privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவெடிக்கக் காத்திருக்கும் குருநானக் கல்லூரி - நேரடி ரிப்போர்ட் !

வெடிக்கக் காத்திருக்கும் குருநானக் கல்லூரி – நேரடி ரிப்போர்ட் !

-

யற்கை தனது மடியில் வைத்து தாலாட்டும் குரூநானக் கல்லூரி கான்கிரீட் காடான சென்னையின் ஓர் ஆச்சரியம். செழித்து, கிளைத்து நிற்கும் ஆலமரங்களை கட்டியணைக்க இருபது பேர் வேண்டும். மரக்கிளைகளிலிருந்து மலைப்பாம்புகளைப் போல நமது தலைக்கு மேலே சற்றே உயரத்தில் நெளிந்து தொங்கும் ஆழ விழுதுகளை கடந்து செல்வது பரவசமூட்டும்.

மூப்பின் அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டும் தான் என்பது போல கூன் இன்றி உயர்ந்து நிற்கின்றன பழமையான பனை மரங்கள். வேப்ப மரங்கள், அசோக மரங்கள் மற்றும் காட்டு மரங்களின் வரிசை நாம் உள்ளே நடந்து செல்கையில் அணிவகுத்து மரியாதை செய்கின்றன. வேகத்துடன் மேலெழுந்து பிறகு குடை விரித்து நிழல் தரும் மரங்கள் எப்போதும் மாறாத நேசத்துடனே அதனை செய்கின்றன. மரக்கிளைகள் ஒன்றுடன் ஒன்று உரசியும், ஊடுருவியும், பின்னிப்பிணைந்திருக்கும் காட்சி நம்மை கிளர்ச்சியுற செய்யும். ஒரு பெரு மழையில் குளிக்கும் இந்த மரங்களும், செடிகளும் இலைகள் ஒடுங்கி நாணுவது பார்ப்போரை வெட்கத்துக்கு உள்ளாக்கும்.

வகுப்புகள் போரடிக்கும் போது மாணவர்களும், மாணவிகளும் தியேட்டர் வாசல்களை விடவும் அதிகம் விரும்புவது கல்லூரி வளாகத்தை தான். ரொமாண்டிக் கவிஞர்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கல்லூரி ஆண்டு மலரில் அவர்களின் கவிப் பூக்கள் கொட்டி கிடக்கின்றன. ஜன்னல் கம்பிகளிலும், மரக்கிளைகளிலும் தொங்கியவாறு உரையாடும் குரங்குகள் இங்குள்ள பேராசிரியர்களை விடவும் மாணவர்களுக்கு அதிகம் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது மிகையல்ல. பறவைகளின் ஒலியால் எப்போதும் விழித்திருக்கிறது குருநானக் வனம்.

மைனாரிட்டி நிறுவனமான இந்த கல்லூரியை நிர்வகிப்பவர்கள் சீக்கியர்கள். 1971 -இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கான நிலத்தை அப்போதைய கருணாநிதி அரசு, கிண்டி ராஜ்பவன் அமைந்துள்ள காடு பரப்பிலிருந்து இருபது ஏக்கர் நிலத்தை பிரித்து அளித்துள்ளது. மாலை நேர கல்லூரி 1981 -இல் தொடங்கப்பட்டது. அரசு உதவியுடன் ஷிப்ட் 1 (காலை கல்லூரி) இயங்குகிறது. ஷிப்ட் 2 முழுக்க முழுக்க சுயநிதி கல்லூரியாக இயங்குகிறது.

இக்கல்லூரியின் நிர்வாக பொறுப்பில் தலைவராக மஞ்சீத் சிங் கில் என்பவரும் செயலாளராக மஞ்சீத் சிங் நய்யார் என்பவரும் உள்ளனர், இக்கல்லூரியின் முதல்வராக மெர்லின் மொரைஸ் என்ற பெண்மணி உள்ளார். இவர் முதல்வரான கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.

கல்லூரியின் முதல்வராக மெர்லின் பொறுப்பேற்பதற்கு முன்னர் முதல்வராக இருந்தவர், இவரது கணவர், ஜான் மொரைஸ். கணவனின் ஓய்விற்கு பின்னர் இப்பதவியை மெர்லின் பெறக்கூடாது என்பதற்காக இக்கல்லூரியில் உள்ள பார்ப்பன பேராசிரியர்கள் லாபி தீவிரமாக முயன்றது. சிறிது காலம் பொறுப்பு முதல்வராக பார்ப்பனரான ராகவன் நியமிக்கப்பட்டார். மாணவர்களின் கல்வி கட்டண முறைகேடுகள் சம்பந்தமாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது குறித்த செய்தி ஒன்று அப்போது ‘நக்கீரனில்’  வெளியானது.

ஷிப்ட் 2 என்பது நிர்வாகத்திற்கு பொன் முட்டையிடும் வாத்து. இதன் பொறுப்பில் இருந்தவர் ரவிக்குமார் என்ற பார்ப்பனர். மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பணம் நிர்வாகத்தின் கல்லாவுக்கு செல்வதற்கு முன்னர் அது சிலரால் பதுக்கப்படுவதை உணர்ந்தது, நிர்வாகம். தமக்கு பணம் சிந்தாமல், சிதறாமல் வருவதற்கு ஓர் விசுவாச கைக்கூலியின் அவசியத்தை உணர்ந்தது. அந்த தேவையை பூர்த்தி செய்த மெர்லினை இப்போது  முதல்வராக செயல்பட அனுமதித்துள்ளது.

பெண் என்ற அனுதாபத்தை முதலில் பெற்ற மெர்லின் மொரைஸ் முதல்வரானதை அங்கு பணிபுரியும் பெரும்பான்மை ஆசிரியர்கள் பெரிதும் வரவேற்றார்கள். ஆண் பேராசிரியர்களின் சதிகளை முறியடித்து வென்றதாக ஓர் பிம்பத்தை மெர்லின் மொரைஸ் உருவாக்கினார். கல்லூரி முதல்வர் என்ற முறையில் தமது உரிமைகளுக்கு துணையாக இருப்பார் என்று அப்பாவித்தனமாக பலரும் நம்பினர். மேய்ப்பனை அண்ணாந்து பார்க்கும் ஆட்டுக் குட்டிகளை போல அவரின் கருணைக்காக ஏங்கினர், ஆசிரியர்கள்.

ஜெயலலிதா முதல்வராக வரும் போது முதல் கையெழுத்து மட்டும் ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்வது போல இருக்கும். அது போல மெர்லின் மொரைசும் இங்கு பணி புரியும் நிர்வாக நிலை ஆசிரியர்களுக்கு ஒரு சிறிய அளவிலான ஊதிய உயர்வை பெற்றுத் தந்தார். பிறகு கொஞ்ச நாட்களிலேயே தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார்.

துறை தலைவர்களை கலந்தாலோசிக்காமல் புதிய விரிவுரையாளர்களை நியமிப்பது; தனக்கு பிடிக்காத ஆசிரியர்களை பழி வாங்குவது; ஸ்கூல் பாணியில் மாணவர்களை அசெம்ப்ளி என்று கூட்டுவது; ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது; இரக்கமற்ற முறையில் மாணவர்கள் பிரச்சினைகளை கையாள்வது; அற உணர்வின்றி ஆசிரியர்களை பிழிவது என்று கேள்வி முறையின்றி தொடர்கிறது இவரது அட்டகாசம்.

இது போக மாலை நேர கல்லூரி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வதைக்க ஆபிரகாம் தேவகுமார் என்றொரு ரிட்டையர்ட் நபர் கல்லூரி கல்வி இயக்குனகரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். ஒரு கல்வியாளருக்குரிய எந்த பண்பும் அற்ற இவர் மெர்லின் மொரைசுக்கு ஒரு அல்லக்கை போல செயல்படுகிறார். மாணவர்களை கெட்ட வார்த்தைகளால் ஏசுகிறார். ஆசிரியர்களை ஒருமையில் அழைக்கிறார். ஒரு மொக்கை ஆசாமி இந்த ஆபிரகாம் தேவகுமார் என்பதை மாணவர்கள் அவருடைய முதல் உரையிலே புரிந்து கொண்டார்கள். ஒரு பஜனை மடத்தை நிர்வகிக்க தகுதியான நபரை கல்லூரிக்கு இயக்குனர் பொறுப்பில் நியமித்திருப்பது, உயர்கல்வி துறையின் சீரழிவு.

உயர்கல்வின் நோக்கம் அறிவுச்சமூகத்தை படைப்பது என்று யுனெஸ்கோ வரையறுத்துள்ளது. ஆபிரகாம் தேவகுமாருக்கு பதில் குரு நானக் வனத்தில் வாழும் ஒரு மூத்த குரங்கை அந்த பொறுப்புக்கு நியமித்திருக்கலாம் என்று மாணவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த கல்லூரியை ஆரம்பித்த நிறுவனர்கள் தொலை நோக்கு பார்வையுடன் (vision) செயல்பட்டிருக்கிறார்கள். சிறந்த பேராசிரியர்கள் இங்கு பணியாற்றி உள்ளார்கள். அவர்களில் அநேகர் ஓய்வு பெற்று விட்டார்கள்.

இப்போதிருக்கிற நிர்வாகம், கல்லூரி முதல்வர், கல்லூரியின் புதிய இயக்குனர் ஆகியோர் இந்த சிறப்பு வாய்ந்த கல்லூரியை ஒரு பணம் பிடுங்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியாக சிறுத்து போக வைத்துள்ளார்கள். தமது இந்த கொள்ளை நோக்கத்துக்கு தோதாக ஆசிரியர்களை வேலை வாங்குகிறார்கள். நிவாகத்திடம் நல்ல பெயர் வாங்க மாணவர்கள் மீது உச்சகட்ட வன்முறையை பிரயோகிக்கிறார்கள் இந்த பேராசிரியர்கள்.

வகுப்பு இல்லாத நேரத்திலும் கிரவுண்டில் மாணவர்களை பார்த்தால் ID கார்டுகளை பறிப்பது, பைக் சாவியை வாங்கி வைத்துக் கொள்வது, வகுப்புக்கு கொஞ்சம் லேட்டாக வந்தாலே மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்குவது, தனியாகக் கூடி நிற்கும் மாணவர்களை அழைத்து வாயை ஊத செய்வது, மரத்தடியில் மாணவர்கள் உட்காருவதை கண்டால்  துரத்தியடிப்பது, மொபைல் போனை பார்த்த மாத்திரத்திலே பிடுங்குவது என்று சினிமா தாதாக்களைப் போல செயல்படுகிறார்கள். மாணவர்களோடு மாணவிகள் பேசுவதை கண்டால் ‘சிவ சேனையாக’ மாறி விடுவார்கள். அம்மா அப்பாவை அழைத்து வந்தாலொழிய நிம்மதியடைய மாட்டார்கள்.

வகுப்பறையில் தூங்கும் மாணவனை வெளியே துரத்தும் ஆசிரியனே அம்மாணவன் முந்தின இரவு தூங்கினானா? என்று விசாரித்து அறியும் பொறுமை உண்டா?

ஐந்து நிமிடம் லேட்டாக வந்தால் ‘ஆப்சென்ட்’ போடும் ஆசிரியனே குருநானக் கல்லூரி நிறுத்தத்தில் நிற்காமல் போகும் பேருந்துகள் குறித்து ஏதேனும் தெரியுமா?

கிரவுண்டில் கூட விசிலடித்தால் கன்னத்தில் அறையும் ஆசிரியனே நீங்கள் என்ன ‘ஆக்ச்போர்டிலும், கேம்பிரிட்ஜிலும்’ படித்து வந்தவர்களா? உங்கள் கல்லூரி வாழ்க்கையின் யோக்கியதையை கொஞ்சம் சொல்ல முடியுமா?

மாணவர்களை சர்வசாதாரணமாக பொறுக்கி என்றும், ராஸ்கல் என்றும் அழைக்கும் ஆசிரியனே உங்கள் வீட்டு டார்லிங்குகளை அப்படித்தான் அழைக்கிறீர்களா?

பழைமையான அரசு கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகளுக்கு என்று ஒரு பண்பு உள்ளது. வேடந்தாங்கலுக்கு  வரும் பறவைகளின் குதூகலத்துடன் இங்கு கல்வி கற்க வருகிறார்கள் மாணவர்கள். ஒரு சுதந்திர மனநிலையில் மாணவர்கள் இங்கு கற்பதால், ஆளுமை மிக்கவர்களாக வெளியே செல்கிறார்கள். பால்யத்தின், கல்லூரி வாழ்வில், ஆண்-பெண் உறவு நிலையில் ஒரு முழுமையை அவர்கள் பெறுவதால் உளவியல் ரீதியாக ஆரோக்கியமானவர்களாக அதன் பிறகு இருக்க வாய்ப்புண்டு. கிரிக்கட், பில்லியர்ட்ஸ், கைப்பந்து, தடகளம் போன்றவற்றில் மாநில, தேசிய  அளவிலான வீரர்கள் இந்த கல்லூரியில் உண்டு. இந்த திறப்புகள் அனைத்தையும் அடைத்து, அவர்களை சிறைப்படுத்தி, முடமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர், ஆசிரியர்களின் தற்போதைய அணுகுமுறை.

இப்படி இந்த கல்லூரியின் மதிப்பை, மாணவர்கள், ஆசிரியர்களின் மகிழ்ச்சியை, அவர்களுக்கிடையேயிருந்த நல்லுறவை சிதைத்த நிர்வாகம் இன்னொன்றையும் செய்தது. அது கல்வி கட்டண கொள்ளை சம்பந்தமான புதிய அறிவிப்பு. கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளுக்கு ரூ. 25000 , பி.காம், பி,பி,ஏ., பாடப்பிரிவுகலூகு 16000 , காட்சி ஊடகவியல், எலக்ட்ரானிக் communications பிரிவிற்கு 45000 மும் வருடம் வசூலிக்கிறார்கள். கடந்த வருடம் வரை இரண்டு தவணைகளாக கட்டி வந்த வருட கல்விக் கட்டணத்தை ஒரே தவணையாக கட்ட வேண்டும் என்று அறிவித்தார் கல்லூரி முதல்வர்.

உயர் கல்வி பெறும் முதல் தலைமுறை மாணவர்களை கொண்ட அடித்தட்டு மக்கள் பிரிவினர் பெரும்பான்மையாக படிக்கும் இக்கல்லூரியில் இந்த புதிய கட்டண அறிவிப்பு ஏற்படுத்தும் சிரமத்தை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. ஒய்யாரமாக பைபிளை ஏந்தி செல்லும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர் கல்லூரி முதல்வர். அவருக்கு தெரிந்த பைபிள் கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட வேண்டுமானால் பழைய ஏற்பாடு காலத்து எகிப்திய மன்னன் பரர்வோ-வுடன் அவரை ஒப்பிடலாம். இந்த பொம்பிளை பரவோவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இஸ்ரவேல் ஜனங்கள், இங்குள்ள மாணவர்களும், நிர்வாக நிலை ஆசிரியர்களும்.

உரிமைகளை விட்டுக் கொடுத்து, சுயமரியாதையை இழந்து வேண்டுமானால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கலாம். ஆனால் மாணவர்களால் அப்படி இருக்க முடியாது. ஜூலை ஆறாம் தேதி ஸ்டிரைக் என்று அறிவித்தார்கள். அதன்படி ஐந்தாம் தேதி கல்லூரியில் போஸ்டர் ஓட்டினார்கள். அவற்றை எஸ்டேட் ஆபீசரான ஒரு சிங் சுரண்டி அப்புறப்படுத்தியுள்ளான். ஸ்டிரைக் நாளன்று, பெரிய அளவுக்கு போலீசைக் குவித்து பீதியூட்டியும், ஆசிரியப் போலீஸ்களை வைத்து மிரட்டியும் இப்போராட்டத்தை நீர்த்து போக செய்தது நிர்வாகம்.

அதே நேரத்தில், மாணவர்களின் ஒருங்கிணைவை கண்டு உள்ளுக்குள் பயந்த போன நிர்வாகம், கல்வி கட்டணத்தை செலுத்த ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. ஒரு போராட்ட அறிவிப்பின் பலனே இதுவென்றால், ஒரு முழுப் போராட்டத்தின் பலன் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள், குருநானக் கல்லூரி மாணவர்கள்.

அந்த சிந்தனை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களால் உரமூட்டப்பட்டு விரைவில் வெடிக்கும். குருநானக் கல்லூரியின் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும். ஒரு பெரும் புயலுக்கு காத்திருக்கிறது குருநானக் கல்லூரி.

_________________________________________________________

வினவு செய்தியாளர்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்