privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!

-

ஜார்கண்ட் மாநிலம்  ஹஸாரிபாக் மாவட்டத்தில் தற்பொழுது வசித்து வரும் ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.  10 து 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் செல்லும் சுரங்கத்திற்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுத்து வரும் குழந்தைத் தொழிலாளி ஜாவிர் குமார்.

எலி வளையைப் போலப் பூமிக்குள் செல்லும் இச்சுரங்கத்தை மரணக் குழி என்றுதான் சொல்ல முடியும்.  அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து வருவது உடலை வருத்தக்கூடியது மட்டுமல்ல, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும்.  சுரங்கத்திற்குள் பரவிக் கிடக்கும் இருளை விரட்டுவதற்கு ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கு ஒரு இரும்புக் கம்பியையும், வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதற்கு ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், தனது வேலையை முடித்துக்கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியே வரும்பொழுது, பொழுது சாய்ந்து இருட்டிவிடும்.  ஒரு இரும்புக் கம்பி, ஒரு கூடை, ஒரு விளக்கு ஆகியவற்றைத் தவிர, வேறெந்த பாதுகாப்புச் சாதனமும் இன்றிச் சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், “சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டால், உயிரோடு புதைந்து இறந்து போவோம்” எனத் தெரிந்தேதான் இந்த வேலையைச் செய்து வருகிறான்.

ஹஸாரிபாக் மாவட்டத்தில் மட்டும் இது போன்று நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றன.  ஜாவிர் குமாரைப் போன்று ஆயிரக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும், பெண்களும் சுரங்க வேலை என்ற பெயரில் தினந்தோறும் மரணத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  இச்சுரங்கங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் ஆகிய வறிய மாநிலங்களிலிருந்து சிறுவர்கள் பிடித்து வரப்படுகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தின் அமைச்சர்கள், போலீசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்துதான் இச்சட்டவிரோதச் சுரங்கங்கள் நடந்து வருகின்றன.  இச்சுரங்கங்களை நடத்தி வரும் மாஃபியா கும்பல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் “கவனித்து’’விடுவதால், அச்சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களை, சிறுவர்களின் மரணங்களைப் பற்றி பதிவு செய்யவும், விசாரிக்கவும் அரசு முன்வருவதேயில்லை.  அச்சுரங்கங்கள் சட்டவிரோதமாக இயங்கிவருவதைக் காரணமாகக் காட்டியே, இறந்து போகும் சிறுவர்களின் குடும்பத்திற்கு நட்ட ஈடு தரவும் அரசு முன்வருவதில்லை.

வசந்தி தேவி என்ற தாயிடம், “உங்கள் மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்காமல், அபாயமிக்க சுரங்க வேலைக்கு ஏன் அனுப்பியிருக்கிறீர்கள்?” எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “வறுமை” என எந்தவிதமான உணர்ச்சியு மின்றிப் பதில் அளித்தார், அவர்.

தனியார்மயத்தின் பின் அம்பானியும் டாடாவும் உலகக் கோடீசுவரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள்.  ஜாவிர் குமாரும் வசந்தி தேவியும் அஞ்சுக்கும் பத்துக்கும் தினந்தோறும் மரணத்தோடு போராடுகிறார்கள்.  இந்தியா வல்லரசாகிறது எனப் பல்லைக் காட்டுகிறார், மன்மோகன் சிங்.

_____________________________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2011
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: