privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?

-

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
பாபா ராம்தேவ்

“இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…

“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இவர்கள் கொடுக்கும் பில்டப்பைக் கண்டு யாரும் மிரண்டு விட வேண்டாம்.. இந்த சவடால்களின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.

அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது சில கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியவுடனேயே அங்கிருந்த மான்கரேத்தே வீரர்கள் குபீர் என்று பாய்ச்சல் காட்டியுள்ளனர். இந்த புறமுதுகுப் போரின் விளைவாய் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தொடைநடுங்கிகள் பின்னங்கால் பிடறியில் பட ஓடிப் போய் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயம்பட்டுக் கொண்டதையே மாபெரும் படுகொலைச் சம்பவமான ஜாலியன்வாலாபாக்குடன் ஒப்பிடுகிறார்கள். மெழுகுவர்த்தியும் ஊதுவர்த்தியும் ஏந்தி ‘போராடி’ வந்த வீரர்கள், போலீசு காட்டிய சின்ன கவனிப்புக்கே அலறித் துடிக்கிறார்கள். ‘ஐயோ.. இரண்டாம் எமர்ஜென்சி’ என்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இரண்டாம் ‘எமர்ஜென்சியை’ எதிர்ப்பது இருக்கட்டும், முதலில் அவர்கள் முதலாம் எமெர்ஜென்சியை எதிர்த்த லட்சணம் என்னவென்பதை எமது வாசகர்கள் அறிந்து கொள்ள இந்தக் கட்டுரையைப் பரிந்துரைக்கிறோம்.

இவர்கள் நீட்டி முழக்குவது போலெல்லாம் இந்த சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம். அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும் (நித்தி / கேமரா எபெக்ட்?), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும், நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த ”முற்றும் துறந்த” சாமியார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாய் சொல்லிக் கொண்டு இந்த கள்ளப்பண சாமியார் தில்லியில் வந்திறங்கிய போது காங்கிரசின் நான்கு காபினெட் மந்திரிகளே நேரில் போய் வரவேற்றனர். உண்மையில் ராம்தேவை அரசு ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவரது ஆசிரமத்தில் ஒரு சி.பி.ஐ ரெய்டு விட்டிருந்தாலே போதும். அது அவர்கள் நோக்கமல்ல.

இந்தியாவில் கருப்புப் பணம் வெளுப்பதற்கும், ஹவாலா பணத்தின் சுழற்சிக்கும் அச்சாணியாக இருப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார் மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான். பாபா ராம்தேவ் யோக்கியராய் இருந்தால் முதலில் தான் சேர்த்துள்ள சொத்துக்களுக்குக் கணக்குக் காட்டி விட்டு களத்துக்கு வந்திருக்க வேண்டும். கோவிந்தாச்சார்யா, சாத்வி ரிதம்பர போன்ற மார்கெட்டில் விலைபோகாத ஆர்.எஸ்.எஸின் அழுகிய கத்திரிக்காய்கள் சகிதம் மேடையில் அமர்ந்து கொண்டு கருப்புப் பண ஒழிப்பையும் ஊழல் ஒழிப்பையும் ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் நாட்டு மக்கள் அத்தனை பேரையும் மடையர்களாக நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

பாபா ராம்தேவை தில்லியை விட்டு திருப்பியனுப்பியதை எதிர்த்து இப்போது சத்தியாகிரகம் துவங்கியிருக்கும் இதே பி.ஜே.பி, தான் ஆளும் கருநாடக மாநிலத்தில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பைக் குறைத்து எடியூரப்பாவைக் காப்பாற்ற முயன்று வருகிறது. பி.ஜே.பி ஆளும் இன்னொரு மாநிலமான குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோக் அயுக்தாவின் தலைவரே நியமிக்கப் படவில்லை. எதார்த்தம் இவ்வாறிருக்க, ஆங்கிலச் சேனல்களில் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளோ மக்களை கேனையர்களாக நினைத்துக் கொண்டு எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுகிறது என்கிறார்கள்.

ஏற்கனவே இவர்களின் ‘ராமர் கோயில் + வெடிகுண்டு’ பிராண்டு இந்துத்துவ அரசியல் முற்றுமுழுதாக மக்களின் முன் அம்மணமாக நிற்கிறது. இந்நிலையில் சமீப வருடங்களாக வெளியாகிவரும் ஊழல் முறைகேடுகள் பற்றிய செய்திகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே உண்டாக்கியிருக்கும் ஆத்திரத்தை தமக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொள்ளலாம் என்று நாவில் எச்சில் ஊற டவுசர் கும்பல் கணக்குப் போடுகிறது. அந்த அடிப்படையில் தான், முன்பு அன்னா ஹசாரே உண்ணாவிரத டிராமாவின் போதும் சரி இப்போது பாபா ராம் தேவ் நடத்தும் டிராமாவிலும் சரி ஆர்.எஸ்.எஸ் அக்கறை காட்டுகிறது. உண்மையிலேயே ஊழலை  ஒழிப்பதில் அதற்கு அக்கறை இருக்குமென்றால் முதலில் எடியூரப்பாவையும் ரெட்டி சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

காங்கிரசோ இது போன்ற ஆபத்தில்லாத போராட்டங்களை தடவிக் கொடுப்பதன் மூலம் நடுத்தர வர்க்க மக்களின் அபிலாஷைகளை ஓரளவுக்கு ஆற்றுப்படுத்த முடியுமா என்று பார்க்கிறது. அதுவும் கூட தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அளவில் இருக்கும் வரையில் தான் அதனால் சகித்துக் கொள்ள முடிகிறது. இப்படி இவர்கள் இருவருமே மக்களின் ஆத்திரத்தை தமக்கு சாதகமான திசைவழியில் மடைமாற்றிக் கொள்ள முயல்வதன் ஊடாக எழுந்த சிறிய முரண்பாடு தான் சனி இரவு தில்லி ராம்லீலா மைதானத்தில் வெளிப்பட்டது.

ஆனால், இவர்கள் மட்டுமின்றி பிற ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஊடகங்களும் ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் ஊற்று மூலமாய் இருக்கும் தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள். அதன் எதிர்மறை விளைவுகள் யாருக்கு சாதகமான திசைவழியில் செல்ல வேண்டும் என்பதில் தான் இவர்களுக்குள் முரண்பாடு.

இதில் சிவில் சமூகத்தின் கருத்தைப் பிரதிபலிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அன்னா ஹசாரே கும்பலோ ராம்தேவின் சாமியார் கும்பலோ மக்களால் தேர்ந்தெடுக்கப் படாதவர்கள். அதனாலேயே மக்களுக்கு எந்த வகையிலும் பதிலளிக்கக் கடமைப்படாதவர்கள். மிக அடிப்படையான ஜனநாயகப் பண்பே இல்லாத இவர்கள் முன்வைக்கும் யோசனைகளோ எந்தவகையிலும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதோடு கோமாளித்தனமானமாகவும் இருக்கிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்க ராம் தேவ் முன்வைக்கும் யோசனைகளெல்லாம் ஏதோ ஷங்கரின் பாடாவதிப் படத்தின் திரைக்கதை போலவே இருக்கிறது. முதலில் உண்ணாவிரதம் இருந்து அயல்நாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வருவார்களாம், அடுத்து அதை அதிகாரிகள் மூலம் ஓவ்வொரு மாவட்டத்திற்கும் அறுபதாயிரம் கோடிகள் மேனிக்கு பிரித்துக் கொடுப்பார்களாம். இதில் அதிகாரிகள் நேர்மையாக செயல்படுவதை உறுதி செய்ய அவர்களுக்கு ராம்தேவ் யோகாசனப் பயிற்சிகள் அளிப்பாராம். உள்நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்க ஐம்பது ரூபாய்களுக்கு மேல் இருக்கும் ரூபாய்த் தாள்களை ஒழித்து விடுவார்களாம்.  பிறகு எதிர்காலத்தில் கருப்புப் பணமே தோன்றாமல் இருக்க புதிய நாணயத்தை அறிமுகம் செய்வார்களாம்.

இந்த பித்துக்குளித்தனமான யோசனைகளெல்லாம் நடக்கவே நடக்காது என்பது வேறு யாரைக்காட்டிலும் ராம்தேவுக்குத் தெரியும். ஏனென்றால், அவரிடமுள்ள எல்லா பணத்தையும் ஐம்பது ரூபாய்களாக மாற்றி பதுக்க வேண்டுமென்றால் ஸ்காட்லாண்டில் இருக்கும் அவரது தீவே காணாது.

ஆக, அண்ணா ஹசாரேவும் ராம்தேவும் மக்களை அரசியலற்ற மொக்கைகளாக்கும் ஆளும் வர்க்க நலனையே பிரதிபலிக்கிறார்கள். ஜனநாயகமற்ற இந்த கும்பலின் அரசியல் மோசடிகளை மக்கள் அறிந்து கொள்வதோடு, கருப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் அடிப்படையாக இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வீழ்த்த முன்வரும் போது தான் உண்மையாகவே ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியும்.

_______________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: