privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?

ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?

-

ஏழைகள் படிக்கக்கூடாது! அப்போ கொன்றுவிடலாமா?

ழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக  ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சுபலா அனந்தநாராயணன். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார்.

முதலில் இந்த கல்வி கற்கும் உரிமை என்றால் என்ன என்பதை பார்த்துவிடுவோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டம்தான் அது. பாதிக்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகள் குறைந்தபட்சம் எட்டு வருடம் கூட கல்வி கற்பதில்லை. ஒன்று பள்ளியின் பக்கமே வருவதில்லை அல்லது பாதியில் படிப்பை விட்டு நின்று விடுகிறார்கள். இந்த பிள்ளைகளில் மிகப் பெரும்பான்மையினர் வசதி வாய்ப்பற்ற ஏழை மக்கள்.  இந்த கல்வி கற்கும் உரிமை, கோத்தாரி கல்விக் குழுவினரால் பொது பள்ளிக்கூட அமைப்பை நோக்கிய ஒரு சிறுமுயற்சியாக, 1964-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய கல்வியமைப்பில், சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் உருவாக்கியுள்ள ஏற்றதாழ்வுகளை களைவதற்காக செய்யப்பட்ட சமூக சீர்திருத்தமே இந்த பொது பள்ளிக்கூட அமைப்பு. இந்த மசோதா 1964,1986 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் முறையே நிறைவேற்ற முயன்றும் தோல்வியையே கண்டது.

இந்த மசோதாவுக்காக, பட்ஜெட்டில் 12,000 கோடிகள்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஆரம்பக் கல்விக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கி வரும் நாடு இந்தியாதான். இதுவும் வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. இது முதலில் தில்லியில் நடைமுறைக்கு வந்து, இப்போது அனைத்து பள்ளிகளிலும் அமுலாகத் தொடங்கியிருக்கிறது.

இந்த மசோதாவின்படி, குழந்தைகளை, பெற்றோர்களை இன்டர்வியூ என்ற பெயரில் நேர்காணல் செய்வது மற்றும் கேபிடேசன் கட்டணம் வசூலிப்பது இரண்டுமே தண்டனைக்குரியது. கேபிடேசன் கட்டணம் வசூலித்தால் கட்டப்படும் பீஸ் தொகையைப்போல் 10 மடங்கும்,  குழந்தைகளையும் பெற்றோரையும் நேர்முகம் கண்டால் 25000 ரூ முதல் 50000 ரூ வரையும் அபராதம் வசூலிக்கப்படும். 25 சதவீத இடங்களை வசதி வாய்ப்பற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியை முடிக்கும்வரை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை தண்டிப்பதோ அல்லது பள்ளியை விட்டு அனுப்புவதோ கூடாது. ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அந்த வட்டாரத்திலிருக்கும் பள்ளியிலேயே படிக்க வேண்டும்.இவையெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள். இத்தனைக்கும், கல்வி கற்கும் உரிமை, முதல் எட்டு வருடங்களுக்கு மட்டுமே கல்வியை உறுதி செய்கிறது. (அதற்கு பிறகு அந்த மாணவர்களை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. பள்ளிகள் நினைத்தால் வெளியேற்றலாம். )

கல்வியை முழுக்க தனியார் மயம் ஆக்கிய நிலையில் இந்த மசோதா எதையும் மாற்றாது. மேலும் இனி அரசுக் கல்லூரிகள், பள்ளிகள் ஏதும் புதிதாகத் திறக்கப்படாது என்ற சாத்தியத்தையும் இம்மசோதா கொண்டிருக்கிறது. முக்கியமாக தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை இம்மசோதா தீர்த்திருந்தால் இப்படி தனியே ஏழைகளை சேர்க்க வேண்டுமென்ற சலுகை தேவைப்படாமாலேயே போயிருக்கலாம்.

இருப்பினும் இந்த பெயரளவு சலுகைகளைக் கூட தாங்கமுடியாமல் இந்த தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் லாபி வேலையை செய்யத் துவங்கியுள்ளன. இந்த மசோதா இவர்களது வருமானத்தை பாதிக்கிறதாம். அதன் முதல் கட்டமாகத்தான் இந்த இரு பள்ளிக்கூடங்கள் வேலையை காட்டத் தொடங்கியிருக்கின்றன -சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியும், லேடி ஆண்டாள் பள்ளியும்..

இன்று  பள்ளிக்கூடம் என்பது ஒரு பெரிய பிசினஸ். சென்னையில்தான் எத்தனை வகை வகையான பள்ளிக் கூடங்கள். வகுப்பறைகளில் ஏசியுடன், ஏசியில்லாமல், ஒன்றாம் வகுப்பிலிருந்தே லேப்டாப், பாடதிட்டங்கள்/வீட்டுப்பாடங்கள் ஆன்லைனிலே செய்து அனுப்பும் படியான வசதிக்கொண்டவை, என் ஆர் ஐ பிள்ளைகள் படிக்க என்று ஏராளமான வகைகள் உண்டு. ஒவ்வொரு பள்ளியும் அதன் வசதிகளுக்கும், பெயருக்கும் தகுந்தபடி நுழைவுக்கட்டணங்களை வசூலிக்கின்றன, அவை லட்சங்களில் ஆரம்பித்து ஆயிரங்களில் முடிகிறது.

அந்த பிசினஸின் முக்கியத்துவம் கருதித்தான் அரசியல்வாதிகள், ரவுடிகள், அவர்களது வாரிசுகள் என்று பலரும், கல்வி கற்றிருக்கிறார்களோ இல்லையோ கல்வித்தந்தையும் கல்வித்தாயுமாக பரிணாமம் எடுக்கின்றனர். இப்படி, ஆரம்பக் கல்வியிலேயே வர்க்கப் பாகுபாடுகள் நிறைந்திருக்கிறது. வசதி வாய்ப்புள்ளவர்கள் பெரிய பணக்கார பள்ளிக்குச் செல்கிறார்கள். இல்லாதவர்கள், விலை குறைந்த படிப்பை படிக்கிறார்கள். ஆரம்ப கல்வியிபிலிருந்து தொடங்கும்  இந்த முரண்கள் முடிவடையாததது.

பொதுவாக, நகருக்குள் இருக்கும், இந்த பள்ளிகளில் படிக்க ஒன்று நடிக நடிகையர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், வசதியான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளாக இருக்க வேண்டும் அல்லது என் ஆர் ஐக்களின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை தகுதி. அதற்கு அடுத்த லெவலில் இருப்பது நடுத்தர வர்க்கத்திற்கான பள்ளிகள். இந்த பள்ளிகளுக்குத்தான் அப்துல்கலாம் கனவு காணச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்-அவர் படித்து வந்த பின்னணியை மறந்துவிட்டு. இந்தியா வல்லரசாவதைப் பற்றி பாடம் நடத்துகிறார். ஏழை மக்களை தூக்கியெறிந்துவிட்டால் இந்தியா வல்லரசாகி விடும் போல.

உயர்ரகக் கல்வி நிறுவனங்கள், சிறந்த பள்ளி என்பதெல்லாம் ஒரு ஏமாற்று. ஒரு சிறந்த பள்ளி என்பது படிப்பில் எப்படிபட்ட மாணவராக இருந்தாலும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதை விடுத்து, பள்ளிக்கூட ஆசிரியர்களும், பெற்றோர்களும்.. சங்கம் அமைத்து எந்த மாதிரியான  குழந்தைகளை சேர்த்து கல்வி புகட்டுவது என்றும் பள்ளிக்கூட சூழலுக்கும் தரத்துக்கும் பங்கம் வராத வகையில் பள்ளியை பாதுகாப்பதும் எங்கள் உரிமை என்று சொல்வது சொத்துரிமை சார்ந்ததேயன்றி கல்விப்பணி சார்ந்ததல்ல.

அந்த பிள்ளைகள் வந்து சேர்ந்தால் அனுமதி மறுக்க முடியாது, வகுப்பறைகள் முதல் பள்ளிக்கூடமே பாழாகி விடும், அதோடு உங்கள் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுமென்று அந்த தலைமையாசிரியர் பதறுகிறாரே, ஏன்? தங்கள் பிள்ளைகள் ஏழை மாணவர்களோடு  ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றால் ஆசிரியர்களும் பெற்றோரும் ஏன் கதறுகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? ஏழை மாணவர்கள் அழுக்காக இருப்பார்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவர்கள் அதைப் பார்த்து எங்கள் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்று அரற்றுகிறார்கள்.

வகுப்பறையில், ஏழை மாணவர்கள் இருந்தால் பாடம் நடத்த கத்த நேரிடும், பாடங்களை படிக்க கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள் அவர்கள் பங்குக்கு. ஏழை மாணவர்களோடு சேர்ந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேச வராது என்றெல்லாம் சாக்கு போக்குகள் சொல்கிறார்கள். குஷ்பூவின் பிள்ளைகள் லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கின்றனர். ஏழைகளின் ஓட்டு வேண்டி பிரச்சாரம் செய்த குஷ்பூ அவர்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள நிர்வாகத்தினரிடம் பிரச்சாரம் செய்வாரா?

ஏழை மாணவர்களுடன் பழகுவதால்தான் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை பேசக் கற்றுக் கொள்வதாக மத்திய தர வர்க்கத்தில் ஒரு பொது கருத்து நிலவுகிறது. ஏன், பணக்கார வீட்டுப்பிள்ளைகள் கெட்டவார்த்தைகள் பேசுவதேயில்லையா? நம்முன் நிறுத்தப்படும் முகங்களைப் பாருங்கள். விளம்பரங்களில் சச்சின் வருவதைப் போல தன்ராஜ் பிள்ளை ஏன் வருவதில்லை? சற்று வெள்ளையாக, படித்தவர் போல நடை உடை பாவனைகளைக் கொண்டிருந்தால் “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” என்றுதானே நம்புகிறார்கள். நடைமுறையில், எல்லா பித்தலாட்டங்களும் எங்கிருந்துதான் உதிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதற்கு ப.சிதம்பரத்திலிருந்து பதிவுலக நர்சிம் வரை உதாரணங்கள் உண்டு.

இந்த முரணின் சற்றே பெரிய வடிவம்தான் கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த திவ்யாவின் படுகொலை. வகுப்பறையில் வைத்திருந்த பணம் காணோமென்றதும் என்ன நடந்தது? ஏழை என்பதாலேயே திவ்யா திருடியிருக்கக்கூடுமென்று பேராசிரியர்களுக்கு சந்தேகம் வந்தது. உடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்துள்ளனர். ஏன் மற்ற மாணவியருக்குச் அது போல சோதனை செய்யவில்லை? திவ்யாவை மட்டும் அப்படி சோதனை செய்ய என்ன காரணம்? ஏழை எனபதுதானே. ஏழை என்றால் திருடுவார்கள் என்ற பொதுபுத்திதானே. இதே பொதுபுத்தி பள்ளிக்கூட நிர்வாகத்தினருக்கும் இல்லாமலிருக்குமா? இதே பொதுபுத்தி, ஏழைப்பிள்ளைகள் நன்றாக படித்தால் எப்படியெல்லாம் கொட்டப் போகிறதோ?

நசிந்து போன விவசாயம், நலிந்துவிட்ட தொழில்கள், வேலையின்மை, கடன், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக பிடுங்கபட்ட விளைநிலங்கள்  என்று பல காரணங்களால் மக்கள் இந்தியாவின் வடகோடிக்கும் தென்கோடிக்கும் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீகார், ஒரிஸ்ஸாவிலிருந்து 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் கூலிக்கு வந்து கட்டிடவேலை முதல் ஓட்டல் வேலை வரை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல, தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள். நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம். சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள். புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டுமென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை. அப்போது இந்த கல்வி, கத்திரிக்காய் பிரச்சினை ஏதுமில்லையே?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்… ஏழை மாணவர்களுடன் தங்களது பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து படிப்பதைக்கூட நடுத்தர வர்க்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டே துரத்த திட்டமிடுகிறது பள்ளி நிர்வாகம். நாட்டைவிட்டே துரத்த திட்டமிடுகிறது மன்மோகனின் அரசாங்கம். ஜெய்தாப்பூரில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களை சுடும் அரசாங்கம்  டாடாவின் உயிர்வாழும் உரிமைக்கு பரிந்து கொண்டு வருகிறது.

இப்படி, ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்துச் செல்வது பாசிசத்திலேதான் போய் முடியும். தகுதியிருப்பவர்கள் மட்டுமே இந்த ”வல்லரசில்” வாழ முடியும். பணத்தைக் கொடுத்து நுகரும் வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு இடம். தாகத்துக்கு குடிக்கும் நீரையே  விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும் நிலையைப்போல சுவாசிக்கும் காற்றுக்கு கூட விலை வைத்தாலும் வைப்பார்கள் இந்த வியாபாரிகள். அப்படி ஒரு திட்டத்தோடு பன்னாட்டு வியாபாரிகள் வந்தாலும் அதில் கையெழுத்திடுவார் மன்மோகன்.

ஆரம்ப கல்விக்கே இந்தநிலை என்றால், மொத்த கல்வித்துறையையுமே தனியார்மயமாக்க திட்டங்கள் தீட்டியிருக்கிறார் கபில்சிபல். மன்மோகன் சிங் பொருளாதாரக் கதவுகளை திறந்து விட்டது போல, கல்வித்துறையின் கதவுகளை இவர் திறந்துவிடப் போகிறார். பன்னாட்டு பல்கலைகழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இங்கு வியாபாரம் செய்து போட்டி போட்டுக் கொண்டு கல்வியின் ‘தரத்தை’அதாவது பிசினசை உயர்த்தப் போகின்றன.

இன்று ஆரம்பக் கல்விக்கே பல ஆயிரங்கள் செலவு செய்யும் நடுத்தர வர்க்கம், வெளிநாட்டு  பல்கலைக்கழகங்களின் பகாசுர பசிக்கு என்ன செய்யப் போகிறது? உயர்ந்த படிப்பு, உயர்ந்த தரம், வெளிநாட்டு படிப்பை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் படிக்கலேம் என்றெல்லாம்  மயக்கி நடுத்தர வர்க்கத்தினரை பந்தாடப் போகிறது, கபில் சிபலின் புதிய கல்விக்கொள்கை. நுகரும் தகுதியுள்ளவரே வாடிக்கையாளர். அப்போது, இன்றைய  ஏழை மாணவர்களின் நிலையை எட்டியிருப்பார்கள்  இன்றைய வாடிக்கையாளர்கள்.  கல்வி அப்போது இவர்களுக்கு எட்டாக்கனியாக  மாறியிருக்கும். அதுதான் தனியார்மயமும் தாராளமயமும் வெளிப்படுத்தும் கோரமுகம்.

இதனை, இன்றே உணர்ந்து சரியான போராட்டத்தை இனங் கண்டு தங்களை இணைத்துக் கொள்வதே தங்கள் பிள்ளைகளுக்கு நடுத்தர வர்க்கம் தரும் உண்மையான கல்வியாக இருக்கும்.

_________________________________________________________

– சந்தனமுல்லை

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்