privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?

கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?

-

மிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது;  யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’  குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளப் போவதாகவும், கொள்கை முடிவுகள் பலவற்றை எடுக்கப் போகிறது என்றும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் தானே? நமது பிரச்சினைகளும் நல்வாழ்வும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பது உங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறதல்லவா?

ஒருவேளை அரசியல் கட்சிகளின் மேலான நம்பிக்கையை இழந்து விட்டவராயிருப்பின் நீங்கள் இவ்வாறும் நினைக்கலாம் – “இந்த அரசியல்வாதிகளே சுத்த மோசம் தான் சார். எல்லாம் படிக்காத பயலுங்க. ஆனா, நல்லா படிச்ச ஆபீஸருங்க கிட்ட நிர்வாகத்தை ஒப்படைச்சிட்டா எல்லாம் சரியாப் போகும்”. இதில் படித்தவர் நல்லவன் தப்பு செய்யமாட்டான் என்றும் படிக்காதவனெல்லாம் அயோக்கியனென்றும் தொனிக்கும் பாரமரத்தமான அரசியல் புரிதலை ஒருபக்கம் வைத்து விட்டாலும் கூட, நமது அரசின் முக்கியமான உள்நாட்டுக் கொள்கைகளும் அயல் விவகாரத் துறைக் கொள்கை முடிவுகளும் நம்மவர்களாலேயே எடுக்கப்படுகின்றது என்கிற நம்பிக்கை உங்களுக்கு அசைக்க முடியாமல் இருக்கிறது அல்லவா?

ஆம் எனில் உங்களுக்கு சில மிக முக்கியமான கேள்விகள் இருக்கின்றன.

உண்மையில் இந்த தேசத்தை ஆள்வது யார்?

கடந்த பதினான்காம் தேதி தொடங்கி இந்து பத்திரிகையில் விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் வசம் பல்வேறு நாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்கள் தமது தலைமையகத்திற்கு அனுப்பிய இரகசியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் கிடைத்துள்ளன. அவற்றில் இந்தியா தொடர்பான கேபிள்களை தற்போது இந்துப் பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக வெளியாகி வரும் இந்த ஆவணங்களைக் கவனமாக வாசிக்கும் எவருக்கும் சில அடிப்படையான சந்தேகங்கள் எழுந்திருக்க வேண்டும். அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் அனுப்பும் அனேகமான கேபிள்களில் தமக்கு மேற்படித் தகவல்களைக் கொடுத்தது முக்கியமான அலுவலகங்களில் இருக்கும் தமது  ‘தொடர்புகள்’ என்றே குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு துறையின் தலைமைச் செயலகத்திலும் உள் தகவல்களைப் பெற்றுக் கொள்ள தமக்கு விசுவாசமான ஐந்தாம்படை ஆட்களை விதைத்துள்ளது தெரியவருகிறது.

இந்த ஆவணங்கள் வெளியாகத் துவங்கிய நாட்களில் பிற முதலாளித்துவ ஊடகங்களில் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் தற்போது மட்டுப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களின் நினைவுகளில் இருந்தும் இவ்விவகாரங்கள் மங்கிப் போய் விடலாம். ஆனால், இங்கே அரசாங்க மட்டத் தொடர்புகளைப் பேணும் நோக்கத்தோடு இயங்கி வருவதாகச் சொல்லப்படும் அமெரிக்கத் தூதரமும் அதன் அதிகாரிகளும் ஒவ்வொரு அரசாங்க அலுவலகங்கள் வரையிலும் தொடர்புகளை உண்டாக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று ஊடகங்களோ பாராளுமன்றத்தில் வாய்கிழியப் பேசும் எதிர்க்கட்சிகளோ கேள்வியெழுப்பவில்லை. அவர்களின் இந்தக் காரியவாத மௌனம் என்பது அமெரிக்கர்கள் நமது தேசத்தையும் அதன் நிர்வாக இயக்கத்தையும் பல்வேறு துறைகளில் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான  முடிவுகளையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சுயமாக எடுத்துக் கொண்டு விட்ட உரிமையை  மறைமுகமாய் அங்கீகரிப்பதாய் இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போன்ற மிக முக்கியமான பதவியில் உள்ளவர்களோடு கூட தனிப்பட்ட முறையில் மாமன் மாச்சானிடம் பேசுவது போன்று மிக இயல்பாகப் பேசி உள்விவகாரங்களைக் கறந்துள்ளனர். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே நாராயணனுக்கும் சிதம்பரத்துக்கும் இடையே நடந்த குத்துபிடி விளையாட்டை அமெரிக்கர்கள் மிகுந்த கவனத்தோடு கவனித்து வந்துள்ளார்கள். 2010-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அமெரிக்கத் தூதர் திமோத்தி ரோமர் அனுப்பும் கேபிளில் இவற்றைப் பற்றி மிக விலாவாரியாக அலசுகிறார். இதில் அமெரிக்க அதிகாரிகளிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினைகளைப் பற்றி போட்டுக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து நாராயணனிடம் பேசிய விவரங்களைப் பதிவு செய்யும் ரோமர், நாராயணன் போன்று அமெரிக்க நலன்களுக்கு விசுவாசமாய் இருக்கும் ஒருவர் கிடைப்பது அரிது என்பதையும் தவறாமல் பதிவு செய்கிறார். அமெரிக்க நலன் சார்ந்த முடிவுகளை இந்திய அதிகார வர்க்கத்திடையே செயல்படுத்துவதில் நாராயணன் மிகவும் திறம்பட செயல்பட்டதாக அவருக்குப் பாராட்டுப் பத்திரமும் வாசிக்கிறார். இப்படி, ஒவ்வொரு துறையிலும் தமக்குத் தகவல்கள் அளிக்க ஐந்தாம் படைகளை நிறுவி, அதன் உள்விவகாரங்களைப் பற்றிய உளவுத் தகவல்களைப் பெற்று வந்துள்ளனர்.

இவர்கள் தூதரக அதிகாரிகளா இல்லை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவாளிகளா? இவர்களுக்கு எந்தக் கூச்சமும் இன்றி தகவல்களை அளிக்கும் இந்த அதிகாரிகள் அமெரிக்கக் கைக்கூலிகள் இல்லையா? போலி கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பாராளுமன்ற ஓட்டுக்கட்சி அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் ஏன் அமெரிக்க அதிகாரிகள் நமது நாட்டு உயர் அலுவலகங்களில் மூக்கு நுழைப்பதைக் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்?

படித்தவர், அப்பழுக்கற்றவர் என்பது போல முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் மன்மோகன் சிங்கிலிருந்து அழகிரியின் கையாளான பட்டுராஜன் வரைக்கும் ஒரு தொடர்புச் சங்கிலியை அமெரிக்க தூதரக அதிகாரிகள் உண்டாக்கி வைத்துள்ளனர். மாநிலத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வக்குகளை வளைப்பதில் இருந்து தேசத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பணம் கொடுத்து எதிர்க் கட்சிகளின் எம்.பிக்களை வளைப்பது  வரைக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் இவர்கள் மனம் விட்டு ‘விவாதிக்கிறார்கள்’ என்றால் – இவர்கள் யாருடைய ஆட்கள்?

மன்மோகன் சுதந்திரஇந்தியாவின் பிரதமரா; காலனிய கால வைசிராயா?

பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட சமயத்தில் ஹிலாரி கிளிண்டன் இங்குள்ள தூதரக அதிகாரிக்கு கேபிளில் அனுப்பிய கேள்விகளை நீங்கள் கவனமாகப் படித்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். அது அமெரிக்கர்களுக்கு மன்மோகன் மேல் இருக்கும் ஆழ்ந்த அக்கறை. அதில் பிரணாப் எந்தத் (தரகு) முதலாளிக்கு நெருக்கமானவர் என்பதில் தொடங்கி அவருக்கும் மன்மோகனுக்கும் உள்ள உறவு என்ன, ஏன் மான்டேக் சிங் அலுவாலியா நிதி அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்று நிறைய கேள்விகளை முன்வைக்கிறார். இன்னும் வெவ்வேறு கேபிள்களின் உள்ளடங்கங்களில் ஒரு சங்கிலி போல் துலக்கமாகவும் எடுப்பாகவும் இந்த அம்சம் தெரிகிறது.

மன்மோகன் மேல் இத்தாலிய அன்னை சோனியா காந்திக்கு இல்லாத அக்கறை அமெரிக்க அன்னை ஹிலாரி கிளிண்டனுக்கு இருப்பதன் இரகசியம் என்னவாக இருக்க முடியும்? நீங்கள் மறைந்து கிடக்கும் ஒன்றின் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் முதலில் அதனால் விளைந்த காரியம் என்னவென்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மன்மோகன் தன் வரலாற்றில் சாதித்துக் கொடுத்த காரியங்களே அவரை அமெரிக்க சேவல் அடைகாத்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள்.

பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் திறந்து விட்ட விசுவாசமாகட்டும், இந்தியாவின் வளங்களைக் கூறு போட்டுத் தன் குலசாமிகளான ஏகாதிபத்திய முதலாளிகளுக்குப் படையலிட்ட பக்தியாகட்டும், நிதிமூலதன சூதாடிகளுக்கு தேச எல்லையைத் திறந்து விட்ட அடிமைத்தனமாகட்டும், இராணுவ ஒப்பந்தங்கள் எனும் பெயரில் தேசத்தின் இறையாண்மையைக் காவு கொடுத்த கைக்கூலித்தனமாகட்டும், அமெரிக்க அணு ஒப்பந்தம் எனும் பெயரில் நாட்டின் சத்தித் துறையை பலிகடாவாக்கிய துரோகத்தனமாகட்டும் – இன்னும் இது போல் எண்ணிரந்த சந்தர்பங்களில் மன்மோகன் சிங் என்னும் இந்த முன்னாள் உலக வங்கி அதிகாரி தனது அமெரிக்க எஜமானர்களுக்கு சாதித்துக் கொடுத்த காரியங்களைப் பட்டியலிடுவதானால் அதற்கு தனியே ஒரு புத்தகமே போட வேண்டியிருக்கும் – அதன் காகிதங்களுக்கு இந்தியக் காடுகள் மொத்தத்தையும் கூட அழிக்க வேண்டியிருக்கலாம்.

இதனால் தான் மன்மோகன் சிங்கிற்கு வேறு எவர் மூலமும் எந்த நெருக்கடியும் விளைந்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்துகிறது. அயல் விவகாரக் கொள்கைகளில் தனது சொந்த அதிகாரிகளின் தயக்கங்களையும் கடந்து இந்தியா செயல்பட மன்மோகன் சிங் தான் காரணம் என்பது அம்பலமாகியிருக்கிறது. பதினெட்டாம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள கேபிள் ஒன்றில் 2005-ஆம் ஆண்டு மன்மோகனின் அமெரிக்க விஜயத்திற்கு முன் அப்போது தூதராயிருந்த டேவிட் முல்ஃபோர்ட் அனுப்பிய தகவல்களில், ஈரான் விஷயமாய் ஒரு கடினமான முடிவை எடுக்க வெளிவிவகாரத் துறை அதிகாரிகள் தயங்குவதாகவும், மன்மோகன் அமெரிக்கா வரும் போது இது பற்றிக் கறாராக பேசி விடவேண்டும் என்றும், ஈரான் விஷயத்தில் தயங்குவது அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற தடையாய் இருக்கும் என்று அவரிடம் சொல்லி விட வேண்டும் என்றும் அவர் தகவல் அனுப்புகிறார்.

பின்னர் இந்தியா ஈரானை ஐ.ஏ.இ.ஏவில் கைவிட்டது நாம் அறிந்த செய்தி தான். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாக விளங்குகிறது. ஒன்று – துறைசார்ந்த அதிகாரிகளின் தயக்கங்களையும் மீறி மன்மோகன் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்திய நலன்களை பலிகொடுத்துள்ளார்; இரண்டு – அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தியுள்ளது. அதாவது பிளாக்மெயில் செய்துள்ளது.

ஹிலாரியின் மேற்படி கேபிளில் வேறு சில சுவாரசியமான கேள்விகளும் இருக்கின்றன. மான்டேக் சிங் அலுவாலியாவிற்குத் தற்போது கொடுக்கப் பட்டுள்ள பணியைப் பற்றியும் அதில் அவர் திருப்தியாய் இருக்கிறாரா என்று மிகுந்த அக்கறையோடு குசலம் விசாரிக்கிறார் ஹிலாரி. அவரது கேபிளில் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்த பதில்கள் என்னவென்பது  இன்னும் வெளியாகவில்லை – இருந்தாலும் அந்த பதில்கள் என்னவாயிருக்கும் என்பதில் உங்களுக்கு இன்னமும் சந்தேகங்கள் ஏதும் இருக்காதல்லவா?

ஆளும் கட்சி மட்டுமல்லாது சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களோடும் நட்பு ரீதியில் ‘உரையாடும்’ தூதரக அதிகாரிகள், அவர்கள் பற்றிய தகவல்களையும் அவர்களால் அமெரிக்க நலனுக்கு  ஏற்படக்கூடிய சாதக பாதகங்களையும் அலசுகிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் அத்வானியைச் சந்தித்துப் பேசும் தூதரக அதிகாரி ஒருவர், அவரால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எவ்வித பாதிப்பும் வந்து விடாது என்றும், இதை அவரே தன் வாயால் மறைமுகமாக சுட்டிக்காட்டினார் என்றும் குறிப்பிடுகிறார். இன்றைக்கு தொடர்ந்து கேபிள்கள் வெளியாகிவரும் சூழலில், அவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான முக்கியமான தகவல்கள் இருக்கும் நிலையில், இவற்றை முன்வைத்து தமது சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட எதிர்கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. இத் தகவல்கள் வெளியானது தொட்டு இன்று வரையில் இவர்கள் பாராளுமன்றத்தில் போட்டு வரும் கூச்சல்கள் கூட மக்களின் கவனத்திற்கு அப்பால் தான் நடக்கிறது என்பதோடு அதன் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. மிக முக்கியமாக, இந்த அம்பலப்படுத்தல்களை மக்களிடையே எடுத்துச் சென்று அரசை வீழ்த்த வேண்டு என்கிற முனைப்பு இவர்கள் எவரிடமும் இல்லை.

இந்த விக்கிலீக்ஸ் கேபிள்கள் ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலின் ஒரு சிறிய அங்கத்தின் ஒரு குறுக்குவெட்டுச் சித்திரத்தை நமக்கு வழங்குகிறது. அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஒரு பக்கம் சட்டத்திற்குப் புறம்பான வகைகளில் ஒரு உளவுச் சங்கிலியை உருவாக்கி வைத்துள்ளது. இராணுவம், போலீசு தொடங்கி சகல அரசு மட்டங்களிலும், கலை கலாச்சாரத் துறைகளிலும், என்.ஜி.ஓக்கள் மூலம் சமூகமட்டத்திலும் – சரியாகச் சொன்னால் – ஒரு ஆக்டோபஸ்ஸின் கரங்கள் எப்படி சகல திசைகளிலும் நீண்டு இயங்குகிறதோ அவ்வாறே இந்த வெவ்வேறு கரங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் இயங்கி, அங்கேயிருந்து தகவல்களைச் சேகரித்து அனுப்ப  அமெரிக்காவில் உள்ள தமது தலைமையகத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. இது நீளும் ஒவ்வொரு திசையிலும் தமக்குத் தேவையான தகவல்களைப் பெறுவது, சூழலைத் தமக்குச் சாதகமாக முன்னெடுத்துச் செல்வது என்று நமது கற்பனைக்கும் எட்டாத ஒரு பிரம்மாண்டமான இயந்திரம் போல இயங்குகிறது.

உலகெங்கும் புவியியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை மிகத் தந்திரமாகத் தன் வலைக்குள் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா. இதற்காக, பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளை உண்டாக்குவது, உள்நாட்டு எதிர்ப்புக் குழுக்களுக்கு ஆயுத உதவி வழங்கி  திடீர் புரட்சிகளை உண்டாக்குவது, இராணுவப் புரட்சிகளை ஏற்பாடு செய்வது, பொம்மை சர்வாதிகாரிகளை நிறுவுவது என்று சந்தர்பத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள்கிறது. ஈராக் போன்று தனக்குப் பணியாத நாடுகளில் மொன்னையான காரணங்களை முன்வைத்து நேரடியாகவே இராணுவத் தலையீடு செய்யவும் தயங்குவதில்லை. இதற்கு, தென்னமெரிக்க நாடுகள் தொடங்கி, பல்வேறு ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டு பல்வேறு ஆதாரங்கள் நம் கண்முன்னே உள்ளன.

இந்தியாவைப் பொருத்தளவில், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கெல்லாம் இங்குள்ள தலைவர்கள் ‘ஒர்த்’ இல்லை என்பதாலும், அவர்கள் ஏற்கனவே அமெரிக்க அடிமை வேலைக்கு மனுப் போட்டுக் காத்திருக்கும் அற்பப் புழுக்கள் என்பதாலும் இங்கே அவர்களின் அணுகுமுறை வேறு விதமாய் உள்ளது. மக்கள் மத்தியில் பரவலான என்.ஜி.ஓ வலைப் பின்னலும், பல்வேறு மட்டங்களில் சட்டவிரோதமான உளவாளிகள் வலைப்பின்னலும், அரசு மற்றும் அரசாங்க மட்டத்தில் நேரடியாக தூதரக அதிகாரிகளும் இந்தியாவின் முடிவுகளைக் கண்காணிக்கவும், ஒற்றறியவும் செய்து வருகிறார்கள்.

இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்க நேரடியான இராணுவ ஒப்பந்தங்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மார்ச் 28-ஆம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் இந்திய அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் விளைவாய் அமெரிக்கா அறுவடை செய்யக் கூடிய பலன்களைப் பற்றி தூதரக மட்டத்தில் பரிமாறிக் கொள்ளப் பட்ட கேபிள்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்தில் சுமார் 27 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு விற்க முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மேல் ஓரளவு சந்தேகம் தெரிவிக்கும் அதிகாரிகளையும் மீறி, அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை இன்னும் அதிகமாக்க ஆளும் கும்பல் எடுத்து வரும் முயற்சிகள் பலவற்றையும் குறிப்பிட்டுள்ளனர். இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால், அமெரிக்கா தான் விற்கும் ஆயுதங்களின் பயன்பாட்டைக் கண்கானிக்கும் உரிமையின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் இந்திய இராணுவத் தளங்களுக்குள் நுழைய முடியும். இது மறைமுகமாக இந்திய இராணுவத்தை அமெரிக்காவுக்கு அடகு வைப்பதற்கு ஒப்பானதாகும். இப்படி பச்சையாக இந்திய நலனை அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் இந்த இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் ஒரு தொடர்ச்சி தான் அணு சக்தி ஒப்பந்தமாகும்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதை எதிர்த்து 2008 ஜூலை மாதம் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொள்கிறார்கள். அப்போது, அரசைக் காப்பாற்ற எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவரங்களும் அதை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடமே காங்கிரசு பெருச்சாளிகள் விவரித்திருப்பதும் சில நாட்கள் முன்பு விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிளில் வெளியாகி இருந்தது. அந்த சமயத்தில் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த காங்கிரசு, விக்கிலீக்ஸின் வெளியிட்டுள்ள இந்த ஆதாரத்தை சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவைகள் நம்புவதற்கில்லை என்றும் சொன்னது.

அவர்கள் சொல்லி வாயை மூடவில்லை – அவர்களின் எஜமானர்களான அமெரிக்கர்களே அவர்கள் முகத்தில் கரியைப் பூசினர். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த அப்போதைய தூதர் டேவிட் முல்போர்ட், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளைப் பார்த்து “இதெல்லாம் கோர்ட்டில் நிற்குமா” என்று அடித்தொண்டையில் கத்திய பிரணாப் முகர்ஜியின் முகத்திலும், தாம் பணம் கொடுக்கவில்லையென்றும் அப்படிக் கொடுப்பட்டிருந்தால் தமக்குத் தெரியாது என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள்கள் தவறானவை என்றும் விளக்கமளித்த பிரதமரின் முகத்திலும் விக்கிலீக்ஸ் தளத்தை ஆரம்பித்து இரகசியங்களை வெளியிட்டு வரும் ஜூலியஸ் அசாஞ்சே நேரடியாகக் கரிபூசியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களை ஒரு ஆதாரமாகக் கொண்டு வழக்குகள் நடந்து வருவதைச் சுட்டிக் காட்டும் அசாஞ்சே, அங்கெல்லாம் இவை ஆதாரங்கள் என்பதை கடந்து இந்த விவரங்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பெற்றுள்ள வழிகளையும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறிய அசாஞ்சே, அவர் சொல்வது பச்சைப் பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி, இந்த இரகசியத் தகவல்கள் முதலில் விக்கிலீக்ஸில் வெளியாகத் துவங்கியதும் அமெரிக்காவே நேரடியாக அனைத்து உலக நாடுகளையும் தொடர்பு கொண்டு இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி எச்சரித்ததும், அமெரிக்காவின் மாகாணம் ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் விக்கிலீக்ஸ் தளத்தை பார்க்கத் தடைவிதித்ததும் உள்ளிட்ட அமெரிக்க ஆளும் வர்க்கம் வெளிப்படுத்திய பதட்டமும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவையனைத்துமே இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையைப் பறைசாற்றுகிறது.  ஜூலியன் அசாஞ்சே மேல் நேரடியாக இரகசியத்தைத் திருடிய குற்றச்சாட்டை வைத்து கைது செய்ய முடியாமல் நொட்டை நொள்ளையாக பெட்டி கேசு போட்டுக் கொண்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்பதற்கும் காரணம் இருக்கிறது. அவ்வாறு செய்வது, இந்த இரகசியங்கள் உண்மையானது என்று அமெரிக்காவே சான்றளித்தது போலாகி விடும் – அதாவது திருடனுக்குத் தேள் கொட்டினால், அமுக்கமாக முனகிக் கொள்ள மட்டும் தான் முடியும். வாய் விட்டு அலற முடியாது.

இந்தியாவின் சர்வகட்சிகளும் சேர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வெளியாகி வரும் கேபிள்களைப் பகுதி பகுதியாகத் தனித் தனியே பார்ப்பதும், ஒவ்வொன்றிற்கும் ஓரிரு நாட்கள் கூச்சலிட்டு விட்டு பின்னர் அடுத்ததற்குத் தாவுவதாகவுமே உள்ளனர். இதில் இவர்கள் அனைவருமே அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு வருமளவிற்குத் தமது எதிர்ப்பு சென்று விடக்கூடாது என்பதிலும் இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஆக, அனைத்து ஓட்டுக் கட்சிகளும் எந்தப் பாகுபாடுமின்றி அமெரிக்க அடிவருடித்தனத்தை தங்கள் சொந்த குணமாக உணர்வுப் பூர்வமாக வரித்துக் கொண்டு விட்ட ஒரு நிலையில் இருக்கிறார்கள். இங்கே நடத்தப் படும் தேர்தல் கேலிக் கூத்துகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தேசம், தேசபக்தி, இறையாண்மை, தேச எல்லையின் புனிதம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இவர்கள் எதார்த்தத்தில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களாகவே இருக்கிறார்கள்  என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது.

இதெல்லாம் தெரிந்தது தானே, அமெரிக்காவுக்கு அடங்கிப் போவதைத் தவிர்த்து நமக்கு வேறு என்ன வழி என்று சிந்திக்கும் அடிமைப் புத்திகளுக்கு அல்ல இந்தக் கேள்வி; உண்மையில் நமது நாட்டின் மேல் அக்கறையும் பற்றும் கொண்டவர்கள் தாமே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும் – இந்த பன்றிக் குட்டையில் நீங்களும் விழுந்து புரளத்தான் வேண்டுமா? தொண்டைமானின் வாரிசுகள் அதிகார பீடத்தில் அமர்த்தப்பட்டுத்தான் வருகிறார்கள் ; ஆனால் அவர்கள் தங்கள் மூதாதையர்கள் போலவே தாமும் தலையாட்டி பொம்மைகள்; அப்போது பிரிட்டன் – இப்போது அமெரிக்கா. நீங்கள் தொண்டைமானின் வாரிசுகளோடு உங்களை அடையாளம் காண விரும்புகிறீர்களா இல்லை ஒரு கட்டபொம்மனைப் போல இந்த இழிவுகளை எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: