privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்"விளம்பரங்களில் ஆங்கிலம்", "அரசியலில் மாணவர்கள்" - கேள்வி பதில்!

“விளம்பரங்களில் ஆங்கிலம்”, “அரசியலில் மாணவர்கள்” – கேள்வி பதில்!

-

கேள்வி 1:
தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் விளம்பரங்களே அதிக நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளையும் பின் தள்ளிவிட்டு ஆங்கிலமே முதன்மையாக விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.விளம்பரங்களில் தமிழோ அல்லது வேறு இந்திய மொழி மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என இந்த விளம்பர கம்பெனிகளுக்கு நெருக்கடி கொடுத்து போராட யாரும் முன்வருவதில்லையே ஏன்??

கேள்வி 2:
70
களில் மாணவர் போராட்டங்களினால் ஆட்சியை பிடித்தவர்கள், இன்று மாணவர் உரிமைக்காக போராடுவதற்கு மாணவர்களை அணி திரட்டி போராட களத்திற்கு வருவதில்லையே ஏன்??

– புதுநிலா

அன்புள்ள புதுநிலா,

விஷத்தை ஆழகான வண்ண பாட்டிலில் வைத்து பாய்சன் என்று ஆங்கிலத்தில் காட்டுவதற்கு பதில் நஞ்சு என்று தமிழில் காட்டவைத்து நாம் சாதிக்கப் போவது என்ன? உங்கள் கேள்வியிலேயே விளம்பரங்கள் அதிக நேரம் ஆக்கிரமித்துக் கொள்வதாக கவலைப்படுகிறீர்கள். அப்படி இருக்கும்போது அதில் ஆங்கிலம் இருந்தால் என்ன, தமிழில் வந்தால் என்ன?

சாதாரண மக்களையும் உள்ளிட்ட அன்றாட வாழ்வில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தக் கலப்பு ஒரு இயல்பான மொழிக் கலப்பில் உருவானதல்ல. முதலாளித்துவத்தின் உலகமயத்தால் திணிக்கப்பட்ட ஒன்று. சமூவியல், பண்பாட்டு துறைகளில் உலகம் முழுக்க ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் விரும்பும் நுகர்வுக் கலாச்சார சந்தையை விரிக்க முடியும். அதற்கு தேசிய இனங்களின் பண்பாடுகளை திட்டமிட்டு அழிப்பதை அவர்கள் செய்கிறார்கள். அந்த வரிசையில் தேசிய இனங்களின் தாய் மொழிகளும் சிதைக்கப்படுகின்றது.

கார்ட்டூன் நெட்ஒர்க்கோ, இல்லை டபிள்யு.டபிள்யு.இ.வோ, இல்லை அமெரிக்க அடையாளங்களோடு வரும் வீடியோ கேமோ இவை போன்ற அமெரிக்க வார்ப்புகளோடுதான் நமது குழந்தைகள் வளர்கிறார்கள். பெற்றது நாமென்றாலும் வளர்ப்பது அவர்கள்தான். அமெரிக்க நகரங்கள், நதிகள், நட்சத்திரங்கள் தெரிந்த அளவுக்கு நமது மண் சார்ந்த, மக்கள் சார்ந்த வாழ்க்கைகள் குழந்தைகளுக்கு தெரிவதில்லை.

ஒரு நண்பரது மகனை சமீபத்தில் சந்தித்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் சாலையில் செல்லும் எந்தக் கார்களையும் பார்த்த மாத்திரத்திலேயே அது முன்புறமோ, பின்புறமோ எப்படி இருந்தாலும் கம்பெனி, மாடல் முதலியவற்றை சரியாக சொல்லுவானென்று அவனது தந்தை பெருமையாகக் கூறினார். அதை சோதித்துப் பார்த்த போது உண்மைதான் எனத் தெரிந்தது. பிறகு அவன் வாழும் நகரில் ஓடும் நதியின் பெயரைக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை!

இது எப்படி நடந்திருக்கும்? தொலைக்காட்சியில் பார்ப்பது ஒன்று, பின்னர் உணவகங்கள், சுற்றுலா மையங்கள், ஷாப்பிங் மால்கள் என்று நடுத்தர வர்க்கம் பொழுதைக் கழிக்கும் வர்த்தக இடங்களிலெல்லாம் புதுக் கார்களை பார்க்க முடியும். இதிலிருந்து அவன் சுயமாகவே தனக்கு காட்டப்பட்டதை மனப்பாடம் செய்து தேறிவிட்டான். மேலும் கார் என்பது அந்தஸ்தான வாழ்வின் அடையாளம் காட்டும் பொருளென்ற வகையிலும் அவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. இப்படித்தான் நமது சிறார்களை முதலாளித்துவத்தின் நுகர்வுக்கலாச்சாரம் வளர்க்கிறது. ஆனால் சிறுவர்களை விட பெரியவர்கள்தான் இதில் வேகமாக வென்றெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

செல்பேசி, இணையம், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பல்பொருள் சூப்பர் அங்காடி, மல்டி கசின் உணவகங்கள் என்று நவீன வாழ்க்கையின் மைல்கற்கள் அனைத்திலும் உலகமய பண்பாடுதான் ஆட்சி செலுத்துகிறது. புதிய புதிய உடைகள், அணிகலன்கள், வாகனங்கள், வீட்டுப் பொருட்கள், வீடுகள் என்று இந்த முடிவுறா ஆட்டத்தில்தான் நடுத்தர வர்க்கம் தனது நேரத்தையும், பொருளையும் இழந்து வருகிறது. இப்படித்தான் தொலைக்காட்சிகளின் விளம்பரங்களில் ஆங்கிலம் இயல்பாக வருவதாக நினைக்கப்படுகிறது. அதை யாரும் உறுத்தலாகக் கருதுவதில்லை.

ஆகவே உள்ளூர் சமூக விசயங்கள், மனிதர்கள், வாழ்க்கைகள் எல்லாம் காலம் செல்லச் செல்ல அந்நியமாகிப் போகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இது மொழிப் பிரச்சினை என்பதை விட ஒரு மனிதனின் சமூக உணர்வு குறித்த பிரச்சினையாகிறது. படித்த நடுத்தர வர்க்கத்தினர் பலர் மேலாட்டமாக அரசியல் பேசுவதும், பாசிசத்தை ஆதரிப்பதும், ஊழலை ‘எதிர்ப்பது’, அநாதைகளை ஆதரிப்பது போன்ற அவர்களது தர்ம சிந்தனைகளுக்கும் இதுவே அடிப்படை எனலாம்.

ஆகவே இந்த திணிக்கப்படும் ஆங்கிலத்தை எதிர்க்கும் நமது போராட்டம் நமது மக்களுக்கு சமூக உணர்வையும், அரசியலையும் கற்றுத் தருவதிலேயே வெல்ல முடியும். என்னதான் நுகர்வுக் கலாச்சாரம் ஒரு மேகமூட்டமாக கவிந்து வந்தாலும், வாழ்க்கை எனும் சூரியன் உண்மையினை எடுத்துச் சொல்வதை மறைக்க முடியாதே? அதனால்தான் நுகர்வு மோகம் கொண்டிருக்கும் மக்கள் கூட ஒரு கட்டத்தில் “செலவுக்காக வாழ்க்கை, பொருளுக்காக வாழ்க்கை” என்பதின் சிரமங்களை புரிந்து கொண்டு, தாம் சுரண்டப்படுவதை உணர்கிறார்கள். இன்று ஆங்கிலப் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதை பார்க்கலாம். அந்த வகையில் “வாழ்க்கைதான் மிகப்பெரிய உண்மை”.

___________________________________________________

70களில் மாணவர்களை அணிதிரட்டிப் போராடியவர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? தி.மு.கவையா?

1960களில் தமிழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தி.மு.க அறுவடை செய்து கொண்டது வரலாறு. மற்றபடி அவர்கள் என்றுமே மாணவர்களை அணிதிரட்டி அரசியல் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியவர்கள் இல்லை. 60களுக்குப் பிறகு கூட தி.மு.க தனது அரசியல் மேலாண்மை கருதி மாணவர் அணி வைத்துக் கொண்டு, கல்லூரி தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தாலும் அதை மாணவரிடையேயான அரசியல் பணியாக கருத முடியாது. இன்றும் கூட இத்தகைய வழிமுறைகளை காங்கிரசு, அ.தி.மு.க கட்சிகள் பின்பற்றுகின்றன.

அதாவது இவர்களது ஆதிக்கம் இருக்கும் ஊர்களின் கல்லூரிகளில், பகுதிகளில், அரசியல், பண செல்வாக்கு காரணமாக ஏரியா பிரமுகரின் வாரிசுகள் தேர்தலில் நிற்பதும், அதற்கென்று எம்.எல்.ஏ தேர்தல் போன்று செலவழிப்பதும் யதார்த்தம். மற்றபடி மாணவருக்கென்று இருக்கும் பிரச்சினைகளில் இவர்கள் போராடியது கிடையாது. ஒவ்வொரு கல்லூரிகளிலும்  இருக்கும் ஒரு சில மாணவர்களை வைத்தே இவர்கள் தமது செல்வாக்கை காட்டிக் கொள்கிறார்கள்.

தி.மு.கவின் ஆரம்ப அரசியல் காலங்கள் எல்லாம் கல்லூரிகளிலும், விடுதிகளிலும், ஏன் முடி திருத்தும் நிலையங்களிலும் வளர்ந்து வந்தன. இன்றைக்கு பழம்பெருச்சாளிகளாக இருக்கும் பல்வேறு தி.மு.க தலைவர்களெல்லாம் அப்படி மாணவப் பருவத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். அந்தக் காலம் ஒருவகையான மறுமலர்ச்சிக் காலம் போன்றது. படிப்பது, பத்திரிகை நடத்துவது, கூட்டங்களில் பேசுவது என்று அறிவுசார் இயக்கம் கொடிக்கட்டிப் பறந்த காலம்.

ஆனால் அண்ணாத்துரை காலத்திலிருந்தே இத்தகைய அறிவுசார் முனைப்புகள் எல்லாம் தொண்டர்களிடையே தத்தமது தனித்திறமையை காட்டிக் கொள்ளும் காரியவாதமாக மாறத் துவங்கியிருந்தது. மேலும் தி.மு.கவின் சமரசங்களும், காரியவாதமும் கூட அதன் தோற்றத்திலேயே வேர்விட்டிருந்தது. இருப்பினும் எளிய மக்களின் அரசியலை பேசும் இயக்கமாக அது தமிழகத்தில் குறிப்பிட்ட காலம் செல்வாக்குடன் இருந்ததையும் நாம் ஏற்க வேண்டும்.

இதைத்தாண்டி மாணவரிடையே ஒரு நீண்ட அரசியல் இயக்கமாக அது வளரவில்லை, வளர்ந்திருக்கவும் முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தேசவிடுதலைப் போராட்டக் காலத்தில் சாதிரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஆண்ட பரம்பரைகளின் பிரதிநிதியாக விளங்கிய காங்கிரசு கட்சியில் அத்தகைய பின்னணியிலிருந்து மாணவர்களும் வந்தார்கள். காந்தியின் கோரிக்கையை ஏற்று படிப்பையும், பதவியையும் துறந்த சாதாரணமானவர்களும் உண்டு. ஆனால் காங்கிரசு, காந்தியின் சமரசப்பாதையினால் அது ஒரு வலுவாக மாணவர் இயக்கமாக வளரவில்லை. எதிர்மாறாக பகத்சிங் கொல்லப்படும் போது இந்திய மாணவர்களிடையே முதன்மையான நட்சத்திரமாக மிளிர்ந்தார்.

இதன் பாதிப்பை ஆரம்ப கால பொதுவுடைமை இயக்கங்களில் காணலாம். எனினும் காங்கிரசின் வாலாக செயல்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி காந்தியின் செல்வாக்கைத் தாண்டி மாணவரிடையே ஒரு சக்தியாக எழமுடியவில்லை. இருந்தபோதும் இன்றைக்கு போலிக்கம்யூனிஸ்டுக் கட்சியில் இருக்கும் தலைவர்கள் பலர் மாணவர் இயக்கங்களிலிருந்து வந்தவர்கள்தான்.

மேற்கு வங்கம், கேராளவில் சி.பி.எம்மின் அமைப்பு பலம் காரணமாக பரவலான கல்லூரிகளில் எஸ்.எஃப்.ஃஐ இருந்தாலும் அது மாணவரை அரசியல் ரீதியாக திரட்டும் அளவு உறுதியாக இல்லை. மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா, தமிழகம் போன்றவற்றில் போலிக் கம்யூனிஸ்டுகள் இதர ஓட்டுக் கட்சிகளைப் போல கல்லூரிக்கு ஓரிருவரை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள். மாணவர்களின் தனிச்சிறப்பான கோரிக்கைகளுக்காக அவர்களை அணிதிரட்டி போராடுமளவு அவர்களுக்கு பலமும் இல்லை, நோக்கமும் இல்லை.

இன்றும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த மாணவர்களே தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள். வட இந்தியாவில் குறிப்பாக இந்தி பெல்ட்டில் தமது அரசியல் பலத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அகில பாரத வித்யார்தி பரிஷத் எனும் மாணவர் பிரிவை நடத்தி வருகிறது. நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்பிலேயே மிகவும் பிற்போக்கான இயக்கம் இதுதான். ஆசிரியர்களுக்கு குரு பூஜை, காதலுக்கு எதிர்ப்பு, முசுலீம் எதிர்ப்பு, ஹூசைன் எதிர்ப்பு என்று இவர்களது ‘போராட்டங்கள்’ அனைத்தும் அதன் திசைவழியைச் சொல்லும்.

மேலும் இவர்கள் ஆளும் வர்க்கங்களின் நோக்கத்திற்கேற்ற அரசியலைக் கொண்டிருப்பதனால் பல கல்லூரி நிர்வாகங்கள் ஏ.பி.வி.பியை வைத்திருக்கவே விரும்புகின்றன. அந்த வகையில் கல்வி முதலாளிகள் ஆசிபெற்ற சங்கமென்றும் இதனைச் சொல்லலாம்.

70களில் நெருக்கடி காலத்தின் போது ஜெயப்பிரகாஷ் நாராயணனது காங்கிரசு எதிர்ப்பு இயக்கத்தை ஏ.பி.வி.பி ஓரளவுக்கு அறுவடை செய்தது. பின்னர் ஜனதா ஆட்சி அமைப்பதற்கு காரணமான ஜெ.பியின் இயக்கத்திற்கு அம்பலப்பட்டு போன இந்திராவின் சர்வாதிகாரமும் ஒரு காரணம். மேலும் ரசிய சார்பு முதலாளிகள் இந்திராவையும், அமெரிக்க ஆதரவு முதலாளிகள் ஜனதாவையும் ஆதரித்தமையும் ஒரு முக்கியக் காரணமாகும்.

பிறகு அனைத்து ஒட்டுக்கட்சிகளும் பணத்தை இறைத்து தமக்கு மாணவர் அணி இருப்பதாக பிரமையை தோற்றுவிக்கின்றன. அ.தி.மு.க – காங்கிரசு – தி.மு.க முதலான கட்சிகளின் மாணவர் அணி போராட்டங்கள் என்று ஒரு செய்தியையோ, படத்தையோ நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஆனால் அதில் இருக்கும் கூட்டம் அனைத்தும் காசுக்கு அழைத்து வரப்பட்ட கூட்டம்தான். பல ஏழை மாணவர்களுக்கு இந்த முறையில் வருமானம் வருவதால் ஓட்டுக் கட்சிகளின் மாணவர் அணிகள் இன்றும் செவ்வனே ‘இயங்கி’ வருகின்றன.

60களின் பிற்பகுதியிலும், 70களின் முற்பகுதியிலும் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் தோன்றிய நக்சல்பாரி இயக்கம் மாணவர்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. பல நூறு மாணவர்கள் படிப்பு, கல்லூரி, வாழ்க்கையை விடுத்து இயக்கத்தின் முழுநேர ஊழியர்களாக கிராமங்களுக்கு சென்றார்கள். மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என்று பல்வேறு மாநிலங்களில் மாணவர் இயக்கம் காட்டாற்று வெள்ளமாய் திரண்டது.

ஆயினும் மார்க்சிய லெனினிய இயக்கம் செய்த தவறு மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொடூரமான அடக்குமுறை காரணமாக இயக்கம் பின்னடைந்தது. கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்களில் மாணவர்களும் கணிசமாக இருந்தார்கள். இக்காலமே இந்திய மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்ட காலமாக இருந்தது. இதன் பின்னர் நக்சல்பாரி இயக்கம் சிதறுண்ட போதும் பல்வேறு மாநிலங்களில் இருந்த பல்வேறு மா.லெ குழுக்களின் சமூக அடித்தளமாக மாணவர் இயக்கங்களே இருந்தன, இருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன்னர் ஆந்திராவில் வலுவான மாணவர் இயக்கத்தை வைத்திருந்தார்கள். இன்றைய அதன் முழுநேர ஊழியர்கள் பலர் மாணவர் இயக்கங்களிலிருந்து வந்தவர்கள்தான்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இன்று மாணவரிடையே அமைப்பு ரீதியான பலமும், அரசியல் ரீதியான தலைமையும் கொண்ட நக்சல்பாரி இயக்கமாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திகழ்கிறது. ஈழம், சமச்சீர் கல்வி, மூவர் தூக்கு, தனியார் மயம், கட்டணக் கொள்ளை என்று பல்வேறு பிரச்சினைகளுக்காக பரவலான கல்லூரிகளில் இவ்வியக்கம் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கின்றது.

இன்று மாணவரிடையே சுயநிதிக் கல்லூரி முதலாளிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக அரசியல் பணிகள் பொதுவில் மந்தமடைந்துள்ளன. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் முன்பை விட அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளதையும் பார்க்கலாம். இவர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும்தான் சமீபத்திய மூவர் தூக்கிற்கு எதிரான போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினார்கள்.

தனியார் மயம், காசு இருப்பவனுக்குத்தான் கல்வி – வேலை என்ற சூழலில் மாணவர்கள் முன்பை விட அதிகம் அரசியல் ரீதியாக அணிதிரள்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் நுகர்வுக் கலாச்சார மோகம், சீரழிவு காரணமாக பண்பாட்டு சீர்கேடுகளும் அவர்களிடையே பரவி வருகிறது. எனினும் முந்தையக் கேள்விக்கு சொன்னது போல “வாழ்க்கைதான் மிகப்பெரிய உண்மை” என்ற அடிப்படையில் அந்த மயக்கங்களிலிருந்து மாணவர்கள் விடுபட்டு போராடுவார்கள், தமிழகத்தின் அரசியல் போக்கை நேர்மறையில் திசை திருப்புவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  1. மொழி பற்றிய உங்கள் பதிலில் பின்வருவனவற்றை நீங்கள் கருத்தில் கொள்ளவில்லை.
    டிஸ்கவரி சேனல் தமிழ், கார்ட்டூன் நெட்வொர்க், டிஸ்னி தமிழ், மக்கள் டிவியின் தமிழ் போன்ற பல சானல்கள் தமிழை நோக்கித் திரும்பியுள்ளன. தமிழில் ஒளிபரப்புகின்றன.நூற்றுக்கணக்கான ஆங்கில மொழிப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. இதன் உள்நோக்கம் தமிழ்நாட்டுச் சந்தையில் தனது பொருள் விற்கிறது என்கிற நோக்கம் என்றாலும் மாநில மொழிகளை அவை புறக்கணிக்க முடியாத தன்மையையும் அது உணர்த்துகிறது.

    முதலாளித்துவம் நல்லதோ கெட்டதோ என்று பார்ப்பதில்லை. அதன் ஒரே பார்வை சந்தை தான். தமிழ் மொழி பேசும் மக்கள் தனிச் சந்தையாக ஆக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கென தமிழையும் உள்ளிழுத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலை தமிழ் ஆர்வலர்கள் தமிழை வளர்க்கும் வாய்ப்பாக எவ்வளவு தூரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தமிழின் எதிர்காலம் அமையும்.

    தமிழ் ஆர்வலர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் தமிழைத் தனியே வளர்ப்பதை விட தமிழை ஆங்கிலத்தின் துணையுடன் வளர்த்தால் அது தமிழைக் கற்பவர்கள் சமூகப் போட்டிகளில் தாழ்ந்து போகாமல் அதே சமயம் தமிழை முக்கியமானதாகவும் உணர வழி செய்யும்.

  2. பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களை போராட்டத்திற்கு பயன்படுத்துவோரை கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டும். (டாஸ்மாக் சரக்கு மட்டும் விக்கலாமா என்று பதில் கேள்வி கேட்காதீர்கள். எல்லாமே தடை செய்யப்பட வேண்டியவையே)

    • திரு.சியான்! என் நண்பணின் எட்டு வயது பெண்குழந்தையை அப்பள்ளியின் தலைமையாசிரியன் கற்பழித்து கழுத்தை நெறித்து கிணற்றில் வீசிவிட்டான்.சக மாணவிக்கு நேர்ந்தக் கொடுமையை எதிர்த்து மாணவர்கள்
      போராடினார்கள்.அப்படி மாணவர்கள் போராடியது சரியா? தவறா?

    • சீயான்!
      இப்படியெல்லாம் நீங்க பொத்தம்பொதுவாக சொல்லிவிடமுடியாது, எல்லாமே சூழ்நிலைகளை பொருத்தது.

      ஆனாலும் உங்க உள்நோக்கத்த எங்களால புருஞ்சிக்க முடியுது. 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் போராடினால் அவ்வளவு எளிதாக கைது செய்ய முடியாது. அப்படியே செய்தலும் போராட்டம் பலமடங்கு பெரிதாகும்.

  3. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘காலனிய ஓர்மை அகற்றல்’ எனும் தனது நூலில் ஆப்பிரிக்க அடையாளத்தை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளிலிருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்செயல்பாடுகளை விவரிக்கிறார்.அதிலிருந்து சில வரிகள்

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7825:2010-05-01-12-10-45&catid=1051:07&Itemid=325

    //தம் வீட்டிலும், வயல் வெளிகளிலும், வேலை செய்யுமிடத்திலும், மக்களிடத்திலும் பேசிய மொழியை ஆப்பிரிக்க குழந்தைகள் பள்ளிகளில் படிக்க முடியவில்லை. அவர்கள் தாய்மொழியில் கேட்ட கதைகளும், பாடல்களும், விடுகதைகளும் பள்ளிப் புத்தகங்களில் இல்லை. ஆப்பிரிக்க குழந்தைகள் படித்த காலனியப் பள்ளிகளில் தங்கள் தாய் மொழியில் பேசினால் தண்டிக்கப்பட்டார்கள்; அவனமானப்படுத்தப்பட்டார்கள். நிர்வாணப்படுத்தப்பட்டு, அவர்களின் புட்டத்தில் பிரம்படிகள் வழங்கப்பட்டன. கழுத்தில் ‘நான் ஒரு முட்டாள்’ என்றும் ‘நான் ஒரு கழுதை’ என்றும் எழுதப்பட்ட பலகைகள் மாட்டப்பட்டு உலா வரவைக்கப்பட்டனர். தண்டத் தொகை வசூலிக்கப்பட்டது.

    தாய்மொழியில் பேசும் மாணவரிடம் முதலில் ஒரு பொத்தான் காலையில் வழங்கப்படும். அந்தப் பொத்தான் அன்று முழுதும் யாரெல்லாம் தாய்மொழியில் பேசினார்களோ, அவர்களிடமெல்லாம் கைமாறி பயணம் செய்து கொண்டே இருக்கும். மாலையில் அது எந்தக் குழந்தையிடம் இருக்கிறதோ, அவரைக் கொண்டு எத்தனை பேரின் கைமாறியிருக்கிறது என்ற எண்ணிக்கை கண்டுபிடிக்கப்படும். பிறகு இந்த சங்கிலித் தொடரில் இருக்கும் ‘தாய் மொழி பேசிய குழந்தை குற்றவாளிகளுக்கு’ ஆசிரியர் மூலம் தண்டனை கிடைக்கும். இத்தகைய கொடூர நடைமுறைகள் ஆப்பிரிக்க குழந்தைகளிடையே தாய்மொழியை ஒழித்துக்கட்ட உதவின. இதனோடு ஆங்கிலத்தில் பேசும், எழுதும் மாணவர்களுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. ஒரு மாணவன் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாலும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனுக்கு தேர்ச்சி உயர்வு மறுக்கப்பட்டது.//

  4. ஆமாம் தோழரே கடந்தவாரம் அகில இந்திய வானொலி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பார்த்த விளம்பரம் ஒன்று
    வேற எதுவும் டாண்ட்ரப்பை எதிர்த்துப்போராடாது ….அய்ப்போல் என்று ஒர ஷாம்பூ விளம்பரம் எனக்க முதலில் எதுவுமே புரியவில்லை அப்புறம் தான் விளங்கியது ஆஹா பொடுகு ஆம் தலையில் வரும் பொடுகை ஒழிக்க … ஷாம்பூவை உபயோகிக்க வேண்டுமாம் ……ஹிஹி இது இயல்பாகவாஇருக்கிறது

  5. ஆங்கிலத்தை ஒரு மொழி என்ற அளவில் கற்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால், தமிழ்நாட்டில் எல்லாம் ஆங்கிலத்தை – ஜேம்ஸ் நதிக்கரையில் பல் வலக்கி, வருவதைப் போலப் பீட்டர் விடுகிறார்கள். ஐடி கம்பெனிகளில் இதற்கு சொல்லும் காரணம் – கிளையண்ட்ஸ் ஆங்கிலத்தில் பேசினால்தான், பிசினஸ் வளர்க்க முடியும்.ஆனால், இந்தியா தவிர்த்த பிரென்சு, சீனா போன்ற நாடுகளில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் மொழியிலேயே செயல்படுகின்றன.ஆக தாய் மொழி வளர வேண்டும் என்றாலும், சுயசார்புள்ள தேசிய முதலாளிகள் வளர வேண்டும். ஆனால் இந்தியாவில் தேசிய முதலாளிகள் என்று யாரும் கிடையாது. எல்லா டாட்டா பிர்லா அம்பானிகளும் தரகுப் பையல்கள்தான்.

  6. – நொவ்வொரு இந்தியனும், டாட்டா ப்ரிலா அம்பானி போன்று வளர விரும்புகிறான். அதாவது, எல்லோரும் தரகு முதலாளிகள் ஆக விரும்புகின்றனர். தேசத்தின் குறிக்கோளே மாமா வேலை அல்லது சேவகம் பார்ப்பதுதான். விக்கி லீக்கில் வெளிவந்த அத்வானியில் வாக்குமுலமூம் இதுதான்.

    ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ்நாட்டினை இந்தி முதலாளிகளின் சந்தையாக மாற்ற முயற்சிக்கும் போது அடி வாங்கிய வண்மத்தில், மதராஸி என்று இன்றும் இளக்காரமாக தமிழர்களை திட்டுகிறார்கள்.

  7. //‘கென்ய மக்களின் தாய் மொழிகள் குழந்தையின் பேச்சு மொழி லயத்தை மட்டுமின்றி, அவர்களின் இயற்கையுடனான போராட்டம் மற்றும் சமூகப் பண்புகளைக் காட்டக்கூடிய இலக்கியங்களை உருவாக்க வேண்டும் என விழைகிறேன். தனது தன்னிலை, மொழி, சூழலோடு இயைந்த ஒத்திசைவைத் தொடக்கக் காலத்தில் பெற்ற ஒருவர் பிற மொழிகளைக் கற்கலாம். அவற்றின் வளமான, மனிதநேயம் மிக்க, சனநாயக, புரட்சிகர அம்சங்களை அறிந்து கொள்ளலாம்’ (பக். 37).//

    ஆங்கிலத்தை எப்படி கற்க வேண்டும் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி மேலே உள்ள வரிகள்.

    //க்ட்ட்ப்://ந்ந்ந்.கேட்ரு.சொம்/இன்டெx.ப்க்ப்?ஒப்டிஒன்=சொம்_சொன்டென்ட்&விஎந்=அர்டிச்லெ&இட்=7825:2010-05-01-12-10-45&சடிட்=1051:07&ஈடெமிட்=325//

  8. //அதற்கு தேசிய இனங்களின் பண்பாடுகளை திட்டமிட்டு அழிப்பதை அவர்கள் செய்கிறார்கள். அந்த வரிசையில் தேசிய இனங்களின் தாய் மொழிகளும் சிதைக்கப்படுகின்றது//

    மதவெறி இனவெறி தேசவெறி மொழிவெறியற்ற உலகம் அமைய உடனடியாக அமலிடவேண்டிட திட்டம்.

  9. நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி, காதுகளில் செல் பேசி கருவிகளை பொருத்திக்கொண்டு, பாட்டு கேட்டபடியே, ரயில் தண்டவாளங்களில் அடி பட்டு இறக்கும் தமிழ்ப் பெண்கள் இடையே – செங்கொடியே, நீ யார் ?

  10. A campaign to learn both Tamil and English thoroughly. They can do some thing like this:
    1. The students should be strictly instructed to speak only in English for
    the first two days of the week among themselves and with all other
    administrative staff in the school.
    2. The students should be strictly instructed to speak only in Tamil for the
    next two days among themselves and with all other administrative staff in
    in the school.
    3. The student should be instructed to speak in a mixed language on the last
    day among themselves and with all other administrative staff in the
    school in the following manner.
    3.1. If they start a sentence in English they should also finish it Engli
    sh.
    3.2 Similarly if they start a sentence in Tamil they should also
    finish it English.
    3.3. They can mix sentences not words in a sentence with English and
    Tamil
    4. All the subjects other than Mathematics and sciences should be
    should be taught in Tamil.
    This will ensure that our students develop excellent proficiency in both the languages.

    A government GO has to be issued to all the schools irrespective of the system they follow.

Leave a Reply to திப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க