privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

-

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?
படம் - www.thehindu.com

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.  நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை  எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை  ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை  ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

கடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது.

பின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.

ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.

மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் ‘மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.

அடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.

ஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய  ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக்  குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.

முக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.

ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.

இதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: