திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

140
திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா

‘‘ எப்பா இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா…. உள்ள வாப்பா.. இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா….ஐய்யோ…. ஐய்யோ…எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா… ராஜா மாதிரி படிக்கும்பா எம் பொண்ணு… எப்பா ஏழை பாழைங்கண்ணா படிக்கத் கூடாதப்பா மீன் பிடிக்கிறவண்ணா போகக் கூடாதாப்பா எதுனாச்சும் நடவடிக்கை பண்ணிக் கொடுங்கப்பா’

குனிந்து குடிசைக்குள் நுழைந்தால் அதுதான் பி.காம் மாணவி திவ்யாவின் வீடு மொத்தமே பதினைந்து பதினைந்து அடி நீள அகலத்திலான குடிசை. அம்மா சாந்தி, அப்பா, பாட்டி, இரண்டு தம்பிகளோடு திவ்யா வாழும் வீடும் அதுதான். அன்றாடங் காய்ச்சிகள் ஆனாலும் சோற்றுக்கு மீதி எதுவும் இல்லை. வருகிற வருமானத்தில் வயிற்றைக் கழுவி வாழும் திவ்யாவின் தாய் சாந்திக்கு பெண் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை………அவரே பேசுகிறார் இப்படி…,

‘‘ நாங்க பட்டினவரு கடலுக்குத்தான் போவார் அவர். சொந்தமா கட்டுமரமோ வலையோ கிடையாது கட்டுமரத்துல கூலிக்கு கடலுக்குப் போவாரு ஐம்பதும் கிடைக்கும் நூறும் கிடைக்கும் ஐநூறும் கிடைக்கும் ஆனால் அவரு குடி இப்போ கடல்ல வருமானம் இல்ல ஏண்ணா அவருக்கு கால்ல கட்டி வந்து அவுரால கடலுக்கு போக முடியல்ல அதனால் வாச்மேன் வேலை பாத்தாரு அவருக்கு 3, 500 ரூவா சம்பளம் நான் பெசண்ட்நகரில் இருக்குற ராஜாஜி பவனில் பெருக்குற வேலை பாக்குறேன் 2,500 ரூபாய் சம்பளம் . இது போக எங்கம்மா திவ்யாவோட பாட்டி இட்லி சுட்டு விக்கிறாங்க அவங்கதான் திவ்யாவோட படிப்புச் செலவை ஏத்துக் கிட்டாங்க. அவ அடையாரில் இருக்கிற அன்னை சத்தியா கல்லூரியில் பிகாம் படிக்கிறா ஒரு வருஷத்துக்கு 14,500 ரூபாய் பீசு. அதை இரண்டு தவணையா கட்டுறது திவ்யா பாட்டிதான். நான் வீட்டுச் செலவை பார்த்துப்பேன்….

அண்ணைக்கி சனிக்கிழமை  என்ன நடந்ததுண்ணா அவருக்கு கால் வலி அதிகமாயிடுச்சு பெசண்ட்நகரில் இரண்டாயிரம் ரூபாய் செலவு செஞ்சேன் செரியாகல்ல, ஸ்கேனிங் பண்ணனும்னு எட்டாயிரம் ரூபாய் கேட்டாங்க அது நம்மால முடியாதுப்பாணு ஸ்டேன்லில போனேன். அவங்க உடனே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னதால அவரை அங்க ஆஸ்பத்தரில சேர்த்துட்டு இரவு எட்டரை மணிக்கு விட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்தப்போ புள்ள மொகம் வாடியிருந்தது. அதுவா வந்து அம்மா  காலேஜ்ல ஒரு பொண்ணோட மூணாயிரம் ரூபா காணாமப் போயிடுச்சும்மா. எல்லோரையும் சாதாரணமா சோதிச்சுட்டு விட்டுட்டாங்க என்னை மட்டும் தனியா ஒரு ருமுக்குள்ளாற கூட்டினு போய் டிரஸ் எல்லாம் கழட்டி நிர்வாணமாக்கி சோதனை பண்ணினாங்கம்மா சொன்னா, நாளை லீவு (ஞாயிற்றுக்கிழமை) நாள மறு நாள் நான் வந்து அவங்க கிட்டே கேக்குறம்மாண்ணேன். ஆனா எம்பொண்ணு அடுத்த மாசம் எக்சாம் வருதும்மா மார்க் டிக் பண்ணிடுவாங்கம்மாண்ணா… வாழ்வு இல்லாத போயிடும்ணு என்னைத் தடுத்துட்டா எம்பொண்ணு… எப்பா வாழ்வுண்ணா என்னணு எனக்குத் தெரியாதுப்பா ஆனா அவளுக்குத் தெரிஞ்சதுனால எனக்கு அப்படிச் சொன்னாப்பா….

நானும் மறு நா கிளம்பி ஞாயிற்றுக் கிழமை ஸ்டேன்லி ஆஸ்பிட்டல் போயிட்டேன். எம் பொண்ணு எங்கிட்ட சொன்னதோட மட்டுமில்ல இங்கிருந்து மூணாவது ஊட்லருக்குற மேத்தாங்கற பொண்ணுக்கிட்டயும் அவங்க அப்பா அம்மாகிட்டேயும் இதைச் சொல்லி அழுதிருக்கா அவங்க ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்காங்க நான் திங்கட்கிழமை வேலைக்குப் போனோன். அவள் காலேஜ் போனா ஆனா அங்க இவளைப் பார்த்த பிரண்சுங்கோ சிரிச்சிருக்காங்க … திருடி வர்றா பாருணு எம் பொண்ணைப் பார்த்து புள்ளைங்க சிரிச்சிருக்குப்பா… நான் வேலை முடிஞ்சு சாயங்காலம் ஒரு ஏழு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ தலை சரிஞ்சி எம்பொண்ணு தொங்கிட்டுருந்துச்சுப்பா……. ரொம்ப நேரமா தொங்கிட்டாப்பா எம்பொண்ணு……….. ஏம்பா அவ கிளாஸ்லயே அவ மட்டுதாம்பா ஏழ , இங்க இருந்து கூட இரண்டு பசங்க படிக்கிறாங்க ஆனா அவங்க வசதியானவங்கப்பா எம் பொண்ணு ஏழையாப் பொறந்ததால படிக்கக் கூடாதாப்பா? ……………..

அழுது அரற்றும் அந்த ஏழை மீனவத்தாய் சாந்தி தன் மகளின் மரணம் பற்றிக் கொடுக்கும் வாக்குமூலம் இதுதான்.

 

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை

…………………………………………………………………..

திவ்யா சென்னை அடையாரில் இருக்கும் எம்.ஜீ.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவி. கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் நான்கு மாணவிகளுள் அனுராதா என்னும் மாணவி மூன்றாயிரம் ரூபாய் எடுத்து வந்ததாகவும் அந்த ரூபாய் காணாமல் போக கடைசி இருக்கை மாணவிகளை அந்த இடத்திலேயே சாதாரணமாக சோதனை செய்து விட்டு திவ்யாவை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்திருக்கிறார்கள். அக்கல்லூரியைச் சார்ந்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி, ஆகிய ஆசிரியைகள் அவமானம் தாங்காத கடுமையான மன வேதனையடைந்த திவ்யா தன் தாயிடமும் பக்கத்து வீட்டிலும் சொல்லியிருக்கிறார். பின்னர் திங்கட்கிழமை கல்லூரி சென்றவரை நண்பர்கள் கிண்டல் செய்ய மனமுடைந்த திவ்யா தற்கொலை செய்துள்ளார். கையில் பணமும் செல்வாக்குள்ள மனிதர்களை வளைக்கும் தந்திரமும் தெரிந்திருந்தால் இந்த நாட்டில் ஏழைகளை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்கு திவ்யாவின் படுகொலை ஒரு சாட்சி.

முன்னாள் சாராய வியாபாரிகள், அரசியல் ரௌடிகள், விபச்சார தொழிலதிபர்கள் எல்லாம் கல்வி வள்ளல்களாக வளர்ந்து பள்ளி கல்லூரிகளை கைப்பற்றிய தனியார்மயத்தில் செல்வச்செழிப்பான பின்னணியில் பிறந்து பல லட்சம் ரூபாய்களைக் கொட்டி வளரும் மாணவிளுக்கு இது நேர்வதில்லை. முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் ஏழை மாணவிகளுக்கே இது நடக்கிறது. ஏழை என்றால் திருடுவார்கள் என்கிற மத்யமர் மனோபாவம்தான் திவ்யாவை நிர்வாணப்படுத்தத் தூண்டுகிறது. அங்கிருந்துதான் திவ்யாக்கள் மீதான கொலை வெறி உருவாகிறது.

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யாவின் தற்கொலை கடிதம்

குற்றவழக்கு எண்- 265/2011 என்று எண்ணில் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் பதிவாகியிருக்கும் வழக்கில் திவ்யா தற்கொலை என்று பதிவாகியிருக்கிறது. தற்கொலைக்கு தூண்டியதாகக் கூட இல்லை. திவயாவின்  கொலையால் ஆவேசம் அடைந்த ஊரூர் ஆல்காட் குப்பம் மீனவர்கள் திரண்டு வந்து அடையார் சாலையை மறிக்க ஒரு வழியாக ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி, ஆகிய ஆசிரியைகள் கைது செய்யப்பட்டார்கள்.இல்லை கைது செய்வதாக அந்த மக்களிடம் பாவனை செய்தது போலீஸ். நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்கச் சென்ற போது ஒரே நேரத்தில் அவர்கள் நால்வருக்கும் நெஞ்சுவலி வந்து இப்போது அவர்கள் போலீஸ் பாதுகாப்போடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திவ்யாவின் கொலைக்கு நியாயம் கேட்டுப் போன மக்களிடம் நிர்வாகம் ஒரு இலட்சம் தருகிறோம் புதைத்து விடுங்கள் என்று பேரம் பேச அதற்கு சம்மதிக்காத மக்களை போலீஸ் ஒரு வழியாக திருப்பி அனுப்ப செவ்வாய்கிழமை பெசண்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டாள் அந்த பி. காம் மாணவியான திவ்யா.

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா – குடும்பத்தினருடன்

இந்த வழக்கில் என்ன நடக்கும்….? என்பது புரியாத புதிரல்ல அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று நான்கு நெஞ்சுவலிக்காரர்களும் கேட்பார்கள் நீதிமன்றமும் அதை அனுமதிக்கும். தனியார் மருத்துவமனையில் வாங்கும் சான்றிதழின் படியும் முதல் தகவல் அறிக்கையில் நிர்வாணச் சோதனை செய்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி ஆகியோரின் பெயரும் இல்லாததாலும் இன்னும் சில நாட்களில் அவர்கள் விடுதலையாகக்கூடும்.  கண்ணியமிக்க நமது நீதிமன்றங்களில் இருந்து 100 குழந்தைகளைக் கொன்ற கல்வி வள்ளல்களே தப்பி விடும் போது நிர்வாணச் சோதனை செய்தவர்கள் தப்புவது என்ன கடினமா?
………………….

திவ்யா இறுதியாக எழுதிய கல்லூரித் தேர்வின் டைம்டேபிள்

திவ்யாவின் குடிசையை இரண்டாகப் பிரித்து தோள் உயரத்தில் எழுப்பட்டிருக்கும் மண் சுவரில் தன் தேர்வு நாட்களை சாக்பீஸ்களால் எழுதி வைத்திருக்கிறார். சுகவீனமுற்ற திவ்யாவின் தகப்பன் ஓரமாக உறங்கிக் கொண்டிருக்கிறார். வீட்டை விட்டு வெளியில் வந்தால் அந்தக் குடிசைப் பகுதியில் பல கார்கள் நின்றிருக்க, வெள்ளுடை வேந்தர்கள் நிறைந்திருந்தார்கள். அங்கு நடந்த சம்பாஷனைகளைக் கவனித்த போது அந்த அரசியல் ரௌடிகள் திவ்யாவின் உடலுக்கு விலை பேசிக் கொண்டிருந்தார்கள்.அந்த ஏழைத் தாயின் கண்ணீருக்கு என்ன விலை தேறுமோ தெரியாது…

_________________________________________

– வினவு செய்தியாளர்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்