நபர் அப்படியே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நேரடியாக கிளம்பி வந்தது போலவே இருக்கிறார். அதைப்போலவே அனுஷ்காவிடம் பணம் பிடுங்கும் இன்ஸ்பெக்டர் ராதாரவியின் பாத்திரம், அதே ராதாரவி பாத்திரம் சிம்புவிடம் பணம் பிடுங்குவது, மாமியிடம் போனில் பம்முவது…  என அனைத்தும் நுணுக்கமான பதிவுகள்.

சில கதைக்களங்களின் அந்நியத்தன்மை, அவசியம் இல்லாத, ரசிக்கவும் முடியாத பாடல்கள், இழுத்தடிக்கப்படும் இறுதி மருத்துவமனைக் காட்சிகள் போன்றவற்றை விட, படத்தின் அபாயகரமான அம்சம் அதன் இறுதிக் காட்சிகள்தான். ஐந்து வகை இந்தியாவின் பிரச்னைகளை ஐந்து கதைகளாக சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர் கடைசியில் ஐந்தையும் ஒரு அரசியலற்ற வெறும் மனிதாபிமான செண்டிமெண்டில் இணைக்கிறார். ஐந்துக்குமான தீர்வாக செண்டிமெண்டையே முன் வைக்கிறார்.

அப்பாவியான தன்னை தீவிரவாதி போல சித்தரித்து கொடுமைபடுத்தும் இந்துத்வ இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் பிரகாஷ்ராஜ். இதைப்பார்த்து மட்டும் அந்த ஆர்.எஸ்.எஸ் இன்ஸ்பெக்டர் திருந்துகிறார் என்றால் பொருள் என்ன? அப்பாவி முசுலீம்கள் அனைவரும் இப்படித்தான் இந்துமதவெறியர்களை திருத்த வேண்டுமென்றால் ஒவ்வொரு திருந்தலுக்கும் ஒரு சில முசுலீம்கள் சாகவேண்டுமோ? இந்து மதவெறி வெறும் மனிதாபிமானத்தால் மட்டும் திருத்தப்படும் ஒன்றல்ல. அது உழைக்கும் மக்களை அணிதிரட்டி வன்முறை மூலம் ஒழிக்கப்பட வேண்டிய கிருமி.

இதைத்தவிர இந்தப்படம் சமகாலத் தமிழ்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் யதார்த்தமான கதைக் களங்களிலிருந்து பயணிக்கிறது. ஐந்து வகை இந்தியாவையும் காட்சிப்படுத்தியதிலிருந்து, கதையை கொண்டு போன விதத்திலும் சரி நாம் அசலான இந்தியாவைப் பார்க்கிறோம். அரசியல் களங்களை கதையாகக் கொண்டு அதை சுவராசியமான கதை சொல்லல்  காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கும் இயக்குநர் க்ரிஷ் உண்மையிலேயே ஆச்சரியமான இயக்குநர்தான். அவருக்கும், படக்குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்!

________________________________________________________________

– வெற்றிவேல்
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்