privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !

அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !

-

லைப்பை பார்த்து விட்டு தினமணி அபிமானிகள் கோபிக்கக் கூடாது. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” என்று தினமணியின் நெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ட்ராவாக ஆசிரியர் வைத்தியநாதனின் மூக்குக்கு கீழே ஒரு முரட்டு மீசையும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆசிரியரை இப்படியா கொச்சைப்படுத்துவது என்று தினமணி அபிமானிகள் கோபப்படலாம். நாம் என்ன செய்வது? போயஸ் தோட்டத்தின் வாசலை மொய்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள் ஆசிரியரின் நா வன்மை குறித்துத்தான் போவோர் வருவோரிடமெல்லாம் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் அம்மா வெற்றி பெற்றது குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இதொன்றும் தோட்டத்தில் நடக்காத அதிசயமில்லை. அம்மாவின் கருணையைப் பெற விரும்புவோர் எல்லோரும் செய்கின்ற காரியம்தான். எதிர்காலத்துக்கு வேண்டியதை செய்து வைத்துக் கொள்ளும் ஆசை எல்லோருக்கும் இருப்பதைப் போல வைத்தியநாதனுக்கும் இருந்திருக்கிறது. அவ்வளவுதான். உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது; பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

வதந்தியை ஆதாரமாக கொண்டு இப்படி ஒரு செய்தி வெளியிடுவதும், “நக்கினார்” என்று அதற்குத் தலைப்பு போடுவதும் நியாயமா என்று யாரேனும் கேட்பார்களேயானால், ஆகஸ்டு 15 தினமணியின் 11 ஆம் பக்கத்தைப் படிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். “மாசேதுங் ஜோசியம் பார்த்த புத்தர் மலை” என்று தலைப்பு போட்டு முக்கால் பக்க அளவில் ஒரு அண்டப்புளுகை வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர் வைத்தியநாதன்.

1949 இல் சீனாவில், வூதாய் மலையில் உள்ள புத்தர் கோயிலுக்கு வந்த மாவோ, அங்கே ஜோசியம் பார்த்தாராம். இதை நாங்கள் சொல்லவில்லை, அந்த ஊர் சுற்றுலா வழிகாட்டிகள் அங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடம் இப்படித்தான் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறது தினமணி – இது முதல் வரி. அதாவது “நாங்கள் சொல்லவில்லை கைடுகள் சொல்கிறார்கள்” என்ற உத்தி இளித்தவாயர்களை ஏமாற்றுவதற்கு. ‘அந்த கைடுகள் விடுவது சரடல்ல உண்மைதான்’ என்று நக்கலாக தெரிவிப்பதற்காக சரடு என்ற சொல்லுக்கு தனியாக ஒரு மேற்கோள் குறி.

அதற்கு அடுத்த வரியில் “எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம் மாவோவுக்கும் இருந்திருக்கிறது” என்று ரொம்பவும் பெருந்தன்மையாக மாவோவின் பலவீனத்தை அங்கீகரிப்பது போன்ற தோரணையில் எழுதி, அவர் ஜோசியம் பார்த்தது உண்மைதான் என்ற கருத்தை தந்திரமாக நிலைநிறுத்துகிறார் ஆசிரியர், தில்லானா மோகனாம்பாள் வைத்தி.

சீனத்தின் எதிர்காலத்தை சிவப்பாக்கும் புரட்சியை வழிநடத்திய மாவோ, தன்னுடைய சொந்த எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஜோசியம் பார்த்தாராம். யாரிடம்? கம்யூனிச சீனத்தில் தங்களுடைய சொந்த எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருந்த புத்த பிக்குகளிடம்!

நம்மூரில் நாடி ஜோசியம் போல அங்கே நம்பர் ஜோசியமாம். மாவோ ஒரு சீட்டை எடுத்தாராம். 8341 என்று நம்பர் போட்ட சீட்டு வந்ததாம். அந்த நம்பருக்குப் பலன் என்ன என்பதை மாவோவுக்கு சொல்ல மறுத்துவிட்டார்களாம் பிக்குகள்.

“83 வயது வரை வாழ்வார், 41 ஆண்டுகள் ஆள்வார்” என்பதுதான் அந்த சீட்டு தெரிவித்த இரகசியமாம். அன்று முதல் இன்று வரை உலகத்தில் யாருக்குமே தெரிந்திராத அந்த இரகசியம், அங்கிருக்கும் சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கிறதாம். அவர்கள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? யார் சாட்சி? யார் சொன்ன தகவல்? எந்த விவரமும் கிடையாது. ஆகஸ்டு 14ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில்தான் இந்த செய்தி முதலில் வெளிவந்திருக்கிறது. “ஏஜென்சி செய்தியிலிருந்து” என்று போட்டு எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிடுகிறது. ஆனால் ராய்டர், பிடிஐ என்று எந்த செய்தி ஏஜென்சியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அந்த ஏஜென்சிகள் யாரும் இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை. ஒரு வேளை தினமணி குரூப்புக்கு சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (CIA) இந்த செய்தியை கொடுத்திருக்கலாம்.

ஏனென்றால் இச்செய்தியையும் வெளியிட்டுவிட்டு, “இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியவில்லை, சுற்றுலா வழிகாட்டிகள் சொல்கிறார்கள்” என்று மாமாத்தனமாக எழுதியிருக்கிறது எக்ஸ்பிரஸ். அதைக்கூடச் சொல்லாமல், இந்த புளுகுமூட்டை உண்மைச்செய்தி போல வெளியிட்டிருக்கியிருக்கிறது தினமணி!

உண்மையில் 1948 ஏப்ரலில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில் மாவோ அம்மலையைக் கடந்திருக்கிறார். ஒரு இரவு அங்கே தங்கியுமிருக்கிறார். அவர் தங்கியது குறித்த படமும் நினைவுக் குறிப்புகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அப்புறம் என்ன, இது போதாதா? ஜோசியம் பார்த்தார், ரேகை பார்த்தார் என்று அடித்து விடவேண்டியதுதானே. பாபர் மசூதிக்கு உள்ளே இராமன் பிறந்த இடத்தை மட்டுமின்றி, பக்கத்திலேயே சீதையின் சமையலறையையும் (சீதா கி ரசோய்) சமையல் பாத்திரங்களையும் “கண்டுபிடித்த” யோக்கியர்களால் மாவோ ஜோசியம் பார்த்ததையா “கண்டுபிடிக்க” இயலாது?

சென்னை நகரின் நடைபாதையில் அமர்ந்திருக்கும் ஜோசிட ரத்தினங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு கைரேகை பார்ப்பது போல தயாரித்து மாட்டிக்கொள்ளும் போட்டோவுக்கும், புத்த பிக்குகளிடம் மாவோ ஜோசியம் பார்த்த கதைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? இவ்வளவு மட்டமான ஒரு கட்டுக்கதையை வரலாற்று உண்மை போல சித்தரித்து வெளியிடும் ஒரு நபர், புகழ் பெற்ற நடுநிலை நாளேட்டின் ஆசிரியராம். அவரை எல்.கே.ஜி ஆண்டுவிழா முதல் சிற்பி மணிவிழா வரையில் எல்லாவிதமான சுபகாரியங்களுக்கும் அழைக்கிறார்கள்.

அந்த விழாக்களில் திருவாளர் வைத்தியநாதன், சமுதாயத்தில் யார் யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஊர் நாயம் உரைக்கிறார். அந்த உரைகளை, ஸ்ரீமான் வைத்தியநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தினமணியில், பேச்சாளர் வைத்தியநாதனுடைய திருவுருவப் படத்துடன் எட்டு காலம் செய்தியாக எடிட்டர் வைத்தியநாதனே வெளியிடுகிறார்.

மாவோ ஜோசியம் பார்த்த கதையை வெளியிட்டிருக்கும் தினமணி ஆசிரியர், “நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி”யைக் கொண்டவர் என்பதை வாசகர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இவற்றை விவரித்தோமேயன்றி நமக்கு வேறு நோக்கம் ஏதுமில்லை.

இந்தப் பதிவைப் படித்துப் பார்த்த ஒரு நண்பர், “இதெல்லாம் ஒரு விசயம் என்று மதிப்பு கொடுத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே” என்றார். எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்திக்கு இறக்கை முளைத்து அது இப்போது பவுத்த தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது அப்படியே அமெரிக்கா போய், மீண்டும் வூ தாய் மலைக்கே திரும்பி, அங்கிருந்து திபெத், நேபாளம், சிக்கிம் போன்ற எந்த வழியில் வேண்டுமானாலும் தமிழகம் திரும்பலாம். அவ்வாறு திரும்புங்கால் தினமணியில் வெளியான அந்த முக்கால் பக்க புளுகு, 300 பக்க புளுகு மூட்டையாக உப்பி தமிழ் கூறும் நல்லுலகத்தின் தலையில் இறங்கக்கூடும்.

நக்சலைட் இயக்கத்தின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த ஜெயமோகன், ஒரு முறை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தமக்குள் பேசிக் கொள்வதை ஒளிந்திருந்து கேட்டாராம். ஜெயமோகனின் மதிப்புக்குரிய அந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் “நக்சலைட்டுகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாக” பேசிக் கொண்டார்களாம். கேட்டவுடன், ஜெயமோகனுக்கு காலடி நிலம் நழுவிவிட்டதாம். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் குறித்து அவரே தனது தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் நாம் பி.தொ.நி.குரலை (பின் தொடரும் நிழலின் குரல் – ‘நாவல்’) சுமக்க நேர்ந்தது.

மாவோவின் மீதும், தினமணி வைத்தியநாதனின் மீதும் பெருமதிப்பு கொண்டவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கக்கூடும். அத்தகையோரில் ஒருவராக ஜெமோ வும் இருக்கக்கூடும் என்பதே நமது அச்சம். அந்த வகையில் இந்தப் பதிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அவ்வளவே.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: