privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபோலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !

போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !

-

மிழகத்தில் இப்போது ஏறக்குறைய 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டு தோறும் இந்தியாவில் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள் என்றால் தமிழகத்தின் பங்கு மட்டும் அதில் 1,50,000. இந்தப் புள்ளிவிவரத்தை வைத்து நாம் பெருமைப்பட முடியுமா?

இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான தொழில், அந்த தொழிலுக்குத் தேவையான படிப்பு என்ற சுதேசிப் பார்வை, அணுகுமுறையில் நமது உயர் கல்வி அமையவில்லை. கல்வி தனியார் மயமான பிறகு தகவல் தொழில்நுட்ப முதலாளிகளுக்குத் தேவையான பொறியியல் படிப்புக்களை மக்கள் தமது சொந்த செலவில் படித்து விட்டு காத்திருக்கும் மாட்டுச் சந்தை போல மாற்றப்பட்டிருக்கின்றனர்.

பட்டம் பெறும் அனைவருக்கும் அல்லது பெரும்பான்மையினருக்கும் தகுதியான வேலைகள் கிடைப்பதில்லை. அறிவுக் கொழுந்தான மாணவர்களை மட்டும் பெரிய நிறுவனங்கள் கொத்திச் சென்றுவிடுகின்றன. மற்றவர்கள் மாயையை சுமந்து கொண்டு ஏதோ ஒரு வேலை கிடைக்குமா என்று தவிக்கின்றனர்.

மருத்துவத்தில் இளங்கலை படிப்பதால் எந்தப் பயனுமில்லை என்று ஆகியுள்ளதால் முதுகலை படித்தால்தான் பத்து பதினைந்து ஆண்டுகளில் ஒரு தேர்ந்த மருத்துவராக தலைநிமிரமுடியும் என்றாகி விட்டது. அரசு கல்லூரிகளில் முதுகலை இடங்கள் குறைவாக இருக்க தனியார் கல்லூரிகளிலோ அதன் விலை கோடிகளில் இருக்கிறது. சுகாதாரத்திலும் அரசு பங்கு கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு வருகிறது. சான்றாக வருடம் 750 கோடி ஒதுக்கி காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதை அரசு மருத்துவ மனைகளில் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்று கூட சொல்லவில்லை. தனியாரிடத்திலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றால் காப்பீடு, மருத்துவமனை இரண்டிலும் தனியார் நிறுவனங்கள் கொள்ளைக்குத்தான் உதவும்.

இதற்குமேல் பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவரிடம் மிகக் கடுமையான போட்டி மனப்பான்மையை இந்தக் கல்வி அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தபட்சம் பொறியியல் படிப்பு கூட படிக்க முடியாவிட்டால் எதிர்கால வாழ்வு இல்லை என்ற அவநம்பிக்கை நமது இளையோரிடத்தில் அழுத்தமாக திணிக்கப்பட்டிருக்கிறது. ஏழைகள், நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் கூட  கடன் வாங்கியாவது படித்தாக வேண்டும் என்ற நிலை சகஜமாகி வருகிறது.

தனியார் சுயநிதிக்கல்லூரிகளெல்லாம் இந்த போட்டி மனப்பான்மையை வைத்து நன்கு கல்லா கட்டிவருகின்றன. தமிழகத்தில் சுமார் பத்து முதல் இருபது கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை பெரும் நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வுக்காக சீண்டுவதில்லை. ஐ.டி துறையிலும் இப்போது சம்பளம் என்பது முன்பைவிட வெகுவாக குறைந்த நிலையில் பெரும்பான்மையான மாணவர்கள் தமது படிப்பால் எதையும் பெற முடியவில்லை என்ற நிலைதான் இருக்கிறது.

இச்சூழலில் இந்த மாயையை காப்பாற்றிக் கொண்டு எல்லா மோசடிகளையும் செய்து காலி இடங்களை நிரப்புவதற்கு கல்வி முதலாளிகள் விரும்புகின்றனர். வெளி மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களை தரகர்களாக்கி  அவர்கள் ஊர்களிலிருந்து மாணவர்களை பிடித்து வந்தால் கமிஷன் என்று சில மாணவர்களை இவர்கள் மாமாக்களாக்கியிருக்கின்றனர். தரகர்களான இந்த மாணவர்களின் போட்டியில் ஒரு மாணவனே கொல்லப்பட்டிருக்கிறான்.

தென்மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தமிழக கோட்டாவில்  இடங்களைப் பெறுவதற்காக போலியாக தமிழக இருப்பிட சான்றிதழ்களை உருவாக்கி இடம் பிடித்ததும் முன்பு மட்டுமல்ல, இப்போதும் நடக்கிறது. அதேபோல என்.ஆர்.ஐ கோட்டாவிலும் வருடந்தோறும் மோசடி நடக்கிறது. எப்படியாவது இடத்தை நிரப்ப வேண்டும் என்று வெறி பிடித்தலையும் கல்வி முதலாளிகள்தான் இத்தகைய மோசடிகளின் ஊற்று மூலம்.

பொறியியல் கற்க வேண்டும், அதுவும் தலைசிறந்த கல்லூரிகளில் படிக்க வேண்டும், அதற்காக உயர்ந்த மதிப்பெண்கள் வேண்டும், இல்லையேல் வாழ்க்கை இல்லை என்ற போட்டி மனப்பான்மையில் பெற்றோரும், மாணவர்களும் இலக்கில்லாத தூரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த தவிப்பை ஆதாயமாக்கி வாரிச்சுருட்ட நினைக்கும் கல்வித் தொழிலின் தரகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கட் ஆஃப் மதிப்பெண் ஓரிரண்டு குறைந்தால் கூட கட்டணம் குறைந்த அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காது. இதனால் பல இலட்சம் கட்டி தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டியதாகிறது. அங்கு கொடுக்க வேண்டிய பணத்தில் சிறு பகுதியை இந்த தரகர்களிடம் கொடுத்தால் தேவையான மதிப்பெண் கிடைத்துவிடும் என்று தரகர்கள் ஆசை காட்டுகிறார்கள்.

இதில்  நாம் கவனிக்க வேண்டிய விசயம், தனியார் கல்லூரிகளில் வசூல் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படும் பணத்தின் அளவே பெற்றோரை பயமுறுத்தி இந்த முறைகேடான வலையில் விழ காரணமாகிறது. எனில் இந்த மோசடிகளின் ஊற்று மூலம் எது?

போலி மதிப்பெண்கள் மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் திருவேங்கடமும், ஏகாம்பரமும் நெடுங்காலம் கல்வித் தொழிலில் கொடிகட்டிப் பறந்திருக்கின்றனர். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருக்கும் பெற்றோரிடம் ஆசை காட்டி மதிப்பெண்ணுக்கு பொருத்தமான தொகையை வாங்கி இயல்பாக போலி மதிப்பெண்களை அளித்திருக்கின்றனர்.  போலி மதிப்பெண்களை வாங்க நினைத்தவர்களில் மதிப்பெண்கள் அதிகம் வாங்கியவர்களும், நன்கு படிப்பவர்களும் உண்டு. எனினும் கட் ஆஃப் மதிப்பெண் ரேசில் தாங்கள் முன்னிலைக்கு வரவேண்டும் என்ற வெறியில் இந்த மோசடியை தெரிந்தே மேற்கொண்டிருக்கின்றனர்.

இதில் ஏழைகளும், நடுத்தரவர்க்கமும்,மேல்தட்டு என எல்லா பிரிவுகளும் உண்டு. மேலும் இந்த விவகாரம் தற்செயலாக வெளிவந்ததால் இது பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. இல்லையேல் காதும் காதும் வைத்தது போல மூடியிருப்பார்கள்.  இந்த மோசடி எத்தனை வருடங்களாக நடக்கிறது, இன்னும் எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர், எத்தனை கல்வி முதலாளிகள் – நிர்வாகங்கள் இதற்கு மறைமுகமாக காரணமாக இருக்கின்றனர் போன்ற விவகாரங்கள் அநேகமாக வெளிவராது என்றே தெரிகிறது.

தற்போதைய மோசடியில் ஐம்பது மாணவர்களின் போலி மதிப்பெண் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் போலீசின் கைகளுக்கு கிடைத்திருப்பது பத்து பேர்களின் சான்றிதழ் மட்டும்தான். அதுவும் பெரும்பாலானவர்கள் சாதாரண மக்கள். போலீசுக்கு கொடுக்கப்படாத சான்றிதழ்களில் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாரிசுகள் உண்டு என்று கூறப்படுகிறது. ஆக அதிகாரம் உள்ளவன் தப்பும் செய்வான். பிடிபட்டால் தப்பித்துக் கொள்ளவும் செய்வான்.

மேலும் இந்த மோசடி முழு அளவில் வெளிவந்தால் பலரும் அல்லது ஒட்டுமொத்தமாக தனியார் கல்வி நிர்வாகங்கள் அத்தனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவர். இன்று அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கவுன்சிலிங் நடந்து இடம் ஒதுக்கப்படுகிறது. நாளையே தனியார் கல்லூரிகள் நேரடியாக மாணவர்களை சேர்க்கலாம் என்றால் என்ன நடக்கும்? ஒவ்வொரு கல்லூரியிலும் போலி மதிப்பெண்கள் அச்சடிப்பதற்கென்றே ஒரு அச்சகமும் அதற்கென்று தனியான ரேட்டும் வைத்து கல்வி முதலாளிகள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை நடத்துவர்.

அந்நிலை வரும்போது பிளஸ் 2 வில் பாசாகியிருக்க வேண்டுமென்ற அவசியமோ, இல்லை தேர்வு எழுதியிருக்க வேண்டுமென்ற அவசியமோ  கூட இருக்காது. இப்போது அரசாங்கமும் தகுதி மதிப்பெண்ணை ஆண்டுக்காண்டு குறைத்து வண்ணம்தான் இருக்கிறது. ஆக செலவழிப்பதற்கு ஏராளமானபணத்தை வைத்திருந்தால் நல்ல கல்லூரியில் படிக்கலாம் அல்லது படிக்காமலே சான்றிதழ் வாங்கலாம் என்ற நிலை வரும்.

ஆகவே இந்த போலி மதிப்பெண்கள் மோசடியில் திருவேங்கடம், ஏகாம்பரம் என்ற இரண்டு தரகர்களை மட்டும் வைத்து பிரச்சினையை கடந்து செல்லலாம் என்றால் நடக்காது. கல்வியில் தனியார் மயம் என்று வந்து விட்டதோ அன்றிலிருந்தே இந்த மோசடிகள்  நாளொரு வண்ணம் புதிது புதிதாக பிறந்த வண்ணம் இருக்குமென்பதை நாம் உணரவேண்டும்.

கல்வியில் தனியார் மயத்தை ஒழிப்பது ஒன்றுதான் இந்த மோசடிகளை அடிவேரிலிருந்து அகற்றுவதற்கு உதவும். இல்லையேல் இந்த மோசடிகளோடு வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். தகுதி மதிப்பெண்களுக்கே மோசடி செய்யும் துணிச்சலைப் பெறும் இளையோர் நாளைக்கு வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் போது எப்படி இருப்பார்கள் என்பதை விரித்துரைக்கத் தேவையில்லை. என்ன சொல்கிறீர்கள்?

____________________________________________________________