privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா?

ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா?

-

நிலை ஓய்வில் ஒதுங்கிய  மனவேளையில், புலத்தேவைகள் சற்றே பதுங்கிய நேரத்தில், புத்தார்வத்தை நோக்கிய எத்தனத்தில் சலிக்காமல் ஈடுபடும் வாழ்வின் ஓர் மாலையில், ஸ்ரேயா கோஷலின் பாடல்களோடு கைகோர்த்து லயிக்கும் போது, அழகும் வலிமையும் இணைந்து எழுகின்ற உயிர்ப்பான இசையருவியை விரும்பாதவர் யார்?

முதன்மையாக இந்தியிலும், பிறகு அநேக தேசிய மொழிகளிலும் பாடிவரும் ஸ்ரேயா கோஷலை நாம்  அதிகமும் தமிழ் வழியாகத்தான் கேட்டிருப்போம். அநேகமாக கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் திரையிசை அறிமுகமப்படுத்தியிருக்கும் குரல்களில், தனிச்சிறப்பான அழகுகள் என்று கண்டு லயிப்பது சிரமம். ஒரே மாதிரியான குரல்கள், சலித்துப் போன ஃபார்முலா உணர்ச்சிகள், குரலிசையை மிஞ்சும் கருவியிசைகள், பாடல் வரிகளை மென்று தீர்க்கும் சப்தநுட்பங்கள்…

உலகமயமாக்கம் பண்பாட்டுத் துறையில் அனைத்தையும் ஒரே படித்தானவைகளாக  மாற்றுகிறது. தேசிய இனங்களின் தனியழகுச் சிறப்பான பண்பாட்டு அம்சங்கள், சாதனைகள் அனைத்தும் உலகச்சந்தையின் அகோரப் பசியில் இறந்து போகின்றன. தமிழ் சினிமாவும் சில விதிவிலக்குகளைத் தவிர இந்த அனைத்துலக திணிக்கப்பட்ட மேட்டுக்குடி வாழ்வை காட்சிப்படுத்துகிறது, இசையும் படுத்துகிறது.

தமிழ் சினிமாவை மொழிமாற்றி தெலுங்கிலோ, இந்தியிலோ வெளியிட்டால் கூட அது பண்பாட்டு மாறுபாட்டால் தடுமாறுவதில்லை. அங்கனமே மற்ற மொழிப் படங்களும். செல்பேசி, கோக், ஷாப்பிங்  மால்கள், பல்சர் பைக், ஜீன்ஸ் பேண்ட், உதட்டுச்சாயம் இத்தியாதிகளில் விதவிதமான தேசிய இனங்கள் வாழவா முடியும்? இந்த ஒருமைப்பாடு, வேறுபட்ட மக்களின் வாழ்க்கை உணர்ச்சியில், அழகான வேற்றுமைகளை இணைக்கும் ஆன்மாவாக மிளிரவில்லை. மாறாக நுகர்வை மாபெரும் அகோரப் பசிவெறியாக்கி நசுக்கி வருகிறது.

சென்னை சத்யம் திரையரங்கு சென்றால் மேட்டுக்குடி சீமான்களும், சீமாட்டிகளும் ஒரே உடையில், ஒரே மணத்தில், ஒரே உடல் மொழியில், ஒரே நாசுக்கில், கோக்கை இழுப்பது கூட ஒரே அளவில் இருப்பதைப் பார்க்கலாம்.  ஆனால் சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் காட்சியைக் கண்டால் நூற்றுக்கணக்கான அழகுகளையும், உடல்மொழிகளையும், குதூகலத்தையும் அறியலாம். உழைக்கும் மக்களிடத்தில் இருக்கும் அந்த வேற்றுமையான தனித்தனி அழகு ,வார்க்கப்படும் பார்பி பொம்மை போன்ற கனவான்களிடம் கடுகளவு கூட உணர முடியாது.

ஆகவேதான் தமிழ் பின்னணி பாடகர்களும் அப்படி ஒரு படித்தானவர்களாக பாடுவதால் நமக்கு எல்லாம் ஒரே குரலாய், இசையாய் தெரிகிறது. நட்சத்திரங்களின் இமேஜை வைத்தே வெற்றியடையும் பாடல்கள் அடையாளம் காணப்படுகின்றன. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஏசுதாஸ், பாலசுப்ரமணியம், ஜானகி, சித்ரா, சுவர்ணலதா முதலானவர்களின் தனியழகு நினைவுகளை இப்போது யாரிடம் தேடினாலும் கிடைப்பது கடினம்.

இத்தகைய கடினமான உலகமய மோல்டிங் கலைச் சூழலில்தான் ஸ்ரேயா  கோஷல் மட்டும் ஓரளவுக்குத் தனியாக தெரிகிறார். எனினும் ஊடகப் பெருவெளி உருவாக்கி வரும் அழகுப் பெண்ணின் குரல் மாதிரியோடு ஸ்ரேயா கோஷலின் குரலும் பெருமளவு ஒத்துப்போவது கண்கூடு.  சமகால நாயகிகளுக்கு டப்பிங் குரல்தான் என்றாலும் அது தனித்தனி வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில்லை.  அது ஒரு வகையான நகரத்து மேட்டுக்குடி நடுத்தரவர்க்க பெண்ணின் ரோல் மாடலான குரல். அந்த வகையில் ஸ்ரேயா கோஷலின் குரலும் சினிமாவில் இன்று தேவைப்படுகிறது. என்றாலும் அவரது தனித்திறமைகள் அந்த மாதிரித் தோற்றத்தை கொஞ்சம் வெற்றி கொண்டிருப்பதும் நிஜம்.

இயக்குநர் பாலுமகேந்திரா, ஹாலிவுட் படமொன்றை ஷாட்டுக்கு ஷாட் சுட்டு எடுத்த ஜூலி கணபதியில்தான் ஸ்ரேயா கோஷலை “ எனக்குப் பிடித்த பாடல்” மூலம் கேட்டதாக நினைவு. பிறகு விருமாண்டி, சில்லுனு ஒரு காதல், நான் கடவுள், செல்வராகவன் படங்கள், படமே தெரியாத பாடல்கள் என்று தொடரும்போது அவரது குரல் எனக்கு தனித்து தெரியத் தொடங்கியது. ஆர்வத்துடன் தேடிப் பிடித்துக் கேட்டேன். கேட்கிறேன்.

வரம்புக்குட்பட்ட கலைத்தூண்டுதலில், திட்டவட்டமான வகைமாதிரிகளையே விதிகளாக கொண்டு இயங்கும் தமிழ் இசையில் இந்த பெண் மட்டும் ஏதோ ஒரு விதத்தில் அதை கொஞ்சம் தனது சாயலோடு பாடுகிறாரோ என்று தோன்றியது. ஆலாபனைகளில் அவர் தோய்ந்து பாடும் போது தெரியும் உணர்ச்சிகளில் இழையோடும் அசாத்தியத் திறமை ஆச்சரியப்படுத்தியது. இசை, பாடல் வரிகள், உப்புமா கதைகள் அத்தனையும் ஸ்ரேயா கோஷலின் குரலிசையில் மண்டியிடுகின்றனவோ என்று கூட தோன்றியது.

1984-இல் வங்கத்தில் பிறந்த கோஷல் அவரது தந்தையின் அணு உலை பொறியாளர் பணி காரணமாக ராஜஸ்தானில் வளர்கிறார். பெற்றோர் இருவரும் படித்தவர்கள் என்பதோடு கூட இசையார்வமும் உள்ளவர்கள். காரணமாக  ஸ்ரேயாகோஷல் அங்கே மகேஷ் சந்திர ஷர்மா என்ற இந்துஸ்தானி கலைஞரிடம் இசை பயில்கிறார். ராஜஸ்தான், இந்துஸ்தானி இரண்டும் மிக வளமான இசைப் பின்னணி கொண்டவை. ராஜஸ்தானின் நாட்டுப்புறப் பாடல்களில் பாலைவனத்தின் சோகமும், கம்பீரமும், உச்சஸ்தாயில் பாடும் பெண்களது வலிமையும் எவரையும் சுண்டி இழுக்கும்.

பாரசீகத்திலிருந்து ராஜஸ்தான் வரையிலும் இசைக்கு ஒரு வரலாற்றுரீதியான இழையும் தொடர்பும் காலந்தோறும் இருந்து வருகிறது. மொகலாயர்களது பங்களிப்பாக வளர்ந்த இந்துஸ்தானி இசை, செவ்வியல் இசையறிவு இல்லாத பாமரர்களையே சுண்டி இழுக்கும். தமிழிசையிலிருந்து திருடப்பட்ட கர்நாடக இசையும் ஒரு செவ்வியல் இசைதான் என்றாலும் இதில் பாடுபவர்கள் இசையை கணிதம் போல பாடுவார்கள். மனோபாவத்துக்கு முக்கியத்துவம் தருவதாக கூறப்படும் கர்நாடக இசையில் உணர்ச்சியை விட தாளத்தின் ஸ்வர வரிசையே மேலோங்கி இருக்கும். இந்துஸ்தானியில் கணிதம் இருந்தாலும் உணர்ச்சிதான் முதன்மையானது.

அதற்கும் ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. ஹிந்துஸ்தானி இசை அடிப்படையில் மதச்சார்ற்ற இசை. வாழ்வின் மகிழ்ச்சியை, கேளிக்கையை பாடுவதற்காக உருவான இசை. கர்நாடக இசை பக்தியை மட்டுமே கொண்ட மதச்சார்பு இசை. வாழ்வின் மற்ற உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை.

அதனால்தானோ என்னமோ இசையறிவு அற்ற பாமரர்களும் ஹிந்துஸ்தானி இசையில் மயங்குவது போல கர்நாடகத்திடம் நெருங்குவதில்லை. இன்னதென்று சொல்லத் தெரியாத இனிமை ஹிந்துஸ்தானி இசையிடம் இருக்கிறது என்று ஒரு இசையமைப்பாளரான நண்பர் சொன்னார்.

ரஹமான் கூட தனது பாடல்கள் பலவற்றுக்கும் ராஜஸ்தான் நாட்டுப்புற இசையையும், சூஃபி இசை, ஹிந்துஸ்தானி இசையையும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தியிருக்கிறார்.

பிரபலமான இந்திப் பாடல்கள் அன்றும், இன்றும் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் பின்னணியில் இந்துஸ்தானி இசையே ஆட்டுவிக்கிறது. மெலடி என்று எடுத்துப் பார்த்தால் இந்தி திரையிசையை எந்த இசையும் விஞ்சுவது கடினம். ஆலாபனைகளோடு சேர்ந்து வரும் வரிகள் மொழியைத் தாண்டி இதயத்தில் கரைந்து கசியும். மனதை மயக்கும் கஜல் பாடல்களில், தன்னெழுச்சியாக இசையோடு இணைந்து பிறக்கும் கவிதைகளை வாரே வாஹ் என்று இரசிகர்கள் வரவேற்பதும் செயற்கையானதல்ல. இத்தகைய மண்ணில் கோஷல் வளர்ந்தது தற்செயல் என்றாலும் அதுவே அவரது அவசியமான அடிப்படைகளை உருவாக்கியிருக்கக் கூடும்.

சிறுமியாக இருக்கும் போது ஜீ டி. வியின் ச ரி க ம நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  இறுதிப் போட்டியில் வெல்கிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த இந்தித் திரையுலh இசையமைப்பாளர் கல்யாண்ஜி, ஸ்ரேயா கோஷலின் அசாத்தியத் திறமையை கண்டு கொண்டு உவகை அடைகிறார். அவரது பெற்றோர்களிடம் சொல்லி மும்பையில் குடியேறுமாறு கேட்டுக் கொள்கிறார். அதன்படி மும்பைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு ஸ்ரேயா கோஷல் குடும்பம் குடியேறுகிறது. கல்யாண்ஜியிடம் பதினெட்டு மாதங்கள் கோஷல் பயிற்சி எடுக்கிறார்.

கல்யாண்ஜி இந்தி திரையுலகில் கொஞ்சம் பிரபலம் என்றாலும் அங்கே ஜாம்பவான்களாக இருந்தவர்கள் வரிசையில் அவரை சேர்க்க முடியாது. எனினும் ஒரு திரையிசை  இசையமைப்பாளரிடம் கற்றுக் கொள்வது கோஷலுக்கு  கிடைத்த இரண்டாவது வரப்பிரசாதம். பலரும் செவ்வியல் கலைஞர்களிடம்தான் பயில்வதை முக்கியமாக கருதுகிறார்கள். அதை நாமும் மறுக்க வேண்டியதில்லை. கோஷலும் கிரமமாக செவ்வியல் இசை பயின்றவர் என்றாலும் திரையிசைப் பயிற்சி என்பது சற்றே மாறுபாடானது. ஏனெனில் ஒரு கதை அல்லது உணர்ச்சிக்கு பாடுவது என்பது கர்நாடக கீர்த்தனைகளில் காணமுடியாது. அங்கே ஆதிக்கம் செய்யும் ஒரே உணர்ச்சி பக்தி மட்டும்தான்.

தியாகய்யரின் கீர்த்தனைகளில் வாழ்ந்து கெட்ட பார்ப்பனரது புலம்பல்கள் ராமனை வைத்து ஏங்குவதைத் தவிர அதில் சமகால வாழ்வின் போராட்டமான தருணங்களோ, உணர்ச்சிகளோ, கொண்டாட்டங்களோ இல்லை. இதையே பல்லாண்டு கற்று பாடுபவர்களும் உணர்ச்சியில் தோய்ந்து பாடும் வித்தையை அல்லது இசைமொழியை அறிவதில்லை. ஒரு கணித சூத்திரம் போல விரியும் கர்நாடக இசை அதனாலேயே என்னமோ மக்களது இசையாய் பரிணமிக்கவில்லை.

சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ முதலான செவ்விசைக் கலைஞர்கள் திரையிசையில் பாடும் போது கூட இந்த கணித சூத்திர முறையில்தான் பாடுகிறார்கள் என்பதையும், மற்ற பின்னணி பாடகிகளைப் போல உணர்ச்சி பாவம் இல்லாமல் இருப்பதையும் மேலோட்டமாக கேட்டாலே அறிய முடியும். அந்த வகையில் திரையிசையின் உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதற்கு இந்துஸ்தானி இசை பொருத்தமாகவே உள்ளது. இது ஏன் என்பதை கண்டு சொல்லுமளவு எனக்கு இசைஞானமில்லை.

கல்யாண்ஜியின் பயிலகத்தில் பயின்ற ஸ்ரேயா கோஷல் பின்னர் தேவதாஸ் படத்திற்கு ஐஸ்வர்யா ராயின் பாத்திரத்திற்காக பாடுகிறார். பிரபலமடைகிறார். பின்னர் பல மொழிகள், பல பாடல்கள், பல உணர்ச்சிகள். 26 வயதிற்குள் நான்கைந்து தேசிய விருதுகள், ஏராளமான சினிமா விருதுகள். இப்போது தமிழுக்கு வருவோம். அவர் பாடிய சில பாடல்களை  மட்டும் ஒரு இரசிகனது பார்வையில் – கவனிக்க இசையறிஞன் அல்ல – அசை போடுவோம்.

1.     முன்பே வா

பாடியவர்கள்: கோஷல், நரேஷ் ஐயர்
இசை: ஏ.ஆர்.ரஹமான்
பாடல்: வாலி
படம்: சில்லுனு ஒரு காதல்

தற்செயலாய் தொலைக்காட்சியில் இந்தப் பாடலைக் கேட்ட போது முதல் முறையிலேயே ஈர்த்த பாடல். ஆனால் அறியும் முன்பே இது மிகவும் பிரபலமான பாடல் என்பது அறியேன். இப்போது இது பலமுறை கேட்டுத் தேய்ந்ததாகத்தான் இருக்கமென்றாலும் இதை எழுதுவதற்காக மீண்டும் கேட்ட போது கூட அதிலுள்ள ஈர்ப்பை இன்னும் நான் இழக்கவில்லை. முதலில் திருஷ்டிக் கழிப்புக்களை பார்த்துவிடலாம். ரஹ்மானது வியாதி போல பல பாடல்களில் தொடரும் கோரஸ் என்ற சேர்ந்திசை இந்த பாடலுக்கு தேவையே இல்லை. கோஷலின் தனி ஆவர்த்தனத்தை பொருத்தமின்றி அந்த சேர்ந்திசை இடையூறு செய்கிறது. அடுத்தது நரேஷ் ஐயரும் இங்கு அவ்வளவாக தேவையில்லை. படத்தில் இவருக்காக சூர்யா தலையையும், தோளையும் அசைப்பது(எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம்) ஒன்றே இந்த தேவையின்மைக்கு சான்று பகரும். தாளத்திற்கு உட்காரும் வரிகளை வாலி எழுத முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறார். மேலும் காதில் வார்த்தைகள் விழுவதில்லை. பாடுவதற்கு சிரமமான முறையிலும் பாடல் வரிகள் இருக்கின்றன.

பாடலை மட்டும் முதலில் கேட்டு இரசித்துவிட்டு காட்சிகளை திரையில் பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். இருப்பினும் கோஷலின் உதவியால் இதையும் கடந்து பாடலை இரசிக்கலாம். இந்த பாடலின் உணர்ச்சி என்னவாக இருக்குமென்று பார்த்தால் இது காதலின் அடக்கமான, பணிவான வலிமையினை பெருந்தாய்மையோடு இசைக்கிறது. அடக்கமான காதலே அழகானது என்றார் காரல் மார்க்ஸ். அந்த அழகின் உணர்ச்சியினை இந்த பாடல் மூலம் கோஷல் கலையாக மனதில் செதுக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. நானும் காதல் வயப்படும் வயதுதான் என்பது கூட ஒரு புறக்காரணமாக இருக்குமென்றாலும் நாளை (இருபது, முப்பது வருடம் கழித்து) அறுபதுகளைக் கடக்கும் நேரத்திலும் கூட இந்த இசையை மீட்டமுடியுமென்றுதான் கருதுகிறேன்.

காதலின் குதூகலத்தை முகப்பிலேயே நரம்பிசை ஒரு கற்றார்ந்த தன்னடக்கத்துடன் கொண்டாட்டமாக  அறிவிக்கிறது. யானை வருமுன்னே மணியோசை வருவது போல அது ஒரு அழகான வழித்தடத்தை குதித்தோடும் தாளம் காட்டிவிட்டு செல்ல கோஷல் காதலின் மேல் கை கோர்த்துக் கொண்டு முன்பே வா, அன்பே வா என்று வருகிறார்.  உணர்வும், உயிரும், பூவாய் மென்மையாக நெஞ்சம் கரைந்து வழிகிறது. ரங்கோலி சேர்ந்திசை முடியும் நேரத்தில் ஒரு ஆலாபனை வரும். இந்தப்பாடலின் மைய உணர்ச்சியாக இதைக் கூறலாம். எந்த வித்தைகளோ, ஆர்ப்பாட்டங்களோ இன்றி வெகு இயல்பாக ஆனால் கண்ணைப் பறிக்கும் அழகுடன் வரும் இந்த தருணத்தின் காதலின் பணிவான அழகு கம்பீரத்துடன் இசைக்கப்படுகிறது.

காதலனது தோழமையை கைப்பற்றும் சரணத்தில் நாம் காதலிக்க வாய்ப்பற்ற பாலைவன பாரதத்தில் இருந்தாலும் காதலிக்காக அவளது கைபிடித்து செல்லும் பரவசத்திற்காக நனவில் இல்லையென்றாலும் கனவில் மிதக்க ஆரம்பிப்போம். அடுத்த சரணத்தில் தான் சாயும் தோளில் வேறெருவர் சாய்ந்தால் தகுமா என்று மெல்லிய ராகத்தில் கோஷல் இசையாய் இறைஞ்சுகிறார். இப்படி ஒரு இவள் இருக்கும் போது நான் ஏன் மற்றவளை நினைப்பேன் என்று எல்லா ஆண்களும் நினைக்கும் கணநேர யோக்கியத்தை நிஜம் போல நம்பவைக்கிறது அந்த அழகு.

எனினும் காதல் உணர்ச்சியில் நாம் நீடிக்க நினைப்பது உண்மையென்றாலும் நடப்பில் அது பொய்யாகத்தானே இருக்கிறது? ஆதலால் இந்த இனிய காதலின் நினைவுகள் முடியும் சோகத்தை பாடலின் இறுதியில் வரும் கோரசைத் தாண்டி கோஷலின் ஆலாபனை நமது செவியை ஊடுறுவி மனதை வருத்தும் வலியுடன் இசைத்து மறைகிறது. வேறுவழியின்றி பாடலை மீண்டும் கேட்டாக வேண்டுமென்ற ஆசையையும் தூண்டுகிறது.

ரஹ்மானது மிகச்சிறப்பான இந்த பாடல் அதன் புத்தாக்க ராகத்தை எல்லையற்ற விரிவாய் இசைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டுவதற்குப் பதில் ஒரு சில மின்னல்களுடன் சுருங்கிவிடுகிறது. கோஷலின் உணர்ச்சிக்கு தீனி போட்டிருக்கும் இந்தப் பாடலை இன்னும் பரவித் திரும்பும் இசையோடு விரித்திருந்தால் அது காலத்தின் உணர்ச்சியை பொய்யென்றாலும் கூட பற்றியிருக்குமோ என்று தோன்றுகிறது.

2.     நினைத்து நினைத்து…

பாடியவர்: கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: 7ஜி ரெயின்போ காலனி

படத்தைப் பார்த்த போது இந்தப்பாடல் நினைவில் இல்லை. பாடலை கேட்கும் போது படம் நினைவிலில்லை. இந்த உலகமே தன்னை மறுக்கிறது என்று அல்டாப்பு பில்டப்பு கொடுக்கும் நடுத்தர வர்க்க விடலைப் பருவ இளைஞனது வம்படியான காதலில் சிக்கிய பெண்ணின் உணர்வை ஏதோ ஒரு இனம்புரியாத சோகத்தின் உணர்ச்சியை இந்தப் பாடல் மூலம் கோஷல் மீட்டுகிறார் போலும். உச்ச ஸ்தாயில் ஏறி சோகத்தை கேள்விகளாய் கேட்டுவிட்டு அந்த சுவடே இல்லாமல் கீழே இறங்கி காதலனுக்கு காதலை மறுக்காமல் கொடுக்கும் லாவகம். என்னதான் இருந்தாலும் உன்னால்தான் வாழ்கிறேன் என்று விட்டுக் கொடுக்காத காதலின் எளிமையான இசையை யுவன் தனது வழக்கமான மெலொடியில் வழங்க, தபேலாவின் எளிய தாளத்தில் கோஷலின் குரலில் உணர்ச்சியையும், அழகையும் கண்டு கொள்ளும் வண்ணம் நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் பாடலையும் கொண்ட இந்த இசையைக் கேட்டுப் பாருங்கள்.

3.     சாரல்

பாடியவர்: கோஷல்
இசை: ஜி.வி பிரகாஷ்
பாடல்: கிருத்தியா
படம்: குசேலன்

படம் பார்த்திருக்கவில்லை.  உண்மையில் சாரலுக்கு பொருத்தமான ராகத்தை பின்னியிருக்கும் இசையமைப்பாளர் பின்னணி இசையில் வித்தைகளைக் காட்டவேண்டுமென்ற முனைப்புகளைக் குறைத்திருக்கலாம். ஆனால் கோஷல் பாடும் போது நாம் நேரே குற்றாலத்தின் ஆனி ஆடிச்சாரலில் நனைந்து கொண்டு மழைத்துளியின் உற்சாகத்தை ஆசை தீர பருகுகிறோம். வெள்ளிமழைச் சாரல் நம்மை கிள்ளிவிட்டுப் போகுமென்று விடலைப்பருவ நினைவுகளை கோஷல் அதே வயதோடு பாடுகிறார்.  சரணத்தில் தூரலுக்கு பிறகு வரும் அடைமொழியின் வரிகளை மேலே துள்ளியவாறு பாடுகிறார். அனுபல்லவியில் மழை ஓய்ந்த பின் நீடிக்கும் இனிமையின் மணத்தோடு பல்லவிக்கு குதித்தோடுகிறார். சாரலின் கிள்ளலில் அனுபவித்திராதவர்கள் கோஷலின் உதவியோடு நனையலாம். சாரலுக்கு பொருத்தமான ராகத்தை இசையமைப்பாளர் ஆச்சரியப்படுமளவு செதுக்கியிருப்பதால் கோஷல் மிளிர்கிறார்.

4.     எந்த குதிரையில்

பாடியவர்கள்: கோஷல், ராகுல் நம்பியார்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
படம்: சத்தம் போடாதே

பாடல் சுமார்தான் என்றாலும் துள்ளலான ராகத்தில் கோஷல் சற்றே கிண்டல் போன்ற தொனியில் பாடியிருப்பார். இதற்குத்தானே இத்தனை நாளா ஆசைப்பட்டாய் தானனானே என்ற ஆலாபனையை வேறு வேறு உணர்ச்சியில் பாடியிருப்பார். மற்றபடி படத்தை பார்க்கவில்லை என்பதால் பாடலை மட்டும் கேட்டுப் பிழைக்கலாம்.

5.     கண்ணின் பார்வை..

பாடியவர்: கோஷல்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
படம்: நான் கடவுள்

பாலாவின் பெருத்துப் புடைக்கும் அக ஆன்மீக மொக்கை என்பதால் படத்தை பார்க்கவில்லை. ஆனால் பாடல்..?

பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல். பாடலின் கம்பீரமான தாளக்கட்டுக்கு இணையாக கோஷல் வரிகளை உணர்ச்சியில் தோய்ந்து பாடியிருப்பார். பார்வையில்லாத போதும் கண்ணில் ஈரம் ததும்பும் என்று அவர் பாடும் போது வேறு வழியில்லை, நமக்கும் ததும்பித்தான் ஆகவேண்டும். பார்வையற்றோரின் கூர்மையான நோக்குணர்ச்சியை இளையராஜாவின் அற்புதமான ராகத்தின் துணை கொண்டு கோஷல் மீட்டு வருகிறார். ராஜாவின் பாடலில்தான் கோஷல் தனியாக தெரியாமல் பின்னணிக்கு போய்விடுகிறார் எனும் அளவுக்கு இந்தப் பாடலின் கட்டுமானம் சற்றே பிரம்மாண்டமானதுதான், சந்தேகமில்லை. ரஹ்மானது பாடலில் ராகங்கள் சுருங்கி தேங்கி நின்று விடுவதற்கு மாறாக ராஜாவின் ராகம் எவ்வளவு விரிய முடியுமோ அதற்கு மேலும் பறக்கிறது. சரணங்களுக்கு இடையில் வரும் பின்னணி இசையில் இதை அறியலாம். கோஷலை நன்கு வேலை வாங்கிய பாடலாக இது இருந்திருக்குமென்று தோன்றுகிறது.

6.     அய்யைய்யோ

பாடியவர்கள்: மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், யுவன் சங்கர் ராஜா, கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: சிநேகன்
படம்: பருத்திவீரன்

முழுமையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் கோஷலை சற்றே தமிழ் நாட்டுப்புறத்தின் சாயலில் பாடுவதை பார்க்கிறோம். கருவாச்சியின் கரடு முரடான பாத்திரத்திற்குப் பொருத்தமான பாடலில் சற்றே கனமான குரலில் கோஷல் பாடுகிறார். சமயத்தில் இது கோஷல்தானா என்று சந்தேகம் கூட வருகிறது. ஒரு பாடலின் உணர்ச்சியைப் புரிந்து கொண்டு அவர் காட்டும் வித்தியாசம் உண்மையில் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

7.     உருகுதே மருகுதே

பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், கோஷல்
இசை: ஜி.வி பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: வெயில்

கரிசல் மண்ணின் வெள்ளேந்தியான காதலர்கள் பாடும் பாடலில் சங்கர் மகாதேவனிடம் மட்டும் அந்த வெள்ளேந்தித்தனத்தை காண முடியவில்லை. ஆனால் கோஷல் பாடும் போது உண்மையிலே உருகுகிறார். உலகம் சுழலுதே என்று பாடும் போது உண்மையில் உலகம் சுழலத்தான் செய்கிறது. தமிழ் தெரியாத ஒரு வங்கத்துப் பெண் இப்படி வார்த்தைகளை பொருள் தெரிந்து, இசையமைப்பாளர் எதிர்பார்க்கும் உணர்ச்சியை அநாயசமாக வெளிப்படுத்தி பாடுவதற்கு இந்தப்பாடல் ஒன்றே போதும்.

8.       எனக்குப் பிடித்த பாடல்

பாடியவர்: கோஷல்
இசை: இளையராஜா
படம்: ஜூலி கணபதி

ஸ்ரேயா கோஷலின் முதல் தமிழ் பாடல் இதுதானாவென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் இளவயது பாடல் என்பது மட்டும் புரிகிறது. இன்றை கோஷலின் குரலில் இருக்கும் கனமும், முதிர்ச்சியும் இந்த இளங்குரலில் இல்லை என்றாலும் அவரது திறமை இங்கேயே பளிச்சிடுகிறது. ஒரு பாடலில் இருக்கும் ராகத்தின் திருப்பம், ஏற்ற இறக்கம், கமகங்கள் இதெல்லாம் பாடுவதற்கு பொருத்தமான காலநேரத்தை வைத்துக் கொண்டே கட்டமைக்க முடியும். அதாவது அந்தந்த திருப்பத்திற்கு ஒரு தூரம் இருக்க வேண்டும். ஆனால் கோஷல் மட்டும் அந்த தூரத்தை மிகவும் குறைத்துக் கொண்டு பாடுகிறார். உண்மையில் இது சிரமமானது என்றாலும் அவரது இந்துஸ்தானி பயிற்சி இதற்கு கைகொடுக்கும் போலும். இந்தப் பாடலிலும், இந்தப்படத்தில் வரும் இதயமே என்ற பாடலிலும் கோஷல் அப்படி பாடும் ராகத்தை கமகத்தால் ஒரு குரலாட்டத்தோடு லாகவகமாக பாடுவதைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடலை வேறொரு தேர்ந்த பாடகரை பாடச் சொன்னாலும் இந்த அளவு நகாசு வேலைகளோடு பாடுவது மிகவும் சவாலான ஒன்று.

9.     ஏ பெண்ணே..

பாடியவர்: கோஷல்
இசை: வித்யா சாகர்
படம்: தென்றல்

மேற்கத்திய இசை, செவ்வியல் இசை, கேள்வி பதில் அடுக்கு, சந்தப்பாட்டு, தனிக்குரலிசை என்று பல அம்சங்கள் இந்தப் பாடலில் சேர்ந்து வருவது அழகு. அத்தனைக்கும் ஈடு கொடுத்து பாடும் கோஷலும் அதை செவ்வனே செதுக்கியிருக்கும் வித்யாசாகரும் தனித்து நிற்கிறார்கள்.

10.   ஆவாரம் பூவுக்கும்

பாடியவர்: கோஷல்
இசை: வித்யா சாகர்
பாடல்: கபிலன்
படம்:  அறை எண் 305-இல் கடவுள்

நாட்டுப்புறத்தாளத்தில் ஆரம்பிக்கும் பாடலில் நாயனம் ஒரு சோகமும் இனிமையும் கலந்து இசைக்கிறது. பின்னர் கோஷல் பாடுகிறார். ஐயா என்று பாடும் போது நமக்கு தமிழ் ஐயா நினைவு வருகிறது.  பல்லவியில் சந்தப்பாட்டு போல வார்த்தைகள் தாளத்தோடு துள்ளும் வண்ணம் பாடல் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. வரிகள் தெளிவாக கேட்கவில்லை என்றாலும் இனிமையான பாடல்தான்.

11.   பார்த்துப் போ மாமா

பாடியவர்: கோஷல்
இசை: கார்த்திக் ராஜா
படம்: நிறைஞ்ச மனசு

நாட்டுப்புறத்தின் அழகை கோஷல் பாடும் விதத்திற்காகவே இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பார்த்துப் போ மாமா என்று கோஷல் பாடும் போது அது சுத்தமான அக்மார்க் தமிழ் பெண்ணாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஜிலு ஜிலு சலங்கைச் சத்தம் என்று அவர் பாடும் போது அதுவே ஜல்லரி போல ஒலிக்கிறது. கரிசல் காடு, கம்மாய், நாத்து நடும் பெண்கள், என்று கிராமத்தின் சத்தங்கள் எல்லாம் கோஷலின் வழியாக நமது காதில் எங்கோ கேட்டது போல ஒலிக்கிறது.

12.   கண்டேன் கண்மணியே

பாடியவர்: கோஷல்
இசை: கணேஷ் ராகவேந்திரா
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: ரேணிகுண்டா

இந்தப்பாடலில் கோஷல் காயம்பட்ட மனதிற்கு ஆறுதல் சொல்லும் வண்ணம் இசைக்கிறார். இதில் அழகே தேவையற்ற கமகங்கள், ஆர்ப்பாட்டங்கள், அலங்காரங்கள் எதுவுமின்றி நேரடியாக பாடுவதுதான். மிகவும் கட்டுப்பாட்டோடு பாடப்பட்ட எளிமையான பாடல் என்றும் சொல்லலாம்.

13.   என்னவோ செய்தாய்

பாடியவர்கள்: கோஷல், கைலாஷ் கேர்
இசை: லஷ்மணன் ராமலிங்க
படம்: ஏன் இப்படி மயக்கினாய்

மெல்லிசையும், இந்துஸ்தானி ஆலாபனையும் இனைந்து வரும் அருமையான பாட்டில் ஆண் குரல் பொருத்தமாக கோஷலுடன் இணைகிறது. ஆண்குரல் நாட்டுப்புற சாயலுடன் இசைக்க கோஷல் நகர்ப்புறத்து பெண்குரலாய் சிணுங்கி பாடுகிறார்.

14.   ஒண்ண விட

பாடியவர்கள்: கோஷல், கமல் ஹாசன்
இசை: இளையராஜா
படம்: விருமாண்டி

ஸ்ரேயா கோஷல் பாடிய தமிழ் பாடல்களில் எனக்கு பிடித்த சிறப்பான பாட்டு இதுதான். இந்தப் பாட்டில் ஆச்சரியமாக குறைகளோ திருஷ்டிகளோ எதுவுமில்லை. கமலின் குரல் கூட படத்தின் மையப்பாத்திரத்தை நினைவுபடுத்தும் விதமாகவே வருகிறது. திருமணம் செய்த இளஞ்ஜோடி நிலா வெளிச்சத்தில் ஊரைவிட்டு காதல் கீதத்தோடு பயணிக்கிறது. மதுரை வழக்கோடு, நாட்டுப்புற பாணியில் கோஷல் உசிலம்பட்டி பெண்ணாகவே பாடுகிறார். தனிமையின் நிர்ப்பந்தம் சோகமான முறையில் பின்னணி இசையாக ராஜாவால் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கோஷலும் அலங்காரங்கள் எதுவுமின்றி எளிமையாக நேரடியாக உணர்ச்சியில் தோய்ந்து இசைத்திருக்கிறார். தாளமும், ஏனைய கருவிகளும் பின்னணி இசையில் கதையின் கருவை அநாயசமாக கொண்டு வருவதால் கோஷலின் குரல் அன்றி இங்கு வேறு யாரும் பாட முடியாது என்று தோன்றுகிறது.

_________________________________________

ஸ்ரேயாவின் ஏனைய மொழிப் பாடல்களைக் கேட்டதில்லை. முக்கியமாக இந்தியில் அவர் நிறைய நல்ல பாடல்களை பாடியிருக்கிறார். இந்தியில்தான் கோஷலின் திறமை முதன்முதலில் வெளிவந்திருக்கிறது. மலையாளத்தில் அவர் எப்படி பாடியிருக்கிறார் என்பது எனக்கு ஆவலான ஒன்று. அந்த மொழியே இசையாக இருக்கும்போது இசையையே குரலாக கொண்டிருக்கும் அவரது பாடல் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.

எனினும் ஸ்ரேயா கோஷலை இன்னும் எத்தனை நாள் இரசிக்க முடியும் என்ற ஐயமும் தோன்றாமலில்லை. அநேகமாக தமிழ் சினிமா ஃபார்முலாவில் நைந்து போயிருக்கும் எல்லா உணர்ச்சிகளையும் அவர் பாடிவிட்டார் என்றே தோன்றுகிறது. இனி அவர் என்னதான் பாடினாலும் அதில் புதிய உணர்ச்சிகள் இருக்கப் போவதில்லை. சராசரித் தமிழனது வாழ்வை விட்டு அன்னியப்பட்டிருக்கும் தமிழ் சினிமாவால் அந்த நல்ல பாடகியின் அத்தனை சாத்தியங்களையும் வெளிக்கொணர்வது கடினம்.

காதலின் ஏக்கம், இனிமை இவற்றைத்தான் கோஷல் அதிகம் பாடியிருக்கிறார். காதலில் கூட சமூக எதார்த்தம் இடம் பெறாத போது உணர்ச்சியில் மட்டும் புதுமையை நாம் கண்டு கொள்ளவோ, கொண்டு வரவோ செய்வது கடினம். கோஷல் பாடிய நல்ல பாடல்களின் திரைக் காட்சிகளைப் பார்க்கும் போது நமக்கு உவப்பாக இருப்பதில்லை. வெறும் பாட்டு தோற்றுவிக்கும்  கலையுணர்ச்சியை அலுப்பூட்டும் பிம்பக்காட்சிகள் எளிதாக கலைத்துவிடுகின்றன. இது கோஷலுக்கு மட்டுமல்ல, இளையராஜா போன்ற திறமையான இசையமைப்பாளர்களுக்கும் நடந்திருக்கிறது.

ஆகவேதான் அந்த அசட்டுக் கனவு ஒரு கணம் தோன்றுகிறது. ம.க.இ.க பாடல்களுக்கு இளையராஜா இசையமைக்க, கோஷல் பாடுவதாக ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். எண்ணுவதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அரசியல் பாதையின் கலையுணர்ச்சியை திரையிசை என்ற மாய உலகத்தில் வாழும் கலைஞர்கள் எவ்வளவு உணரமுடியும் என்ற கேள்வி இருக்கிறது. காதலின் சிணுங்கலுக்காக உணர்ச்சி பாவத்தை பிரசிவிக்கும் அந்த பாடகி, புரட்சி தோற்றுவிக்கும் பிரசவ வலியை எங்கனம் உணர முடியும்? ஆனாலும் தனது கலை உணர்ச்சிக்கு உண்மையாக இருக்கும் ஒரு படைப்பாளி இறுதியில் பொதுவுடமைக்கு தானே வருவான் என்று ஒரு தத்துவப் பிரச்சினையை ஒரு தோழரிடம் நீண்டநேரம் விவாதித்தது நினைவுக்கு வருகிறது. ஸ்ரேயாவின் இசை உன்னதத்தை புரட்சியின் சர்வவியாபாக உண்மை இணைக்க முடியாதா என்ன?  ஆகவேதான அது முற்றிலும் அசட்டுக் கனவு என்றும் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் ஒரு நல்ல இசை கேட்பதற்கு மட்டுமல்ல, நாம் ஈடுபடும் எந்த காரியத்திற்கும் ஒரு ஊக்கத்தை வழங்கவே செய்யும். ஸ்ரேயா கோஷலை அம்மட்டுமிலாவது நாம் பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைத் தவிர வேறென்ன?

சென்ற மாதம் 17 தேதி முதல் வினவு நான்கம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டது. நன்றியும் வாழ்த்துக்களும் !

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்