privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!

விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!

-

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

மனித உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட கிளையின் சார்பில் விருத்தாசலம் பகுதியில் கடந்த ஆறுமாத காலமாக அனைத்து பள்ளி வாசல்களிலும் சென்று நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டணத்தை அச்சடித்து விநியோகித்தோம். பெற்றோர்களை திரட்டி விளக்கி ஆலோசனை கூட்டம், பிறகு மூன்று நாட்கள் நகரத்தின் பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம், அதன் மூலம் பெற்றோர்களிடம் கூடுதல் பணம் கட்டியதற்கான ரசீதுடன் புகார் மனு என தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம்.

இறுதியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை முற்றுகையிடுவோம் என நகரம் முழுவதும் சுவரொட்டி மூலம் அறிவித்தோம். பள்ளி நிர்வாகத்திடம் நேரில் கட்டணத்தை கட்டமாட்டோம் என சண்டை போட்டோம். கட்டணத்திற்காக பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தபட்ட மாணவர்களின்  பெற்றோர்களுக்காக நேரில் சென்று நியாயம் கேட்டபோது, கட்டுபடியாகாது பள்ளியை மூடவேண்டியதுதான் என்ற பதில் தந்தது நிர்வாகம்.

உயர்ந்த தரத்தில் கல்வியை விற்கின்ற பள்ளி ஒன்றில், பெற்றோர்களை அழைத்து கூட்டம் போட்ட நிர்வாகம், “அரசு கட்டணம் வேண்டும் என்பவர்கள் கை தூக்குங்கள்” என்றவுடன் பெற்றோர்களிடம் அமைதி நிலவியது. உடனேஅரசு கட்டணம் வேண்டுவோர் அரசு பள்ளிகளுக்கே சென்று விடுங்கள், இங்கே யாரும் வெத்தல பாக்கு வைத்து அழைக்க வில்லை, கட்டணத்திற்காக நான் பிச்சைகாரி போல அலைய வேண்டய அவசியம் இல்லைஎன்று ஆண்டை, அடிமைகளிடம் பேசுவது போல பேசினார் ஒரு நிர்வாகி.

கடலூர் மாவட்ட தனியார் பள்ளி முதலாளிகள் சங்கம் அவசரமாக கூடி “பணம் கட்ட முடியாதவர்கள் நகராட்சி பள்ளிக்கு செல்லலாம், ஏழை பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அஞ்சல் வழிக்கல்வி, நடமாடும் கல்வி, திறந்த வெளிகல்விககூடங்களை அமைக்கலாம்”,என ஆலோசனை சொன்னதுடன் “நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி கட்டணம் எங்களுக்கு கட்டுபடியாகாது, ஆண்டுக்கு 15 சதவீதம் ஏற்றிதரவேண்டும் என தீர்மானம் போட்டார்கள்.

பிறகு கடலூரில் காங்கிரசு எம்.பி அழகிரி, திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோரை அழைத்து இந்தக் கோரிக்கைகளுக்காக மாநாடு நடத்தி முடித்து விட்டனர்.

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

கூடுதல் கட்டணம் கட்டியதற்கான ரசீது, மேலும் கட்ட சொல்லி மாணவர்களை துன்புறுத்தல் புகாரை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட்டு 1-3-2011 அன்று மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, மீண்டும் நகரம் முழுவதும் பிரச்சாரம் செய்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம். பிறகு பள்ளிகள் தோறும் பிரசுரம், வீடு தோறும் தாய்மார்களிடம் அச்சம் தவிர்க்க விளக்கி அழைப்பு விடுத்தோம். காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்தது. தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலுருந்து புறப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

டி.இ.ஒ. “எனக்கு அதிகாரமில்லை” என எங்களுக்கு ஆறுதல் சொன்னார். போலீசார் சுற்றி வளைத்து மறித்தனர். அதிகாரம் பெற்ற நபர் பேசும் வரை முற்றுகை தொடரும்,என மக்களும், தோழர்களும் உறுதியாக அறிவிக்கவே “மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இன்றே போராட்டக்காரர்களை அரசு மேல்நிலைபள்ளியில் சந்திக்கிறார்” என்பது உறுதியானவுடன் முற்றுகை தற்காலிகமாக விலக்கப்பட்டது.

மதியம் குறித்த நேரத்தில் காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பெற்றோர்களை ஆட்டோ பிரச்சாரம் மூலம் வீதி வீதியாக விசயத்தை சொல்லி அணிதிரட்டினோம். மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டண கொள்ளையை கொட்டி தீர்த்தோம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் “தமிழகம் முழுவதும் இப்படிதான் நடக்கிறது, பெற்றோர்கள் ஏன் கூடுதலாக பணம் கட்டுகிறீர்கள்,கட்டண பட்டியலை அறிவிப்பு பலகையில் ஒட்ட சொல்லி மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் உத்திரவிட்டுள்ளார், நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று கூசாமல் பொய்யை சொன்னார்.

அதற்கு மக்கள் “விருத்தாசலத்தில் எத்தனை பள்ளி கூடத்திற்கு சென்று கண்காணித்தீர்கள், ஒரு பள்ளி கூடத்தில் கூட ஒட்டவில்லை, உங்கள் உத்திரவை எந்த பள்ளி முதலாளி மதிக்கிறார்” என எதிர்கேள்வி கேட்டு உண்மையை எடுத்துரைக்க ஆய்வாளர் அமைதி காத்தார்.

“மனித உ¡¢மை பாதுகாப்பு மையத்தின் சார்பில் திரட்டிய ஆதாரங்களை உங்களிடம் புகாராக கொடுத்துள்ளோம், நடவடிக்கை எடுப்பீர்களா? என்றதற்கு “எடுக்கிறேன், எங்கள் துறை சார்பில் விண்ணப்பம் கொடுத்துள்ளார்கள், அதை ரசீது ஆதாரங்களுடன் ஒரு வாரத்திற்குள் எனக்கு அனுப்புங்கள்” என்றார். இதை தமிழகம் முழுவதும் விநியோகித்து வருகிறோம்.

தனியார் பள்ளி முதலாளிகள் கட்டுபடியாகாது என கூடுதலாக கட்டணம் வசூலிப்பது ஊரறிந்த உண்மை. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களுக்கு அரசு உத்தரவை மீறும் தைரியத்தை வழங்கியது யார்? எனக் கேட்டோம். பெற்றோர்கள் யாரும் ஆதாரங்களுடன் எங்களுக்கு புகார் அனுப்பவில்லை என்று கூறினார் அந்த ஆய்வாளர்.

“கண் முன்பு தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு புகார் கேட்கிறீர்களே, புகார் பெறுவதற்கு என்ன முயற்சி செய்தீர்கள்? பெற்றோர்கள் அச்சத்தை போக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எத்தனை முறை எச்சரிக்கை செய்தீர்கள்? நாங்கள் உங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை,தனியார் பள்ளிகள் மீது கட்டணத்திற்காக நீங்கள் போட்ட உத்திரவை ஏன் அமுல்படுத்த வில்லை” என்று கேட்கிறோம், ஆறுமாதம் நாங்கள் பிரச்சாரம் செய்து 60 க்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றோர்களிடம் பெற முடியும் என்றால் ,அரசு அதிகாரியாகிய உங்களால் ஏன் முடியாது? என்றோம்.

பொதுமக்களின் கேள்விகணைகளால் திணறிய அதிகாரி இறுதியாக “உங்கள் கோரிக்கையை  நடைமுறைபடுத்துகிறேன், பத்திரிகையாளர்களே எழுதிகொள்ளுங்கள், அனைத்து தனியார் பள்ளிகளிலும் நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டண விபரத்தை பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன், நாளை 12-00 மணிக்குள் நடக்கும்,மேலும் அரசு கட்டணத்திற்கு கூடுதலாக பெற்றோர்கள் கட்டவேண்டாம். தனியார் பள்ளிகளும் வசூலிக்க கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதுவதற்கும் கட்டணம் கட்டுவதற்கும் தொடர்பில்லை பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம், என ஆவேசமாக அறிவித்தார்.

விருத்தாசலம் - தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி !

அவரை அனுப்பி விட்டு வந்திருந்த பெற்றோர்களிடம் தொடர்ந்து அரசையும், தனியார் பள்ளி முதலாளிகளையும், கண்காணிக்க வேண்டும், அப்போதுதான் நமது கல்வி உரிமையை பாதுகாக்க முடியும் என்றோம். தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணத்தில் மட்டுமல்ல, புத்தகம் விற்பதில், யூனிபார்மில், செருப்பில், அடிக்கிற கொள்ளை, மேலும் தாய்மொழி தமிழ் வழிக்கல்வியை, சமச்சீர்கல்வியை எதிர்த்து போராடுகிறார்கள், தடையுத்திரவு பெறுகிறார்கள், உச்சநீதிமன்றம் வரை கொள்ளையடித்த பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள், ஆங்கிலம் மட்டும் கற்பதற்கு நாம் என்ன அடிமைகளா?குழந்தைகளை பணையக்கைதியாக வைத்து பணம் பறிப்பதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என்பதை விளக்கி தனியார் பள்ளிகளின் மாணவர்கள் நல பெற்றோர் சங்கம்என்று உருவாக்கி தனியார் பள்ளிகளை கண்காணிப்பதுடன்  பெற்றோர்களை சங்கமாக திரட்டவேண்டும். இந்த வெற்றி செய்தியை பிரசுரமாக அச்சடித்து நகரம் முழுவதும் விநியோகிக்க வேண்டும், என்ற முடிவுடன் புதிய சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்வுடன் பெற்றோர்கள் அச்சம் கலைந்து நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.

மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்களுக்கு உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதை அடைவதற்கு தடையை மீறி பாதிக்கபட்டவர்களின் கையை பிடித்து அழைத்து சென்று அவர்களது போராட்டத்தின் மூலம் அதை அடைவதற்கு கை கொடுக்கிறது என்பதறத்கு இந்த அனுபவம் ஒரு நிரூபணம்.

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்க்காக பெற்றோர் இனியும் அஞ்ச வேண்டியதில்லை. மக்கள் சக்தியாக ஒன்று திரண்டால் விருத்தாசலத்தில் நடந்த இந்த நிகழ்வு தமிழகம் முழுமைக்கும் பரவும்.

_____________________________________________

– மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்